கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,059 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு வேடனின் குடிசை. காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது அது. 

காட்டில் அங்கும் இங்கும் அலைந்து வேட்டையாடி அலுத்துப்போய் வந்த வேட்டுவன் முசுண்டைக் கொடி படர்ந்திருந்த நிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளே வெட்டுவச்சி அடுப்புக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந் தாள். குடிசையின் வாயிலில் உரலில் இட்டு இடித்த தினையரிசி ஒரு மான் தோலின்மேல் உலர்வதற்காகப் பரப்பப்பட்டிருந்தது. குடிசையைச் சுற்றியிருந்த புல்வெளியில் மான்கள் இரண்டு மேய்ந்து கொண்டிருந்தன. ஒன்று கலைமான், மற்றொன்று பெண்மான், 

காட்டுக் கோழிகளும் ‘இதல்’ என்னும் ஒருவகைப் பறவைகளும் உலர்ந்துகொண்டிருந்த தினையரிசியைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. ஏதோ காரியமாக வாயிற்புறம் வந்த வேட்டுவச்சி முசுண்டைக் கொடியின் நிழலில் கணவன் அயர்ந்து உறங்குவதையும், பறவைகள் தினையைக் கொத்தித் தின்று  கொண்டிருப்பதையும் கண்டாள். அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. 

கோழிகளும் இதல்களுமாக அவள் உலர்த்தியிருந்த தினையில் பெரும் பகுதியை உண்டுவிட்டன; இன்னும் உண்டு கொண்டிருந்தன. 

சட்டென்று கையைத் தட்டி ஓசை உண்டாக்கிப் பறவைகளை ஓட்ட எண்ணினாள் அவள். பெரிய ஓசையை உண்டாக்குவதற்காகக் கைகளை வேகமாக ஓங்கினாள். 

கண்ணிமைக்கும் நேரத்தில் வேறோர் எண்ணம் வந்ததால் ஓங்கிய கை தயங்கியது. அவள் மனத்தில் மின்னலைப் போலக் குறுக்கிட்ட அந்த எண்ணம் என்ன? ஓங்கிய கைகளைத் தடை செய்த அந்த உணர்வுதான் யாது? 

அவளுக்கு வலப் பக்கமும் இடப் பக்கமுமாக அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் கைகள் ஓசையை உண்டாக்குமானால் அந்த இரு காரியங்களும் குலைந்து போவது உறுதி. அந்த இரண்டு செயல்களும் குலைந்து போவதை அவள் விரும்பவில்லை. வலப் பக்கம் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆண் மானும், பெண் மானும் ஒன்றையொன்று நெருங்கிச் சொல்லித் தெரியாத கலையைக் கேளிக்கை மூலம் தெரியவைத்துக் கொண்டிருந்தன. அன்பு என்ற உணர்வு காதலாகிக் காதல் என்ற உணர்வு இன்பமாகி உடலும் உள்ளமும் சங்கம முற்றிருக்கும் ஒரு நிலை. 

இடப் பக்கம் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான். விழித்திருக்கும்போது ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையைக்கூட வேட்டையாடிவிடும் அவ்வளவு வலிமை அந்த உடம்பிற்கு உண்டு. உறங்கிவிட்டாலோ தன்னை மறந்த உறக்கம்தான். 

ஓங்கிய கை நின்றது! வெளியே உலர்த்தியிருந்த தினை முழுவதையும் கோழி தின்றுவிட்டாலும் அவளுக்குக் கவலை இல்லை. அந்த மான்கள் துணுக்குற்றுப் பிரிந்துவிடக்கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின் உறக்கம் கலைந்துவிடக்கூடாது. அவ்வளவு போதும் அவளுக்கு. 

பேசாமல் உள்ளே மெல்ல நடந்து சென்றாள் அந்த வேட்டுவச்சி. மான் தோலை விரித்து அதன்மேல் உலர்த்தியிருந்த தினையைக் கோழிகளும் இதல்களும் சிறிது சிறிதாக உண்டு தீர்த்துக் கொண்டிருந்தன. 

வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், கோழி முதலிய பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டிருந்தன. மான் தோலில் உலர்த்தியிருந்த தினைமட்டும் குறைந்து கொண்டே இருந்தது. 

மறுபடியும் அவள் வெளியே வந்தபோது கணவன் உறங்கி எழுந்திருந்தான். மான்கள் ‘பழைய நிலை’யிலிருந்து பிரிந்து தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உலர்த்தியிருந்த மான் தோலைப் பார்த்தாள். அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ நிறைந்திருந்தது. 

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் 
கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் 
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதேர் 
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல்வழங் காமையிற் கல்லென ஒலித்து
மானதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோ டிதல்கவர்ந் துண்டென! (புறநானூறு-320) 

முன்றில் = வீட்டு வாயிலின் முன், முசுண்டை = ஒரு கொடி, பம்பி = படர்ந்து, கைம்மான் = யானை, துயில் = தூக்கம், பிணை = பெண்மான், கலை = ஆண்மான், மானதள் = மான்தோல், உணங்குதினை = இடித்த தினை, வல்சி = இரை, கானக்கோழி = காட்டுக் கோழி, இதல் = ஒருவகைப் பறவை. 

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *