(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 4-6 | இராகம் 7-9 | இராகம் 10-12
இராகம்-7
கோகிலானந்தி
ஆ! அந்த மிருதங்கம் மறைந்து இன்றைக்கு ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்…
அவ்வப்போது அந்த மிருதங்கத்தின் இனிய நாதம் பிரமையாய் ஒலிக்கிறது. அதுதானே அவளை அடிக்கடித் தட்டி எழுப்பிக் கொண்டிருப்பது? ‘திரும்பிப் பார்!திரும்பிப் பார்’ என்று எச்சரிப்பது?
கோகிலானந்தி என்றாலே குயில்களின் ஆனந்தம் என்று பொருள்? கோகிலம் – குயில்.
இன்னமும் அந்த இணைக்குயில்கள் – குறிஞ்சியும் ஞான சுந்தரமும் போல ஒன்று மாறி ஒன்றாகவும் இணைந்தும் பாடிக் கொண்டே இருக்கின்றன. குறிஞ்சியின் இந்தப் புதிய கற்பனையைக் கற்றுக் கொடுத்தவையே இந்தக் குயில்கள் தாமே?
குரல் பேதம், சுருதி பேதம்… ஓ… கோகிலானந்தி ராகத்தை ரசிப்பது போல…
அமைதியின் இன்பத்தை இந்த இணைக் குயில்கள் ஒரு கலா ரசனையுடன் அனுபவிக்கின்றன போலும்!
வானில் வட்ட நிலா அவளைக் கண்டு சிரிக்கிறதோ அல்லது நிலா ராகம் பாடுகிறதோ? அப்படி ஒரு ராக மில்லை. இருந்தால் பாடுமோ?
குறிஞ்சி தன்னுள் சிரித்துக் கொள்கிறாள்! பிறப்பால் புலைச்சி; வாழ்ந்து வருவதோ வேதாக்கினி; எண்ணமோ இசை வேள்வி…
அடிப்பெண்ணே! எங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு தரக் கூடாதா?” என்று அவளது இமைகள் இரைஞ்சுகின்றன.
நேரே அறையினுள் சென்று மஞ்சத்தில் சாய்கிறாள்.
நீல நயனங்கள் நித்திரைக்கு வேண்டினாலும், கோல மார்பகங்கள் மம்மர் நோய் கண்டு விம்முகின்றன.
ஞாலத்து முதல் வெளிச்சமாம் நாகரிக வெளிச்சமே மன்மதன் கண்களிலிருந்துதானே உதயம் கண்டது? துறந்தவர் மறுப்பர்; அவர்களும் பிறந்த பின்னர்தான் துறந்தனர்?
மஞ்சத்திலுறங்கும் கானசுந்தரமாம் ஞானசுந்தரத்தின் மோனமான ஆணழகை ரசிக்கிறாள்.
அன்னநடை பயிலும் மென்னிடைக்குக் கீழிருக்கும் மேகலாபரணத்து மாணிக்கம் சிருஷ்டியின் சிறந்த கற்பனை அறிவின் உதயமின்னல் அமைதியின் மெல்லிய கொடியாய் மின்னத்தான் செய்கிறது…
மம்மர் முகில்களின் மோதல்களால் ஏற்படும் அப்சரஸ் மின்னல்! அங்கே இடியோசை இயல்பாகக் கிடையாது.
தைத்திங்கள் வரை நாள் குறிப்பிட்டது அவளாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒப்பந்தம்தான்.
மீண்டும் ஞானசுந்தரத்து மோனப் பேரழகை நோக்குகிறாள்…
ஆ! மீசை மட்டுமிருந்தால்? சீ! இவருக்கு அசிங்கமாக இருக்கும்! அதற்குரிய முகமே வேறு! இது மென்மையின் ஆண்மைக் கம்பீரம்! மௌனமான அழகு ராகம்! நாம் இவரை பிராமணர் என்றும், தீட்சிதர் பெருமானின் நிழலாய் நின்று இசை போதித்த பிம்பகுரு என்றும் சொல்லி வருவது ஒரு போலியான கதை! சங்கர மடத்துக்குச் செல்லுமுன் இந்தக் கதை எங்கு சென்று ஒளிந்து கொண்டிருந்தது?
குயில்கள் இன்னமும் கோகிலானந்தி ராகம் பாடிக் கொண்டிருக்கின்றன.
அவள் அதன் அவரோகணத்தை மட்டுமே இசைத்து அல்லது அசைத்துப் பார்க்கிறாள்…
“ச்நிதபமகச…”
“குறிஞ்சி! எதுவும் ஆரோகணமாக இருக்கவேண்டும். என்ன! ஞானசுந்தரம் இன்னும் தூங்கவில்லையா? “இன்னுமா தூங்கலை?”
“கல்யாணமான பிறகு பெண்கள் பின்னே தூங்க வேண்டும்; காதலிக்கிறபோது ஆண்கள் பின்னே தூங்கு கிறார்கள்!””
அவள் மென்மையான கலகலப்புடன் சுநாதமாய்ச் சிரிக்கிறாள்.
“அவரோகணத்தை ஏன் சொல்ல வேண்டும். குறிஞ்சி?”
“பெண்கள் எப்போதும் அவரோகணமாய் இருந்தால் தான் உலக நாகரிகம் உருப்படும்!”
“சபாஷ்!”
ஞானசுந்தரம் எழுந்து அமர்ந்து கொள்கிறான். “நீ பாடிய அவரோகணத்து மேளகர்த்தா?”
“ஷண்முகப்பிரியா.”
கோகிலங்கள் இப்போது கூடிக் குலவுகின்றனவோ என்னவோ குரல்கள் படபடத்துக் கேட்கின்றன.
“எங்கோ கோகிலங்கள் ஆனந்திக்கின்றன குறிஞ்சி…!”
“அதனால்தான் நான் அவரோகணம் பாடினேன்…!”
“குறிஞ்சி! – அதிர்ந்து போன ஞானசுந்தரம் அதன் ஆரோகணமாகிறான்; தன்னை மறந்து சுரம் சொல்லுகிறான்; “சகமதநிச்!”
அவன் அவளது பக்கத்தே வந்தமருகிறான்.
“ஞானீ!” அரண்டு போகிறாள் அழகின் நிலாமகள். ஆ! அவள் நிலவுப் பேரழகிதானே? தாய்க்குப் பதினைந்து நாள் தேய்வு; இந்தச் சேய்க்கு ஐந்து நாள் தேய்வு…
“குறிஞ்சி! உன்னை நான் அறியாதவனா? நாம் கனவில் கற்பழிந்து வருகிறோம். இது பாவமல்லவா? நிர்பந்தங் களும் ஒப்பந்தங்களும் நம்மை நிம்மதியிலிருந்து விலக்கி, முடிவில்…”
“ஞானீ!!”
“ஒரு சுரம் பாஷாங்கமாவது தாம்பத்திய சம்சாரி; பைரவி போல! இரு சுர பாஷாங்கமாவது தேகாத்திய விபசாரி, பெஹாக் ராகம் போல! இரண்டு மத்திமம், இரண்டு நிஷாதம் வரவில்லையா? இப்போதும் நான் உன் தை மாத நிபந்தனையை மீறவில்லை. என்னை நிம்மதி இழக்கச் செய்துவிடாதே!”
குறிஞ்சியின் நாசியில் நீண்ட பெருமூச்சு.
“இப்போது என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள், ஞானீ?”
“நான் பாஷாங்கத்தைத் தொடவில்லை. அதன் பாஷை களுடன் பேச வை!”
வியந்து போகிறாள் வேல்விழியாள்.
“கொஞ்சம் சங்கீத பாஷையில்தான் இதனைச் சொல் லுங்களேன்!”
“இது புரியவில்லையா?”
“புரிகிறது; வசப்படுத்தவில்லை.””
“பைரவி ராகத்தின் அவரோகணச் சதுர்ஸ்ருதி பாஷாங்க தைவதத்தைத் தொடவில்லை. அதாவது உனது…”
“போதும்! கன்னினமயான நடபைரவியும் வேண்டாம். தாய்மையான தைவத பாஷாங்கமும்; வேண்டாம். “சகம தநிச் சநிதமகச… இல்லையா?”
*சல்லாப ராகம் – வகுளாபரணத்தில் பிறந்தது.
அவன் வாஜமாய்ப் (குறைபட்ட சுரமாய்) புன்னகை புரிகிறான்.
“இந்த ராகத்துக்குப் பெயர், ஞானி?”
“எனக்குத் தெரியாது; வேண்டுமானால் வள்ளுவப் பெருமான் சொன்ன ‘ஊடுதல்’ என்ற பெயரை நம் வரை சூட்டி மகிழ்வோம்! அதற்கின்பம் கூடி முயங்கப் பெறுவது பைரவியாக இருக்கட்டும், இது… தையில் நமது மெய்யில் அரங்கேறட்டுமே!”
ஞானசுந்தரத்தின் தமிழ்ப் புலமையையும் இசைப் புலமை யையும் கண்டு மயக்கமுற்றுப் போன குறிஞ்சி, அப்படியே அவனை அள்ளி அணைத்து இதழ்களோடு இதழ்கள் பொருத்தி முத்த ராகம் பாடத் தொடங்கிவிட்டாள். இதன் ஆரோகண அவரோகணம் என்னவோ? மாபெரும் இசை ஞானியான மன்மதனைத்தான் கேட்க வேண்டும்!
இருவர்க்குமே முதல் உணர்வு! முக்கனியின் ரசஉணர்வு! முத்தமிழின் சத்தினிமையுணர்வு! ஏன் சலனமற்ற ஆண்- பெண்ணின் சத்திய உணர்வு!
குயில்கள் இன்னமும் கோகிலானந்தி பாடுகின்றன. ஊடல்ராக மயக்கத்திலிருந்து இன்னமும் அவர்கள் விடு படவில்லை.
தித்திக்கும் சொல்பாடும் தீஞ்சுவை அதரங்களில் தேனாறு பாய்கிறது.
மார்பகத்துப் பட்டுத் துணிக்கதவு, படீரெனத் திறந்து பட்டும், அங்கே தொட்டுப் பார்க்கும் துணிவு ஞான சுந்தரத்துக்கு வரவேண்டுமே!
‘இச்’செனும் ஓசையோடு இயன்றவரை சுருதி பிறழாமல் நிற்கிறார்கள்.
ஆனால், அந்த ஓசை மட்டும் விட்டு விட்டும் வேறு பட்டும் இப்போது ராகமூர்ச்சனைகளாய் மாறு படுகிறது…
“போதும் ஞானீ! போதும் ஞானீ! வரமளித்தவள் நான்! வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியவர் நீங்கள்! போதும், போதும்!”
ஊடல் ராகத்திலிருந்து விடுபட்ட ஞானிக்குக் கூடல் அவசியப்பட்டது. ஏன்? அவளுக்குமே அவசியப்பட்டது. ஆயினும், அத்து மீறுவது அவர்களுக்கு அப்போதைக்கு அதருமமாகப்பட்டது.
இருவர் முகங்களிலும் வியர்வைத் துளிகள். தனது முந்தானையால் முதலில் ஞானசுந்தரத்து முகத்தைத் துடைத்துப் பின், தனது முகத்தைத் துடைத்துக் கொள் கிறாள் குறிஞ்சி.
இருவருமே புன்முறுவலில் புவனகாந்தாரி பாடி, தனித் தனியே இருந்த மஞ்சம் நாடிப் படுத்து நித்திரைக்குரிய நீலாம்பரியை ஆராதிக்கத் தொடங்கினர்.
பொன்னாய் விடிந்த பொழுதுக்குப் பிறகு…
புதுக்கோட்டைத் தொண்டைமான், அரண்மனையில் குறிஞ்சிக்குப் பொன் முழுக்காட்டுகிறார்.
புதுக்கோட்டை பூரிப்புக் கண்டது.
அன்றைய பகல் விருந்து முடிவுற்றதும் தக்க துணை களுடன் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியிலும் பெட்டி வண்டிகளிலும் திருமழபாடி நோக்கிப் பயணமாயினர் குறிஞ்சிக் குழுவினர்.
வழிநெடுக தங்கவேண்டிய இடங்களில் தங்கி, இளைப் பாறிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
நகரங்கள் முழுவதும் பிரமுகர்கள். குறிஞ்சி விஜயம் அவர்களுக்குக் குங்கும ரூபியான அந்தப் பரமேஸ்வரி விஜயம் போலாயிற்றே!
திருச்சிப் பாளையக்காரர் எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடி யும் சமஸ்தானங்களில் பாடுகிற வழக்கமில்லை என்று மறுத்துவிட்டாள்.
“புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் பாடலாமா?”
“அது வேறு கதை!”
“ராஜகாந்தி கதையா”
“இருக்கலாம்!”
இதற்குமேல் அவள் பதில் சொல்லாமல் திருமழபாடி நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.
குறுக்கு வழியாக அவள் மழபாடிக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவளது கண்கண்ட தெய்வம் சமயபுரத்து மாரி யம்மனைத் தரிசிக்காமல் போகலாமா? அதுவும் இவ்வளவு தூரம் வந்து?
குறிஞ்சியின் வருகை சமயபுரத்துக்கே பெருமை தருவ தாக இருந்தது. ஆனால் குறிஞ்சியோ முத்துமாரியம்மனிடம் பெருமை தேடிக் கொள்ளவல்லவோ வந்திருக்கிறாள்.
சந்நிதிக்குச் சென்று அண்டசராசரமாய் வீற்றிருக்கும் சமயபுர மாரியம்மனைத் தரிசிக்கிறாள். மனத்தில் செம்மை இருந்தால்தான் அந்தக்குங்கும ரூபியான கோமளவல்லியின் முகத்தில் புன்முறுவல் நிறைந்த பேரொளி தெரியும்! அல்லாதவர்களுக்கு அவள் ஓர் அகோர ராட்சஸமாய்ப் பயமுறுத்தி அலறடித்து ஓட வைத்து விடுவாளே!
ஆளுயரத்துக்கு அமர்ந்திருக்கும் அந்தச் சக்திக்கெல்லாம் மகாசக்தியான சமயபுரம் மாரியம்மனைக் கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறாள்.
சமயத்தில் (கூப்பிட்ட போதெல்லாம் அல்ல) வரம் தரும் சமாபுரத்தவளாயிற்றே! அனுதினமும் அவளை வேண்டுபவரின் ஆபத்து காலத்தில் ‘வந்தேன்’ என்று குரல் கொடுத்து வருகை தரும் சமயபுரத்தவளாயிற்றே ! பிரகாசப் பேரொளியாயிற்றே!
ஓம்காரியான அந்த மகாசக்தியை…
“ஓம்காரி ராகத்திலேயே சந்நிதியின் வாசற்படியில் நின்று சந்நதம் கண்டவளைப் போலப் பாடி மகிழ்விக் கிறாள். பின்னர் தாள் பணிந்து எழுந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விடைபெறுகிறாள் குறிஞ்சி.
ஆ! அங்கு மக்கள்தாம் கூடினரோ? இல்லை அந்த மகா சக்திதான் கூட்டியதோ?
*கரகரப்பிரியாவில் பிறந்த ராகம். ஆ: சரிகாபதச்- அ: ச்தாகரிச.
அவள் அனைவரையும் வணங்கிவிடைபெற்றுக் கொண்டு திருமழபாடி நோக்கிப் பயணமாகிறாள்.
கொள்ளிடத்தில் நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
கரையையொட்டியது போலிருந்தது அந்தப் பழம் சிறப்பு வாய்ந்த மழுவாடிப் பெருமான் கோயில்.
குறிஞ்சி வருகை தந்துவிட்டாள் என்பதனையறிந்து சுற்றுச் சூழலிலிருந்து அனைத்து மக்களும் திரண்டு வந்து குவிந்து விட்டனர். எங்கு நோக்கினும் கட்டுச் சோறு மூட்டைகள்தாம்!
திருமழபாடிப் பிரபுவான ராஜாராமன் என்பவர் மாளி கையில்தான் குறிஞ்சிக்குழு தங்கியிருந்தது. அக்காலத்தில் இசைச் சேவை என்பது இறை சேவை மாதிரி.
கோயிலின் வெளிப்புறத்தே பெரிய பந்தல். கச்சேரி அரங்கத்துக்கான எதிரொலிப்பாறைப் பலகை முதல் விளக் கலங்காரம் வரை அனைத்தையும் கவனித்துக்கொள்ள முனைந்தான் ஆங்கில விஞ்ஞானியான ஜான்.
சின்னஞ்சிறிய ஊரானாலும் பென்னம் பெரிய உள்ளங் கள் வாழ்கிற ஊர் என்பதைச் சுற்றிப் பார்த்து வருகிற போதே குறிஞ்சி புரிந்து கொண்டாள்.
“எங்கே ராஜகாந்தி? எங்கே ராஜகாந்தி?” குறிஞ்சியின் கண்கள் அலைமோதுகின்றன.
அன்றைய ஓய்வுக்குப் பிறகு, இரவு கச்சேரி ஆரம்ப மானது.
கொள்ளிடக் கரையோரத்தில் நீர் வெள்ளம் புரண்டு வந்துவிட்டதா என்பதுபோல மக்கள் வெள்ளம்.
அரங்கம் முழுவதுமாக வாத்தியங்கள் சுருதி சுத்தமாகக் காத்திருக்கின்றன.
*இப்போது வைத்தியநாதப் பெருமான் என்கிறார்கள். மழவர்கள் ஆண்ட மழவர்பாடி(புறநானூறு) மழபாடியாறிற்று. மழுவாடி என்பது கோயில் கொண்ட ஈசன் நாமம். ‘மழபாடி மேய மழுவாளனார்’ என்பது அப்பர் வாக்கு.
குறிஞ்சியின் கண்கள் அலைமோதுகின்றன. ராஜகாந்தி வந்திருப்பானா? நிச்சயம் வந்திருப்பான்.
ஒரு சின்ன முன்னுரையாக குறிஞ்சி பேசுகிறாள்; ராஜ காத்திக்காகத்தான்…
“மழபாடி மக்களே! இந்தப் பழம்பெரும் கோயில் அப்பர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களால் பாடல் பெற்ற புகழுக்குரியது, நான் சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு பாடிய பொன்னார் மேனியனே’ என்ற பாடலை ராஜகாந்தி ராகத்தில் முதல் பாடலாகப் பாடுகிறேன்!”
எங்கும் கரவொலிகள், எங்கிருந்தோ ஒரு குரல் கேட் கிறது: “சபாஷ் மகளே, சபாஷ்.”
ஓ… ராஜகாந்தி…
தம்பூர்நாதம்…
‘ராஜகாந்தி ராக ஆலாபனை…
பாட்டு ஆரம்பமாகிறது…
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பண் வேறு. அவர் இப்போது எதிரே இருந்தால் இந்த ராஜகாந்தி ரசனையில் சொக்கிப் போயிருப்பார்.
‘மன்னே மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!” என்ற வரியை குறிஞ்சி, என்ன விதமாகவெல்லாம் சங்கதி போட்டுக் குழைந்தாள்?
கூட்டத்தோடு புனைவடிவில் நின்றிருந்த ராஜகாந்தியின் கண்களில் கொள்ளிடமே கரைபுரண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
“மகளே! மகளே” – மனத்தின் முனகல்…
குறிஞ்சி மேலும் தனக்கே உரிய பாணியில் கச்சேரியைத் தொடங்கினாள்.
அவள் என்ன, வழக்கமான மார்க்கத்தைப் பிடித்துக் கொண்டு வழக்காடி வழக்காடி முடிவில் மக்கள் மனத்தில் அழுக்காடிப் போன அர்த்தமற்ற பாணியையா பின்பற்று கிறாள்? அவளது கச்சேரிக்கே குறிஞ்சிப் பாணி என்கிற பெயராயிற்றே!
*சுவர்ணாங்கியில் பிறந்தது. ஆ: சரிகபதநிச் – அச்நிதமகரிச.
ஞானசுந்தரமும் குறிஞ்சியும் ஆலாபனையானாலும், பாடலானாலும், சுரவிந்நியாசமானாலும் பகிர்ந்தும், சமயத்தில் போட்டியிட்டும், இடையே வாத்தியங்களுக்கு இடம் கொடுத்தும்…
சில சமயங்களில் ஆலாபனை செய்யாமல், வெறும் லயவாத்தியங்களை முழக்கச் செய்து பல்லவி தொடங்குவாள்…
சில சமயம், சுருதி வாத்தியங்கள் பல்லவியைப் பாடும்; குறிஞ்சி அனுபல்லவியில் ஆரம்பிப்பாள்…
அவள் கொள்ளிடத்தைப் பாடினாள்; அங்கு வாழ் மக்களைப் பாடினாள். அவர்கள் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாடினாள்; மக்கள் படும் துன்பத்தைப் பாடினாள்; பொதுவாக எல்லாருக்கும் புரியும் தமிழில் பாடினாள்…
அவள் ‘குற்றாலக் குறிஞ்சி’ ராகம் பாடவில்லை. காரணம், அதற்கான தனி சன்மானம் என்பது ராஜாராம் பிரபுக்கு ஒத்துவரவில்லை.
களைக்கட்டிப் பாடிக்கொண்டு வருகிறபோது… கூட்டத்தில் பெருத்த சலசலப்பு கண்டது.
ஏனிந்த சலசலப்பு?
ராஜகாந்தி மீண்டும் அகப்பட்டுக் கொண்டானோ?
அதுவரை ஆனந்தமாகப் பாடிவந்த குறிஞ்சி, இப்போது அரண்டு மருண்டு போனாள்.
இராகம்-8
தன்யாசி
ஏ! ராகங்களே! என் ராஜகாந்தி அகப்பட்டுக் கொண் டாரா? ‘மகளே’ என்று வாயினிக்க அழைத்த மானுஷ்ய ராகம் அகப்பட்டுக் கொண்டதா?
அரண்டு போன குறிஞ்சி, ஏற்பட்ட பரபரப்புக்கான காரணம் வேறு என்பதனையறிந்து சாமாராகம் போல அமைதி கண்டாள்.
என்ன! சரபோஜி மன்னரின் அவையை அலங்கரிப்பவர் களுள் ஒருவரான மகாவித்துவான் ஆனைய்யா வருகிறாரா? அனைத்துச் செவிகளையும் தேனாய் இனிக்கச் செய்து வந்தவள் இப்போது தனது செவியில் தேன் வந்து பாய் வதை உணருகிறாள்.
வயதான அந்த இசை ஞானப்பழத்தை வழிவிட்டுக் கரம் கூப்பி வரவேற்கிறார்கள்.
அவர் அரங்கத்து முன்னே வந்து அமர்ந்த மறுகணம், “கான கலா ஞானப்பழமே!” என்று அலறியவளாய் அரங்கத்தை விட்டெழுந்த குறிஞ்சி, இறங்கி வந்து பாதம் பணிந்து சேவிக்கிறாள். உடன் ஞானசுந்தரமும் நெட்டங்க மாக விழுந்து பணிகிறான்.
“எழுந்திரு மகளே” என்று கூறிய ஆனைய்யா, அவளது தோள்களைப் பற்ற..
துடித்துப் போய், “ஐயா” என்றலறி விட்டாள் குறிஞ்சி.
இவள் ஏன் இவ்விதம் அலறுகிறாள்?
புரிகிறது என்பது போன்ற ஆனைய்யாப் புன்னகை.
தமிழில் பாடுவது அவமானம் என்று கருதிய இசைப் பொற்காலத்தில், தமிழில் பாடிய சுந்தரத் தமிழர் ஓரிரு வருள், ஆனைய்யா சகோதரர்களும் அடங்குவர்.
இவர்களுக்கு முன்னே வாழ்ந்த முத்துத்தாண்டவரும் அருணாசலக் கவிராயரும் தமிழ்த்தாய் செவிகளின் முத்துத் தோடுகள் என்றால், இவர்கள் காலத்தே வாழ்ந்து வரும் கோபாலகிருஷ்ண பாரதியார் வைரக்குழைகள், ஆனைய்யா சகோதரர்களோ, அந்த இனிய செவிகளின் கொப்புகள் என்று கூறலாம்.
“தீண்டாமை கருதி, நான் தொட்டதும் திடுக்கிட்டு விட்டாயா மகளே! இந்தக் கொடுமை படித்தறிந்த பாமர மனிதர்களோடு தொலையட்டும். கலைஞர்களுக்கு வேண் டாம்! ஆமாம்; நீ ஏன் உன்னைப் புலைச்சி என்று கருத வேண்டும்? மிருதங்க சக்கரவர்த்தி மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மகள் என்று ஏன் எண்ணக் கூடாது?”
“அப்படி எண்ணுவதைத்தான் நான் அவமானம் என்று எண்ணுகிறேன். நான் ஒரு புலைச்சி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நந்தனுக்குக் கிடைத்த பெருமை இந்தக் குறிஞ்சிக்கும் குவிய வேண்டும். எனது சங்கீதம் பிள்ளைச் சங்கீதமல்ல; பிற்பட்டோர் சங்கீதம்; தமிழ்ச் சங்கீதம்!”
“தமிழிசை பிற்பட்டோர் சங்கீதமா?”
“இன்றைய நிலையில் ‘இது இப்படித்தானிருக்கிறது!” நான் என்றாவது கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்திக் சிற சந்தர்ப்பம் கிடைக்குமானால் பிறந்ததன் பயனடைவேன்!”
“நான் மட்டும் தமிழில் பாடவில்லையா?”
*இன்றைக்கு மட்டும் என்ன வாழுகிறதாம்?
“நந்தன் சரித்திரத்தையா நீங்கள் பாடினீர்கள்?”
“என் மீது உனக்கு ஏதோ கசப்பு இருக்கிறது.”
“நிறையவே இருக்கிறது. சரபோஜி அரண்மனையில் ‘ஒரு புலைச்சி சங்கீதம் பாடுகிறாளாம்! இதனைச் சந்தை மாடுகள் ரசிக்கின்றனவாம்’ என்று சமஸ்தான திலகமான மேரு சுவாமிகள் கேலி செய்ய, சேர்ந்து சிரித்தவர்களுள் நீங்களும் ஒருவராமே?”
“உண்மை; ஒப்புக் கொள்கிறேன்!”
“ஒரு புலைமகள் தமிழில் பாடுகிற கலைமகள் என்று ஏன் மறுத்திருக்கக் கூடாது?”
“உன் பாட்டை நான் கேட்டறியேன் ! மேலும் நீ வர்ணம், ஜாவளி, தில்லானா போன்ற சங்கீத முறைகளை மேடை யில் பாடுவதைக் கேலி செய்கிறாயாமே?”
“கேலி செய்யவில்லை; சங்கீதத்தைப் போலியாகப் பிறர் கேட்டு ரசிக்க முடியாத வேலியாகப் பாடி வருவதைச் சாடினேன். இப்படியே சங்கீதம் வளர்ந்தால் இன்னும் இருநூறு ஆண்டுகளில் இந்த தெய்வீகக்கலை, ‘காவியாகி விடும் என்பது எனது கணிப்பு! வர்ணம், ஜாவளி, தில்லானா போன்றவை யாவும் பயிற்சி இலக்கணங்கள், கச்சேரியைக் கவரக்கூடியனவல்ல. ஆனால், நாட்டியக் கலையின் நயங்கள்; நான் மறுக்கவில்லை.”
உண்மைதானே என்பது போல நோக்குகிறார் ஆனைய்யா.
“ஐயா! தான், உங்கள் மகாவித்துவான்கள் விமரிசனப்படி நேற்று முளைத்த காளான்! உங்கள் மகாவித்துவான் பல்லவி கோபாலய்யா சொன்னதுபோல், ‘சோட்டி பச்சா!” இந்தச் ‘சோட்டி பச்சா’ ஒரு சந்தேகம் கேட்கலாமா?”
“கேள் குறிஞ்சி!”
“அடதாள வர்ணம் எதற்காக இரண்டு லகு தள்ளி- அதாவது எட்டு அட்சரம் தள்ளி ஆரம்பமாகிறது? எல்லா அடதாள வர்ணங்களுமே இப்படித்தான்; ஏன்?”
*ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றைக்குத் திரை இசையால் தென்னிசை (கருநாடகச் சங்கீதம்) அருகி வருகிறது.
ஆனைய்யா அசையாமல் அரண்டு போனார். ஏன்? சமத்திலோ, அரை இடம் தள்ளியோ ஆரம்பிக்கலாமே! எதற்காக எட்டு அட்சரம் தள்ளி ஆரம்பிக்க வேண்டும்?
“எனக்கே புரியவில்லை குறிஞ்சி!”
“கல்யாணிராகத்தில் வனஜாட்சி வர்ணம் உண்டாக்கிய- என்னை ‘சோட்டி பச்சா’ என்று கூறிய-பல்லவி கோபாலய் யாவையே கேட்டு வையுங்கள். ஒரு நாள் சந்திப்பேன். பதில் சொல்லட்டும். என்னடா, இவ்வளவு செருக்காகப் பேசுகிறாளே என்று எண்ண வேண்டாம். வித்துவான்கள் எவரும் என்னை மதிப்பதில்லை. வேதனை!”
“நானே மதித்து வந்திருக்கிறேனே!”
“மக்கள் மதிக்கிறார்கள்: ஏன் மதிக்கிறார்கள் என்பதனை யறிய வந்திருக்கிறீர்கள்; அவ்வளவே!”
“நீ சாஸ்திரிய சங்கீதத்தை அவமதிக்கிறாய்! அது எனக்கும் வேதனைதான்!”
“சத்தியமாகக் கிடையாது. எனது குருநாதர் ஸ்ரீமுத்து சாமி தீட்சிதர் சங்கீத சாஸ்திரத்து இமயமலை! நான் அவமதிப்பேனா? ஆனால், அவரையும் எதிர்ப்பேன்! அது என் சுதர்மம்! ஐயா, இலக்கணம் படிப்பதற்கு! அதனையே மேடையில் பேசினால் யார் ரசிப்பார்? நீங்கள் சொன்ன வர்ணம், ஜாவளி போன்றவை இலக்கணம். நன்னூலைப் படித்துவிட்டு நன்னூலையே எழுதினால் என்ன பயன்? காப்பியம் எழுத வேண்டும்! மக்களை வயப்படுத்தாத எதுவுமே நீடிப்பதில்லை. மக்களோடு இரண்டறக் கலவாத எதுவுமே காலத்தை வெல்வதில்லை! குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் மட்டுமே பிறமொழிப் பாடல்கள் குபேர சம்பத்தாக இருக்கலாம்! ஆனால், மக்களுக்குப் புரிகிற மொழியில் என்றைக்குப் பாடுகிற நிலை வருகிறதோ அன்றுதான் சங்கீதம் பரிமளிக்கும். இதிலும் நான் கொஞ்சம் வித்தியாசப்படுகிறேன். கடவுளைப் பாடுவதை நான் வெறுக்கவில்லை. அது துதிப்பாடலாக இருக்கட்டும். அதற் காக கச்சேரி முழுவதுமே இதனைப் பாடினால் இருக்கிற பக்தியைக்கூட நாம் இழந்துவிடச் செய்கிற பாவகாரியத்தைச் செய்கிறோம்! நான் மனிதர்களைப் பாடுகிறேன்; மனித வாழ்வைப் பாடுகிறேன். நாட்டு முன்னேற்றத்தைப் பாடு கிறேன். பாடுவதிலும் ஒரு புதுமுறையைக் கையாளகிறேன். இளங்கோவடிகளுக்கும் கம்பனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பகுத்தறிந்தால் கானல் வரிக்கும் சுந்தர காண்டத்துக்குமுள்ள வித்தியாசம் புரியும்! இதனையே ஏன் இசைமுறையில் வித்தியாசப்படுத்தக் கூடாது? காளி தாசனுக்கும் பவபூபதிக்கும் உள்ள வேறுபாடு அறிந்தால் இசையின் கூறுபாடுகளிலும் ஒரு புதிய கோலம் வரைந்து பார்க்கலாம்! ஒரே மாதிரியான கச்சேரி பாணியென்பது இன்றைக்கு இனிப்பாக இருக்கலாம். நாளை கசந்துவிடும்! என் குருநாதர் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர் கூட நான் மரபை மீறுவதாகக் கோபப்பட்டதாகக் கேள்வி! நான் கவலைப் படவில்லை. நான் மக்கள் பாடகி! என் குருநாதர் தொல் காப்பியர்; நான் கம்பன். விளக்கம் போதும் என்று நினைக் கிறேன்!”
ஆனைய்யாவின் ஒரு புருவம் ஆச்சரியத்தாலும், மறு புருவம் அதிர்ச்சியாலும் நெளிகின்றன.
ஓ.. இந்த இளம் பருவத்தில் இந்தப் பெண்ணுக்கு இத்துணை பக்குவ முதிர்ச்சியா?
எல்லோரும் சூரியனுக்காகக் கோலம் போட்டால், இந்தக் குறிஞ்சி, சூரியனைப் பிடித்தல்லவா சூரியகாந்தி ராகக் கோலம் போடுகிறாள்!
“தவறாகப் பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங் கள் ஐயா!”
ஆனைய்யா பதில் ஏதும் சொல்லாமல், அவர் செய்த செயல்தான் பலரைத் தூக்கிவாரிப் போடச் செய்து விட்டது. என்ன செய்தார்?
கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“ஐயா!”
அக்கினிக் குஞ்சு அலறிப் போனது.
ஆனைய்யா தோலுரித்த உண்மையைத் தொடுக்கிறார். ‘குறிஞ்சி! நான் உன்னைக் கும்பிடவில்லை; மூன்று வயதில் ஞானப்பாலுண்டு தோடுடைய செவியனைப் பாடினானே தமிழ் ஞானசம்பந்தன், அவனை உன்னுருவில் பார்த்துக் கும்பிட்டேன்! நான் உன் பாட்டைக் கேட்டு பரமானந்திக்கவே வந்தேனேயல்லாது, சரபோஜி மன்னர் அனுப்பிய தூதுவனாக, தயவு செய்து எண்ணிவிடாதே! அப்படி வந்திருந்தால் எனது ‘ஐயா சகோதரர்கள்’ சகிதமாக வந்திருப்பேன்.பக்கத்திலிருக்கும் மகாராஜபுரத்தில் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வந்தவன். நீ வருவதாகக் கேள்விப் பட்டேன். இந்தத் தமிழிப்பாவையைத் தரிசிக்கலாமே என்று வந்தேன்!”
“ஐயா! தரிசனம் என்பது பெரிய வார்த்தை!”
“நீயோ பெரியவளாக என் நெஞ்சில் உயர்ந்து விட் டாயே! நல்லது குறிஞ்சி! ஜனங்கள் உனது பாட்டைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்; இந்தக் கிழவனோடு மேலும் பேசினால் பொறுமை இழந்து விடுவார்கள். நான் உனது வயதையும் பருவத்தையும் வைத்துத் தவறாக சரபோஜி அரண்மனையில் விமரிசித்து இருந்தால் அதற்காக நாணப் பாடுகிறேன். எந்தரோ மகானுபாவுலு! போய் பாடு! என் மனம் குளிரத் தமிழில் பாடு!”
தமிழில் பாடு…
உங்களுக்காகத் தெலுங்கிலும் பாடுகிறேன் என்று கூறத் தான் வாய் திறந்தாள். ஆனால் தமிழமர்ந்த நாவு தயங்கி விட்டது.
மீண்டும் ஐயாவின் கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டே குறிஞ்சியும் ஞானசுந்தரமும் அரங்கில் அமர்ந்தனர்.
எள் விழுந்தால் ஓசை கேட்கிற அமைதி.
தம்பூரின் சுருதி, அமைதியை ஆராதிக்கிறது.
ஞானசுந்தரத்தின் காதுகளில் குறிஞ்சி ஏதோ கிசுகிசுக் கிறாள். அவனது இதழ்களில் தன்யாசி ராகப் புன்முறுவல். பநிச்தா… மபகாரிசா… சகமபா… நிச்க்ா… ரிச்ாநிதபா… மகாரிசா… நிதா… பநிசா…
ஞானசுந்தரம் ஆரம்பத்திலேயே சுரமாகவே தன்யாசியை அறிமுகம் செய்து நிறுத்த…
குறிஞ்சி ஆலாபனையாக தன்யாசி ராகத்தைப் பிழியோ பிழியென்று பிழிந்து சாற்றைப் பருகச் செய்கிறாள்; இனிக்க இனிக்கப் பருகச் செய்கிறாள்!
எங்கும் ‘ஆகா’ ஒலிகள்.
ஆனைய்யாவோ, “தாயே! மங்களாம்பிகே! நீதான் குறிஞ்சி ரூபத்தில் பிறந்திருக்கிறாயோ!” என்று முனகி ஆனந்தக் கண்ணீர் மல்குகிறார்.
“அக்காலத்தில் மிகப் பிரசித்தமான தமிழ்ப்பாடல் ஆனைய்யா இயற்றிய தன்யாசி ராகப் பாடலான ‘பருவம் பார்க்க நியாயமா?’ என்பது.
அதனையே குறிஞ்சிப் பாடத் தொடங்க…
ஆ! எழுந்த கரவொலிகள் கேட்டுக் கொள்ளிடமே, கொள்ள இடமின்றி புரண்டோடும் நீர் மடையை உடைத் துக் கொண்டதோ என்பது போன்ற உணர்வை ஏற்படுத் தியது.
மெய்சிலிர்த்த அதிர்ச்சி கண்டார் மேதை ஆனைய்யா. எந்த நேரம் பார்த்து எந்தப் பாடலைப் பாடி என்ன கேள்வி கேட்கிறாள்?
தான் எழுதிய பாடலையே பாடித் தன்னையே ‘பருவம் பார்க்க நியாயமா?” என்று யாசிக்கிறாளே! அதுவும் தன் னையே யாசிக்கும் உள்ளத்தை உருக்கும் தன்யாசி ராகத் தில் இப்பாடலை நாம் தன்யாசி ராகத்தில் உருவாக்கி யதன் பயனை இப்போதல்லவா அடைந்து அனுபவிக்க நேர்ந்திருக்கிறது! ஏ! மங்களாம்பிகே! அகஸ்தீஸ்வரப் பெருமானே! ‘எனது பருவத்தைப் பார்த்து சங்கீத எடை போடுவது என்ன நியாயம்? என்று கேட்காமல் கேட் கிறாளே இவள்!
குறிஞ்சியும் ஞானசுந்தரமும் ஏதோ இசைச் சந்நதம் வந்தவர்களைப் போல மாறி மாறிப் போட்டியிட்டுப் பாடலைச் சுரவித்நியாசங்களைப் புதுமுறையில் இணைத் துப் பாடிய காட்சி…
இடையே பக்க மேளங்களும், புதிய கதியில் வரைந்த கோலம்…
*இக்காலத்திலும் மிகப்பிரசித்தம்.
கொசுக்கள் கூட, பிளந்தவர்கள் வாயில் நுழையாது மயங்கி அவரவர் மடிகளில் விழுந்து போயின. ஆங்காங்கே எரியும் தீப்பந்தங்கள் கூட அசைய மறுத்தன.
ஓ…! எந்தரோ மகானுபாவுலு…!
ஆனைய்யா அந்த அற்புத சங்கீதத்தை மக்கள் ரசிக்கும் வண்ணம் பாடிய – எளிமைப்படுத்திய சங்கீதத்தைத் தாய் மொழியில் பாடுகிற சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே தியாகராஜ சுவாமிகளின் இந்த ‘எந்தரோ மகானுபாவுலும் பாடிய சம்பவத்தை மனத்திரையில் இசைச் சித்திரமாய் வரைந்து பார்த்துக் கொள்கிறார்.
ஓ… சங்கீதம் என்றால் இதுதானோ?…
திருவிதாங்கூர் மன்னர் சுவாதித் திருதாள் மகாராஜா. தியாகப் பிரும்மத்தைத் தமது அரண்மனைக்கு எழுந் தருளுமாறு வேண்டி, இசையின் இமயமான ஸ்ரீ கோவிந்த மாராரை அனுப்பி வைக்கிறார்.
சரபோஜியையே மறுத்து விட்டவர், இந்தச் சுவாதித் திருநாளையா ஏற்கப் போகிறார்?
இசையின் இமயமான ஷட் (ஆறு) காலப் பல்லவி பாடுவதில் ஜாம்பவானான கோவிந்தமாராரை தியாகப் பிரும்மம் நன்றாகவே அறிவார். எனவே, அந்தப் பல்லவி யைப் பாடி காட்ட வேண்டிக் கொள்ள, மாராரும் சபை நடுவே ஸ்ரீ ராகத்தில் அந்தப் பயங்கரச் சாதனை நிறைந்த பல்லவியைப் பாடுகிறார். அதுவும் ஷட் (ஆறு) காலம் பாடுகிறார்.
பல்லவி என்பது பாடலின் முதல் வரி என்பதற்கும் பெயர்; இசையின் கடைசி இலக்கணத்துக்கும் பெயர். சுருதி ஞானம் பெறுவதைவிட “லயஞானம் கடினம்.
இது மறைந்த மகாவித்துவான்கள் கதைனாப்பிள்ளை, சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையுடன் மறைந்து போயிற்று. ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது என் குருகுல நண்பன் மதுரை சோமுவிடம். இதுவும் மறைந்து போயிற்று. இதனால் ஏனையவரிடம் இல்லை என்பதாகவல்ல அருத்தம், சில நாதசுர மேதைகளிடம் என்றும் இருக்கும்.
சுருதிஞானம் லயஞானம் இரண்டும் பெறுவது என்பது கலைமகளின் அபரிமிதமான அருள் பெற்றவராக இருக்க வேண்டும்.
கோவிந்தமாரார் பாடி முடித்ததும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருளைப் பெற்ற தியாகப் பிரும்மம், மெய் மறந்து கரம் கூப்பித் தொழுகிறார்.
ஆ! இதுவல்லவோ சங்கீதம்! அசுர சாதனை என்பது இதுதானோ? லட்சணமான சங்கீத மேன்மை லயத்தில் தான் அடங்கி இருக்கிறதோ?
“மாராரே! இப்பேர்ப்பட்ட மகாவித்துவானைப் பெற்ற உங்கள் சுவாதித் திருநாள் மகாராஜன் என்னை அழைக்க வேண்டிய அவசியமில்லையே!
மாரார் கரம் கூப்பிச் சொன்னார்.
“பிரும்மமே! நாங்கள் பாடுகிற சங்கீதம் பாறைகளை உடைப்பது போன்றது. நீங்கள் பாடுகிற சங்கீதம் பனித் துளிகளை அகற்றுவது போன்றது. எங்கள் மகாராஜா தங்கள்பால் பக்திகொண்டு அழைப்பு விடுத்து இருக் கிறார்”
ஏழுமலையான் உயரத்துக்கு எட்டிய சங்கீதமான கோவிந்தமாரார் எத்தனையோ படிகள் இறங்கி. பாதாளத் தில் நின்று சொன்ன பதிலைக் கேட்டு பாகாய் உருகிப் போனார் தியாகப் பிரும்மம்.
“வருவேன்; வயது இடம் தரவில்லை; மன்னிக்கவும். நீங்கள் சங்கீத மகான். “சங்கீத மகான்!” என்று மெய்ப் புளகம் கண்ட தியாகராஜ சுவாமிகள் அக்கணமே பாடு கிதார்; எந்தரோ மகானுபாவுலு…”
அதே ஸ்ரீராகத்தில் பாடுகிறார். ‘மகான்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள்! அவர்களனைவருக்குமே எனது வணக் கங்கள்!’… பாடலின் அர்த்தம்.
கண்களில் நீர் ஆனந்தமாகப் பெருக மகாவித்துவான் ஆனைய்யா, குறிஞ்சியின் குயிலோசையை ரசித்தவண்ணம், ‘எந்தரோ மகானுபாவுலு’வை நினைத்துப் பார்க்கிறார்…
மகத்துவம் எங்கு உதயமாகிறது என்பதையும் மனத் தில் அசைபோட்டுப் பூரித்துப் போகிறார்.
ஓ…நாம் நியாய அநியாயங்களைப் பாராது இவளை அரண்மனையில் விமரிசித்து விட்டோமோ!
ஆனைய்யா இவ்வாறு நினைக்கையில்…
சற்றும் எதிர்பாராமல், தன்யாசியில் பாடி வந்த குறிஞ்சி, சரணம் வருகிறபோது வேண்டுமென்றே ஒரு மாறுதலுக்குத் தெலுங்கில் பாடவே வியந்து போகாதார் யார் என்பதைவிட, வியர்த்துப் போகாதார் யார் என்று தான் சொல்ல வேண்டும்.
இது என்ன கொள்கைக்கு மாறான பிறமொழிப் பாடல்? மக்களிடையே புரியாத மொழியில் பாட வேண்டாம் என்கிற பலத்த எதிர்ப்பு; மிகச் சிலருக்கு மட்டுமே புரி கிறது!
பார்த்தீர்களா! மக்களுக்குப் புரிகிற மொழியில் பாடு கிற நியாயமும், புரியாத மொழியில் பாடுகிற அநியாய மும் என்பதைச் சான்றாகக் காட்டுவது போல குறிஞ்சி தெலுங்கில் பாடத் தொடங்கினாளோ?
இல்லவே இல்லை; பருவம் பார்ப்பதிலும் நியாய- அநியாயம் வேண்டாமா என்பதை ஆனைய்யாவுக்குப் புரிய வைக்கவே பாடினாள்.
அதே தன்யாசி ராகத்தில் தியாகராஜ சுவாமிகள் பாடிய பாடலின் சரணம் அது…
நியாயா நியாயமு, தெலுசுனு ஜகமுலு’ நியாயம்- அந்நியாயம் எது என்பது உலகுக்குத் தெரியும்!
சரணம் பாடி.. அதே தீர்த்தனையின் பல்லவியான. ‘சங்கீத ஞானமு, பக்தி வினா… சன்மார்க்கமு கலதே… மனஸா!” என்று பாடியவள் வசனத்தால் விளக்குகிறாள்.
‘பக்தியும் சன்மார்க்கமும் மனத்தில் இல்லை என்றால் சங்கீத ஞானம் எவர்க்குக் கிடைக்கும்? அது மூன்று வயது ஞான சம்பந்தரானால் என்ன? பதினெட்டு வயது குறிஞ்சியானால் என்ன??
எங்கும் ஒரே கரகோஷம்.
ஆனையயாவும் தம்மை மறந்து கரவொலி எழுப்புகிறார்.
கச்சேரி முடிந்து அனைவரும் அன்புடன் விடைபெறு கிறார்கள். ஆனைய்யா ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர் வதித்து விடைபெறுகிறார்.
அப்போது பார்த்து ஒருவன் ஓர் ஓலை நறுக்கைக் கொண்டு வந்து குறிஞ்சியிடம் நீட்டினான்.
அந்த ஓலை நறுக்கைப் படித்துப் பார்த்த குறிஞ்சி யின் நெஞ்சில் அதுவரை இருந்த அமைதி அலைமோதத் தொடங்கி விட்டது.
இராகம்-9
முக்தாம்பரி
ஓலையில் ராஜகாந்தி ரகசியம் பேசினான்.
‘இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் உன்னைச் சந்திக் கிறேன்; அவசரமானது; அவசியமானது – ராஜகாந்தி,’
நெஞ்சு ஏன் அலைமோதாது?
ஓலையைக் கொண்டு வந்தவன் ராஜகாந்தியின் ஆள். கொடுத்தது போலவே ஓலையைத் திரும்பப் பெற்றுக் கொண்டும் புறப்பட்டு விட்டான்.
இது ஞானசுந்தரத்துக்கும் தெரியாது; தெரியபடுத்தவு மில்லை. கேட்டதற்கு ‘காலையில் பேசிக் கொள்ளலாமே!’ என்று மழுப்பி விட்டாள்.
அந்த மாளிகையில் அனைவரும் விருந்துண்டு அயர்ந்து நித்திரையில் கனவுக் கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அபசுரமாகக் குறட்டையொலிகளையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
தோட்டத்து வாசற்படிக்குச் சற்றே தள்ளியிருந்த புன்னை மரத்தடியின் வேரின் மேலமர்ந்து விழித்துக் கொண்டு ராஜகாந்தியின் வருகைக்காகக் காத்திருக்கிறாள் குறிஞ்சி. கண்களோடு இமைகள் தனி ஆவர்த்தனம் நடத்துகின்றன. தூக்கம். இருந்தாலும் என்ன செய்ய?
எதற்காக ராஜகாந்தி வரவேண்டும்?
மீண்டும் அகப்பட்டுக் கொள்ளவா?
வேலியோரமாக இருந்த இருட்டில் சலசலப்பு, ஓர் உருவம் மெல்ல அசைந்து வருவது தெரிகிறது: கரிய போர்வை. ராஜகாந்தியாகத்தானிருக்க வேண்டும். வேறு யார் வரப்போகிறார்கள்?
குறிஞ்சி எழுந்து நின்று கொண்டாள்.
கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பேய் பிசாசுகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்த காலம் அது.
வானில் மிதக்கும் வெள்ளித்தட்டு வேறு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அருகே வந்து நின்ற உருவம் கரிய போர்வையை நீக்குகிறது.
ஆ! ராஜகாந்தி! அந்த உருண்டு திரண்ட கண்களும் கனத்து மதர்த்த மீசையும், மேல்நோக்கி அள்ளிச் செருகிய கூந்தலும்…
முன்பு கடோத்கஜனாக நினைத்த குறிஞ்சி. இப்போது ஐயனாரப்பனாக உருவகப்படுத்திக் கவனிக்கிறாள்.
“நீ போகலையா?”
“இல்லை; ‘குற்றாலக் குறிஞ்சி’ ராகம் பாடப் போவ தில்லை என்று கேள்விப்பட்டேன். ஏன் போக வேண்டும்? மங்களம் பாடுகிறவரை மனநிறைவோடு கச்சேரியை ரசித்தேன். ஆ! மகளே! அந்த ஆனைய்யாவை அசத்தி விட்டாய்! மகா கர்வம் படைத்த ஆட்களில் அந்த ஆளும் ஒருவன்! பருவம் பார்க்க நியாயமா என்று பாடினாயே… பலே ஜோர்! ஏதோ தன்யாசி ராகம்னு பேசிக் கொண்டார் கள். அதைவிட நியாய அநியாயம் இந்த உலகத்துக்குத் தெரியும் என்று பாடினே பாரு பாதி பாட்டு வரைக் கும் ஆனைய்யா பாட்டும் பாடி படார்னு தெலுங்குல பாடினது ‘எனக்கு ஒண்ணும் தெலுங்கு தெரியாம இல்லேடா கழுதைகளா’ என்று செவுட்டுலே அறைஞ்சா மாதிரி இருந்தது!”
குறிஞ்சியின் நீலவிழிகளில் அதுவரை ஆவர்த்தனம் செய்து வந்த நித்திரை ஜதிகள், எங்கோ ஓடி மறைந்து விட்டன. அங்கே நீர்த்திரை.
ஆ! கொள்ளைக்காரனுக்கு இப்படி ஒரு சங்கீத ரசனையா? அல்லது இந்தக் கொள்ளைக்காரனையும் ரசிகனாக்கியது தனது ஏழிசை முகவரியா?
ஓ… பிரத்தியங்கிரா பத்திரகாளி! நீ கொடுத்த வரப் பிரசாதம்!
‘ராஜகாந்தி ! நீ இப்படியே என் சங்கீதப் பித்துப் பிடித்து அலைந்து எங்காவது சரபோஜியிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய்!”
“ஆ… சரபோஜி! பொல்லாத சரபோஜி! எனக்கு அவன் நிலாப்பூச்சி விளையாட்டு; பச்சை குதிரை விளையாட்டு மாதிரி! அன்றைக்குக் குற்றாலத்தில் என்னை அடிமைப் படுத்த வேண்டும்னு ஒரு ராகம் பாடினியே குற்றாலக் குறிஞ்சி… அது ஒன்றுக்குத்தான் நான் அகப்படுவேன்; மற்றபடி என்னைப் பிடிக்கிறதும் ஒன்றுதான்; நிலாவைப் பிடிக்கிறதும் ஒன்றுதான்! இப்பவும் நான் ஏன் உன்னை அவசரமா சந்திச்சேன் தெரியுமா?”
“அதை முதல்லே சொல்லு!”
“பயப்பட மாட்டியே?”
“நீ இருக்கிறபோது எனக்கென்ன பயம்?”
நீ இருக்கிறபோது எனக்கென்ன பயம்?
‘ஆ! எந்தச் சங்கீதம் என்னை அகப்படச்செய்ததோ அதே சங்கீதம் என்னை விடுவிக்கும்’ என்று நாம் சொன்ன பதில் போலிருக்கிறதே!
“என்ன ராஜகாந்தி தயக்கம்?”
“எல்லா இடங்களிலும் என்னால் உதவிட முடியுமா என்று தான் தயங்குகிறேன். நீ செல்கிற இடங்களுக்கெல்லாம் என்னால் வந்து கொண்டிருக்க முடியுமா என்றுதான் தயங்குகிறேன். இங்கே நான் வந்தது என் பெயரில் ஏதோ ராகம் உண்டு என்று நீ சொல்ல, அதைக் கேட்க நான் வந்தேன்.”
“எப்படி இருந்தது?”
“அந்த இனிமையை ரசித்தபோது என் பெயரையே மாற்றிக் கொள்ளலாமா என்று தோன்றியது.”
“இதைவிட உன் குணத்தை மாற்றிக் கொண்டால்?”
“அப்படி என்ன மகளே பொல்லாத குணம் படைத் தவன் நான்? ஐந்து சக்கரத்துக்கு ஓர் அழகிய பெண்ணை விற்கும் கொடுமையான காலமாகி விட்டதே என்று நான் கொள்ளைக்காரனாக – தீவிரவாதியாக மாறியது தவறா? ஒரு ஏக்கர் தஞ்சை நிலம் இரு சக்கரத்து (ரூபாய்)க்கு விலை போகிற இந்தக் காலத்தில், வறுமை தாண்டவமா டலாமா என்று வன்முறைப் புரட்சிக்காரனாக மாறியது வெள்ளையனைவிட நான் கொள்ளையனா? நாயக்கன் ஆண்டான்; இஸ்லாமியன் ஆண்டான்; மராட்டியன் ஆண்டு கொண்டு இருக்கிறான்; இப்போது வெள்ளையன் வெடி வைத்துக் கொண்டிருக்கிறான்! இந்தத் தமிழ்நாட்டுத் தலையெழுத்து – தமிழ்மொழியின் தலையெழுத்து இப்படித்தான் அழிய வேண்டுமென் றால், இந்த நாட்டு மானம் மரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் ராஜகாந்தியாக மாற வேண்டும்; மாறியே தீர வேண்டும்!”
உணர்ச்சி வயப்பட்டுப் பேசிய ராஜகாந்தியின் கழுத்தை இடது கரத்தால் பற்றி வலது கரத்தால் அவனது வாயைப் பொத்தினாள் குறிஞ்சி. அவளது கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக் கொண்டிருக்கும் காவிரியின் நீர்ப் பிரவாகம்! சத்தம் கேட்டு எவராவது வந்து விட்டால்?
ஆ! இவன் ஒரு புதிய திருக்குறளைத் தீட்டுகிறான்…
குறிஞ்சியின் குறிஞ்சி மலர் போன்ற மென்மையான தொடுவுணர்வை ஸ்பரிசத்தை தேகத்தில் கண்ட ராஜ காந்தி, “மகளே! நான் பெறமால் பெற்ற மகளே! நீ தொட் டதால் ராஜகாந்தியின் கொள்கை தூய்மையுடையது என்பது நிரூபணமாய் விட்டது! போகட்டும். சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுச் செல்கிறேன். ஆனாலும் பயப் படாதே! ராஜகாந்தியின் உயிர் உன்னிலும் பெரிதல்ல! நீ தஞ்சை செல்லும் வழியில், புதியதாக வந்திருக்கிறானே உதவி கலெக்டர் சாம்சன்… அவன் உன்னைக் கடத்தப் போகிறான்!”
“ராஜகாந்தி!”
“பயப்படாதே மகளே ! உன்பால் நான் அடிமை கொண்டு விட்டது இதற்குள் தமிழகம் முழுவதுமே தெரிந்து விட்டது. கும்பினி வெளியிடும் செய்தித்தாளிலும் பிரசுரமாகி விட்டதாம்! ஆகவே, உன்னைக் கடத்தி, அதன் மூலம் என்னைப் பிடிக்க முடிவு செய்திருக்கிறானாம் – உதவி கலெக்டர் சாம்சன்.”
“நீ சரணடையாவிட்டால்?”
“உன் கற்பு அவனுக்குச் சரணடைய வேண்டும்.” “ராஜகாந்தி.”
“மகளே! என் மீது உனக்கு நம்பிக்கையில்லை; அதனால் இப்படி அலறி விட்டாய்!”
“நீ அகப்பட்டுக் கொள்வதா?” “உனது கற்பு பறிபோவதா?” “வழி.”
“நீ செல்கிற வழியில் ராஜகாந்தி அது குறித்துத் சிந்திப் பான். எவரிடமும் சொல்லாதே! தைரியமாகப் பயணப் படு ! வாலி, தனது வாலில் ராவணனை முடித்துத் தூக்கி வந்து குழந்தைகளுக்குப் பொம்மை விளையாட்டாக்கு வான் என்பது தெருக்கூத்து! இந்த ராஜகாந்திக்கு வால் இல்லை; வாள் உண்டு. சரபோஜியையே நீ விளையாடும் பொம்மையாக்குவேன். தைரியமாகப் பயணப்படு”
ராஜகாந்தி மேலும் நேரம் கடத்தாமல் குறிஞ்சியின் தாடையைத் தட்டிக் கொடுத்துவிட்டு வேகமாக விரைந் தான்.
குறிஞ்சி படுக்கை அறை நாடி நடந்தாள். எங்கே தூக்கம் வரப் போகிறது?
தஞ்சைக்குத் தெற்கே ஏறத்தாழ இருபது கல் தொலை வில் பட்டுக்கோட்டைக்குச் செல்லும் ராஜபாதையில் இருந்தது அந்த ‘ஒருத்தி நாடு. அதுதான் குறிஞ்சியின் இப்போதைய குடியிருப்புத் தலம்.
அந்த ஒருத்தி நாடும், அங்கே முன்னொரு காலத்தில் வாழ்ந்த சரபோஜியின் அருமைக் காதலி முக்தாம்பாளின் காப்பியமனைய கதையும், ‘முத்தாம்பரி எனும் அபூர்வ ராகத்துக்குச் சமமான கதை! சரபோஜி மன்னருக்கே பிடித்த தோடி ராகத்தில் பிறந்த ஜன்யமல்லவா? ஆனால், அந்த ஒருத்தி நாட்டுப் பேரழகி முக்தாம்பாளின் ஜன் யமும் ஜனனமும், மரணமும்தான் குறிஞ்சிக்கு சாபோ ஜியின் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணங்களில் ஒன்று. அந்தக் கதையே வேறு; அதன் காரணமே வேறு; அது ஒரு பழங்கதை.
இப்போது குறிஞ்சி அந்த முக்தாம்பரி ராகத்தை அசை போட்டுப் பெருமூச்சு விட்டவண்ணம் பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.
விலாங்குடி வழியாகக் குதிரைகள் பூட்டிய கோச்சு வண்டி வேகவேகமாக வருகிறது. ஏன் வேகத்தைக் கூட்டி ஓட்டச் சொல்லுகிறாள் குறிஞ்சி? ஒருவருக்குமே புரியவில்லை.
ஒரு கட்டத்துக்கு வந்ததும் திடுமென்று தொலைதூரத் தில், புரவிகளில் வரிசை கட்டி வழிமறித்துப் பல கும்பி னிச் சிப்பாய்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் நின்றனர்.
அரண்டு போகாதார் யார்?
*இன்றைய ஓரத்த நாடு. + ஆ: சரிகமபநிச் ; அ: ச்நிதமகரிச. கம்பெனியை அந்நாளில் கும்பினி என்பர்.
வேகமாக ஓடிவந்த கோச்சு வண்டியும், பின்னால் வந்த குதிரைகள் பூட்டிய கூண்டு வண்டிகளும் வேகம் குறைந்து குறிப்பிட்ட இடத்தில் நின்றன.
உதவி கலெக்டர் சாம்சன், தனது புரவியை லாகவ மாகச் செலுத்திக் கோச்சு வண்டியருகே வந்து நின்று, “ஏ, குறிஞ்சி! வண்டியை அரண்மனையை நோக்கி ஓட்டச் சொல்!” என்றான்.
துணைக்கு வந்த துவிபாஷி மொழி பெயர்க்குமுன், குறிஞ்சிக் குழுவிலிருந்த விஞ்ஞானி ஜான் இறங்கி வந்து ஆங்கிலத்திலேயே கேட்டான்: “காரணம்?”
“நீ ஒரு ஆங்கிலத் துரோகி!”
“இல்லை; இசையின் அடிமை! எங்களை அரண்மனைக்கு அழைக்கும் காரணம்?”
குறிஞ்சியே இப்போது துணிந்து கோச்சிலிருந்து குதித்து ஓடிவந்து, ராஜகாந்தி சொன்னதை அவளாகவே சொல்வது போலச் சொல்லி, “இதுதானே காரணம்?” என்றாள். மொழிபெயர்ப்புக்குப் பிறகு, அவளது கண்களில் அக்கினிப் பொறிகள் ஆங்கிலத்தைப் பொசுக்கின.
“ஆமாம்; ராஜகாந்தியை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் போகலாம். அதுவரை எங்கள் அரண்மனை யில் கௌரவமாக, ஆனால், காவலோடு இருக்கலாம்.”
“ராஜகாந்தி வர மறுத்தால்?”
“வருவான்!”
“வர மறுத்தால்?”
“உன்னைக் கற்பழிப்பேன். அப்போது அச்செய்தி கேட்டுக் கொதித்து ராஜகாந்தி வருவான். சுட்டுப் பொசுக்குவேன். புறப்படுங்கள்!”
சாம்சனின் கர்ஜனை, பயணத்தைத் தஞ்சை அரண்மனை நோக்கித் திருப்பியது.
சரபோஜி மன்னருக்கு, இந்தச் சரித்திரத்தையே எரிக் கும் செய்தி தெரியவரவே, அவரது கலாவிருட்சத்தின் வேரிலேயே தீப்பிடித்தது போலுணர்ந்து திகைப்புக் கண்டார். சகலகலா ஞானியல்லவா? மராட்டியன் என்பது வேறு; மகாகலைமாமணி என்பது வேறு!
திருவிடைமருதூரில் தங்கி இருந்த மகன் இளவரசன் “சிவாஜி காய்ச்சல் கண்டு மருத்துவர்கள் கவனித்து வருவ தாக கேள்விப்பட்டுப் புறப்படவிருந்தார். இந்த நேரத்தில் இப்படி ஓர் இடியா?
அருமை மனைவி அகல்யாபாய் அப்போது அவசர அவசரமாக ஓடிவந்து ஓர் ஓலை நறுக்கை நீட்டுகிறாள். அதை வாசித்த சரபோஜிக்கு மேலும் ஓர் இடி!
ராஜகாந்திதான் எழுதி இருந்தான்.
‘குறிஞ்சி கற்புக்கு ஏதேனும் பங்கம் வருமேயானால் திருவிடை மருதூரிலிருக்கும் உங்கள் மகன் சிவாஜியின் தலையை அரண்மனைக்கு அனுப்பி வைப்பேன்!’
இப்படிக்கு ராஜகாந்தி.
ராணி அகல்யாவின் கண்களைத் துடைக்கிறார் மன்னர் சரபோஜி. எங்கிருந்து வந்து தொலைந்தான் இந்தப் புதிய துணைக் கலெக்டர் சாம்சன்!
சுறுசுறுவென்று முயற்சிகளை மேற்கொள்கிறார் சரபோஜி.
அப்போதைய தஞ்சையின் ஆங்கிலக் கும்பினியின் பிரதிநிதியாக இருந்தவன் ‘ஜான் ஃபைஃப் அவனிடம் முறையிடுகிறார். “என்னதான் நான் நாட்டை அடகு வைத்துவிட்டாலும், நாட்டு மக்களையுமா அடக்கு வைத்து விட்டேன்?” என்று கர்ஜிக்கிறார்.
பிரதிநிதி என்ன செய்வான்?
கலெக்டர் நெல்சனுக்குச் செய்தி பறக்கிறது. சென்னை யிலிருக்கும் கவர்னர் வாஷிங்டனுக்குச் செய்தி உடனடி யாகப் பறக்க வேண்டும். அவ்வளவு வேகமான இறக்கை களை எங்கே தேடுவார் சரபோஜி!
*இரண்டாம் சிவாஜி; முதல் சிவாஜி என்பவர் இந்து மதத்தைக் காத்த புனேயின் ரத்த ஞாயிறு; எனது ‘ரத்த ஞாயிறு நாவல் படிக்க.
+Residence John Fife.
நாளைய மாலைப் போதுக்குள் ராஜகாந்தி சரணடைய வேண்டும். இது தண்டோராவின் பயங்கர நிபந்தனை.
இறக்கைகள் என்ற சொற்கள் உதயம் கண்ட மறுகணம்…
ஆ! “பாஜ், பாஜ்…
அவர் வளர்க்கும் அற்புத ராஜாளிப் பறவை. பிற தேசத்திலிருந்து கொண்டு வந்த அபூர்வ வல்லூறு. அது அவரிடம் பேசும்; அவர் அதனிடம் பேசுவார். மிருகங் களின் பாஷைகளுக்கென்றே பல நூல்களைச் சேகரித்த கலைவேந்தரல்லவா சரபோஜி?
பறவை, மிருகபாஷை அற்புதம் மட்டுமா? பல்வேறு அற்புதங்களைத் திரட்டி அவற்றுக்கென ஒரு நூலகத்தை- இன்றும் இலங்கும் தஞ்சை சரஸ்வதி மகாலை நிறுவிய கலைக் காவலர் சரபோஜி!
வருவது வரட்டு சிந்திப்போம்…
மறுநாள் மாலை; அந்திப்போது அவலமாய் சிரிக்கிறது.
அரண்மனையின் ராஜவாசலான ஜெயவாசலில், ஒரு பலியாட்டைப் போல குறிஞ்சி எனும் இசைக்கொழுந்தை நிற்க வைத்திருக்கிறான் கொடும்பாவியான உதவி கலெக்டர் சாம்சன்.
இதற்குள் கேள்விப்பட்டு, ஒருத்தி நாட்டிலிருந்து ஓடி வந்த வளர்ப்புத் தந்தையான விருபாட்ச கவிராயர் காலில் விழுந்தே கெஞ்சுகிறார்.
ஆ! தமிழ், காலில் விழலாமா? ‘சிவபக்தி விலாசம்’ எழுதிய தவபக்தித் தமிழ், தாள் பணியலாமா? பணிந்து விட்டதே!
*Baj A Falcon : Bhonsale Vamsa Charitra – by V. Sreenivasacharry. B.A. (இதன் படமும் தஞ்சை சரஸ்வதி மகாலில் இருக்கிறது.)
‘கரபேந்திர பூபாளக் குறவஞ்சி’ எனும் காப்பியமெழுதி சரபோஜியைக் குளிரச் செய்த தமிழ்மேதை கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். சினந்து துடித்துப் போகிறார். அவரும் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடுகிறார்.
சரபோஜி மட்டும் என்ன செய்வார்?
கலெக்டர் நெல்சன் ஒரு பெண்பிள்ளைப் பொறுக்கி. மகா கலையினளும், இளமையினளும், அழகியுமான குறிஞ்சியை அனுபவிப்பது குறிஞ்சித் தேனைச் சுவைப் பது போலல்லவா என்று கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான். அவன் சொல்லியனுப்பிய காரணம், ‘ராஜ காந்தி என்கிற கொடிய கொள்ளைக்காரன் முக்கியமே யொழிய உங்கள் சரிகமபதநி முக்கியமல்ல!”
நேரம் நெருங்குகிறது…
ராஜகாந்தி வரப்போவதில்லை.
கலெக்டர் நெல்சனிடமிருந்து சாதகமான பதில் வர வில்லை.
சென்னை கவர்னர் வாஷிங்டனுக்கு இந்நேரம் செய்தி சென்றிருக்குமோ என்னமோ?
குறிஞ்சியைப் பார்க்கப் பார்க்க சரபோஜி மன்னருக்கு அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட பழைய காதலி முக்தாம் பாளின் அழகு ராகமான முக்தாம்பரி கேட்கிறது…
வருவது வரட்டும் என்று ஏதோ ஒரு முடிவின் கீழ் துணிந்து விட்டார்.
– தொடரும்…
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.