எங்களால் கட்டப்பட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 2,274 
 
 

மதுரை மாநகரை அடுத்துள்ள ஊரில் ஒரு புகழ் பெற்ற ஒரு கோயில் ஸ்தலம். அந்த கோயிலின் உள்புறமும் வெளிப்புறமும் அமைந்திருந்த ஏராளமான சிற்பங்கள், உலக பயணிகளை இழுத்து வந்தது. குறிப்பாக ஒரு பெண் தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீரை இறைவனாகிய சிவ லிங்கத்தின் மேல் ஊற்றிக்கொண்டிருக்கும் சிற்பத்தை ஏராளமானவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இந்த கோயிலை காண வெளி நாட்டவரும், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து இதன் கட்ட கலையையும், சிற்பங்களையும் பார்த்து இரசித்து சென்று கொண்டிருந்தார்கள்

அதனை அடுத்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஊரில் எதேச்சையாக கிணறு தோண்டுவதற்காக மண்னை பறித்து கொண்டிருந்த பொழுது பழங்காலத்திய பொருட்கள் நிறைய கிடைத்தன. உடனே அங்கு வந்த அகழ்வாராய்ச்சி நிறுவனம், அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்தியது.

அந்த இடம் பாண்டிய நாட்டின் முக்கிய நகராய் கூட இருந்திருக்கலாம், அந்த அளவுக்கு பாண்டிய நாட்டின் இலச்சினைகளும், பொருட்களும் கிடைத்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் கிடைத்தவைகள் யாவும் அந்த புகழ் பெற்ற கோயில் சம்பந்த பட்டவைகளாகவே இருந்தன. கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம், அதற்கு வழங்கப்பட்ட கூலி, மற்றும் கோயில் நிலங்களில் வசூலிக்கப்பட்ட வரி சம்பந்தமான பதிவுகள் இவைகள் அனைத்தும் பட்டையான கற்களில் எழுத்து வடிவத்தில் செதுக்கப்பட்டு ஏராளமாய் கிடைத்தது.

திடீரென்று மண்ணுக்குள் தோண்டியவர்களிடமிருந்து அழைப்பு, என்னவென்று அறிய அங்கு விரைந்தனர் அகழ்வாராய்ச்சி அதிகாரிகள். பட்டையான கற்கள் ஏராளமாய் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் மண்ணுக்குள் இருந்தன.

மேலிருந்து மிக கவனாய் அதை எடுக்க சொன்னார் அதிகாரி. வேலையாட்களும் நிதானமாய் பார்த்து பார்த்து அடுக்கி வைக்கப்பட்ட கற்களை எடுக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நூறு கற்களுக்கு மேல் அங்கிருந்து கிடைத்தன.

எல்லா கற்களும் சுத்தப்படுத்தப்பட்டு என்ன செதுக்கப்பட்டிருக்கிறது என்று படித்து பார்த்தார்கள். ஒவ்வொரு கல்லிலும் சுமார் இருபதிலிருந்து இருபத்தி ஐந்து பெயர்கள் பொறிக்கப்பட்டு அவர்களின் ஊர் பெயர் கூட பொறிக்கப்பட்டிருந்தது, ஒரு சிலரின் அருகில் சோழநாடு, சேர நாடு என்றும் இருந்தது. வரலாற்று வல்லுநர்கள் இத்தனை கற்கள் எப்படி ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன? அதுவும் பெயர்களும் ஊர்களும் எதற்கு குறிக்கப்பட்டிருக்கின்றன? இந்த கேள்வி அவர்கள் முன் எழுந்தது.


விக்கிரம பாண்டியன் அன்று கோயில் கட்டிட பணிகளை பார்க்க வருவதாக கட்டியக்காரன் அறிவித்து விட்டு சென்றான். தலை ஸ்தபதி அதற்குள் ஒரு சில வேலைகளை தனது துணை ஸ்தபதிகளிடம் ஒப்படைத்திருந்தார். மன்னன் வரும் முன் அந்த வேலைகளை முடிக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னார்.

கோயில் பணிகள் சுமார் மூன்று காத தூரம் பரவி மும்முரமாய் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கின்றன. அங்கங்கு சிற்பங்களும், கல் தூண்களும் சிற்பிகளால் இடை விடாமல் செதுக்கப்படும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

விக்கிரம பாண்டியன் தன் பரிவாரங்களை மூன்று காத தூரத்திலேயே நிறுத்தி விட்டு கால்நடையாய் அங்கு நடை பெற்று கொண்டிருக்கின்ற பணிகளை பார்வையிட்டு கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் சின்ன குடிசை அமைக்கப்பட்டு, அங்கிருந்து சற்று தள்ளி சற்று தள்ளி ஒரு இடத்தில் சிற்பங்கள் செதுக்கிக்கோண்டிருந்தான் ஒரு சிற்பி. அவனருகில் சுமார் ஐந்து வயது பாலகன் சிற்பியின் வேலைகளை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தான். குடிசையின் உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது. சிற்பியும், அந்த பாலகனும் அதை பற்றி கவலை கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தனர்.

அப்பொழுது அந்த குடிசையை தாண்டி வந்து கொண்டிருந்த விக்கிரம பாண்டியன் குழந்தை அழும் சத்தம் கேட்டு கூட வந்தவர்களை உள்ளே சென்று பார்க்க சொன்னான்.

உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த சூழ்நிலையை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்து சட்டென வெளியே வந்து மன்னனை அழைத்தனர். மன்னன் எதுவும் புரியாமல் குடிசைக்குள் எட்டி பார்க்க, குழந்தை ஒன்று படுத்த நிலையில் அழுது கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு நாகப்பாம்பு படம் எடுத்த நிலையில் நின்று கொண்டிருந்தது. பதை பதைத்து போன பாண்டியன் சட்டென ஒரு கம்பை எடுத்து அப்படியே அந்த பாம்பை லாவகமாய் வீசி எறிந்தான். அது வெளிப்புறமாய் விழுந்து சர சரவென பக்கத்தில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி போய் குழந்தையை தூக்கிக்கொண்டனர்.

குடிசைக்கு வெளியே இவ்வளவு ஆராவாரங்கள் நடந்து கொண்டிருந்த போதும்,

சற்று தொலைவில் இருந்த சிற்பியிடமோ, அருகில் இருந்த அவனது மகனிடமோ எந்த வித சலனமுமில்லாமல் சிற்பங்கள் உருவாக்குவதிலேயே கவனமாய் இருந்தனர்.

விக்கிரம பாண்டியன் தன்னுடன் இருந்தவர்கள் அனைவரையும் தொலைவில் போய் இருக்க சொல்லி விட்டு தானும், உடன் வந்த அமைச்சரையும், தங்களின் ஆடம்பர உடைகளை களைந்து சாதாரண உடைக்கு மாறி அந்த சிற்பி பணி புரிந்து கொண்டிருக்கும் இடத்துக்கு சென்றனர்.

அங்கு சிற்பி இவர்கள் அருகில் வந்து நின்றதையோ, தான் வடித்துக் கொண்டிருக்கும் சிற்பத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதையோ கவனிக்கவே இல்லை. அவனுடய எண்னமெல்லாம் அந்த சிற்பத்தை செதுக்குவதிலேயே இருந்தது.

இவர்கள் சற்று கணைத்து அவனது கவனத்தை கலைத்தனர். சிற்பி சற்று உஷ்ணத்துடன், அடடா கொஞ்சம் பொறுங்கள், இந்த சிலையின் கண்ணை திறக்க இருக்கும் நேரத்தில் என் கவனத்தை கலைத்து விட்டீர்கள். மீண்டும் தன் வேலையில் மூழ்கினான்.

விக்கிரம பாண்டியன், பொறுமையாய் காத்திருந்தான். ஒரு மணி நாழிகை கழிந்து தன்னுடைய வேலை முடித்து அந்த சிற்பத்தை தள்ளி நின்று பார்த்த சிற்பி, அருகில் இவனையே பார்த்து நின்று கொண்டிருந்த மன்னனை அழைத்து நண்பர்களே எப்படி இருக்கிறது? மன்னனும் மந்திரியும் அந்த சிற்பத்தை பார்த்து அயர்ந்து நின்று கொண்டிருந்தனர். ஒரு பெண் தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீரை அருகில் இருந்த “லிங்கத்தின்” மீது ஊற்றுவது போல செதுக்கப்பட்டிருந்தது.

ஆமாம் இவ்வளவு கருத்தாய் இந்த சிற்பத்தை செதுக்கி கொண்டிருக்கிறீர்களே? எதற்காக?

சிற்பி வந்தவர்களை உற்றுப்பார்த்து நான் சோழ நாட்டை சேர்ந்தவன், இந்த நாட்டின் மன்னன், சிற்பக்கலையின் மீது தனியாத ஆர்வம் கொண்டவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களைப் போல சிற்பிகளுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் இந்த நாட்டு மன்னன் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்திருக்கிறான். அப்படிப்பட்ட மன்னனுக்கு எதிர்காலத்தில் இந்த திருக்கோயில் மூலம் பெரும் புகழ் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மன்னன் மனம் நெகிழ்ந்தது, அது சரி ஐயா, அங்கு உங்கள் குழந்தை அழுது கொண்டிருந்தது, அதன் தாயையும் காணவில்லை, அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவன் போல் அருகில் இருந்த தன் மகனை பார்த்து “நளா” உன் தங்கையை சிற்ப வேலை செய்வதில் மறந்து விட்டோம், உடனே சென்று பார்த்து வா. நன்றி ஐயா ! தாயில்லா குழந்தை அவள், நாங்கள் இந்த நாட்டுக்கு வரும் வழியில் காய்ச்சல் கண்டு இறந்து விட்டாள்.

மன்னனுக்கு மனது வருத்தப்பட்டது, ஐயா, உங்கள் மனைவி இறந்து போய்விட்டார்கள், உங்கள் குழந்தைகளோ, இளம் குழந்தைகள், அப்புறமும் ஏன் பிடிவாதமாய் இங்கிருக்கிறீர்கள், உங்கள் நாட்டுக்கு சென்று விடுவதுதானே? உங்கள் சுற்றத்தார்கள் உங்களுடன் துணையாக இருப்பார்களே.

உண்மைதான், ஆனால் என் மனைவி இருந்தால் கூட இதை ஒத்துக்கொள்ள மாட்டாள். காரணம், பாண்டிய நாட்டிலிருந்து எங்களை அழைத்து செல்ல வந்தவர்களிடம் நாங்கள் போட்ட ஒப்பந்தமே, இந்த கோயில் பணி என்பது, தெய்வத்திற்கு செய்யும் தொண்டு, அது மட்டுமல்ல, இந்த நாட்டு மன்னனின் குலம் விளங்க கட்டப்படும் திருக்கோயில், அவனது பெயர் காலம் எதிர்காலத்திலும் புகழோடு இருக்க எந்த இடையூறுகள் வந்தாலும் இடையில் செல்ல மாட்டேன்” என்று உறுதி கூறித்தான் இங்கு வந்தோம்.

சிற்பியிடமிருந்து விடை பெற்ற விக்கிரம் பாண்டியன் மனம் பல் வேறு சிந்தனைகளால் சூழப்பட்டது.

கோயிலை காண வந்த மன்னனையும் பரிவாரங்களையும் இவ்வளவு நேரம் காணவில்லை என்ற பதைப்புடன் காத்திருந்த தலைமை ஸ்தபதி, மன்னனை கண்டவுடன் நிம்மதியானார். முன் சென்று வணங்கினார்.

பணிவுடன் வணங்கிய மன்னன், தலைமை ஸ்தபதியை அழைத்துக்கொண்டு திருப்பணி நடைபெரும் இடங்களை சுற்றி பார்க்க ஆரம்பித்தான். அவன் மனம் மட்டும் ஏதோ யோசனையிலேயே இருந்தது. எல்லா இடங்களையும் கூட்டி சென்று காண்பித்த தலைமை ஸ்தபதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விடும் என்று நம்புகிறேன்.

ஆனால் மன்னா தங்கள் மனம் எதிலும் ஒட்டாமல் இருப்பது போல் தெரிகிறதே?

மன்னன் சற்று திடுக்கிட்டு, உண்மைதான் ஸ்தபதியாரே, எனக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் இதற்கு உதவி செய்ய முடியுமா?

ஸ்தபதி பதறி விட்டார், என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள் மன்னா, உதவி செய்ய முடியுமா? என்று. தயவு செய்து உத்தரவு என்று சொல்லுங்கள், சிரமேற்கொண்டு செய்கிறேன்.

மன்னன், ஸ்தபதியாரே நாம் இந்த கோயில் திருப்பணியை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?

சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருக்கலாம், இதில் எத்தனை பேர் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் கேட்ட்து, சிற்பிகள், மட்டுமல்ல, இந்த கோயில் திருப்பணிக்காக உழைத்து கொண்டிருக்கும், நம் நாட்டுடன் அனைத்து நாட்டு உழைப்பாளிகளையும் சேர்த்து சொல்லுகிறேன்.

மன்னா ஏறக்குறைய ஐந்து ஆயிரம் பேர் பணி புரிந்து கொண்டிருக்கலாம் மன்னா?

இதில் பணி செய்ய முடியாமல் இடையில் காலமானவர்கள், அல்லது இந்த திருப்பணியில் விபத்தில் உடல் ஊனமுற்றவ்ர்கள்?

அவர்கள் ஏறக்குறைய நூறு பேர்களூக்கு மேல் இருக்கலாம்.

நான் கேட்பது அதுதான் ஸ்தபதியாரே, எனக்கு அவர்கள் அனைவரின் பெயர்களும், அவர்கள் ஊர், நாடு இவைகளை சேகரியுங்கள், அனைவரின் பெயர்களையும், அவர்களின் ஊர், நாடு இவைகளை கற்களில் வரையுங்கள்.

எதற்கு மன்னா?

ஸ்தபதியின் கேள்விக்கு உண்மையிலேயே இந்த கோயில் மிகப்பெரிய புகழுடன் விளங்கும், அந்த அளவுக்கு இத்தனை தூரம் உழைத்து கட்டியிருக்கிறீர்கள். ஆனால் !

ஆனால்..என்ன மன்னா பதட்டத்துடன் கேட்டார் ஸ்தபதி.

நாளை இந்த கோயில் விக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஒற்றை வார்த்தையில் இந்த உலகம் முடித்து விடும். இதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் இந்த கோயில் தொடங்கப்பட்ட நில உரிமையாளர் முதல் இந்த திருப்பணி முடியும் வரை உழைத்த, முடியாமல் இறந்து போன, உடல் ஊனமுற்ற, இவர்கள் அனைவரின் பெயர்களும் இதில் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நாளை உலகம் இந்த திருப்பணியை இத்தனை மக்கள் சேர்ந்து தான் கட்டினார்கள் என்று சொல்ல வேண்டும். என் ஆசையை நிறை வேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

மன்னனின் பொது நல எண்ணத்தை கண்டு மெய் சிலிர்த்து நின்றார் தலைமை ஸ்தபதி.

கிட்டத்தட்ட கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை ஏராளமான பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் தோண்டி எடுக்கப்பட்டது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *