(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 7-9 | இராகம் 10-12 | இராகம் 13-15
இராகம்-10
சூத்திரதாரி
‘பாஜ்’ எனும் அந்த அபூர்வ ராஜாளிப் பறவை இதயத்தே சிறகடிக்கிறது.
எண்ணித் துணிக கருமம்…
மீண்டும் ஒருமுறை வேண்டுதல் விடுக்கிறார் சரபோஜி மன்னர்.
“மிஸ்டர் சாம்சன்! மறுபடியும் மறுபரிசீலனை செய் யுங்கள்; சிந்தித்துப் பாருங்கள். நான் தஞ்சையைத் தான் கும்பினிபரிடம் கொடுத்துக் கையொப்பமிட்டுக் கும்பிட் டேனேயொழிய, அதிகாரங்களை அர்ப்பணித்து விட வில்லை; மக்களை உங்கள் அடிமைகள் என்று எழுதித் தரவில்லை; அது முடியவும் முடியாது. ஒரு கொள்ளைக் காரன் இந்த இசைப்பொழிலுக்கு ரசிகனானான் என்ப தற்காக, பொழிலை அழிக்க எண்ணுவது பொறுத்துக் கொள்ள முடியாத வேதனை! இவளை நீங்கள் வஞ்சிக்க முயன்றால் மக்கள் கொதித்து எழுவர்! தஞ்சை மண் மட்டுமல்ல; தமிழக மண்ணே வெடிக்கும்!”
மன்னர் சரபோஜி ஆங்கிலத்தில் மாப்புலமை பெற்ற வர். சுவாஷ் எனும் அறிஞர் பெருமாளாகிய பாதிரியா ரால் வளர்க்கப்பட்டு மேதைமையின் முகவரியை இலக் கணப் பிசிறின்றித் தெரிந்து கொண்டவர்.
எப்போது குறிஞ்சியின் பேரழகை சாம்சன் கண்கள் கண்டனவோ, அப்போதே அந்தக் கண்கள், காதுகளை அறுத்துப் போட்டுவிட்டனவே! சரபோஜியின் சரங் கோத்த சொற்கள் காற்றில் கலந்து போயின.
அவன் ஏளனமாகச் சிரிக்கிறான்.
“எனக்கு ராஜகாந்தி தேவை !”
அத்துடன் குறிஞ்சியும் தேவை என்பதுபோல அவனது கண்கள் மீன்கொத்திப் பறவையாக மாறி, குறிஞ்சியின் கயல்விழிகளை நோக்குகின்றன.
இப்போது குறிஞ்சி ஏளனமாகக் சிரிக்கிறாள்.
குறிஞ்சியைப் பெண்டாளவே இந்தச் சண்டாளச் சூத்திரதாரியான சாம்சன் நாடகமாடுகிறான் என்பது சரபோஜி மன்னருக்குப் புரிகிறது. நெஞ்சு குமுறுகிறது. அவருக்கும் அந்தக் குறிஞ்சி மலர் மீது ஒருதலைக் காமம், ரதித்தவம் செய்து வருகிறதே! முன்பு இசையை நேசித் தார். இப்போது அரம்பையே பணிப்பெண்ணாகத் துடிக் கும் அவளது அழகை வேறு கண்டுவிட்ட பிறகு?
ஆனால் சூத்திரதாரியாக நாடகமாட அவர் விரும்ப வில்லை. கோத்திரம் கேட்டு, குலம் கேட்டு, பாத்திரமறிந்து பிச்சை கேட்கவே நினைத்தார். அது ஒரு நேர்மையுள்ள நெஞ்சுக்குரிய நினைவு.
மூடியிருந்த மோகமொட்டு, ரகசியமாய் இதழ் விரித்து மன்மதமாய் மணத்தது; மகரந்தமாய் இனித்தது.
ஐம்பது வயது எங்கே?
பதினெட்டு வயது எங்கே?
அசுர காமம் அழகைப் பார்ப்பதில்லை; காப்பியக் காமம் வயதைப் பார்ப்பதில்லை.
மன்னர் பரம்பரைக்கு வயதேது? மலர்களின் நந்தவனத் தில்தான் பேதம் ஏது?
குறிஞ்சியின் நிலாப் பேரழகு எவர் நெஞ்சைத்தான் நெருஞ்சி முள்ளாய்க் குத்தவில்லை?
இந்தச் சூத்திரதாரி நாடகத்தைச் சூட்சமத்தால் அறிந்து தானே ராஜகாந்தி, ரகசியமாக சரபோஜிக்கு ஓலை யனுப்பியது? அது சரபோஜிக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா? இல்லையென்றால் விலாங்குடிப் பாதை யிலேயே இந்தக் கும்பினியரின் விலா எலும்புகளை முறித்துப் போட எந்நேரமாகும்?
ஞானசுந்தரம் கண்ணீர் வடித்தவண்ணம் ஒருபக்கமாக நின்று விசும்பி விசும்பி அழுகிறான். முகாரி ராகத்தைக் கூடப் பாடுவோர் பாடினால் இனிமையாகப் பாடிவிட லாம். அவனது அந்த சோக ராகத்தை எப்படிப் பாடி னாலும் சுரங்கள் கண்ணீர்த் துளிகளாய்த்தான் உதிரும்.
இன்னொருபுறமாய்க் கூடியிருந்த மகா வித்துவான் களுக்கெல்லாம் மகிழ்ச்சி. தங்கள் தொழிலையே பாதிக்கச் செய்ய வந்த எழிலரசி – இசைக் கலையரசி – தமிழ்ப் பொழி லரசியாயிற்றே குறிஞ்சி! அவர்கள் இராகமாலிகைகளாக மாறியதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.
இத்தனை கெடுபிடிகளிலும் குறிஞ்சி கொஞ்சமும் கோணாது குறிஞ்சிப்பூவாகவே சிரிக்கிறாளே! எப்படியும் ராஜகாந்தி காப்பான் என்கிற நம்பிக்கையோ ? ஓ…
ஆனால், தங்கள் குருகுலத்தைச் சேர்ந்தவளாயிற்றே குறிஞ்சி என்பதால் தஞ்சை பொன்னையாபிள்ளையும் சிவானந்தம் பிள்ளையும் எவ்வளவோ எடுத்துச் சொல்லு கிறார்கள். பயன்?
இந்த நெருப்பனைய கசப்பான நிகழ்ச்சியைக் கேள்விப் பட்டு ஓடோடி வருகிறார் மகாவித்துவான் ஆனைய்யா வும் அவரது சகோதரர்களும்.
வயதான ஞானப்பழமான ஆனைய்யாவின் நாவு வாதாடுகிறது. தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வாதாடுகிறது.
“மிஸ்டர் சாம்ஸன்! உங்கள் ஏசுபிரான் கற்றுத் தந்த இலக்கணம் இதுதானா? அந்தப் புனிதச் சிலுவையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்… இவள் ஒரு கலைப் பொக்கிஷம்! என் கண்கண்ட கருவூலம்! எங்கள் கம்பன் கண்ட சீதை ! திருத்தக்க தேவர் கண்ட காந்தருவதத்தை! இளங்கோ கண்ட கண்ணகி! இவள் பாட வேண்டிய ‘குற்றாலக் குறிஞ்சி’ ராகத்தைப் பாட ஆரம்பிப்பாளே யானால், நீயே எரிந்து சாம்பலாவாய்!”
“எங்கே எரிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்!”
ஆனைய்யா கொஞ்சமும் தயங்காமல் இப்போது குறிஞ்சியிடம் தன்யாசிக்கிறார்; தன்னையே யாசிக்கிறார்; “குறிஞ்சி! என் மகளே! பாடு! எனக்காகப் பாடி சங்கீதத் தின் சாம்ராஜ்யம் என்ன என்பதைக் காட்டு. இந்த மேற்கு சங்கீதக்காரனுக்கு மட்டுமல்லாது உன்னால் மேனி எரிச் சலுற்றுப் பொறாமைப்படுபவர்கள் தலைகுனியப் பாடு! பாடு மகளே! பாடு!
குறிஞ்சியின் நெஞ்சில் பிரத்தியங்கிரா தேவி பத்திரகாளி யாய்க் குமுறிக் கொண்டிருந்தாலும், உதடுகளில் மட்டும் காஞ்சி மாமுனிவரை அமர்த்தி அமைதியாகச் சிரித்துச் சொல்லுகிறாள்:
“இசையின் ஞானப்பழமான நீங்கள் வேண்டி நான் பாடாமல் இருப்பது நல்லதில்லையானாலும், இந்த நாடக மாடிக்காக நான் பாடுவதா? இவன் ஒரு சூத்திரதாரி! நெஞ்சில் எதையோ வைத்துக்கொண்டு இந்த நாடகமாடு கிறான்! நான் சாமா ராகத்தை மட்டும் எனது ஆத்ம நிறைவுக்காகப் பாடுவதில்லை என்று சத்தியம் செய்திருக் கிறேன். ஆனால், சில ராகங்களை வெறுத்து ஒதுக்கித் தள்ளியிருக்கிறேன். அந்த ராகங்களில் ஒன்று சூத்திர தாரி! இவன் சரசமாடத் துடிக்கும் சரசாங்கி ராகத்தில் பிறந்த இந்த ராகத்தைப் பாடியே இவனைச் சூத்திரத்தில் வளைப்பேன்! பிறகு, எனது அருமை ரசிகன் ராஜகாந்தி யின் வீரதீரபராக்கிரமச் செயலுக்கு மரியாதையில்லா மல் போய்விடும்! இவ்வாறிருக்க, இந்தக் குரங்குக்கு என் குற்றாலக் குறிஞ்சி ராகமாலையை அணிவிப்பதா?”
*சரசாங்கியில் பிறந்த ராகம்; ஆ:சரிமபதச்: அ: ச்தபமரிச.
மொழிபெயர்ப்பைக் கேட்ட சாம்சன், “முட்டாள்! யாரையடி குரங்கென்று சொன்னாய்?” என்று ஆங்கிலத்தில் பாய்ந்த சாம்சன் கரத்தைப் பற்றிய ஆனைய்யா, சாபமிடுகிறார்:
“ஏ, சாம்சன்! அவளைத் தொடதே! அந்த மாவீர சாம்சன் தனது பலத்தால் ஒரு சாம்ராஜ்யத்தை அழித்தான்! அவன் பெயர் கொண்ட நீ, காம பலவீனத்தால் உன்னையே அழித்துக் கொள்ளப் போகிறாய்! இது நான் வணங்கும் அகஸ்தீஸ்வரன் மீது சத்தியம்! மங்களாம்பிக்கை யின் மீது சத்தியம்!”
ஆனைய்யாவின் விழிகளில் அக்கினிப் பிரளயம் தெரிகிறது.
ராஜகாந்தியை குறிஞ்சி எதிர்பார்க்கிறாளா? ஓ… எவ் வளவு பெரிய நம்பிக்கை.
சரபோஜி இப்போது சஞ்சலத்தின் கரங்களில் சரண டைந்து போனார்.
ராஜகாந்தியின் ஓலை ஞாபகத்திற்கு வருகிறது. ஆ! அவனும் ஒரு சூத்திரதாரிதான்! மகன் சிவாஜியின் தலையா? குறிஞ்சியின் கற்பா?
ஓ… குறிஞ்சி தேவை! குறிஞ்சி தேவை…
சரபோஜி சண்டமாருத போஜியாக மாறி விட்டார். வருவது வரட்டும் என்று சிந்தித்ததைச் செயல்படுத்த முனைந்து விட்டார்.
“மிஸ்டர் சாம்சன்! கொஞ்சம் பொறுங்கள்! இதோ ராஜகாந்தியை அழைத்து வருகிறேன்!”
சரபோஜி வேகமாக அரண்மனையுள் நுழைகிறார். அவரால் வேறு எப்படிக் குறிஞ்சியைக் காக்க முடியும்? சென்னை கவர்னருக்குச் செய்தி எட்டியதோ இல்லையோ? திருச்சியிலிருக்கும் கலெக்டர் நெல்சனும், இந்தச் சூத்திர தாரியான சாம்சனுக்குக் காமம் பற்றியதில் துணை கலெக் டராகி விட்டான். வேறு வழி?
அரண்மனையுள் புயலைப் போல் நுழைந்த சரபோஜி மன்னரைக் கண்டு, அனைவருமே ஆச்சரியத்துடன் கூடிய அதிர்ச்சிக்கு ஆளாயினர்.
என்ன!ராஜகாந்தி அரண்மனையுள்தான் இருக்கிறானா?
குறிஞ்சியும் இப்போது கொஞ்சம் குழம்பிப் போனாள். தன் பொருட்டு ராஜகாந்தி சரணடையப் போகிறானா?
அரண்மனையுள் சென்ற ஈரபோஜி மன்னர், தமது பாசத்துக்குரிய ‘பாஜ்’ எனும் பயங்கர, அபூர்வ ராஜாளிப் பறவையைக் கூண்டிலிருந்து விடுவித்துக் கையிலேந்திக் கொள்கிறார். முத்தமிடுகிறார். அதன் பாஷையில் ஏதோ சமிக்ஞையால் சொல்லுகிறார். அஃறிணைகளைப் பற்றி ஆய்ந்து, ஓலைச் சுவடிகளாய்க் குவித்த ஒப்பற்ற கலை போஜியாயிற்றே சரபோஜி!
அந்த ராஜாளிப் பறவையுடன் ஜெயவாசலுக்கு வந்த சரபோஜியை அனைவருமே ஆச்சரியமுடன் நோக்குகிறார்கள்.
ஒரு சூறாவளியைப் போல் சாம்சனை நெருங்கிய சரபோஜி, “இந்தா மேன்! நீ கேட்ட ராஜகாந்தி!” என்று ராஜாளியை நீட்ட, எரிச்சலுற்றுப் போன சாம்சனோ “என்னை கேலியா செய்கிறாய்?” என்று அந்த ராஜாளிப் பறவையை இடது கரத்தால் தட்டிவிட, மறுகணம்… மறு கணம்…
கண்களனைத்தும் இமைக்க மறந்தன.
தேகங்கள் சிலிர்த்துச் சிலையாகிப் போயின.
‘பாஜ்’ எனும் அந்த ராஜாளிப் பறவை, எடுத்த எடுப்பில் சாம்சன் முகத்தில் பாய்ந்து இரண்டு கண்களை எடுத்து வயிற்றுக்குள் விழுங்கி ஏப்பம் விட்டது. அத்துடன் விட்டதா? கொத்தோ கொத்தென்று அவனைக் கொத்துகிறது…
குழுமியிருந்த சாம்சனின் சிப்பாய்கள் துப்பாக்கிகளைத் தூக்கிச் சுட முனைந்தபோது…
கணீரென்று ஒரு கர்ஜனை கேட்கிறது;
‘டேய், கும்பினிக் குரங்குகளா? ஒரு குண்டு அந்தப் பறவையின் மீது பாய்ந்தாலும் பல குண்டுகள் உங்களைப் பலியாக்கி விடும்! நான்தான்டா ராஜகாந்தி!”
கன்னங்கரேலென்றிருந்த அரபு நாட்டுக் கறுப்புக் குதிரையில் ஆரோகணித்தவண்ணம் தொலைவில் கையில் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் காணப் பட்ட ராஜகாந்தியைக் கண்டு, சரபோஜியே கதிகலங்கிப் போனார் என்றால்…
ஏறத்தாழ இருநூறு கொள்ளைத் துணைவர்கள் துப்பாக்கி சகிதமாக ராஜகாந்திக்குப் பின்னே…
சாம்சனோ, “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று ராஜாளிப் பறவையின் தாக்குதலில் மீள முடியா மல் தவியோ தவியென்று தவித்துக் கதறுகிறான். உடலில் அம்பு துளைத்தது போன்று பறவையின் அலகு துளைத் துக் கண்கண்ணாய் ரத்தம் சொட்டுகிறது…
“டேய் சாம்சன்! என்னைப் பார்க்க உனது கண்கள் கொடுத்து வைக்கவில்லை! பாவம் செய்த கண்கள்! குரலையாவது கேள்! என் குறிஞ்சியிடம் எவரேனும் குறும்பு செய்யத் தொடங்கினால், ராஜகாந்தி ராட்சஸ காந்தியாய் விடுவான் என்று உன் கவர்னர் துரைக்குச் சொல்!” என்று கூறி நிறுத்திய ராஜகாந்தி, கரம்கூப்பி நின்ற குறிஞ்சியை நோக்குகிறான். அவளது கண்களில் அவமான ஊற்று!
“மகளே! நான் கும்பிடும் தெய்வம் நீ! நீ என்னைக் கும்பிடலாமா? இது உனக்கேற்பட்ட நல்ல சோதனை! இனி நேராது! மன்னர் சரபோஜி கலையுள்ளம் படைத்த காவலர்! உன்னைத் தக்க காவலுடன் அனுப்பி வைப்பார். பயப்படாதே. நான் எங்கிருந்தாலும் எனது ஆட்கள் உன்னைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள், வருகிறேன்!”
மையம் கொண்ட புயல் நகரை அழிக்காமல் கரையோடு சென்றது போல, ராஜகாந்தியின் வீரர்கள் புழுதியைக் கிளப்பிப் புயலைப் போல வேகமாகத் திரும்பிச் சென்றனர்.
சாம்சனை இன்னமும் அந்த ராஜாளிப் பறவை விட வில்லை. ராமபாணமாய்த் துளைக்கிறது.
இராமாயணத்தில் ஜடாயு வதையைப் படிக்காதவர்கள் இங்கே ஜடாயு, சாம்சனை வதைப்பதைப் பார்க்கிறார்கள்.
இராமபாணமோ, இராவணன் உடலைத் துளைத்துத் துளைத்து, ‘சீதை இருக்கிறாளா? இருக்கிறாளா?’ என்று முழுவதுமாகத் தேடி, முடிவில், ‘சீதை எங்குமே இல்லை’ என்று திரும்பி வந்து கூறி, “இராவணனின் மேன்மையை உணர்த்தியது.
இங்கே ‘பாஜ்’ பறவையின் அலகு அம்புவோ, குறிஞ்சி இங்கே இருக்கலாமா? இருக்கலாமா?’ என்று குத்திக் காட்டி, கொத்திக் கொத்தி இம்சிக்கிறது.
கீழே விழுந்த சாம்சன் தரை மீனாய்த் துடிக்கிறான்.
“போதும் பாஜ்! போதும்! வா!” என்று சரபோஜியின் குரல் கேட்ட பிறகே அந்த அபூர்வப்பறவை, ரத்தாபிஷேகத் துடன் சரபோஜியின் தோளில் வந்து அமர்ந்தது.
“இவனைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் போடுங்கள்! அடியெடுத்து வைத்தாய் விட்டது! இனி அடி போனால் என்ன? முடியே போனால் என்ன! ஒரு கலைச் செல்வியைக் காத்தோம் என்கிற கௌரவம் சரபோஜிக்கு இருக்கட்டும்! குறிஞ்சியை விருந்தினர் மாளி கைக்கு அழைத்துச் செல்லுங்கள்! மரியாதைகள் அவளது கால்களில் மண்டியிட வேண்டும். ஜாக்கிரதை!”
தோளில் சுமந்த ராஜாளிப் பறவையான ‘பாஜ்’ பறவை யுடன் அரண்மனையுள் நுழைகிறார் சரபோஜி!
குறிஞ்சியோ, “மன்னா நீ வாழ்க!” என்று மனமாரக் கூறிக் கரங்கூப்பி கண்ணீர் மல்கினாள்.
பூபாளச் சக்கரவர்த்தி கிழக்கு திசையில், வேங்கிடமகி என்கிற மாபெரும் இசைமேதை எழுதிய இசை நூலான சதுர்தண்டிப் பிரகாசிகாவைப் போலப் பொன்மேனி காட்டிப் பிரகாசிக்கிறான்.
நேற்று நடந்த நிகழ்ச்சியை அதற்குள் காற்றுத் தூதுவன் நான்கு திசைக் காதுகளிலும் ஓதி வைத்துவிட்டான்.
திருவிடை மருதூரிலிருந்தும் உடல்நலம் பாராது இள வரசன் சிவாஜி வந்துவிட்டான்.
நெஞ்சில் நெருப்பைச் சுமந்து கொண்டு திருச்சி யிலிருந்த கலெக்டர் நெல்சன் வந்துவிட்டான்.
*சீதை அவன் மனத்துள் புகுந்திருந்தால்தாளே அவள் இருப்பதற்கு?
அரண்மனைக்கூடத்தில் அக்கினித் தேவன் போலமர்ந்து கொண்ட கலெக்டர் நெல்சன், “கூப்பிடு சரபோஜியை!” என்று கூச்சலிடுகிறான்.
ஒரு முழுமையான முடிவுக்கு வந்து விட்டவர் போல அரண்மனைக் கூடத்துக்கு வந்த சரபோஜி, ஒரு கணம் நின்று நெல்சனைக் கவனிக்கிறார்.
அரச தருமப்படி, சரபோஜியைக் கண்டதும் நெல்சன் எழுந்து ‘சல்யூட்’ — வணக்கம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாமல் அவன் அகம்பாவமாகவே அமர்ந்திருக்க, சரபோஜியின் சஞ்சலம் மேலும் தலைதூக்கிப் பயமுறுத்தியது.
ஒருவிதத்தில் அவர் பொம்மை ராஜன்தானே?
கலையின்பாலும், கலாதேவதையான குறிஞ்சியின் அழ கின்பாலும் மயங்கியதோடல்லாது, மகனின் தலையின் பாலும் ஏற்பட்ட பயமல்லவா அவரை ‘பாஜ்’ பறவையை ஏவச் செய்தது?
இதோ நெஞ்சுத் துணிவோடு நெல்சன் மரியாதை யின்றி கால் மேல் கால் போட்டு அமர்ந்து காணப்படு கிறான். இந்தச் சூத்திரதாரி என்ன சூழ்ச்சி செய்ய இருக் கிறானோ?
அந்த நேரம் பார்த்துத்தானா அந்த செய்தியும் வர வேண்டும்?
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாம்சன் மரணித்து விட்டான்.
இராகம்-11
ராஜாளி
‘நீங்கள் நடந்து கொண்டது எந்த தருமத்தில் சேர்த்தி?” என்கிறான் கலெக்டர் நெல்சன். சாம்சன் இறந்து விட்டான் என்கிற செய்தி வேறு எரிமலைகளாய் கண்களில் வெடிக்கின்றன.
“முதலில் நீ இப்படி நடந்து கொள்வது எந்தத் தருமத்தில் சேர்த்தி? உங்கள் யூனியன் ஜாக் கொடி கற்றுக் கொடுத்த மரியாதை இதுதானா?”
சரபோஜி எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொள்கிறார். “உங்களை இந்த மண்ணில் அனுமதித்தோமே அது எங்கள் பாவம்!”
இருவருமே ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்கிறார்கள். சரபோஜியின் ஆங்கிலத்துக்கு முன்னே நெல்சன் ஆங்கிலம் நெல்லுமி; இது நெல்சனுக்கே புரிந்த நெப்போலியன் உண்மை.
*ராசாளி ராகம்தான். முன்னப் ராஜானி என்ற பெயரில் வழங்கியது. இப்போதும் நாட்டைக் குறிஞ்சியை, நாட்ட குறிஞ்சி என்பது போல, கீரவாணியை, கீர்வாணி என்பது போல பல ராகங்கள் இலக்கணமறியாதார் வாயில் திரிந்து வழங்கவில்லையா? எத்தனையோ உதாரணம் சொல்லலாம். எல்லா ராகங்களுக்கும் அக்காலத்தில் சமஸ்கிருதத்தின் பொருட்டு அவசர அவசரமாகப் பெயர் வைக்கப்பட்டன.
“நீங்கள் எங்களைக் கேலி செய்கிறீர்கள்!” என்றான் நெல்சன்,கர்ச்சீப்பால் நெற்றி வியர்வையை ஒற்றியவண்ணம்.
“உன் மரியாதை எதைக் காட்டுகிறது? சமீபத்தில்தான் காசி வரை சென்று திரும்பினேன். கல்கத்தாவிலிருக்கும் உங்கள் கவர்னர் ஜெனரலே என் முன் அமர நாணப் பட்டார். உன் திமிர் உனது காலின் முட்டியில் திருகு வலியைக் கொடுத்து இருக்கிறது!”
“நீங்கள் சாம்சனைக் கொலை செய்த கொலைகாரன். கொலைகாரனுக்கு மரியாதை தேவையில்லை.”
“நான் கொலை செய்தேனா?”
“நீங்கள் செய்தால் என்ன? நீங்கள் வளர்க்கும் பறவை செய்தால் என்ன?”
“சிறையிலடைக்க வேண்டியது பறவையை! கொண்டு வரட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம்.” அதிர்ந்து போனான் நெல்சன். அவன்தான் அதன் ராட்சஸ சொரூபத்தை ஆங்கிலச் சிப்பாய்கள் வருணிக்க வியர்த்துக் கொட்டிப் போனானே!
அப்போது ராஜாங்க அமைச்சர் சர்க்கேல் ராஜேஸ்ரீ ராமோஜி அங்கு வந்து செய்தி சொன்னார்: “மன்னர் பெருமானார் சமூகத்துக்குச் சென்னை கவர்னர் செய்தி அனுப்பி இருக்கிறார். அவர் நாளை வருகிறாராம். அது வரை கலெக்டர் தமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி உத்தரவு!”
சர்க்கேல் உத்தரவுக் கடிதத்தை நீட்ட, அதனைப் பெற்றுப் பார்த்த சரபோஜி, கலெக்டர் முகத்தில் வீசினார். கடிதத்தைப் படித்து முடித்த நெல்சன், மறுகணமே எழுந்து அரசு முறைப்படி ‘சல்யூட்’ செய்ய, சரபோஜி கலகலவென்று நகைக்கிறார்.
“மிஸ்டர் நெல்சன்! இந்தப் பாழும் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத குறையால் நாயக்கர் முதல் என் போன்ற மராட்டியன் வரை அதிகாரம் செலுத்தி விட்டோம்! ஆயினும் நாங்கள் இந்தியர், ஒத்துப்போய் விட்டோம்! இப்போது இந்தியர்க்குள்ளேயே ஒற்றுமை குலைந்ததால் இங்கிலாந்துகாரர்களாகிய நீங்கள் நுழைந்து விட்டீர்கள்! இது ஒரு சாபக்கேடு! சுவானர் துரை வரட்டும். உன்னை திருநெல்வேலிக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்! திருச்சி யில் திருப்பள்ளி எழுச்சி பாடுவது போன்ற ஜபம் அங்கு செல்லாது! சரித்திரம் படைத்த மறவர்குடி மக்களும் களம் கண்ட மாவீரக் கம்பளத்தார்களும் வாழும் பிர தேசம்! உங்கள் தோல் அவர்களுக்குக் கம்பளமாகவோ சம்பளமாகவோ ஆகிவிடக் கூடாது!”
“ஹைநெஸ்! ஹைநெஸ்! வேண்டாம்! வேண்டாம்!”
“நீ போகலாம்!”
நெல்சன் நெஞ்சு தடுமாற விடைபெற்றான்.
அதுவரையிலும் தொலைவில் நின்று கவனித்த இளவரசன் சிவாஜி, தந்தை முன் வந்தமருகிறான்.
“உடல்நலம் எப்படி இருக்கிறது சிவாஜி? நான் அங்கு வரத்தான் புறப்பட்டேன். இடையில் இப்படி ஓர் அசம்பாவிதம்! உன் மனைவி சைதாம்பாயும் வந்திருக்கிறாளா?”
சிவாஜி, முகம் சுருங்கக் குனிந்து கொண்டான். “அவளுக்குத் திருவிடைமருதூரே பிடிக்கிறதாம்!”
“இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்! என்ன செய்வது? அக்காள் மகளாயிற்றே என்று கட்டி வைத்தேன். இப்படி அகங்காரியாக இருப்பாள் என்பதை யார்தான் எதிர்பார்த்தார்கள்? போகட்டும். எசவந்தராவ் ராமச்சந்திர ராவ் சூர்வே கடிதம் எழுதியிருக்கிறார். அவரது மகள் காமாட்சிபாய் ரொம்ப நல்ல பெண்! இரண்டாம் திரு மணத்துக்கு நாள் குறிக்குமாறு சொல்லி இருக்கிறேன்.”
சிவாஜி சூன்யமாய்ச் சிரிக்கிறான். “என்ன சிரிப்புடா இது?’
“அப்பா! கல்யாணமாவதற்கு முன்பு சைதாம்பாபாயும் நல்லவளாகத்தானிருந்தாள். காரணம் அப்போது அவள் எட்டு வயதுச் சிறுமி; நான் பத்து வயதுச் சிறுவன்! இப்போதைய சைதாம்பாபாய் சைத்தானாக இருக்கிறாள்.”
“அதனால் என்ன? இப்போது நீ இருபது வயது வாலிபன்! காமாட்சி பதினெட்டு வயது அழகி, தெரிந்து ஏற்பாடு செய்கிற திருமணம் இது.”
“அவசரம் வேண்டாம், அப்பா! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!”
“அவகாசத்துக்கு அவசியமே இல்லை! வாக்குக் கொடுத்தாய் விட்டது!”
“அது சரியப்பா! இப்படி ஓர் ஆங்கில அசம்பாவிதம் தேவைதானா?”
“இது சரபோஜி விஷயம்! உனக்கு தேவையில்லாதது. போய் ஓய்வு கொள்!”
சிவாஜி, மௌனமாய் மேன்மாடம் நோக்கி நடந்தான்.
அன்றைய மலையமாருதம் பாடும் மாலைப்போது…
சரபோஜி மன்னர், ஓர் இருபது வயது குறையுமளவுக்கு அலங்கார மன்மதனாய் குறிஞ்சியைக் காணப் புறப்படுகிறார்…
தொலைவில் நின்று கவனித்த அருமை மனைவி அகல்யாதேவி – சிவாஜியைப் பெற்ற இரண்டாம் மனைவி – கணவரின் கலைகளை அறிந்து வைத்திருப்பது போலக் கல்யாண குணங்களையும் அறிந்து வைத்திருப்பவள்.
குறுக்கிட்டாள்: “குறிஞ்சியைப் பார்க்கத்தானே புறப்பட்டீர்கள்?”
சரபோஜியின் விழிகளில் அலமரல்.
“பிரபோ! அது ஒரு தேவதா விலாசம்! அந்த முகவரி உங்களுக்கு ஒத்துவராது.”
அகல்யா தேவி மாராட்டிய மொழியில் கவிதா ஞானம் பெற்றவளாதலால் கவிதையாகவே பேசிக் கணவனை நோக்குகிறாள்.
“அகல்யா!” – சரபோஜியின் சினக்குரல்.
“நீங்கள் என்னைக் கல்லாகச் சபித்தாலும் கவலை யில்லை! நீங்கள் புல்லாகிவிடக் கூடாதே என்றுதான் பொருமுகிறேன்! வேண்டாம் ஒரு முக்தாம்பாளைக் காதலித்துச் சாபம் பெற்றது போதும்!”
சரபோஜி முக்தாம்பரி ராகமாய்ச் சிரிக்கிறார். “அகல்யா! நான் குறிஞ்சியின் சங்கீதத்தை நேசிக்கிறேன்!”
“அவ்வாறெனில் நானும் வருகிறேன். இருவருமே சென்று கௌரவித்துத் திரும்பலாம்.”
அப்போது மாடிப்படிகளிலிருந்து ஒரு குரல் கேட்டது. அது சிவாஜியின் குரல்; ஆனாலும் அது விதியின் குரல். “அப்பா! நானும் வருகிறேன்; அந்த சங்கீத தேவதையை நான் மட்டும் தரிசித்துக் கௌரவிக்கக் கூடாதா?
இதில் என்ன தவறு என்றே மூவரும் புறப்பட்டனர்.
அடுத்த நாள், ஆதவன். ஆகாயமார்க்கத்து அக்கினி ராஜாளிப் பறவைபோல கிழக்கிலிருந்து பறந்து வருகிறான்.
சென்னையிலிருந்து மேதகு கவர்னர் வாஷிங்டன் வந்தாய் விட்டது. விசாரணை நடத்தியதில் தவறு முழுவதும் கலெக்டர் நெல்சன் முகத்திலிருந்து வெளிப் பட்டது. இவ்வளவு பெரிய உதாசீனம் ஏற்பட்டிருக்கக் கூடாது. காரணம் காமம்! இருவருமே காமத்தின் சொக்கட்டான் ஆடியிருக்கிறார்கள்; சாம்சன் வெட்டுக் காயாகி விட்டான். அவ்வளவே!
மகாவித்துவான் ஆனைய்யாவின் சாட்சிதான் கவர்ன ரையே கண்கலங்கச் செய்து விட்டது வாஷிங்டன் துரை, குறிஞ்சியிடம் நேரே சென்று மன்னிப்பு கேட்கவும் செய்த காட்சி, ஒரு காவிய ரசனைக் காட்சிதான்.
தஞ்சை பிரதிநிதியான ரெஸிடென்டான ஜான் ஃபைஃபை அதிகமாகவே கடிந்து கொண்டார் கவர்னர் வாஷிங்டன். அவர் முடிவில் கேட்டுக் கொண்டது இதுதான்; “இப்பேர்ப்பட்ட தேவதை பாடி, நான் கேட்க வேண்டுமே!”
ஐயோ! குறிஞ்சி ஒப்புக் கொள்ள வேண்டுமே! ஆனைய்யா, பொன்னையா, சிவனாந்தம் எடுத்துச் சொன்னதன் பேரில் அவள் ஒப்புக் கொண்டாள். அவளா ஒப்புக் கொண்டாள்? விதியாகிய காலதேவனல்லவா ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறான்!
ஆனால் ஒரு நிபந்தனை. ஒரு ராகம்; ஒரே பாட்டு அவ்வளவே!
கவர்னர் வாஷிங்டன் மறுக்கவில்லை. தேவவரம் பெற்ற குரலாமே! அந்தத் தேவ கானத்தைக் கேட்டால் போதாதா?
கச்சேரிக்கான அரங்கவமைப்பை ஜான் சற்று வித்தியாசமாகவே கவனிக்கலானான். சங்கீத மகால் எதிரொலிக்கேற்ப, தனது எதிரொலிப் பாறைப் பலகை களைப் புள்ளிக் கணக்கிட்டுப் பொருத்தி இருந்தான்.
குறிஞ்சிக்கு அப்போது பார்த்து ஓர் அபூர்வ அபிப் பிராயம் தோன்றியது. இன்று பாடப்போகும் ராகத்துக்கு நாகசுரம் தவில் இருந்தால்…
ஞானசுந்தரத்தை அழைத்து, ஆலோசித்து அவனையே அனுப்பி வைத்தாள். “ஞானி! நாகசுர மகாவித்துவான் ராமலிங்கம் பிள்ளையும் தவில் சக்கரவர்த்தி வலங்கைமான் சுந்தரம் பிள்ளையும் தஞ்சையிலிருப்பதாகக் கேள்வி. அவர்களைச் சந்தித்து நான் கேட்டுக் கொண்டதாகச் சொல். நாம் பாடப்போகிற ராகம் நாடகப்பிரியாவில் பிறந்த ராஜாளி ராகம் என்றும் அதன் ஆரோகணம் சரிமபதநிச் அவரோகணம் ச்தபமகரிச என்றும் சொல்லுங் கள். அவர்களுக்குத் தெரியாமலிருக்கப் போவதில்லை. என்றாலும் எந்த ராஜாளிப் பறவை என்னைக் காத்ததோ அந்த ராஜாளியை நான் கௌரவிக்க இந்த அபூர்வ ராகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.”
“நல்ல தேர்வு குறிஞ்சி!”
ஞானசுந்தரம் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றான்.
விளக்குகள் கண்சிமிட்ட இராக் கதாநாயகி நிலாப் பேரழகி, நட்சத்திரத் தோழிகள் ஒளிச்சுருதி கூட்ட பவனி வந்து கொண்டிருக்கிறாள்.
அரண்மனையில் சங்கீதத்துக்கென்றே சங்கீத சிரோன் மணியான சரபோஜி கட்டிய சங்கீத மகாலில் அரசப் பிரதானம் வாய்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பெற்றனர். அப்படியும் மகாலே வெடித்திடுமளவுக்குக் கூட்டம். வெளியே வீரப் பெரு மக்கள்; ஆங்கிலச் சிப்பாய்கள் உட்பட பலரும்!
குறிஞ்சி அன்றைக்குப் பூலோக மேனகையாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு மேடைக்கு வந்திருக்க வேண் டாமே என்பது ஞானசுந்தரத்தின் கருத்து. அவள் என்ன செய்வாள்? விதியின் கருத்து அதுவாக இருக்கிறபோது…
அரங்கில் இருவரும் அமருகின்றனர்.
பக்கவாத்தியங்கள்; வழக்கத்துக்கு மாறுபட்டு முன்னே திருவாடுதுறை ராமலிங்கம்பிள்ளை உடம்பெல்லாம் பொன் மயமான அலங்காரத்துடன் நாகசுரம் ஏந்தி அமர்ந்து கொண்டிருக்கிறார்.
இடதுபுறமாக வலங்கைமான் சுந்தரம்பிள்ளை ஆஜானு பாகுவாகத் திறந்த மார்பில் நவரத்தினமாலை புரள, கனத்த பொற்சங்கிலி மின்ன, கைகளில் பொற்கடையம் புலமையைக் காண்பிக்க, இடது கரத்தில் குச்சி ஏந்தி அமர்ந்து காணப்படுகிறார்.
முன்வரிசையில் சரபோஜி மன்னரும், கவர்னர் வாஷிங் டனும், இளவரசன் சிவாஜியும். பின்னே அரச குடும்பத் தினர், ராணிகள், பெண்கள், அக்காமார் எனப்பட்ட தோழிகள் தனிமையில் அமைக்கப்பட்ட மாடத்தில் அமர்ந்து இருந்தனர்.
முன்கூட்டியே தனது புதியமுறை இசைத்தோரணையை நாகசுர, தவிலுக்கு இரகசியமாய்க் கட்டித் தொங்க விட்டிருந்தாள், குபேர அழகு படைத்த குறிஞ்சி.
குறிஞ்சியின் அழகின் அக்கினிப் பிரகாசத்திலேயே பலர் எரிந்து கொண்டிருந்தனர்.
சரபோஜியோ சபலபோஜியாகிக் கொண்டிருந்தார். இளவரசன் சிவாஜிதான் சஞ்சலபோஜியாகவே மாறி விட்டான். இது அழகு சொன்ன பாயிரம்! இன்னும் இசை சொல்லப் போவதோ ஆயிரம்! இதுதான் விதியின் ஏற்பாடு போலும்! அது சொல்லப்போகிற தீவிரம்?
தம்பூர் ஒலிக்கிறது. அதுதான் இசைக் கருவிகளின் ஓம்கார வாத்தியம். குறிஞ்சி, தனது இஷ்டதெய்வமான பிரத்தியங்கிரா பத்திரகாளியைக் கண்மூடிப் பிராத்திக் கிறாள். அதே நேரத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியப் பெருமான் குற்றாலக் குறிஞ்சி ராகத்துக்கு மட்டுமே பயன்படுத்த சொன்ன ‘க்ஷம்’ மந்திரத்தை ஜபித்தும் கொள்கிறாள். அவள் யார் என்பதை அங்கு நிரூபிக்காமல் வேறு எங்கு நிரூபிப்பாள்?
தவில் பிள்ளைவாளுக்கு குறிஞ்சியின் சமிக்ஞை… ‘நான் சொன்னபடி நடக்கட்டும்?”
வலங்கைமானா? வலம்புரிமானா?
இடதுகரத்துக் குச்சியில் ஒருவித ரீங்காரமாக ஒலி எழுப்பித் தொப்பியை ‘தொப்’பென்று ஒரு தட்டுத் தட்ட…
ராஜாளி ராகத்து ‘ரி’ என்கிற ரிஷபத்தில் குறிஞ்சி சுருதி சேருவாளா? சட்சமத்திலல்லவா ஆரம்பிக்க வேண்டும்?
குரல் ரிஷப சுருதியில் இழைகிறது. அதுவும் சுத்த ரிஷபம்… சுத்தமாக இழைகிறது… தேனாய்க் குழைகிறது…
மத்திம பஞ்சமத்தை விட்டு, குரல் தைவத (த) நிஷாதத்தில் (நி) சதுஸ்ருதியாகவும் கைசிகியாகவும் மாறி மாறி இருக்கிறபோது நாகசுரம் உடன் இழைந்து அவள் தைவதத்தில் நின்றால் அது நிஷாதமாகவும், அவள் நிஷாதத்தில் நின்றால் அது தைவதமாகவும்…
குறிஞ்சியின் புதிய முறை ஏற்பாடுதான்…
இப்போது காந்தாரம் (க) அவரோகணத்துக்குரிய மூர்ச்சனை…
சாதாரண காந்தாரமானாலும் ராஜாளி ராகத்து அசாதாரணமே அதில் அடங்கி இருந்தது.
இடையில் மயூரி வாத்தியம் காந்தாரத்தைத் தொட, பிடிலும் (வயலின்) குழலும் ஆரோகணம் அவரோகணம் சொல்ல, மிருதங்கமும், கடமும், கஞ்சீராவும், டோலக்கும் முகர்சிங்கும் ஒரு முத்தாய்ப்புத் தர, வெறும் நாகசுரம் மட்டுமே மேல் சட்சமத்தில்…
தவில் விளாசிக் கட்டுகிறது…
பின்…
அமைதி…
தம்பூர்…மயூரி மட்டும்…
ஆ! குறிஞ்சி அந்த அபூர்வராகமான ராஜாளியைப் பாடுகிறாளா? அவள்தான் ராஜாளியாக மாறுகிறாளா? இல்லை, அரண்மனையில் இருக்கிற ராஜாளிப் பறவை யைத்தான் அழைக்கிறாளா?
இடையிடையே ஞானசுந்தரமும் ஆண் ராஜாளியைப் போல எதிர்மறை ஆலாபனை. அவன் ஆரோகணமாய் மேல்நிலையில் பிர்க்காக்களை உதிர்த்துச் சட்சமத்தில் நிற்கிறபோது, குறிஞ்சியோ அவரோகணமாகப் பிர்க்காக் களை உதிர்ப்பாள். அவன் சுருதியில் இழைந்து நிற்கிற அவள் பிர்க்காக்களை உதிர்த்துக் கொண்டே இருப்பாள். கொற்கை முத்துக்கள் சிதறுவனபோல!
திருவாடுதுறை ராமலிங்கம்பிள்ளை அசந்து போனார். இது குரலா? நாகசுரமா?
இப்போது அவர் கைவரிசையைக் காட்டுகிறார். நாகசுரம் ராஜாளியாக இறக்கைகளை விரிக்கிறது.புல்லாங் குழல் இடையிடையே ராஜாளிப் பறவைகளின் ஊடலைப் போலக் குரல் கொடுக்கிறது.
மயூரி வாத்தியமோ ராஜாளியிடமும் இந்த ஊடல் ரசனையுண்டோ என்று வியப்பதுபோல காந்தார மூர்ச்ச னையில் அகவுகிறது. அதற்கு ஊடல்தான் தெரியும் (மயிலுக்கு); கூடல் தெரியாதே! இறைவன் படைப்பிலேயே மயில்களின் போகப் படைப்புதானே புரிந்து கொள்ள முடியாத விசித்திரம்!
ராக ஆலாபனையை ஒரு ராஜாளியின் கம்பீரம் போல முடிக்கிறாள் ராஜ கம்பீர அழகு படைத்த குறிஞ்சியெனும் கோதை நல்லாள்.
அதுவரை எதிரொலித்த அந்தச் சங்கீத மகால் அமைதியோ அமைதி. கைதட்டலாவது? யாருக்கு சுய பிரக்ஞை இருந்தது? இதுவல்லவோ சங்கீதம்!
ஆலாபனை முடிந்ததும் ஏனைய கச்சேரிகளில் வழக்க மாக வயலின் தொடர்ந்து அறுக்கும்! இந்த வழக்கத்தை குறிஞ்சி எப்போதாவதுதான் மேற்கொள்வாள். தந்தி வாத்தியங்கள் மட்டுமல்லாது தாளவாத்தியங்களும் அவளது ஆலாபனையுடனேயே அலங்காரம் பேசி விட் டனவே; நாகசுர தவிலைப்போல! இதுதான் குறிஞ்சி சங்கீதம். இதுவல்லவோ மரபுவழி. மகாவித்துவான்களை மனக்கலக்கமுறச் செய்தது! மக்களைக் கவர்ந்தது! பலர் தொழிலைப் பாதிக்கச் செய்தது!
பல்லவியைத் தொடங்குகிறாள்;
ராஜாளியே! ஓ… ராஜாளியே! – என்னை
ரட்சிக்க வந்த ராஜாளியே!
பல்லவியா? பலருடைய பல்லைப் பிடித்துப் பார்க்கிறப் ‘பல்’அவியா?
வாஷிங்டன் வாய்பிளந்து நோக்குகிறார்.
இந்த நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
சங்கீத மகாலை அடுத்திருந்த அரண்மனையறைக் கூண்டில் அதுவரை மயங்கி இருந்த அந்த அபூர்வ ராஜாளிப் பறவை, இப்போது சிறகுகளை விரித்துப் படபடத்து விடுவிக்கச் சொல்லி அடம் பிடிக்கிறது; கத்துகிறது; கூண்டையே அதாகதம் செய்கிறது
அக்காமார் பெண்களில் ஒருத்தி ஓடிவந்து ராணி அகல்யாதேவியிடம் கூற, ராணி சர்க்கேலுக்குச் செய்தியனுப்ப, சர்க்கேல் சரபோஜியின் காதுகளில் ஓத, சரபோஜி பேரதிர்ச்சிக்குள்ளாகி எழுந்தோடுகிறார். அவையில் சின்ன பரபரப்பு…
ராஜாளி கூண்டை நாடிய சரபோஜி அதை சமிக்ஞை யில் வினவ, அது அமைதியாக நின்று கேட்பதாவது? என்னைக் கூண்டிலிருந்து விடுவி என்பது போன்ற அதாகதம்…
ஏனிந்த அதாகதம்?
அது கத்துகிறது…
என்ன உற்பாதமோ? பிரகதீஸ்வரா என்று கூண்டை திறந்து விட்டார் சரபோஜி.
ராஜாளி, ராட்சஸ வேகத்தில் பறந்து செல்வதைப் பின்தொடர்ந்து சரபோஜியும் ஓடுகிறார். என்ன நடக்கப் போகிறது?
இராகம்-12
போகலீலா
சங்கீத மழையில் அந்தச் சங்கீத மகாலே நனைகிறது.
ஆனால் இளவரசன் சிவாஜி?
தெப்பமாக, தெப்பமாக, தெப்பமாக…
ஓ… குறிஞ்சி, குறிஞ்சி என்ற அவனது உள்மனக் குகையி லிருந்து யாரோ குரல் கொடுப்பது அவனுக்கு நன்றாகவே கேட்கிறது. உற்றுக் கேட்டதில் அது யாருடைய குரலோ வல்ல; தனது குரல்… தனது குரல்…
அவன் ஆங்கிலம், மராட்டியைவிட தமிழை ஓரளவு அதிகமாகப் படித்தவன்…
கம்பன் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன… ‘முல்லையைக் குறிஞ்சியாக்கி, மருதத்தை முல்லை யாக்கி’ என்ற வரியுடன் கூடிய பாடல்…
சே. சே! குறிஞ்சியைக் குறிஞ்சியாக்கி குறிஞ்சியையே குறிஞ்சியாக்கி, குறிஞ்சிதான் குறிஞ்சி என்றால், குறிஞ்சி யன்றோ இக்குறிஞ்சி…
மனம் இவ்வாறு பேதலிக்கிறது…
மண்டபமோ கீதமாய், மக்களே ரசனையாய், விண்ட தெல்லாம் இசையல்ல, கொண்டதெல்லாம் கலையல்ல, இதுவன்றோ இசை! இதுவன்றோ கலை?
தேம்பிழி மகரயாழியின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்குமாதோ! இவை கம்பநாடான் கற்கண்டுச் சொற்கள்.
இங்கே…
‘தேவதைகள் வன்மம் கொள்ள, தேனெல்லாம் ‘எட்டி’ப் போசு, மூவகைக் கனிச்சாறு முக்காட்டில் புளித்துப் போக, இவன் தேம்பிழி மகரயாழே தீந்தமிழ் மகளாய் பிறந்து, வண்டுகள் வெட்கி ஓட, குறிஞ்சி வீற்றிருக்கு மாதோ’ வென்றல்லவா தமிழிசையின் வீச்சிலக்கணத்தை மூச்சாய் முழங்குகிறாள்!
காதல் மயக்குற்ற சிவாஜியின் கணிதத்தைக் காலம் கணிக்கிறதா? குறிஞ்சியின் கணிதத்தில் குருவும் சனியும் எங்கிருக்கிறார்கள்? எப்படியிருக்கிறார்கள்? என்பன வற்றைக் கவனிக்கிறதா? புதன் இருக்க வேண்டிய இடத்தி லிருந்து உச்சம் பெற்று குருபார்வை பெற்றதால் இந்த நிலையா? ஆனால் சிவாஜியின் எட்டாம் வீட்டுக் காதல் கிரகம் எவ்வாறு இருக்கிறது?
ராட்சஸ வேகத்தில் மண்டபத்துள் நுழைந்த அந்த அபூர்வ ராஜாளிப் பறவையைக் கண்ட அனைவருமே பயந்து கத்தி விட்டனர். வாஷிங்டன் தனது இடுப்பு உறை யிலிருந்த கைத்துப்பாக்கியைத் தூக்கிவிட்டார். ஆனால் குறிஞ்சி?
ஆவேசம் கண்டவளைப்போல இடது கரத்தை நீட்டித் தடுக்கும் பாவனையுடன் ‘நிதாநி, நிதாநி, ச்தா, சீதா’ என்று ராஜாளியின் மூர்ச்சனையை இசைக்க…
ராட்சஸ வேகத்தில் வந்த ராஜாளி, ரசனையின் தேவ பறவையாய் – அசுணமா பறவைபோல் மயங்கி விழாது அமைதி கண்டு, குறிஞ்சியின் மடியில் சென்று குந்திய காட்சியைக் காண வேண்டுமே!
தேவகானம் என்பதே பூதகணங்களையே பூமாலை யாக்குவதாயிற்றே!
அஃறிணை ராஜாளியே இவளது சங்கீதத்துக்கு அடிமை சாசனம் வரைகிறபோது கொள்ளைகாரனானாலும் ராஜ காந்தி உயர்திணையல்லவா?
கற்பனை செய்து பார்க்கிறார் கவர்னர் வாஷிங்டன்! பாடி முடித்த குறிஞ்சி, பரவசமாய்க் கரங் கூப்புகிறாள். மண்டபமே இடிவதுபோலக் கரவொலியும் வாழ்த் தொலியும்!
ராஜாளிப் பறவையை குறிஞ்சி தடவிக் கொடுக்கிறாள். மானத்தைக் காத்த பறவையல்லவா? அது அவளுக்கு முத்தமிட்டது. ‘ஓகோ’வென்று பாராட்டுக் குரல் விடுத் தார் வாஷிங்டன்.
ராஜாளியை சரபோஜியிடம் ஒப்படைக்கிறாள் குறிஞ்சி. சரபோஜியின் சபலம் ‘உன்னையும் என்னிடம் ஒப்ப டைக்க மாட்டாயா?’ என்பது போலக் கவனிக்கிறது.
சிவாஜியோ…
கண்களில் நீர் திரையிட குறிஞ்சியை நெருங்குகிறான். “குறிஞ்சி! குறிஞ்சிப்பூ பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும்! நீ பன்னீராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறப்பவள்! நான் கம்பனுக்குப் பிறகு ரசித்தது உனது கானம்தான்!”
தொண்டையில் ஒரு சின்ன அடைப்பு. சிவாஜி மேலும் அங்கு நில்லாது கம்பீரமாக நடந்தான். இன்னும் நின்றால் அவனது இதயம் வெடித்துவிடுமே! இந்த ரகசியத்தை யாரே அறிவர்? விதியாகிய சித்திரக்காரன் வானத்தை அண்ணாந்து பார்த்து, பூமியைப் பிளந்து தாறுமாறாக வரைந்துவிட்ட காதலோவியத்தை குறிஞ்சியும் அறிய மாட்டாளே! பூமியில் போட வேண்டிய கோலத்தை வானம் நோக்கி நிமிர்த்திய விதியின் விசித்திரம் இது !
வாஷிங்டன் பிரபு, குறிஞ்சியை வஞ்சனையின்றிப் புகழ்ந் தார். தான் கொடுத்தால் மறுப்பாளோ என்று எண்ணிய சரபோஜி, வாஷிங்டன் மூலம் ஒரு தங்கத் தாம்பாளத்தை அன்பளிப்பாகத் தர, குறிஞ்சி மறுத்தாளில்லை.
அப்போது வாஷிங்டன் பிரபு இட்ட ஆணை – பிரத்தி யேகப் பிரகடனம் – அண்டசராசரங்களையும் அதிரச் செய்தது.
“குறிஞ்சி ஓர் அபூர்வப் பிறவி! அவளது கலை, பிரபஞ் சத்தின் பிரசாதம்! இவளைக் காப்பது தமிழ் மண்ணின் கடமை மட்டுமல்ல; இந்திய மண்ணின் கடமை! நான் இங்கிலாந்து ராணியார்க்கு இது குறித்து எழுதுவேன்!”
சரபோஜியின் நெஞ்சில் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச சபலம்கூட அத்துடன் அழிந்து போயிற்று. இனி நினைத்து பார்க்கலாமா?
நெல்சன் கலெக்டர் குறிஞ்சியின் நிழலைத் தொட்டு வணங்கினான்.
மறுநாள்…
தஞ்சையரண்மனையில் தடபுடலான விருந்து. குறிஞ்சி யின் பொருட்டு வாஷிங்டன் துரையும் சைவ உணவை மேற்கொண்டார். மதுவைத் தொடவில்லை. மனமகிழ் வுடன் உடனிருந்து குறிஞ்சியை வழிகூட்டி அனுப்பி வைத்தார்.
புறப்படுகையில்….
ராணி அகல்யாதேவி தனது கழுத்திலிருந்த நவரத்தின கண்டியை எடுத்து குறிஞ்சியின் கழுத்தில் போட, மறுத் தாளில்லை.
தொலைவில் இளவரசன் சிவாஜி. குறிஞ்சி ராகமாய்ச் சிரிக்கக் கண்டு, அவனருகே சென்ற குறிஞ்சி, “நீங்கள் ஏதேனும் தர விரும்புகிறீர்களா?” என்று கேலிப் புன்னகை யுடன் வேண்டுமென்றே குறும்பாகக் கேட்க, சிவாஜி சொன்னான்:
“நான் கொடுக்க விரும்பவில்லை; பெற விரும்புகிறேன்!”
“என்ன?”
“நீ குற்றாலக் குறிஞ்சி ராகம் பாட நான் கேட்க வேண்டும்! அதற்கு நீ கேட்பது நூறு சக்கரம்; நான் தர விரும்புவது ஆயிரம் சக்கரம்!”
குறிஞ்சிக்கு அவனது நோக்கம் என்ன என்பது கொஞ்சம் புரியத்தான் செய்கிறது. அவள் சொன்னாள்: “இந்த ராகத்தை நான் விரும்பினால் மட்டுமே பாடுவேன். ஆகவே, அடுத்த மாதப் பௌர்ணமியில் மாயவரத்தில் கச்சேரி. அங்கு இதனைப் பாடுவேன். எனது அன்புக் குரிய ரசிகரான உடையார்பாளைய ஜமீன்தார் செய்த ஏற்பாடு! முடிந்தால் அங்கு வந்து கேட்கலாம். உங்கள் ஆயிரம் சக்கரத்தை ஏற்க நான் விரும்பவில்லை. ரசிகனாக வாருங்கள்; ரசனையோடு திரும்புங்கள்!”
அங்கே கூடியிருந்த மகாவித்துவான்கள் குமைச்சல் கண்டனர். இவளைத் தொலைத்து விட்டால் தாழ்விலை என்கிற கலைக்காய்ச்சல் கண்டனர்.
குறிஞ்சி, அனைவரிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு அவளது ஊரான ஒருத்தி நாடு நோக்கிப் பயணமானாள்.
ஒருத்தி நாட்டில் குறிஞ்சியை ஓகோவென்று வரவேற் கிறார்கள்.
இதற்குள் அனைத்துச் செய்திகளையும் அவர்கள் செவி மடுத்து இருந்தார்களே! ஓங்கு புகழ் வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும்.
வரவேற்பை ஏற்று, எல்லாரையும் வணங்கித் தனது மாளிகையை அடைந்தாள்.
ஒருத்தி நாட்டுச் சரித்திரமே ஒரு காலத்திய சரபோஜி யின் காதலி முக்தாம்பாளின் வீங்கு புகழ் சரித்திரம். இப்போது குறிஞ்சியால் அது ஓங்கி புகழ்ச் சரித்திரமாக விளங்கத் தொடங்கிவிட்டது.
இரு தினங்கள் வரை அமைதியாகப் பூரண ஓய்வு கண் டால் குறிஞ்சி.
ஞானசுந்தரம் மட்டும் தனது காதலும் கனவும் கை கூடாமல் போய்விடுமோ என்று கண்ணீர் மல்கவும் செய்தான். நாளுக்கு நாள் குறிஞ்சியின் செல்வாக்கு ஓங்குவதைக் கவனிக்க, நாம் லாயக்கற்றுப் போய்விடு வோமோ என்கிற வேதனை நெற்றிப் பொட்டில் விண் விண்ணென்று தெறிக்கத்தான் செய்தது.
குறிஞ்சி, ஒரு நடை கும்பகோணம் சென்று ஸ்ரீ ஆசார் யாள் பெருமானைத் தரிசித்துவிட்டு வரலாமா என்றும் நினைத்தாள். ஏற்பட்ட இடர்பாடு அப்படி. ஆனால், சுவாமிகள் காஞ்சியிலிருப்பதாக அறிந்து ஓலையனுப்பி வைத்தாள். ஏற்பட்ட இடர்களை அதில் எழுதியனுப்பி இருந்தாள்.
ஒருவாரத்தில் காஞ்சிமா முனிவர் நாராயண ஸ்மிருதி ஆசீர்வாதத்துடன் பிரசாதங்களை அனுப்பி இருந்தார்.
ஒரு புலைச்சிக்கு இப்பேர்ப்பட்ட பெருமைகள் என்பன அக்காலத்தே அத்திப்பூ அதிசயம். அவளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே ஒருதலை நிமிர்ந்த பெருமை! நந்தனுக்கு அடுத்து இந்த நாயகி! அவர் பக்தி வயல்! இவள் இசைப் பண்ணை. இரண்டுமே இறைவனிடம் இரண்டறக் கலக்கிற அத்வைத மார்க்கங்கள்தாமே?
குறிஞ்சி எனும் அபூர்வப் பூவைப் பறிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஞானசுந்தரம் நாளுக்கு நாள் மனம் குன்றிப் போனான். இதனை குறிஞ்சியும் குறிப்பா லுணர்ந்துதான் வந்தாள்.
*இன்றைக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறது நமது அரிய பெரிய இசைக்கலை, அதிலிருந்து விடுபடும் மார்க்கமென்ன? மருந்தென்ன? என்பதன் கண்டுபிடிப்பு குறிஞ்சி எனும் பாத்திரம். இவள் மூலம் நமது இசைக் கலையின் அருமை பெருமைகளைச் சுருக்கமாகவாவது வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? தமிழை முன்னெடுத்துச் செல்லாதவரை, தென்னிசையாம் தமிழிசை – சங்கீதம் – கச்சேரிகளில் களைகட்டாது. ஏதோ சில தலையாட்டிகளுக்கு அல்ல சங்கீதம். அது மக்களை ஈர்க்க வேண்டும். ஈர்ப்பு சக்தி இல்லாத கச்சேரி உப்பு சப்பில்லாதது. எனவேதான் குறிஞ்சியைப் படைத்து அவள் மூலம் மார்க்கம் சொன்னேன். ஏற்றால் சங்கீதம் பிழைக்கும். மறுத்தால் மிச்சமாகப் போவது குத்து (திரை)ப் பாட்டுகள்தாம். இதனையும் மீறி நாய்க்கூச்சல் போன்ற மேலைச் சங்கீதம் மேடைச் சங்கீதமாகும். வசனக் கவிதைகளும், திரைப்பாடல்களும் கடவுளையொத்த தமிழ்க் கவிதைகளை அழித்து வருவனடோல்!
அன்றிரவு உண்டு முடித்து இருவரும் மேன்மாடத்தில் அமர்ந்து இசை சர்ச்சையில் மூழ்கினர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த அரிய பெரிய கலை அழிந்து விடப் போகிறது என்பது மட்டும் குறிஞ்சியின் அசைக்க முடியாத தீர்க்கதரிசனமாக இருந்தது. எழுதி வைத்திருக்கும் நூல்களெல்லாம் ஏட்டுப் பூசணிக்காய்கள் என்பது அவளது முடிவு. சங்கீதம் என்பது எழுதிப் புரிய வைக்கிற இலக்கியமா? அது ஓர் ஒலிக்கலை; ஒப்புயர்வற்ற ஞானக் கலை; நெற்றியில் எழுதி வைக்கக்கூடிய தெய்வீகக் கலை! தியாகராஜ சுவாமிகள் எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது…
‘சீதா வரா! சங்கீதக் ஞானமு, தாத்த ராயவால்…’ சீதையின் புருஷனே! ஸ்ரீ ராமா! சங்கீதக் கலையானது நெற்றியில் எழுதி வைத்தால்தான் வரும்…’
அவள் மதிக்கும் இசையின் ஞானபானுவாயிற்றே தியாக பிரும்மம்! இந்தப் பாடலைத் தேவகாந்தாரியில்- தெய்வகாந்தாரியில் பாடினார் என்றால் என்னே அவரது தீர்க்க தரிசனம்!
ஞானசுந்தரம் தம்பூரைத் துடைத்துக் கொண்டிருக் கிறான்.
“ஞானி! இந்தப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையைக் கண்டுபிடித்தவர் ஒரு ஞானிதான்! எப்போது இது உதயம் கண்டது?”
“ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தாளப்பாக்க வாக்கேயர் கண்டுபிடித்ததாகச் சொல்லுகிறார்கள். சிலர் புரந்தரதாசர் என்கிறார்கள். முன்னவர் ஆந்திரா; பின்னவர் கன்னடர். எனது கருத்து தமிழில் பாடிய முத்துத்தாண்டவர்.”
“நான் கொஞ்சம் சங்கீத விவரத்தை ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ளலாமா என்றுதான்!” என்றாள் குறிஞ்சி.
ஞானசுந்தரமோ, எனக்கு பல்லவியை (முத்தம்) மட்டுமே ஞாபகப்படுத்தி இருக்கிறாய்; அனுபல்லவி, சரணத்தை நீ ஞாபகப்படுத்த மறுக்கிறாயே!’ என்று மனத்துள் பொருமிக் கொள்கிறான். இந்த நிலையில் சங்கீத விசாரமா?
“இசை எப்போது ஏற்பட்டது?
“உலகம் தோன்றிய போதே ஏற்பட்ட முதல் மொழி சங்கீதம்! நாரதர், மதிவாணர், அநுமன் போன்றோர் இசை நூல்கள் எழுதியதாகச் செய்திதான். அபிநவகுப்தர் என்பவர் வெறும் ராகம் பாடுதலே இசை என்றார். பாடலும் தாளமும் ஞானமார்க்கமாகாது என்றார். ஆமாத்யர், சோமநாதர், அகோபலர் போன்றவர் கள் சங்கீதக் கலையை வளர்த்தனர். ஆனால், தமிழில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமே ஆதி இசைநூல். சங்கீதமே முதலில் தமிழ் நாட்டில்தான் உதயம் கண்டது. பின்னால் அது படிப்படியாகப் பல்வேறு தேசத் தாக் குதலில் வளர்ந்தது. இளங்கோவடிகளுக்கு அடுத்து சங்கீதத்தை மேன்மைபடுத்தியவர்கள் ‘சங்கீத ரத்தினா கரம் எழுதிய சாரங்கதேவர். 72 மேளகர்த்தா கண்ட வேங்கிடமகி. இந்தத் தமிழர் எழுதிய நூல் சதுர்தண்டிப் பிரகாசிகா எனும் சமஸ்கிருத நூல்! இது இசை கலைக்கு மட்டுமே நான் கூறியது. நாட்டியக் கலை சாஸ்திரம் வேறு மாதிரியாகச் சொல்லும்!”
“நாட்டியம் காஷ்மீரத்திலிருந்து வந்ததாமே!”
“அறியாமை! நமது நெய்தல் நிலக் கலை இது! பரதவர் களாகிய மீனவர்கள் கடற்கரையில் ஆடி மகிழ்ந்த கூத்தே பரதக்கலை, பரதவர் ஆடிய கலை!”
“ஆமாம் இந்தச் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உற்பத்தி விநோதம்தான் வியப்பானது! ஏழே எழுத்தில் ஒரு மொழி இருக்குமானால் அது இசைமொழி! இந்த எழுத்துகள் எப்படி வந்தன?’
*சங்கீத மேதை விணை டாக்டர் எஸ். இராமநாதன் எழுதியிருக்கும் *சிலப்பதிகார இசை நுணுக்கம்’ என்கிற நூல், பிரமிக்கத்தக்க பிரகாசமான ஆராய்ச்சி நூலாகும். இதனைத் தமிழர்கள் காப்பார்களாக. கி.பி. 1210-1247.
“எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாஸ் திரம் சொல்வது இது. ச-ப, அசைவற்றதால் சக்தி தோற்று வித்தாள் என்பன. ரிகமதநி என்பன சிவனின் சத்தியோ சாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களிலிருந்து உதித்தனவாம்! நான் பிராமணனே யானாலும் இதனை ஏற்க மாட்டேன். ‘சரிகமபதநி என்றே ழெழுத்தாற்றனம்’ என்று சிகண்டி எனும் தமிழிப் புலவர் ஒரு வெண்பா செய்திருக்கிறார். அவ்வாறெனில் வெண்பா உதயம் கண்ட காலத்துக்கு முன்பே இந்த ஏழு சுரங்கள் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்! ஆனால் சிலப்பதி காரத்தில் இவை இல்லை. இளங்கோவடிகள், இந்த ஏழு சுரங்களை குரல் (ச) துத்தம் (f) கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) என்றதால், இந்த ஏழுசுர உற்பத்தி, பிற்காலத்தவை. என்னைக் கேட்டால், பொதுவாக நாம் ஆலாபனை செய்கிறபோது என்று ஆரம்பிப்பது ‘சா’ வாக மாறியது. ‘தனனா’ ‘தென்னா, தென்னா, என்று பாடுவாரேல்’ என்கிற அடியார்க்கு நல்லார் உரைப்படி, தனனாவிலிருந்து ‘த’ உண்டாகி இருக்க வேண்டும். ரீங்கார ஓசையால் ‘ரரரா, ரிரிரீ என்று ஆலாபிப்பதால் ‘ரி’ ஏற்பட்டது. காம்பீர்யம் என்பது இசை! ‘க’ என்கிற காந்தாரம் கண்டது போலும்! தமிழ் இலக்கணத்தில் க,ச,த,ப முக்கிய இடம்பெறும் சொற்கள். இவற்றிலிருந்தும் வந்திருக்கலாம். அம்மா, அப்பா ஆதாரம், ‘ம’வும் ‘ப’வும் இதனால் வந்த ஆதார எழுத்துகளாகவும் இருக்கலாம். நிஷாதம் தான் கேள்விக் குறி. இந்த ஆய்வைப் பின்னாளில் ஆய்ந்து சொல்வேன். இவற்றுக்கு சட்சம் முதல் நிஷாதம் வரை பெயர்களைச் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்று வாதாடுவர். இதை என்னால் ஏற்க முடியாது. யோசிக்கிறேன். நமது குருநாதர் தீட்சிதர் பெருமான் வணங்கும் திருத்தணி முருகன்தான் திருத்தமாகச் சொல்ல வேண்டும். இசையை வேள்வியாக நடத்தியவர்கள் சாமகான வேதியர்கள் என்பர். இதனைக் குறை சொல்வதும் அறியாமையே! ‘சரிகமபதநி’ என்ற ஏழு எழுத்துகள் தித்த நாடு தமிழ் நாடு. மறுக்க முடியாது. இவை யாவும் எனது ஆராய்ச்சியில் கண்ட கருத்து. வெளியில் சொன்னால் உதைப்பார்கள்! அதனால் நான் சொல் வதில்லை. பின்னாலில் இதளை ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
ஞானசுந்தரத்து ஞானம், குறிஞ்சி அறியாததா? அவன் தந்த ஞானம்தானே குறிஞ்சி! அவள் தன்னை மறந்து அவனைச் சேர்த்து அணைத்து இசையமுது இனிக்க முத்தங்களை சப்த சுரங்களாக வழங்குகிறாள். அதில் சரிகமபததி ஒலித்தது. ஏழு சுரங்கள் மட்டுமே சப்த மாக ஒலிப்பது போதாதென்று மேல் சட்சமத்தையும் இணைத்து முத்தத்தின் உச்சியில் நின்று அட்டகாசமாக ‘இச்’ சொல்லி எழுப்பினாள்.
“குறிஞ்சி! இந்தப் பல்லவியுடனேயே எத்தனை நாட் களுக்குக் காலம் தள்ளுவது?”
“முத்தத்தைப் பல்லவி என்கிறீர்களா?” அவன் தலையசைக்கிறான்.
“அப்படியானால் அனுபல்லவி!”
அவளது கும்பாபிஷேகம் பாராத கோபுர கலசங்க ளான மார்பகத்தை நோக்கிச் சொல்லாமல் சொல்லு கிறான். பிறகு மெல்லத் தொட்டு அபிஷேகிக்கவும் செய் கிறான்.
அவள், அப்படித் தொட்டத்தில் சிலிர்ப்புக் காண வில்லை. தாய் முலை தழுவிய குழவி போலச் சிரிக் கிறாள். மாமலை தழுவும் மேகம் போல மோகம் கொள்ளவில்லை.
சங்குகள் போல விம்மிய பொற்கலசத்து நித்தில முனைகள் நிதானமாய் மௌனிக்கின்றன.
பொற்பூண் சுமந்த புணர்மென் கலசங்கள்தாம் அனு பல்லவி என்றால்…
“ஞானி! அனுபல்லவிக்கு அனுமதித்துவிட்ட பிறகு சரணம் தயங்குமா? அது நம்மை எளிதில் சரணடையச் செய்துவிடாதா? இல்லை, உங்களுக்கு அவசியம்தான் என்றால் அவசரம்தான் என்றால் இதோ நான் தயார்!”
ஒரு மூர்க்காவேசத்துடன் எழுந்துகொண்ட குறிஞ்சி டைகளைக் களைய முற்பட…
“வேண்டாம், வேண்டாம் குறிஞ்சி, வேண்டாம்! தைப் பாவையாம் தமிழ்ப் பாவை மாதம் வரட்டும்! காத்திருப் பேன். போகலீலா ராகம் என்பது போற்றுதலுக்குரியது. அதனைக் கசந்து பாடக்கூடாது.”
ஞான ஒளியாய் ஞானசுந்தரத்தை நோக்குகிறாள் குறிஞ்சி. அந்த இசை ஞானப்பூ சொன்னது: “அதுவரை நாம் போகலீலா ராகம் பாடியே நமது போகத்தை அடக்கிக் கொள்ளலாம் அல்லவா?”
“ஆகா!”
அவன் தம்பூரை மீட்டுகிறான்.
சரசத்துக்குரிய சரசாங்கியின் குழந்தையல்லவா போகலீலா?
“ஞானி! நீ தானே ஆரோகணம்! தீயே தொடங்கு!” சகமபநிசா…”
அவள் அவரோகணம்! இறக்கம்! கீழ்படிபவள்! உத்தம் ஜாதிப் பெண்ணுக்குரிய சுருதி லட்சணம் இதுதானே?
“ச்நிதபகரிச…”
இருவரும் இணைந்து இழைந்து போகலீலா ராகத்தில் மட்டும் போகத்தை அனுபவிக்கிறபோது….
இருவர் இதயங்களிலும் காமம் கனிரசமாகப் பிழிந்தா லும், அது தனிரசமாய்த் தனித்தே நின்று, நிலைத்து நிதானிக்கிறது….
இருவர் நெஞ்சிலும் சில நினைவுகள்… ஒரு காலத்தில் இசை மேதை முத்துசாமி தீட்சிதரிடம் எப்படி எல்லாம் இசை பயின்றார்கள்; என்ன விதமாகவெல்லாம் காதலித் தார்கள்; எவ்வாறெல்லாம் தொல்லைகளை அனுபவித் தார்கள்…
போகலீலா ராக ஆலாபனையுடன் அந்த இனிய கனவு களும், பிர்க்காக்களாய் உதிர்கின்றன…
ஆ! அவை சுகமான நிகழ்ச்சிகள் மட்டுமல்ல; சோக மான நிகழ்ச்சிகளும் கூட!
அவளோ புலைச்சி…
அவனோ பிராமணன்…
‘தஸ்ய கார்ய நவித்யதே’ என்று கீதையில் பகவான் சொன்னது உண்மையானால் தேகம் செய்கிற தவறு களுக்கும் ஆன்மா பொறுப்பாக முடியுமா? சட்டை.
– தொடரும்…
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.