குற்றாலக் குறிஞ்சி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 1,319 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.

இராகம் 10-12 | இராகம் 13-15 | இராகம் 16-18

இராகம்-13

நாட்டைக் குறிஞ்சி

போகலீலா ராகத்தில் மூழ்கிய போது… 

புரண்டு வருகிற கற்பனைகளில் குருமகான் முத்துசாமி தீட்சிதரின் குருகுலவாசம் அகிற்புகையாக மணக்கிறது. 

அந்தத் திருவாரூர் மண்ணில் மிதியாத இடமேது? மதியாத மனிதர் ஏது? 

தமிழ்மொழி ஒன்றுதான் தீண்டாமையாக இருந்ததே யொழிய, இசை, நாட்டியக் கலைகளைப் பொறுத்தமட்டில் பிறமொழியில் தரமிக்கனவாய்த் தழைத்தோங்கின. 

குறிஞ்சி, தீட்சிதர் வீட்டுக்கு வேலைக்காரியாக வருகிற போது, இப்படிப் போகலீலா ராகம் பாடுவோம் என்று ஞானசுந்தரம் எதிர்பார்த்தானா? 

தீட்சிதர் பெருமான் தமது சீடப்பிள்ளைகளுக்கு இசை யைப் போதிக்கிறபோது, தொலைவில் வாசற்படி ஓரமாக நின்று பயில்வாள் குறிஞ்சி. 

பல சமயங்களில் குறிஞ்சி, பாத்திரங்களுக்குப் பத்துத் தேய்க்கிறபோது, தன்னுள் சுருதி சுத்தமாக ராகத்தை முனகுவாள்…. 

ஒருநாள்…

ஞானசுந்தரத்திடம் விருபாட்சக் கவிராயர் வெளிச்ச மாகவே விலாசத்தைக் கூறிவிட்டார். 

“ஞானசுந்தரம்! நீ அவளை விரும்புவதாக நானறிந் தேன். அவள் புலைச்சி வயிற்றில் பிறந்தாலும், மிருதங்க சக்கரவர்த்தி மீனாட்சிசுந்தரம் பிள்ளை ரத்தத்துக்குப் பிறந்தவள். இங்கே சாப்பாடு இல்லையென்று அவளை வேலைக்காரியாக அனுப்பவில்லை. சங்கீதம், அதுவும் தீட்சிதரிடம் புலைச்சி பயிலலாமா என்கிற மனச் சாட்சி பொய்யுரைத்து, வேலைக்காரியாக்கியது. நீதான் அவளுக்கு தீட்சிதரின் நிழலாக இருந்து சங்கீத சிட்சை யளிக்க வேண்டும்!” 

குறிஞ்சியைப் பார்க்கிறபோது புலைச்சி குலத்தில் பிறந்தவளா? புரியவில்லையே! தேவகுலத்து அக்கினி குஞ்சுப் பிரகாசமாய் இருக்கிறாளே! 

அன்று முதல் ஞானசுந்தரம் அவளானான்; அவள் ஞானசுந்தரமானாள்; இசையைப் பொறுத்தவரையில்! இடைவெளிவிட்ட காதலைப் பொறுத்தவரையில்! 

குறிஞ்சியின் எழில், ஏழிசை எழில்! 

அவர்கள் காதலை எழுத்தாணி கொண்டு ஆசை ஓலைகளில் கவிதையாக எழுதினர். ஆனால் வாசிக்க மறுத்து விட்டனர் என்று சொல்ல முடியாது; பின்னால் வாசித்துக் கொள்ளலாம் என்று பாதுகாத்து வைத்துக் கொண்டனர்; இன்னமும் பாதுகாத்து வருகின்றனர். 

அவர்கள் ஆரோகண அவரோகணங்களாகக் காதலித் தனர்; சம்பூரணமாகத் காதலித்தார்களேயொழிய வர்ஐ குறைபட்ட சுரங்கள்) வாக்கிரமாக (தடுமாறிய சுரங் கள்) காதலிக்கவில்லை. 

முத்துசாமி தீட்சிதரின் குருகுலத்தில், அவள் செல்வத் துள் செல்வம் செவிச் செல்வம்! ஆனால் ஞானசுந்தரம் அதனையே பயற்சியளிக்கிறபோது செல்வத்துக்கெல்லாம் தலையாக விளங்க முற்பட்டாள். 

ஆ! அந்த ‘ஸ்ரீ சுப்பிரமண்யாய நமஸ்தே’ என்கிற காம்போதி ராகப் பாடலைப் பயிற்றுவிக்கிறபோது… 

அவள் படாத பாடுபட்டு விட்டாள்!

ராகத்தின் அழுத்தம்மட்டுமல்ல; தீட்சிதர் கிருதிகள் என்றாலே விளம்பகால நிதான அழுத்தம்… 

நாரிகேள பாகம் போன்றது. அதாவது நாரிகேளமாம் தேங்காயைப் பறித்து, நாரை உறித்து, உடைத்து, ஓட்டி லிருந்து தேங்காய்ப் பத்தையை நீக்கி, நன்கு மென்று பிறகு அதன் சாற்றைச் சுவைப்பதுபோல்… தேங்காய் பாகம் போல்… 

ஏறத்தாழ இந்த நான்கைந்து ஆண்டுகளில் குறிஞ்சி, முத்துசாமி தீட்சிதரின் அழுத்தமான இசை ஞானத்தை யும், தஞ்சாவூர் கோயில் அர்ச்சகராக வேலை பார்த்தா லும் அடிக்கடி திருவாரூர் வருகிறபோதெல்லாம் சியாமா சாஸ்திரிகளின் கதலீபாகமெனப்படும் வாழைப்பழ பாகச் சங்கீதத்தையும் கனிவோடும் தெளிவோடும் செவிச் செல்வமாய்ச் சேகரிப்பாள். 

இருவருமே தீட்சிதரும், சாஸ்திரிகளும் இந்துஸ் தானி சங்கீதத்தில் பல அப்பியாசங்களைச் சாதித்து சாகித்தியமும் செய்தவர்கள். அந்த நிழலும் அவள் மீது படிந்திருக்கத்தான் செய்தது. அவள் சந்திக்காத மகான் கள் தியாகய்யரும், கோபாலகிருஷ்ண பாரதியாரும்தான். ஆனாலும் அவர்களது உருப்படிகள் சில அவளுக்கும் சரி; ஞானசுந்தரத்துக்கும் சரி, பாடமாகி இருந்தன. 

குறிஞ்சி இத்துணைக்குச் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றி ருக்கிறாள் என்கிற செய்தி எள்ளளவேனும் தீட்சிதருக்குத் தெரிய வேண்டுமே! இதுதான் மானசீக அல்லது கண் கண்ட ஏகலைவ உபாசனையோ? 

அன்றைக்கு முத்துசாமி தீட்சிதர் ஓர் புதிய கிருதியை நாட்டைக் குறிஞ்சியில் சிருஷ்டிக்க, ஞானசுந்தரம் தம்பூரை மீட்டுகிறான். 

எதிரே திருவாரூர் கமலாவும் கூரை நாடு ராமசாமியும் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். ஜயாசாமி நட்டுவனார் ஒரு நட்டுவாங்கக் கச்சேரியை முன்னிட்டுச் சென்றிருந்த தால் வரவில்லை. 

இருப்பவர்களில் ஓரளவு நன்றாகச் சமஸ்கிருதம் தெரிந் தவன் ஞானசுந்தரம். தம்பூரை அவன் மீட்டி இருக்கக் கூடாது; கமலத்திடமோ, ராமசாமியிடமோ கொடுத்து இருக்கலாம். அவன் என்ன கண்டான். புதிய உருப்படி உதயமாகப் போகிறது என்பதை? 

அப்போதுதான் தீட்சிதர் சொன்னார்: “ஞான சுந்தரம்! தம்பூரை மீட்டிக்கொண்டே சாகித்யத்தையும் குறித்துக் கொள்!” 

தருமசங்கடம்தான்; தம்பூரை அப்போதாவது கமலத் திடம் கொடுத்து இருக்கலாம். குருபத்தியும் பயமும் அவ்வாறு செய்யத் தயங்கி விட்டன. 

மனைவிகள் இருவரும் இதனைச் செய்யலாம். அவர் களுக்குள் போட்டா போட்டி. அந்தக் கதையே விசித்திரமானது. 

மூத்த மனையாள் கறுப்பழகி. தீட்சிதர் எப்போதுமே திருத்தணி முருகன் மீதும், சர்வேஸ்வரி மீதும் பக்தி கொண்டுவிட்டதால், புதியதாக மணம்புரிந்த சற்று வயது கூடிய கறுப்பு மனையாள் இன்பத்தில் நாட்டம் கொள்ளவில்லை. தேவி உபாசகருக்கும் மனைவி கறுப் பானால் என்ன? சிவப்பானால் என்ன? போகத்தில் நாட்டமில்லை. இதைப் பெற்றோர்களான ராமசாமி தீட் சிதரும், சுப்பு லட்சுமியம்மாளும் தவறாக எண்ணி விட்ட னர். ‘ஓகோ! கறுப்பாக மனைவி வாய்க்கவே இன்பத்தில் நாட்டமில்லை போலும்! என்றுணர்ந்து சிவப்பான, இளமையான ஓர் அழகியை மணமுடித்தனர். அப் போதும் இதே அவதியானாலும் இளைய மனைவி அந்த உமாமகேஸ்வரி போலிருக்கவே சற்று அன்பு கொண்டார் தீட்சிதர் பெருமான். சக்களத்திப் போட்டா போட்டிக்கு இதுவே மூலகாரணம். 

குறிஞ்சி, ஆரம்பத்தில் சேர்ந்தபோது இளையாள் ஆதரவு தெரிவித்ததும் இதன் காரணம்தானே? “மகளே!” என்று தீட்சிதர் அழைக்கவில்லையா? 

தொலைவில் அச்சமயம் அங்கே, தந்தையாகிய ராம சாமி தீட்சிதரும் அமர்ந்து கொண்டிருந்தார். 

ராமசாமி தீட்சிதர் மகாவித்துவான். மகனுக்குத் தந்தை மட்டுமல்ல; குரு! ஹம்சத்வனியில் முதல் சாகித்யம் கண்டவர் மட்டுமல்ல; நூற்றியெட்டு ராக தாளமாலிகா இயற்றிய சங்கீத ராட்சஸன். இவரது மகன் சின்ன சாமி தீட்சிதர் தளது கண்களை இழந்துவிட்டபோது, இறைவனை வேண்டி நாற்பத்தெட்டு ராகங்களில் ராக மாலிகை பாட, கண்கள் திரும்ப வந்தனவாம்!’ 

சுரக்காய் தம்பூரான அந்த விலையுயர்ந்த அபூர்வ தம்பூர், அபாரமான நாதமெழுப்புகிறது. 

முத்துசாமி தீட்சிதர், நாட்டைக் குறிஞ்சியின் ஆரோகண அவரோகணத்தை ராகமாய் பாடி, ஆலாபித்து, திருத்தணி முருகனைத் தியானிக்கிறார். 

“பார்வதி குமாரம் பாவையே ஸததம்
சரவணபவ ‘குருகுஹம்…” 

தமது ‘குருகுஹு’ முத்திரையைப் பல்லவியிலேயே வைக் கிறார், ரூபகதாளம். 

பாடலை அற்புதமாக இயற்றிப் பாடி முடித்துவிட்டு, சுப்பிரமணியக் கடவுளை வேண்டி எழுந்து கொள்கிறார். ஆ! நாட்டைக் குறிஞ்சியைப் பிழிந்து வைத்த மகனைப் பாராட்டிக் கொள்கிறார் சங்கீத ராட்சஸரான ராமசாமி தீட்சிதர். 

ஆனாலும் விளம்பமான அழுத்தம் தொல்காப்பியரின் சொல்லதிகாரம் போல என்று எண்ணிக் கொள்கிறாள் குறிஞ்சி. புலவர் வளர்ப்பாயிற்றே! 

மறுநாள் மாலை அந்தக் காதல் ஜோடி விருபாட்சக் கவிராயர் வீட்டில் சந்திக்கிறது. 

*சங்கீத அற்புதங்களை எந்தக் கண்கொண்டும் யாரும் அற்பமாக எடை போட்டு விடக்கூடாது. இது மூன்றாவது கண். உடல் அதிர்வுகளில் எந்த நேரத்தில் எது நிகழும் என்று யாராலும் சொல்ல முடியாது. இது விஞ் ஞானத்துக்கு அப்பாற்பட்ட விஷபம். 

*குகனாகிய முருகப் பெருமானைக் குருவாக ஏற்றவர். எனவே தம் பாடல்களில் “குருகுகம்’ என்ற முத்திரையை வைப்பார். குருகுகம் என்று ஒரு கீர்த்தனை கேட்பின் அது முத்துசாமி தீட்சிதர் பெருமானுடையது. 

இருவரும் உள்ளே நுழைந்தால், கவிராயர் காட்டுமேடு நோக்கிப் புறப்பட்டு விடுவார். சங்கீதப் பயிற்சி மட்டு மல்ல; அவர்கள் காதல் சங்கதிகளையும் பயில்கிறார்கள். ஆயினும் குறிஞ்சி, கற்பில் குறிஞ்சி. அவள் குறிஞ்சித் திணை போல் மலைபோலுயர்ந்திருப்பவள் என்பதும் கவிராயர் கண்ட உண்மை. 

சங்கீதப் பயிற்சிக்குப் பிறகு அவர்களுடைய தனிப்பட்ட சங்கதிப் பயிற்சியில் பேச்சைத் தொடங்கினர். சில சமயங் களில் சங்கீத சாதகத்தையும் அங்கே வைத்துக் கொள்வ துண்டு. 

“குறிஞ்சி! நாமோ தீட்சிதர் குருகுலம். நீயோ பலரு டைய பாடல்களை அப்பியசிக்க முயல்கிறாய். ஏன்? தஞ்சை சமஸ்தான இந்துஸ்தானி வித்துவான் ராம தாசரையும் நேசிக்கிறாய்! எதை மனத்தில் வைத்து இப்படி உருவாகிறாய்?” 

குறிஞ்சி, குறிஞ்சிப் பூவாய் குமிழ்நகை புரிகிறாள். 

“ஞானி! என் பெரியப்பா விருபாட்சக் கவிராயர் சொல்வார்: “குறிஞ்சி! சிலப்பதிகாரம், கம்பராமாயண நயம் தமிழுக்கு இனிமை தருகின்றன. தொல்காப்பியமோ, நன்னூலோ அல்ல! தீட்சிதரிடம் தொல்காப்பியம் கற்றுக் கொள்; சியாமசாஸ்திரிகளிடம் சிலப்பதிகாரம் கற்றுக் கொள்: தியாகப்பரிடம் கம்பராமாயணம் தெரிந்து கொள்! இலக்கணம் முக்கியமல்ல; இலக்கிய நயம் முக்கியம்! அதை விட எளிமையாக மக்களிடம் சேரவல்ல கலை முக்கியம்; தாய்மொழி முக்கியம்!” – என்றார். எனவே நான் மக்கள் பாடகியாக எளிமையைச் சிந்திக்கிறேன்!” 

ஞானசுந்தரம் யோசிக்கிறான். அவனும் சில மாதங் களுக்குமுன் காலமான சியாமா சாஸ்திரிகளிடம் குருவுக்குத் தெரியாமல் சில விஷயங்களைப் பயின்ற வனல்லவா? அவர் கோயில் அர்ச்சகர்; இவன் அவருக்கு அர்ச்சகராக இருந்து லயப்பிரம்மமான சாஸ்திரிகளிடம் பல்லவி பயின்றவனல்லவா? ஒரு காலத்தில், சியாமா சாஸ்திரி, தஞ்சை சமஸ்தானத்தில் மார்தட்டி வந்த ஆந்திர மகாவித்துவானான பொப்பிலி கேசவய்யாவைத் தலைகுனியப் பல்லவி பாடி வென்றவரல்லவா? 

“மும்மூர்த்திகளான தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகய்யர் இவர்களை மீறி ஒரு புதிய முறையில் பாடி மக்களை வயப்படுத்த முடியும் என்றா நினைக்கிறாய் குறிஞ்சி?” 

“ஏன் முடியாது ஞானி? இந்த மும்மூர்த்திகள் என்கிற பிரசாரமே எனக்குப் பிடிக்காத ஒன்று! இவர் களுக்கு முன்பிருந்த முத்துத்தாண்டவரும், அருணாசலக் கவிராயரும் சங்கீதம் பாடாமல் வெங்கீதமா பாடினார் கள்? இல்லை. நமது சமகாலத்தில் இருக்கும் சுவாதித் திருநாள் மகாராஜாவும் கோபால கிருஷ்ணபாரதி என்கிற தமிழிசைப் பிரமாணரும் சிங்கீதமா பாடுகிறார்கள்? இதில் யார் பிரம்மா, விஷ்ணு, சிவன்? முத்துத்தாண்டவரும் அருணாசலக் கவிராயரும், கோபாலகிருஷ்ண பாரதியாரும் தமிழில் பாடியதால் பின் தள்ளப்பட்டு விட்டனர். தமிழ் மொழிக்கு மரியாதை தராத வரையில் இந்தச் சங்கீதம் உருப்படாது; கொஞ்ச காலத்தில் அழிந்து போகும்!” 

“சுவாதித்திருநாளை யாரும் சங்கீத வித்துவான் என்று ஒப்புக்கொள்ளவில்லையே!” 

“ஏன்? சுவாதியின் சங்கீதத்தைப் பலாப் பழமாக்கி விட்டார்கள்? வடிவேல், சின்னையாபிள்ளை சொர சொரப்பால், உள்ளிருக்கும் இனிமை தெரியாமல் போய் விட்டது! சுவாதி சமஸ்கிருதத்திலும் இசையிலும் மேதை! வேண்டுமானால் நமது குருகுலத்தைச் சார்ந்த வடிவேலு, சின்னையாபிள்ளை அந்த இனிமைக்கு மேலும் மெரு கூட்டியிருக்கலாம்! அவ்வளவே!” 

“எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?” 

“நான் புலைச்சியேயொழிய ஓரளவு சமஸ்கிருதத்தைப் பார்த்தவன்; நன்னூலால் தமிழுக்கு நலங்கிட்டவள். தஞ்சை சகோதரர்கள் அற்புதமான இசைமேதைகள்; நட்டுவாங்க நாயகர்கள்! வர்ணங்களையும் கீர்த்தனை களையும் வான் புகழ இயற்றியவர்கள்! நமது குருநாதர் சமஸ்கிருதமோ, சுவாதியின் சமஸ்கிருதமோ பாணினியின் சுத்தமான பரிமாணங்கள்! இந்தப் பரிமாணங்கள், இந்த நால்வரிடம் இருப்பதாக எனக்குப் படவில்லை. சுவாதியின் கீர்த்தனைகளில் சாமகான பரிமாணங்களி ருக்கின்றன. புருஷ ஸுக்தமான அனுதாத்தம், உதாத்தம், ஸ்வாதம், ப்ரசயம் போன்ற மந்திர சுரங்கள் நமது குரு நாதர் கிருதிகளில் இருப்பன போலிருக்கின்றன. இவை ரிக்வேதத்து பத்தாவது மண்டலத்து தொண்ணூறாவது ஸுக்தம்! பதினாறு மந்திரங்கள்! பின்னால் சுக்லயஜு ராகவும், கிருஷ்ணயஜுராகவும், சாமகானமாகவும், அதர் வணமாகவும் மாறுதல் கண்டன !” 

“புருஷ ஸுக்தம் என்றால்?” 

“பெரிய விஷயம்! அது புருஷோத்தமத் தத்துவம்! அதற்குப் புரோகிதனும் ஒன்றுதான்; புலையனும் ஒன்று தான்! போதும்; விளக்கினால் பொழுது விடியும்!” 

ஞானசுந்தரம் அறிந்த சமஸ்கிருதம் எழுத – படிக்க; குறிஞ்சியறிவு கண்டு அவனது ஞானம் வெட்கியது. 


சில நாட்களுக்குப் பிறகு…

அன்றைக்குக் கிருத்திகை… 

சீடர்கள் அருகே அமர்ந்திருக்கிறார்கள். எங்கும் தீபமங்கள ஜோதிப் பிரகாசம். 

அன்றைக்குப் பார்த்து குற்றாலத்திலிருந்து, முத்துசாமி தீட்சிதரின் பாட்டியாரான பாகீரதியம்மாள் உறவு வழி கொண்ட உறவினர் வந்திருந்தனர். 

குறிஞ்சியின் விதி, அவர்களுடைய புண்ணியக் கரங் களால் எழுத இருந்தது போலும்! 

அன்றைக்கு கமலம் தம்பூரை மீட்டுகிறாள்…

சரிகம நிதநி பதநிச்… 

சிநிதம கமப கரிச.. 

இருபத்து எட்டாவது மேளகர்த்தா ராகமான அரிகாம் போதியின் குழந்தை, அழகாகக் குரல் கொடுக்கிறது… 

வீட்டில் அனைவருமே அமர்ந்து மகானின் தேனிசையில் மயங்கிக் காணப்படுகிறார்கள். குற்றாலத்து உறவினர்களும் குந்தி ரசிக்கக் காத்திருக்கிறார்கள். 

காலையில் குறிஞ்சி வீட்டு வேலைகளை முடித்துச் சென் றவள் இன்னமும் காணவில்லை. பெரியப்பா விருபாட்சக் கவிராயர் உடல்நிலை வேறு சரியில்லை. அந்தக் குற்றால உறவினர்கள் மாலைதான் வருகை தந்திருந்தனர். 

முத்துசாமி தீட்சிதர் அன்றைக்கு நாட்டைக் குறிஞ்சி யின் ஆரோகணம் அவரோகணம் பாடி, திருத்தணிகை முருகப்பெருமானைத் தியானித்து ஆலாபிக்கிறார். 

ஆ! அது ஆலாபனையா? 

நாட்டைக் குறிஞ்சியின் நளினங்களெல்லாம் சுரத் துக்குச் சுரம் சுந்தர நடம் புரிகிறது. அன்றொரு நாள் இயற்றிய புதிய பாடலான ‘பார்வதி குமரம்’ என்ற பாடலைப் பாடுகிறார். இந்தப் புதிய பாடலை இயற்றிய நாளன்றுதான் ஞானசுந்தரம் தம்பூர் மீட்ட, பாடலை எழுத ஆளில்லாமல் போக, ஞானசுந்தரம் தலையில் விழ, அவன் தருமசங்கடமாகத் தம்பூரையும் மீட்டிக் கொண்டு தீட்சிதர் பாடும் பாடலையும் எழுத்திறக்கம் செய்ய நேர்ந்தது. எங்கேணும் விடுபட்டால் அவன்தான் பதில் சொல்ல வேண்டும். அப்போது பார்த்து அங்கு வந்து நின்றாள் சுந்தரப் பேரழகி குறிஞ்சி, 

குறிஞ்சியைக் கண்டதும் குற்றாலத்து உறவினர்களுக்கு நினைவுகள் சிறகு விரிக்கின்றன. 

ஓ… இவள் புலைச்சியான புவனாவின் புத்திரியல்லவா? இவள் ஏன் இங்கு வந்தாள்? 

தீட்சிதரின் மூத்த மனைவியை ஒருத்தி கேட்டாள்: இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்?” 

இளைய மனைவி சொன்னாள்: “ஏன்? நம் வீட்டு வேலைக்காரி!” 

“என்ன! அனுஷ்டானங்கள் நிறைந்த தீட்சிதர் வீட்டில் பறைச்சியை வேலைக்காரியாக வைத்திருப்பதா?”

“பறைச்சியா? சே சே! நமது விருபாட்சக் கவிராயர் நண்பர் மகள். அவர்தான் கொண்டு வந்து சேர்த்தார்,”

“சேர்த்திருக்கலாம்! இவள் குற்றாலத்தில், நம் வீதியில் குடியிருந்தவள்” என்று தொடங்கியவள். அந்த விருத் தாந்தங்களைப் பிட்டுப் பிட்டு மெல்லிய குரலில் பிலாக் கணித்தாள்.

மூத்தாளுக்கு எரிச்சலோ எரிச்சல்!

ஆயினும் தீட்சிதர் பாடிக்கொண்டிருக்கிறாரே! நாட்டைக் குறிஞ்சிக்கு இடையே குற்றாலக் குறிஞ்சிப் பிலாக்கணமா?

பாடிக் கொண்டே வந்த தீட்சிதர், ‘மார்க்க சஹாய ப்ரியஸுதம்’ என்று சாரணம் பாடுகிறாரேயொழிய மேற் கொண்டு இயற்றிய வரிகள் ஞாபகத்துக்கு வரவில்லை… என்ன அது? என்ன அது?

ஏ… குருகுகா! என்ன சோதனை இது?

“ஞானசுந்தரம்! எழுதி வைத்த குறிப்பு எங்கே?” என் கிறார் தீட்சிதர்.

அவன் அன்றைக்குத் தம்பூர் மீட்டியதில் மயங்கிப் போனதால், சரிவர எழுத மறந்து விட்டேன் என்று கூறிச் சரணடைந்து மன்னிப்புக் கேட்கிறபோது…

குறிஞ்சியின் குரல் கணீரென்று ஒலிக்கிறது…

கமலமும், ராமசாமியும், ஞானசுந்தரமும், குடும்பத்த வர்களும் குற்றால உறவினர்களும் பிரமை பிடித்தவர்க ளாகக் கவனிக்கிறார்கள்…

“மார்க்க சஹாய ப்ரியஸுதம்’ என்றுத் தொடங்கி, ‘மானித குண வைபவம்’ என்று முடித்ததோடல்லாது, தீட்சிதரின் ‘குருகுக’ முத்திரைப் பல்லவி பாடி, குரவே நமகுருகுவர் என்று நிரவல் செய்தவாறு வாசற்படியி லேயே அமருகிறாள் குறிஞ்சி.

‘குரவே நமஹு’ என்பது அவளாகச் சேர்த்துக் கொண்ட குரு வணக்கம்.

நாட்டைக்குறிஞ்சியின் சுரங்கள் அவளது இனிய நாவில் கோட்டை கட்டி விந்நியாசிக்கின்றன! அந்த ‘கம்பகரிச் என்ற மூர்ச்சனையில் ‘குரவே நமஹு’ என்கிறாள்.

தீட்சிதர் திகைத்துக் கவனிக்கிறார். ஆனால் அவரது கண்களில் மட்டும் தீட்சண்யம்! வேலைக்காரப் பெண்ணா? ‘மகளே’ என்று அழைத்ததை நிரூபித்து விட்டாளே! நிரூபித்து விட்டாளே!

பாடலைப் பாடி முடித்து, குருவிடம் சென்று கழல் பணிய முனைகிற போது…

“நில்!

மூத்தாளின் மூர்க்காவேசக் குரல்.

“ஏன்?” -தீட்சிதர்.

“இவள் பறைச்சி! கவிராயர் பொய் சொல்லி நமது குலத்துக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டார்!”

தீட்சிதர் தீர்க்கதரிசனமாய்ச் சிரிக்கிறார்.

மூத்தாள், உறவினர் சொன்னதை முன்குகிறாள்.

“சங்கீதமாகிய ஞானத்துக்குப் பறைச்சி ஏது? பார்ப்பான் ஏது?”

“முதலில் இவளை வெளியேற்றுங்கள் ! நாளை வீட்டைச் சுத்தம் செய்து ஹோமம் நடத்த வேண்டும்.”

மூத்தாள் மட்டுமல்ல; ஏனைய ஆத்தாள்களும் எதிர்த் தனர். ஆனால் இளையவள் மட்டும் இரக்கம் கண்டு, “குறிஞ்சி! உன்னை நானறிவேன்! சங்கீதம் சொல்லிக் கொள்ளப் பொய் சொன்னாய்! அது பாவமல்ல! இங்கிருக்கும் பாவாத்மாக்கள் உன்னை விரட்டுகிற போது… நீ விடைபெறுவதே நலம்!” என்றாள்.

தீட்சிதர் மெல்ல எழுந்து வருகிறார்…

“குறிஞ்சி! என் மகளே! மீண்டும் மகளே என்றழைக் கிறேன்! என் சங்கீதம் பெற்ற மகளல்லவா? நீ புலைச்சியானாலும் சமஸ்கிருதத்தை ஸ்பஷ்டமாக உச்சரிக்கத் தெரிந்த ஸுக்தம்! சில ஜன்ய ராகங்கள் எந்தத் தாய் வயிற்றில் பிறந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அப்படித்தான் உன் போன்ற ராகங்களும்! தன்யாசியைத் தோடியில் பிறந்தது என்று சொல்லலாம். சுத்த தன் யாசியைத் தோடியில் பிறந்தது என்பதா? கரகரப்பி ரியாவில் பிறந்தது என்பதா? மோகனத்தைக் கல்யா ணியில் பிறந்தது என்பதா? சங்கராபரணத்தில் பிறந்தது என்பதா? நீ ஒரு சுத்த தன்யாசி! மோகனமான சங்கீத ஜாதி! இந்தப் பாவிகளை மன்னித்துப் புறப்படு மகளே! என் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும்! என்னி டம் மூன்று தம்பூர்கள் மூலைக்கு மூலை கிடக்கின்றன. அதில் ஒன்றை எனது அன்புப் பரிசாகத் தருகிறேன். எல் லாரும் குருவுக்குக் காணிக்கை செலுத்துவார்கள். நான் உனக்குக் காணிக்கையாகத் தம்பூரைத் தருகிறேன்!“ 

முத்துசாமி தீட்சிதர் தம்பூரை எடுத்து வந்து தர. அதனைத் தாள் பணிந்து பெற்றுக் கொள்கிறாள், குறிஞ்சி.

ராகங்களெல்லாம் அவளது ராசிக்குரிய அனைத்துக் கிரகங்களையும் வாழ்த்துகின்றன. 

இராகம்-14

தபஸ்வினி

இசைமிகு முத்துசாமி தீட்சிதர் பெருமானிடம் எப்படியெல்லாம் குருகுலமிருந்து, இந்த போகலீலா ராகம் பாடும் அளவுக்கு ஆளானோம் என்கிற நினை வுடன் இன்னமும் குறிஞ்சியும் ஞானசுந்தரமும் போக லீலாவில் மூழ்கி, மத்திம (ம) பஞ்சமத்தில் (ப) மாறி மாறிச் சுருதியில் இழைகிறார்கள். 

போகலீலா ராகத்து மகிமை யறியாமல் அதனைப் பாட ஆரம்பித்தால் அவர்கள் தேகங்கள் அவர்களையு மறியாது மன்மத பாணங்களால் மறுகி முறுக்கேறி உருகி உரைகின்றன. 

சிலிர்ப்பில் சிருங்கார உற்சாகம்; களிப்பில் காம ஊர்வலம். 

ஞானசுந்தரம் தேகமாகிய தம்பூர், நரம்புகளை இழத்து நாழிகைகள் பலவாயின; கையில் மட்டும் தம்பூர் ஒலிக்கிறது. 

ஏதோ போகலீலா ராகம் பாடியாவது தை மாதம் வரை பொழுது போக்கலாம் என்று எண்ணியது போக, அன்றையப் பொழுது போகுமா என்பது போன்றா போகக் கிளர்ச்சி போர்க்கொடி தூக்க வேண்டும்? 

இருவருக்கும் எதிர்பாராத புதிய அனுபவம் போக லீலா ராகம். ராகங்களின் சக்திகளையும் ரகசியங்களை யும் வித்தாரமாக அறிந்த வித்தகர்கள் அவர்கள். அப்படி என்ன தங்களை மீறி நடந்துவிடப் போகிறது என்று தப்புக் கணக்குப் போடலாமா? கற்பனை மயங்கிய கானம்; அபூர்வ ராஜாளியை வயப்படுத்திய ராகம்; தங்களை மட்டும் விட்டு வைத்துத் தாலாட்டும் அல்லது பாராட்டும் என்று குறிஞ்சி நினைக்கலாமா? ஸ்ரீ ஆசார் யாள் பெருமாளின் அனுக்கிரகம் பெற்றவளுக்கு இது புரியாது போனதென்ன? 

ஆலாபனை மேல்நிலை உச்சக்கட்டத்து மத்திம பஞ்ச மத்தில் சஞ்சரிக்கிற போது… 

“ஞானீ!” – குறிஞ்சி தன்னை மறந்து அலறுகிறாள். மீண்டும் “ஞானீ! ஞானீ! போதும்! போதும்!” தம்பூர் நாதம் அமைதி பெறுகிறது. 

தேகங்களின் தம்பூரில்தான் போக சுருதி சேர்ந்து, லீலை யின் அந்தரகாந்தாரம் கேட்கத் தொடங்கி விட்டதே! 

காமம் என்பது பெண்களின் ஆழமான காப்பிய ரகசியம். அவளைப் போலக் கட்டுபடுத்துகிறவர்களும் இல்லை: அவிழ்த்து அலைய விடுபவர்களுமில்லை; இது ஒரு சிதம்பர ரகசியம் போல… தில்லைக்காளிக்கு விலங்கிட்டு அமைதி கொள்ளச் செய்த ரகசியம் போல… 

ஆண்காமம் என்பது பெரும்பாலும் ஒரு மிருகக் கனவு. அதற்குத் தூய்மையுமில்லை; வாய்மையும் இல்லை. ஆனால் ஞானசுந்தரம் அந்தச் சேய்மையில் இல்லை. அவன் தாய்மை ராகங்களான எழுபத்து இரண்டு மேள கர்த்தாக்களையும் தரமாகப் பாடவல்லவன்; உரமாக உபதேசிக்க வல்லவனாயிற்றே! மீறிப் பேசினால் காகலி நிஷாதத்தையே தைவதமாக வைத்துப் பாடிப் பார்த்தால் என்ன என்று முரண்படுகிறவனாயிற்றே! இலக்கண மரபு இடம் தராது என்றால், ‘ஷ்ட்சுருதியே இலக்கண மரபா?’ என்று மகான் சியாமா சாஸ்திரிகளிடமே வாதாடியவனாயிற்றே! 

இருவருமே போகலீலா ராகம் பாடியதில் போக போதையில் தள்ளாடுகிறார்கள்… 

“ஞானீ! போதும் என் சபதம்? போதும் என் வைராக் கியம்! உங்களுக்கு நான்; எனக்கு நீங்கள் என்று நாமிரு வருமே திருவாரூர் தியாகேசப் பெருமான் முன் சத்தியம் செய்து கொண்டவர்கள், தை மாதம் வரை ஏன் காக்க வேண்டும்? வாருங்கள் ஞானீ! எழுந்திருங்கள் ஞானீ!” 

ஞானசுந்தரமும் போகலீலா ராகத்துப் பஞ்சம சுருதி யில் நயந்து இருக்கிறானே!… 

எழுந்து கொள்கிறான்… 

போகலீலா ராகம்! அவர்களை மூர்ச்சனையுடன் நிற்க வைப்பதற்கு மாறாக மூர்க்கத்துக்கே அழைத்து விட்டது. பாடுபவர் பாடினால் அந்தந்த ராகத்து மந்திரம் மணக் கும்; இந்திரம் குணக்குமே! 

குறிஞ்சி அவரோகணமாகி விட்டாள். மத்திம (ம) சுரம் லலாடத்தை இடிக்கிறது. 

சுரங்களில் மத்திமம் பெண்; அம்மா!… பஞ்சமம் ஆண்; அப்பா… இது ஞானசுந்தர ஆராய்ச்சி! 

போகலீலா ராகத்து அவரோகணத்தில் மத்திமமில்லாக் குறை குறிஞ்சியையே போக வறிஞ்சியாக்கி விட்டது போலும்! இருந்திருந்தால் சற்றே சமாளித்து இருப்பாளே? 

அதே நேரத்தில் ஆரோகணத்தில் பஞ்சமம் மட்டு மல்லாது மத்திமமும் இருந்ததால் ஞானசுந்தரமும் துப்புர வாக ஞானமிழந்து விட்டான் என்று சொல்ல முடியாத நிலையிலிருக்கிறான்… 

போகலீலாவைப் பாடுபவர் பாடினால் குல மகளையும் விலை மகளாக்கிவிடும் என்கிற ‘தாது’ புரியாததால் வந்த தவிப்பு நிலை இது! ராகலட்சணங்கள் என்பவை அனு பவத்தால் உணரக்கூடிய அனுபந்தங்கள்! அநுவாதத்தால் ஜயப்பதாகை நிறுவும் அனுரூபமானவை! அநித்தியமான வையல்ல; நித்தியமானவை. இளம் பருவங்கள் இவற்றை எவ்விதம் அறியும்? அறிவுக்கும் அனுபவத்துக்கும் இடையே வயதல்லவா பாலம் கட்டி நடக்க விடுகிறது? 

இலக்கணம் என்பது அறிவு; இயல்தான அனுபவம்! எனவே போகலீலை அனுபவமின்மையால் மன்மதனை யும் ரதியையும் உருப்படியாக அவர்களது மஞ்சத்தில் உறங்க விடாமல் எழுப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள்!

“என்ன ஞானி தயக்கம்?”

அவள் அவனைச் சேர்த்து அணைத்து இதழ்களைப் பொருத்துகிறாள். ஞானியின் இதழ்களும் சுந்தரமாய்ச் சுகம் தருகின்றன.

முத்தமாகிய பல்லவி, பல சங்கதிகளுடன் பாடத் தொடங்கிவிட்டது.

அவர்கள் இருவரா? ஒருவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்து நாகபோகப் பிணைப்பு போலக் காணப்படுகிறார்கள். வியர்வையால் இருவருமே தெப்பமாக தனைந்து கிடக்கிறார்கள்…

இப்போது நரம்புகள் போகலீலா ராகத்தை ஆலாபிக் கின்றன…

அவன்: சகமப..

அவள்: பகரிச…

ஞானியின் கரங்களைப் பற்றிய குறிஞ்சி, தன்னை நந்த வளமாக்கி மலர்களைப் பறித்து முகரத் தூண்டுகிறாள்… பொன்னொளிரும் பூம்பொழில் மேனியின் பூரிப்புமிக்க தேவஜாதி மலர்களான பாரிஜாத மலர்கள் புதிய மணம் பெறுகின்றன!

“ஞானீ “

“குறிஞ்சீ!”

“ஞானீ!”

“குறிஞ்சீ!”

அவள், மந்தரஸ்தாயின் மத்திமத்தில் குரல் கொடுத் தாலும், அவன் பஞ்சமத்தில் நின்று ஒரு படி கீழே இருக்கும் மத்திமத்துக்கு இறங்கத் தயங்குகிறானா? இல்லை. மறுக்கிறானா? புரியவில்லை.

கொம்பும் கொடியுமாகப் பின்னி நின்றவர்கள் தெம்பின் சுழிமுனைக்குச் சென்றபோது…

கொம்பு கொடியைச் சாய்க்கும்; இங்கே கொடியே கொம்பைச் சாய்த்து விட்டது. அப்போதுதான் கொம்பு! கொம்பானது; கொடி சாய்ந்த பலவீனம் உணர்ந்தது. “குறிஞ்சீ!”

அந்தக் கூடமே அதிரும்படிக் கத்தி விட்டான் ஞான சுந்தரம்.

அந்தக் கத்தவில்…

அதுவரை போகலீலா ராக அவரோகணத்திலிருந்த குறிஞ்சி, பயத்தின் அதிர்ச்சி மேலீடு மின்னலாய் இடிக்க, ஒவ்வொரு சுரமாக ஒரே அடியாக இல்லாமல் தயங்கித் தயங்கி உதிருகிறது… ச்-நி-த-ப-க-ரி-ச…

குறிஞ்சி தன்னையுணருகிறாள்…தன்னையுணருகிறாள்…

ஓ ஒரு ராகம் மன்மதனுக்கு அடிமையாக்குகிற புதிய அனுபவம். புதிய ஞானம், பளிச்! பளிச்! ஆனாலும் குறிஞ்சி இப்போது தன்னை உணர்ந்தே சொன்னாள்:’

“ஏன் ஞானி, அதிர்ச்சியால் தாக்குண்டதைப் போல நிற்க வேண்டும்? துணிந்தது துணிந்து விட்டோம்! முழுக் கிணற்றையும் தாண்டி விடுவோமே!”

“வேண்டாம்! இந்த ராகம் இப்படி நம்மைக் காட்டுத் தீயாய், காட்டாற்று வெள்ளமாய் ஆக்கும் என்பது நான் எதிர்பாராதது.”

“நான் மட்டும் எதிர்பார்த்தேனா?”

“ராகங்களைத் தெய்வம் என்கிறார்களே… அது இது தான்!”

‘திருத்திக்கொள்ளுங்கள் ஞானி! சுரங்கள் தெய்வங்கள். நாம் அவற்றைக் கொண்டு எந்த ராகத்தைப் பாடு கிறோமோ அந்த ராகத்துக்கேற்ப, தெய்வம் அவதார மெடுக்கிறது! போகலீலா மன்மத அவதாரமெடுத்தது போல!… இப்போது நானே தயாராகிவிட்டபோது நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? எனக்கு எல்லாமே நீங்களாகி விட்ட பிறகு இது ஒன்று மட்டும் ஏன் தனித்து அவஸ்தா பேதத்துக்கு ஆளாக்க வேண்டும்? 

இப்போது ஞானசுந்தரம் அதிர்ச்சி நிலை நீங்கி ஓர் அவதார புருஷனாய் முறுவலிக்கிறான்: 

“வேண்டாம் குறிஞ்சி! உன் வாயால் எப்போது தை என்றாயோ அப்போது நமது மெய் தைக்கட்டும்! இன்று நாளும் நன்றாக இல்லை. கோளும் குறைபாடாக இருக் கிறது. தைமாதம் என்பது மகர ராசி. உனது ஜாதகத்தில் பாக்கியத்தை தரும் பத்தாவது வீடு! அதில் அமர்ந்திருக் கும் கிரகம் மோட்சக்காரன்! நமது வாழ்வின் விமோச னம் தை மாதமாகவே இருக்கட்டும்!” 

ஞானசுந்தரத்துக்கு வியர்த்துக் கொட்டுகிற நிலை அடங்கிவிட்டது. ஆனால் குறிஞ்சி… 

இன்னமும் தெப்பமாக நனைந்து கொண்டிருக்கிறாள். முழுவதுமாக அவரோகணிக்கவில்லை… 

“ஞானீ! என்னால் முடியவில்லை. என்னால் முடிய வில்லை!” 

“அமைதி, குறிஞ்சி! அமைதி! கலைக்கு உணர்வு தரக் கூடியது காமம்! ஆனால் மீறிவிடக்கூடாது! போகத்தைத் தரக்கூடிய ராகங்களில் ஒன்றான போகலீலாவைத் தெரிந்தே நான் பாடச் செய்தேன். இவ்வளவுக்கு மோச மாக்கும் என்பது எதிர்பாராதது! காரணம், ஆரோகணத் தில் பஞ்சமம் இருந்ததால், என்னை என்னில் நிறுத்தி எண்ணச் செய்திருக்கிறது. சுரங்களின் மந்திரங்களை எவரும் அனுபவித்து வேதம் எழுதவில்லை.” 

அவன் குறிஞ்சியை இப்போது காம விகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காப்பியம். போல நோக்கித் திருக்குறளின் அறத்துப்பாலின் ஆதாரம் போலவும், பொருட்பாலின் பொக்கிஷம் போலவும் மாறி, காமத்துப் பாலைத் தைத் திங்களில் வாசிக்கலாமே என்று கன்னங் களைத் தடவிக் கண்களால் போதிக்கிறான்… 

அப்போதும் குறிஞ்சியால் தன்னையடக்கிக் கொள்ள முடியவில்லை. அவள், அவனை அணைத்துப் பல்லவி பாடவே செய்கிறாள். அனுபல்லவிக்கு ஆயத்தமாக்கவே முனைகிறாள். சரணம் எது? சரணம் எது? என்றும் நாவால் கேட்பதற்கு மாறாக நரம்புகளால் கேட்கிறாள். 

“இதனால் என்ன மூழ்கிவிடப் போகிறது? நான் ஏதோ பைத்தியம் போல தைப்பாவை என்றும் தமிழப்பாவை என்றும், தை மாதத்தில்தான் காமம் ‘தை தை’ என்று குதிக்கும் என்றும் பேசி இருக்கலாம்! அதன் உக்கிரம் தெரியாத உளறல்கள் என்று எண்ணுகிறேன்! நாம் காத லர்கள். பெண் பார்த்து, நிச்சயித்து, பரியம் போட்டுத் திருமண நாள் நிச்சயித்து, அக்கினி வளர்த்தி, அருந்ததி காட்டி, அந்தத் தாலிக்கயிற்றை எவன் எடுத்துக் கொடுக்கப் போகிறான்? அதுவும் ஒரு புலைச்சிக்கும் பிரமாணனுக் கும்? நமக்குத் தாலியாவது சடங்காவது? நமது தாலி நமது இதயங்கள்; எனக்கு வேலி எனது நெஞ்சு! நமது அக்கினி – ராகங்கள்! நமது அருந்ததி சுருதி! இப்படி இருக்க…” 

“உஸ்…!” மேலும் அவளைப் பேசிவிட அனுமதியாத ஞானசுந்தரம்,அவளது உதடுகளை விரல்களால்மூடினான். 

“இப்போதைய உனது பேச்சை என்னால் சுயநல மாகவே கருத முடிகிறது! ஒரு சமயம் உன்னிலையில் நானிருந்தபோது இந்த உளறல்கள் எங்குப் போயின?” 

சுந்தரத்தின் குரலில் சூடு பறந்தது. 

அளவுக்கு மீறிய மோகதாபம், குறிஞ்சியைக் கலங்கவும் செய்து விட்டது. “ஞானீ! நீங்கள் ஞானீ! ஞானீ! நிச்சய மாகவே ஞானீ! சாஸ்திரம் படித்தே சரணடைந்து கெஞ்சு கிறேன்! நான் பெண்! அதனால்தான் காமம் அதிகம் போலும்! புலால் மறுத்தே இந்த நிலையென்றால்… ஞானீட ஆண்களைக் ‘காமாதுரன்’ என்ற சொல்லால் தவறாகக் கூறுவர். ‘காமி’ என்ற பொருளைக் கசப்பாக்கி விட்டனர். ஆண்காமம் ஐந்து நிமிடம்! பெண் காமம் புயல்! அது எளிதில் மையம் கொள்ளாது. கொண்டு விட்டால் குடும்ப நாசம்! இதனைப் படித்து இருக்கிறேன்; என்னால் இப்போது உணர முடிகிறது… தயவு செய்து இப்போதைக்கு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். நாளாவது நட்சத்திரமாவது? ஒவ்வொருவருமே நாள் நட் சத்திர ஓரை பார்த்துப் புணருவார்களேயானால், இந்த மண்ணில் எல்லாருமே யோக்கியர்களாய் பிறந்து இருப் பர்! பிறகு நல்லது கெட்டது தெரியாமல் போயிருக்கும். அப்படித் தெரியாமல் போயிருந்தால் கலையாவது? இலக்கியமாவது? பிரபஞ்ச பரிமாணங்களே புரியாமல் போயிருக்கும்! வேத உபநிஷதமாவது? திருக்குறளாவது? கீதையாவது” 

அவள், அவனது தோளைப்பற்றி மீண்டும் மீண்டும் பல்லவி பாடி, அனுபல்லவியையும் அவளாகப் பாடச் செய்து சரணத்துக்காகக் கால்களிலேயே விழுந்து சரண டைந்து கெஞ்சுகிறாள். 

அவளது மென்மையான தோள்களைப் பற்றி எழுப் பிய ஞானசுந்தரம், “குறிஞ்சி! நான்தான் தவறு செய்து விட்டேன். போகலீலா பாடித் தனித்தனியே மோகம் கண்டு ஆனந்திப்போம் என்று எண்ணியது எப்படிச் சாத் தியம் என்பதைக் கணக்கிட மறந்து போனேன்! ஏற்கெ னவே நீ தபஸ்வினியாக இருக்கிறாயே… மேலும் உன்னை தபஸ்வினியாக்கக் கூடாது என்று போகலீலா ஆரம்பித் தேன். பாடி இருக்க வேண்டியது தபஸ்வினி ராகம்!” 

குறிஞ்சியின் கண்களில் விழிப்பு!

“அப்படி ஒரு ராகம் இருக்கிறதா!” 

ஞானி தம்பூரை எடுத்து மடியில் கிடத்த… 

“இது வேண்டாமே! இதற்குப் பதில் என்னை மடியில் கிடத்தி மீட்டுங்கள்… ஞானீ! ஞானீ!… போகலீலா தென் துருவம் என்றால்; தபஸ்வினி வட துருவமாகி விடக் கூடாது.” 

தம்பூரின் நாதம்… 

ஞானசுந்தரத்து இமைகள் மூடுகின்றன. அவனுக்கு மட்டும் அந்த விரகதாபமில்லையா? ஏனோ அன்றைய மரணயோகம் அவனை மறுக்கச் செய்து, ஏதேதோ வாதாடிப் பார்த்து முடியாமல் போகவே இப்போது அவனே தவசியாகிறான்…. 

ப ச ச ப… 

தம்பூர் நாதம் கூடத்தை நிரப்புகிறது…

அவன் மேல் சட்சமத்தில் நிற்கிறான்…

காமத்தின் அருமை தெரிகிறது… 

சூரியனாகவும் சத்திரனாகவும் காமத்தை ஜோதியாகப் பார்க்கும் கலைஞனின் எந்தப் படைப்பும் காப்பிய ஒளி பெறுகிறது! மறுக்க முடியாது. காப்பியங்களுக்கெல்லாம் சிறந்த காப்பியமான மன்மத காப்பியத்தை இலக்கணச் சுத்தமாகப் படித்தவனால் மட்டுமே மன்மதச் சாந்து மணக்கும் கலைஞனாக முடிகிறது. மன்மதனையே கொச்சைப் படுத்துபவன் கலைஞனல்லன்! 

ஒரு கம்பனைப் போல… இயல்!

ஒரு சுந்தரரைப் போல… இசை! 

ஒரு காளிதாசனைப் போல… நாடகம்! 

இங்கே ஞானசுந்தரத்து போகலீலா பெற்ற மெய்ம் மறப்பு. தபஸ்வினி பெறத் தொடங்குகிறது… வேறுபாடு களில்தாம் வாசனை வித்தியாசம்… 

குறிஞ்சியிடமிருந்து முன்பு விழுந்தனவே போகலீலா அவரோகண சுரங்கள்… அது பொய்மை; மாயை!… தயங்கித் தயங்கி ‘விழலாமா வேண்டாமா’ என்று விழத் தொடங்கின. 

இப்போது மெய்ம்மை… சாயை… 

தபஸ்வினி ராகத்து ஆரோகணமான சகமபதிச்ா… என்று ஞானசுந்தரத்து இனிய குரல் மேல்நோக்கிப் பர்ண சாலையை வேய, வேய… 

குறிஞ்சியின் போகலீலாவின் அவரோகணம் வேள்வித் தீயில் எரிபட்டு ச்-நி-த-ப-க-ரி-ச’ என்று ஒவ்வொரு சுர மாகப் பொறிபட்டுச் சாம்பலாகி உதிர்கின்றன… 

*சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களின் பண்களின் பரிணாங்கள் வியக்கத்தக்கவை. 

ஓ! இப்படி ஒரு ராகமா? தபஸ்வினி ராகமா? பிரதி மத்திம ராகம்… இராமப்பிரியா ஜன்யம் என்பது புரிகிறது…

இது புரிவதற்குள் அவள் இப்போது தன்னையே, தனது நிலையையே மெல்ல மெல்லப் புரிந்து வருகிறாள்… வியர்த்து கொட்டும் விரகதாபத்தின் விறகெரிப்பு அடங்குகிறது…

ஓடுகிறாள்… ஓடுகிறாள் எங்கே ஓடுகிறாள்? ஞானசுந்தரம்தான் கண்களை மூடிக்கொண்டு இசைக்கிறானே!

குறிஞ்சியின் ஞாபகமே இப்போதைக்கு வேண்டாம் வான்று இமைகளைத் திறவாமல் இசைக்கிறானே…

ஓடிச்சென்ற குறிஞ்சி, கிணற்றடிக்குச் சென்று, வாளி யால் நீர் மொண்டு தலையில் கொட்டிக் கொள்கிறாள். அதே ஈரத்துடன் திரும்பி வந்து ஒரு தபஸ்வினியைப் போல ஞானசுந்தரத்துக்கு முன்னே அமருகிறாள். தரை முழுவதும் ஈரம்… ஈரம்…

உடன் அவளும் தவசியாகிப் பாட ஆசைப்படு கிறாள்… ஆனால் அதன் ஆரோகணம் அவரோகணம்? இலட்சணம்? – அவளுக்குத் தெரியாதே!

தரையில் ஈரம் பரவித் தன்னை நனைத்துச் சில்லிடுகிற போதுதான், கண்களைத் திறக்கிறான் ஞானசுந்தரம்.

“குறிஞ்சி!”

நிஜமாகவே தபஸ்வினியைப் பார்க்கிறான்…

“நான் தபஸ்வினியாய் விட்டேன்” என்கிறாள் குறிஞ்சி. அவளது இமைகள் அரையும் குறையுமாகத் திறந்தும் மூடியும்…

ஞானி ஞானமாய்ச் சிரிக்கிறான்…

“ஞானி! அடுத்து மாயவரம் கச்சேரியில் நாம் பாடப் போகிற முதல் ராகம் தபஸ்வினி!”

“ஐய்யயோ! ரசிகர்கள் சாமியாராய் விட்டால், பிறகு சுச்சேரியை ரசிப்பதை விட்டு வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று அவர்கள் பாடத் தொடங்கி விடுவார்கள்…”

குறிஞ்சி கலகலவென்று நகைக்கிறாள்…

அம்மம்மா… குறிஞ்சி தன்னிலைக்கு வந்துவிட்டாள்.

“ஞானி! தபஸ்வினியின் ஆரோகண அவரோகணம்? இராமப்பிரிய ஜன்யம் என்பது புரிகிறது…”

சகமபநிச

சநிதபமகச…

ஞானசுந்தரத்திடம் பயில வேண்டியவை இன்னும் எவ்வளவொ? எவ்வளவோ ?…

குறிஞ்சியின் கரங்கள் கூப்புகின்றன.

‘எந்தரோ மகானுபாவுலு….’

தியாக பிரும்மம் பாடினார்.

மகான்கள் எங்கோ இருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் எனது காதலர்; அவரை நான் வணங்குகிறேன்!
‘அந்தரிக்கி வந்தனமு…’

இராகம்-15 

நீலி

குறிஞ்சியின் கோபுரமனைய புகழும் பொற்கலச மனைய சன்மானங்களும், தஞ்சை சமஸ்தானத்தில் மாதம் ஐம்பது சக்கரமே சம்பளம் வாங்கும் சங்கீத சாம்ராட் களின் நெற்றிகளில் திருகுவலிகளை நிமிட்டத் தொடங்கி விட்டன. 

ஒழிப்பது எப்படி? ஒழித்துக் கட்டுவது எப்படி? இந்தக் கொடுவாளைப் போன்ற கேள்விக்குறிகள் ஈரபோஜியின் அரண்மனையாம் ஐந்தங்கண மாடக்கூடத்தில் இசை மகாலில் குறிஞ்சி பாடிய ராஜாளி ராட்சஸம் வெளிப் பட்டதும் சாணை பிடிப்பவனைத் தேடி மேலும் கூர் தீட்டத் தொடங்கிவிட்டன. 

ஒரு பிரதான மகாவித்துவான் மாளிகையில் அன்றிரவு சதியாலோசனை. 

குறிஞ்சியின் ரத்தத்தை உறிஞ்சியாக வேண்டும். இவளால் தங்கள் மரியாதைகள் மந்தப்படுகின்றன; தொழில் தொய்வு… 

இரண்டொருவர் எதிர்த்தாலும் அனைவரும் ஒருமுக முடிவுக்கு வரவே, கொலை செய்யும் கூலிப்பட்டாளத் துக்கு வலைபின்னவும் தொடங்கினர். 

“சங்கீதத்தைக் கொலை செய்வது சிசுகத்திப் பாவம்!” 

“சங்கீதத்தை மரபுக்கு மாறாகப் பாடுபவளைக் கொலை செய்கிறோம்! தமிழில்தான் பாட வேண்டும் என்கிற அடத்தைக் கொலை செய்கிறோம்! ஒரு புலைச்சி பாடுவதாவது?” 

வெகுநேர அமைதிக்குப் பிறகு தீர்மானம் முழுமனதாக மீசையை முறுக்கியது. 

குறிஞ்சி யார்? அவளது குன்றனைய கும்பாபிஷேகக் கீர்த்தி என்ன? சென்னை கவர்னர் உத்தரவு என்ன? ராஜகாந்தி எனும் ராட்சஸ பயங்கரம் என்ன? 

இவையாவையும் சமாளிக்க முடியும் என்கிற நெஞ் சுரம் இவர்களிடை இருந்ததென்றால் அரண்மனையில் அத்துணை செல்வாக்கு அவர்களுக்கிருந்தது. 

மன்னர் சரபோஜி அனுப்பிய பொற்குவியலைத் திருப்பியனுப்பிய தியாகபிரும்மமே குறிஞ்சியின் இசை யைக் கேட்டு மகிழ்கிற பாக்கியமில்லையே என்று வருந்தி னாராமே! இப்பேர்ப்பட்ட நாரத வீணையை, நயந்தெரி கீதத்தை. தேரிய மடந்தையின் வாரம் பாடலை வஞ்சக மாய் வீழ்த்த சதி நடக்கலாமா? நடந்து விட்டது. புலமைக் காய்ச்சல்! தொழில் பாதிப்பு! 


மயிலாடுதுறைக்கு அண்மையில் இருக்கும் திருக் கடவூர் அபிராமி சந்நிதியில் கச்சேரி. 

எட்டு வீரத்தலங்களில் ஒன்றல்லவா திருக்கடவூர் அட்டானம்! 

மேடையை அலங்கரிப்பதில் மூழ்கினான் ஜான். மாலை இறங்க, இறங்க மயிலாடுதுறைச் சுற்றுப்புரத்து மக்களனைவருமே கூ தொடங்கினார்கள். எங்கு நோக் கினும் தீப்பந்தங்கள். 

திருச்சியைச் சார்ந்த உடையார்பாளைய ஜமீந்தார், ஒரு பிரார்த்தனையை முன்னிட்டு காலை அபிஷேகங்களும், ஆராதனைகளும்.. 

திருவிழா போலத்தான். ஆராதனையின் போது குறிஞ்சியை உள்ளே அனுமதிக்கச் சற்றுத் தயங்கினாலும், அருமைமிகு தமிழ் மடமாம் தருமமிகு தருமபுர ஆதீனத்துப் பயத்தால் தீண்டாமை நாக்குகள், அக்கினிப் பிரவேசம் செய்து கொண்டன. அந்தக் காலம் அப்படியானது. 

திருக்கடவூர் தமிழ்ப் பேராசிரியர் சிங்காரவேலனார் வீட்டில்தான் குறிஞ்சிக் குழுவினர் தங்கியிருந்தனர். ஜமீந்தார், அவருக்கென்றிருந்த இடத்தில் தங்கிக் கொண்டார். 

குறிஞ்சி தங்கிய வீட்டு வாசற்படியில் திடுமென்று பெருத்த ஆரவாரம். 

சிவகங்கையைச் சேர்ந்த ஜமீந்தார் வல்லப உடையத் தேவரின் மகன் இளைய வல்லபத் தேவ உடையார் குறிஞ்சியின் இசையரங்கு பற்றிக் கேள்விப்பட்டு வருகை புரிந்து இருந்ததுதான். தனிமையில் வந்திருந்தாலும் பரவாயில்லை. உடன் ஆற்காட்டு நவாப் ‘ஆஜம்ஜாவும் வந்திருந்தான். 

குறிஞ்சியைக் காணவேண்டும் என்றும், சிறிது நேரம் பேசவேண்டும் என்றும் தனது திவான்களில் ஒருவரை வீட்டுக்குத் தூது அனுப்பி வைத்திருந்தான் சிவகங்கை இளவரசன். 

ஞானசுந்தரம்தான் வழிமறித்து விசாரிக்கலானான்: ‘யார் நீங்கள்? என்ன விஷயம்?” 

சிவகங்கை ஜமீந்தார் வந்திருக்கிறார். குறிஞ்சியைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும்.” 

திவானின் குரல் திமிராகவே இருந்தது. 

ஞானசுந்தரம் சொன்னான்: “இங்கே நாங்கள் யாரையும் பார்க்கவோ, பேசவோ வரவில்லை. பாட வந்திருக்கி நோம் பாட்டைக் கேட்க வந்திருந்தால் அரங்கம் நோக்கிச் செல்லலாம்.” 

“யாரடா நீ? திமிராகப் பதில் சொல்வது?” 

*’Historical Inscriptions of South India’ By Robert Swall. 

“நீ தேடி வந்தவளுடைய இணை; துணை; கணை! போதுமாடா?” 

“நான் திவான்! என்னையா ‘டா’ போட்டுப் பேசு கிறாய்? 

“மரியாதை என்பது எதிர்பார்ப்பது மட்டுமல்ல; கொடுப்பதும். நீ கொடுக்க மறந்தாய்! நான் மறுத்து விட்டேன்!” 

“வந்திருப்பவர் சிவகங்கை இளவரசர்!” 

“தஞ்சை இளவரசரானாலும் கவலைப்படப் போவ தில்லை. கேவலம் சிவகங்கை! திவான்! சிவகங்கையின் சிறப்பு சுதந்திர முழக்கம் செய்த வீராங்கனை வேலு நாச்சியாருடனும், அவருக்குப் பின் மானங் காத்த மறவர் குல மாணிக்கங்களான மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினார்களே, அவர்களுடனும் முடிந்து விட்ட மரியாதைக்குரிய கதை அது! மருதுவின் பிள்ளையை வெள்ளைக் கும்பினியின் கப்பலில் கடத்திச் சென்றானே, அந்தக் கதை அந்தப் பிள்ளையுடன் கப்பலேறிப் போன கதை! நீ புதிய கதைக்குத் தூது வந்ததுமல்லாமல், புரட்டிப் பார்க்க வேறு ஆசைப்பட்டிருக்கிறாய்! போகலாம்!” 

செவிட்டில் அறைந்ததுபோலப் பதில் சொன்ன ஞானசுந்தரம், சட்டை செய்யாமல் உள்ளே சென்று விட்டான். 

ரத்தநாளங்கள் சித்தத்தைத் தடுமாறச் செய்ய ராட்சஸ வெறியோடு வெளியேறினான் புதிய திவான் தீர்த்தகிரி 

குறிஞ்சி இச்செய்தியறிந்து பெரிதுபடுத்திக் கொள்ள வில்லை. ஜமீன்களின் ஜாலங்கள் பற்றி அவள் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறாள். அக்காலம் பெண் களில் பாடுபவர், ஆடுபவர் என்றால் பரத்தையர் என்று எண்ணிய காலம்! 

சற்றைக்கெல்லாம் மயூரி வாத்தியம் வாசிப்பவன் அறை யினுள் ஓடிவந்தான். 

“அம்மா யாரோ ரொம்பவும் வயதான ஞானப்பழமாக இருக்கிறார். பெயர் அபிராமிபட்டர் என்றார். பார்க்க வரலாமா என்று அனுமதி கேட்கிறார்.” 

சொல்லி முடிக்குமுன் எழுந்து ஒடோடி வெளியே வரு கிறாள் குறிஞ்சி, 

“சுவாமி! நீங்கள் உள்ளே வர அனுமதி கேட்பதா? அபிராமியின் அவதாரமல்லவா தாங்கள்!” 

காலில் விழுந்து கண்ணீரால் கழுவி எழுகிறபோது, அவளது கூந்தலிலிருந்து ஒரு மலர் இயல்பாகவே பெயர்ந்து பட்டர் காலில் விழுகிறது. 

இந்தக் காட்சியைக் கண்ட பட்டர் கண்களில் நீர்த் திரை… ஏன்? ஏன்? 

“மகளே! தமிழிசையைப் பரப்பும் உனது பெருமையைக் கேள்விப்பட்டு மகிழ்வேன்! உன்னைப் பார்ப்பேனா?’ உனது இசையைக் கேட்பேனா என ஏங்குவேன்! ஒரு நாள் நானே அந்த அபிராமவல்லியைக் கேட்டேன். இந்த உயர்மகளைப் பார்க்க இன்று அருள் பாலித்து இருக் கிறாள்!” 

“ஐயோ! சுவாமி! நான் உயர் குலமகளல்ல. புலைச்சி! புலைச்சி சுவாமி. புலைச்சி!” 

“அறிவேன்!” பட்டர் பகபகவென்று சிரிக்கிறார். “அப்படிப் பார்த்தால் அந்த அபிராமியும் ஒரு புலைச்சி தான்! குறிஞ்சி! புலையன் யார்? புரோகிதன் யார்? நான் அத்வைதி! தில்லைவெட்டியான், பெற்றான் சாம்பன், நந்தன் போன்ற சைவப்புலையர்களுக்கும், திருப்பாணாழ்வார் என்கிற வைணவப் புலையருக்கும் மிஞ்சியவனல்லவே நான்? இப்போது பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள் மகளே! சோட கர்மங்களையும், ஷட்கர்மங்களையும் அனுஷ்டிப்பவனே பிரம்மத்துக்கு உரியவன்! நீயும் அனுஷ்டிக்கலாம்; நானும் அனுஷ்டிக் கலாம். ஆனால் இப்போது யாருமே அனுஷ்டிப் பதில்லை!” 

தொலைவில் கை கட்டியவாறு நின்றிருந்த ஞான சுந்தரத்தை நோக்குகிறார் அபிராமிபட்டர், “யார் இந்தப் பிள்ளை 

“நாங்களிருவரும் தீட்சிதர் பெருமானிடம் இசை பயின்ற…” 

“ஓ! அந்தப் பிள்ளையா? ஞானசுந்தரம்! புரட்சிப் பிராமணனா?” 

ஞானசுந்தரம் மட்டுமல்லாமல், குறிஞ்சியும் தலை குனிந்து கொண்டனர். 

“குறிஞ்சி! உன்னைப் பற்றி நீ எப்போதுமே தாழ்வாக நினைக்காதே! விழிக்கே வேதம் சொன்ன அபிராமவல்லி யின் விழிகளை உனது முகத்தில் பார்க்கிறேன்! காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் பெருமானைக் கண்ட விழிகளல்லவா இந்த விழிகள்! பத்திரகாளி பிரத்தியங்கிரா தேவியின் அதர்வண வேதம் கண்ட விழிகளல்லவா உன் விழிகள்?” 

குலை நடுங்கிப் போனாள் குறிஞ்சி. 

ஆ! யாருக்குமே தெரியாத ரகசியம்! ஞானசுந்தரம் மலைத்துப் போனான். 

மகா சித்து புருஷரல்லவா? அபிராமி அந்தாதி பாடி, அமாவாசையைப் பௌர்ணமியாக்கி “சரபோஜி மன்ன ருக்குக் காட்டிய இந்தத் தமிழ்மகான் சித்தியில் தெரியாதது எது? 

“குறிஞ்சி! உன் விழிக்கே அருளுண்டு. நான் மேடைக்குச் செல்கிறேனம்மா!” 

“நானும் உங்களுடன் வருகிறேன் சுவாமி!” 

“நீ ஏதோ ஒரு புது ராகம் பாடுகிறாயாமே… குற்றாலக் குறிஞ்சி… அதனைப் பாடுவாயல்லவா?” 

“யாருக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காகப் பாடு வேன் சுவாமி!” 

முதலாம் சரபோஜி என்பாருண்டு. ஆய்ந்து பார்த்ததில் தெளிவு பிறக்கவில்லை. இது எனது ஆய்வின் முடிவு. 

“எனக்காகப் பாட வேண்டாம். அபிராமி அம்மை கேட்கிறாள்; பாடு!” 

அனைவரும் அரங்கம் நோக்கி நடந்தனர். 

கூட்டத்தில் ஒரே கரகோஷம். இதில நிரம்பவும் விசித் திரமான வேடிக்கை என்னவென்றால், தஞ்சையிலிருந்து இளவரசன் சிவாஜி வருகைதந்து மிக்கவும் அமைதியாக அமர்ந்திருந்ததுதான். 

கேள்விப்பட்ட குறிஞ்சி, மெய்விதிர்த்துப் போனாள். 

சொன்னது சொன்னபடி வந்தது ஒருபுறமிருக்கட் டும்; சிவகங்கை போலச் செருக்கில்லாமல், அக்னியால் வரிக்கப் பட்ட சிவவீரியத்தைச் சரவணத்தில் வைத்த கங்கைபோல வந்தமர்ந்து இருக்கிறாரே! வத்திருப்பதாக ஒரு செய்தியும் வரவில்லையே? 

இருபுறமும் போடப்பட்ட நாற்காலிகளில் ஒருபுறம் அரச குடும்பத்தினருடன் உடையார்பாளைய ஜமீந்தாரும் அமர்ந்திருந்தார். 

குறிஞ்சி எவர் குறித்தும் கவலை கொள்ளாது மேடையில் அமருகிறாள். 

தஞ்சை இளவரசன் சிவாஜிக்கு மட்டும் சின்ன வருத்தம். ‘எப்போது வந்தீர்கள்’ என்று விசாரித்து இருக் கலாமே! அவ்வாறு விசாரித்தால் சிவகங்கையான் என்ன நினைப்பான்? இது சிவாஜிக்குத் தெரியாதே! 

அபிராமவல்லியைத் தியானிக்கிறார்கள்! குறிஞ்சியும், ஞானசுந்தரமும். 

தம்பூர், தீட்சிதரைப் போலத் தீட்சண்யமாய் ஒலிக்கிறது. குறிஞ்சி ஞாளசுந்தரத்தைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்கிறாள். ஆரம்பிக்கிறேன் என்கிற சமிக்ஞை அது… 

‘ஓம்’ என்று அவளது குயில் குரல், தேனையருந்தி தாக சாந்தி செய்துகொண்டது போலத் தமிழாய் இனிக்கிறது. எடுத்த எடுப்பில், சுருதியில் நின்றே பேசினாள் குறிஞ்சி: 

“இங்கே நான் அடைகிற பெருமகிழ்ச்சி, அபிராம வல்லிக்கே வேதம் சொன்ன அபிராமிபட்டர் என்கிற மகான் வந்திருப்பது! ரசிர்கள் எனக்கு வேலியாக வந்திருக்கலாம்; ஆனால் சிலர் நீலியாக வந்திருக்கிறார். கள்! இது நீலியாகிய, திரிசூலியாகிய அபிராமவல்லி குடி யிருக்கிற புண்ணிய பூமி! இங்கே நீலிவேஷமிட்டும், நீலிக் கண்ணீர் வடித்தும் சிலர் வந்திருப்பதால், அவர்களுக்கு மாகச் சேர்த்து, பட்டர் பாடிய பாடலையே நீலி ராகத் தில் பாடுகிறேன்! புரிந்தால் புரியட்டும். புரியாவிட்டால் பாவங்களைச் சுமக்கட்டும் !” 

நீலி ராகம்… 

அப்படி ஒரு ராகமா? 

எதிர்வரிசையில் இசை ஞானமுடைய சிலர் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். 

சில வெற்றிலைப் பெட்டிகள் திறந்தவை திறந்தபடி… நீலி ராகம் என்ன என்பதை நிதரிசனமாகப் புரிய தொடக்கமே சுரமாக… 

“சகமதநிசா…” 

மேல் சட்சமத்தில் நிற்கிறாள் குறிஞ்சி. 

சுருதியும் குரலும் சுத்தமாக இழைகின்றன… 

ஏதோ அபிராமவல்லி சோதனை நிகழ்த்துகிறாள் என்பது மட்டும் அபிராமிபட்டருக்குச் சுத்தமாகப் புரிகிறது. 

“ச்நிதமகசா…” 

ஆதார சுருதியில் குரல் ஆதாரமாக நிற்கிறது… 

ஓ! ஐம்பத்து எட்டாவது மேளகர்த்தாவான ஏமவதி ராகக் குழந்தையோ இது? 

ஏமவதியும் அந்த அபிராமவல்லிதானே? நீலியாகி உருகுகிறாளா? உக்கிரம் கொள்கிறாளா?

என்ன பாடினாள் குறிஞ்சி?’

“விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன…

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க…

‘பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்…

‘குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோ டென்ன கூட்டினியே !

குறிஞ்சி பட்டர் இயற்றிய பாடலையும் தொட்டாள்…

அத்துடன், வழிபட நெஞ்சிருக்க – அபிரமாவல்லியை வழிபடுவதை விட்டு, என்னை நோக்கி வந்திருக்கிறீர்களே, அடப்பாவிகளே… தஞ்சை இளவரசே! சிவகங்கை இளைய ஜமீனே! ஆற்காட்டு நவாபே !…

பழியில் சுழன்று பாவங்களைச் சுமந்து பாழ் நரகமான குழிக்கே நீங்கள் அழுந்திவிடப் போகிறீர்கள்! கயவர் களாகிய உங்களுடன் நான் கூடுவனோ?

கூட்டினியே என்று பட்டர் பாடினார் ! அடி, அபிராம வல்லி! இவர்களுடன் என்னையும் கூட்டினியே!” என்ற கருத்துப்படப் பாடுவது சிவாஜிக்குப் புரியவில்லையா? சிவகங்கை ஜமீனுக்குப் புரியவில்லையா? ஆற்காட்டு நவாப்புக்கு திவான் திருத்தமாக மொழி பெயர்த்து விளக்கம் கூறுகிறான்! நவாப்பின் கண்கள் கவாப்பாகி எண்ணெயில் பொரிகின்றன.

‘பழிக்கே சுழன்று பாழ் நரகம்’ எனுமிடத்திலும், ‘குழிக்கே அழுந்தும் கயவர்’ எனுமிடத்திலும் அழுத்தம் திருத்தமாகச் சங்கதிகளை வைத்து அசத்தி விட்டாள். ஒரே கரவொலி!

“பலே, மகளே, பலே!” என்று பாராட்டுகிறார் பட்டா, சிவகங்கையின் கண்கள் சிவக்கின்றன.

ஆனால் சிவாஜி சினந்தானில்லை; அவனது சிந்தை முழுவதும் குறிஞ்சி நிறைந்தாள்! அந்த அபிராமவல்லியே வந்து தனக்குக் காதல் வேதம் சொன்னது மாதிரி… இல்லற புத்தி புகட்டியது மாதிரி… ‘மணந்தால் இவளை யல்லவோ நீ மணக்க வேண்டும்! என்று மனத்தில் போதிக்கிற மாதிரி… ஓ… விதிவசமோ?

சிவகங்கை இளைய ஜமீன் உட்கார்ந்த இடத்திலிருந்து கர்ஜிக்கிறான்:

“குற்றாலக் குறிஞ்சி பாடு! இந்த உடையார்பாளைய ஜமீன் என்ன நூறு சக்கரம் இதற்குத் தனியாகத் தருவது? நான் இருநூறு சக்கரம் தருகிறேன்!”

சிவாஜியின் கண்கள் அப்போதுதான் சினந்து சிவகங்கையை நோக்குகின்றன.

அந்த நேரத்தில்…

அழகே உருவான அம்பிகையே போன்ற ஒரு சுமங்கலிப் பெண் எழுந்து நின்று, “இப்போது அந்த ராகத்துக்கு அவசியமில்லை!” என்றாள்.

யாரிவள்?

ஆசைப்பட்டு எதிர்பார்த்த அபிராமிபட்டரே அலமரல் கண்டார்.

அபிராமவல்லியின் சிலைமுகமும்இந்தப் பெண் முகமும் அப்படியே இருக்கக் கண்டு அயர்ந்து போனார் அபிராமி பட்டர்.

பக்தியால் யானுனைப் பலகாலும்’ என்று அருணகிரி பாடியதுபோல, பக்தியால் பலகாலும் பார்த்துப் பார்த்து..

ஓ… இது பிரமையாகவும் இருக்கலாமோ!

– தொடரும்…

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *