(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிமேதகு ஆளுனருக்கு முன்னால் வந்து விழுந்தது அந்தக் கல்.
அதிமேதகு ஆளுனர் குதிரை வண்டியில் அமர்ந்திருந்தார். கல் வந்து விழுந்ததும் பரி வாரங்கள் அனைத்தும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றன.
மாட்சிமை பொருந்திய அக்பர் சக்கர வர்த்தியின் வளர்ப்பு மகனும் குஜாராத் பிரதே சத்தின் ஆளுனருமான அப்துர் ரஹீமின் முன்னால் அந்தக் கல் விழுந்திருக்கிறது. நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டிருக்கிறது.
அக்பர் சக்கரவர்த்தியின் முதன் மந்திரி யான பைரம் கானின் புதல்வன் அவர். அக்பர் சக்கரவர்த்திக்கு ஆட்டம் காட்டிய பல சிற்றரசர் களின் சிறகு கத்தரித்த வீரன் அவர். அவர் பெற் றுக் கொடுத்த வெற்றிகளுக்காக அக்பர் சக்கர வர்த்தியால் ‘கானே கான்’ சிறப்புப் பெயர் வழங் கப்பட்டவர். தலைப்பாகையில் ஹூமா பறவை யின் இறகைச் செருகிக் கொள்ள அக்பர் சக்கர வர்த்தியின் விசேட அனுமதி வழங்கப்பட்டவர்.
அந்தக் கல் ஆளுனரின் உடலில் பட்டிருந்தால் இரத்தக்காயம் சர்வ நிச்சயம்.
தன் கண்ணசைந்தால் அந்தப் பிரதேசமே இரத்தக் களரியாகும் என்பதை ஆளுனர் அறிவார்.
எதுவுமே நடக்காதவர் போல நகருமாறு சைகை செய்தார் அவர். பரிவாரம் நகர்ந்தது.
கல்லெறிந்தவன் பின்னால் வந்த வீரர்களின் பொறுப்பில் இருந்தான்.
ஸலீமா பேகத்துக்குச் செய்தி கிடைத்த போது அவர் ‘ஹூஷ் போ கானா’ வில் இருந்தார்.
‘ஹூஷ்போ கானா’ அக்பர் சக்கரவர்த்திக்காக அத்தர் தயாரிக் கும் இடம். அது நறுமணம் கமழும் இடமாக இருந்த போதும் அந்தச் செய்தி ஸலீமா பேகத்தின் புலன்களை ஒரு கணம் ஒடுக்கி விட்டது.
மனம் பதைக்கத் தொடங்கியது. மாளிகைக்குள் நுழைந்ததும் அந்தப் புரத்துக்குள் செல்லாமல் நேரே சக்கரவர்த்தியைப் பார்க்கச் சென் றார் ஸலீமா பேகம். சுல்தானின் அறையை நோக்கி நடந்த போது தொழும்
அறையில் சுல்தான் மாலைத் தொழுகையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அவ்விடத்தில் தாமதித்தார்.
வெளியே வந்த சுல்தான் ஸலீமா பேகத்தின் முகத்தை வாசித் தார். தனது அந்தரங்க அறைக்கு ஸலீமா பேகத்தை அழைத்துச் சென்றார்.
“என்ன ராணி… பதட்டத்துடன் இருக்கிறாய்… என்ன விடயம்?”
“சுல்தான் உங்களுக்குச் செய்தி தெரியாதா… எனது பிள்ளைக்கு எவனோ கல்லால் எறிந்து விட்டான்.”
“அப்படியா…”
“என்ன அப்படியா என்று வெகு சாதாரணமாகக் கேட்கிறீர்கள். குஜராத்திகளுக்கு கொழுப்பு அதிகம். குஜராத்தை நீங்கள் உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டும். இப்போதே நமது படையை அனுப்பி வையுங்கள். அவன் என்பிள்ளை யல்லவா… என் உடல் நடுங்குகிறது பிரபு…”
“ஸலீமா…அவன் எனக்கும் பிள்ளைதானே… அமைதியாய் இரு!” “இல்லை.. என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை சுல்தான்…”
“ஸலீமா, அப்துர் ரஹீம் யார்? எனது முதன் மந்திரி பைரம் கானின் உதிரம். எனது சாம்ராஜயத்துக்கு வெற்றிக்கு மேல் வெற்றி தேடித் தந்தவன். அடக்க முடியாதவர்களை அடக்கும் திறமை வாரோ வரு பெற்றவன். அப்படிப்பட்ட ஒரு வீரனை நோக்கி யாரோ ஒரு பேடிப்பயல் கல்லால் எறிந்து விட்டான் என்பதற்காக நீ இப்படித் தடுமாறுகிறாய்… இது எனக்கே வெட்கமாக இருக்கிறது ராணி…’
“என்ன இருந்தாலும் இது நமக்கு அவமானம் இல்லையா பிரபு” Und die
“இதை எப்படிக் கையாள வேண்டும் என்பது அப்துர் ரஹீமுக் குத் தெரியும். அவனே அதைத் தீர்மானிப்பான். அவன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நீ வீணாகக் கவலைப் படாதே.”
சக்கரவர்த்தியின் வார்த்தைகளில் திருப்தியுறாத ஸலீமா பேகம் தன் தாடையால் தோளில் இடித்துத் தன் கோபத்தைக் காட்டி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
அக்பர் சக்கரவர்த்தி உதடு விரித்துச் சத்தம் வராமல் சிரித்தார்!
முன்னிரவு குஜராத்தை தனது கரும் போர்வையால் மூடிக் கொள்ள ஆரம்பித்திருந்தது.
ஆளுனர் அவர்கள் மாளிகை சென்று சேர்வதற்கு முன்னர் அந்தக் கல்லின் செய்தி மாளிகைக்குள் நுழைந்து எல்லா அறைகளுக்கும் பரவியிருந்தது.
ஒரு விசித்திரமான அமைதி அங்கு நிலவுவதை ஆளுனர் உணர்ந்தார். அது தன்னை நோக்கி வீசப்பட்ட கல் ஏற்படுத்திய எதிரொலி என்பதை அவரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
மாளிகைக்குள் தொழில் புரிபவர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் என்ன நடக்கப் போகிறது என்பது போல் முகத்தைப் பார்த்து மௌன மொழியால் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டபடி நகர்ந்து திரிந்தனர். தொழுகை முடித்து உணவருந்தி விட்டு தனது மேசைக்கு முன்னால் அமர்ந்து தனது குறிப்பேட்டைத் திறந்தார் ஆளுனர். நேற்றைய தினம் பின்னிரவு வரை நடந்த கவிஞர்களுடனான உரையாடலால் நேற்றை யக் குறிப்பும் கூட எழுதப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வந்தது. எழுதத் தொடங்கினார்.
“இன்று காலை என்னைக் காணவந்திருந்தார் முல்லா நஸீமி. சமஸ்கிருதத்தில் நான் எழுதியிருந்த ‘சங்கீத மாலிகா’ வைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரை நான் நூல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். ‘பாபர் நாமா’வை பார்ஸியில் மொழிபெயர்ப்புச் செய்கிறேன் என்று சொன்ன போது ஆச்சரியப்பட்டார்.
அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு லட்சம் ரூபாய் களை மொத்தமாக நான் ஒரு போதும் பார்த்ததில்லை என்று சொன்னார். நான் அவரை மண்டபத்துக்கு அழைத்து வந்து அவர் முன்னால் ஒரு வட்சம் ரூபாய்களைக் கொண்டு வந்து கொட்டுமாறு ஆணையிட்டேன். அதைக் கண்ட நஸீமி, ‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இந்த ஆளு னர் மூலம் எனது வாழ்நாளில் ஒரு லட்சம் ரூபாய்களைப் பார்த்து விட் டேன்’ என்று சொன்னார். ‘இந்தப் பணம் உங்களுக்குரியது. அல்லாஹ் வுக்கு நன்றி கூறுங்கள்’ என்று அவருக்குச் சொன்னேன்.”
இன்றைய பக்கங்களில் எழுத்துத் தொடர்ந்தது.
“இன்று காலை கவிஞர் கங்காவி என்னை நோக்கி, ‘அறம் வழங்கத் தங்களின் கை உயர்கையில் தங்களது பார்வை தானாகவே தரையில் பதிகிறதே’ என்று கவிதையிலேயே வினாவெழுப்பினார். ‘எவனோ இரவு பகலாகக் கொடுக்கிறான். மக்களோ நான் வழங்குவதாகத் தப்பாக நினைத்துக் கொள்கிறார்கள். எனவேதான் என்பார்வை தாழ்ந்து செல்கிறது’ என்று நானும் கவிதையிலேயே அவருக்குப் பதில் சொன்னேன்.”
குறிப்புப் புத்தகம் மூடப்பட்டது.
கல் எறிவிழுந்தது பற்றி எந்தக் குறிப்பையும் அவர் எழுதவில்லை.
அவர் பாபர் நாமாவை மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.
இரவு நீண்டு கொண்டே சென்றது.
அடுத்த நாள் பிற்பகல் மண்டபம் வழமைபோல களைகட்டி யிருந்தது. எல்லா வகையினருக்குமான திறந்த அனுமதி அரங்கு.
அறிஞர்கள். கவிஞர்கள், ஆளுனரின் அதிகாரிகள், பொது மக்கள், முக்கியஸ்தர்கள் என்று பலரும் அங்கு குழுமியிருந்தார்கள். மேதகு ஆளுனர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார்.
“இந்துஸ்தானின் ஹாத்திம் தாயீயின் வருகை நல்வரவாகுக…. இரண்டாம் யூசுபின் வருகை நல்வரவாகுக..” என்ற வரவேற்புக் குரலெ ழுப்பி அவரை வரவேற்றார்கள்.
அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.
வாரத்தில் இரண்டு தினங்கள் மண்டபத்துக்கு வந்து அமர்ந் திருக்கும் அந்தப் பெண்மணி கவிதை கேட்டு மகிழ்வதற்காக வருகிறாள் என்றுதான் அவர் முதலில் நினைத்திருந்தார். அவள் வந்து செல்லும் நாட்களிலெல்லாம் தன்னையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருப் பதைப் பின்னர் புரிந்து நாணமுற்றார். எனினும் அதைக் கண்டு கொள்ளாத வரைப் போல் பாசாங்கு செய்து வந்தார். இதை நெடுகிலும் அனுமதிக்க முடியாது என்று அவர் பலமுறை நினைத்திருந்தும் சபை முடிந்ததும் மறந்து போய் விடுவதையிட்டுத் தன்னை நொந்து கொண்டார்.
அன்றும் கண்கொட்டாமல் விழுங்குமாப் போல் அவள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட வேண்டும் என்று நினைத்தார் அவர்.
“தாயே… நீங்கள் ஏதோ சொல்ல நினைக்கிறீர்கள் போலிருக்கிறது…?”
என்று சொல்லி அவளை நோக்கி விரலைச் சுட்டினார்.
அந்தப் பெண்மணி எழுந்தாள்.
“தங்களைப் போன்ற ஓர் அழகான மகனைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.”
அவள் தன் காதலை சூசகமாக வெளிப்படுத்தினாள்.
ஆளுனர் அவளுக்குப் பதில் சொன்னார்.
“அன்னையே… இவ்வளவு பெரியவனான என்னைத் தங்களுக் குக் குழந்தையாகத் தந்தமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்!”
அந்தப் பெண் சட்டென அமர்ந்தாள்.
இன்று தீர்க்க வேண்டிய விடயம் என்ன என்று தனது உதவியாளரைக் கேட்டார் ஆளுனர்.
“நேற்றுக் கல் எறிந்தவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்…” அனைஅழைத்து என்று தயங்கியபடி சொல்ல, வரப் பணித்தார்.
அவன் கொண்டு வரப்பட்டான்.
“இவனுக்கு ஆயிரம் ரூபாய்களை வழங்கி அனுப்பி விடுங்கள்” என்றார் ஆளுனர்.
சபை அதிர்ச்சியடைந்து அமைதியில் உறைந்திருந்தது.
“இவன் கல் எறிந்தது அப்துல் றஹீமை நோக்கியல்ல. அக்பர் சக்கரவர்த்தியை நோக்கி. நான்தான் குஜராத்தின் அக்பர் சக்கர வர்த்தி. அவன் என்மீது கொண்ட ஏதோ ஓர் அதிருப்தியிலேயே இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான். அவனது அதிருப்திக்கு இப்பிரதேசத்தின் ஆளுனராக நான் ஜவாப்தாரியாவேன்.
தன்மீது கல்லெறிபவனுக்கு மரம் கூடப் பழம் தருகிறது. மரத்தை விடக் கேவலமானவனாக நான் இருக்க விரும்பவில்லை.”
என்று சொல்லி விட்டு உதடு விரித்துச் சத்தம் வராமல் சிரித்தார்.
– 04.05.2010
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.