குற்றாலக் குறிஞ்சி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 1,262 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.

இராகம் 25-27 | இராகம் 28-30 | இராகம் 31-33

இராகம்-28

முகாரி

அந்தப்புரத்தையடைந்ததும் குறிஞ்சியின் களத்த 

இதயத்தில் அமைதி மௌனமாய் முகாரி பாடுகிறது. 

சரிமபநிதசா… சநிதபமகரிசா… 

அக்கினிக் கோபத்தைத் தூண்டும் அதே தாய் ராகம் தான் இந்த அழுகை ராகத்தையும் படைத்து இருக்கிறது என்று எண்ணுகிறபோது… 

ராகங்களோடும் விதி ரகசியமாய் விளையாடிக் கொண்டிருக்கிற உண்மை புரிகிறது. அந்த ஆரோகண தைவதம் (த) பாஷாங்கபட்டதால் களங்கபட்டதால் இந்த அழுகையோ? பைரவியையும்தான் இந்தத் தாய் பெற்றாள்; ஆயினும் இதே தைவதத்தில்தான் களங்க மடைந்தது. மகிழ்ச்சியின் எல்லைக்கே அது கொண்டு செல்லவில்லையா? ஆனால் முகாரி வக்கிரபுத்தி கொண்டதால் வாய்விட்டு அழுகிறது! ஓ… எல்லா வக் கிரங்களும் அழுவதில்லையே! ஆனந்த பைரவியாக. சகானாவாக, நாட்டைக் குறிஞ்சியாக, ஏன்? குற்றாலக் குறிஞ்சியாக இன்பம் தருகிற வக்கிரங்களும் இல்லையா என்ன? பாஷளங்கங்களும் இருக்கின்றனவே! 

இதனை நினைக்கிறபோது… 

ராகங்களோடும் விதி ரகசியமாய் விளையாடிக் கொண்டிருக்கிறது.. 

கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் குறிஞ்சி. 

‘இளைய நாச்சி! ஒன்றைக் கேட்பேன்; சத்தியமான பதிலைச் சொல்வீர்களா?” 

“கேளுங்கள் குறிஞ்சியம்மா!” 

“என் காதலர் குற்றவாளிதானா?” 

இளைய நாச்சியார் கண்களில் நியாயம் நீர்த்திவலை களாக உருண்டன. 

“அன்றில் பறவை குற்றம் செய்யுமானால், அசுணமாப் பறவை குற்றம் செய்யுமானால், சக்கரவாகப் பறவை குற்றம் செய்யுமானால், சாதகப்பறவை சுவாதி நீரைப் பருகத் தவறுமேயானால், உங்கள் காதலர் குற்றவாளியே! இதைவிட அதிகமாகக் கேட்க வேண்டாமே!” 

குறிஞ்சியின் மார்பகத்தே புயலனைய பெருமூச்சு நிறைவாகப் பறிகிறது. 

“கொஞ்சம் சாப்பிடலாமே!” 

“மன்னிக்கவும்; என் காதலனைப் பக்கத்தில் அமர்த்தி விருந்துபசாரம் செய்யுங்கள்; ஒரு புனிதவதி பரிமாற நான் சாப்பிடுகிறேன்.” 

“கொஞ்சம் ஓய்வு கொள்ளுங்கள்; முடிவு தெரிந்து கொண்டு இதோ வந்துவிடுகிறேன்!” 

இளையநாச்சியார் புயல் வேகத்துடன் புறப்பட்டாள்.

அரண்மனைக் கூடத்தில் இன்னமும் வெறியின் மூக் கணாங்கயிற்றில் அகப்பட்ட காமப் பொலிஎருது போல உலவிக் கொண்டிருக்கிறான் சிவகங்கை இளைய ஜமீன், அவன் ஏதோ ஒரு நாசவேலைக்கு சதிவெண்பா பாடி யனுப்பியது பிசிறு தட்டாத இலக்கணமாக அரங்கேற வேண்டுமே என்கிற மர்மமான அவத்தா நிலையில் அவ்விதம் உலவிக் கொண்டிருக்கிறானோ? தான் உண்ண முடியாத உணவைத் தானமாகத் தருவதாவது? குப்பை யில் கொட்டும் குள்ளமனப்பான்மை முயற்சியில் குடில வித்தை நடத்தி, அதன் முடிவை எதிர்நோக்கி உலவிக் கொண்டிருக்கிறானோ? 

“இன்னும் வெறியடங்கவில்லையா?”

மனைவியின் குரல் கேட்டு எரிச்சலுற்றுத் திரும்பிப் பார்க்கிறான். “இப்போது எங்கே வந்தாய்?” 

“ஞானசுந்தரத்தின் விடுதலை.” 

“விடுதலை? அதனை எப்போதோ செய்தாய்விட்டது. இப்போதைக்கு குறிஞ்சி, அவள் பாடும் தேவ ராகமாம்… குற்றாலக் குறிஞ்சி… என்னருகில் அமர்ந்து பாடவேண்டும். இல்லை; என்னுடன் ஒருமுறை அனுபவிக்க வேண்டும். விடுதலை நிச்சயம்!” 

“சீ! கேவலம் காளையார்கோயில் தாசியை அனுபவிக்க முடியாத நீங்கள் ஒரு கற்பரசியை எதிர்பார்ப்பது வெட்க மாக இல்லை? ஒரு மனைவியிடம் பேசுகிற பேச்சா இது?” 

“எனக்கு மனைவி என்பது ஒரு சாசனம். அவ்வளவே! போகவதி என்பவள் குப்பைமேட்டுக் குண்டுமல்லி; அதனை ஏன் கும்பிடுபோட்டு முகரவேண்டும்? இது நீலமலைக் குறிஞ்சிப்பூ! கிடைத்தற்கரிய தேவப் பிரசாதம்! காலில் விழுந்தும் அனுபவிக்கலாம்!” 

வெதும்பிப் போகிறாள் இளைய நாச்சியார். “நான் ஒன்றைச் சொல்லலாமா?” 

“சொல்!” 

“ஞானசுந்தரம் என்பவன் காந்தருவன்! நீங்கள் காட்டுப் பேய்! என்னைக் காந்தருவனை அனுபவிக்க அனுமதி தாருங்கள். குறிஞ்சி விஷயத்தில் நான் தலையிட வில்லை.” 

“என்னடீ சொன்னாய்?” என்று இளைய ஜமீன் கையோங்கி வர… 

சற்றே ஒதுங்கிய இளைய நாச்சியார், “என்மீது கை வைத்தால் நான் பிறந்த சேது பூமிக்குச் செய்தி எட்டும்! பிறகு உங்கள் காதும் மூக்கும் அறுபட்டுக் கழுதைமேல் ஊர்வலம் வரச் செய்கிற துர்பாக்கிய நிலை ஏற்படும். மரியாதையாக ஞானசுந்தரத்தை ஏகபத்தினி ஆண் மகனை விடுதலை செய்யுங்கள்!” 

ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொள்கிறான் இை வல்லபதேவ உடையான். நடப்பது நடக்கப் போகிறது. இப்படி ஏன் முயற்சிக்கக் கூடாது? 

“அவள் பாடட்டும்; விடுதலை செய்கிறேன்.” 

“பேச்சில் மாறுதல் இல்லையே?”

“நிச்சமாய் இல்லை.’ 

கொஞ்சமும் தாமதியாமல் அந்தப்புரம் நாடி ஓடு கிறாள் இளையநாச்சியார். குறிஞ்சியிடம் எடுத்துக் கூறு கிறாள். 

“இந்த இலட்சிய ராகத்தை உங்கள் கணவன் முன் நான் பாடுவதா?” 

“என்னை நீங்கள் மதிப்பது உண்மையானால் பாடியே தீரவேண்டும். 

குறிஞ்சி குமுறலையடக்கிக் கொள்கிறாள். “நல்லது; பாடுகிறேன். நான் அந்த ராகத்தைத் தனித்துப் பாடுவ தில்லை என்பது வைராக்கியம். என் காதலனுடன் பாடு கிறேன்! விருந்தை ஏற்கிறேன்; விடைபெறுகிறேன்?” 

“இந்தப் பேச்சில் மாற்றமில்லையே?” “நான் குறிஞ்சி!” 

மீண்டும் அரண்மனைக் கூடத்துக்கு விரைகிறாள் இளைய நாச்சியார். 

கணவனிடம் குறிஞ்சி கூறியதை ஒரு சத்திய நிவேத மாக எடுத்து வைக்கிறாள். 

“சிறைச் சாவியைக் கொடுங்கள் !” 

புண்ணியம் தவறிய புருஷனோ, கண்ணியம் தவறிய கண்களால் நோக்குகிறான். 

“சாவியைத் தருகிறேன்; ஒரு நிபந்தனை.” 

“என்ன! என்றாவது ஒரு நாளைக்கு உங்களிடம் குறிஞ்சி வந்தாக வேண்டும் என்பதா?” 

“நிபந்தனையில் அதுவும் ஒன்று மாதிரிதான்!” 

சீ, சீ! வெட்கமாக இல்லை? ஏன்? போகவதியைக் கொலை செய்ததற்கு மாறாக தூக்கிச் சென்று ஆசையைத் தீர்க்கத் திராணியில்லாமல், கொலை செய்து, ஓர் அப்பாவி மீது குற்றம் சாட்டியிருக்கிற நீங்கள், குறிஞ்சி, குறிஞ்சி, குறிஞ்சி…” 

கடகடவென்று நகைக்கிறான் இளைய வல்லபத்தேவ உடையான். 

“அப்படித் தூக்கிச்சென்று அனுபவிக்க வெகு நேரம் பிடிக்காது. என் அரச கெளரவம் என்னாகும்? தாசியைப் பலாத்காரமா?” 

“இதில் மட்டும் அரச கெளரவம் உங்களுக்குக் குறிஞ்சி மாலையிடுகிறதோ?” 

“நன்றாகச் சொன்னாய்! கேவலம் ஒரு தாசியைக் கற்பழித்தான் என்பது கேவலத்திலும் கேவலம்! குறிஞ்சிக் கேவலம் அப்படியல்ல! இது சீதையைத் தூக்கி வந்த ராவணக் கௌரவம்!” 

“போய் வாயைக் கழுவுங்கள்! ராவணன் ராமனைவிட ஒருபடி மீறிய பரிசுத்தவான்! உங்களுக்குக் கம்பன் எழுதிய இராமாவதாரம் எங்கே தெரியப் போகிறது? காமாவதாரப் புருஷனாயிற்றே! சரி, சரி? நிபந்தனையைச் சொல்லலாம்!” 

“சாவியைக் கொடுத்து, ஞானசுந்தரத்தை மீட்ட பிறகு, குறிஞ்சி பாட மறுத்து விடலாம்; மறுக்கவும் வாய்ப் புண்டு. எனவே அந்த அபூர்வ ராகத்தை எனக்கு அடகு வைத்து எழுதிக் கொடுக்கட்டும். காதலனை மீட்டுக் கொண்டு, என் முன் பாடி அதனையே பரிசாகப் பெற்றுச் செல்லட்டும்.” 

“அர்த்தமில்லாத நிபந்தனை.” 

“எனக்கு இது அவசியமான நிபந்தனை.” 

“குறிஞ்சி பாட ஆரம்பிக்குமுன் அந்த அடகு ஓலையை என்னிடம் நீங்கள் கொடுத்துவிட வேண்டும்.” 

“ஆகா! அவளிடமே கொடுத்து விடுகிறேன்.” 

இளைய நாச்சியார் மீண்டும் அந்தப்புரம் நோக்கி விரைந்தாள். அவளது பெண்மை நிலை பூப்பந்தாய்ப் புலம்பலுற்றது. 

செய்தியைக் கேள்விப்பட்ட குறிஞ்சி, சில கணங்கள் யோசித்துக் கேட்டாள்: “இதில் ஏதும் சூது வாது இருக் காதே!” 

அப்போது அங்கு வந்தார் 

வந்தார் பெரிய வல்லபதேவ உடையார்: “நான்தான் இளையநாச்சியை இங்குமங்கு மாக ஊஞ்சலாட்டி வைப்பது! தாராளமாக எழுதிக் கொடு ! நான் ஜமீந்தாராக மட்டுமல்ல; ஜாமீன்தாராகவும் இருக்கிறேன்! முதலில் உன் காதலன் விடுதலையாக வேண்டும்!” 

குறிஞ்சி ஒப்புக்கொண்டாள். 


அனைவருமே கூடத்தில் அமருகிறார்கள். 

ஒரு விசித்திரமான “காகிதக் கூழில் பொன்னின் மிக மெல்லிய தகடு மாதிரி ரேகைகள் ஆங்காங்கே திட்டுத் தி்ட்டாகப் பளிச்சிடுகிற மாதிரியான உறுதி நிறைந்த விசித்திரமான காகிதம். மைக்கூடு, இறகுபேனா மேசை மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வசதி அரச குடும்பங் களுக்கு மட்டுமே வெள்ளைக் கும்பினியர் அளித்திருந் தனர். 

“என்ன எழுத வேண்டும்?” என்று கேட்கிறாள் குறிஞ்சி. இளைய ஜமீன் விளக்குகிறான்: 

“நான் வணங்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி கள் மேல் சத்தியம் வைத்து, ஸ்ரீ சிவகங்கை 

*இம்மாதிரிக் காகிதத்தையும், சரபோஜி மன்னர் கையால் எழுதிய கையெழுத்தையும் (ஆங்கிலத்தில்) நான் தஞ்சை சரஸ்வதி மகாலில் நேரில் பார்த்தேன். 

ஜமீந்தார் இளைய வல்லபதேவ உடையாருக்கு குறிஞ்சியாகிய புகழ் பெற்ற பாடகி எழுதித் தரும் உறுதி மிக்க அடகு சாசனமாவது – நானும் கொலைக் குற்றத்திலிருந்து விடுதலையாகப் போகிற என் காதலன் ஞானசுந்தரமும், நாங்கள் கண்டு பிடித்த, எங்களுக்கே சொந்தமான, அபூர்வ ராகமான குற்றாலக் குறிஞ்சியை இவர்முன் மனம் குளிரப் பாடுகிறோம். நாங்கள் பாடத் தவறினால், இந்த ராகம் மேற் சொன்ன ஜமீனுக்கு அடிமையாகி விடுகிறது. இந்த ராகத்தை மீட்காமல் நான் வேறு எங்கும் அதை பாட மாட்டேன் என்று சத்தியம் செய்து அடகு வைக்கிறேன். நாங்கள் இருவ ரும் எப்போது வந்து பாடுகிறோமோ அப்போது வந்து மீட்டுக் கொள்கிறோம். 
இப்படிக்கு,
குறிஞ்சி. 

குறிஞ்சி கையொப்பமிடுகிறாள். 

“ஏன்? என் காதலர் கையெழுத்து வேண்டாமா?”

“அவசியமில்லை. நீ பாடினால்தான் இந்த ராகத்துக்கே மந்திர மகிமையாம்!” 

“என் காதலனுக்காக இந்தப் பயங்கரமான நிபந்தனையை ஏற்கிறேன்.” 

“உன் பாட்டைக் கேட்பதற்காகத்தான் இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறேன்.” 

“இதற்கு எங்களைக் கச்சேரிக்கே அழைத்திருக்கலாமே! ஏன் இந்த நாடகம்?” 

“நீ வர மாட்டாய். நான் எதிர்பார்த்த நாடகம் வேறு! அந்தக் காட்சி கலைந்து, இப்போது நடப்பது வேறு காட்சி! இந்தா சிறைச் சாவி! 

குறிஞ்சி பெறவில்லை; இளைய நாச்சியார் பெற்றாள். அவ்விதம் பெறுகிறபோது இளைய ஜமீன் பார்த்த பார்வை… ‘கவனித்துக் கொள்கிறேன்!’ என்பதுபோல… 

“வாம்மா. குறிஞ்சி! உன் காதலனைச் சிறையிலிருந்து நீ வரவேற்பதைவிட, நானும் உடன் வந்து வரவேற்பதே சிவகங்கைக்குச் சிறப்பு மட்டுமல்ல; பாவப் பிரயாச்சித்த மும்கூட.” 

பெரிய ஜமீந்தாரும் உடன் சென்றார்.

சிறைச்சாலையையடைந்து சிறையறையைத் திறந்து உள்ளே சென்று கவனித்தபோது… 

“ஞானீ!” என்று குறிஞ்சி அலறிய அலறல்…

அந்தச் சிறை கூடத்தையே ஒரு கணம் கிடுகிடுக்க வைத்துவிட்டது. 

பெரிய ஜமீந்தாரின் கனத்த மீசை துடியாய்த் துடிக் கிறது… 

இளைய நாச்சியார் கண்கள் இளைத்துப் போயின. ஞானசுந்தரம் தரையில் பிணமாகிச் சுருண்டு கிடந்தான். அவனது கையில் ஓர் ஓலை நறுக்கு. 

இளைய நாச்சியார் ஓலை நறுக்கை எடுத்து வாசிக் கிறாள்: 

“என் அருமை குறிஞ்சி! எப்போது பழி சுமத்தப் பட்டுச் சிறையில் அடைபட்டேனோ அப்போதே மானம் மரியாதை அனைத்துமே மாண்டு போயின! இனி நான் உயிருடன் இருப்பதா? உன்னோடு வாழ்வதா? இணைந்து பாடுவதா? என்னை மீட்க நீ வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். உன்னை இளைய ஜமீன் இந்நேரம் கற்பழித்து இருப்பான். எனவே நான் என் உயிரை மாய்த்துக் கொண்டேன். 

இப்படிக்கு, 
ஞானசுந்தரம். 

பெரிய ஜமீந்தார் தோளில் சாய்ந்து குமுறிக் கொண் டிருந்த குறிஞ்சியிடம் ஓலை நறுக்கை நீட்டிய இளைய நாச்சியார், “இது உங்கள் காதலர் கையெழுத்துதானா?” என்று கேட்டாள். 

உற்றுக் கவனித்த குறிஞ்சியும் ஆம்’ என்பது போலத் தலையசைத்து ஓடிச்சென்று ஞானசுந்தரத்துத் தலையை
மடியில் கிடத்தி, “என்னை யாரும் தீண்ட முடியாது என்று தெரிந்துமா ஞானி, இந்த முடிவுக்கு வந்தாய்? ஐயோ! அவசரப்பட்டு விட்டாயே?” என்று கதறிக் கதறி அழுகிறாள். 

அவளைப் பெரிய ஜமீந்தாரும் இளைய நாச்சியாரும் எவ்வளவோ சமாதானம் செய்கிறார்கள். 

கணவனை இழந்தார்க்கு மட்டுந்தான் காட்டுவது இல்லையோ? ஞானி போன்ற காதலனை இழந்தார்க்கும் இவனைவிடச் சிறந்த காதலன் இன்னொருவன் இருக் கிறான்’ என்று காட்டவும் முடியுமோ? 


அன்று மாலை முறைப்படி தகனக்கிரியை நடந்து நிறைந்தது. மறுநாள் தங்கிப் பாலூற்றவும் செய்தாள் பாலுணர்வே காணாத பால் நிலவழகி குறிஞ்சி, 

குறிஞ்சி புறப்படத் தயாரானாள்.

“நான் புறப்படுகிறேன்; எனது அடகு ஓலையைஎன்னிடம் சேர்த்து விடலாமே!” 

“அது முடியாது; நீ பாடவில்லையே என்பதல்ல; நீங்கள் பாடவில்லையே! நிபந்தனை?” 

இளைய ஜமீனின் முகத்தில் எரிதழலின் கொப்பளிப்பு. குறிஞ்சி கண்ணீருடன் நோக்குகிறாள். “இறந்தவரை எழுப்பிக் கொண்டு வந்து நான் பாட முடியுமா?” 

நெட்ட நெடிய ஒரு பெருமூச்சு. 

குறிஞ்சியின் நெஞ்சு குமுறும் எரிமலையானது. 

“எனது உயிரான ஜீவராகத்தையே இழந்துவிட்டேன். இந்தக் குற்றாலக் குறிஞ்சி ராகம் இருந்தென்ன? அடகில் மூழ்கி என்ன? ஏ, இளைய ஜமீன்! நடந்த இத்தனைக் கும் நீதான் காரணம்! ஒரு நாளைக்கு என் ராஜகாந்தி யிடம் நீ பதில் சொல்லியே தீர வேண்டி இருக்கும்! என் நெஞ்சு குமுறுவதுபோல நீ குமுறிப் போவாய்! என் வயிறு எரிவது போல நீ எரிந்து போவாய்! எனது சாபம் 
இந்தச் சிவகங்கையைச் சுற்றிக் கொண்டே இருக்கும்! வழியில் ஏதேனும் வம்பு தும்பு செய்வாயேயானால்…” 

கண்கள் கனன்றன. 

இப்போதுதான் இளையநாச்சி எரிமலையாய் வெடித் தாள்; “என் சகோதரி! அப்படி ஏதேனும் நிகழுமானால்… சத்தியமாக நான் விதவையாவேன்! புரியவில்லை? நானே என் புருஷனைக் கொன்று விடுவேன்!” 

குறிஞ்சி சற்றே அமைதி கண்டாள். 

“உங்கள் இதயத்தை வணங்குகிறேன் இளைய நாச்சி!”

குறிஞ்சி தயாராக இருந்த கோச்சு வண்டியில் கண்ணீரும் கம்பலையுமாக ஏறியமருகிறாள். உடன் வந்தவர்களும் அடுத்த வண்டியில் அமருகிறார்கள். துணைக்கு வந்த வர்கள் குதிரைகளில் ஆரோகணிக்கிறார்கள். பயணம் ஒருத்தி நாடு நோக்கி முகாரியைச் சுமந்து விரைகிறது. 

இப்போதுதான் பெரிய ஜமீந்தார் பூகம்பமாய் வெடித்தார். 

“இளையநாச்சி! இப்போது மட்டும் நீ சுமங்கலி என்றா நினைக்கிறாய்? விதவைதான்! என்ன காரணமோ ராஜ காந்தியைக் காணவில்லை. ஞானசுந்தரம் இயற்கையாகவா தற்கொலை செய்து கொண்டான்? அவனது விரல் நகங்களைப் பார்த்தாயா? ஊசியால் குத்தி இம்சித்து அவனை விட்டே அடகு ஓலை மாதிரி மரண ஓலை வாங்கிக் கொண்டு முகத்தில் கை புதைத்துச் சாகடித்து இருக்கிறார்கள். ராஜகாந்திக்குத் தெரிகிறபோது உனது கணவனின் உடல் எத்தனை கண்ட துண்டங்களாகுமோ’ அவனைப் பெற்றதற்காக நான் வெட்கப்படுகிறேன்! குறிஞ்சியின் சாபத்தால் என்ன நிகழுமோ?” 

அவர் கண்களைத் துடைத்துக் கொண்டு அரண்மனை யுள் வேகமாக நடந்தார். 

கணவனை உற்றுக் கவனிக்கிறாள் இளைய நாச்சி யார். கண்களில் அக்கினிக் குழம்பு. துடித்த அவளுடைய உதடுகள் உதறிய சொற்கள்: 

“சிவகங்கைச் சிறப்பையும் சேதுநாட்டுப் பெருமையை யும் உணராத ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப்பட்டு விட்டவள் விதவையாவது எவ்வளவோ மேல்! இனி என் மஞ்சத்தில் உங்களுக்கு இடமில்லை.” 

காறியுமிழ்ந்து உள்ளே சென்றாள் நாச்சியார். 

இளைய வல்லபத் தேவன் கண்களில் நெருப்பு ஊர்வலம் வந்தது. 

இராகம்-29

கமலம் 

ஒருத்தி நாட்டுக்குள் நுழைகிறபோதே அந்த இருட்டுச் செய்தி-இரு செவிகளையும் பொத்திக் கொள்ளக் கூடிய அபசுரங்களின் ஒட்டுமொத்த செய்தி-குறிஞ்சியின் மடியில் வந்து குத்தியது. 

விருபாட்சக் கவிராயர் இறைவனடி சேர்ந்து விட்டார்! 

ஓ… 

‘கோ’வென்று கதறிப் போய் விட்டாள் கோகில நிலவான குறிஞ்சி! இப்போது அது கோகில நிலவா? கொந்தளிக்கும் நிலவு! குமுறும் நிலவு! கூனிக் குறுகிப் போன குறை நிலவு! 

ஞானசுந்தரத்தை இழந்தாள்; இப்போது தந்தையினும் சாலப் பரிந்து வளர்த்த விருபாட்சக் கவிராயரையும் இழந்து விட்ட பிறகு அந்தக் குறிஞ்சி நிலவுக்கு ஆறுதல் சொல்ல ராகங்களைத் தேடுவதா? இலக்கிய ரசனையுள்ள வார்த்தைகளைத் தேடுவதா? 

குறிஞ்சி மாளிகை வாசலில் கோச்சு வண்டி நின்றதும் ஒருத்தி நாடே திரண்டு வந்து நின்று ஓலமிட்ட அந்தக் காட்சி… 

நேற்றைய முன் தினம் விருபாட்சக் கவிராயர் இறைவனடி சேர்ந்தார்; ஊரே திரண்டு தகனம் செய்த செய்தியைக் கேள்விப்படவா ஏற்னெவே செவிடாகிப் போன செவிகளை மீண்டும் செவிடாக்கச் சுமந்து வந்தேன்? ஏ. பிரத்தியங்கிரா தேவி! என்னடீ சோதனை இது? சோதனைக்கு மேல் சோதனை? நான் என்ன தவறு செய்தேன்? என்ன குற்றம் புரிந்தேன்? தூய்மைக்குச் சோதனைதான் என்றால் அந்தத் தூய்மை தொலைந்து போகட்டும்! துவம்சமாகிப் போகட்டும்? போகட்டும்! 

குறிஞ்சியின் இதயக்குமுறல் கண்ணீரில் வெடிக்கிறது. பலரும் ஆறுதல் கூறுகிறார்கள். 

மாளிகையுள் நுழைந்த குறிஞ்சி, புரண்டு புரண்டு அழுகிறாள். 

ஒருபுறம் ஞானசுந்தரம் இழப்பு. 

மறுபுறம் வளர்ப்புத் தந்தையின் மறைவு. 

இந்தச் சோதனையும் வேதனையும் கண்ணீரில் பந்த விட்டுக் கவலை விழா நடத்தவா ராக தியானத்தை மேற் கொண்டது? எனக்கா? எனக்கா? 

‘புகழுக்குக் கிடைத்த திருஷ்டி’ என்றே ஊரார் பேசிக் கொண்டனர். 

இந்த விபத்தை யாராலும் சரிகட்ட முடியாது. இது விதியின் விபத்து! 

வாழ்க்கையே ஒரு விபத்து. ஆனால் விபத்து வாழ்க்கை யாகலாமா? 

இனி, தனது ஊர்வலம் சப்த சுர ஊர்வலமா? நிசப்த சுர ஊர்வலமா என்று யோசிக்கிறாள். 

ஹே! காஞ்சிப் பெரியவரே! ஸ்ரீ ஆசார்ய சுவாமீ! அத்வைத சொரூபி! எனக்கேன் இந்தச் சோதனை? வேதனை? படிப்பினை? 

தன்னை மனிதர்கள் இகழவில்லை; ஊழ் இகழ்ந்து விட்டது’ என்கிற உண்மை, காலம் கணித்த கணக்குரகசியமாயிற்றே! யாரை நொந்து என்ன பயன்? அவளால் இவ்விதம் சிந்திக்க முடியவில்லை; கற்பிதம் செய்து பார்க்கவும் அந்தக் கற்பனையின் முதல் முகவரிக்குப் புரியவில்லை. 

புரியவில்லை என்பதைவிட, எவ்வித தீங்குமறியாத தனக்கு இவ்விதம் ஏற்பட நியாமில்லை. எனவே புரிய வில்லை போலும்! 

இருட்டு மரணங்கள் இந்த வெளிச்ச இதயத்தை இந்தப் பாடு படுத்தலாமா? ஒரு பாவமும் செய்யாத மனிதர்கள், துன்பியலால் துகளாகிப் போகிற வாழ்வின் மர்மம்தான் தத்துவங்களுக்கே அப்பாற்பட்டு நிற்கிறது. கேட்டால் முன்வினை அல்லது சென்ற பிறவிப் பயன் என்பர். இது ஒரு சமாதானமே! 

முறைப்படியான ஈமக்கடமைகளை முடித்தும், பல நாட்கள் அவள் ஊமைக் குயிலாகவே உறங்கலுற்றாள். எந்தக் கச்சேரிகள் வரினும் ஏற்க மனமில்லை. ஞான சுந்தரம் இன்றிப் பாடுவதா? அன்றில் தனித்துப் பாடுவதா? 

அசுணமா பழிக்காதா? பின் என்ன செய்யப் போகிறாய்? சாதகப்புள்ளைப் போல சுவாதி நீரைத் தேடி யலையப் போகிறாயா? 

புரியவில்லை; புரியவில்லை; புரியவில்லை. 

தம்பூரில் தூசி படிந்து வெகு நாட்களாகி விட்டன. 

அத்திவாரமுமில்லை; கோபுரத்துக் கலசமுமில்லை. குறிஞ்சி எனும் இந்த இசைக் கோயிலுக்கு எதிர்காலக் கும்பாபிஷேகம்? 

ஒருத்தி நாட்டு மக்கள் எவ்வளவோ வேண்டினர். பழையபடி கச்சேரிகளுக்கு ஒத்துக்கொண்டு ராகங்களை மணந்து இதயத்து ரணங்களை ஆற்றிக் கொள்ளலாமே! ஆறும் ரணங்களா இவை? 

ஏ,ராஜகாந்தி ! எங்கே போனாய்? 

நிழலைப் போல என்னைத் தொடர்ந்த நிதரிசன மானுடனே! நீ எங்கே போனாய்? 

நீயும் எனக்கு மூன்றாவது இழப்பா?

உன்னையும் எவனாவது சுட்டுக் கொன்று விட்டானா? 

ஏ, காளீ! அந்தப் பவள மல்லிகை மரமிருந்தாலாவது கொஞ்சம் அதன் நிழலில் ஆறுதல் கொள்வேன்! எங்கே அந்த மானுட மல்லி? எங்கே அந்த மனிதப் பவழம்?

வாசற்படியில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம்.

மாளிகையில் வேலை செய்பவர்களுக்குப் பஞ்சமில்லை. சுருதி மீட்டும் கற்பகம் வந்து செய்தி சொன்னாள்; ‘திருவாரூர் கமலமாம். உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்.” 

ஓ… தன்னுடன் சிட்சை பெற்ற இசை மாது; பிரபல நாட்டிய மாதல்லவா? 

சோகக் குயிலாய் வெளியே வந்து வரவேற்கிறாள் குறிஞ்சி. 

“வாங்க’க்கா! நலமா’க்கா?” 

“வேசி நலம்; தூசி நலம்! அது குறித்து என்ன கவலை? ‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கனியே! தேனே! என்று இளங்கோவடிகளின் வரிகளை ஆடியாடிப் பார்த்த இந்தப் பாதங்கள், இந்த மாசறு பொன், மகிழ்ச்சி குன்றி இருப்பதைக் கேள்விப்பட்டேன்! தஞ்சைப் பெரிய கோயில் நடனத்துக்கு வந்தவள் இந்த இசைக் கோயிலைத் தரிசித்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போகலாமே என்று வந்தேன்!” 

“உள்ளே வாங்க’க்கா!” 

புகழ்பெற்ற நாட்டியகாரிகளுள் ஒருத்தியான கமலம்- முத்துசாமி தீட்சிதரிடம், குறிஞ்சி காலத்தில் சிட்சை பெற்ற கமலம் உள்ளே நுழைகிறாள். 

குறிஞ்சி முன் மாதிரி கோவென்று அழவில்லை. அங்கே கண்ணீரில்லை. கண்ணீர் என்பதே கண்கள் குளிப்பதற் காகத்தானே? சில சமயம் ஆனந்தமாகக் குளிக்கின்றன. சில சமயம் அழுகையாகக் குளிக்கின்றன. எப்படியோ அழுக்கைப் போக்கிக் கொள்கின்றன. 

கற்பகம் மோர் கொண்டு வந்தாள். 

கமலம் அதனைப் பெற்றுப் பருகியவாறு, “இப்படியே ; இடிவிழுந்த மாதிரி எத்தனை காலத்துக்குத்தான் இருக்கப் போகிறாய் குறிஞ்சி?” என்றாள். 

“நான் வணங்கும் சக்தி, எப்போது சக்தி தருகிறாளோ, அப்போது பாடுவேன். அதுவரை மௌனம்தான் எனது– யாரும் கண்டுபிடிக்காத – அபூர்வ ராகம்! 

கமலம் கொஞ்சநேரம் வரை மெளமாகக் கவனிக் கிறாள். 

“ஏனக்காக அப்படிப் பார்க்கிறீர்கள்!” 

குறிஞ்சியின் இதழ்களில் முதல் முறையாக முறுவல் அரும்புகிறது. 

“அப்பாடா! எப்படியோ சிரித்து விட்டாயே!” 

“முதல் முறையாக நானும் இப்போதுதான் பார்க்கி றேன்!” என்று கூறி மகிழ்ந்து கொண்டாள் கற்பகம். 

“உன்னைச் சிரிக்க வைத்துப் பார்க்கவாவது ஈசன் என்னை இங்கு அனுப்பி வைத்தானே, அவனுக்கு நன்றி சொல்கிறேன். நீண்ட நாட்களாக உன்னிடம் வந்து ஒரு விஷயம் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதுண்டு. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பம் இப்படித் துன்பியலாக அமைந்து விட்டதே என்கிற வேதனை!” 

“என்ன விஷயம்? என்னிடம் நீங்கள் கற்றுக் கொள்வதா?” 

“இப்போது எதற்கு?” 

“சும்மா கேளுங்கீ’க்கா! மனசுக்காவது கொஞ்சம் ஆறுத லாக இருக்கும்!” 

“நான் வந்தது உனக்கு ஆறுதல் என்றால், நிச்சயமாக ஈசனுக்கு மீண்டும் நன்றி செலுத்துகிறேன்! குறிஞ்சி! உன் பெயரில் இருக்கிற ராகம் ஊரறிந்தது. என் பெயரிலும் ஒரு ராகம் இருக்கிறதாமே! அது தெரிந்தால், எனது நாட்டி யத்தை என் பெயர் கொண்ட ராகத்திலேயே ஆனந்த மாக ஆரம்பிப்பேன்!” 

குறிஞ்சி கமலராகமாய்ச் சிரிக்கிறாள்: “ஆமாம், அதுவும் ஓர் அபூர்வராகம், பாடுவோர் பாடினால் இரவிலும் கமலம் மலர்ந்து விடுமாம்!” 

“அப்படியா? எனக்குக் கொஞ்சம் சொல்லித்தாயேன் என்று எப்படிச் சொல்வேன், நீ இருக்கும் மனநிலையில்?” 

“அதனால் என்னக்கா? ஏ, கற்பகம்! இப்படிவா!” கற்பகம் அருகில் வந்து நின்றாள். 

“உட்கார்!” 

உட்கார்ந்தாள். 

“கமலா ராகத்தைக் கொஞ்சம் அக்காவுக்கு ஆலாபனை செய்து காட்டு!” 

கற்பகம் தலைகுனிய, “பரவாயில்லை; தைரியமாகப் பாடிக் காட்டு!” என்றாள் குறிஞ்சி. 

கற்பகம், ‘கமலா’ எனும் அந்த ராகத்தை, குறிஞ்சிப் பாணியிலேயே குரல் கொடுத்து ஆலாபிக்கிறாள். ஆ! என்ன நயமான ராகம்! 

“போதும்!” என்றாள் கமலம். 

கற்பகம் எழுந்து கொண்டு, குறிஞ்சியின் பாதம் தொட்டுப் பணிந்து உள்ளே சென்றுவிட்டாள். 

கமலம் சொன்னாள்: “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். நேரில் கண்டேன்,” 

“இவள், கட்டுத்தறியல்ல; பட்டுத்துணி!” கமலம் கமலமாய் சிரித்துக் கொண்டாள். “கௌரி மனோகரியில் பிறந்த ராகம். ஆரோகணம் சகமதநிச் சநிதமகசா, இல்லையா?” 

“நெருப்பு என்று சொன்னாலே தீப்பிடித்துக் கொள்கிற சிட்சையல்லவா நமது தீட்சிதர் பெருமான் சிட்சை!” 

“இந்தோள ராகத்தை சதுஸ்ருதிதைவதத்துடனும் காகலி நிஷாதத்துடனும் பாடுகிறபோது கமலம் ராகம் தாமரைப்பூ வாசனை மாதிரிதான் இருக்கிறது.” 

கமலம் என்றுதான் இந்த ராகத்துக்குப் பெயர்; வழக்கில் கமலா என்பார்கள்.” 

“அதுசரி! நீநம்மகுருநாதர் என்றதும் ஒரு விஷயம் சொல்ல மறந்து போனேன். இப்போது அவர்-படுத்த படுக்கையாக இருக்கிறார். வறுமையோ வறுமை! அவரையே பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறது வறுமை.” 

வறுமை… 

“சம்பாதித்த பணமெல்லாம் என்னவாயிற்று?” 

‘இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டவர் களில் உருப்பட்டவர்களில் எங்கோ ஒரு சிலர்! நல்லது குறிஞ்சி! நான் புறப்படுகிறேன்!” 

“புறப்படுவதாவது? இருங்கக்கா! நானும் உங்களுடன் திருவாரூர் வருகிறேன். குருநாதரைப் பற்றிக் கேள்விப் பட்டது முதல் மனசு சரியில்லை. சாப்பிட்டுவிட்டு இரண்டு பேருமே புறப்படுகிறோம்!” 

குறிஞ்சியின் குருபக்தியைக் கண்டு கமலம் கனிந்து போனாள். 

இருவரும் பகலுணவை முடித்துக்கொண்டு திருவாரூரை நோக்கிப் பயணமாயினர். 


திருவாரூரை அடைகிற போது நல்ல இரவு நேரம். இரவு கமலம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு காலையில் குருநாதரைச் சந்தித்துவிட்டு, ஒருத்தி நாடு நோக்கிப் பய ணிப்பதாக முடிவு. 

பொழுது விடிகிறபோது கமலத்து வீட்டு வாசலில் கூட்டம் ‘ஜே ஜே’ என்று நின்று கொண்டிருப்பதைக் கண்டு கமலமே ஒருகணம் பொறாமைப்பட்டுப் போனாள். இத்தனைக்கு ஒருதடவைக்கூடத் திருவாரூர் வந்து குறிஞ்சி பாடியது கிடையாது. கட்டுச்சோறு மூட்டைகளும் அக்கம் பக்கத்தாரும் நிரப்பிய செய்திகள் பல செவிகளில் தேனை வார்த்திருந்தனவே! 

நாமும்தான் ஊர் ஊராகச் சென்று நாட்டியம் ஆடுகிறோம்? இப்படி ரசிகர்களா? நம்மை ரசிக்க வரும் ரசிகர்களே பணமுதலைகள்தாமே? என்று எண்ணுகிற போது கமலத்துக்கு நாணமாகவும் இருந்தது. 

குறிஞ்சி, காலைக் கடன்களை முடித்துக் கொண்டாள். குருநாதர் இல்லம் செல்ல, தன்னை ஒருவாறு எளிமை யோடு அலங்கரித்துக் கொண்டும் புறப்பட்டாள். 

அம்மம்மா! இந்த அலங்காரத்தைக் கண்டு எத்தனை நாட்களாய்விட்டன என்று மகிழ்ந்து போனாள் கற்பகம். வெளியே வருகிறாள் – இசை வெளிச்சம் குறிஞ்சி. எல்லாரும் வயதில் சிறியவர் பெரியவர்களெல்லாம் வணங்குகிறார்கள். 

“ஏம்மா! எங்க ஊருக்கு வந்து ஒரு நாளைக்குப் பாடக் கூடாதா?” என்றாள் ஒரு வயதான அம்மாள். 

“வாய்ப்பு ஏற்படவில்லை தாயே! ஏற்படுகிறபோது வந்து பாடுவேன்!” 

அனைவருக்குமே ஓர் ஆச்சரியம். இப்படி வணங்கத் தக்க ஒரு பேரழகா? திருவாரூர் தேவியே அவதாரம் பூண்டு வந்ததுபோல! 

கமலம் கேட்டுக் கொண்டாள்: “குறிஞ்சி! கோயிலுக்கு போய் சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டுக் குருநாதர் வீட்டுக்குச் செல்லலாமே!” 

குறிஞ்சி கூன்விழுந்துபோன சமுதாயமாய்ச் சிரிக்கிறாள். கேவலம் வேசிகளையும் நாடக நடிகைகளையும் அனும திக்கிற கோயில், ஜாதி பற்றியதில் தீண்டாமையைக் கடை பிடிக்கலாமா? தீண்டாதவர்களிலும் தீட்சண்ய மிக்கவர் களில்லையா? இவர்களுக்கு இடம்தராத சந்நிதானத்துள் நுழைய, எனது நிதானம் இடம் தரவில்லை என்று கூறத்தான் நினைத்தாள். இதனை கமலத்திடம் கூற முடியுமா? 

வேறுவிதமாகக் கூறினாள்: 

“அவசியமில்லை அக்கா! சிதம்பரம் என்னையும் என் தமிழையும் தள்ளிவைத்த பிறகு, இனி கோயில்களுக்குச் செல்வதில்லை; கச்சேரியும் செய்வதில்லை என்று சபதம் செய்து கொண்டேன். அப்படியே ரசி கர்களை முன்னிட்டு கச்சேரி தேவை என்றால், கோயில் கோபுர வாசலுக்கு வெளியே பந்தலிட்டுப் பாடுவேன்! ஒன்றை நான் யூகிக்கிறேன். இதனை எதிர்காலத்துக்கும் சேர்த்துச்சொல்வேன்! தீண்டாமை என்கிற பிரச்சினை இந்த மண்ணைவிட்டு ஒழிய வேண்டும்! இது நீடிக்கு மானால், ஒரு நாளைக்குப் புரட்சி வெடித்து உயர்ந்தவன் தாழ்ந்து போவான்; தாழ்ந்தவன் உயர்ந்து போவான், இது மருந்துக்கும் அப்பாற்பட்ட நோயாகிச் சமுதா யத்தை ரத்தக் களறியாக்கப் போகிறது! ‘இட்டார் பெரியோர்’ என்கிற ஒளவையின் பாடலையே புறக் கணித்துச் சொல்லுகிறேன்! இரண்டு ஜாதி – இரண்டே ஜாதி ஏற்பட வேண்டும்! ஒன்று அறிவு நிரம்பிய ஜாதி; இன்னொன்று அறிவில்லா ஜாதி! அதாவது கல்வியறிவிலா ஜாதி! அறிவான ஜாதி அவன் பறையனே யானாலும் அந்த ஜாதிக்கே ஆலயம் முதல் அனைத் திலும் முதலிடமாக இருக்க வேண்டும்! அறிவு என்பதே சுத்தமான ஜீவாத்மா! அது பூணூல் அணிந்தால் என்ன? புலால் உண்டால் என்ன? இந்தப் பிரதானத்தை -அறிவுப் பிரதானத்தை இந்தச் சமூகம் எப்போது ஜீரணிக்கிறதோ அப்போதுதான் நாடு நந்தவனமாகும்! இல்லை சுடு காடாகும்! இது இந்தக் குறிஞ்சியின் தீர்க்கதரிசனம்! நான் கோயிலுக்கு வரவில்லை. குருநாதர் வீட்டைவிட ஒரு சிறந்த கோயில் இருப்பதாகவும் தெரியவில்லை.” 

குறிஞ்சி இப்படி உணர்ச்சிவசப்பட்டுக் கூட்டத்தையும் பாராது கூறியதும். கூடியிருந்தவர்கள் எழுப்பிய மகிழ்ச்சி யொலியும் கரவொலியும்… 

ஏதோ. எதிர்காலச் சமுதாயத்துக்கே எதிரொலிப்பது போலிருந்தது. 

அனைவரிடமும் கரம் கூப்பி விடைபெற்ற குறிஞ்சி கமலத்துடன் கோச்சு வண்டியில் புறப்பட்டாள். 

தீட்சிதர் வீட்டுவாசலுக்கு முன் கோச்சு வண்டி நிற் கிறது. 

குறிஞ்சி வருகிறாள் என்கிற செய்தி அறிந்து அந்தத் தெருவே கூடிவிட்டது. 

குருநாதர் வீட்டைப் பார்க்கிறாள். 

ஓ… பழைய நினைவுகளே ! ஞானசுந்தரத்துடன் எப்படி யெல்லாம் ஆடிப்பாடி மகிழ்ந்த நினைவுகளே! 

கண்களில் மெல்லிய நீர்த்திரை… 

வீதியில் ஏதோ சத்தம் கேட்கவே தீட்சிதரின் பெரிய மனைவியும் அவளது மகள் அன்னபூரணியும் கதவைத் திறந்து கவனிக்க அங்கே குறிஞ்சி, கூட்டம் சகிதமாய் நிற்க. “ஓ!… இவள் பணக்காரியாய் விட்ட கொழுப்பைக் காட்டி அவமதிக்க வந்திருக்கிறாள்” என்று நினைத்து விட்டாள். 

“எங்கேடீ வந்தே பறைச் சிறுக்கி! எங்காத்துச் சங்கீதத்தை திருடிண்டி போய், கொழுத்த பணக்காரி யாயிட்டே! அதைக் காட்ட கோச்சு வண்டியிலே வந்து இறங்கி இருக்கியா?” 

கோபத்தில் வார்த்தைகள், வெந்நீர்க் குமிழிகளாய் வெடித்தன. 

அன்னபூரணி குறுக்கிட்டாள்: 

“இவகிட்ட என்னம்மா பேச்சு: முறத்தால் அடிச்சு விரட்டாக் குறையா விரட்டினீங்களே! உங்களை எதால் அடிக்கிறதுன்னு கேக்கற தோரணையில் ஜனங்களைக் கூட்டிண்டு வந்து நிக்கிறா! கேலி பண்றா!” 

கதவு படீர் என்று சாத்தப்பட்டது; தாழிடும் சத்தமும் வேகமாகக் கேட்டது. 

இராகம்-30

மாஞ்சி

குறிஞ்சி, திருவாரூர் வந்திருக்கும் செய்தி காலை 

யிலேயே, தீட்சிதர் வீட்டுக் கதவைத் தட்டியிருந்தது. இல்லையென்றால் அவ்வளவு வேகமாக அது மூடுமா? 

தீட்சிதர் பெருமானாருக்கும் செய்தி செவிகளைக் குளிரச் செய்திருந்தது. 

மிகுந்த படுக்கையாக இருந்தும் முத்துசாமி தீட்சிதர், “குழந்தை வந்திருக்கிறாளா? எனது புகழை நாடெல்லாம் பரப்பும் என் குழந்தை வந்திருக்கிறாளா? குறிஞ்சி வந்தி ருக்கிறாளா? அடி, ஈஸ்வரீ! திருத்தணிகை குருகுகா! அந்தக் குழந்தைக்கு ஏனிந்த வேதனையைக் கொடுத் தாய்? அந்த ஞானக் குழந்தைக்கு ஏனிந்த சோதனையை அளித்தாய்?” என்று மனம் முணுமுணுக்கிறது. கண்களில் நீர் முத்துக்கள். துண்டை எடுத்துத் துடைத்துக் கொள் கிறார். பின்னர் ஆரோக்கியமின்மையால் சற்றே கண்ண யர்ந்தார். 

அப்போதுதான் இந்தக் கதவு சாத்தும் கூத்து நிகழ்ந்து முடிந்திருந்தது. 

அறையினுள் ‘லோலோ’ என்று முனகிக் கொள்கிறாள் பெரிய தீட்சிதரம்மா. அந்தக் கறுப்பின் ஏசலை, சின்ன தீட்சிதரம்மாவான சிவந்த மேனி செவி சாய்கிறது. “என்னது! தெய்வீக வரம் பெற்ற குறிஞ்சி எனது அன்பிற்குப் பாத்திரமான குறிஞ்சி வெளியில் காத்திருக்கிறாளா?’… 

“தீண்டாத நாய்க்கு தீட்சிதர் வீட்டு வாசற்படி ஒரு கேடா?” என்பன போன்ற பெரிய தீட்சிதரம்மாவின் வசை மாரிகள் எரிச்சலாய் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. 

வெளியே… 

குறிஞ்சியின் கண்களில் காவிரிப் புனல்… 

அவமானம்தான்; ஆயினும் குருநாதர் சந்நிதி, பொருட் படுத்தவில்லை. 

மனம் காஞ்ச் ஸ்ரீ ஆசாரிய சுவாமிகளை எண்ணி மறுகிக் கொள்கிறது. உபதேசித்து வரும் அத்வைதத்தின் பெருமை இன்னும் சரியாகப் போய் சேர வேண்டியவர் களிடம் சேரவில்லையோ என்று நொந்து கொள்கிறாள். ஆதிசங்கர பகவத்பாதர் – புலையன் வேறு: புரோகிதன் வேறு என்று சொல்லவில்லையே! 

கண்ணீருடன் மனம் சங்கர ஸ்மிருதியை முணுமுணுத் துக் கொள்கிறது. 

ச்ருதி ஸ்ம்ருதி – புராணானாம் 
ஆலயம் கருணாலயம் 
நமாமி பகவத்பாத 
சங்கரம லோக சங்கரம்… 

ஹே, ஜகத்குரு!… 

இதயத்தே தம்பூர் சுருதி ஒலிக்கிறது. இதயமே பேசுகிறது… 

கண்ணீர்த் துளிகள் சுரங்களாய் உதிர்க்கின்றன. வாசலுக்கு வெளியே நின்று பாடுகிறாள். 

என்ன பாடுகிறாள்? எதனைப் பாடுகிறாள்? 

அன்று, எந்த நந்தனை – புலயனைக் கோயில் கோபுர வாசல் அனுமதிக்கவில்லையோ, அந்த நந்தன் அனுமதி கேட்டு ஈசனை நோக்கிப் பாடினானே அந்தப் பாடலைப் பாடுகிறாள்… 

காஞ்சி முனிவரை மனத்தில் நொந்து கொண்டு மாஞ்சி ராகத்தில் பாடுகிறாள்… 

பறையன் சரித்திரத்தை ஒரு பார்ப்பான் அக்காலத்தில் பாடலாமா? பாடினானே கோபாலகிருஷ்ண பாரதி! அவன் பாடலையே பாடுகிறாள்… 

‘வருகலாமோ ஐயே!” 

இடையில் சின்ன விக்கல்… 

குறிஞ்சியின் நெஞ்சு அடைக்கிறது. 

ஆயினும் சுதாரித்து மேலும் குரல் கொடுத்து பாடி இறைஞ்சுகிறாள்… 

‘நான் அங்கே 
வருகலாமோ? – ஐயே!’ 

கமலமென்ன? கூடியிருந்த கண்கள் அனைத்திலும் பனித்துளிகள்தாம்!… 

படுக்கையிலிருந்த முத்துசாமி தீட்சிதர் செவிகளில் மாஞ்சி ராகத்து நந்தன் பாடல், மூடியிருந்த கதவைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கிறது… 

வருகலாமோ ஐயே! உன்
அருகில் நின்று கொண்டாடவும்
பாடவும், நான் அங்கே,
வருக… லாமோ?
ஐயே! ஐயே!… 

பாடல் தேனாய், தீட்சிதர் பெருமானின் செவிகளில் பாய்ந்தாலும், சோர்வு கண்ட உடலில் சோகம் பரவுகிறது… 

ஆ ! என் குழந்தை குறிஞ்சி… என் குழந்தை குறிஞ்சி… ஏன் இந்தப் பாடலை வாசற்படிக்கு வெளியே நின்று பாடுவது போல… 

என்ன நடந்தது? எதற்காக வெளியில் நின்று இப்படி இறைஞ்சி, வரம் கேட்டு, அனுமதி வழங்கப் பாடுகிறாள்?… சிறிய மனைவியை மெல்லக் குரல் கொடுத்து அழைக் கிறார். 

குரல் கேட்டு விரைந்து உள்ளே நுழைகிறாள் அவள். 

“என்னங்க?” 

“வெளியில் குறிஞ்சி பாடுவது மாதிரி கேட்கிறது… வருகலாமோ என்று ஏன் அவள் அனுமதி கேட்கிறாள்?” முத்துசாமி தீட்சிதர் தீனமான குரலில் இவ்வாறு கேட்கிறபோது சின்ன இருமல். 

பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடந்ததைச் சின்னவள் விவரிக்கிறாள். 

“அடி சண்டாளி! இந்தச் சண்டாளியா அவளைப் பார்த்துச் சண்டாளி என்றாள்? என்னை அழைத்துக் கொண்டு போ! அழைத்துக் கொண்டு போ! என் குழந்தை அழுகிறது! ஞானக்குழந்தை அழுகிறது! என்னைக் காண அனுமதி கேட்டு அழுகிறது… முருகா! குகா! ஐயோ வருகலாமோவா? வா… வா… வா…” 

இருமுகிறார். சின்ன மனைவி அவரைக் கைத்தாங் கலாகப் பிடித்து எழுப்பி அழைத்து வர, பெரியவள் பார்த்து விட்டாள். 

“எங்கே. போறேள்?” 

“வெளியே ஒரு பிராமணத்தி என்னை அழைக்கிறாள்! இந்தப் பறையன் அவளது தரிசனம் நோக்கி போகிறான்.” “என்ன பேசறேள்? நீங்க பேசற பேச்சா இது? வயசாகி நோய் வந்தா இப்படியா உளர்றது?” 

“சண்டாளி! என் ஞானக் குழந்தையை உள்ளே அனு மதிக்காமல் கதவைச் சாத்தியா அவமானம் செய்தாய்? உனக்கு என்னடீ தெரியும்? குலத்தால் யாரும் உயர்ந்து விடுவதில்லை; பலத்தால் உயருகிற நியதியை நீ அறிய நியாயமில்லை.” 

அவர் மெல்லத் தடுமாறி நடக்கிறார். 

குறிஞ்சி பாடி முடித்து, “ஐயே!” என்று கடைசிச் சொல்லை ஆதார சுருதியில் நிறுத்துகிற போது… 

கதவு, சொர்க்க வாசலைப் போலத் திறக்கிறது… எப்படி இருந்த தீட்சிதர் மகான் இப்படியா? 

“சுவாமீ!” என்று கதறிய குறிஞ்சி, நெட்டங்கமாக அப்படியே வாசலுக்கு வெளியில் நின்றே விழுந்து கதறுகிறாள். 

“எழுந்திரு மகளே! எழுந்திரு! உன்னை எனது பெரிய மனைவி அலட்சியம் செய்து விட்டாள். அவள் உன்னை அறியாதவள், தன்னையும் அறியாதவள். வா, குறிஞ்சி! உள்ளே வாம்மா குறிஞ்சி!” 

“மன்னிக்க வேண்டும் குருநாதா! எனக்கென்று ஓர் இலட்சியம். என்னை அலட்சியம் செய்தது கைலாயமே யானாலும் காலெடுத்து வைக்கமாட்டேன். எனது மன வீட்டில் நீங்களிருக்கிறபோது, இந்த வீட்டுக்குள் நான் பிரவேசிக்க வேண்டுமா? ஒன்று சத்தியமாக நடக்கும்! நீங்கள் அழைக்கிறீர்கள் என்பதால் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பேசாமல் இருப்பார்கள். நான் சென்றதும் வீட்டையே கழுவித் தள்ளுவார்கள். கோமியம் தெளிப் பார்கள். இது தேவையா? நான் கழுவித் தள்ளக் கூடிய வளல்ல; தாங்கள் அளித்த சங்கீதப் பிச்சையால் தமிழ் நாடே தழுவிக் கொண்டிருப்பவள்! இந்த அவமானம் எனக்குத் தேவையா?” 

“என்னையுமா சொல்லுகிறாய் குறிஞ்சி?” 

என்று கண்களைத் துடைத்து கொள்கிறாள் தீட்சிதரின் சிறிய மனையாள். 

“நீங்கள் அளித்த ஆதரவுதானே தாயே, எனக்கு ஆதார சுருதி? பொதுவில் சொன்னேன்.” 

தீட்சிதர் தீனமான குரலில் பேசுகிறார்: 

“குறிஞ்சி! உன் வாழ்க்கையில் நடந்த துன்பியலைக் கேள்விப்பட்டு அந்தத் திருத்தணிகை முருகனை எவ்வளவு திட்டினேன் தெரியுமா?” 

“என்ன செய்யலாம் சுவாமீ? நமது தமிழ்த் தாத்தாவே கேட்டு வியக்கிறான். ‘ஊழிற் பெருவலி யாவுள? மற் றொன்று சூழினும் தான்முந் துறும்!’ எனவே இதனை ஊழ் என்றே இப்போதைக்கு நான் செய்து கொண்ட முடிவு.நடந்தது நடந்துவிட்டது சுவாமி! தாங்கள் வறுமை யாலும், நோயாலும் வாடுவதாக கமலம் அக்கா சொன் னார்கள். எனவே காண ஓடோடி வந்தேன். எனது ஆசை ஒன்று; நிறைவேற்றுவீர்களா?” 

“சொல் குறிஞ்சி!” 

“சத்தியமாக மறுக்க மாட்டீர்களே!” 

ஒருகணம் யோசிக்கிறார் முத்துசாமி தீட்சிதர், “வடிவே லறிய மறுக்க மாட்டேன்.” 

“கொஞ்சம் வாசற்படியை விட்டு வெளியே வந்து வாசற்படியில் அமருகிறீர்கள்.” 

மறுக்காமல் அவ்வண்ணமே அமருகிறார் முத்துசாமி தீட்சிதர். 

திரும்பிப் பார்த்துச் சமிக்ஞை செய்கிறாள். 

இரண்டு ஆட்கள் ஒரு கனத்த கோணிப்பையைத் தூக்கி வருகிறார்கள். அவர்கள் உதவியுடனேயே பையை அவிழ்க்கிறாள். அதில் நிரம்பி இருந்த பொற்காசுகளை, அப்படியே தீட்சிதர் பெருமான் சிரசில் தனது இருக ரங்களால் அள்ளி அள்ளி அபிஷேகிக்கிறாள்; அகமகிழ்வுடன் அபிஷேகிக்கிறாள். 

“இந்தக் கனகாபிஷேகம் எனது குரு காணிக்கை சுவாமீ!” 

ஆ! வியக்காதார் யார்? விதிர்த்துப் போகாதார் யார்? “நான் விடைபெறுகிறேன் சுவாமீ!” 

தீட்சிதரின் கண்களில் சங்கீதம் ஆனந்த நீர்த்திவலை களாய்ச் சொட்டுகிறது. 

‘குறிஞ்சி! நான் உன்னை ஒருநாள் கூட அருகில் அமர்த்தி சட்சமத்தையும் சொல்லவில்லை. பஞ்சமத்திலும் நிறுத்தவில்லை. ஆனால் நீ மத்தியமமாக நின்று பாடிய இந்த மாஞ்சி ராகம். காஞ்சி மாமுளிவரின் கருணை யால் ஏற்பட்ட கடாட்சம்! உனது இந்தப் புகழைக் கம்பனிருந்து பாட வேண்டும்! காளிதாசனிருந்து பாட வேண்டும்! காளிதாசனின் காளிவரப் பிரசாதத்தையும் கம்பனின் தமிழ் ஞானத்தையும் என் போன்ற இசை ஞானத்தையும் பெற்ற ஒருவன் பிறந்து என்றைக்கா வது உன்னைக் காப்பியத் தலைவியாக்கி எழுதுவான்! அவ்வாறு என்றோ எழுதப் போகிறவனுக்கு இன்றே எனது ஆசீர்வாதம்!… சென்றுவா மகளே!” 

முத்துசாமி தீட்சிதரின் தாள்பணிந்து எழுகிறாள் குறிஞ்சி. கமலமும் வணங்கி எழுகிறாள். 

விடைபெற்றதும், கோச்சுவண்டி விரையத் தொடங்கியது. 

முத்துசாமி தீட்சிதருடைய கண்களில் அழுத்தமான சங்கீத நீர்முத்துக்கள் சப்த சுரங்களாய் உதிர்ந்தன. 

மனம், ஆதிசங்கரரின் திருபுரசுந்தரி அஷ்டகத்தைத் திரிகரணசுத்தியுடன் பஜித்துக் கொள்கிறது. அந்த சுலோகத்துக் கடைசி வரியான, ‘சந்த்ர சூடாமணியம், த்ரிலோசன குடும்பனீம், த்ரிபுர சுந்தரீம் ஆச்ரயே!” என்பதை இருமுறை சொல்லிக் கொள்கிறது… 

அன்றே கமலத்திடமும் விடைபெற்றுக் கொண்டு ஒருத்திநாடு நோக்கிப் பயணப்பட்டாள் குறிஞ்சி. 

சஞ்சலம் சஞ்சரித்து வந்த மனத்தே இப்போது சற்றே மஞ்ஞை தோகை விரித்து மாஞ்சி ராக மகிமையால் மகிழ்ச்சி நடம்புரியத் தொடங்கியது. 


சூரியச் செம்மல் மேற்கு மஞ்சத்தே சயனிக்கிற வேளையில், ஒருத்தி நாட்டையடைந்தாள் ஓரியாகி ஒருத் தியாக நின்று போன ஒண்டொடியாள் குறிஞ்சி. ‘ஒருத்தி’ என்ற சொல் அவளுக்கே பொருந்தும் போல இருந்தது. 

மாளிகை யடைந்து ஓய்வு கண்டாள். 

இருட்டு கறுப்பு வியாபாரம் பேசத் தொடக்கமாகிக் கொண்டிருக்கிறது. 

அந்தச் சமயத்தில் மயூரி வாத்தியம் வாசிப்பவனான லோகிதாசன் என்பவன் உள்ளே நுழைந்து ஒரு செய்தியைச் சொன்னான். அது- 

திருச்சி கலெக்டர் நெல்சன் என்பவனை, எவனோ கொள்ளைக்காரன் சுட முயன்றதாகவும், அவன் தப்பி விட்டான் என்பதே! யார் அந்தக் கொள்ளைக்காரன் என்பது தெரியவில்லை. 

மனத்தே அதுவரை ஆடிவந்த மயூரம் – இந்த மயில் மயூரி வாத்தியக்காரன் லோகிதாசன் சொன்ன செய்தி கேட்டுத் தோகை யடங்கித் துவண்டு போனது. 

யார்? ராஜகாந்தியாக இருப்பானா? 

லோகிதாசன் வணங்கிப் புறப்பட்டுச் சென்றான்.

குறிஞ்சியின் நெஞ்சில் மீண்டும் குமுறியழும் கூச்சல்,

காளீ! அவன் ராஜகாந்தியாக இருக்கக் கூடாதே!

அகத்தே அலைகடலின் நுரைக் கோலங்கள், தாறு மாறாய்ப் பாய்ந்து குமிழ்களாய் வெடிக்கின்றன. 

ராஜகாந்தி, ராஜகாந்தி, ராஜகாந்தி… 

என் பவளமல்லி மரமே! நீ பூக்கும் பவளமல்லியின் காம்பு சிவப்பு. அது உனது குரூரம். ஆனால் மேலே விரிந்து மணக்கும் வெள்ளை இதழ்கள்? அவை உனது குணங்களல்லவா? இதயமல்லவா? 

காளியின் கருணையோ? 

யாரோ கதவைத் தட்டுகிறார்கள்… 

எழுந்து சென்று கதவைத் திறக்கிறாள். 

அங்கே ராஜகாந்தி, கனத்த மீசை துடிக்க, கண்களில் நெருப்புப்பொறி பறக்க, இரும்பு தேகம் சிலிர்க்க நிற்கிறான். 

பல கணங்கள் குறிஞ்சியின் பிரமிப்பு. மீண்டும் சுய நினைவுக்கு வந்தவள். “ராஜகாந்தி” என்று கதறி பொங்குமாங்கடலைப் போலக் குமுறித் தன்னை மறந்து, அவனைச் சேர்த்து மார்பில் தலை புதைத்து, இழந்து பட்ட தந்தையின் பாசத்தைத் திரட்டித் தஞ்சம் புகுந்த வளைப் போலத் தாரை தாரையாகக் கண்ணீர் வடிக் கிறாள்; தேம்பித் தேம்பி அழுகிறாள். 

“அழாதே மகளே! அழாதே! அனைத்தையும் கேள்விப் பட்டேன். உள்ளே வா!” 

இருவரும் மாளிகையுள் நுழைந்து கதவைத் தாழிடுகிறார்கள். 

கற்பகம் கவனிக்கிறாள். ஆனால் வேலையாட்கள் கதி கலங்கிப் போயினர். 

“கற்பகம்! ராஜகாந்தி வந்திருக்கும் செய்தி, ஒரு கொசுவுக்கும் தெரிந்து வெளியே பறந்து சென்றுவிடக் கூடாது. ஜாக்கிரதை!” 

கற்பகம் வாசலிலேயே காவலாக அமர்ந்து கொள்கிறாள். 

அறையினுள் சென்று இருவரும் அமருகிறார்கள். குறிஞ்சியின் கண்களில் மாலை மாலையாய் நீர்த் தாரைகள். வறண்டிருந்த அந்தக் கண்களில் நீருற்று எப்படித்தான் பெருகியதோ? 

“மகளே! என் மகளே! இந்த நேரம் பார்த்து நானிங்கு இல்லாமல் போய்விட்டேன்! விதி, துரதிர்ஷ்ட சொக் கட்டான் விளையாடி விட்டது! அடே, சிவகங்கைக்காரா…” 

ராஜகாந்தியின் பற்கள் ராட்சசமாய் நறநறக்கின்றன. 

“கவலைப்படாதே மகளே ! அவனை எப்படிப் பழிவாங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்ட விஷயம். நான் இருவரைப் பழிவாங்கியதும் எனது கொடுமைகளைத் திருத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? ஒருவனைத் திருப்பதி வரை சென்று பழிவாங்கி விட்டேன். இந்த இடைவெளியில்தான் இந்தக் கோரம் நிகழ்ந்து விட்டது. இல்லையென்றால் சிவகங்கை அரண்மனைத் துகள் பறந்திருக்குமே! பயப்படாதே! இன்னும் ஒருவன்-அவன் கலெக்டர் நெல்சன். எனது குறி தவறி விட்டது. இனி நானிருக்க நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. இனி உன் கச்சேரியின் தம்பூரே ராஜகாந்திதான்! உனது உயிர் பிரியுமானால் எனது உயிரும் அங்கேயே பிரியும்?” 

குறிஞ்சி சூன்யமாய்ச் சிரித்துக் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்; எப்படியோ! எனது பவளமல்லி மரத்து நிழல் கிடைத்துவிட்டது. 

“குறிஞ்சி! பிறகு நிறையவே பேசுவோம்! எனது ஆட்கள் சுற்றிலும் காவல் நிற்கிறார்கள். பயமில்லை. உன்னுடன் அமர்ந்து, நீ சோறு பிசைந்து என் கையில் வைக்க நான் உண்டு எனது கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.” 

இப்போதுதான் ராஜகாந்தியின் பாறைக் கண்களில் நீரூற்றுப் பெருகியது. 

“நானும் இன்னும் சாப்பிடவில்லை. உனக்கும் இட்டு நானும் உண்பேன்” என்று கூறி எழுந்து சென்றாள் குறிஞ்சி. 

அந்த ஐம்பது வயது கரிய பெரிய கடோத்கஜனான ராஜகாந்தி, நாளை என்ன செய்வது என்பது குறித்துச் சிந்தனையை நாலா திசைகளிலும் சிதறடித்துக் கொண்டி ருந்தான். 

ஆயினும் அவனுக்கு ஆபத்து எக்கணத்திலும் வரலாம்; எக்கணத்தே அது வருமோ? வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. 

– தொடரும்…

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *