(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 16-18 | இராகம் 19-21 | இராகம் 22-24
இராகம்-19
ஆபோகி
சிதம்பரம் பிடில் வித்துவான் துரைசாமிப் பிள்ளை வீட்டில் குறிஞ்சிக் குழுவினர் தங்கினர். அந்த மேலை வீதியே திரண்டு விட்டது. குறிஞ்சியின் புகழ் அந்த அளவுக்குத் தமிழகத்தில் பிரசித்தி பெற்றுவிட்டது. இசையை எளிமையாக்கி மக்களைப்பாடும் மக்கள் பாடகி யாயிற்றே! தமிழ்ப் பாடகியாயிற்றே!
துரைசாமிப் பிள்ளைக்குப் பெருமையோ பெருமை! நாதோபாசகியான குறிஞ்சி, தம் வீடு தேடி வந்திருக்கிறாளே! தமிழ் வாணி வந்திருக்கிறாளே!
தமிழ் இசைக் குலக்கொடியான குறிஞ்சி விரும்பியபடி, கோபாலகிருஷ்ண பாரதியார் தங்கி இருக்கும் கீழவீதி நண்பர், பொன்னு தீட்சிதர் வீடு நாடி அழைத்துச் செல் கிறார் துரைசாமிப் பிள்ளை, சற்றுமுன்தான், நடராஜப் பெருமான் சந்நிதிக்குச் சென்றிருப்பதாகவும், அங்கே தியாக பிரும்மமும் இருப்பதாகவும் செய்தி தெரியவரவே, அவர்கள் கோயில் நாடிச் சென்றனர்.
இருவரையும் தனித்தனியே பார்த்துத் தரிசிப்போம் என்று எண்ணியது போக, ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் போவதை நினைத்துப் புளகித்துப் போனாள் பூக்களின் அபூர்வ அரசியான குறிஞ்சி. ஞானசுந்தரமும் அதைப் பாக்கியமாகவே கருதினான்.
ஆமாம்; கோயிலுக்குள் தன்னை அனுமதிப்பார்களா?
குறிஞ்சி தன்னுள் கேட்டுக் கொள்கிறாள்.
ஏனைய கோயில்களின் கொள்கையும் தன்மையும் தன்னை அனுமதிக்கச் செய்தன என்றால் அது சங்கீத சமத்துவம். இது சிதம்பர ரகசியமாயிற்றே! தனித்த கொள்கைகொண்ட கோயிலாயிற்றே! மூவாயிரம், தீட்சிதப் பெருமக்கள் கட்டிக் காக்கும் தூய்மையுடைய கோயிலா யிற்றே!
நந்தனாருக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த ‘நந்தினி’க்கும் ஏற்படுமானால்?
“ஞானீ! என்னைக் கோயிலுக்குள் அனுமதிப்பார்களா? நந்தனுக்கு ஏற்பட்ட அனுபவம் மாதிரி…’
குறிஞ்சி, ஞானசுந்தரத்தை நோக்கிக் கேட்க, துரை சாமிப் பிள்ளையே பதில் சொன்னார்: “உங்கள் விஷ யத்தில் அவ்வாறு நடக்க நியாயமில்லை.”
துரைசாமிப் பிள்ளை புகையிலை குதப்பிய வாயுடன் பதில் சொன்னார்.
கீழக் கோபுர வாசலையடைகிறபோதே கூட்டமோ கூட்டம்.
இவள்தான் குறிஞ்சியா? இவள்தான் குறிஞ்சியா?” கேள்விக்குறிகள் ஒவ்வொருவர் நெற்றிச்சுழி முனையிலும் வேள்விக்குறியாய் வியர்க்கின்றன. கொள்ளையனை அடிமையாக்கிய செய்திதான் தமிழகத்தையே கொள்ளை கொண்டு விட்டதே!
“ஆ! அழகா இது? கையெடுத்துக் கும்பிடும்படியான தெய்வீக அழகு!” என்று வாலிபர்களே வந்தித்தனர்.
அனுமதியின்றி உள்ளே நுழைந்து அவமானப்படக் கூடாது என்று துரைசாமிப் பிள்ளையையே உள்ளே அனுப்பி வைக்கிறாள் குறிஞ்சி ஒரு தூது மாதிரி.
உள்ளே…
அனுமதி மறுக்கப்பட்டது.
சந்நிதானத்துக்கு முன்னே தியாகராஜ சுவாமிகள் நடராஜ பெருமான் ஆராதனையைக் கண்டுகளித்துக் கண்ணீர் மல்கியவண்ணம் காணப்படுகிறார்.
பக்கத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார். அவரது இதய தெய்வமல்லவா கூத்தபெருமான்? கரம் கூப்பி ஆனந்திக் கிறார். தலையிலும் கரங்களிலும் பூச்சரங்களைச் சுற்றி உச்சிக்குடுமி அவிழ்ந்து புரள, மார்பில் சிவலிங்க மாலை அசைய, பெருத்த வயிறும் சூம்பிய கை, கால்களுமாக அங்க அழகு அற்ற அவர் கூத்தாடிக் கூத்தாடி ஆனந்திக் கிறார்.
ஆராதனைகள் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண் டிருக்கிறபோது அவற்றையும் மீறி வெளியிலிருந்து கூச்சல் உள்ளே நுழைகிறது.
“சற்றே விலகி இரும் பிள்ளாய்; எனது சந்நிதானம் மறையுதாம்!” என்று நந்தனுக்காக சிவபெருமான் நந்தியை நோக்கிக் கூறியதாக நந்தன் சரிதம் பாடிய கோபால கிருஷ்ண பாரதியார் கூச்சலைச் செவி சாய்க்கிறார்.
அது…
சற்றே செவி சாயுங்கள் சங்கீதங்களே ! உங்கள் சந்நிதானம் தேவையாம்!” என்று அதே சிவபெருமான் கூறாமல் கூறுவது கோபாலகிருஷ்ண பாரதியாருக்குப் புரியவில்லை. ஆடுவதை நிறுத்திக் கவனிக்கிறார். என்ன கூச்சல்? பக்கத்தில் வந்து நின்ற துரைசாமிப் பிள்ளை யிடம் வெளியே என்ன கூச்சல் என்று கேட்கிறார்.
“பாரதியாரே! குறிஞ்சி என்ற பாடகி வந்திருக்கிறார் கள். உங்களைப் பார்க்க, நீங்கள் தங்கி இருந்த இடம் சென்றோம். இங்கே இருப்பதாகச் சொன்னார்கள். இங்கு தியாக பிரும்மமும் இருப்பதால் இருவரையும் ஒருசேரக் கண்டு ஆசீர்வாதம் பெற கீழக் கோபுர வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் செல்வாக்குப் பெற்ற பாட கியாதலால் கூட்டம். அதனால் கேட்கிற கூச்சல்!”
“ஏள்? உள்ளே வருவதற்கென்ன? நடராஜ பெருமானையும் சேர்த்துத் தரிசிக்கலாமே!”
“அந்தப் பாக்கியம் அந்தப் பெண்ணுக்கு ஏற்படவில்லை.”
கோபாலகிருஷ்ண பாரதி பூணூலைத் தடவிப் பார்த்துக் கொள்கிறார்.
அதுவரை தியானத்திலிருந்த தியாக பிரும்மம் தியானம் கலைந்து, “ஏன்?” என்று வினவுகிறார்!
“நந்தன் குலத்து நாயகி! அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
“ஓ…”
ஆராதனை இனிது நிறைகிறது.
“அவள்தானே இங்கு வர அனுமதி தேவை? நாம் அங்கே செல்வதற்கு மறுப்பு இருக்க முடியாதே!” என்கிறார் தியாக பிரும்மம், பழுத்த பழத்தின் இனிப்பே போல!
ஓ…என்ன பேதா அபேதம்?
ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார்? தமிழகம் கண்ட முதல் புரட்சிக் கவிஞனாயிற்றே!
“இங்கே எவன்டா சதுர்வேதங்களையும் தசோப நிஷத்துகளையும் உருப்படியாகப் படித்துப் பிரம்மத்தை உணர்ந்தவன்? குறிஞ்சி ஒரு பிரம்மம்! ஒரு நந்தனால் இந்த நடராஜனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கத் தான் நந்தன் சரிதம் பாடினேன்! குறிஞ்சி சரிதம் பாட வைத்து விடாதீர்கள்!”
பயங்கரமாகச் சத்தம் போட்டு விட்டார்.
தீட்சிதர் தலைவர் சொன்னார்:
“பாரதி! நீங்கள் பிராமணர்களில் புரட்சிக்காரர்; இது கோயில்! இங்கு சில சட்ட திட்டங்கள் உண்டு. நந்தன் ஒரு ஏகாக்கிருதன்; ஜீவன் முக்தன்!”
“எப்படித் தெரிந்தது? ஈசன் கனவில் வந்து சொன்ன பிறகுதானே?”
“குறிஞ்சி பற்றியும் கனவில் சொல்லட்டும்!”
தியாக பிரும்மம் இந்த வாதத்துக்கு முடிவில்லை என்றுணர்ந்து தலையிட்டார்;
“பாரதி! இப்போது என்ன மூழ்கிவிட்டது? குறிஞ்சி தரிசிக்க வந்தது இந்தக் கூத்த பெருமானையல்ல; நம் இரு இசைக் கூத்தாடிகளை. வாரும்! நாமே போய் அவளை தரிசிப்போம். இதற்கு எவர் அனுமதியும் தேவையில்லை.
தரிசிப்போம்! ஓ! எவ்வளவு பெரிய சொற்கள்! குறிஞ்சியை இவர்கள் தரிசிப்பதாவது?
கோபக்கினியை வேதாக்கினி அடக்கி அழைத்துச் செல்கிறது.
இருவரும் கீழவாசல் கோபுரத்தையடைந்ததும், கோபுரத்துக்கு வெளியே கூட்டம் சகிதமாக குறிஞ்சி, “ஆ! தெலுங்கிசையின் பழத்தையும், பழுத்துக் கொண்டு வரும் தமிழிசைப் பழத்தையும் ஒரு சேர தரிசித்ததில் பெருமையடைகிறேன்!” என்று கூறிப் பாதங்களில் விழுந்து வணங்குகிறாள்!
“இசை மகளே! என்னரும் தங்கையே! எழுந்திரு!” என்றார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் தியாக பிரும்மம்?
கண்கள் குளமாகக் கவனிக்கிறார்; பிரமித்துப்போய் கவனிக்கிறார்; இந்தச் சிறுவயதில் இப்படி ஒரு ஞானப் பழமா என்று கவனிக்கிறார்; ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளைக் கவர்ந்த அத்வைதப் பழமா? கொள்ளைக்காரனை அடிமையாக்கிய இசைப் பழமா? மழையை வரவழைத்த ராகப் பழமா? வானத்தைப் பிளந்து பூமியில் அவதரித்த வாணிப்பழமா?
“சுவாமீ! அடியாள் வணங்குகிறேன்!” பிரும்மம் பிரமிப் பிலிருந்து மீளுகிறார். கோபுர வாசலை விட்டு வெளியே வருகிறார். தமது கண்களில் அரும்பிய ஞான அருவியைத் துடைத்து, குறிஞ்சியின் தலையுச்சியில் கை வைத்து “ஸ்ரீராம ஜெயம்!” என்கிறார்.
“ஓ…போதும் சுவாமி! இந்த ஆசீர்வாதம் போதும்! அந்த நடராஜப் பெருமான் தலைமுடியில் இருக்கும் கங்கை நீரே என்னைக் குளிப்பாட்டிய பெருமைக்கு ஆளாகி விட்டேன்! கோயிலென்ன கோயில்? திருமூலன் சொல்லாத கோயிலா?”
“நான் ஒரு மூலனையும் கண்டவனில்லையம்மா! ஸ்ரீராம மூலமே எனது நாம மூலம்! குறிஞ்சி! நீ பாடி நான் கேட்க வேண்டுமே!”
“ஐயோ! நீங்கள் பாடி நான் கேட்க வேண்டும்; ஆனந்திக்க வேண்டும் என்றுதானே ஓடோடி வந்தேன்! நான் மாயவரம் சென்று பாரதியாரைப் பார்த்து விட்டுத் திருவையாற்றுக்கே வருவதாக இருந்தேன். நீங்கள் இருவருமே சேக்கிழார் பெருமான் சொன்ன தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். எங்கள் தமிழின் தெய்வமாக்கதை (பெரிய புராணம்) எழுதிய மண்ணல்லவா இந்த மண்! இதை மிதித்தாலே புண்ணியம்! மாநடம் செய் கூத்தபெருமானை உள்ளே சென்றுதான் தரிசிக்க வேண்டுமா? அவசியமே இல்லை!”
“ஆ! என் தமிழ்த் தங்கையே! உனது நாவிலல்லவா நடராஜர் மாநடம் புரிகிறார்? நீ பாடி நாங்கள் கேட்க வேண்டுமம்மா! இதோ பார்! இத்தனை கூட்டமும் எங்களுக்காகவா? இல்லையே! நாங்கள் தெய்வத்திடம் சென்று கொண்டிருக்கிறோம்! தெய்வமோ உன்னை மக்களிடம் அனுப்பி இருக்கிறது!”
“பாரதி சொன்ன பதில்தான் பவித்திரம்! நீ பாடு குறிஞ்சி! எங்கள் சங்கீதத்தில் பரமாத்மா மட்டுமே கலந்தி ருக்கிறது. உன் சங்கீதத்தில் ஜீவாத்மாவும் கலந்திருப்பதை இந்தக் கூட்டமே சாட்சியாக நிற்கிறது. நீ பாடு! நாங்கள் எல்லாரும் கேட்கிறோம்!
“இந்தக் கூட்டம் எனக்காக நிற்கலாம்! ஆனால், நான் தேடி வந்தது உங்களுக்காக! ஆசார்யாள் ஆசீர்வாதம் பெற்றேன்! அபிராமபட்டரின் அன்பினைப் பெற்றேன்! பாரதியின் அரவணைப்பைப் பெற வேண்டுமே! நீங்கள் தேவ உபாசிகள்! நான் மக்கள் சேவகி! நீங்களிருவரும் பாடுங்கள்! நான் உங்கள் தாள் பணிந்து பின்னர் பாடுவேன் !”
தியாக பிரும்மம் கண்களை மூடி ஸ்ரீராமனைத் தியானிக்கிறார்.
கோபுரவாசல் வெளியில் போடப்பட்டிருந்த பந்தலுக் கும் கீழே சமக்காளம் விரிக்கப்படுகிறது.
தியாகய்யர் அமர, அவர் பின்னே சீடர்கள் அமர, முன்னே குறிஞ்சியும் ஞானசுந்தரமும் அமர, குறிஞ்சிக்கு இடதுபுறமாக கோபாலகிருஷ்ண பாரதியார் அமர, அவர் களுக்குப் பிள்ளே குறிஞ்சியின் இசைக் குழுவினர் அமர, கூட்டமே அமருகிறது.
தம்பூர் சுருதியில் ஒரு சரித்திரமே கேட்கிறது.
சகமதசா… சாதா மா கா சா…
சன்னமாக சாரீரத்தில் தியாகபிரும்மம் ஆபோகி ராகமென்பதே இதுதான் என்பதுபோல ஆரோகணம் அவரோகணம் சொல்லி பாடலை ஆரம்பிக்கிறார்.
“ஸ்ரீராமசீதா அலங்கார ஸ்வரூபா …”
*இந்த நிகழ்ச்சி குறித்துச் செவி வழியாகப் பல்வேறு விதமாகப் பேசப்படுகிறது. தமிழின் இமயமான டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், தாது ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ என்ற நூலில், இந்த ஆபோகி ராகச் சம்பவம் திருவையாற்றில் நிகழ்ந்ததாகவும், பாடிய பாடல் ‘ஸ்ரீ ராம சீதா அலங்கார சொரூபா’ என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நான் இசை பயின்றபோது, பேராசிரியர்கள் எனக்குப் போதித்தது, இச்சம்பவம் சிதம்பரத்தில் நடந்ததாகவும், தியாகய்யர் பாடிய ஆபோகி ராகப் பாடல் ‘மனசு நில்ப சக்தி’ என்பதாகும். ஆக, பொதுவான கருத்து கோபாலகிருஷ்ண பாரதியார் ஆபோகியில், உடனேயோ, மறுநாளோ ‘சபாபதிக்கு’ என்ற பாடலை தியாகய்யர் முன் பாடிக்காட்டி இருக்கிறார். நாள் இரு வேறு கருத்துகளையும் ஏற்று. டாக்டர் உ.வே.சா. அவர்கள் குறிப்பிட்ட பாடலையும், சம்பவத்தை சிதம்பரத்தில் ஏற்று எனது கற்பனையில், எனது கற்பளா பாத்திரமான குறிஞ்சிக்கெனச் சற்றே அழகு படுத்தி இருக்கிறேன். இது ஆராய்ந்து பார்க்க வேண்டியதும் கூட! குறிஞ்சியை இணைத்தது எனது கற்பனை, குறிஞ்சி, ராஜகாந்தி, ஞானசுந்தரம் என் கற்பனை வடிவங்கள்.
ராமச்சந்திர மூர்த்தியும் ஜானகி தேவியும் கண்முன் காட்சியளிப்பது போல…
ஆ! குறிஞ்சி, இசை வேள்வியில் பிரம்மதரிசனம் காண் கிறாள்.
பாரதியோ பரவசத்தில் மூழ்கிப் போனார்.
பிரம்ம சங்கீதத்தை மக்கள் கேட்டு மகிழ்கிறார்கள்… தியாக பிரும்மம் பாடி முடித்து, குறிஞ்சியை நோக்குகிறார்.
“குறிஞ்சி! என் பாடல் எப்படி?”
“சுவாமி!” அலறிப் போனாள் குறிஞ்சி. “சுவாமி அபிப் பிராயம் சொல்ல அடியாளுக்கு என்ன தகுதி இருக் கிறது?”
“நிறைய இருக்கிறது. நீ வயதில் பெண் ஞானசம்பந்தன்! உனது பலம் உனக்கே தெரியும். எனக்காகப் பலவீனப் படாதே! ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் உபதேசம் பெற் றவள். நீ வைத்திருக்கும் தம்பூர் தீட்சிதர் பெருமான் அளித்த தீட்சண்யம் நிறைந்த சாட்சி! சியாமா சாஸ்தி ரிகளே உளனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவர் ஒருவார காலமாகப் பயிற்சி செய்த பல்லவியை நீ ஒரே நாளில் கொள்ளையடித்துக் கொண்டாயாமே! இப்போது என் பாட்டையும் கேட்டாய் விட்டது. நான் உன்னை விமரிசனம் கேட்கவில்லை; அபிப்பிராயம்தான் கேட்டேன்.”
“இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக் குத் தெரியவில்லை சுவாமி! அந்தச் சக்தியை நான் வணங்கும் சக்தி எனக்கு அளித்திருக்கிறாள். ஆனால் அது அதிகப் பிரசங்கமாகிவிடுமே என்று அஞ்சுகிறேன் !”
“பிரசங்கத்தில் அதிகமென்ன? குறைச்சலென்ன? சரபோஜி அரண்மனையில் நம்மைப் பிரசங்கிக்காத பிரசங்கத்தையொன்றும் நீ பிரசங்கித்து விடப் போவ தில்லையே! நீ கண்ட எங்கள் இருவரைப் பற்றியுமே பிரசங்கம் செய்யலாம். ஆனால் ஒன்று. எனக்குத் தமிழ் தெரியாது; தமிழில் பேசத் தெரியும். தெலுங்கைப் படித்து விட்டவன்! இல்லையென்றால் அந்த ஸ்ரீராமமூர்த்தியைத் தமிழிலேயே கம்பனைப்போல அலங்கரித்து இருப்பேன்!”
ஐயர்வாள் சொன்னது கண்டு கலங்கிப் போனாள் கானப்பேரழகி குறிஞ்சி.
“ஏனம்மா கண் கலங்குகிறாய்?”
“என் கம்பனை அழைத்தீர்களே என்று!”
“நம் கம்பன் என்று சொல்!”
மேலும் கலங்கினாள் குறிஞ்சி.
பாரதியாரோ…
“நம் கம்பன் அல்ல சுவாமி! அவன் உலகத்துக்கே உரியவன்! நீங்கள் சொன்ன தெலுங்கு விமரிசனம் தங்கையைக் கலங்க வைத்திருக்கிறது என்று நினைக் கிறேன். அப்படித்தானேம்மா குறிஞ்சி?”
“ஆமாம் அண்ணா! இந்த அவையடக்கப் பழத்தின் முன், நான் அபிப்பிராயம் சொல்வதா என்று ஆலோசிக்கிறேன்!”
“நீ சொல்லத்தான் வேண்டும்! நான் அந்த ஜானகியைக் கண்டறியேன். வான்மீகி வருணித்ததைப் படித்து இருக்கிறேன். காளிதாசன் கற்பனையில் பார்த்திருக்கிறேன்! நீ அந்த ஜானகியின் அவதாரம்!”
“சுவாமீ!*
“ஏனம்மா! நல்லதைத்தானே சொன்னேன்? நீ அலறு கிற மாதிரி ஏதும் சொல்லிவிடவில்லையே?”
“அந்த ஜானகி ஏற்ற துன்பங்களையும் அக்கினிப் பிரவேசத்தையும் நான் ஏற்க வேண்டுமா? தேவைதானா? வேண்டாமே சுவாமீ!”
அபிப்பிராயத்தை எதிர்நோக்கிய தியாக பிரும்மமே அரண்டு போனார். இந்த அபிப்பிராயமே இப்படி இருந்தால்?
ஆபோகி ராகப் பாடலைக் குறித்த அபிப்பிராயம்?
இராகம்-20
நந்தினி
“ஏ, ராமா! இவளுக்கு ஜானகி கண்ட அந்தச் சோதனையை வைக்காதே!”
பிரும்மம் பிரமிப்பிலும் இப்படி ஒரு பிரார்த்தனையை மனத்தே நிகழ்த்திக் கொள்கிறார்…
“குறிஞ்சி! உனது அழகைத்தானே ஜானகியின் அவதாரம் என்றேன்! அந்த ராமச்சந்திரன் உனக்கு ஒரு குறைவும் வைக்க மாட்டான். அவன் கருணை நிரம்பி யவன்; கருணாமூர்த்தி! கலக்கம் வேண்டாம்!”
குறிஞ்சியின் முகத்தில் குமிழ நகை.
“நல்லதம்மா குறிஞ்சி! நீ எனது பாடலைப் பற்றிய உனது அபிப்பிராயத்தைச் சொல்லியே தீர வேண்டும்.”
“சொல்லுகிறேன் சுவாமி! நான் நக்கீரன் பரம்பரை யில் வந்தவள். நான் சொல்கிற கருத்து கசப்பானாலும் நான் அறிந்தவை, தெரிந்தவை, புரிந்தவை! இனிப்பான பாகங்கள் மூன்று. நாரிகேள பாகம்: கதலீபாகம்; திராட்சா பாகம்! எனது குருநாதர் தீட்சிதர் பெருமான் சங்கீதம் அழுத்தம் நிறைந்த விளம்பகால சங்கீதம். நாரிகேள பாகம்; அதாவது தேங்காய் பாகம்! அதனை உரித்து, உடைத்து, பருப்பை நிமிண்டி எடுத்து, கடினமாக மென்ற பிறகே சாற்றின் இனிமை புரியும்! பாலப்பழ பாகம் என்றும் சொல்லலாம்! சியாமா சாஸ்திரிகளின் சங்கீதம் கதலீ பாகம்! வாழைப்பழப் பாகம் ! தோலை உரிக்கிற மென்மை யான சிரமம் மட்டுமே! தங்களுடையதோ திராட்சா பாகம்! காய்ந்த திராட்சையை அப்படியே வாயில் போட்டு எந்த விதச் சிரமுமின்றி சுவைப்பது! இது இன்று உங்கள் ஆபோகி ராகம் கேட்டதால் வந்த ஞானமல்ல; ஏற்கெனவே நான் புரிந்து கொண்ட ஞானம்! இல்லை என்றால் சாமா ராகத்தையே பாடுவதில்லை என்று சத் தியமேற்று இருப்பேனா?”
“அந்த ராகம் என்ன பாவம் செய்ததம்மா?”
“ஒரு பாவமும் செய்யாததால்தான்! தங்களின் ‘மானஸ சஞ்சரரே’ என்கிற பாடல் மூலம் மோட்சம் கண்டிருக் கிறது. இனி யாராலும் அந்த ராகத்தை திராட்சா பாக மாகப் பிழிந்து அந்தப் பாடலுக்கு மீறி ஒரு பாடலை இயற்றிவிட முடியாது. எனவேதான் சாமா, பிரும்மத்தின் சாமாவாகவே இருக்கட்டும் என்று நான் பாடுவதில்லை.”
‘ஓகோகோ’ என்று கூச்சலிட்டு விட்டார் கோபால கிருஷ்ண பாரதியார். “குறிஞ்சி! இது விமரிசனமல்ல; வியத்தகு காப்பியம்!”
பிரும்மம் பிரகாசமாய்ச் சிரிக்கிறார். “பாரதி, அருமை யாகக் கருத்தைச் சொல்லி விட்டார்! இனி நீ பாடலாமே குறிஞ்சி!”
“நான் பாரதியார் பாடக் கேட்டு, பிறகு பாடுகிறேனே சுவாமி! நான் வந்தது, ‘இதோ நான் பாடுகிறேன்; நீங்களே கேளுங்கள்’ என்பதற்காகவா?”
உண்மைதான்; பாரதி! நீயும் இதே ஆபோகியில் ஒரு பாடலைப் பாடேன். நீ எப்படி ஆபோகியை ஆராதித்து இருக்கிறாய் என்பதை நானும் அறியலாமல்லவா?”
ஆபோகியில்…
“ஏ, நடராஜ பெருமானே! இது என்ன சோதனை? தியாகய்யர் வெறுமனே ஒரு பாட்டைப் பாடேன் என்று சொல்லி இருந்தால் நான் எதையாவது பாடி இருப்பேன் ! நான் சிந்தனையே செய்யாத ஆபோகியிலேயே பாடேன் என்கிறாரே! எத்தனையோ ராகங்களில் பாடிய நான் ஆபோகியை ஆராதிக்க மறந்து போனேனே!”
பாரதியின் விழிப்பையறிந்து தியாகய்யர், “ஏன்? ஆபோகியில் எதுவும் பாடல் செய்யவில்லையா, பாரதி?” என்றார்.
“நான் சிறுவன் சுவாமீ! சாதிக்க வேண்டியவை எத்தனையோ?”
“ஏன், குறிஞ்சியும் சிறுமிதானே? நினைத்த இடத்தில் நினைத்தைச் சாதித்து வருகிறாளே! அந்தப் பிரமிப்பை உன்னாலும் ஏற்படுத்த முடியும்! பாடு!”
கோபாலகிருஷ்ண பாரதியார் அறத்துன்பமாய் அம்பல வாணனை இறைஞ்சுகிறார்.
“பாடுங்கள் அண்ணா! இந்த சபாபதியைப் பாட உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? பஞ்சாட்சரத்தை ஓதிப் பாடுங்கள் அண்ணா!”
சபாபதி… நமசிவாயம்…
தம்பூர் நாதம்…
“சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானமாகுமா? – தில்லை சபாபதிக்கு…”
ஆ! இதுவல்லவோ ஆபோகி?
பிரம்மமே பிரமித்து பிரம்ம சூத்திரமாய் ரசிக்கிறார்.
‘ஆ! இவருக்குச் சமானமாகுமா?’ என்று வியக்கிறாள் குறிஞ்சி.
கான அழகு, ஞான அழகு இருக்கிற அளவுக்கு தேக அழகை ஏன்தான் இந்த சபாபதி இவருக்கு வழங்க மறுத்துவிட்டானோ? சூம்பிய கால்கள்; தடிமனான இடுப்பு; கூன்; கோணலான மண்டை; பூனைக் கண்கள்…
மண்ணில் செய்த பானையும் விண்ணை மயக்கும் *கடம் ஆனது போலவா?
“கிருபாநிதி, இவரைப் போலக்
கிடைக்குமோ இந்தத் தாரணி தன்னிலே…
சபாபதிக்கு…”
இப்படி ஒரு தமிழிசைச் செல்வரைப் போல் கிடைக்குமா இந்தத் தரணியில் என்று நெக்குருகிப் போகிறான் ஞான சுந்தரம்…
அப்போதே பாட்டியற்றி அதற்கு அவரே மெட்டமைப் பது என்பது தெய்வ பலத்துக்குரிய நிவேதம்…
சரணம் பாடுகிறார் பாரதியார்.
“ஒரு தரம் சிவ ‘சிதம்பரமென்றே
உரைத்தால் போதுமே!
பரகதிக்கு வேறு புண்ணியம்
பண்ண வேண்டுமா?”
தியாகய்யரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்… கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் ஏனோ தடை படுகிறது.
“பண்ண வேண்டுமா? பண்ண வேண்டுமா” என்று எத்தனை முறைதான் பாடிப் பாடி, மேலே போக முடியாமல் திணறுவார்? பரகதிக்குப் புண்ணியம் பண்ணிக் கொண்டிருப்பார்?
பரகதி குறித்து பரமேஸ்வரன் சோதிக்கிறான்… சோதிக்கிறான்…
*’கோபாலகிருஷ்ண பாரதியார்’ – டாக்டர் உ.வே.சா. இவர் பாரதியை நேரில் கண்டவர்.
† அக்காலத்தில், போலகம் சிதம்பரய்யர் கடம் வாசிப்பதில் பெயர் போளவர்.
இதனை வைத்துத்தான் இந்நிகழ்ச்சி சிதம்பரத்தில் நிகழ்ந்தது என்பது.
குறிஞ்சிக்கு இது புரிகிறது…
கணீரென்று குரல் கொடுத்தாள்; தமிழ் நிரல் கொடுத் தாள்; தன்னினத்துப் பரல் கொடுத்தாள்; பரிந்தும் கொடுத்தாள்:
“அரிய புலையர் மூவர்பதம்
அடைந்தாரென்றே புராணம்…”
கோபாவகிருஷ்ண பாரதியார் கண்களை அகல விரித்துக் கவனிக்கிறார்.
ஆ! தான் ஒரு புலைச்சி…
தில்லைக்கோயில் திறக்க வேண்டுமா? புராணமே திறந்து விட்டது என்கிறாளா?
“அரிய புலையர் மூவர்…
தொடர்ந்தார் பாரதி…
“பரிந்து* சொல்லக் கேட்டோம் – கோ
பாலகிருஷ்ணன் பாடு தில்லை…
சபாபதிக்கு…”
குறிஞ்சி ‘பரிந்து சொல்லக் கேட்டு, கோபால கிருஷ்ணன் பாடுகிறார்…
என்னே பெருந்தன்மையான வரிகள்… வைரங்கள்… முத்துகள்…
பாரதியார் பாடி முடித்ததும், “தங்கையே! எனக்காகப் பரிந்து சொன்னாயா? உனக்காகப் பரிந்து சொன்னாயா?” என்று கேட்கிறார்.
குறிஞ்சியும் குமிழ் நகையுடன், “இந்தத் தில்லையைப் புரிந்து சொன்னேன் அண்ணா! புராணமறிந்து சொன் னேன் அண்ணா! புலையர்கள் யார் என்பதைத் தெரியச் சொன்னேன். அண்ணா!” என்று கூறுகிறபோது அவளது கண்கள் கலங்கிப் போயின. தொண்டை அடைப்பட்டது.
*தில்லை வெட்டியான்; பெற்றான் ராம்பன்; நந்தனார்.
† இந்தப் ‘பரிந்து’ என்கிற சொல்லை வைத்துத்தான் குறிஞ்சியை இனைத்துக் கற்பனை செய்தேன்.
தியாகய்யர் கலகலவென்று சிரித்து, “சபாஷ் மகளே !” என்று கூறியபோது, அவரது முகத்தைப் பார்க்கவேண்டுமே! அவர் வரிந்து கட்டிய வரிகள்: “பொதுவில் ஜாதிக்கு நல்ல சவுக்கடிக் கொடுத்து விட்டாய்! நானும் இதே ஆபாகி ராக இன்னொரு கீர்த்தனையில், ‘மனசு நில்ப சக்திலேக போதே’ எனும் கீர்த்தனையில், மனசையடக்கச் சக்தியற் றவன் மணியோசையுடன் பூஜை பண்ணி பயனென்ன’ என்று கேட்டிருக்கிறேன். ஆணவம் நிறைந்தவன் கங்கை யில் குளித்தென்ன? காவிரியில் மூழ்கி என்ன? காமக் குரோதங்கள் நீங்காமல் கடவுளிடம் தவமென்ன கேடு கேட்டிருக்கிறேன் குறிஞ்சி!”
“அறிவேன் சுவாமி! நான் என்னைக் கோயிலுள் அனுமதிக்கவில்லை என்பதால் குறை சொல்லவில்லை. ‘தி்ல்லைவாழ் அந்தணர்களுக்கு அடியேன்’ என்று எங்கள் சேக்கிழார் வணங்கியவாறே நானும் வணங்குகிறேன்! தீட்சிதர்களின் இந்தத் தீட்சண்யமான திட்டம் கோயிலைப் புனிதப்படுத்தக்கூடியது. ஆனால் பன்றிக் கறியுண்ணும் கவர்னர் வாஷிங்டன் துரை, உள்ளே நுழைய முயன்றால் இவர்களால் மறுத்துவிட முடியுமா?”
“சபாஷ் தங்காய்!”
பாரதியின் பாராட்டு. மேலும் அவர் தொடர்ந்தார்: “பிராமணன் எங்கே இருக்கிறான்? நான்கு வேதங்களையும் தசோபநிஷத்துக்களையும் படித்துப் பிரம்மத்தை அனுஷ்டிக் கிற பிராமணன் எங்கே இருக்கிறான்? உஞ்சவிருத்தி செய் பவனே அசல் பிராமணன்! உங்களைப்போல சுவாமி! எங்களைப் போலப் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டவர்களா?”
அங்கே நின்றிருந்தவர்களுள் தீட்சை நிறைந்த ஒரு தீட்சிதர் பாரதியாரைத் தீட்சண்யமாய் நோக்கிக் கேட்டார்:
“பாரதி! கோபத்தால் சேற்றை எடுத்து நம்மீது பூசிக் கொள்வது நலம் பயக்காது!”
“இங்கே செந்தாமரையையே ஒதுக்கிய பிறகு சேறாவது? கங்கை ஆறாவது? இறைவன் பேராவது?”
“இது அம்பரம்! அம்பர ரகசியமறியாமல் பேசிப் பயனில்லை! குறிஞ்சி, சிறந்த சங்கீத சிரோன்மணி! ஈசன் கட்டளையிடட்டும். கவர்னர், வருகை வேறு; இந்த கானப் பேரழகி வருகை வேறு. கட்டளை கிடைக்கட்டும் இப் போதே மேள தாளத்துடன் அழைத்துச் செல்கிறோம்!”
“உள்ளே வருபவர்களெல்லாம் கட்டடையிட்டுத்தான் வருகிறார்களா? குறிஞ்சியின் புகழ், இவளை குறிஞ்சி என்று இனம் காட்டி, புலைச்சி என்று தெரியவருகிற போதுதானே தடை? இவளே வெறும் பெண்ணாக இருந்து உள்ளே சென்றிருந்தால் புலைச்சி என்று எவருக்குப் புரியும்? தேஜோமயமான அந்த சிவகாமசுந்தரி போலல்லவா இவ ளிருக்கிறாள்? சுவர்னர் துரை வருகை வேறு என்றால் என்ன அர்த்தம்?
இந்த வாதத்தைக் குறிஞ்சி கொஞ்சமும் விரும்பவில்லை. குறுக்கிட்டாள்: “அண்ணா! ஏனிந்த வீண்வாதம்? நான் சத்தியமாக இந்தக் கோயிலுக்கு வரவில்லை. போதுமா? உங்களிருவரையும் ஒருசேரக் காணவே வந்தேன்! புலையர் களுக்கு வேதம் தெரியாது என்பது புன்மை என்பதை எடுத்துக்காட்டவே மூன்று சைவப் புலையர்களைப் பரிந் துரைத்தேன்! வேதோப நிஷத்துக்களை நன்கு பயின்றவர் புலையர் என்றும் புரோகிதர் என்றும் பாரார்! ‘எவரே யாயினும் யாரே யாயினும் உண்மையை உள்ளபடி உணர்ந்தால் அவரே அழியாப் பதவியடைகிறார்கள். இதைத் தானே உபநிஷதங்கள் பன்னிப் பன்னி பாஷையில் சொல்ல வேண்டுமானால், பல்லவி மாதிரி அடிக்கடி ‘ய ஏவம் வேத’ என்று சொல்லுகிறது? பிரா மணம் என்பது ஒரு வஸ்து! பிரம்ம வஸ்து! அது த்வைதமாக, அத்வைதமாக, விசிஷ்டாத்வைதமாகப் பரிணாமித்து இருக்கிறது! அல்லது பிளவுப்பட்டிருக்கிறது! இந்த வஸ்துவைப் புலையன் புரிந்து கொண்டாலும் பிரம்மம்தான்! ஆத்மா இறைவனோடு இரண்டறக் கலக்கிற போது ஜாதியையா பார்க்கிறது? அத்வைதம் இதைத்தானே சொல்கிறது? ‘தஸ்ய கார்ய நவித்யதே’ என் கிறான் பகவான் கீதையில்! இந்த உடம்பால் ஒரு பய னுமில்லை. இந்த உடம்பு வெறும் சட்டை என்றால் நான் புலையர் சட்டையை மாட்டிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் பிராமணச் சட்டையை மாட்டிக் கொண்டிருக் கிறீர்கள்! இரண்டு ஆத்மாக்களும் தூய்மை பெறுகிறபோது தான் பிரம்மமாகிறது; பிராமணமாகிறது!”
குறிஞ்சி இவ்விதம் சொல் மழை பொழிந்த பிறகு ‘தாயே!’ என்று கரம் கூப்பிவிட்டார் தியாகய்யர்.
“தங்கையே” என்று தலைவணங்கினார் பாரதி.
“குறிஞ்சி! போகட்டும் அம்மா! ஆயிரம் மகான்கள் தோன்றி அறிவுரைகள் சொன்னாலும் இது ஒரு தீராத பிரச்சினை! தணியாத தாகம்! இப்போதைய எங்கள் தாகம் நீ பாடிக் கேட்பது! நீயும் இதே ஆபோகியில் பாடேன்!”
“மன்னிக்க வேண்டும் சுவாமி! இனி ஆபோகியிலும் பாடுவதில்லை என்று சத்தியம் மேற்கொண்டு விட்டேன்- சாமா ராகம் போல! பாரதியார் பாடிய ‘சபாபதிக்கு மிஞ்சி இனியொருவர் ஆபோகி பாடிச் சமானமாக முடியாது!”
“சபாஷ் தாயே! பாரதிக்கு நீ தந்த விமரிசனம் அந்த துர்க்கையான பாரதி சொன்னதுபோல! நானும் நினைத் தேன்! நமசிவாயனே நாவில் குந்தி விட்டானா என்று! நீ நன்றாகப் புரிந்து கொண்டாய்? உன்னைத்தான் இங்குள்ள வர்களுக்கு புரியவில்லை! என்ன ராகம் பாடப் போகிறா யம்மா! குற்றாலக் குறிஞ்சி என்கிற அபூர்வராகம் ஒன்றைப் படைத்து இருக்கிறாயாமே! அதனைப் பாடேன்! நீ தான் அபூர்வ ராகங்களின் அரசியாயிற்றே! எங்கே அந்த உன் பேர் கொண்ட ராகத்தைப் பாடு! இந்தக் கிழவன் கேட்டு ஆனந்திக்கிறேன்!”
“மீண்டும் மன்னிக்க வேண்டும் சுவாமி! அதனை திருவையாற்றில் தங்கள் வீட்டிலேயே பாடுவேன் !
“இங்கு பாடுவதற்கு என்ன தடை இருக்கிறது? தங்கையே. உன் பெயர் என்பதாலா?”
“அற்புதங்கள் நிகழ்ந்து விடலாம்!” குறிஞ்சியின் நெஞ்சு நிமிர்கிறது. அதே நெஞ்சை நிமிர்த்திக் கேட்கிறார் கோபால கிருஷ்ண பாரதியார்.
“என்ன அற்புதங்கள்?”
“நடராஜர் சிலையே பெயர்ந்து வந்து என் முன் நடம் புரிந்தாலும் வியப்பதற்கில்லை!”
குரலில் அகங்கார மமகாரம் தெரியாவிட்டாலும் தேகச் சிலிர்ப்பில் ஓர் ஆவேசம் பீறிடுவது தெரிந்தது.
“அந்த அற்புதம் நிகழட்டுமே! எனக்கு ஸ்ரீராம பிரான் காட்டிய அற்பதத்தைப் போல!” என்று உசுப்பி னார் தியாகய்யர். அது ஞான உசுப்பல். அக்காலத்தில் இதை விட அற்புதங்களெல்லாம் நிகழ்த்து இருக்கின்றன. ஆத்மாக்கள் சாதித்து இருக்கின்றன. அது ஓர் ஆத்ம விஞ்ஞான ரசவாதம்!
தியாகய்யரை கரம் கூப்பிய குறிஞ்சி சொன்னாள்: “மறுப்பதாக நினைக்க வேண்டாம் சுவாமி! இந்தக் கூட்டத்தில் எனது தலைசிறந்த ரசிகன் ராஜகாந்தி இருக் கிறார். அந்த நாகம் இந்த மகுடி கேட்டால் அருகில் வந்து விடும். கும்பினித் தடிகள் அந்த நாகத்தைக் கொல்ல மூலைக்கு மூலை காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜ நாகத்தின் வேண்டுகோள் இந்த ராகம் இங்குப் பாட வேண்டாம் என்பது.”
“பயங்கரக் கொள்ளைக்காரன் ராஜகாந்தி இந்தக் கூட்டத்தில் இருக்கிறானா?” பாரதியார் பதறிப் போகிறார்.
ஒரு முறை தியாகப்யர் வணங்கும் ராமர் சிலை காணாமல் போய், பாடி வரவழைத்த பிறகு, ‘கண்டுகொண்டேன் உன் பெருமையை என்று பூரித்துப் பாடியவர் ஐயர்வாள். நம்ப மறுப்பவர்களுக்கு ஒரு மூலம் சொல்வேன்: உலகியலுக்குத் திருக்குறள் எப்படியோ அப்படி உளவியலுக்குத் திருமூலம்; அதற்கு மிஞ்சி ஒரு மூலமும் இல்லை.
“பயப்படவே வேண்டாம். நான் நாகம் என்று குறிப்பிட் டதே, அது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது. விதி முடியா மல் தீண்டாதே! இரவு வைத்தீஸ்வரன் கோயிலில் தங்க இருந்தவளுக்குத் துணையாக இருந்து, சிதம்பரத்துக்கு அவசரமாக அழைத்து வந்ததே ராஜகாந்திதான்! இல்லை யென்றால் உங்களை ஒருசேரக் காணும் அற்புதம் நிகழ்ந்திருக்காது! நான் அந்த நாகத்துக்குக் கட்டுபட்டவள். அது இல்லாதபோது இந்த ராகம் பாடுவேன்!”
ஐயர்வாள் ஆச்சரியப்பட்டுப் போனார். ‘குறிஞ்சி! நான் ராமனை ரசிகனாக்கியது சுலபம்! நீ ராஜகாந்தியை ரசிகனாக்கியது, ஓ… பெரிய விஷயம்! நல்லது என்ன ராகம் பாடப் போகிறாய், தாயே?”
“நந்தினி!”
“நந்தினி?”
“ஆமாம் ‘நந்தன்’ பெண்ணுருவில் இங்கே வந்திருக் கிறேனே! எனவே நந்தனுக்குப் பெண்பால் நந்தினி. பெயர் அழகாக இல்லையா சுவாமி?”
“ராகமும் அழகான ராகம்தான்! ஆனால் மந்திரசக்தி நிறைந்த ராகம்! நீ…”
‘வேண்டுமென்றே ஏதோ குழப்பம் செய்ய நினைக் கிறாய்’ என்று சொல்ல வந்தவர் சொல்வதை நிறுத்திக் கொண்டு, “பாடு! அந்த ஸ்ரீராமன் என்ன நிகழ்த்த இருக் கிறானோ?” என்று தியாகய்யர் ஆசீர்வதிக்கிறார்.
இப்போது அந்தத் தீம்பிழித் தம்பூர் தீட்சிதரின் சிஷ்யைக்குக் குரலோவியம் தீட்டியது.
நந்தினியை நந்தினியாகவே இந்த நந்தினி பாடமுடியுமா?
பாரதியார் பதற்றம் கொண்டு பார்க்கிறார்.
இராதும்-21
பாரதி
மூகங்களுக்கு முகம், முகவரிகளைத் தேடிக் கொள்கின்றன.
எந்த முகத்தில் ராஜகாந்தியின் ரகசிய விலாசமிருக்கும்? சந்தேகம்: குழப்பம்…
ராஜகாந்தி என்கிற ராட்சஸக் கொள்ளையன் அந்தக் கூட்டத்துள் ஒருவனாக மறைந்திருக்கிறான் என்கிற வியர்க்கும் செய்தியே இப்பேர்ப்பட்ட விசித்திரத்தை உண்டுபண்ணியது.
ஆனாலும் அவன் வீணர்களைத்தான் நொறுக்குவான்; வீணைகளை நேசிப்பான்; அவனது இந்த அகவற்பா எல்லாரும் அறிந்தது. மேலும் குறிஞ்சி எனும் அவனது ஞானாசிரியை இங்கிருக்க ஏதும் நிகழ்ந்துவிட முடியாது. ஒரு தைரியம்.
குறிஞ்சியின் தம்பூர்த்தவம் இன்னமும் நீங்கவில்லை. ஏற்கெனவே ஆபோகியில் அறிமுகமாகிவிட்ட குரல் தான். புலையர் புராணம் விரித்த அந்தக் குரல் நந்தினி யின் நயம் பேச நந்தனை எண்ணிப் பார்க்கிறதோ?
மக்களிடையே அமைதியின் இறுக்கம் திணறுகிறது. ஆதார சுருதியில் ‘ஓம்’ குரலொலிப்பு; அவள் குரலுக் கேற்ப அவளே ஓர் ஓவிய நாதம்..
நந்தினியின் நயமோ என்று சிந்திக்கிற மாதிரி…
ஆதார சட்சத்தில் சுருதியில் நின்றவள். ஒரே தாவாக மேல் சட்சத்துக்குச் சென்று நின்று, உடனே பஞ்சம சுர மிருந்தும் மத்திமத்தில் இறங்கிக் குரலை நிறுத்தி இழையச் செய்வது கண்டு தியாகய்யர் திகைத்துப் போனார்.
இசையை எளிய அருவியாக்கினாலும் இந்தக் குற்றால இனிய அருவி, தீட்சிதர் என்கிற மலைபோன்ற பாறையான அழுத்தப் புலமையிலிருந்து வெடித்து வந்ததல்லவா?’ ராகப் பிழிவுக்குத் தீட்சிதர்; லயச்சேர்ப்புக்கு சியாமா சாஸ்திரிகள்; திராட்சாபாக இனிமையை உண்டாக்கியவர் தியாகய்யர், தமிழாகி மேலும் இனிமை காட்டியவர் கோபாலகிருஷ்ண பாரதியார்! ஆனால் குறிஞ்சி?
நந்தினி ராகத்தை நயம்படப் பாடுகிறாள். அவளது நாவில் அந்த வாடவராகம் ‘சரவணபவ’ என்கிற சடாட்சரத்தை எதிரொலிக்கிறது.
காற்றும் நெருப்பும் சேர்ந்தது நாதம்.
மூலாதாரப் பிரமந்திரச் சுழற்சியில் உந்தி, இதயம், கழுத்து, தலை, வாயால் வெளிப்படுகிற புவன மொழி! இதன் எழுத்து சரிகமபதநி; இதன் இலக்கணம் சுருதியும், லயமும், கமகங்களும்…
இதன் பரிசுத்த குழந்தைகள் 72 தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் – 34848.
பாஷாங்கமாகி விட்ட குழந்தைகளும், வக்கிர புத்தி படைத்துவிட்ட குழந்தைகளும் பட்டியலில் அடங்கா! பல்வேறுபட்ட வாரிசுகள்.
மனிதர்களில் வக்கிரப்பட்டால் ஊதாரிகள்!ராகங்களில் வக்கிரப்பட்டால் ஊனத்தின் உயர் சிருஷ்டிகள்; சகானா வைப் போல! கானடாவைப் போல!
மனிதர்களில் பாஷாங்கமானால் பெண் பொறுக்கிகள்; அல்லது விபசாரிகள்! ராகங்களில் பாஷாங்கப்பட்டால் ரகசிய இனிமைகள்; பெஹாக் ராகம் போல!
காலத்துக்கேற்ப ராகங்கள்: சுவைக்கேற்ப ராகங்கள் என்பதில் குறிஞ்சிக்கு அறவே நம்பிக்கை கிடையாது. அழுகை ராகமான முகாரியையும் அந்த வக்கிரத்தை மேலும் கொஞ்சம் வக்கிரப்படுத்தினால் மகிழ்ச்சியாகவே பாட முடியும் என்கிற நம்பிக்கையுடையவள். ஆனால் ரேவதி போன்ற சோக ராகங்களை இனிமையாக வேண்டு மானால் பாடலாம்; மகிழ்ச்சியாகப் பாட முடியாது என்கிற அனுபவமும் அறிந்தவன். பாடுவோரின் அசிங்க மான இருபத்தோர் குணக் குற்றங்களைச் சுத்தமாக மதிப்பவள் – அதாவது மாவரைப்பதுபோல ராக ஆலாபனை செய்கிறார்களே… அம்மாதிரியான குற்றங்கள்! கையைத் தூக்கி, முகத்தை அசிங்கமாக்கிப் பாடுவதுபோல…
குறிஞ்சி, நந்தினி ராகத்தை ஓர் உயர்குலத்து ராக மாகவே வித்தாரம் செய்கிற போது…
தியாகய்யர் மனம் அந்த ராகத்து ஆரோசை, அமரோசையை முணுமுணுத்து கொள்கிறது…
சரிகமபநிசா… ச்நிபமகரிச…
இதன் பிறப்பிடம் அரிகாம்போதியா? வகுளா பரணமா?
பாரதி சிரிக்கிறார்? தனது பிறப்பிடம் எது என்று சுட்டிக்காட்டுகிறாளோ குறிஞ்சி?
அரியாகிய விஷ்ணு என்ன ஜாதி?
வகுளாபரணமாகிய மகிழம்பூ மாலையை யாருக்கு அணிவித்தால் என்ன? காம்போதி என்றாலே காமுறும் மாலை! மானுட தேகத்தில் காமம் மலைபோல் குவிந்தி ருக்கிறவரை, அவன் என்ன சுய ஜாதி சுப்ரபாதத் தையேவா தேடுகிறான்? சமயம் கிடைத்தால் சண்டாளச்சி என்றா மனம் பார்க்கிறது?” என்று அரிகாம்போதி தாய் ராகத்தைச் சுட்டிக் காட்டுகிறாளா?
நந்தினியாக மாறியவள், நந்தினி ராக ஆலாபனை மூலம், கூட்டத்துக் கண்களில் நந்தினி நீரையே – இந்திர பிரஸ்தத்துப் புண்ணிய நதி நீரையே வழிந்தோடச் செய்கிறாள்…
ஆ! இது கானமா? தேவ ஞானமா?
தியாகய்யர் ராம ஜோதியிலும், பாரதியார் அலகில் ஜோதியிலும் மூழ்கிவிட்டனர்.
பல்லவி தொடங்குகிறாள்…
‘ய ஏவம் வேத’ என்கிற உபநிஷதப் பல்லவியையே தமிழ் ஞானசம்பந்தனாகிப் பாடுகிறாள்…
எது உண்மை? எதுதான் பொய்? -அதாவது
எண்ணிடில் அது அது, அது அது 1
வேத வித்துவான பிரம்மம் ‘ஓகோ’ என்றார்; உபநிஷத சாரமான பாரதி ‘ஆகா’ என்றார்!
ஓ… இவள் தத்துவங்களைத் தமிழில் முத்தாகச் சேர்த்து சத்துவமாக, சத்தியமாக, சத்தியவதியாக மக்களுக்குப் புரியப் பாடுகிறாள்; எனவே மக்கள் செலவாக்கைப் பெற்று விட்டாள்! மக்களுக்குப் புரியாமல் எது செய்து என்ன பயன்?
பாரதியார் யோசிக்கிறார் மிகப்பெரிய ஞானோதயம். ஆயினும் மக்களுள் பலவிதமுண்டு. முண்டச்சீவிகள் ஒருவிதம்; அறிவு ஜீவிகள் மறுவிதம்! இவள் அறிவு ஜீவி ராகம்! தெருக்கூத்து இலக்கியமல்ல; காளிதாசன் நாடகம்! புழுதி கிளப்பும் ஆட்டமல்ல; செவிகள் புண் ணாகும் பாட்டுமல்ல! சிவகாம சுந்தரி நாட்டியம்! நாரத கானம்; இல்லை…. வாணியின் வாய்ப்பாட்டு!
பாடல் முடித்து…
சரண இறுதியில், தமிழுக்கே தகைமை சேர்த்த சேக்கிழார் வரிகளான ‘அலகில் ஜோதி என் அம்பலத் தாடுவான், அவன் சிலம்படி, என் இனமடி-டீ!” என்று தனக்கே உரிய முறையில், தனது நிலைக்கு ஏற்ப அடி-யாகவும் ‘அடீ தோழீ!” என்பதாகவும் பாடி, சுரம் பாடிய விந்நியாசங்கள்…
விநோத விசித்திரங்கள்…
தீட்சிதர்களுடைய விழிகளிலும் தீர்த்தத் துளிகள்; மனத்திலும் அந்த அம்பலவன் ஆணையிட்டது போன்ற தீர்க்கமான முடிவுகள்..
பாடலைப் பாடி நிறுத்தி வழக்கம்போலச் சற்றே கண்களை மூடித் தியானிக்கிறாள்…
“குறிஞ்சி! மீண்டும் சொல்லுகிறேன். நீ அந்தச் சீதையின் அவதாரம்!” என்றார் தியாக பிரும்மம். ஆனால் கோபால கிருஷ்ண பாரதியாரோ, “அந்தச் சிவகாமசுந்தரியின் கமல மனோகரி ராகம்!” என்றார்.
தலைமை தீட்சிதர், குறிஞ்சியின் அருகே வந்து கரம் கூப்புகிறார்: “இசைமகளே ! நீ சந்நிதிக்கு வருகை தரலாம்! நீ அந்த சரஸ்வதி! அவளை எந்தப் பிறப்பில் இணைத்துப் பேச முடியும்? எந்த ஜாதி என்று எடுத்துக் கூற முடியும்? பிரமனுக்கும் ஜாதியில்லை; அவனது கல சத்து நீரில் பிறந்த கலைவாணிக்கும் ஜாதியில்லை! இந்த இருவரையும் மான்களாக்கி மாயம் புரிந்த ஈசனுக்குப் பெற்றவர்களே கிடையாது; பிறவாயாக்கைப் பெரியோன் என்றால் மற்றதைப் பற்றிப் பேசுவானேன்?”
கூட்டத்தே புவனமே மலைத்துவிட்டது போன்ற அமைதி. செடி, கொடி, மரம் அனைத்துமே மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு மீண்டும் செயல்படப் போகிறதைக் கவனிக்கிற மாதிரி ஒரு சலனமற்ற நிலை…
“குறிஞ்சி! இசைக்குலக் குறிஞ்சி! நீ சந்நிதிக்கு வந்து செல்ல வேண்டும்!” மூவாயிரவரில் மூத்தவரின் முக மலர்ந்த முகமன்.
அகமலர்ந்து சிரிக்கிறாள் அழகி குறிஞ்சி.
“வருகிறேன் தீட்சிதர் பெருமானே! ஆனால் ஒரு நிபந்தனை.”
“என்னம்மா?”
“சந்நிதிக்குள் என்னைத் தமிழில் பாட அனுமதிக்க வேண்டும்!”
“அது முடியாதம்மா! சந்நிதிக்கு வெளியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தமிழில் பாடலாம்! இந்தச் சட்டவிதிமுறை உனக்காக மட்டுமல்ல; கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் உண்டு. இது வழிவழியாக…”
“போதும்! நான் குறிஞ்சி! எந்தை முருகன் தந்த தமிழுக்குச் சந்நிதியுள் இடமில்லை எனில் அதுவே தீண்டப்படாத மொழியாகி விட்டது! குறிஞ்சி இந்தக் கோபுர வாசலையும் தாண்ட நாணப்படுகிறாள்! இந்த நடராஜப் பெருமானை எனது குற்றாலக் குறிஞ்சி ராகத் தில் வசப்படுத்த முடியும்; என் முன்னே ஆடவைக்க முடியும்; ஆடத்தான் போகிறார்! திருச்சிற்றம்பலம்! நான் புறப்படுகிறேன்.”
குறிஞ்சி இவ்விதம் கூறியதும் எங்கிருந்தோ, “சபாஷ் மகளே!” என்கிற குரல் கேட்கிறது.
எங்கிருந்து கேட்கிறது! எவருக்குமே அது புரியவில்லை. ஏதோ நடராஜமூர்த்தியே குரல் கொடுத்தது போன்ற பிரமை ஏனையவர்களுக்கு…
அது ராஜகாந்தியின் குரல் என்கிற ரகசியம் குறிஞ்சி அறிவாள்; அவளது குழுவினர் அறிவர்.
தியாக பிரம்மத்தின் தாள் பணிந்து எழுந்து நிற்கிறாள்.
“சுவாமி! எனக்கென்று சில கொள்கைகள்: இது எனது முடிவு; மன்னிக்க வேண்டும்!”
‘சீதே! நான் உன்னை மன்னிப்பதா? ‘எந்தரோ மகானு பாவுலு’ என்று அன்று பாடினேன். அதனை இன்று பாடியிருக்க வேண்டும். நீ எல்லாரையும் விமரிசித் தாய்; நான் உன்னை விமரிசித்து ஆசீர்வதித்து அனுப்பு கிறேன். இனிப்பான பாகங்கள் மூன்றல்ல; நான்காவதும் ஒன்றுண்டு. அது தேன் பாகம்! என்னைத் திராட்சா பாகமென்றாய்! அதுகூட பற்களுக்குக் கொஞ்சம் சிரமம் தர வேண்டும்! நீ தேன்! சிரமமில்லாமல் இனிப்பாகத் தொண்டையுள் இறங்குவது.”
‘ஓகோ, கோ’ வென்று வழக்கமான குரல் கொடுத்துப் பாராட்டைத் தெரிவித்தார் கோபாலகிருஷ்ண பாரதியார். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, துரைசாமிப் பிள்ளையுடன் புறப்பட்டாள் குறிஞ்சி.
வித்துக்குள் விருட்சமாய், சத்துக்குள் சராசரமாய் ஆட்டிப்படைக்கும் அம்பலவாணனான அலகில் ஜோதி யானின் உலகின் திருவிளையாட்டை அறிந்தார் யார்? புரிந்தார் யார்?
‘கண்டாரும் கிடையாது; விண்டாரும் சொன்ன தில்லை. அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றையாய்ச் சமைந்திருக்கும்’ என்று நந்தன் சரிதத்தில் மகா அத்வைதி யான கோபாலகிருஷ்ண பாரதியாரே பாடிவிட்ட பிறகு?…
அன்றைய இரவு, சிதம்பரம் சைவத் திரு. பிடில் வித்து வான் துரைசாமிப் பிள்ளையின் இல்லத்தில் ஓய்வெடுத்து விட்டு புலரிச்சூரியன் உதயமாகிற போது குறிஞ்சியின் குழுவினர் புறப்படுகிறார்கள்.
அப்போதுதான் விதி இரட்டை முகமாய் விகசித்துக் குறுக்கிட்டது. இது காலத்தின் ஒப்பந்தமோ?
தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்பு தந்தையாகிய விருபாட்சக் கவிராயர் அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்திருந்தார். அவருடன் சிதம்பரம் சுந்தரலிங்க ஐயரும் அவரது சுந்தரத் திருமேனி கொண்ட மகள் பாரதியும் வருகை தந்திருந்தார்கள்.
“பெரியப்பா! இது என்ன திடீர் வருகை? நான் ஒருத்தி நாடு நோக்கித்தானே புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்?” என்றாள் குறிஞ்சி. அப்போது ஞானசுந்தரம் வெளியில் சென்றிருந்தான்.
“ஞானசுந்தரம் எங்கே? அவன் நலமா?”
அவர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டார். குறிஞ்சியும் அணிய வேண்டிய புன்னகையை அணிந்து தலையசைத்தாள்.
“குறிஞ்சி! நான் வந்த விவகாரம் பின்னால் சொல்லு கிறேன். இவர் சொந்த ஊர் சிதம்பரம். இவரது மகளான இந்தப் பாரதி, நல்ல தமிழ்ப்பற்றுடையவள். இதே சிதம்பரத்தில் மகாவித்துவான் பல்லவி கோபாலய்யா வந்திருந்த போது, உன்னை மக்கள் பாடகி என்று சொல் வற்குப் பதிலாகத் தெருக்கூத்துப் பாடகி என்று சொல்லி விட்டாராம்! பாரதியோ உனது பரம ரசிகை! தலையை வெட்டி இக்கணமே காலில் போட்டுவிடு என்றால் செய்யக் கூடியவள்! எனவே இவள் அந்தப் பல்லவி கோபாலய் யரிடம் ஒரு சத்திய சபதத்தை மேற்கொண்டு விட்டா ளாம். “கோபாலய்யாவே! உமது கொட்டத்தை எனது குறிஞ்சியை விட்டே அடக்கச் சொல்லவில்லையென் றால், நான் சுந்தரலிங்கம் ஐயருக்குப் பிறந்தவளில்லை” என்பது அந்தப் பயங்கரச் சபதம். இப்போது தஞ்சையில் சரபோஜி அரண்மனையில் அவரது மகன் சிவாஜியின் திருமணநாள் விழாவாகக் கலைவிழா நடக்கிறது. உனக் கும் இன்னும் கொஞ்ச நேரத்திலோ போகிற வழியி லேயோ அழைப்பு வரும்: கலந்து கொள்கிறாய்; இந்த உனது ரசிகை பாரதியின் பயங்கரச் சபதத்தை நிறை வேற்றுகிறாய்!”
“சபதம் என்னமோ பயங்கரம்! என் மீது கொண்ட ரசனை இவளை இவ்வாறு சபதம் செய்துவிடச் செய்து விட்டது. மாபெரும் வித்துவான் பல்லவி கோபாலய்யா! அவரை நான் எதிர்ப்பதா?”
“அப்படி எதிர்க்கவில்லையானால் இன்றே தற்கொலை செய்து கொள்வேன். காரணம் நான் என் தந்தைக்குப் பிறக்கவில்லையே?!”
பாரதி, நெட்டங்கமாகக் குறிஞ்சியின் கால்களில் விழுந்து கதறவே செய்தாள். “நான் உங்களை அந்தப் பாரதியாகிய பராசக்தியாகவே மதித்துப் போற்றி வரு கிறேன். என் சபதம் நிறைவேறியே தீர வேண்டும்.”
“நல்லது, பாரதி! எனக்குப் பிடித்த ஓர் இனிய ராகத்துப் பெயரைக் கொண்ட ரசிகை நீ! ஆனால் அந்த மகா வித்துவானோடு நானாக எவ்விதம் வம்புக்கு இழுப்பேன்!”
“நானே வருகிறேன்! வம்புக்கு இழுக்கிறேன்?” அந்த மகாகாளி பாரதி போலக் கண்கள் கனன்று நோக்கு கிறாள் பாரதி.
வளர்ப்புத் தந்தை விருபாட்சக் கவிராயரோ, “எனது நண்பர் சுந்தரலிங்கம் ஐயர். எனது வறுமை காலத்தில் கை கொடுத்தவர். அவரது மகள் பாரதி. அந்தப் பாரதியே வந்து கட்டளையிடுவது போலக் கூறுகிறாள். நீ ஒப்புக் கொண்டே தீர வேண்டும். உன்னை யார் என்று காட்டு! சங்கீத சாஸ்திர மகிமையுள்ளவள் என்பதைக் காட்டியே ஆகவேண்டும். நீ மக்கள் பாடகியல்ல; மகாவித்வப் பாடகி என்பதை அரண்மனையே உணர வேண்டும்” என்றார்.
இதுகூட விதியின் கண்டிப்பு என்று சொல்லிவிட முடியாது..
அடுத்து விதி காட்டிய இன்னொரு முகம்தான் அந்தப் பாரதியையே அதன் சாரதியாக்கிவிட்டதோ? அல்லது…
அந்தக் கால ரதத்துச் சக்கர ஓசையில்…
பாரதி ராகத்தின் ஆரோணகமான சரிமபதநிசா; ச்நித பமரிசா… கேட்கிறதோ?…
ஓ… இந்தச் சோக ராக மேளகர்த்தாவான பவப் பிரியாவை குறிஞ்சியறியாதவளா? பவமாகிய அழிவு என்கிற அர்த்தத்தைத் தரத்தக்க பிரிய ராகத்தில் பிறந்த தல்லவா பாரதி ராகம்?
விதிரூபமாக வந்த பாரதியின் வேண்டுதல் கூட ஒரு கலைச்சவால்! இப்போது விருபாட்சக் கவிராயரின் நாவில் அமர்ந்து வெளிப்பட்ட சொற்கள்தாம் அழிவைத் தரக் கூடிய பாரதியோ?
“குறிஞ்சி! உன்னைக் கேட்காமலேயே ஒரு கச்சேரிக்கு ஒப்புக் கொண்டேன். அவரும் எனது வறுமைக் காலத்தில் ஆதரித்த வள்ளல்! அவர் காளையார் கோயிலில் அடுத்த வாரம் விழா எடுக்கிறார். ‘கானப் பேருரை காளை’ என்று சுந்தரர் பெருமான் பாடிய கானப் பேருரையில் என்கிற சரித்திரப் பிரசித்திப் பெற்ற காளையார் கோயிலில் பாடுகிறாய்! ஆனால் பணத்துக்கல்ல, இலவசம்! என்னை வறுமையிலிருந்து காத்த இந்த இருவருக்கும் நீ செய்கிற கைமாறு, எனக்குச் செய்வதுபோல!”
ஓ… என்ன அறத்துன்பமான சொற்கள்?…
குறிஞ்சி இன்னமும் யோசிக்கிறாள். விதியின் ரதத்தைச் செலுத்துகிறவள் பாரதியா? இல்லை பாரதியின் ரதத்தைச் செலுத்துவது விதியா?
அவள் யோசித்ததெல்லாம் பல்லவி கோபாலய்யாவை வம்புக்கு இழுப்பதா என்பது! ஆனால் விதியின் ஒப்பந்தம் காளையார் கோயிலில் காத்துக் கொண்டிருக்கிறதே… அதனை அவள் எவ்விதம் உணருவாள்?
அந்த நேரத்தில்-
அந்த வீட்டுக்குள் சரபோஜி மன்னரின் அழைப்பும் நுழைந்து கொண்டிருந்தது.
– தொடரும்…
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.