குற்றாலக் குறிஞ்சி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 1,151 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.

இராகம் 13-15 | இராகம் 16-18 | இராகம் 19-21

இராகம்-16

மேகராகக் குறிஞ்சி 

“அம்மா, நீ யார்?” 

பொன்மேனி மின்னி எழுந்து நின்ற அபிராமிபட்டர் கண்கூனிக் கலங்கிக் கேட்கிறார். 

அந்தப் பெண்மணி சொன்னாள்: 

“நீங்கள் பாடிய ‘அழியாத நீலியல்ல;’ குறிஞ்சியம்மா பாடிய நீலி ராகமுமல்ல; என் பெயர் உண்மையிலேயே அபிராமி!” 

“அபிராமி?” 

“அக்கிரகாரத்தில் என்னை எத்தனை முறை பார்த்து இருக்கிறீர்கள். மறந்துவிட்டீர்களே ! சிவசங்கரய்யர் மனைவி!” 

புரியவில்லை பட்டருக்கு; ஆயினும் புரிந்ததுபோலச் சொன்னார். “ஓகோ! ‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமா? ஏன் தாயே குற்றாலக் குறிஞ்சி ராகம் பாட மறுக்கவேண்டும்? சிவகங்கை இளைய ஜமீந்தார் அதிகாரத்தொனியில் ஆணையிட்டார் என்பதாலா? நான் ஆசைப்பட்டு வந்ததே இந்த ராகம் கேட்கத்தானே?” 

“நீங்கள் ஆசைப்பட்டீர்களா? ‘ஆசைக் கடலில் அகப் பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லல்பட இருந்தேனே’ என்று பாடியவர் ஆசைப்படலாமா? பட்டர் சுவாமி! நான் உள்ளங்கையில் உலகைப் பார்ப்பவள்; குற்றாலத்தையே பார்க்காதவள்; குற்றாலக் குறிஞ்சியைத் தானா கேட்கப் போகிறேன்? இப்போதைக்கு இது அவசிய மில்லை. இந்தப் பாடகி இசை உபாசகி என்று கேள்வி. இந்தப் பகுதியே வறண்டு, தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கு கிறது! நீலி ராகம் பாடி என்னை நிமிர்ந்து எழச்செய்த குறிஞ்சி, மழைக்குரிய ராகம் பாடி வானத்தை நிமிர்த் தட்டுமே! சில தலைகள் குனியட்டுமே! இந்த மக்கள் மகிமை உணர்ந்து மகிழட்டுமே!” 

அந்தத் தெய்வீகக் களை பொருந்திய பெண்மணி கூறியதும், சிவகங்கை குறுக்கிட்டது. 

“நீ யார் அதிகாரம் செய்ய?” 

இந்த ஆணவப் பேச்சைக் கேட்டு சிவாஜியின் கண்கள் லேசாகச் சினக்கின்றன. 

அந்தப் பெண்மணி சொன்னாள்: 

“ஒரு ரசிகை! தான் விரும்பியதைக் கேட்கிற உரிமை யுடையவள்! இதனை இங்கு கோயில் கொண்டிருக்கும் அபிராமியின் கட்டளையாக எடுத்துக் கூறினேன். மற்றபடி. நான் சாதாரணம்; உங்களைப் போல அசாதாரணமல்ல!” 

இந்த நேரத்தில்… 

எதிரிலிருந்த அபிராமி சந்நிதியில் மணியோசை கேட் கிறது. பூஜை முடிந்து காயத்திரி மந்திரம் கேட்கிறது. கூட்டத்தில் ஒரே பரபரப்பான ஆச்சரியம். 

“தாயே! குறிஞ்சியெனும் அபூர்வ புஷ்பம் உன்னைத் தேடி வந்து சங்கீத வாசனையைத் தருகிறபோது, ஏனடி உனக்கிந்த நீலிக்கோலம்?” 

பட்டர் குரல்தான், கூட்டத்தில் அவரைக் காணோம். சந்நிதிக்குச் சென்று சஞ்சலம் தவிர்க்கிறாரோ? குரல் அங்கிருந்தல்லவா கேட்கிறது? 

காவிரி, குறிஞ்சியின் கண்களில் பூ விரிக்கிறாள். 

நமது சங்கீதத்துக்கு இது சோதனையா? சாதனையா? இப்போது… 

அக்கினிக் குண்டங்களாய் விழிகள் ஆவிர்ப்பிக்கின்றன… சந்நதம் கண்டவளைப் போலத் திரும்ப… தம்பூர் ஓம்கரிக்கிறது… 

ஓ… என்னே அமைதி! 

பட்டர் ‘சந்நிதியில் விம்மியழும்’ குரலைத் தவிர, வேறு குரல் கேட்க வேண்டுமே! 

நவாப் ஜமீனைக் கவனிக்க, ஜமீன் திவானைக் கவனிக்கிறான்… 

இளவரசன் சிவாஜியோ, கண்களில் நீர் அலமரக் கவனிக்கிறான்! அது காதல் நீர்! “ஏ அபிராமி! என் குறிஞ்சியைக் காப்பாற்று! உனது கழல்களில் என்னால் இயன்ற காணிக்கைகளைச் செலுத்துகிறேன்!” 

இது சிவாஜியின் ஆத்ம அர்ச்சனை ! 

குறிஞ்சி, இமைகளை மூடித் தியானிக்கிறாள். ஏ பத்திர காளி! பிரத்தியங்கிரா தேவி! இது என்ன அபிராமி சோதனை? அன்று நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இசை விளையாட்டு விளையாடினார்கள் என்றால், அவர்கள் ஞானதீபங்கள்! பின்னாளில் முத்துத்தாண்டவருக்கு நீயே நீலி வேஷம் போட்டு சந்நிதியில் சோறு கொடுத்தாய்; இசைப் பேறு கொடுத்தாய்! எனது சமகாலத்தில் ஆசான் தீட்சிதரும், சியாமா சாஸ்திரிகளும், தியாகய்யரும் இசைச் சித்து விளையாடுவது கைவரப் பெற்ற கானஞானம்! நான் எத்த ஞானம் கொண்டு இதனைச் சாதிப்பேன்? என்ன ராகம் பாடி இதனைப் போதிப்பேன்?’ 

‘அமிர்தவர்ஷணி பாடுவதா? அமிர்தவாகினி பாடுவதா? மேகராகம் பாடுவதா? மேகரஞ்சனி பாடுவதா?’ 

‘ஆ! நமது பழம்பண்… என் பெயரும் அதில்; நான் கண்டுபிடித்த ராகத்தின் பெயரும் அதில்… மேகராகக் குறிஞ்சி… மேகராகக் குறிஞ்சி…!’ 

‘சக்தி! ஓம்! சக்ஷம்!’… 

தியானத்தில் மந்திர வேரோட்டமும், ராகப் போராட்ட மும் திருப்தி காண… 

இமைகளைத் திறக்கிறாள் குறிஞ்சி… 

எடுப்பிலேயே ‘ஷட்சுருதி தைவதத்தில் – சுரமாக இல்லா மல் குரலாக இருந்ததால் சைசிகி நிஷாதம் போல… 

நிறுத்திக் குரலில் தேனாறு பாய விடுகிறாள்.

சந்நிதியிலிருந்து வெளியே வந்த அபிராமிபட்டர் சந்நிதியின் வாசலிலேயே அமர்ந்து கொள்கிறார். அடீ, அபிராமீ… 

தேன்குரல் காகலிநிஷாதத்தில் உயர்ந்து, சட்மத்தில் நிற்கிறபோதுதான் ஷட்சுருதி தைவதம் என்பதே புரிகிறது. ராக ஆலாபனை; ஆலாபனையா அது? இசையின் அமுதாபரணம்! சங்கீதத் தேன்மாரி! கானமழை! 

ஏ, மேகநாதா! இந்திரா சொரூபி! அன்று இதே இடமாம் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழர்கள் இந்திர விழா எடுத்தனர்! நான் இங்கே ராகவிழா எடுக்கிறேன்! மேகமாகத் திரண்டு வா! 

‘ஏ, வருணனே! புனல் வேந்தனே! மேற்றிசைப் பாலனே! உனக்குப் பிரியமான ராகத்தைப் பாடுகிறேன்! என்னை வாழ வைக்கிறாயோ இல்லையோ, இசையை வாழவிடு!” 

ஆலாபனையுடன் தியானத்தையும் ஆராதிக்கிறாள் குறிஞ்சி. 

*ஷட்கருதியே பிற்காலம் என்று வாதிப்பாரும் உண்டு. அக்கால யாழ் முறையில் இந்த இசைப்பேதம் கண்டிருக்கிறார்கள். 

வானில் பூர்ணிமையின் ஒளிச்சிலிர்ப்பு அபிராமிபட்டர் மீது பொறாமை கொண்டதல்லவா? சரபோஜி மன்னரிடம் அமாவாசை தினத்தையே அபிராமியின் குண்டல ஒளியால் பூர்ணியையாக்கிக் காட்டியவரல்லவா, அபிராமிபட்டர்? 

என்ன ராகம் இது? 

அந்தாதி பாடுவதில் மட்டுமல்லாது அருந்தமிழிசை யிலும் வல்லவரான அபிராமிபட்டரே கேள்விக்குறியில் மயங்கியபோது… 

எதிரே சில சங்கீத வெற்றிலைப் பேழைகள், திறந்தன திறந்தபடி இருந்ததில் திகைப்பதற்கு ஒன்றுமில்லை. 

ஓ… இருபத்து நான்காம் மேளகர்த்தவான வருணப் பிரியா போலத் தெரிகிறதே! ஆனாலும் கொஞ்சம் வித்தி யாசப் பிரயோகங்கள்; வித்தியாச விநயங்கள்! 

ஆவேசம் கண்ட சந்நதக்காரி போல கர்ஜனையுடன் கூடிய ஆலாபனையா? 

இசையில் கர்ஜனையா? இடி முழக்கமா? 

இஷ்ட தேவதை சிம்மரூபினி; அபிராமி சிம்மவாகினி; ஏனிருக்காது இந்தக் கர்ஜனை? 

ஆலாபனை முடிந்து பாடுகிறாள். 

என்ன பாடினாள்? கீர்த்தனையா? இல்லை சமயோசித மாக இயற்றுவாளே, அப்படியா? இல்லை… பின்? 

நீலி ராகத்தில் தொடங்கப் போய், சோதனை, நீலி வேஷமிட, அதே அபிராமிபட்டர் பாடிய பாடலில் ‘நீலி’ என்கிற சொல் வரும் பாடலையே பாடுகிறாள்… 

‘சுந்தரி! எந்தை, துணைவி, என்பாசத் தொடரை யெல்லாம்…’ 

அவள் ஆரம்பிக்க, அபிராமிபட்டர் கண்களில் முதலில் ஆனந்த வருணம் ஆரம்பிக்கிறது… 

“வந்தரி, சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல்…!” விருத்தமாகத்தான் பாடுகிறாள். அந்த ‘மகிடன் தலை மேல்’ என்கிற சொற்களை உச்சரிக்கிறபோது, ராஜ ஆணவங் களை அவளுடைய காளிக் கண்கள் கவனிக்கின்றன… 

‘அந்தரி! நீலி!’ 

ஆ! இங்கே ‘நீலி’ என்ற சொல்லைத்தான் எத்தனை கோணங்களில், எத்துணை சங்கதிகளில் எவ்வளவு உணர்வுப் பூர்வமாக… 

மெய்ச் சிலிர்க்காதார் யார்? மேனி நிமிராதார் யார்? 

சிலர் ஆச்சரியத்தால் ஆகாயத்தையும் கவனிக்கிறார்கள். பௌர்ணமி நிலவு இன்னமும் சிரிக்கிறது; அதனைக் கண்டு அபிராமிபட்டரும் சிரிக்கிறார்! 

‘அந்தரி நீலி அழியாத கன்னிகை…’ 

மேலும் உக்கிரம்! 

வானம் மெல்ல இருண்டு வருகிறது… 

“அந்தரி நீலி, அழியாத கன்னிகை ஆரணத்தோன், சுந்தரி கைத்தலத் தாள்மலர்த் தாள்என் கருத்தனவே!” 

ஏ. ஆபிராமி! உனது பாதாம்புயம் என் மனத்தில்… என் மனத்தில்… எங்கிருந்து மின்னியது இந்தச் சக்கர மின்னல்: மின்னலா அது? விஷ்ணுவின் சக்கரமாய்ச் சுழன்று ஈசனின் திரிசூலமாய் நின்று, இந்திரனின் வச்சிராயுதமாய் பூமியில் இறங்குகிறபோது, கேட்ட இடி முழக்கம்… 

ஆ! எங்கு விழுந்ததோ? எதனைச் சேதாரப்படுத்தி யதோ? அபிராமிபட்டர், “அபிராமி” என்று அலறுகிறார்… ‘சோ’வென்று மாமழை கொட்டத் தொடங்கியது… 

மக்கள் அலைமோதி எழ வேண்டுமே! அப்படியே… அப்படியே… சிலைகள் மாதிரி… மழையில் சொட்டச் சொட்ட நனைந்து… 

ஆர்க்காட்டு நவாப்பும், சிவகங்கை இளைய ஜமீனும் திவானும் எழுந்தோடி எதிர் வீட்டில் நுழைந்து கொள்கிறார்கள். 

இளவரசன் சிவாஜி? 

“குறிஞ்சி! குறிஞ்சி! நீ தேவ மகள்! நீ தேவ மகள்! என்று முனகியவாறு மழையில் நனைவதில் ஆனந்தப்படு கிறான்; அவனது கண்களிலும் காதல் மழை! 

விருத்தம் பாடி நிறுத்தியதோடு முடித்தாளா குறிஞ்சி? ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! – இந்த மகிமை சொன்னவன் சிலம்பின் செல்வன்’ என்ற பல்லவி யுடன் கீர்த்தனையை ஆரம்பிக்க… 

இப்போதுதான் மக்கள் தங்கள் உணர்வுக்கே வந்து அந்த கொட்டும் மழையிலும் கைகொட்டி ஆர்ப்பரிக்கின்றனர். 

கீர்த்தனையைப் பாடி முடித்துச் சுரங்களை விந்நியாசம் செய்கிறபோது.. 

பட்டரே பயந்து போனார்! மேலும் மழை கொட்டி விநாசம் வந்துவிடக் கூடாதல்லவா? 

சந்நிதி வாசலிலிருந்து எழுந்து, கொட்டும் மழையில் நனைந்தபடி அரங்கம் நோக்கி ஓடி வருகிறார்… 

“அபிராமி, போதும்! அபிராமி, போதும்!” 

அவர், ‘குறிஞ்சி போதும்’ என்று கூறுவதாக எண்ணி, இப்படிச் சொல்கிறார். 

குறிஞ்சி, பாடலை முடித்து, தனது சந்நதம் அடங்க பல கணங்கள் கண்மூடி மெய்ம்மறந்து உட்கார்ந்திருக்க, அவளது கரங்களைப்பற்றிக் கண்களில் ஒற்றிக்கொள்கிறார் அபிராமிபட்டர். 

ஜாதியாவது? இனமாவது? பேதமாவது? அபேதமாவது? தீண்டாமை என்பது இந்த தேசத்தில் புகுந்த தீய ஆமை என்பது போலிருந்தது அவரது மேன்மைமிகு செயல்! 

“எழுந்திரு மகளே!” 

குறிஞ்சியை அவர் கைத்தாங்கலாகப் பற்றி எழுப்புகிறார். 

கச்சேரி முடிந்துவிட்டது என்று கருதி மக்கள் எழுந்து கலைகிறபோது ஏற்பட்ட கரவொலிகளும் வாழ்த்தொலிகளும்… 

இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கும் மழையுடன் இடித்த இடியொலியையே அதிரச் செய்தன. 

குறிஞ்சி நேரே அபிராமவல்லியைத் தரிசிக்கச் சொட்டச் சொட்ட நனைந்தவாறு சந்நிதியுள் நுழைகிறாள். 

பட்டர் கர்ப்பூர ஆராதனை காட்ட, வெளியே மக்கள் “தாயே அபிராமி!” என்று எழுப்பிய கோஷம்… 

அன்றைய இளவேனில், பௌர்ணமியை வெட்கச் செய்தது; மறுநாள் ஒளிவானில் உதயசூரியனை உற்சாக மாக உதயம் காணச் செய்தது. 

பெய்த பெருமழையால், இராமநாதபுரம் வரை ஒரே வெள்ளக்காடுதான்! 

அன்றைய காலையுணவு அபிராமிபட்டர் இல்லத்தில். பட்டர் வீட்டுப் பெண்மணிகள், குறிஞ்சியை ஒரு தேவதையாகவே உபசரிக்கிறார்கள். 

உடையார்பாளைய ஜமீந்தாருக்குப் பெருமையோ, பெருமை. 

இளைய வல்லப உடையத்தேவன், விடியுமுன்னமே ஆர்க்காட்டு நவாப்புடன் சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு விட்டான். 

காலையுணவு முடிந்தது. குறிஞ்சியும், மயிலாடுதுறை வரை சென்று, அப்படியே ஒருத்தி நாடு நோக்கிப் பயணிக்க இருந்தாள். 

அபிராமிபட்டருக்கு எதையோ அலச வேண்டும். என்கிற ஆசை, 

‘குறிஞ்சி! நான் உன்னிடம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாமா?” 

பட்டர் கேள்வியைக் கண்டு பதறிப் போனாள் பனுவலழகி குறிஞ்சி. 

“சுவாமி! இது என்ன வார்த்தை? தங்களுக்குத் தெரியாததா?” 

“இந்த உலகில் எல்லாம் தெரிந்தவனுமில்லை. ஒன்றுமே தெரியாதவனுமில்லை. குறிஞ்சி! இரவு, மழைக்காகப் பாடிய ராகம் வருணப்பிரியாதானே?” 

“இல்லை சுவாமி! மேகராகக் குறிஞ்சி.” 

“மேகராகக் குறிஞ்சியா? இப்போது தேவாரப் பாசுரங் களை மேகராக குறிஞ்சி என்கிற பெயரால் நீலாம்பரியில் அல்லவா பாடுகிறார்கள்?” 

“இது தவறு சுவாமி! வழக்கில் மேகராகக் குறிஞ்சியை நீலாம்பரியாகப் பாடி வருகிறார்கள். தாலாட்டுக்கும் மேகங்களுக்கும் என்ன தாத்பரியம்? மேகங்கள் தூங்கி விட்டால் மழை பொழிவதாவது? இன்றைய வருணப் பிரியாவே அன்றைய மேகராகக் குறிஞ்சி!” 

“கொஞ்சம் மாறுப்பட்ட வித்தியாசம் தெரிந்ததே !” “ஷட்சுருதியைச் சொல்லுகிறீர்களா?” 

“அதில்லை: சப்த சுருதியைக்கூட அக்காலத்தில் யாழ் முறையில் கண்டு விட்டார்கள். வர்ஜவககிர மாதிரி… பாடியது.” 

“இது நாங்கள் கண்டுபிடித்த புதிய முறை. தாய்- தந்தையராகிய சம்பூரண மேளகர்த்தாவைப் பாடுகிற போது, வர்ஜமான நல்ல குழந்தைகளையும், வக்கிர மான போக்கிரிக் குழந்தைகளையும் ஞாபகப்படுத்துவது போலப் பாடுவது எங்களுக்குத் தவறாகப்படவில்லை. அவசாரியான பாஷாங்கக் குழந்தையைத்தான் விலக்கிட வேண்டும்! வர்ஜ, வக்கிரப் பிரயோகங்கள் ஆலாபனைக்கு மட்டும்தான்! சுவாமி! நான் உங்களை ஒன்று கேட்கலாமா?” 

*இது முரண்பாடுகளை எழுப்புகிற செய்தி. இது எனது சொந்த ஆராய்ச்சி என்கிற மட்டில் சொல்லி. வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளியை வணக்கமாக வைக்கிறேன். 

“ஒன்றென்ன? ஒன்பது கேள். தெரிந்தால் சொல்லுகிறேன்; தெரியாவிட்டால் சிரிக்கிறேன்!” 

“இரவு நானா மழையை வரவழைத்தேன்?” 

அவர் சிரிக்கிறார்… ஞானமாகச் சிரிக்கிறார்… அப்போது… 

வெளியிலிருந்து யாரோ, “குறிஞ்சி!” என்று கூப்பிடும் குரல். 

யார் என்று போய்ப் பார்த்ததில், தஞ்சை இளவரசன்- சரபோஜி பெற்ற ஒரே புதல்வன்-சிவாஜி காதல் பிச்சைக்காரனைப் போல் வாசலில் நின்றிருந்தான். 

இராகம்-17 

மலைய மாருதம் 

“தஞ்சை இளவரசரா? இந்த ஏழைப் பிராமணன் வீடு தேடி வருவதாவது? வாருங்கள் யுவராஜா! உள்ளே வாருங்கள்!” 

அபிராமிபட்டர் ஆனந்தப் பரவசத்துடன் அழைக்க, இளவரசன் சிவாஜி இருகரம் கூப்பி, “மன்னிக்க வேண்டும் சுவாமி! நேற்றிரவு, பௌர்ணமி கவனிக்காததை, காலை சூரியோதயம் கவனிப்பதை நான் விரும்பவில்லை.” 

“இரவுதான் மழை…” 

“புரிகிறது…உங்களால் பௌர்ணமியைக் காட்டவும் முடியும்; மறைக்கவும் முடியும்! தந்தையின் அனுமதியின்றி நான் எவர் வீட்டுக்கும் போவதில்லை. குறிஞ்சியிடம் சொல்லிக் கொண்டு புறப்படவே வாசலில் இசைப் பித்தனாய் நிற்கிறேன்.” 

“இதற்கு மட்டும்…” 

*தந்தையின் அனுமதியுடன் தான் வந்தேன்; ரசித்தேன்; ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று ஒரு நாயனார் பாடினாராமே அந்த மெய்ம்மை நிலையை யுணர்ந்தேன்; எங்கே குறிஞ்சி?” 

சற்றைக்கெல்லாம்… 

கொலுசு மந்தரஸ்தாயி சுரம் பேச, குழைகள் தாரஸ் தாயி சரம் பேச, குரல் மட்டுமே மத்திம ஸ்தாயி சுரம் போல, “வணக்கம் இளவரசே! சொன்னது போல வந்திருந்து, கௌரவித்து ரசித்தமைக்கு நன்றி” என்றாள் குறிஞ்சி. 

“ஆனால், நான் கேட்டதைப் பெற முடியவில்லை; குற்றாலக் குறிஞ்சி ராகத்தைச் சொல்கிறேன்!” 

சிவாஜியின் மௌமான அந்த முகத்தில் ஏதோ மறைவான அபூர்வ ராகம் கேட்பது குறிஞ்சிக்குப் புரிகிறது. மராட்டியர்களுக்கே உரிய அழகு என்பதைவிட, இருபது வயது மன்மதனாகவே அவனது வாலிபம் மலர்ந்து மணத்துக் கொண்டிருந்தது. குறிஞ்சியின் பிரகாசப் பேரழகையே அது சந்தித்துச் சலனமிக்கிறது என்றால்… 

குறிஞ்சி மட்டும் ஞானசுந்தரச் சுழிமுனையுடன் பேசு கிறாள்: “அந்த வாய்ப்பு வேறெங்காவது கிடைக்காமலா போகப் போகிறது?” 

“எங்கே கிடைக்கும்?” 

“எனக்கே அந்த முகவரி தெரியாது. தேட வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்போது அந்த ராகத்தை ரசிக்கலாம்!” 

அவன் முறுவலிக்கிறான். அதன் முகவரி அவளுக்குப் புரிக்கிறது. 

ஆனால் அது அவசியமில்லை. 

“ஒரு கொள்ளைக்காரனை மயக்கிய ராகம் அது; எனவே செவிமடுக்க நேசிக்கிறேன்.” 

“கொள்ளையன் நல்லவனானான்! நீங்கள் கொள்ளை யனாக அது மாற்றிவிட்டால்?” 

அவன் இப்போதுதான் கலகலவென்று மெல்லச் சிரிக் கிறான். அந்தச் சிரிப்பில் ‘நான் எப்போதோ உன்னைக் கொள்ளை கொண்ட கள்வனாகி விட்டேன்’ என்பது கேட்கிறது. 

“என்ன சிரிக்கிறீர்கள் இளவரசே” 

“ஒருவேளை மாறிவிடுவேனோ எனச் சிரிக்கிறேன். நான் விடைபெறுகிறேன்!” 

குறிஞ்சி கரம் கூப்புகிறாள். 

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனக்கென்று தொலைவில் நின்றிருந்த அரச பரிவாரங்களுடன் எட்டுப் புரவிகள் பூட்டிய சாரட்டில் புறப்பட்டுச் சென்றான் சிவாஜி. அவன்தான் சென்றானேயொழிய அவனது இதயத்தைக் குறிஞ்சியின் காலடியில் இறக்கி வைத்து விட்டுச் சென்றதை, அந்த அபூர்வ பாடகி அறிய நியாயமில்லை. 

இரு நாழிகைப் போதில் குறிஞ்சியும் அபிராமிபட்டர் குடும்பத்திடம் விடைபெற்றுப் புறப்பட்டாள். 

அபிராமிபட்டர் சொன்ன சொற்கள் வாழ்த்துரை யாகச் சொன்ன சொற்கள்: “புழுடம்பைப் பெறுவாய்! 

அதன் அர்த்தம் யாருக்குத் தெரியும்? விதியாகிய அந்த விநோத தேவனுக்கே வெளிச்சம்! 

குறிஞ்சி புறப்படுகிற போது அந்தத் திருக்கடவூரே திரண்டு வழிகூட்டியதே, புகழுடம்பின் பூரிப்பை பிரகடனப்படுத்துவது போலிருந்தது. 


உச்சிப்போது சூரியனுக்கு உலாப் பாடுகிறபோது. மயிலாடுதுறையை அடைந்தனர். அவள் மயிலாடுதுறை யாம் மாயவரத்துக்கு வந்ததே, மாபெரும் தமிழிசைச் செல் வரான கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பார்க்கவும், பார்த்துப் பரவசிக்கவும், பரவசித்துப் பாதாம்புயத்தைப் பணியவும்தான். அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. 

சிதம்பரத்தில் தியாகபிருமமம் வந்திருப்பதாகவும், அவரைச் சந்திக்க கோபாலகிருஷ்ண பாரதியார் சென் றிருப்பதாகவும் செய்தி தெரிந்தது. அது செய்தியாக குறிஞ்சிக்குத் தெரியவில்லை. செந்தேன் விலாசமாகத் தெரிய வரவே. இருவரையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியத்தை அடையலாமே என்று ஞானசுந்தரத்தைக் கேட்க, அவனும் மறுக்காமல் மகிழ்ந்து போனான். 

அவர்கள், ‘பூலோக கைலாசம் சிதம்பரமல்லாமல் புவனத்தில் வேறு உண்டோ’ என்று. கொஞ்சகா லத்துக்கு முன் வாழ்ந்த இசைத் தமிழரசர் முத்துத்தாண்ட வரால் புகழப்பட்ட சிதம்பரம் நோக்கிப் பயணித்தனர், 

அன்றிரவு, வைத்தீஸ்வரன் கோயில் ரசிகர் – காரைக்குடி அருணாசலம் செட்டியார் வீட்டில் தங்கி, இறைவனைச் சேவித்துப் புறப்படத் திட்டமிட்டனர். 

இருளும் ஓர் அழகு; அதனைச் சூரியன் மாலையிட்டு வரவேற்கிறான் என்பதால்தான் அந்தப் போதை ‘மாலை’ என்கிறார்கள் போலும் என்று அடிக்கடி குறிஞ்சி சொல்லுவாள். அந்த இனிய மாலைப் போதை ரசித்தவாறு ஞான சுந்தரம் கோச்சு வண்டியில் அமர்ந்தவண்ணம் பயணமாகிக் கொண்டிருந்தான். 

குறிஞ்சி, அபிராமிபட்டர் வீட்டில் ராகவிளக்கம் சொல்கிறபோது பாஷாங்கம் குறித்து அவள் சொன்னது இன்னமும் அவன் நெஞ்சை நெருடிக் கொண்டிருந்தது. அவனது கருத்துப்படி பாஷாங்கம் என்பது தாம்பத்தியம். ராகங்கள் சம்பூர்ணமாக இருக்கிற வரை பிரம்மசாரிகள். பாஷாங்கப்படுகிறபோதுதான் இனிமை பெற்ற தாம்பத் தியத்தை அனுபவிக்கின்றன. அது குறித்துக் கேட்கவும் செய்தான். 

குறிஞ்சி மாலைப் போதின் மலையமாருத ராகமாய்ச் சிரிக்கிறாள். “ஞானி! இந்தக் கருத்து குறித்து முன்பே நாம் பேசி இருக்கிறோம். அப்போது அப்படியும் இருக்கலாமோ என்று ஆலோசித்தே சிரித்தேன். பட்டர் வீட்டில்தான் ஞானோதயம் பட்டவர்த்தனமாக ஏற்பட்டது. சம்பூர்ண ராகங்கள் பிரம்மசாரிகள் என்றால் கந்தமத்திமம் ஆணாகவும், பிரதிமத்திமம் பெண் ணாகவும் வைத்தாலும் இரண்டும் புணர்ந்து பெற்ற ஜன்ய ராகங்களாகத் தெரியவில்லை. மாறுபடுகின்றன. இதனை என்னால் ஒப்புக் கொள்ளவும் முடியாது. 

சம்பூரணத்தின் ஆரோகணம் ஆண், அவரோகணம் பெண் என்கிற கருத்தையுடையவள் நான். அது பட்டர் வீட்டில் பரிபூரணம் கண்டேன். இந்த ஆரோகணம் அவரோ கணம் புணர்ந்து பெறுகிற பிள்ளைகள்தாம் ஜன்ய, வக்கிர ராகங்கள்! பாஷாங்கம் என்பது அவிசாரித்தனம்: உங்கள் பாஷையில் வேண்டுமானால் அபசாரத்தனம்! பைரவி போன்ற ஒரு சுர பாஷாங்க ராகம் ஒருத்தியோ, ஒருவனையோ வைப்பாகக் கொண்டு மகிழ்வது. பெஹாக் ராகம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட பாஷாங்கங்களைக் கொள்வது விபசாரத்தனம். இசையும் ஒரு குடும்பம் தானே?” 

“அப்போது நான் ஆரோகணம்; நீ அவரோகணம்.” 

“இதில் சந்தேகமென்ன? ஆனால் நமக்கு வர்ஜ ராகங்கள் பிறக்கட்டும்; வக்கிரமோ…” 

“குறிஞ்சி! மேற்கொண்டு முடிக்க வேண்டாம்!” 

ஞானசுந்தரம் இப்படிக் கூறி, குறிஞ்சியின் வாயைப் பொத்துகிறபோது கோச்சுவண்டி திடுமென்று நிற்கிறது. குதிரைகள் கனைக்கின்றன. 

எட்டிப் பார்த்தவர்கள் இமைகள் மருண்டு போயினர். 

வழியை மறித்துப் பத்து கொலைஞர்கள் கைகளில் நீண்ட கத்தியுடன் புரவிகளில் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எமகிங்கரர்கள் மாதிரி… 

இவர்கள் வேறு யாருமல்லர். தஞ்சை சங்கீத மகாவித்து வான்கள் கூடிச் சதியாலோசனை நடத்தி, தொழிற் காய்ச்சலால் குறிஞ்சியைத் தீர்த்துவிடுவது என்று தீர்மானித்து ஏற்பாடு செய்த கொலைஞர்கள் கைக்கூலிக் கயவர்கள். 

ஞானசுந்தரம்தான் செய்தியறிய இறங்கி வந்தான். 

“எதற்காக எங்களை வழிமறிக்க வேண்டும்? கொள்ளை யடிக்க வேண்டுமா? கொலை செய்ய வேண்டுமா? ராஜ
காந்தி என்கிற பெயர் நினைவில் இருக்கிறதா? சென்னை கவர்னர் பிரகடனம் என்ன என்பதை அறியா…” 

ஞானசுந்தரம் சொல்லி முடிக்கவில்லை. பத்து கொலைஞர்களில் தலையானவன் ஓங்கி எட்டி உதைக்க, ஞானசுந்தரம் கரணமடிப்பது போல உருண்டு புரள, “ஞானீ!” என்று கதறலுடன் இறங்கி ஓடோடி வந்தாள் குறிஞ்சி. கோபக் கனலில் எரிமலைகளையே எரித்து விடுபவள் போலக் கவனிக்கிறாள். 

“நீதான் குறிஞ்சியாடீ?” என்றான் ஒருவன்.

“ஆமாண்டா மடையனே!” 

ஓ! என்ன துணிவாக இவளும் பேசி விட்டாள்?

அக்கினித் துண்டங்களாய்க் கண்கள் எரிய, அவர்களை அவள் எதிர்நோக்கி வர, பத்து பெயர்களும், புரவிகளி லிருந்து இறங்கிக் கத்தியைச் சோதித்துப் பார்த்துக் கொள் கிறார்கள்… 

அந்தக் கத்தியிலும் கூர்மையான குறிஞ்சியின் கண் களைக் கண்ட கொலைஞர்களில் சிலர், ஏதோ ஒருவித சிலிர்ப்பால் மருளவும் செய்தனர். 

“மலையை எதிர்க்க மானா?” என்றான் கொலைஞர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவன்! 

குறிஞ்சி கோபாக்கினியுடன் கூறினாள்: “இல்லை; மலை களையே உருக்கிவிடும் மலையமாருத ராகம் நான்!” 

“மலைகளை உருக்கிவிடலாம்; இப்போது நாங்கள் உன்னை மட்டுமே உருட்டிச் செய்யப்போகிற கொலையைத் தடுத்து விட முடியாது” என்று கூறியவன், கொடுவாளை எடுத்து அவளது தலையைக் கொய்ய வீசுகிறபோது… 

“டுமீல்!” என்கிற துப்பாக்கிச் சத்தம்; தொடர்ந்து அது போன்றே எட்டுச் சத்தங்கள். ஏன் ஒன்று மட்டும் கேட்க வில்லை? ஒருவனை மட்டும் மீதப்படுத்த வேண்டும்? 

எங்கிருந்தோ ராஜகாந்தியின் சிம்ம கர்ஜனை… 

தொடர்ந்து புரவிகளின் குளம்படி ஓசை… 

நாற்பதுக்கு மேற்பட்டவர்களுடன் நடுநாயகமாகப் புரவியில் வந்த ராஜகாந்தி, அப்படியே தாவிக் குதித்தோடி வந்து குறிஞ்சியின் முன் நிற்கிறான். 

பிரமித்து போனாள் பிரம்மனின் பெண்ணழகுப் படைப்பின் தலையான படைப்பான குறிஞ்சி எனும் குங்குமப் பேரழகி. 

“ஏன் மகளே மிரமிக்கிறாய்? எப்படி வந்தான் இந்த ராஜகாந்தி என்றா? நேற்றிரவு நீ திருக்கடவூரில் பாடி மழையையே வரவழைத்த மகிமை காற்றில் கலந்து என் காதுகளில் ஓதியது. ஓடோடி வந்தேன் கடவூருக்கு! நீ புறப் பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டேன். எனது கண்ணீர் மழைத்துளிகளிரண்டை உனது கால்களில் சிந்த புயலாகப் பின் தொடர்ந்தேன். கண்ணீர்த் துளிகளைச் சிந்துவதற்குப் பதிலாக ரத்தத்துளிகளைச் சிந்த நேரிட்டிருக்கிறது.” 

ராஜகாந்தியின் கண்கள் கலங்கிவிட்டன. “என் மகளே! நீ வணங்கும் தெய்வம் என்னை விரட்டி இருக்கிறது… இல்லையென்றால்…” 

பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மீதமாக விட்டு வைத்தவனை நெற்றிக் கண்ணால் எரிப்பது போன்று தோக்குகிறான் ராஜகாந்தி. 

ஒன்பது பெயர்கள் குண்டு பாய்ந்து குலைந்து போய், ஓரியாய் தான் மட்டும் ஏன் விடப்பட்டிருக்கிறோம் என்பது புரியாமல் நடுங்கிப் போனவன், “தலைவா! என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்! நான் பிள்ளைக் குட்டிக் காரன்!” என்று கதறியவாறு கால்களில் விழுந்தான். 

“தெரிந்துதான் விட்டு வைத்தேன்; எழுந்திரு.” 

அவன் உடல் வியர்த்து நடுங்க, எழுந்து குனிந்து கும்பிட்டவண்ணம் நிற்கிறான். 

“ஏனிந்த தெய்வீக மலரைக் கசக்கி எறிய வந்தீர்கள்? உண்மையைச் சொல்!” 

அவன் நடந்த விவகாரங்களைச் சொன்னான். தஞ்சை அரண்மனையின் ஆஸ்தான விததுவான்கள் சிலருடைய பெயரைச் சொல்லி, அவர்கள் குறிஞ்சியைக் கொலை செய்து விட்டால் ஆளுக்கு இருபது புலிவராகன் பணம் தருவதாகக் கூறிப் பத்துப் புலிவராகனை முன் பணமாகத் தந்ததையும் எடுத்துரைத்தான். 

“து! கேவலம் இருபது புலிவராகன் பணத்துக்கு ஒரு கலைப் பொக்கிஷத்தையே கொல்லத் துணிந்தீர்களே! உங்களுக்கு இதயமே இல்லை?” 

“இல்லை தலைவா! இருந்தால் நாங்கள் ஏன் பணத் துக்கு ஆசைபட்டு இந்தப் பாதகத்தைச் செய்யப் போகிறோம்!” 

“சபாஷ்! நீ கொலைகாரனாக இருந்தாலும் உண்மை யைச் சொன்னாய்! நீ என்னுடன் இரு! நடக்க வேண்டி பதைப் பின்னர் விளக்குகிறேன்!” என்று கூறிய ராஜ காந்தி, குறிஞ்சியை நோக்கி வந்தான். 

“மகளே! பயணம் எதுவரை?” 

“சிதம்பரம்; இரவு வைத்தீஸ்வரன் கோயிலில் தங்குகிறேன்!” 

“சிதம்பரத்தில் கச்சேரியா?” 

“இல்லை, ராஜகாந்தி! கோபாலகிருஷ்ண பாரதியாரை யும் தியாகய்யர் பெருமானையும் ஒருசேரக் கண்டு தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை!” 

“அப்படியா? பயணம் நேரே சிதம்பரத்துக்கே செல்ல லாம். நாங்கள் துணையாக வந்து சிதம்பரத்தில் விட்டுச் சொல்கிறோம். 

“ஏனிந்த சிரமம்?” 

*என் கடமை! உனக்குத் தொண்டு செய்வதன் மூலம் நான் செய்கிற பாவங்கள் தொலையும்.” 

“தவறு ராஜகாந்தி! நாம் செய்கிற பாவத்தை வேறு ஒரு புண்ணியத்தால் சரிகட்ட முடியாது! ஒரு பெண்ணைக் கற்பழித்து அவளது சாபம் பெற்று, பிறகு ஒரு கோயிலையே கட்டிக் கும்பாபிஷேகம் செய்தாலும் சாபம் சாபம்தான்! அனுபவிப்பதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்! செய்த புண்ணியத்துக்காக ஓர் ஆயிரம் காணி புஞ்சை நிலத்துக்குச் சொந்தக்காரனாக மாறலாம். செய்த பாவத்துக்கு அந்த நிலத்தில் விளையும் சோற்றை உண்ண இயலாமல் வயிற்றுவலியால் துடித்துக் கொண்டி ருப்பான். இந்தச் சரிகட்டு ஜாலங்கள் பாவ புண்ணியத்தி டம் செல்லுபடியாகாதவை!” 

ஏதோ ஞானக்கண் திறக்கப்பட்டவனைப் போல அயர்ந்து போனான் ராஜகாந்தி. 

“மகளே! அற்புதமான கருத்து! விரைவில் நான் என் கொள்ளைத் தொழிலை விடுவேன்! ஓர் இலட்சியத்துக் காக இதனைச் செய்து வருகிறேன்! சில மாதங்களில் அது நிறைவேறிவிடும்! அநேகமாக தை மாதத்துக்குள் ஐந்து பெயர்களைத் தீர்த்து கட்டி விடுவேன்!” 

“இது மகாபாவம்,” 

“இதைவிட மகாபாவம் அவர்கள் செய்து வருவது! உயிருடனிருப்பது! அந்நியர்களுக்கு நமது நாட்டையும் மொழியையும் அடகு வைக்கத் துணிந்திருக்கும் ரகசிய ராட்சஸப் பண முதலைகள் அவர்கள்! அவை நீரில் இருக்கின்றன. எனவே பலம் பொருத்தி இருக்கின்றன! நிலத்துக்கு வருமா என்று இந்த யானை எதிர்பார்க்கிறது! தை மாதத்துக்குள் முடித்து விடுவேன்.” 

தைமாதம், தைமாதம் என்று ராஜகாந்தி சொல்லி வருகிறபோதெல்லாம், ஞானசுந்தரத்தை ஓரக்கண்களால் நோக்குகிறாள் குறிஞ்சி. 

“புறப்பட வேண்டியதுதானே ராஜகாந்தி?” 

“கொஞ்சம் பொறு மகளே! ஒன்பது பெயர்களைச் சுட்டுத் தள்ளியவன் இவனை மட்டும் ஏன் மீதமாக விட்டிருக்கிறேன்? பிள்ளைக்குட்டிக்காரன் என்பதாலா? சத்தியமாக இல்லை. இறந்தவர்கள் மட்டுமென்ன மனைவி மக்களற்றவர்களா? இவன் மூலம் தஞ்சை சமஸ்தானத்து மகாவித்துவான்களுக்கு மட்டுமல்ல; சரபோஜிக்குமே ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன்! இது விஷயத்தில் மட்டும் குறுக்கிடாதே!” என்று கூறிய ராஜகாந்தி, கூனிக் குறுகிப் பயந்து நடுங்கி நின்றவனை நோக்கி ஓர் அரிமாவைப் போல் நடந்தான். 

மாலை மலைய மாருதம் பாடியது. 

ஆனால் ராஜகாந்தி? 

குலைய மாருத ராகத்துக்கான கோபச் சுரங்களை உதிர்க்கத் தொடங்கினான். 

இராகம்-18

ஆரபி 

“அடேய்! கொலைகாரப் பயலே! நீயும் உன் குடும்பமும் உயிரோடு பிழைக்க வேண்டுமானால் நான் சொல்வது போலச் செய்கிறாய்!” 

“சத்தியமாகச் செய்கிறேன் தலைவா!” 

“எடுத்த எடுப்பில் எவன் சத்தியம் வைக்கிறானோ அவன் சத்தியத்தைக் காப்பாற்றாதவன். உனது சத்தி யத் தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீ கவலைப் பட வேண்டியது இந்த ராஜகாந்தியைப் பற்றி ! இந்த ஒன்பது பிணங்களை ஒரு பெட்டியில் போட்டு எனது ஆட்கள் உன் வீட்டில் சேர்ப்பர். இந்தப் பெட்டி உன் வீட்டுக்கு வந்ததும் அழுகல் நாற்றம் என்றும் பாராது அரண்மனையில சேர்க்க வேண்டும். நடந்ததை நடந்த வாறு மன்னன் சரபோஜியிடம் சொல்ல வேண்டும். இதற்குக் காரணமான சங்கீத வித்துவான்களை அழைத்து விசாரித்து ஒரு நாளேனும் சிறைத் தண்டனை அனுபவித் துப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சரபோஜி செய்யத் தவறினால், இந்த ராஜகாந்தியின் தண்டனை அவனுக்கு ராட்சஸ தண்டனையாக இருக்கும் என்று சொல்! நான் சொன்னதை சொன்னபடி நீ சொல்லவில்லையென்றால் நீயும் உனது மனைவி மக்களும் பிணமாகி விடுவீர்கள்! 

“ஐயய்யோ! தலைவா! சத்தியமாகச் சொன்னது சொன்னபடிச் செய்வேன்!” 

“மீண்டும் சத்தியம்? 

“கூடப் பிறந்துவிட்டது. நிச்சயமாகச் செய்வேன்! உங்கள் மேல் சத்தியம்!” 

ராஜகாந்தி கடகடவென்று நகைக்கிறான். 

தனது ஆட்களில் இருவரை, அந்தப் பிணங்களை ஒரு பெரிய மரப்பெட்டியில் போட்டுக் கொண்டு வரும்படி ஆணை பிறப்பிக்கிறான். 

அதுவரை மௌனச் சிலையாய் ராஜகாந்தியின் ராட்சஸம என்னவென்பதைக் கவனித்து வந்த இசை ஞான அழகி குறிஞ்சி, “ராஜகாந்தி! நான் தலையிட வில்லை; ராஜகாந்தியின் ராட்சஸம் என்ன என்பதை நானறியாதவளா? ஒரே ஒரு திருத்தம்… சொல்லச் சொன்னால் சொல்லுகிறேன்…” 

“சொல் மகளே! நல்லதாக இருப்பின் ஏற்பேன்; எனக்குச் சரிபட்டு வரவில்லையானால் மறுப்பேன்.” 

“உன் விருப்பம். சொல்வது என் கடமை. எல்லாம் சரிதான். சங்கீத மகாவித்துவான்கள் ஏதோ பொறாமைக் காய்ச்சலில் இப்படிச் சதி செய்து விட்டார்கள். அவர் கள் பெயர்களை அம்பலப்படுத்த வேண்டுமா? அவர்கள் ஒரு நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?” 

“உன் உயிரே போயிருக்குமானால்?” 

“என் காளிதான் உன் ரூபத்தில் இருக்கிறாளே ! உன்னை யன்றி என் உயிர் பிரியுமா?” 

“மகளே! மகளே! என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாய்!” 

ராஜகாந்தி பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். 

“ராஜகாந்தி! நான் கவலைப்படுவது சங்கீதம் அசிங்கப் பட்டுப் போக வேண்டாமே என்றுதான்! வேண்டு மானால் இந்த மகாவித்துவான்களுக்கு எச்சரித்து வைக்கச் சொல்! இனியொருமுறை இப்படிச் சதியில் இறங்கினால், ராஜகாந்தியின் துப்பாக்கி ஒவ்வொருவர் வீட்டிலும் தம்பூர் மீட்டும் என்று சொல்லச் சொல்! சிறை, பதவி நீக்கம் போன்ற வயிற்றில் அடிக்கும் வியாபாரங்கள் நமக்குத் தேவையில்லையே!” 

குறிஞ்சியைத்தான் ராஜகாந்தி குலதெய்வமாகக் கொண்டு விட்டானே! மறுப்பானா? அதன்படியே, அந்தக் கொலைக்காரச் ‘சத்திய’ புருஷனுக்குக் கடுமை யாக உத்தரவிட்டான். 

ராஜகாந்தியின் தலைமையில் பயணம் சிதம்பரம் நோக்கி இரவைப் பயமுறுத்தியது. 


தஞ்சை அரண்மனைச் சங்கீத மகாலில் நாட்டிய விருந்து நடந்து கொண்டிருந்தது. அன்றைய ஆஸ்தான அதிரூப அமராவதியான சுந்தரி என்பவள் அபிநயம் நடை பெற, சுவைப்போர் நரம்புகளில் சுகம் ருசி தட்டியது. 

எந்த ஒரு பண்டிகைக்கும் அல்லது மன்னர் சரபோஜிக்கு மனம் உபதேசிக்கிற போதும் சுந்தரி நாட்டியமே சுந்தரச் சுகந்த சுதந்திரம். 

சிவானந்தம் பிள்ளை நட்டுவாங்கம் சொல்ல, காமாட்சி என்பவள் மிருதங்கம் வாசிக்க, மற்றபடி சாரங்கி உட்பட எல்லா வாத்தியங்களும் சுந்தரியுடன் அபிநயிக்கின்றன. 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஓர் ஆண், பெண் வேஷமிட்டுப் பாடியதுதான். பெண்களும் பாடுவதற் கென்று ஒரு தனிப்பிரிவினராக இருப்பினும் அன்று இப்படி ஒரு புதுமை நிகழ்த்திப் பார்க்கிறார் சரபோஜி. 

*இவள் சரபோஜியைக் கவர்ந்த தேவதாசி, இவளுக்குச் சம்பளமும், சன்மானமும் சில சலுகைகளும் அதிகமாக வழங்கப்பட்டன. இப்பகுதியில் கூறப்படும் செய்திகள் யாவும் உண்மை. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ‘தஞ்சை பராட்டிய மன்னர் கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் என்ற நூலைக் காண்க. 

சங்கீத வித்தியாதிகப் பிரிவில் உமார்கான், மீராகான், உசேன்கான் என்பவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்துஸ் தானச் சங்கீதத்தில் வல்லவர்களான இவர்கள், தட்சிண சங்கீதத்தை முறையே தாசிகளிடம் பயின்றவர்கள். இவர் களில் உசேன்கான் என்பவன் மட்டும் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு வந்து உட்கார்ந்து பாடுவான். அன்றைக்கு அவன் ஆரபி ராகத்தில் இந்துஸ் தான் ரேகை படரப் பாடுகிறான். இப்படிப் பாடுவதில் ஒரு நிபந்தனை. தெய்வங்களை மட்டுமே நாட்டியங்களில் பாட வேண்டும்; மகாராஜாவின் மீதும் பாடலாம்; பிற ‘நரஸ்துதி’ கூடாது. 

நாட்டியமாடும் பெண்கள் இந்த இந்த நகைகள்தாம் மன்னர் முன் அணிந்து வரவேண்டும். சுந்தரிக்கு இது விஷயத்திலும் சுதந்திரம். இவள்தான் மன்னருக்கே ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால், மன்னர் இவளுக்கு எடுக்கும் ஆரத்திகளைப் பற்றி நீட்டி முழக்க வேண்டிய தில்லையே! 

எதிரே அமர்ந்திருந்த ஏனைய தேவதாசிகளில் குறிப் பாசு காவேரிக்கும், உண்ணாமுலைக்கும் கடுப்போ கடுப்பு… அந்தச் சபையில் சில மானமுள்ள தமிழர்களும் பல மானங்கெட்ட தமிழர்களும் பதவிகளில் இருந்தனர். 

ஓர் அந்தியனான சரபோஜியின் ஆட்சியில் நாம் பதவி வகிக்கின்றோமே என்கிற ஆவேசம் மானமுள்ள தமிழர் களுக்கு! ஒரு ராஜகாந்தி பற்றாது; வீட்டுக்கு வீடு ராஜ காந்தி உதயமாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அவர்கள். ஏனையவர்கள் பதவிப் பிரியர்கள். படுக்கையி லிருந்து உடுக்கை வரை அது சகாயச் சமக்காளமாயிற்றே! இந்த மானமிழந்து மதிகெட்டுப் போன திசை தெரியாத போக்கு, நாயக்கர் காலத்திலேயே நாற்று நட்டுவிட்ட செய்தி. ‘அந்நியனுக்கு இடம் கொடேல்’ என்கிற மூதுரை ஏட்டளவில் அழுகல் நாற்றம் கண்டுவிட்டடது. 

சுந்தரி பம்பரமாகச் சுழன்று ஆடுகிறாள். அவள்தான் மன்னரின் பம்பரமாயிற்றே! 

ஆரபிமானம் கொண்டார்? – மன்னர் 
ஆஸ்தான சபையில் தெய்வீக நடமாட… 

என்கிற பல்லவியில் அமைந்த ஆரபி ராகத் கிருதிக்கு சுந்தரி அபிநயிக்கிறபோது, அவளது இடவலமாக அசைந்த கருவிழிகள், எதிரே இருந்த காவேரி, உண்ணாமுலைக்கு எரிச்சலைத் தூண்டியது. 

ஆரபி ராகத்துக்கே உயிர்மூச்சு போல ஒலிக்கும் காகலி நிஷாதமாயிற்றே சுந்தரியின் போக புஷ்பங்களின் அசைவுகள்…! 

இந்தப் புஷ்பங்களுக்குத்தானே ஐந்து சக்கரம் அதிக சம்பளம்? மற்றபடி மகாவித்துவான்களுக்கே ஐம்பது சக்க ரங்களும் அதற்குக் கீழும்தானே? சுந்தரிக்குச் சம்பளத்தில் ஐந்து சக்கரம் உயர்வு! கிம்பளத்தில் பத்து சக்கரங்கள் உருளுமே! 

ஒரு மோசமான இந்தக் காலத்தில், சங்கீதம் முத்திரை பதித்ததுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருஞ்சிறப்பு! 

சரபோஜிக்கு முன்பு, திருவிடைமருதூரிலிருந்தவாறு ஆண்ட அவரது சிற்றப்பன் அமர்சிங்குடன், வீரம் என்கிற சொல்லை தஞ்சை பூமியைப் பொறுத்தமட்டில் கும்பினிக் காரன் தத்துக்கு எடுத்துக் கொண்டு விட்டான். வைப் பாட்டிக்குப் பிறந்த தம்பி, எங்கே தஞ்சை அரியணையில் அமர்ந்து விடுவானோ என்று அஞ்சித்தானே இரண்டாம் துளஜா மன்னர், அவரது மகள் இறந்துபடவே, எங்கோ இருக்கும் மராட்டிய மாநிலத்து சத்தாராப் பிரதேசத்தி லிருந்து மரபுவழிச் சிறுவாக ஒருவனை தத்துக்கு எடுத்து வந்து, ஸ்வார்ட்ஜ் எனும் பாதிரியாரால் அறிவு புகட் டப்பட்டு, சரபோஜி ராஜா சாகேப் என்ற பெயருடன் அரியணையில் அமர்த்தியது? 

தஞ்சையின் அதிகாரம் தவிர, ஏனைய சுற்றுவட்ட மனைத்தையுமே வெள்ளைக் கும்பினியனுக்கு விற்று விட்டார் சரபோஜி. அதிகாரம்தான் கையிலிருக்குதே யொழிய அந்தக்கை வாங்குவது என்னவோ சம்பளம்; ஒரு லட்ச வராகன்! அத்துடன் நாட்டின் நிகர வசூலில் ஐந்தில் ஒரு பங்கு சரபோஜிக்குத் தந்து விட வேண்டும். என்ன நிகரவசூலோ? கணக்காவது? கத்திரிக்காயாவது? காட்டியதுதான் கணக்கு என்கிற அரச நீதி அன்று தொடங்கிய தொடர்கதைதானே? 

‘தமிழ்ச் சமுதாயம் மராட்டியர் காலத்தில் தரங்கெட்டது போல வேறு எவர் காலத்திலும் ஏற்பட்டதில்லை’ சுந்தரியின் காற்சலங்கையிலிருந்து இப்படி ஒரு கருத்துக் கேட்கிறது. 

‘ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பான்மையினர் கலைஞராவர். ஏ, சரபோஜி! உன்னையும் ரேவதி நட்சத்திரத்தில் “சுவீகாரம் எடுத்ததால் கலைஞனாகத் திகழ நேரிட்டது!” என்கிறது மறுகால் சதங்கை. 

ஆனால் சுந்தரியின் முகபாவங்களிலோ, ‘ஒரு பணத் துக்கு மூன்று படி அரிசி கிடைத்தும், மக்கள் சோற்றுக்கு ஆலாய்ப் பறந்து தங்கள் அழகிய பெண்களை விற்றுத் தாசிகளாக்குகிறார்கள்! *கற்பு’ என்பது சொல்லளவில் தான். இதன் பாதிப்பால் வலங்கை என்றும் இடங்கை என்றும் உற்பத்தியான ஜாதிகளின் கொடுமை, ‘ஐயகோ!” என்று இரு காற்சலங்கைகளும் அலறுவன போலப் பிரதி பலிக்கின்றன. 

தனி முற்றத்தில் அமர்ந்து கொண்டு ராணியர் இருவரும் பெண்களும் மருமகளும் நாட்டியத்தை ரசிக்கிறார்கள். 

ராணியர் என்னமோ இருவர்தாம். ஆனால் கோணிய ரான காமக்கிழத்திகள்… அம்மம்மா… இவர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்குப் பெயர் கல்யாண குணங்களுக்குரியப் பெயரோ? 

இவர்கள் யாவரும் கத்திக் கல்யாணிகள். ஓர் அழகிய கன்னிப் பெண்ணைக் கண்டு அரசன் உடைவாளை உருவி நடுத்தெருவில் நட்டுவிட்டால், அவள் மாலையிட்டே தீர வேண்டும். இதற்குப பெயர் கத்திக் கல்யாணம்! இக் கொடுமை மராட்டியர் காலத்தில் இருந்தது. 

*23-1-1787. 
ஒரு சக்கரத்தில் (ஏறத்தாழ ஒரு ரூபாய் மதிப்பில்) பத்தில் ஒரு பாகம் 25 சக்கரம்; ஒரு புலிவராகன். இடத்துக்கு இடம் கொஞ்சம் மாறுபாடு உண்டு. 
Vico Viciously that chastity was virtue more admired than practised by the Indians. History of Tamil Nadu – by N. Subrama- nian, Page-283. 

மன்னரின் பக்கத்தில் உட்கார்ந்து நாட்டியத்தை ரசித்த – ரசிக்கிறானா? குறிஞ்சி ஆடுவதாகவல்லவோ கற்பனை செய்யும் இளவரசன் “சிவாஜிக்கு இந்தக் கத்திக் கல்யாணமோ, காமக்கிழத்திகள் வியாபாரமோ துப்புர வாகப் பிடிக்கவில்லை. நமது காலத்தில் குறிஞ்சிப்பூவாக இந்த நாடு மணக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்க்கிறான்… 

குறிஞ்சியின் வளர்ப்புத் தந்தையான விருபாட்சக் கவி ராயர் மட்டும் குறிஞ்சியிடம் அடிக்கடிச் சொல்லுவார்: “இந்த நாடு மராட்டிய மன்னர்களால் சுடுகாடானாலும். மன்னன் சரபோஜியால் கலைக்காடாகியது. பொதுவில் தமிழ் வளரவில்லையானாலும், சங்கீதம் பிறமொழி களில் ஐயப்பதாகை நிறுவுகிறது. சரபோஜி ஒரு கலைத் தேனீ! பல்வேறு கலைகளுக்குரிய ஓலைச் சுவடிகளையும் மேலைநாட்டு நூல்களையும் ‘சரஸ்வதி மகால் என்கிற நூலகத்தில் கூடு கட்டிய கலைத்தேனீ!” 

கவிராயர் சொன்னது களங்கமற்ற உண்மை என்பது குறிஞ்சிக்கும் நாளடைவில் புரிய வந்தது. அதற்காக சரபோஜி ஆஸ்தானத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் சரணடைந்தது போலச் சரணடைந்துவிட முடியாது. தமிழிசைக்கு அங்கு இடமில்லை என்பதால்தானே அவள் தமிழிசை வெறி கொண்டு ஆஸ்தானம் வேண்டாம்; இந்த அகிலத் தமிழகமே எனது ஆஸ்தானம் என்று ஆர்ப் பரித்து வருகிறாள்? 

சுந்தரியின் நாட்டியம் உச்ச கதியில் சூடுபிடித்து வேகம் கொள்கிற போதுதான் ராஜகாந்தியிடமிருந்து ஆள் வந்திருப்பதாக அந்த அவசரச் செய்தி உள்ளே நுழைகிறது. உத்தரவைக்கூட எதிர்பாராமல் அந்தப் பிணப்பெட்டியும் பின்தொடருகிறது. 

உச்ச கதி நாட்டியம் மிச்ச மீதியைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்பது போலத் தடைப்பட்டு நிற்கிறது. 

*இவன் பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட பாராட்டிய மன்னர்களை யெல்லாம் தாழ்விலை என்று சொல்லுகிற அளவுக்குப் பெண் வெறியனாகத் திரிந்து, பெண்களை அலறடித்து. ஒரே நாளில் பல பெண்களைக் கொள்ளையடித்தான். 
+இன்றும் தஞ்சையில் பெருமையோடு திகழ்கிறது. 

பெட்டியை திறக்கிறார்கள். 

ஒன்பது அழுகியப் பிணங்கள்; துர்நாற்றமுடன் பயங்கரமாகக் காணப்படுகின்றன. 

“யார் நீ? என்ன இது? சரபோஜி அரியணையை விட்டெழுந்து வந்து கவனித்து அக்கினியில் நின்று அலறுகிறார். 

பெட்டியை எடுத்து வந்தவன் நடந்த செய்திகளையும், ராஜகாந்தி சொல்லியனுப்பிய நெருப்புச் சொற்களையும் பிட்டுப் பிட்டு வைக்கிறான். 

அக்கினியில் நின்ற சரபோஜி, இப்போது மேலும் அக்கினியானார். 

என்ன! அந்த அற்புத குறிஞ்சி மலரைப் பிய்த்து எறிய இப்படி ஒரு சதியா? 

“உங்களுக்குப் பத்துப் புலிவராகன் முன் பணமாகத் தந்த அந்த மகாவித்வக் கழுதைகள் யார்? யார்?” 

கொலைஞன் மௌனம் சாதிக்கிறான். 

“யார்? மரியாதையாகச் சொல்!”- இப்போது சினச் சூறாவளியாக இளவரசன் சிவாஜி எழுந்து சிங்கம் போலக் கர்ஜித்ததும், அங்கிருந்த பல சங்கீத வித்துவான் களில் சதித்திட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டவர் கள் கதி கலங்கிப் போயினர். எங்கே, எப்படித் தெரியப் போகிறது என்று தாளத்தைத் தவறாகப் போட்டு விட்டதை எண்ணித் தடுமாறிப் போயினர். அவர்கள் சங்கீதத்தை மட்டுமே படித்தவர்கள். சாணக்கியத்தையோ, சுக்கிர நீதியையோ படித்தவர்களல்லவே? திருக்குறளைப் படிக்க நியாயமில்லை. காரணம் அவர்களைப் பொறுத்த மட்டில் தமிழ் தீண்டாத மொழி! 

தலை போயிற்றோ’ தங்கள் நிலை போயிற்றோ? என்று அவர்கள் தடுமாறினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. காம்போதி ராகத்தில் மறைந்து ஒலிக்கும் காகலி நிஷாதம் போலத் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர். 

“யார் அந்த மடையர்கள்? நீயாகச் சொல்லப் போகிறாயா? இல்லை நானாகச் சொல்ல வைக்கட்டுமா?” 

சிவாஜி சீறுகிறான். 

அவனது சீற்றம் சரபோஜிக்கு ஆச்சரியத்தைத் தா வில்லை. அவரிடம்தான் திருக்கடவூரில் நடந்த மழை நிகழ்ச்சியைக் கூறிக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டவ னாயிற்றே சிவாஜி! தந்தையிடம் மட்டுமா? தாய் அகல்யா பாயிடமும் கூறித் தலைமேல் தூக்கி வைத்துப் புகழ்ந்திருந் தானே! அப்பேர்ப்பட்ட குறிஞ்சியை, தனது மானசீகக் காதலியைக் கொல்லச் சதித்திட்டமா? 

அந்தக் கொலைஞன் இன்னமும் ‘தெரியாது’ என்றே கூறுகிறான். அவனுக்கு ராஜகாந்தி என்கிற ராட்சஸ பயம். 

மகன் ஒன்று கிடக்க ஒன்றைச் செய்து விடுவானோ என்று பயந்து, முற்றத்திலிருந்து ஓடி வருகிறாள் அன்னை அகல்யாபாய் சாகேப்! 

“சிவாஜி! அமைதி! இவனைப் பொறுமையாக விசாரித்துக் கொள்ளலாம். யாரோ சில சங்கீத வித்து வான்கள் பொறாமையால் இப்படிச் சூழ்ச்சி செய்தது என் மனமும் நோகத்தான் செய்கிறது. அந்த தேவதையைக் கொலை செய்வதா? தண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனாலும் இப்போதைக்கு வேண்டாம். பொறு மகனே!” 

“அம்மா! தயவு செய்து இது விஷயத்தில் தலையிடா தீர்கள். நான் குறிஞ்சியை இதயமாக நேசிக்கிறேன் என்று இந்த நேரத்தில் இந்தச் சபையறியக் கூறுகிறேன். அப்பேர்ப் பட்ட எனது நேசத்துக்குரியவளைக் கொலை செய்யத் தூண்டிய கொடியவர்கள் யார் யார் என்பது இப்போதே புரிந்தாக வேண்டும்!” என்று உறுமிய சிவாஜி, நேரே அரண்மனையுள் செல்கிறான். 

சபை நடுங்குகிறது… 

பெட்டியைக் கொண்டு வந்த கொலைஞன் குலை நடுங்கிப் போனாலும், ‘குறிஞ்சியை நேசிக்கிறேன்’ என்று சிவாஜி கூறியதிலிருந்து ஒரு சிந்தனை அவனுக்கு உதயம் கண்டது. 

கரத்தில் சவுக்குடன் சபையில் பிரவேசிக்கிறான் சிவாஜி. 

வந்ததும் வராததுமாக ‘சுளீர்’ என்று ஒரு சொடுக்கு. துடித்துப் போனான் பெட்டியைக் கொண்டு வந்த கொலைஞன். 

“யார் அவர்கள்?” 

“இளவரசே! கொஞ்சம் பொறுங்கள்! சொல்லி விடுகிறேன். சங்கீதத்துக்கு அவமானம் வரக்கூடாது என்று குறிஞ்சியம்மாள், சதி செய்தவர்கள் பெயர் மன்னர் காதுகளுக்குத் தெரியக்கூடாது என்று ராஜகாந்தியிடம் சத்தியம் கோரினார்கள். ராஜகாந்தியும் எனக்குச் சத்திய ஆணையிட்டு அனுப்பி இருக்கிறார். குறிஞ்சியம்மாளின் சத்தியத்தை நான் மீறத்தான் வேண்டும் என்றால், அந்தம்மாளை நீங்கள் நேசிப்பத்தில் அர்த்தமில்லை.” 

கொலைஞன் கூறிய நியாயத்தைக் கேட்டு கோபாக் கினியிலிருந்த சிவாஜி சிலையாகிப் போனான்.

– தொடரும்…

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *