(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 28-30 | இராகம் 31-33
இராகம்-31
தோடி
பொழுது விடியும்வரை ராஜகாந்தி ஆறுதல் சொன்னான்; தேறுதல் கூறினான். அதுவரையிலும் எந்த ஆபத்தும் வரவில்லை.
ராஜகாந்தி புறப்பட ஆயத்தமாகிறான்.
மேஜைமீது வெள்ளித் தட்டு; அதனை நிரப்பிய மல்லிகைப்பூ போன்ற “இட்டளிகள்; தேங்காய்ச் சட்டினி; கொத்துமல்லித் துவையல்.
பொய்களையே உடைகளாய் உடுத்திப் பெரிய மனிதர் களான சமூகத்தில், மெய்யில் நெய் விளக்கேற்றும் கொள் ளைக்கார மானுட ஆத்மாவான ராஜகாந்தி, அன்புடன் படைத்த சிற்றுண்டியை உண்ணத் தொடங்கினான்.
“ராஜகாந்தி! உனக்குக் கோழிக் குருமா சமைத்து வைக்கிற வீடல்ல இது; புலைச்சியேயானாலும் புலால் மறுத்தவள். திருவள்ளுவன் பேத்தி நான்!”
ராஜகாந்தி! கலகலவென்று சிரிக்கப் புரை காண்கிறது. தலையில் தட்டுகிறாள் குறிஞ்சி.
மாவை இட்டு அளிப்பதால் இட்டளி என்றாயிற்று என்பது எனது கருத்து,
“நன்றாகத் தட்டு; என் தலையெழுத்தையே தட்டித் தட்டியடக்கியவள் அல்லவா நீ! குறிஞ்சி! உனக்கு அடிமை யான் நாள் முதல், நானும் ஒரு சைவப் பிராணியாகி விட்டேன். குறிஞ்சியின் தந்தை நான்?”
விதிர்த்துப் போயின வேல்விழிகள்.
“நான்தான் உன்னை ராஜகாந்தி என்று பெயர் சொல்லி யழைப்பதிலிருந்து விடுபடவில்லை. பழக்க தோஷம்!”
“சீ!சீ! நீ என் பெயரையா அழைக்கிறாய்? ராஜ காந்தி ராகத்தையல்லவா அழைக்கிறாய் ! இதுதான் நான் மகிழ்கிற ஒரே மகிழ்ச்சி! நீ இப்படியே அழைக்க வேண்டும். குறிஞ்சி! ராத்திரி உன் கையால் ஏன் சோறு சாப்பிட்டேன் தெரியுமா? உனது துயரங்களையெல்லாம் என் வயிற்றில் நிரப்பி ஜீரணிக்கவே!”
குறிஞ்சியின் கண்கள் கலங்கிவிட்டன.
“ஆ! மறுபடியும் கண்ணீரா? இரவு அவ்வளவு சொல்லியும் கண்ணீரா? உன்னைப் பழிவாங்கிய அந்த விதியை நான் சந்திப்பேன்! இழந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதே! நானிருக்கிறேன் என்று சொன்ன சத்தியம் மாறாது! நான் நிசத்தை ரத்தத்தில் அபிஷேகிக் கிறவன்; பொய்யை வியர்வைத் துளிகளால் குளிப்பாட்டு கிறவனல்ல! ஒரு விஷயம் தெரியுமா?”
“என்ன ராஜகாந்தி?”
“உன்னைத் தங்காய், தங்காய் என்று அன்புடன் அழைத்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற தமிழ்ப் பிரசாரகனுக்கு பொருளதவி செய்தேன்! தமிழ், தரித்திர ஒப்பனை செய்து கொள்ளக்கூடாது! இப்போது சில நூற்றாண்டாக அந்நிய மொழி உப்பரிகையில் தலை சீவுகிறது! தமிழ் தனது தலைக்கு எண்ணெயுமில்லா மல் பேன் பிடித்துத் தரையில் புரண்டு அழுகிறது! இது அந்நியர்க்கு இடம் கொடுத்த காலக் கொடுமை!”
குறிஞ்சித் தமிழ், நெஞ்சுள் குமுறுகிறது.
“ராஜகாந்தி இன்னொரு உதவி செய்வாயா?”
“காத்திருக்கிறேன்.”
“திருக்கடவூர் அபிராமிபட்டரும் வறுமையால் வாடுகிறார்.”
“அந்த அக்கிரகாரத்து அதிசயப் பிறவியா? நாளையே இது நடந்தேறும். குறிஞ்சியின் ஆணைகள்தாமே இந்தக் கொள்ளைக்காரனின் சட்டம்! விதி என்னைத் திருப்பதிப் பழி வாங்கும் படலத்துக்கு அனுப்பாமலிருந்தால், இந்தத் தீவினை மூண்டிருக்காது. மீண்டும் சொல்லுகிறேன். அந்த விதியையே நான் சந்திப்பேன். இன்னும் பாக்கி இருப்பவன். தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் நெல்சன்! அந்தக் கலெக்டர் தப்பிவிட்டான்? எங்கே போய்விடப் போகிறான்! அவனைப் பழி வாங்கிவிட்டால், அக் கண முதல் நான் குறிஞ்சிதாசன்.”
“இது விபத்தானது!”
“இல்லை விடுதலைப் போராட்டத்துக்கு ராஜகாந்தி யும் ஓர் அணிலாக இருந்தான் என்கிற பொன் வரிகள்! தமிழ்ப் பெண்கள் ஐந்து ரூபாய்க்கு விலை போகிற அக்கிர மத்தை கரிகாலச் சோழன் கண்டானா? இல்லை. கடைசி காலத்தில் தமிழகத்தை மாலிகாஃபூரிடம் அடகு வைத்த சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் கண்டார்களா? ஆனாலும் அந்த இரு துரோகிகளால் வந்த துர்ப்பாக் கியம்தானே தமிழகச் சரித்திரத்துக்குப் பிடித்த தரித்திரம்! இப்போது மராட்டியன் ஆட்சியில் ஒரு கற்பின் விலை ஐந்து ரூபாயல்ல மகளே ! ஒரு பெண்ணின் விலை!”
ஓ… ராஜகாந்தி இவ்வளவுக்கு விஷய ஞானமுள்ளவ ராக இருக்கிறாரோ! வறுமையை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறாரே!
“குறிஞ்சி! இனி நீ கச்சேரியில் கலந்து கொள்ள வேண்டும். ஞானசுந்தரத்தை இழந்து விட்டதால் நீ ராக சுந்தரங்களை இழந்துவிட முடியுமா? அந்நிய மொழியால் செத்துக் கொண்டு வரும் நமது தெய்வமாத் தமிழ், உன்னாலல்லவா தாயே, உயிர் பெற்றுத் தலைதூக்கி உலவுகிறது! நீ தனித்தே பாடலாம்.
உண்டு முடித்த ராஜகாந்தி எழுந்து கையலம்பிக் கொள்கிறான்.
அப்போது…
வெளியில் ஒரே ஆரவாரச் சத்தம்.
கற்பகம் ஓடோடி வருகிறாள்.
“அம்மா! தஞ்சை மன்னர் சரபோஜி, நம் மாளிகை நோக்கி வருகிறார்.”
சரபோஜி! இங்கு ஏன் வரவேண்டும்?
ராஜகாந்தி யோசிக்கிறான்.
“மகளே! எல்லாம் நன்மைக்கே! சரபோஜியின் வருகை சுரங்கமாகவும் இருக்கலாம்; குகையாகவுமிருக்கலாம். அருகில் உள்ள தனியறைக்குப் பின்புறவாசல் இருக்கிறது! முன்புறக் கதவைப் பெயருக்குப் பூட்டி வை. ஒன்று; சரபோஜி நன்மையாக எதைக் கூறினாலும் தயங்காமல் ஏற்றுக் கொள். தீமையாக ஏதாவது கூறினால், ‘ஒரு நிமிஷம்’ என்ற வார்த்தையை அழுத்தமாகச் சொல்லி யோசிப்பது போல பாவனை செய்! நான் உள்ளிருந்து பூனை உருட்டு வது போல பாத்திரம் ஏதேனும் ஒன்றை உருட்டுவேன். உருட்டினால் ஒப்புக்கொள்; உருட்டவில்லை என்றால் யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிடு! பிறகு நாம் யோசிப்போம். நான் உள்ளிருக்கிற சலனம் மட்டும் உனது கண்களில் தெரியக்கூடாது. கலெக்டர் நெல்சன் என்னைச் சல்லடை போட்டுத் தேடுகிறான்.”
ராஜகாந்தி அறையினுள் நுழைய குறிஞ்சி கதவைப் பூட்டுகிறாள்.
சரபோஜி மன்னர் வெளிவாசலுக்கு வந்துவிட்டார். ஊரே திரண்டு விடுகிறது. ஒருத்திநாடு என்பது அவரது காதல் நாடல்லவா? இப்போது அந்த நாட்டில் நகங்க ளால் பறிக்க முடியாத ஒரு தேவமலரை – இசை மலரை அகங்கள் பறிமாற்றத்தின் மூலம் பறிக்க வந்திருந்தார்.
வெளியே ஓடிச்சென்று முகங்களில் ஏழு சுரங்கள். வான வில் வண்ணமாய் பிரபையிட வரவேற்கிறாள் குறிஞ்சி.
“குறிஞ்சி! கவலைகளை மறந்து என்னை வரவேற் கிறாயே, அதுவே மகிழ்ச்சி! உனது நிலை கேட்டு சரபோஜி மட்டுமா கண்ணீர் விட்டான்? தஞ்சை புரியே அழுதது! ஆறுதல் சொல்ல இப்போதுதான் நேரம் கிடைத்தது. வந்தேன்.”
*சுயநலமான நேரம்’ என்று கூறத்தான் நினைத்தாள்; அவசியமில்லை. அது அநாகரிகம் என்று வாய் மூடிக் கொண்டாள்.
சரபோஜி மன்னர் மட்டுமே குறிஞ்சி மாளிகையுள் நுழைகிறார். அந்தரங்கப் பாதுகாப்பாளர்கள் நுழைவதை அவர் விரும்பாமல் தடுத்து நிறுத்தி விட்டார்.
சரபோஜி மன்னரைப் பிரதான கூடத்துக்கு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்து, தானும் எதிரில் அமர்ந்தாள். அவள் இசைச் சக்கரவர்த்தினியல்லவா?
மாளிகையைச் சுற்றிக் கவனிக்கிறார் சரபோஜி மன்னர். ராகங்களின் சுர ஜாலங்களைப் போல் அலங்கரித்திருந் தாள் குறிஞ்சி.
“சரபோஜியின் கலைநுணுக்கம் மாளிகையில் தெரி கிறது.”
“இல்லை, இல்லை! குறிஞ்சியின் இசை நுணுக்கம் உங்கள் அரண்மனை அடைய முயன்று கொண்டிருக்கிறது.
குறிஞ்சியின் சுயமரியாதையான நிமிரலைக் கண்டு கல கலவென்று சிரித்தார் ராஜா சரபோஜி. தலையில் கனத் திருந்த தலைப்பாகையைக் கழற்றி மேசைமீது வைத்து விட்டு அடர்ந்த மீசையை நீவிவிட்டுக் கொள்கிறார். ஐம்பது வயதை தாண்டியும் கறுத்த ரோமம்; களையான தோடிராக இனிமை அவரது உருவில் அந்த ராசு மூர்ச்சனை ஈரமான காந்தாரமாய் குழைந்து ஒலிக்கத் தான் செய்தது. ‘சரஸீஜ நாபமுராரே’ என்கிற சுவாதித் திருநாள் கிருதியைப் போல!”
“ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய நியாயமான கர்வம்! அதனால்தான் உனது அழகு, ரோஜாவைத் தோற்கடிக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு மகாகவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நமது கம்பன் மாதிரி…”
“மன்னிக்கவும்; நீங்கள் ஆங்கில மகாகவி பற்றிப் பேசுங்கள். தெரிந்து கொள்கிறேன். கம்பன் மாதிரி என்று கூறாதீர்கள்! காரணம் உங்களுக்கு கம்பனைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் பெயர் மட்டுமே தெரியும். கம்பனுக்கு இணையாக முன்னும் பிறந்ததில்லை; பின்னும் பிறக்கப் போவதில்லை; பிரபஞ்சத்திலும் பிறக்கப் போவ தில்லை. இப்போது வில்லியம் ஷேக்ஸ்பியரைப் பற்றிச் சொல்லுங்கள்.”
சரபோஜி நயமாய்ச் சிரித்துக் கொள்கிறார். “உனது தமிழ்ப்பற்றுக்குத் தலைப்பாகையைக் கழற்றிய என் தலை வணங்குகிறது. தலைப்பாகையைக் கழற்றியதே உனது இசைக்கு மரியாதை தரத்தானே? நான் கம்பனைப் படிக்கவில்லை; ஒப்புக் கொள்ளுகிறேன். நீ ஷேக்ஸ்பியரை அறிய மாட்டாய்! கம்பனின் சொற்களில் சாகித்யம் இனிக் கும். ‘ஷேக்ஸ்பியரின் சொற்களில் சங்கீதம் கேட்கும்! அவன் முழுக்க முழுக்க ஒரு கதையைக் கற்பனையாகப் பொய்யுரைக்கவில்லை; முழுக்க முழுக்க ஒரு கதையைத் தழுவவில்லை! சரித்திரங்களில் காணப்பெற்ற சிலவரி களை வைத்துக்கொண்டு தனது வரப்பிரசாதமான கற்பனையால் சமத்காரமான படைப்புகளைச் சாதித்து விட்டுச் சென்றவன். ஆனால் அகராதியில் கற்பனை என்ற சொல்லுக்கு கம்பன் என்று அர்த்தம் எழுத வேண்டும். இதையும் நானறிவேன்!”
“இப்போது இது குறித்துப் பேச அவசியம்?”
*சாபோஜி ஆங்கிலத்தில் மாப்புலமையுடையவர்.
“ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட் என்கிற காதல் நாடகக் காப்பியம் எழுதி இருக்கிறான். அதில் ஜூலியட் என்பவள்பால் ரோமியோ என்பவன் பைத்தியம் கொண் டான். என்னுடைய மகன் சிவாஜி, குறிஞ்சி என்கிற ஜூலியட் பேரில் காதல் கொண்டு பைத்தியமாய் அரண் மனையைச் சுற்றி வருகிறான்! எனவே, நான் காதல் பிச்சை கேட்க வாசற்படியில் நிற்க வேண்டும்! மன்னன் என்பதால் உள்ளே வந்து அமர்ந்து தலைப்பாகையைக் கழற்றி அதனைப் பிட்சாப் பாத்திரமாக்கிக் கேட்கிறேன்!”
மன்னர் சரபோஜியின் கண்கள் கலங்கி விட்டன.
“எனது சோக நிலையறிந்துமா?”
“கவலை என்பது இரவைப் போல நிரந்தர இருட்டல்ல. இது ஒரு மூடிய ‘அறை’ யிருட்டு! சன்னல்களைத் திறந்து விட்டால் ஓடிப்போகிற பொய்யிருட்டு!”
நயமான இந்தச் சொற்களைக் கேட்டு, சரபோஜியின் அறிவுக்குத் தலை வணங்குவதுபோலத் தலையைக் குனிந்து கொண்டாள் குறிஞ்சி.
“குறிஞ்சி! என் மகனும் இலக்கிய அறிவு, இசை யறிவு கொண்டவன். நானும் ஏன் ஷேக்ஸ்பியரைப் பற்றிய பேச்சை எடுத்தேன் ? ஒருநாள் ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட்டை அவன் வாசித்துக் கொண்டிருந்தான் உன் நினைவாகத்தான்! அதிலே ஒரு வரி; ‘ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான்! என்று காதலியைப் பார்த்து காதலன் சொல்கிறான். குறிஞ்சி, குறிஞ்சி என்று கதறினான். நான் பதறியடித்து ஓடினேன். ‘அப்பா! ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான்’ என்கிறான் ரோமியோ ஜூலியட்டை நோக்கி! என்றான். உடன் நான் ‘குறிஞ்சிப் பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் குறிஞ்சிதான்; என்கிறாயாடா?’ என்றேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னார்?”
*அரசனிலும் சாதாரணமானவன்தான். மன்னர் என்று நான் குறிப்பிட்டு வருவது கலைமன்னர்; ஏன், கலைமாமன்னர்.
“இது சாதாரணக் கற்பனை! என் குறிஞ்சி தோடி ராகம்! தோடி ராகத்தை மட்டும் எப்படிப் பாடினாலும்- அதாவது பாஷாங்கமில்லாமல் எப்படிப் பாடினாலும் தோடிதான்! என் குறிஞ்சியும் ஒரு தோடி ராகம்; இந்தப் பாக்கியம் வேறு எந்த ராகத்துக்கும் கிடையாது. என்றான்.
தலை குனிந்த குறிஞ்சி இன்னும் நிமிரவில்லை. ஓ… எவ்வளவு பெரிய சிந்தனை…
“உங்கள் குமாரர் பாஷாங்கமாகி விட்டவர்தானே?”
“அவனது திருமணத்தைச் சொல்லுகிறாயா குறிஞ்சி? தேகத்தால் பாஷாங்கப்படுவதைவிட மோசமானது ஆத்மா வால் பாஷாங்கப்படுவதல்லவா ? நீயும் ஞானசுந்தரத்தை நேசிக்கத்தானே செய்தாய்? ஒரு பாஷாங்கம் இன்னொரு பாஷாங்கத்தையடைகிறபோது, சுத்தமத்திமமும் பிரதிமத் திமமும் சேர்ந்த ராகமாகிறதே யொழிய களங்கம் என்ற சொல்லுக்கே காரணமில்லை! உனது குற்றாலக் குறிஞ்சி ராகமும் பிரதிமத்திலிருந்து ஒரு சுரம் சுத்தயத்திமமான தால் தானே சுவை பட்டது? அது வக்கிரத்தால் அல்லவா வன்மை பெற்றது? என் சிவாஜியும் வக்கிரமல்ல; நீயும் வக்கிரமல்ல! வாழ்க்கை வக்கிரமென்பதை உனது அபூர்வ ராகம் எடுத்துக் காட்டுகிறது! இல்லையா?”
“ஆனாலும் நான் பாஷாங்கமல்ல; ஆத்மா தூய்மை யுடையது. அது பாஷாங்க – களங்கமாவதில்லை. நீங்கள் கூறிய விளக்கத்துக்கு ஒரு திருத்தம் சொன்னேன்!”
குனிந்த குறிஞ்சியின் தலை, நாகத்தின் நிமிரலைப் போல நிமிர்ந்து இடது வலதுமாக அசைத்து நோக்குகிறது. ஆனால் சீற்றமில்லை. திருமணம் என்பதே ஆத்மாவின் இனிய சிருஷ்டிகள் என்பது போன்ற பார்வை அவளது நீல நயனங்களில் நிதரிசனமாகத் தெரிகிறது.
“இப்போது இளவரசர் எப்படி இருக்கிறார்?”
“படுத்த படுக்கையில் ‘குறிஞ்சி, குறிஞ்சி’ என்று உளறு கிறான்! பைத்தியமாக அரண்மனையில் உலவுகிறபோது ‘குற்றாலக் குறிஞ்சி ராகம் கேட்கிறது’ என்று அடிக்கடி கூச்சலிடுகிறான் ! நீ அந்த ராகத்தைப் பாடினால் அவனது சித்தப்பிரமை தெளியும்; தெளிந்து விடும்!”
“அந்த ராகம்…”
“அறிவேன்! சிவகங்கை இளவரசனுக்கு இப்போது அஷ்டமத்துச் சனி! அவனை ஒரு நாளேனும் எனது சிறையில் அடைத்து உன்னிடம் மன்னிப்பு கேட்கச் செய் வேன். அந்த ராகத்தை மீட்க அரண்மனையில் ராணுவம் தயாராக நிற்கிறது! சென்னை கவர்னர் வாஷிங்டனிட மிருந்து உத்தரவு வந்து விட்டது. ராணுவத்துக்குத் தலைமை தாங்குகிறவனே திருச்சி கலெக்டர் நெல்சன்!”
நெல்சன் என்றதும் நெஞ்சு பகீரென்றது குறிஞ்சிக்கு!ராஜ காந்தியின் நெஞ்சுக்குள்ளிருக்கும் நெருப்பல்லவா அவன்?
“என்ன குறிஞ்சி யோசிக்கிறாய்?”
“ராகத்தை மீட்டுத் தந்ததும் சத்தியமாக நன்றியறித லுடன் பாடி உங்கள் மகனுடைய பைத்தியத்தைப் போக்கு வேன்! இதில் சந்தேகத்துக்கு இரண்டு சந்தர்ப்பங்களே கிடையாது! ஆனால் மணப்பது என்பது… ஒரு நிமிஷம் அவகாசம் தாருங்கள் யோசிக்கிறேன்!”
அழுத்தமாகக் கூறி மௌனமாக இருக்கிறாள் குறிஞ்சி. உள்ளிருந்து எந்தவிதமான பாத்திரம் உருளுகிற சத்தமும் கேட்கவில்லை.
இப்போது அவள் சொன்னாள்:
“எனக்கென்று யாருமில்லாவிட்டாலும் என்னை நேசிப் பவர் ஒருவர் இருக்கிறார். நான் பூசிப்பவர் ஒருவர் இருக் கிறார். கலந்து ஆலோசித்து முடிவு சொல்வேன்!”
“இருவரையும் நானறிவேன்; ராஜகாந்தி; ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியான ஜகத்குரு. நான் ராஜகாந்தி யைப் பார்த்து என் ரணத்தை இங்கிருந்தே ஆற்றிக் கொள்கிறேன். இந்த ஒருத்தி நாடே என்னைக் காதல் ரணப்படுத்திய நாடல்லவா? அதனால்தான் இந்த ஊரைச் சுகபோகத்துடன், சத்திரங்களும், கல்விச் சாலை களுமாக வைத்திருக்கிறேன்! என் காதலி முக்தாம்பாள் கேட்ட வரம்! இப்போது எனது மகன் காதலுக்காக நான் ராஜகாந்தியை நோக்கி இங்கிருந்தே வரம் கேட்கிறேன்! இத்துடன் கும்பகோணம் சென்று ஸ்ரீ ஆசார்யாள் பெருமானையும் வணங்கி வரம் கேட்பேன். அவர்கள் இசைந்தால் என் மகனை நீ மணக்கலாம்! இசையவில்லை யென்றால், நீ இசையை மணந்து இசை பெறலாம்! நீ ஒன்றை உநுதியாகவும் தஞ்சைப் பெருவுடையான் மீது ஆணையிட்டும் சொல்வேன்! நீ ராணியானால், முதலுரிமை உனக்கே உண்டு! கல்யாண மகால் என்கிற காமக்கிழத்திகள் வாழ் கழுமுள்ளில் அமர்த்த மாட்டேன்! உன் வயிற்றில் உதிக்கும் சூரியனுக்கே அரசுரிமை என்று சாசனம் எழுதி வைப்பேன்! தஞ்சை அரண்மனையில் உன் ராகங்கள்தாம் சட்டங்கள் !”
சரபோஜி மன்னரின் புத்திரபாசம் கண்களில் புனித கங்கையாய்ப் புரளுகிறது.
“முதலில் ராகத்தை மீட்டுக் கொடுங்கள்; பிறகு உங்கள் சோகத்துக்கான முடிவைக் கூடுமானவரை சுகமாகச் சொல்ல முயல்கிறேன்!”
“எப்போது தஞ்சையரண்மனைக்கு வருகிறாய்? நீ வந்த மறுகணமே ராணுவம் சிவகங்கை நோக்கி புறப் படுகிறது!”
“இன்று மாலை தஞ்சையில் இருப்பேன்; நாளை ராணுவம் புறப்படலாம்.”
“வாழ்க! குறிஞ்சி, வாழ்க!”
சரபோஜி மன்னர் புறப்பட எழுந்து கொண்டார்.
“என் வீட்டுக்கு வந்து எதுவும் சாப்பிடாமல் போகிறீர் களே!”
“என் மகன் மரணத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறான். நீ அரண்மனைக்கு வந்து அவனை மருந்து சாப்பிடச் செய்! பிறகு உன்னுடன் அமர்ந்து நான் விருந்து சாப்பிடுகிறேன்!”
சரபோஜி மன்னர் புறப்பட்டார்.
அப்போதுதான் அவர் மெல்லச் சிரித்து மெதுவாகச் சொன்னார்: “குறிஞ்சி! நான் இங்கிருந்தே ‘சொல்கிறேன்’ என்று அடிக்கடி ராஜகாந்தி பற்றிச் சொன்னது எதற் காகத் தெரியுமா? உள்ளே அவன் இருக்கிறான். நானறி வேன். ஆயினும் அவன் எனது நல்ல நண்பன். காட்டிக் கொடுக்க மாட்டேன்! கலெக்டர் நெல்சன் விஷயத்தில் அவனது கவனத்தை மறுபரிசீலனை செய்யச் சொல்!”
அதிர்ந்து போன குறிஞ்சி, மன்னரை வாசல் வரை வந்து வழிகூட்டுகிறபோது அவளது கண்களில் குற்றாலக் குறிஞ்சி ராகத்துப் பிரதிமத்திம சுரமும் சுத்தமத்திம சுரமும் பனித் துளிகளாய் அரும்பி வெடித்தன.
இராகம்-32
விலாசினி
ஆரவாரங்கள் அமைதிக்குப் பின்னுரை வழங்கிய திலிருந்து மன்னர் பயணம், வீதிகளை வெறிச்சோடச் செய்து விட்டது என்பது புரிகிறது.
அறையின் பூட்டைத் திறக்கிறாள், அழகின் புதுவேத மான குறிஞ்சி.
ராஜகாந்தி மலைத்துப் போனானா? சிலைத்துப் போனானா? மௌனமாய் சன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தீவிரமாக ஆலோசிப்பது புரிகிறது.
அருகே சென்ற குறிஞ்சி, “ராஜகாந்தி! மன்னர் சென்று வெகுநேரமாய் விட்டது!” என்றாள்.
தெரிகிறது. ஆனால் நான் வந்த செய்தியை எப்படியோ சரபோஜி மோப்பம் பிடித்துச் சொன்னது தான் ஆச்சரியம். அதைவிட அவனுடைய பெருந்தன்மை மேலும் ஆச்சரியத்தை விளைவித்தது.”
“கடைசியாகச் சொன்ன சொற்கள் காதில் விழுந்தனவா?”
“நன்றாக! நெல்சன் இதுவரை செய்த பாவத்தை மன்னிக்கிறேன். இனியேனும் தமிழ்ப் பெண்கள் கற்பைச் சூறையாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். நானும் என் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன்!”
“இப்போதுதான் உங்களை என் உயிராக மதிக்கிறேன்!”
“குறிஞ்சி! முன்பே சொன்னேன்; உனது ஆணைதான் எனது சட்டங்கள்! உனது உயிர்தான் எனது உயிர். நீ ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்.”
“என்ன சத்தியம்?”
“என் உத்தரவின்றி உனது உயிர் பிரியக் கூடாது.”
“இது என்ன விசித்திரச் சத்தியம்? எமனுமா உனக்குப் பயப்படுவான்?”
“நான் சொல்வது செயற்கை மரணம்! இயற்கை மரணம் என்பது பிறக்கிறபோதே இதயத்தில் எழுதி அனுப்பிய சாசனம்!”
“சத்தியம் காப்பேன்! ஆமாம்! நான் சரபோஜி மன்னரிடம் பேசி வந்த போது, நீ சொன்ன ஒரு நிமிஷம் என்ற கோரிக்கையை அழுத்தமாகச் சொல்லியும், பாத்திர உருட்டல் சத்தம் ஏன் கேட்கவில்லை.”
“சரபோஜி மன்னர் பேச்சு சரங்கோத்த முல்லைப் பூவாய் மணத்தது. நீயும், ‘முல்லை என்ன, இதோ இரு வாட்சி’ என்பது போலப் பதில் சொன்னாய்! எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. கடைசி கோரிக்கை திருமண விஷயம். அது உன் சொந்த விஷயம். இது குறிந்து நான் முதலில் பேச்சை ஆரம்பிக்கிற போதுதான், சரபோஜி வந்திருக்கும் செய்தி கேட்டு, அறையில் சென்று மறைந்து கொண்டேன். நேசிப்பவனை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நீ சொன்னதால் ஓர் அபிப்பிராயமா கச் சொல்வேன்; இது கட்டாயமில்லை. மேலும் சரபோஜி ‘இங்கிருந்தே ராஜகாந்தியைக் கேட்டுக் கொள்கிறேன்’ என் பதிலிருந்து நானிருப்பதை அறிந்திருந்ததால் அவ்வாறு சொன்னார் என்று தெரிகிறது. அதன் காரணமாகக் கருத்தைச் சொல்கிறேன். சரபோஜியின் கோரிக்கையை நீ ஏற்கலாம்! போன்சலே வமிசம் தமிழ் வமிசமாகலாம்! தமிழ் மீண்டும் புத்துயிர் பெறலாம்!”
குறிஞ்சியின் மௌனம் பல கணங்கள் அவளது பாதங் களில் பதுங்கியது.
“கட்டாயமில்லை என்றும் சொன்னேன். அதை மறந்து விடாதே குறிஞ்சி !”
“நேசிப்பைக் குறித்து யோசிக்கிறேன்; பூசிப்பவரின் பூரண அனுமதியும் தேவையல்லவா?”
“எதிர்பார்க்கிறாயா? அவர் துறவி! போலித் துறவி யல்ல! சத்தியமான பிரம்மசரியம் பூண்ட துறவி. இதற்கு அவர் பதில் சொல்ல மாட்டார். மாறாகப் புன்முறுவல் பூப்பார்!”
உண்மை; உண்மையில் உண்மையாவது உண்மையாகப் புரிகிறது.
“நல்லது, ராஜகாந்தி! நான் வணங்கும் மகாகாளியை உத்தரவு கேட்பேன். அந்தச் சிம்ம ரூபி எதைச் செய்ய வேண்டுமோ, என்ன செய்யவேண்டுமோ அதைச் செய் வாள். நான் பகலுக்கு மேல் தஞ்சை நோக்கிச் செல்லலாமல்லவா?”
“துணைக்கு எனது ஆட்கள் சிலர் வருவர். நான் ஒரு முக்கிய காரணமாக விரைகிறேன்.”
“விதியைச் சந்திக்கப் போகிறாயா?”
“ஒரு விதத்தில்; அந்தச் சந்திப்பில் இனி நம்மிருவ ரிடையே அது விளையாடக் கூடாது என்று எச்சரிப்பேன்.”
“இப்போது நான் ஒரு சத்தியத்தை உன்னிடம் யாசிக்கலாமா?.”
“கேள் மகளே ”
“எனது உயிருக்குச் சத்தியம் கேட்டாய்; அது கோழை யாகாதே என்கிற சத்தியம்! தந்தேன். இப்போது நான் கேட்பது, உனது உயிர் என்பது எமனிடம் ஒப்படைக்கப் பட்டதானாலும், நான் அவனைப் பிரார்த்தனை செய் கிறேன். என் உயிர் பிரிந்த பிறகே உனது உயிர் பிரிய வேண்டும். காரணம் இந்த அனாதைக்கு உன்னைத் தவிர வேறு பக்கபலமில்லை. எங்கும் அகப்பட்டுக் கொள்ளாதே!’
“நான் இருக்கிறேன். மகளே! நான்… நான் பெண் சுகமே அறியாதவனுக்கு ஒரு மகள் சுகம் புரிய வைத்த அந்தச் சமயபுரத்து மாரியம்மனை இங்கிருந்தே வணங்கு கிறேன்! எங்கும் அகப்பட்டுக் கொள்ள மாட்டேன்!”
“நீ அந்த மாரியம்மனையே பிடித்துக் கொண்டாயா?” “சமயத்தில் வரம் தருபவளாயிற்றே! நல்லது மகளே! சென்றுவா! நான் சொன்னதையும் கொஞ்சம் பரிசீலனை செய்!”
ராஜகாந்தி விடைபெற்றுத் தோட்டத்து ரகசிய வழி யாகச் சென்று மரங்களுக்குள் புகுந்து மறைந்தான். சற்றைக் கெல்லாம் எங்கோ குதிரைகளின் குளம்படி ஓசைகள் கேட்டன.
மேல்திசை வாசல் குங்குமக் கோலம் புனைந்து கொண்டிருக்கிறது.
ஆவணி மாதத்துக் காற்று சற்று அதிகமாக வீசினா லும், மாலை மயக்கம் ரதிமன்மதனுக்குரிய காமத்துப்பால் கதை சொல்லியது. திருமணங்கள் நிறைந்த திங்களல்லவா? எத்தனை வீடுகளில் அது முதலிரவு ராகத்தை பல்வேறு பட்ட மூர்ச்சனைகளுடன் பாட இருக்கிறது!
தஞ்சை அரண்மனையே தரையில் தங்க முடியாமல் மலர் விமானம் போல ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர் வில் ஆழ்ந்தது. சொன்னபடி குறிஞ்சி வந்து விட்டாளே!
மூங்கில் புதராகிக் கிடந்த அந்த அரண்மனையுள் புல்லாங்குழல் பிரவேசித்துவிட்டதால், எங்கு நோக்கினும் குற்றாலக் குறிஞ்சி ராகம் ஒலிப்பது போன்ற ஒரு பிரமை… குறிஞ்சி எவருடனும் வரவில்லை. தனது தம்பூர்; அதற் குரிய கற்பகம் மற்றும் இசைக் குழுவினர்.
பிரதான விருந்தினர் மாளிகையில் பிரமாதமான ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார் மன்னர் சரபோஜி. ஒரு முறை சென்று குறிஞ்சியை வரவேற்று நன்றி கூறியும் திரும்பி இருந்தார். மற்றபடி அந்த மாளிகை யின் நிழலைக்கூட எவரும் மிதிக்கக் கூடாது என்பது கடுமையான ஆணை. அக்காமார்கள் என மராட்டிய ரால் அழைக்கப் பெறும் பணிப் பெண்களில், பணிவும் பண்பும் உள்ளவர்களை மட்டுமே பணிவிடைகள் புரிய தேர்ந்தெடுத்து அனுப்பி இருந்தார். கடுகளவு குறைபாடு கண்டாலும் ஒவ்வொருவர் தலையிலும் பொடுகு விழுந்து விடும் என்கிற பொறுப்புணர்வு ஒவ்வொருவர் இதயத் துடிப்பிலிருந்தும் உணர முடிந்தது.
இந்த நேரத்தில் மன்னர் சரபோஜிக்கு ஓர் இடி விழுந்த செய்தி, திருவிடை மருதூரிலிருந்து, சிவாஜியின் மனைவி சைதம்பாபாயி சாகேப் வந்திருக்கிறாளாம்! அதுவும் செய்தி களை முற்றுமாகக் கேள்விப்பட்டே வந்திருக்கிறாளாம்!
இருதினங்களுக்கு முன்பு, இரண்டாம் திருமணம் பற்றிப் பேசவந்த எசவந்த ராமச்சந்திரராவ் சூர்வேவைக் கூட, தமது குடும்ப வக்கீல் கோபாலராயரை வைத்து ஒருவாறு பேசியனுப்பி விட்டார். சிவாஜியின் சித்தபிரமை நிலையில் திருமணமா? சூர்வேயும் மகள் காமாட்சி பாயின் தலையெழுத்து எதுவோ அது நடக்கட்டும் என்று சுமுகமாகவே விடைபெற்றுச் சென்று விட்டார். இந்தச் சூதுக்காரி சைதம்பாபாயியை அவ்வாறு விரட்டி விட முடியுமா? மகள் வயிற்றுப் பேத்திக்குப்பேத்தி; மருமகளுக்கு மருமகளாயிற்றே!
அடர்ந்த மீசையில் அடக்க முடியாத கோபத்தை நீவி நீவியடக்கிக் கொள்கிறார் சரபோஜி.
இளவரசன் சிவாஜிக்கு, குறிஞ்சி வந்திருக்கும் செய்தி யைச் சொல்லவில்லை. சொன்னால் புரியலாம்; புரியாம லும் போகலாம். முழுப் பைத்தியமில்லை; சித்தபிரமை தான். உண்பான்; உறங்குவான்; சமயத்தில் உளறுவான்; ஏன்? பாடுவான்!
செய்தி தெரிய வேண்டாமே என்பதில் மிக்கவும் கவன மாக இருந்தார் சரபோஜி மன்னர். வசீகரத்தை தரிசிக்கப் போகிறேன் என்று கூறி ஓடிச் சென்று குறிஞ்சியைப் பார்த்து, தனது முகத்தில் துணியை மூடிக் கொண்டு உலகம் இருட்டாக இருக்கிறது என்பதுபோல ஒன்று கிடக்க ஒன்றை உளறிவிடுவானேயானால்?
அந்த வெளிச்சம் வெளியேறி விடுமே! குறிஞ்சியின் சுயமரியாதைக் குணங்களை-அவளது சுயம்புவான போக்குகளை அத்திவாரங்கள் அறியாமல் இருக்கலாம்; மாடங்கள் அறியுமே! சூள்மாறி வந்திருக்கும் இந்த நேரம் கோள் மாறிப் போய் விட்டால்!’ கோள்களிலேயே பத்தாவது கிரகமான சைதம்பாபாயி வந்திருக்கிறாளே…! அது போதாதா? அதனால் வரப்போகிறது நன்மை யில்லா விட்டால் போகிறது! தீமை நிகழ்ந்துவிடக் கூடாதே!
இரவு, விளக்குகளின் திரிகளுக்கு தீமூட்டி வெகு நேரமாய் விட்டது
உண்டு முடித்த குறிஞ்சி, உறங்குமுன் சற்றே ஓய்வாகச் சிந்திக்கிறாள்.
நாளை நமது அபூர்வராகம் மீட்கப்பட்டுவிடும். என் வாழ்வைக்கெடுத்த அந்த வஞ்சகன் சிவகங்கை இளவரசனை என்ன செய்யலாம்?
சே! ஊழ்வினை! அவனைக் காறித்துப்புவதால் ஞான சுந்தரம், எலும்புதுண்டுகளாய் மண்பானையிலிருந்த பூம்பாவை வெளிப்பட்டது போலவா, சவக்குழியைப் பிளந்து கொண்டு வந்து விடப் போகிறார்? ‘இன்னா செய்தாரை மன்னித்துவிடு’ என்றான் உலகத்தையே இரண்டடியால் அளந்த திருக்குறளான்!
அறைவாசலுக்கு வெளியே ஒரு வயதான கிழவர் காவல், எதற்காக வயதான ஒரு கிழவனைக் காவல் வைக்க வேண்டும்? சிரித்துக் கொள்கிறாள். வியப்பு அவளிடம் விலாசினி ராகம் பாடியது போலும்!
இரவு, நடுநிசித் தாண்டவத்துக்கு நட்சத்திர சலங்கை யணிந்து கொண்டிருந்தது. வானில் வளர்பிறை நிலவு.
‘வித்தியாவித்தை நிலை. தனது நிலை என்பதுபோல யுகயுகமாக நடக்கும் அந்தத் தாண்டவத்தை அப்போதும் ரசிக்கத் தயாரானது.
அந்த நேரத்தில் அவித்தைபோல அங்கே வந்து கொண் டிருந்தாள் சைதம்பாபாயி சிவாஜியின் மனையாள். அவளைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை. சட்டங்களையே காயப்படுத்துகிறவளிடம் சரபோஜியின் உத்தரவாவது?
அறை நோக்கி வரும் அவித்தா விசுவரூபத்தை தொலைவிலிருந்தே கவனித்துவிட்ட கிழவர் விரைந்து சென்று பாதிவழியிலே மடக்குகிறார்.
“யாரம்மா,நீ!”
“அரண்மனைக்குச் சொந்தக்காரி; குறிஞ்சியைப் பார்க்க வேண்டும். என்னைத் தடுக்க உனக்கு எவ்வளவு தைரியம்? கிழப்பிண்டமே!”
சைதம்பாபாயி கிழவனைப் பிடித்துத் தள்ள, அவள் தான் தடுமாறி சாயப்போனாள். அவளை இரும்புப் பிடியாக பிடித்துக் கொண்ட கிழவன், இடுப்பில் மிகத் துணிவாகக் கையை வைத்துத் துழாவி, கட்டாரியை எடுத்தான். “சைதம்பா! நீ சைத்தானாக நுழையலாமா? சாகேபாக (ராணி) அரண்மனைக்குப் போ!”
‘நீ யார்? என்னைத் தொட்டதுமல்லாமல் அதிகாரம்?”
ஓங்கி அறைய கையை நோக்கியவளைப் பிடித்துக் கொண்ட கிழவன், தனது நரை தாங்கிய புனைவடிவத்தை நீக்கி காட்ட… ஓ… சரபோஜி மன்னர்!”
“புரிகிறதா? போய்விடு!”
ஒரு புலைச்சிக்குக் காவல் நிற்க உங்களுக்கு வெட்க மாயில்லை?
*வித்தை- தேவதைகளின் உபாசனை; அவித்தை- காம்யா கர்மங்கள்; அஞ்ஞானம் (உபநிஷத்து).
“நான் கலைக்குக் காவல் நிற்க காரணம் நான் கலைஞன்! சைதம்பா என்கிற சைத்தான் வரும் என் தெரிந்தே காவல் நிற்கிறேன்!”
“ஒரு புலைச்சி ராணியாவதா?
“கொலைக்காரியான அவித்தை, ராணியாக இருக்கிற போது கும்பாபிஷேகத்துக்குரிய வித்தை ராணியாவது தஞ்சை செய்த தவம்! போய்விடு !”
“மறுத்தால்?”
சின்ன முறுவல். மெல்லக் கைதட்டுகிறார். நான்கு வீரர்கள் வந்து நிற்கிறார்கள்.
“சைதம்பா ! நீ திருவிடை மருதூருக்கு இரவோடு இரவாகப் புறப்பட்டால் மரியாதைக்கே ஒரு மரியாதை! அடம்பிடித்தால் சிறைச்சாலை மரியாதை பெற்றுவிடும்! நமது சர்க்கேலிடம் (மந்திரி) இப்படி நிகழும் என்பதால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைத்தா னாக இருந்தாலும் சைதாம்பாபாயிதான்! சந்தேகமில்லை! புறப்படு!”
புயலாய்ப் புறப்பட்டுவந்த சைதம்பாபாயி பூகம்பமாய் வீரர்களைப் பின்தொடர்ந்தாள்.
மீண்டும் சரபோஜிக் கிழவன், குறிஞ்சிப் பூவுக்கு வேலி யானார். வெள்ளை நாரைகளான கும்பினி அதிகாரி களின் நீண்ட அலகுகள் வேறு இருக்கின்றனவே!
குறிஞ்சிக்கு வெளியில் நடந்த எதுவுமே தெரிய நியாய மில்லை. தொலைவில் கற்பகம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
மஞ்சத்தில் சாய்ந்தும் தூக்கம் ஏன் வரவில்லை?
அந்தச் சூழலில் எங்கிருந்தோ ஓர் இனியகுரல்… ஓர் ஆணின் கம்பீரமே போலக் காற்றில் மிதந்து வருகிறது. இனிய கீதம், யார் பாடுவது?
எழுந்து சென்று குரல் வருகிற திக்கு நோக்கிச் சன்னலைப் பிடித்துக் கொண்டு செவி சாய்கிறாள்.
ஓ…என்ன இனிமையான விலாசினி ராகம்!
யாரோ அரண்மனை வித்துவான்களில் ஒருவர் தன்னை போலத் தூக்கம் வராமல் அதன் விலாசத்தைத் தேடி விலாசினி பாடுகிறாரோ?
அறைக் கதவைத் திறக்கிறாள். கிழவர் அமர்ந்திருந் தவர் எழுந்து கொள்கிறார்.
“பெரியவரே! எங்கோ பாட்டுக்குரல் கேட்கிறது. நன்றாகவும் நயமாகவும் இருக்கிறது.”
“தனது விலாசத்தையும் குறிஞ்சியாகிய உனது விலாசத் தையும் கேட்டுப்பாடுகிறவன் வேறுயாருமல்லம்மா! இளவரசன் சிவாஜி! சித்தப்பிரமையில் இப்படி பல சமயங் களில் அவன் ராக விலாசங்களைத் தேடுவான்!”
“இளவரசரை நீங்கள் அவன் இவன் என்று பேசுவதாவது?”
சரபோஜியின் கண்களில் நீர்த்துளிகள் சரங்கோக் கின்றன.
“நான் அவனது சங்கீத இலக்கண ஆசான்!” “சங்கீத இலக்கணம் தெரிந்தவரா?”
கரம் கூப்புகிறாள் குறிஞ்சி.
“அதனால்தான் சங்கீதத்துக்குக் காவல் நிற்கிறேன், குறிஞ்சி! சிவாஜி ஆரம்பத்தில் மகாவித்துவான் பல்லவி துரைசாமி ஐயரிடமும் பிறகு பல்லவி கோபாலய்யா, தஞ்சை சகோதரர்கள், சுப்பராய சாஸ்திரி… இப்படிப் பலரிடமும் இசை விலாசம் கேட்டறிந்ததால் விலாசினி எனும் அபூர்வ ராகம் பாடுகிறான். அவன் தனது இளம் வயது குருவான சுப்பராய சாஸ்திரி இயற்றிய ரீதி கௌளை ராகப் பாடலான ‘ஜனனி நின்னுவினா’ பாடி நீ கேட்க வேண்டுமே!
“ஆமாம்; நீங்கள் என்ன இலக்கணம் போதித்து இருக் கிறீர்கள்?”
“சாரங்க தேவரின் சங்கீத ரத்தினாகரம், வேங்கிடமகி யின் சதுர்தண்டி பிரகாசிகா, ராமா மாத்யாவின் சுரமேள கலாநிதி, இந்தப் போன்ஸலே வமிச ராஜாக்கள் இயற்றிய சங்கீத சாரமிருதம் இப்படிப் பல இலக்கண நூல்கள்! ஆனால் எனக்குப் பாட வராது. நன்றாகப் பாடத் தெரிந்தவர்க்கு இலக்கணம் தெரியாது; நன்கு இலக்கணம் அறிந்தவர்களுக்குப் பாட வராது. இரண்டும் கைவரப் பெற்றவர்கள் எங்கோ சிலர், உன்னை மாதிரி!”
விலாசினி ராகம் இன்னும் வித்தாரமாக ஆலாபனை யில் விசுவரூபமெடுத்துக் கேட்கிறது.
இளவரசர் இவ்வளவு அழகாகப் பாடுவாரா? அதுவும் அற்புத அபூர்வ ராகமான விலாசினி! தைவதம் நீக்கிய சங்கராபரணம்! சங்கரனுக்கே ஆபரணம். சங்கரியின் விலாசம் தேடிப் பாடி அணிவித்த விலாசினியல்லவா இது?
கிழவேடம் அணிந்த சரபோஜி மன்னா துக்கம் தொண்டையை அடைக்கவே குமுங்கியழவும் செய்தார்.
குவளைக்கண் விரித்த குறிஞ்சி, கூர்ந்து கவனிக்கிறாள்.
“நீங்கள் ஏன் இப்படிக் குமுறுகிறீர்கள் பெரியவரே?”
“குறிஞ்சி அவனைக் காப்பாற்று! அவனைக் காப்பாற்று! உனக்கு இங்கு ஒரு தொல்லையும் ஏற்படக்கூடாது என்று காவல் நிற்பவனே இந்த நாட்டு மன்னன் சரபோஜி! சரபோஜி!” என்று விக்கியழுத சரபோஜி மன்னர் தமது நரைமுடிப் போர்வையை முகத்திலிருந்து நீக்க…
நடுக்கமான கிழக்குரல் மிடுக்காகக் கேட்க…
ஓ… சிறந்த நாடக வித்தகரல்லவா சரபோஜி?
குறிஞ்சியின் கயல்விழிகள் அந்த ஒருகணத்தில் குள மாகிப் போயின.
இராகம்-33
குற்றாலக் குறிஞ்சி
புதுமை ராகங்களின் பொக்கிஷமான குறிஞ்சி எனும் குங்குமத் தமிழ் போற்றும் கோதை நல்லாள் பொருட்டு, அரண்மனை ஜயவாசலுக்கு வெளியே ராணுவமே அணி வகுத்து நிற்கிறது.
சிவகங்கை, தஞ்சைப் பார்வைக்கு உட்பட்டதே யானாலும், அடகு ஓலையை அனுப்ப முடியாது என்று யுவராஜன் சின்ன வல்லபதேவ உடையான் அடம் பிடிக்கிற போது?….
ஒன்று தூது ராணுவம்; அது முறிந்து போனது. இப்போது குண்டு துளைக்கும் ராணுவமாக அணிவகுத்துப் புறப்படக் காத்திருந்தது. ஆர்க்காட்டு நவாப்பின் அதிகப் படியான சலுகைகளைச் சிவகங்கை பெற்றதால், திருச்சிக் கும்பினிக் கோட்டத்து அதிகாரம் செல்லுபடியாகவில்லை. எனவே இப்படி ஒரு ராணுவம் அவசியப்பட்டது.
ராகதேவதையான குறிஞ்சி வந்து நின்று அணிவகுப் பைப் பார்வையிட்டு விடை தர வேண்டும் என்பது அவளுடைய ரசிகனான சென்னை கவர்னர் வாஷிங்க டனின் பெருந்தன்மையான உத்தரவு.
அழகின் திருக்கொலுவாய், அலங்காரப் பொற்றேராய் எடுத்து வைத்த பாதங்களிலும் ஏழு சுரங்கள் ஒலிக்கும் இசையின் ஊர்வசியாய் வந்து கொண்டிருக்கிறாள் குறிஞ்சி. இளவரசன் சிவாஜிக்குக் காலையில்தான் தெரியும். அவனது சித்தம் சில சமயங்களில் விலாசினி ராகம் பாடு மளவுக்குத் தெளியுமே! அந்தத் தெளிவான நேரத்தைத் தெரிந்து, அவனுடைய அன்புக்கு நண்பனாய், வலது கரமாய், குருவாய், மந்திரியாய் இருந்த வராகப்ப தீட்சிதன் சொல்ல வேண்டிய முறையில் எடுத்துச் சொல்ல, ஓரளவு புரிந்து, கண்களால் மகிழ்ந்து, பின்னர் உதடுகளால் பூரித் தான். ஓ… எனது குறிஞ்சி வருகை தந்து விட்டாள்!
அரண்மனை மாடத்திலிருந்து கவனிக்கிறான், சிவாஜி. ஆ… ‘தலையலங்காரம் புறப்பட்டதே’ என்று அன்று ஒரு காதல் கவிஞன் அம்பிகாபதி பாடினானே… அப்படி குறிஞ்சியின் தலையலங்காரத்துக்குக் குதூகலக் கிரீடம் சூட்டிச் சிரிக்கிறான் சிவாஜி.
சித்தம் மெல்ல மெல்லத் தெளிகிறது… அதனுள் காதல் சிவலிங்கம் தெரிகிறது. சத்தம் கேட்கிறது… அதனுள் காதல் சதாசிவம் காட்டுகிறது…
ஓ…குறிஞ்சி, குறிஞ்சி, குறிஞ்சி…
குறிஞ்சியோ…
ராகத்தை மீட்கச் செல்லும் ராணுவத்தைப் பார்வை யிடுகிறாள்! ஆ! சீதையை மீட்கச் செல்வதுபோல…
ஆனந்தக் கண்ணீருடன் கமலமனைய புன்முறுவல் பூத்துக் கரங்கூப்ப…
ராணுவம் புறப்படலாம் என்கிற ஆணை கலெக்டர் நெல்சன் நாவிலிருந்து எழுந்தபோது…
எழுந்த நாவு எழுந்தபடி. திறந்த கண்கள் திறந்தபடி…
நெல்சனுக்கு மட்டுமா? நின்றிருந்த அனைவருக்கும்! சரபோஜிக்கும்! மாடத்தில் நின்று கவனித்த இளவரசன் சிவாஜிக்கும்!…
அதோ…
சிவகங்கை இளவரசனே தனியாக வருகிறான். பின்னங் கை கட்டப்பட்டு வருகிறான். அவனது சட்டைப் பையில் ஓலை நறுக்கொன்று தலை நீட்டி எட்டிப் பார்க்க வரு கிறான்.
அவனா வருகிறான்?
அவனுக்குப் பின்னே, எவரும் அறியாவண்ணம் ராஜ காந்தியின் துப்பாக்கிகள் நீண்டல்லவா நடக்கச் செய்தி ருக்கின்றன?
குறிஞ்சிக்குப் புரிந்து விட்டது. விதியைச் சந்திக்கப் போகிறேன் என்று புறப்பட்ட ராஜகாந்தி, அந்த விதியை எப்படியோ போராடிக் கடத்தி வந்திருக்கிறான்.
சிவகங்கை இளவரசன் நேரே குறிஞ்சியருகே வந்து மண்டியிட்டு, “என்னை மன்னித்து விடு சகோதரி! பையில் ஓலை இருக்கிறது! உன்னைத் தத்துக்கு எடுத்துக் கொண்ட தந்தை ராஜகாந்தி எழுதியனுப்பிய எனது தலை யெழுத்து!” என்று சொன்னபோது அவன் நாணத்தால் நலிந்து போனான்.
குறிஞ்சி.சாபோஜியைப் பார்க்க, சரபோஜி, சர்க்கேலைப் பார்க்க, சர்க்கேல் வந்து ஓலையை எடுத்து சரபோஜியிடம் நீட்டுகிறான். படித்து முடித்து குறிஞ்சியிடம் கொடுத்து விட்டு,
நெல்சன் துரைக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுகிறார்:
“நமது ராணுவத்துக்கே வேலையில்லாமல் செய்து விட்டான் ராஜகாந்தி! குறிஞ்சியிடம் இந்தச் சிவகங்கை யான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயிரை விட்டு வைத்தானாம்! மனிதாபிமானத்தைக் கற்றுத் தந்தவளே குறிஞ்சியாம்! இந்தச் சிவகங்கையானைச் சிறையிலடைக்க உத்தரவிட்டிருக்கிறான். தவறினால் அரண்மனையே துகளாகும் என்றும் எச்சரித்தும் இருக்கிறான்.”
நெல்சன் நெஞ்சில் நெருப்பு மேலும் கனன்றது. கவனிக் கிறார் சரபோஜி. “நெல்சன்! உங்கள் மீதும் பகையில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறான். அதை நான் சொல்லாமல் விட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் தமிழ்ப் பெண்கள் கற்போடு விளையாடுவதை இன்றுடன் நிறுத் திக் கொள்ள வேண்டுமாம்!
“யாரிவன், எனக்கு ஆணையிட?” என்ற நெல்சனின் நெஞ்சு நெருப்பாய்க் கறுவிக் கொள்கிறது.
சரபோஜி, சிவகங்கை சின்ன வல்லபனை நோக்கிக் கேட்கிறார்: “எங்கே குற்றாலக் குறிஞ்சி ராகம்?”
“கைகட்டை அவிழ்த்து விடுங்கள்.”
கட்டு அவிழ்க்கப்படுகிறது.
இடுப்பில் செருகி இருந்த அடகு ஓலையை எடுத்து நீட்டுகிறான். அதனைக் குறிஞ்சி பெறுகிறாள்; படிக்கிறாள்; பின் ஆணையிடுகிறாள்.
“இந்த ஓலையை இவனே, இவன் கைப்பட எரிக்கட்டும். எரிக்குமுன் இவனது துர்நடத்தைகளையும் சேர்த்து எரிக்கட்டும்! மாவீராங்கனை ராணி வேலுநாச்சியாரும். மருது பாண்டியர்களும் மானம் காத்த சிவகங்கைக்கு இனி மாசு தேடமாட்டேன் என்கிற சத்திய சபதத்துடன் எரிக் கட்டும்!”
மதுரையை நோக்கிக் கண்ணகி கொடுத்த குரல் போலி ருந்தது குறிஞ்சியின் குரல்.
ஓலை எரிந்து சாம்பலானது.
*இரண்டாம் சரபோஜி காலத்தில் சிவகங்கை ஜமீந்தாரின் மகன், சிறையில் வைக்கப் பெற்றான். அவனை விடுவிக்க வேண்டுமென்று, மகாராஜாவுக்கு சிரஸ்தேதார் எழுதியதாக. 1828-க்குரிய ஆவணக் குறிப்புள்ளது. ஜமிந்தார் மகன் சிறைப்பட்ட காரணம் புலப்படவில்லை. *தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் கே.எம்.வேங்கடராமய்யா, பக்கம் 94.
“இவனைச் ‘சிறையில் அடையுங்கள். இவனது மனைவி மகா பதிவிரதை. அவள் மாங்கல்யம் பொருட்டே இவனை ராஜகாந்தி விட்டு வைத்தார். இல்லை என்றால்…. ஒவ்வொரு எலும்பும் ஒவ்வொரு ஊரில் புதைக்கப்பட்டிருக்கும்! என் மரியாதைக்குரிய பெரிய சிவகங்கை ஜமீந்தார் இவனை என்றைக்கு விடுதலை செய்து அனுப்பலாம் என்று ஓலையனுப்புகிறாரோ அப்போது விடுதலை செய்து அனுப்பிவிடலாம். தஞ்சை மன்னர் எனது வேண்டுதலை ஏற்பார் என்று நம்புகிறேன்!” என்று குறிஞ்சியின் ஆணைக் குரல் மேலும் வானை முட்டியது.
ராணுவம் கலைந்தது: குறிஞ்சியின் வேண்டுதல் நிறை வேற்றப்பட்டது. ஆனால் நிறைவேற்றியது யார்?
சரபோஜி குறிஞ்சியை நோக்கிச் சொன்னார்: “குறிஞ்சி! ராஜகாந்தியின் இந்த முயற்சியிலிருந்து எனது கோரிக் கையை ஏற்றுக் கொண்டுவிட்டான் என்பது புரிகிறது. என் மகன்… அதோ மாடத்தில் பார்… ஓரளவு சித்தம் தெளிந்து விட்டான். இப்போது நீ குற்றாலக் குறிஞ்சி ராகம் பாடுகிறாய்; அதனை செவிமடுத்து அவன் மேலும் மேன்மையுறுகிறான்! ஸ்ரீ ஆசார்யாள் சுவாமிகள் கும்ப கோணத்திலிருப்பதாக அறிந்தேன். நாளைய காலை, நானே சென்று ஆக்ஞாபனம் பெற்று வருவேன்!”
குறிஞ்சி காயத்ரி மந்திரமாய் முறுவலிக்கிறாள். கண்கள் காயாம் பூவாய் மலருகிறது. மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்’ என்று கூறிய சேக்கிழார் பார்வை. இவையே சரபோஜிக்கு குறிஞ்சி அளித்த பதில்கள்.
இரவுக்கு ஆலோலம் பாடும் இனிய அந்திமாலைப் போது, கதிரவனை வழியனுப்பக் கரம் கூப்புகிறது.
நிலவு பிரசன்னத்துக்காக, வானம் நட்சத்திர மந்திரங் களை ஓதி ஒளியாகம் நடத்துகிறது.
சங்கீத மகாலில், விளக்குகள் நடக்கப் போகிற விலாச மறிந்து விலாசினி இராகம் பாடத் தொடங்கிவிட்டன.
குற்றாலக் குறிஞ்சி ராகம் சங்கீத மகாலையே சரண டையச் செய்யப் போகிறதே!
இசையுகத்துக் கலாச்சாரத்தையே பிரம்ம சொரூப மாக்கிப் பிரணவ விளையாட்டு விளையாடி விட்ட ராகமல்லவா?
சங்கீத மகாலில் மனிதர்கள் நிரம்பி வழிந்தாலும், அமைதி, இதயங்களுக்கு, ‘உங்கள் துடிப்பைத் தவிர வேறு துடிப்பு இருக்கக் கூடாது’ என்று எச்சரிக்கிறது.
நடுவே…
பட்டுத்துணி விரிக்கப்பட்ட சின்ன மேடையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கிக் காணப்படுகிறாள் குறிஞ்சி.
எந்தவிதப் பக்க வாத்தியமுமில்லை. வெறும் ஆலாபனை மட்டுமே! சிறைபட்ட ராகம் மீண்டதன் சிறப்பான மகிழ்ச்சியை, ஆலாபனையில் அள்ளிக் கொட்டிவிட வேண்டும் என்கிற ஆர்வத் துடிப்பு, தம்பூரில் தெம்பு கண்டால் போதுமே!
பத்திரகாளி பிரத்தியங்கிராதேவி மந்திரம், குறிஞ்சியின் மனத்தே கோபுரமாய் ஒலிக்கிறது. ‘க்ஷம்’!
ஸ்ரீ ஆசார்யாள் பெருமான். எதிரே நிற்பது போன்ற பிரமை.
‘ஏ, பிரத்தியங்கிரா தேவி!’
அதர்வண வேதத்து மந்திர காண்டத்துச் சௌனக சாகையையும், பிப்பிலாத சாகையையும் மனம், தூய்மை யுடன் ஒதிக் கொண்டது!
‘மங்கள ரூபிணி! சௌபாக்ய ஜனனீ! கிருபா ரூபிணி! ஆனந்த ரூபிணி! பக்த பிரியே! சரப சக்தி! புராதm! ஓ… பிரேத போஜனீ! பிரேத போஜனீ! பிரேத வாகினீ! க்ஷம்! க்ஷம்! க்ஷம்!”
எங்கோ ஸ்ரீ ஆசார்யாள் சுவாமிகள், ‘நாராயணா’ என்று கூறுவது போன்ற குரல்…
மனித விலாசம் வேறு; மன விலாசம் வேறு. இவள் மனவிலாசத்துக்குரியவளாயிற்றே!
தியானம் முடிந்து இமைகளைத் திறக்கிறாள், மன்பதை யில் எங்கோ எப்போதோ பிறக்கும் காப்பியப் பேரழகி குறிஞ்சி!
அந்தச் சின்னஞ்சிறு தாழ்வான மேடையில், கற்பகத்தைக் கூடத் தம்பூர் மீட்ட அனுமதிக்கவில்லை. தானே அதனை மடியில் கிடத்தி வணங்குகிறாள். .ஆசான் அளித்த அன்புப் பரிசு அல்லவா? பிறகு அவளது செங்காந்தள் விரல்கள் சுருதி சேர்த்து மீட்டுகின்றன.
‘ஓம்’…
குரல் ஆதார சுருதியில் இழையத் தம்பூர் மீட்டுகிறாள் குறிஞ்சி.
ஆதார சுருதியில் இழைந்த குரல், பஞ்சமத்தைத் தொடாமல், நேரே மேல் சட்சமத்துக்குச் சென்று நின்று – நீண்ட நேரமாக நின்று – இழைய…
சங்கீத மகால் அப்போதே சரணடைந்து விட்ட மாதிரி…
மடியில் தவழ்ந்த தம்பூரில் குறிஞ்சியின் காந்தள் விரல்கள் ஒரே சீராய் மீட்ட…
‘ஏ. சிதம்பர நடராஜனே! நந்தன் உன்னை உள்ளே வந்து கண்டான்; இந்த நந்தினி, தமிழ் பொருட்டு உன்னை அலட்சியம் செய்தாள்! வா, இங்கே! வந்து எனது தமிழ் ராகம் குற்றாலக் குறிஞ்சி ராகத்தைக் கேள்! கேள்’…
என்பதுபோல இன்னமும் மேல் சட்சமத்தில் மூச்சுப் பிடிக்க நின்று தம்பூரோடு இழைகிறாள்…
அடுத்து அந்த ராகத்து ஆரோகண அவரோகணத்தைத் தனது குயில் குரலில் ஆதார சட்சமத்துக்கு வந்து, படிப் படியாக – ஒவ்வொரு சுரமாகக் குரல் கொடுத்து நின்று ஏறி இறங்குகிறாள்.
சரிகம நிதநி பதநிச்…
ச்நிதம க ம் ப கரிச…
பிரதிமத்திம ராகமான இதன் சுரங்களில் அவரோகண பாஷாங்க + சுரமான சுத்த மத்திமம் வருகிறபோது அதில் நிற்க…
மயக்கமோ மயக்கம்…
ஸ்ரீ ஆசார்யாள் குரல் எங்கிருந்தோகேட்கிறது: “சுரத்தைத் தான் பாஷாங்கமாக்கச் சொன்னேன்!”…
ஓ…. ஓரிரு முறை ஞானசுந்தரத்துடன் பாஷாங்கமாக முயன்றதன் தண்டனையோ இதுவரை அனுபவித்தது?
இனி… இனி…
தம்பூரை மீட்டிக் கொண்டு தெய்வீக நிலையில் ஒரு ராக தேவதை விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மன்னர் சபையைக் கெளரவிப்பதுபோல ஆலாபனை செய்கிறாள்.
“ஆகா!” “ஊகூ” என்கிற புரியாத ரசிப்பது போன்ற பொய்யான பாவனைக் குரல்கள் எழ வேண்டுமே! ஒரே அமைதி; மயக்கம் நிறைந்த அமைதி.
ஒரே ஒரு புலன் மட்டுமே உறங்காமல் விழித்திருக் கின்றது. அது செவிப்புலன். இவ்விதம் இருக்க, ரசனைக் குரலாவது? பாராட்டுக் குரலாவது?
ஓ… இந்த புதிய ராகத்தால், நாத ஜீவ சுரங்களால், ஈன்ற பொழுதில் சான்றோர் எனக் கேட்ட தாய் ராகமான வாசமிகு ‘வாசஸ்பதி, வனப்பால் பெருமை அடைகிறது. அந்தப் பாஷாங்க – ‘ம’ மத்திமத்துக்குரிய தந்தை ராகம் அரிகாம்போதி, ‘பனியின் விந்துளி போலவே’ என அருணகிரி நாதர் திருப்புகழாய் மகிழ்கிறது. பனித்துளி யாய் சிந்திய அந்த ஒரு சுரம் -ம- சுத்தமத்திமம் அதுவல்லவோ மகாலை மயங்கியது? அந்த மகேசுவரனான நடராஜனையே மயக்கி விட்டது? ஆ! எப்படி எல்லாம் ஆலாபனையை விரிவு படுத்துகிறாள்…
கானமா இது? தேவகானத்துக்கும் ஒருபடி மேலே மேலே… மேலே…
எங்கோ கூத்த பெருமானின் எடுத்த பாத சிலம்பொலி கேட்கிறது… தஜ்ஜம்!
கானாமிருதமா இது?… தகஜம்!
தத்தித்தா, தகஜனு தித்தித்தா, தகஜனு தகஜனு தித் தித்தா…
கந்தருவியாய், குற்றால அருவியாய், அதற்கும், மேலே பிரம்மபுத்திராவின் உற்பத்தி அருவியாய் பாடுகிறாள் பாடுகிறாள். பாடுகிறாள்…
‘தத்தித்தா’ என்று எதனைத் தத்தித் தரக் கேட்கிறாள்?
குறிஞ்சியின் இமைகள் மூடிய நெற்றிச்சுழி முன்னே நிருத்தமிடும் நடராஜ பெருமான்…
“தித்தித்தா? தித்தித்தா?’ என்று சபையோரை நோக்கிக் குற்றாலக் குறிஞ்சி ராகம் ‘தித்தித்ததா’ என்று கேட்கிறாளா?
காற்றே, ஒரு கணம் மயங்கி அசையும் பொருள்களை அசையாமல் செய்து விடவே, பஞ்சபூத நாயகனான பரமேஸ்வரனே ‘ஓ… இயக்கம் கெடுகிறது’ என்று பயந்து எழுந்தோடி வந்து, அது இயங்க நடனமாடுகிறானா?
சங்கீத மகாலே சரணடைந்து மயங்க… சரபோஜி மயங்க… சிவாஜி சித்தம் குளிர…
அதே பாஷாங்க மத்திமத்தில் குறிஞ்சியின் குரல் இழைந்து நின்றபோது…
நின்ற போது…
ஞானசுந்தர நினைவுகள்…
தனித்துப்பாடும் தருமசங்கடங்கள்…
சலங்கையொலி அந்தரமாய் நிற்கிறது…
ஓ…
திரந்தரக் குரலும் நின்றது; தம்பூர் மீட்டும் காந்தள் விரல்கள் காணாமற் போயின.
அமைதி, அமைதி, அமைதி…
கற்பகம் சற்று முன்னே ஓடி வந்து கவனித்து விட்டு, “அம்மா!” என்கிற உலகின் ஆதிச் சொல்லால் அலறிய போதுதான்…
மகால் விழித்தது; மன்னரும் விழித்தார்; சிவாஜி சித்தம் தடுமாறிப் போனான்.
குறிஞ்சி, கூத்தபிரான் பாதங்களில் குன்றாத ஜோதியாய் அமர்ந்து போனாள்.
ஆனந்தக் கண்ணீரில் மயங்கிய மகால், அவலக் கண் ணீரில் ஆழ்ந்து போனது.
இளவரசன் சிவாஜி “ஓ… குறிஞ்சீ” என்று அலறிய அலறல்…
மன்னர் சரபோஜி எழுந்து வந்து மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறபோது…
அவையே எழுந்து நிற்கிறது…
சிவாஜியைத் தேற்றுகிறார் சரபோஜி: “இவன் தெய்வ மகள்; தெய்வத்துள் தெய்வமாகி விட்டாள்! மனதைத் தேற்றிக் கொள்.”
குறிஞ்சி சாயவில்லை;அப்படியே சிலைபோல அமர்ந்தே தம்பூருடன் இருக்கிறாள்…
வெளியே சலசலப்பு…
பெருத்த சலசலப்பு…
“குறிஞ்சி, என் மகளே குறிஞ்சி!’
ராஜகாந்தி – சங்கீத மகாலுக்கு வெளியே மறைந்திருந்த ராஜகாந்தி அங்கங்கள் அனைத்தும் துடிக்க மகாலுள் நுழைந்து பாய்ந்து ஓடி வருகிறபோது…
நெல்சனின் ஓங்கிய உத்தரவு காவல் நெஞ்சில் நெருப்பு மூட்ட…
துப்பாக்கிகள் வெடிக்கின்றன…
குண்டுகள் அவனைத் துளைக்கின்றன…ஒன்றா இரண்டா?
ரத்தம் பீறிட மகாலில் சாய்கிறான் ராஜகாந்தி…
“நெல்சன்! இதயமிலா அரக்கனே! நிறுத்து” என்று ஆங்கிலத்தில் கர்ஜிக்கிறார் சரபோஜி மன்னர்.
மீண்டும் அமைதி…
தரையை – குறிஞ்சி நடந்து வந்த பாதையை – ரத்தத் தால் மெழுகியவாறு “குறிஞ்சி… குறிஞ்சி! என் மகளே! உன் உயிர் பிரிந்த பிறகே என் உயிர் பிரிய வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்ட வாக்குறுதி நிறைவேறிவிட்டது; மகளே, மகளே !”
ஊர்ந்து ஊர்ந்து வருகிறான்…
எத்தனை குண்டுகள்?
புழுவாய்த் துடித்துப் புரண்டு புரண்டு ஊர்ந்து வந்த ராஜகாந்தி, சிலைபோல், தம்பூர் மடியில் தவழ அமர்ந் திருந்த குறிஞ்சியை அண்ணாந்து கவனிக்கிறான்.
“என் மகளே!”
கண்களில் குற்றாலக் குறிஞ்சி ராகம் கண்ணீரில் கரைகிறது…
மேலும் அருகே ஊர்ந்து சென்று, தாவி, அந்தச் சின்ன மேடையைப் பற்றித் தட்டுத் தடுமாறி ஏறி, குறிஞ்சியின் மெல்லிய பாதங்களைப் பற்றித் தலை வைக்கிறான். ராஜ காந்தி ராகம் வானில் ஒலித்தது.
அடுத்த கணம்…
அந்த அசைவில், குறிஞ்சியின் பூத உடலும் அவன் தலைமேல் சாய்ந்தது.
அந்த இனிய அன்பின் பரிசுத்தப் பிணைப்புக்கு இடையே இருந்த தம்பூர், அதிர்ச்சியின் காரணமாக எழுப்பிய நாதம்…
குற்றாலக் குறிஞ்சி ராகத்தின் ஜீவ நாதமாய் ஒலித்த போது, எங்கும் ஒலித்த குரல்கள்…
குறிஞ்சி…
குறிஞ்சி…
குற்றாலக் குறிஞ்சி!…
அவளது அந்தத் தம்பூர்…
அது எழுப்பிய இனிய நாதம்…
எண் திசைகளிலும் இனிதாய் நிறைந்து புகழ் பரப்பியதை யாரே மறுப்பர்? மறப்பர்?
இன்னொரு தமிழ்க் குறிஞ்சி எப்போது பிறந்து, மக்கள் இதயங்களில் பாடப் போகிறாள்?
(நிறைவு)
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.