ஊர்வசியின் சாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 4,885 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[இந்தச் சம்பவத்தைக் குறித்து மற்றவர்களுக்குத் தெரியக் கிடைக்காத சில விவரங்கள் எனக்கு எங் ஙனம் கிடைத்தன என்று தெரிவிக்க க எனக்கு அதி காரம் இல்லை. ஆனால் இதற்கு முன் வெளியிடப்பட்ட ”ஊர்வசி” என்கிற சரித்திரத்தைப் படித்தவர்கள் அதிலிருந்து தங்கள் இஷ்டம்போல ஊகித்துக்கொள்வதில் எனக்கு ஆக்ஷேபம் இல்லை. கொனஷ்டை.]

முதற் காட்சி

காலம்:- பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருக்கையில், கௌரவர்களுடன் இனிச் செய்யவேண்டிய யுத்தத்திற்காக உயர்ந்த அஸ்தி ரங்களைச் சம்பாதிக்கும் பொருட்டு, அர்ஜுனன், முதலில் ஹிமாசல சிகரத்தின்மீது சில காலம் தவம் செய்துவிட்டு, பிறகு தேவேந்திரனால் சுவர்க்க லோகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கும் சமயம்.

இடம்:- தேவலோகத்தில் ஓர் நந்தவனம்.

(அப்ஸர ஸ்திரீகள் உலாவிப் பூப் பறித்துச்சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.)

சித்திரலேகை:- உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கிறதோ,அர்ஜுனன் வந்ததுதான் வந்தார், அவருக்காகவென்று நாம் நாலு நாளாக விடாமல் ஆடிப் பாடுவதில், எனக்குச் சப்த நாடிகளும் ஓய்ந்து போய்விட்டன.

வரூதினி:- இன்னும் ஒரு நாள்தான் இங்கே இருக்கப் போகிறாராம். போனால் போகிறது, அவர் இவ்வளவு அழகாய் இருக்கிறாரே, அவருக்காக நாம் கொஞ்சம் சிரமப்படக் கூடாதா?

ஸ்வயம்பிரபா:- எந்த விதத்தில் அவர் அழகு என்கிறாய்? ஸ்தம்பம் மாதிரி தோள், உடம்பெல்லாம் அம்பு பட்ட காயம், நடந்தால் தரை அதிருகி றது, பேசினால் காதைத் துளைக்கிறது!

வரு :- ஒரு வீரர் என்றால் வேறு எப்படி இருப் பாராம்? துளிர் விடுகிற ஒரு மல்லிகைக் கொடியைப் போல், எதையாவது பிடித்துத் தொங்கிக்கொண்டு, குயில் மாதிரி கூவுவாராக்கும்!

மேனகை :- அவள் கிடக்கட்டும். ஸ்வயம்பி ரபா வுக்கு எப்போதும் வழக்கந்தானே-மனசில் ஒன்றை நினைத்துக்கொண்டு, அதற்கு நேர் எதிராக வெளியில் சொல்லுவது!

ஸ்வயம் :- ஆமாமடீ, உனக்கென்ன ? விசுவா மித்திரரைக் கண்டு களித்த கண்களுக்கு எந்தப் புருஷனும் அழகாய்த்தான் இருப்பான்!

மேனகை: விசுவாமித்திரருக்கு என்ன குறை வாம்? எனக்குச் சாவகாசம் மாத்திரம் இருந்திருந் தால், அவருடைய தாடியை நன்றாய் வாரிவிட்டு, அதில் இரண்டு புஷ்பங்களையும் செருகியிருப்பேன். அப்போது எப்படி இருப்பார், தெரியுமா!

ரம்பை :- மன்மதனைப் போலிருப்பார். ஆனால் மன்மதனுக்குத் தாடி இல்லை. ஆகையால் விசுவா மித்திரர்தாம் அழகில் ஒரு படி உயர்த்தி, போதுமா?

மதுரஸ்வரா:- அது இருக்கட்டும். தேவேந்திர னுடைய பிள்ளையாமே, அர்ஜுனன்? நிஜந்தானா?

ரம்பை:- அப்படித்தான் எல்லாரும் சொல்லு கிறார்கள். வாஸ்தவமாக இருக்கும். ஏனென்றால், இதற்கு முன்பும் பூலோகத்திலிருந்து வீரர்களை மாதலி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். வேறு எவரையும் இந்திரன் இம்மாதிரி, தன் ஸிம் மாஸனத்தில், கூட உட்கார வைத்ததில்லையே?

வரூதினி:- ஸ்வயம் பிரபா என்ன வேண்டு மானாலும் சொல்லட்டும். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறபோது பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது!

சித்:- ‘இப்போதுதான் சதுர்த்தசியாக இருக்கிறது என்று நேற்று என் பின்னாலே நாரதர் சொல்லிக்கொண்டு போனார். பஞ்சாங்கப்படி நேற்றுப் பஞ்சமி. எதை நினைத்துக் கொண்டு அந்தச்சாது அப்படிச் சொன்னாரோ?

ரம்பை:- ஏனடீ! சதுர்த்தசி சாயங்காலத்தில் தானே, சாந்தமாய் அஸ்தமிக்கும் சூரியனையும், உதயம் செய்கிற பூர்ணமாகப் போகும் சந்திரனையும் ஒரே சமயத்தில் காணலாம்?

சித்:- அதுவா அர்த்தம்? அப்படியானால் இவர்கள் இரண்டு பேர்களுக்குள்ளே எவர் சூரியன், எவர் சந்திரன்?

ரம்பை:- இவ்வளவு சூக்ஷ்மமாய்க் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஊர்வசியைக் கேள். அவள்தான் நமக்குள் விதுஷி. நீ சொல்லு, ஊர்வசி.

ஊர் :- இதில் சந்தேகத்திற்கு இடம் உண்டா? எல்லோருக்கும் கண்குளிர, சந்திர வம்சத்திற்குப் பிரதிநிதியாக வந்திருக்கிற அர்ஜுனன்தான் சந்திரன்.

மேனகை : நன்றாய்க் கேட்டுக் கொண்டீர்களா? எல்லோருக்கும் கண்குளிர இருக்கிறாராம் அவர். இனி, சூரியனை நீங்கள் யார் வேண்டுமானாலும் எடுத் துக்கொள்ளுங்கள். ஆனால் அந்தச் சந்திரன் கிட்டக் கூட அணுகாதேயுங்கள், ஊர்வசிக்குப் போட்டி யாக.

ரம்பை :-பின்னே, போட்டியில்லையோ அது? துஷ்யந்தன் உன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதனாலே, நீசந்திரவம்சத்திற்கு மாமியார் உறவுதானே ஆகும்? ஊர்வசிதான் நாட்டுப்பெண். அவளோடு போட்டி கூடாதுதான்.

சித்:- சரி, அவளுக்குப் புரூரவஸின் ஞாப கத்தைக் கிளறிவிட்டாயா? இனி ஒரு மாசத்திற்கு ஊர்வசி நம்மோடு பேச மாட்டாள்.

ஊர்:- (மனத்திற்குள்) புரூரவஸின் ஞாபகத்தை ஒருவர் எனக்கு மூட்டவும் வேண்டுமா? அதற்கும் இவர்களுடைய பேச்சுத் தேவையா? அர்ஜுனனைப் பார்க்கும்போதே பளிச்சென்று தோன்றவில்லையா? புரூரவஸின் கண்கள், அவருடைய உதடு, முகச்சாயல், நடை, தேக அமைப்பு—

வேலைக்காரி:-(பிரவேசித்து) அம்மா, உங்களைத் தேடிக்கொண்டு, வீட்டுக்குச் சித்திரசேனர் வந்திருக்கிறார்.

ஊர் :  சித்திரசேனரா?? இதோ வந்துவிட்டேன். (புறப்படுகிறாள்)

ரம்பை :- நாமும் போகலாம். இருட்டிவிட்டது. (எல்லோரும் கலைகிறார்கள்.)

இரண்டாவது காட்சி

காலம்:- சுவல்ப நேரத்திற்குப் பிறகு.

இடம்:- ஊர்வசியின் வீடு.

(ஊர்வசியும் சித்திரசேனனும்)

ஊர்வசி:- கந்தர்வராஜரே, நமஸ்காரம். என்னுடைய குடிசைக்குத் தாங்கள் எழுந்தருளிய காரணம் என்ன?

சித்திரசேனன் :- ஸௌபாக்யவதீ பவ. தேவேந்திரன் என்னை அனுப்பினார்.

ஊர் :- (ருசியற்ற ருசியற்ற குரலில்) அவருடைய கட்டளை என்ன?

சித் :- ஏன் அம்மா, உனக்கு இப்படி முகம் மாறிவிட்டது? உனக்கு அப்பிரியமான வார்த்தை யைக்கூட இந்திரன் சொல்லவில்லையே?

ஊர் :- பிரியமோ அப்பிரியமோ, அவர் இட்ட கட்டளைப்படி நான் நடக்க வேண்டியவள்தானே? அவருடைய ஆக்ஞை என்ன?

சித்:- வேறொன்றுமில்லை. உன்னை அர்ஜுனனிடம் சென்று அவருக்கு உபசாரம் செய்யச் சொன்னார்.

ஊர்:- என்னையா? அர்ஜுனனிடமா? அவர் என்ன, ஏதாவது உக்கிரத் தவம் செய்கிறாரா, இந்திரனுடைய பதவியைப் பிடுங்கிக்கொள்ள? அப்படியிருந்தால் தவத்தைக் கெடுப்பதில் கைதேர்ந்தவர்கள் இல்லையா? மேனகை, திலோத்தமை-

சித்:- பார்த்தாயா? இப்படி நீயாக மேலும் மேலும் கல்பனை செய்துகொண்டு போகிறாயே! அது ஒன்றுமில்லை. இந்திரன் சொன்ன வார்த்தை களையே சொல்லிவிடுகிறேன். ‘நம்முடைய ஒப்பற்ற ஊர்வசியிடம் போய், அவளை அர்ஜுனனுக்குச் சுசுரூஷை செய்யச் சொல்லு. ம்முடைய கட்டளைப் பிரகாரமே அவள் நடக்கிறாள என்று அர்ஜுன னுக்கும் தெரிந்திருக்கட்டும்.’இவ்வளவுதான் அவர் சொன்னார். இதில் தவம் எங்கே, தவத்தைக் கெடுப்பது எங்கே?

ஊர்:- ‘நம்முடைய ஒப்பற்ற ஊர்வசி’ என்று அவர் சொன்னாரா?

சித்:- அப்படியே சொன்னார். அதில் என்ன ஆச்சரியம் என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு நரநாராயண ரிஷிகள் தவம் செய்துகொண்டிருந்த இடத்திற்குத் தம்முடைய அப்ஸர ஸ்திரீகளையெல்லாம் இந்திரன் அனுப்பவில்லையா? அவர்களையெல் லாம் அழகில் தோற்கடிக்கிறேன் என்று நாராயண ரிஷி சொல்லி, உன்னைச் சிருஷ்டித்துத் தன் சபதத்தை நிறைவேற்றவில்லையா? அதெல்லாம் போகட்டும். தினம் தம் கண்ணுக்கெதிரே நிற்பவர்களுடைய தாரதம்யம் இந்திரனுக்குத் தெரியாதா? உன்னை ‘ஒப்பற்ற’ என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்கிறது? ?

ஊர் : ஒரு ஸ்திரீயின் அழகை வேண்டிய மட் டும் ஸ்தோத்திரம் செய்தால், அவளை எந்தக் கசப்பையும் விழுங்கச் செய்துவிடலாம் என்கிற பொது விதிப்பிரகாரம் நீங்கள் பேசுகிறாப் போலிருக்கிறது.

சித்:- இல்லவே இல்லை. நான் சொல்லுவது வாஸ்தவமென்று உனக்கே தெரியும். கையோடே இன்னொரு விஷயம் சொல்லிவிடுகிறேன். சபை நடக்கும் போதெல்லாம், அர்ஜுனன் உன்னைத் தான் முக்கியமாகப் பார்க்கிறான். இதனாலேயே இவ்விதம் உன்னை அனுப்பும்படி இந்திரனுக்குத் தோன்றியிருக்கலாம். அர்ஜுனன் உன்னைக் கவனிக்கிறான் என்பது மாத்திரமல்ல, சில காலமாக ஒருவரையும் கண் நிமிர்ந்து பாராமல் அலக்ஷ்யமாக இருக்கிற நீயும், அர்ஜுனனைக் கவனித்துப் பார்க்கிறாய் என்பது சபையில் எல்லோருக்கும் தெரிகிறது. அதையாவது ஒப்புக்கொள்ளுகிறாயா?

ஊர் :- அது இருக்கட்டும், சித்திரசேனரே, தயவு செய்து இதை எனக்குச் சொல்லுங்கள். பூலோகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் திரும்பத் திரும்பப் பிறப்பும் இறப்பும் உண்டல்லவா?

சித்:- ஆமாம்.

ஊர் :- அந்த மறு பிறப்புகளிலும் ஒருவன், தான் முன் ஜன்மத்தில் இருந்த மாதிரியே இருப்பானா? வித்தியாசம் ஏற்படுமா?

சித்:- உன்னுடைய கேள்வி எனக்குச் சரி யாகப் புரியவில்லை. தெளிவாய்ச் சொல்லு.

ஊர் :- இப்போது ஒருவன் அரசனாக இருக் கிறான். அடுத்த ஜன்மத்திலும் அவன் அரசனா கப் பிறப்பானா ? மூட்டை தூக்கியாகப் பிறக்கவும் இடமுண்டா? இந்த ஜன்மத்திலுள்ள உருவமே அடுத்த தடவையும் இருக்குமா? அல்லது மாறி விடுமா?

சித்:- இந்த மாதிரி பூலோகத்தைச் சேர்ந்த கேள்விகளுக்குச் சரியாக விடைகொடுக்க என்னால் முடியாது. தேவேந்திரனாலும் முடியாது என்று நினைக்கிறேன். நாரதரைப் போன்ற தேவ ரிஷி களுக்குத்தான் இதெல்லாம் தெரியும். வேண்டு மானால் அவர்களைக் கேட்டுப் பார்க்கிறேன்.

ஊர்:-(தனக்குள்) சரிதான்; அவர்களைக் கேட்டு விட்டால், அப்புறம் நாலு நாளைக்கு உபந்நி யாசம் செய்ய உட்கார்ந்துவிடுவார்கள். அவர்களைக் கேட்பானேன்? புரூரவஸ், அர்ஜுனன் இந்த இரண்டு பேரையும் நேரில் பார்த்தவருக்குக் கண் ணுக்கு ஸ்பஷ்டமாக இருக்கிறதே! அதே வம்சம், அதே பதவி, அதே உருவம் – (வெளியிட்டு ) இதற் காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். ஒருவரையும் கேட்க வேண்டாம். மற்ற விஷயத்தில் நீங்கள் சொன்ன பிரகாரம் செய்கிறேன். நமஸ்காரம். (கலைகிறார்கள்.)

மூன்றாவது காட்சி

காலம் :- அன்றிரவு, சுமார் அர்த்த ராத்திரி.

இடம்:- அர்ஜுனனுக்கு ஏற்படுத்தியிருக்கும் மாளிகைக்கு முன்பாக.

(ஊர்வசி, ஸ்நானம் செய்து, அலங்கரித்துக்கொண்டு, பரிமளம் வீச, தெருவில் ஒய்யாரமாக நடந்து வந்து, வாசற் கதவைத் தட்டுகிறாள். துவாரபாலகன் வருகிறான்.)

ஊர்வசி :- தேவேந்திரன் அனுப்பி, ஓர் அப்ஸர கன்னிகை வந்திருக்கிறாள் என்று பார்த்தரிடம் சொல்லு.

(துவாரபாலகன் உள்ளே போகிறான். சற்று நேரத்தில் அர்ஜுனன், குறைத் தூக்கமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வருகிறான்.)

அர் :- இந்த நிசி வேளையில் தேவேந்திரன் அனுப்பியிருக்கிறாரா? யாரை? என்ன காரியமாக?

ஊர்:- நான்தான் வந்திருக்கிறேன், குந்தீ புத்திரா, உன்னிடம் பணிவிடை செய்யும்பொருட்டு என்னை அனுப்பினார்.

அர் :-(அவளை அடையாளம் தெரிந்து கொண்டு) வா, நாரீமணி! உனக்கு அபிவாதனம் செய்கிறேன். இப்படி ராத்திரி வேளையில் உனக்கு எதற்காகச் சிரமம் கொடுத்தார்?

ஊர்:சிரமம் என்ன? எங்களுக்கு நித்திரை அவசியமில்லையே?

அர்:- எனக்குத்தான் தேவையான பணி விடைக்காரர்கள் ஏற்கனவே இருக்கிறார்களே? உன்னைப்போன்ற ஸ்திரீரத்தினத்தை அனுப்புவானேன்?

ஊர்:-காரணம் உனக்குத் தெரியவில்லையா?

அர்:- தெரியவில்லையே!

ஊர்:’ சித்திரசேனா! ஊர்வசியை அர்ஜுன னிடம் சென்று அவனிஷ்டப்பிரகாரம் நடந்து கொள்ளச் சொல்லு’ என்று சொல்லி அனுப்பி யிருக்கிறார். இரண்டு உலகத்தில் பிரசித்தி பெற்ற நாயகனுக்கு இந்தப் புதிரை விடுவிக்க முடியாதா?

அர்:- எனக்கு எட்டாத புதிராகத்தான் இருக்கிறது. உன்னுடைய அழகின் பிரகாசத்தினால், என்னுடைய அறிவு கூசிப்போயிருக்க வேண்டும். நீயே விளங்கச் சொல்லு.

ஊர் :-(அர்ஜுனன் அநுகூலமாக இருக்கிறான் என்று எண்ணி, ஆவலுடன்) அர்ஜுனா, நான் இந்த லோகவாசி. சுயேச்சையாய்ப் பூலோகத்திற் குப் போக முடியாதவள். ஆனால் என்னைத் தேடி வந்தமாதிரியில் நீயே இங்கு வந்துவிட்டால் இனி நாம் விவாகம் செய்துகொண்டால், உனக்குப் பணி செய்யும் பாக்கியத்தை நான் சாசுவதமாய் அடை வேன் அல்லவா? அதற்காகத்தான்.

அர்:-( திடுக்கிட்டு ) விவாகமா! நான் இப்பொழுது ஓர் விரதத்தில் அல்லவா இருக்கிறேன்!

ஊர்: (புன்சிரிப்புடன் ) அப்படி விரதத்தைக் கை பிடித்தவன், இந்திரனுடைய சபையில் எதற்காக என்னை அடிக்கடி உற்று நோக்கினாய்? இதை நான் மாத்திரமல்ல, அங்குள்ள மற்றவர்களும் கவனித்திருக்கிறார்கள். இங்கிதக்ஞனான இந்திரன் அதைத் தெரிந்துகொண்டுதான், சித்திரசேன னிடம் சொல்லி அனுப்பினான், நான் உன்னிடம் போகும்படி.

அர்:- நான் உன்னை உற்று நோக்கியது வாஸ்த வந்தான். அதன் காரணத்தைச் சொல்லுகிறேன். என்னுடைய வம்சத்தின் ஆதிபுருஷனான

ஊர் :-(அர்ஜுனன் சொல்லுவதைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே, தலை குனிந்துகொண்டு) அர்ஜுனா! இந்திரன் சொன்னதற்காக நான் வந்து விடவில்லை. என்னுடைய இஷ்டத்தின் மேல்தான் வந்திருக்கிறேன். நம்முடைய ஸம்ஸர்க்கத்திற்கு யாதொரு தடையுமில்லை.

அர்: (காதைப் பொத்திக்கொண்டு) ஈசுவரா! கர்ண கொடூரமாய் இருக்கிறதே உன்னுடைய வார்த்தை ! என்னுடைய முன்னோரான புரூரவஸி னுடைய பார்யை அல்லவா நீ? அதனாலல்லவோ உன்னைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். நான் உன்னை மணப்பது மகா பாதகமல்லவா! நீ எனக் குப் பாட்டி முறையாயிற்றே!

ஊர் :- இதென்ன, சிறு குழந்தையின் வார்த்தை! கீழ்லோகத்தில் ஏற்பட்ட உறவு இங்கேயுமா வரும்? பிரதி தினமும் ஸ்வர்க்கப்ராப்தி கிடைத்த மனிதர்கள் இங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். அவரவர்கள் சேகரித்த புண்ணியத் தின் பலன் தீர்ந்தவர்கள், பிரதி தினமும், பூமியில் புனர் ஜன்மம் எடுக்கப் போய்க்கொண்டும் இருக் கிறார்கள். இவ்விதம் கோடானுகோடி ஜனங்கள் ஸ்வர்க்கத்திற்கு வந்து வசித்தாய்விட்டது. இவர் களுக்குள், பல பிறப்புகளிலும் இருந்திருக்கக்கூடிய உறவுகளையெல்லாம் எந்த அப்ஸர ஸ்திரீயாவது விசாரித்து நிர்ணயிக்க முடியுமா? பூலோகத்திய உறவு பூலோகத்தோடு போய்விட்டது. வேண்டு மானால் இங்கே எவரையும் கேட்டுப் பார். இது தெரியாமலா இந்திரன் என்னை உன்னிடம் அனுப்பினான்? என்னைப் பார்த்தால் உனக்குப் பாட்டி மாதிரி தோன்றுகிறதா?

அர்:-ஹே கல்யாணி! என்னுடைய மனசைக் கலைக்க எண்ணாதே. இதோ, என்னுடைய சிரஸால் உன்னுடைய பாத கமலங்களைத் தொடுகிறேன்.

ஊர்:(விலகிக்கொண்டு):- ஐயோ! வேண்டாம். நான் அல்லவா உன்னுடைய பாதத்தைப் பிடிக்கவேண்டும். இதோ பிடிக்கிறேன். என்னுடைய மனோரதம் பலிக்கும்படி நீயே ஆசீர்வாதம் செய்.

அர்:- என்னைத் தர்ம சங்கடத்தில் மாட்டி வைக்காதே. உன்னுடன் இந்த வாதத்தில் நான் ஜயித் தாலும் தோற்றாலுமே, திருப்தி இல்லை.

ஊர்:-அப்படியானால் ஏன் வாதம் செய்கிறாய்? இவ்வுலகம் முழுவதும் அனுஷ்டிக்கிற ஆசாரத்தை நீயும் அனுசரிக்க வேண்டியதுதானே?

அர்:- இங்கே வழக்கம் எப்படி இருந்தாலும், நம்முடைய உறவு எனக்குத் தெரிந்திருக்கும் பொழுது, என்னுடைய மனச்சாக்ஷி சொல்லாதா?

ஊர் : சொல்லட்டுமே! அது சொல்லுகிறது நியாயமாக இருந்தால்தானே, நீ கவனிக்கப் போகி றாய். நீங்கள் ஐந்து சகோதரர்களும் பன்னிரண்டு வருஷ காலம் வனத்தில் வசிப்பதாக ஒப்பந்தம். இப்பொழுது, நீ கௌரவாதிகளிடம் ஓடிச் சென்று, ‘சகோதரர்களே! உங்களுக்குத் தெரியாமல் நான் நாலுநாள் ஸ்வர்க்க லோகத்தில் வசித்துவிட்டேன். எங்களுடைய வாக்குக்குப் பங்கம் நேர்ந்து விட்டது. ஆகையால் நாங்கள் வனவாசத்தை மறுபடியும் தொடங்க வேண்டுமென்று என்னுடைய மனச்சாக்ஷி சொல்லுகிறது’ என்று தெரிவிக்கப் போகிறாயா, சொல்லு?

அர்:- (திடுக்கிட்டு, அவளுக்கு நேராய்ப் பதில் சொல்லத் துணியாமல், ஒரே மூச்சாக) அஷ்டதிக்குத் தேவதைகளும், நான் சொல்லுவதைக் கேட்டுக்கொள்ளுங்கள். நான் சத்தியமாய்ச் சொல்லுகிறேன். ஊர்வசி எனக்குத் தாய்மாதிரி, பாட்டி மாதிரி-

ஊர்:- அர்ஜூனா, சற்றுப்பொறுத்துக் கொள். அவசரப்பட்டுச் சத்தியம் செய்யாதே! நீயே முன்னொரு ஜன்மத்தில் புரூரவஸ்ஸாகப் பிறந்து நீயே என் பர்த்தாவாக இருந்தாய் என்று நான் சொன்னால், அப்போதும் இந்த ஆக்ஷேபம் உண்டா, சொல்லு.

அர்:- இது வீண் வார்த்தை, இதை நான் நம்ப மாட்டேன். ஸ்திரீகள் வஞ்சனைக்காரர்கள். தங்க ளுடைய கோரிக்கையைச் சாதிப்பதற்காக எந்தப் பொய்யையும் சொல்லுவார்கள்.

ஊர் : கௌந்தேய! எனக்காக ஸ்திரீகளை யெல்லாம் ஒருமிக்கத் தூஷிக்க வேண்டாம். பக்தி யுடனும் விசுவாசத்துடனும் காமத்துடனும் உன்னி டம் வந்த என்னைத் திரஸ்கரிக்காதே. என்னுடைய அவஸ்தையைக் கண்டால் வேறு எந்தப் புருஷனும் இரக்கப்படுவான். எந்த ஸ்திரீயுங்கூட, இரக்கப் பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, என்னுடைய வேதனையை அறியவாவது அறிவாள். நீ மாத்திரம், இப்படி இரண்டிலும் சேராமல் –

அர் :- அப்படியே இருக்கட்டும். நான் ஒரு ஸ்திரீயுமல்லாமல்புருஷனுமல்லாமல்; பேடியென்றே வைத்துக் கொள். உன்னுடைய மோச வலையில் சிக்கி, என்னுடைய விரதத்தைப் பங்கம் செய்து, ‘ராஜ்யத்தை இழப்பதை விட, நான் ஓர் அலி என்று எல்லோரும் என்னை எண்ண, எனக்குச் சம்மதம். ( அவள் பிடித்திருக்கும் காலை உதறி விடு வித்துக்கொள்ளுகிறான். அந்தப் பாதம் அவளுடைய தலையின் மேல் படுகிறது.)

ஊர்:- (அவமானத்திலும் கோபத்திலும், மெய்ம்மறந்து) நானா உன்னை மோசம் செய்கிற வள்? உனக்குக் கெடுதி செய்ய எண்ணுகிறவள்? இப்படி எண்ணி, பேடி போல் பேசும் நீ ஒரு பேடியாகவே போகக் கடவாய்.

(அர்ஜுனன், தேகம் துடிக்க, மனம் பதைக்கத் திரும்பி உள்ளே போகிறான்.)

ஊர்:- ஹா, தெய்வமே! நான் என்ன செய் தேன்! என்னுடைய புரூரவஸைச் சபித்துவிட்டேனே! ஐயோ! (மூர்ச்சையாய் விழுகிறாள். சற்று நேரத்தில் நாரதர் பிரசன்னமாகிறார். பல உபசாரங்கள் செய்து அவளை மூர்ச்சை தெளியச் செய்கிறார்.)

நார:- எழுந்திரு,குழந்தாய்.

ஊர்: (மகா துக்கத்துடன்) மஹரிஷியே! நான் என்ன காரியம் செய்துவிட்டேன்! ஒரு கொடிய பாதகத்தை அல்லவா –

நார:- வருத்தப்படாதே! அந்தச் சாபம் அர்ஜுனனுக்குப் பிரயோஜனப்பட்டு, நன்மை யாகவே பலிக்கும். துர்யோதனாதிகளுடன் செய்த ஏற்பாட்டின்படி, பாண்டவர்கள் பதின்மூன்றாவது வருஷத்தில் அக்ஞாத வாசம் செய்ய வேண்டும். அப்பொழுது அர்ஜுனன் பேடியாக இருக்க வேண்டியது அவசியம், நீ கொடுத்த சாபம் அந்த ஒரு வருஷ காலத்திற்கு மாத்திரம் நடைபெறும்படி இந்திரன் ஆக்ஞாபிப்பான்.

ஊர்:-(ஆவலுடன்) நாரதரே! நீங்கள் சொல் லுங்கள். அர்ஜுனன்தானே முன் ஜன்மத்தில் என்னுடைய பர்த்தாவாக இருந்த புரூரவஸ்?

நார:- (வருத்தத்துடன்) இல்லையே, குழந்தாய். ஒரு வம்சத்தில் பிறந்தவர்களுக்கு உருவம் ஒரே மாதிரி இருக்கலாம். நம்முடைய ஆசை அழைக்கிறதே என்று, அந்த ஒன்றை மாத்திரம் நம்பி நடக்கலாமா? முன்பு நர நாராயணர்கள் என்று இரண்டு ரிஷிகள் இருந்தார்களே, அவர்களில் நரரிஷிதான், இப்பொழுது சில அவசியங்களின் பொருட்டு அர்ஜுனனாகப் பிறந்திருக்கிறார்.

ஊர் :- (ஆத்திரத்துடன்) அப்படி இருக்க, இந்திரன் என்னை இவரிடம் போகச் சொல்லி

அனுப்பி னானே! இது குரூரமல்லவா? நான் புரூரவஸை மணந்தது முதற்கொண்டே அவன் என்னிடத்தில் மாறியிருக்கிறான்.

நார:-நீ மாத்திரம் எவ்விதம்? கட்டளையிடக் கூடிய எஜமானனாக இந்திரனை எண்ணுகிறாயே தவிர, முன்மாதிரி பக்தி வைத்திருக்கிறாயா? அர்ஜுனன் அவனுடைய பிள்ளை. அவனுக்கு இந்தச் சாபம் கிடைப்பது அவசியம். திரஸ்கரிக்கப்பட்டவள்தான் இம்மாதிரி ஒரு சாபம் கொடுக்கக் கூடும். இதெல்லாம் உத்தேசித்து இந்திரன் உன்னை இங்கே அனுப்பியிருக்கலாம்.

ஊர் :- இவ்வளவு தூரம் முன்னதாகவே லோசிக்கிற இந்திரனுக்கு, இதனால் எனக்கு அவமானமும் மன வேதனையும் நேரிடும் என்று தோன்றி இருக்காதா? தோன்றியுமல்லவா இப்படிச் செய்திருக்கிறான்!

நார்:- அது அவனுடைய தப்புதான். இந்திரன் குற்றமற்றவன் என்று எவர் சொல்லுவார்? ஆனால் ஒன்று: நீயும் மற்ற அப்ஸர ஸ்திரீகள் மாதிரி தாமரை இலையின் மேல் நீர்த் துளியைப் போல், ஒருவரிடமும் ஒட்டுதலில்லாமலிருந்தால், உனக்கு ஒரு வேதனையும் இருக்காது. நீ பூலோகத்தில் ஜனித்த ஒரு தேவ கன்னிகையாகையால்தான், உனக்கு இரண்டு உலகத்திலும் பாசத்துடன், இரண்டும் கெட்ட ஸ்திதியில் இருக்கிறாய்.

ஊர்:- அதென்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்?

௩ார:- பின்னே என்ன? பிணி, மூப்பு, சாவு இல்லாத ஒரு தேவதை இம்மூன்றும் உள்ள ஒரு மானிடன் மேல் தீராத காதலைக் கொண்டால்?

ஊர்: (ஈன ஸ்வரத்தில் ) மஹரிஷியே, புரூர வஸுக்கு நான் தேவதை அல்ல, ஒரு ஸ்திரீ. என் கண்ணில், அவர் ஒரு மானிடர் அல்ல, என் தெய்வம்.

நார:– அப்படிச் சொன்னால், அதற்குமேல் என்ன செய்கிறது? அழிவற்ற ஆத்மாவுக்கு அழி வுள்ள தேகத்தின் மேல் வாஞ்சை ஏற்பட்ட மாதிரி அல்லவா நீ அவரிடம் பாசம் கொண்டிருப்பது ! நீ பிடித்திருக்கும் வழியில், பிறருக்குக் கிடைக்காத காதலின்பத்தை நீ அநுபவிக்கிற மாதிரியே அதை ஒட்டிக்கொண்டு பிறருக்கு நேரிடாத வியோகத் துன்பமும் உனக்கு நேரிடும் அல்லவா? நீ அவரை மறந்துவிட்டு, இதர அப்ஸர ஸ்திரீகளைப் போல், நிம்மதியான மனசை அடையும்படி வரன் கொடுக்கட்டுமா?

ஊர் :- ஸ்வாமி, வேண்டாம், வேண்டாம், முக் காலும் வேண்டாம். நான் அநுபவித்திருக்கும் ஆனந்தத்தின் ஞாபகத்தைக்கூட இழக்கச் சம்மதி யேன். மறுபடியும் அது கிடைக்குமா என்று சதா படும் கவலையையும் கைவிட இணங்கேன்.

நார:- அப்படியானால் என்னதான் வேண்டுமென்கிறாய்?

ஊர் :- புரூரவஸுக்கு அழியாத ஆத்மா உண் டல்லவா? ஏதாவது ஜன்மம் எடுத்துக்கொண்டு தானே இருப்பார்?

நார:- ஆம், அது சரி.

ஊர்:- அவர் எந்த எந்த ஜன்மம் எடுத்திருந் தாலும் நான் பூலோகத்திற்குச் சென்று அவரை அடையும் மார்க்கத்தை மாத்திரம் உபதேசியுங்கள். நான் உங்களை நமஸ்கரிக்கிறேன்.

நார: என்ன? இந்திரனுடைய உத்தரவு, சம்மதம் இல்லாமல், உன் இஷ்டப்பிரகாரம் போகவா?

ஊர் :- ஆம், அதுதான் வேண்டும்.

நார:- அப்படியானால் அவனைக் காட்டிலும் பெரிய இடத்திலிருந்து அல்லவா உனக்குச் சகாயம் கிடைக்க வேண்டும் ?

ஊர் :- அதற்குத்தான் வழி சொல்லுங்கள். உங்களுக்குக் கோடி நமஸ்காரம்.

நார:- எனக்குத் தோன்றுகிறது, இச்சமயம் பூலோகத்தில் மகாவிஷ்ணு எடுத்திருக்கும் அவதார மாகிய ஸ்ரீ கிருஷ்ணனையே நீ பிரார்த்திக்க வேண்டு மென்று –

ஊர் :- அப்படியே செய்கிறேன்.

நார :- எதற்காக இப்படிக் குறிப்பிட்டுச்சொல் லுகிறேனென்றால், மற்ற அவதாரங்களிலெல்லாம் நரசிம்மமாகட்டும், ராமனாகட்டும் துஷ்ட நிக்கிர கமே முக்கியக் கருத்து. கிருஷ்ணனோ, அப்படியல்ல. சென்ற அவதாரத்தில் கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு அனுப்பி, லோகாபவாதத்தைச் சம்பாதித்தது முதற்கொண்டே, மாறியிருக்கிறார். ஒருவர் நியாயமாய் நடப்பது போதாது, காருண்யத்தை யும் சேர்க்க வேண்டும் என்கிற பாவனையில், இப்பொழுது, பிறருடைய கஷ்டங்களையே முக்கியமாய் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அவர்களுடைய தவறுதல்களை மன்னித்துவிட்டு, அவர்களை ரக்ஷிப்பதே எண்ணமாக இருக்கிறார்.

ஊர் :- (கை கூப்பி) கிருஷ்ணா! கிருஷ்ணா!

நர :- சூதாடிவிட்டு, பத்தினி உள்பட, எல்லா வற்றையும் இழந்த யுதிஷ்டிரரைக்கூட ஒரு வார்த் தை இளப்பமோ குற்றமோ சொல்லாமல், மேலே காப்பாற்றுவதிலேயே முனைந்திருக்கிறார். ‘அவன் திருடினானா? அவன் கையை வெட்டு ‘ என்று சொல் லும் இதர தெய்வம். கிருஷ்ணனோ, ‘ஏன் அப்பா, திருடினாய்? பசியால் வருந்தியா? அடாடா! இனி மேல் அப்படிச் செய்யாதே! இந்த மாதிரியில் உழைத்துச் சம்பாதித்துப் பிழை’ என்பார்.

ஊர் :- அவரல்லவா என்னைப் போன்றவ ரிடத்தில் இரக்கப்படுவார்! அர்ஜுனன் புரூரவஸ் தான் என்று நம்பிக்கை உண்டாவதற்கு முன்பே, அவ்வித ஆசையையே கைபிடித்துக்கொண்டு இங்கே வந்துவிட்டேன். வந்த இடத்தில் கோபத்தினால் அர்ஜுனனைச் சபித்தேன். காமோ அகார் ஷீத் மன்யுரகார்ஷீத்.ஸ்ரீ கிருஷ்ண பகவான்தான் என்னை மன்னித்து ரக்ஷிக்க வேண்டும். கிருஷ்ணா! கருணாஸிந்தோ!

நார:- நீ அவரைப் பிரார்த்தித்துக்கொண்டால், புரூரவஸுக்கு, ஒவ்வொரு ஜன்மத்திலும், புண்ணி யம் முற்றி, பாக்கியம் நெருங்கும் போதெல்லாம், சமயோசிதமான விதத்தில் நீ அவரை அடையும் படியும், அவர் உன்னை அறிந்துகொள்ளும்படியும்,

கிருஷ்ணன் வழிகாட்டித் தயை புரிவார். நான் போய் வருகிறேன்.

[மறைகிறார்.]

ஊர்:- (ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்துக் கொண்டு) கிருஷ்ணா! கிருஷ்ணா! தயாபயோநிதே !

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *