கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,345 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நன்கணியார் தெருவழியே நடந்து கொண்டிருந்தார். தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் கலியாணம் போலிக்கிறது. வாத்தியக்காரன் மங்கலமயமான இராகத்தைத் தெருவெல்லாம் கேட்கும்படி வாரியிறைத்துக் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அழகான பெரிய பந்தல். பந்தல் தூண்களில் வாழை மரங்கள்; மாவிலைத் தோரணங்கள். இன்னும் விதவிதமான அலங்கார மெல்லாம் செய்யப்பட்டிருந்தன. கலியாண வீட்டிற்கு வருவோரும் போவோருமாகத் தெருவில் ஒரே கூட்டம். நன்கணியாருக்கு மேலே செல்ல வழிகூடக் கிடைக்கவில்லை. வீட்டிற்குள்ளிருந்து சந்தனம், பூ, அகில் முதலியவற்றின் இனிய மணம், தெருக்கோடிவரை பரவித் தெருவில் போவோர், வருவோர் நாசிகளையெல்லாம் நிறையச் செய்துகொண்டிருந்தது. 

வீட்டிலிருந்து வருவோர், போவோர், முகத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் புன்சிரிப்பும் சாயலிட்டிருந்தன. சிரமப்பட்டு வழியை விலக்கிக்கொண்டு மேலே நடந்தார் நன்கணியார். அந்த வீட்டின் னிய இசை அவர் செவிகளை விட்டு நீங்காமல் துரத்திக் கொண்டே வந்தது. 

கோலமிட்ட வாயில்கள் சில. கோலமிடாத வாயில்கள் சில. வீடுகளின் கதவிடுக்குகளில் தென்பட்ட பெண்களின் முகங்களில் சில திலகமும் பூவும் கொண்டன. சில திலகமும் பூவுமின்றிப் பாழ் நெற்றியும் பாழுங் கூந்தலும் கொண்டவை. மகிழ்ச்சி நிறைவோடு சில மகளிர்! துயர நிறைவோடு சில மகளிர்! வீதியின் இரு மருங்கைப்போல இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை அந்தத் தெரு நெடுக இறைந்து கிடந்தது. இந்த வேறுபாடுகளின் ஆழத்தில் இந்த அடையாளங்களின் அர்த்தத்தில் வாழ்விற்கே உரிய ஒரு தத்துவம் மறைவாகப் புதைந்து கிடப்பதைக் கண்டும் காணாதவரைப்போல நன்கணியார் மேலே மேலே நடந்து சென்று கொண்டிருந்தார். தெருவில் கண்ட பெண்களில் கணவனுடன் கூடி வாழ்ந்து மகிழ்வோர் சிலர். கணவனைத் தூரம் தொலைவிற்கு அனுப்பிவிட்டுத் துயரமும் கண்ணீருமாக வாழ்வோர் சிலர். கணவனைச் சேர்ந்து வாழும் பெண்கள் சூடிக் கொண்டிருந்த பூ மணம் தெருவே கமகமக்கச் செய்தது. பிரிந்து வாழும் பெண்களின் கண்ணீர் தெருவெல்லாம் நனையச் செய்தது. 

பத்துப் பதினைந்து வீடுகள் கடந்தன. ஒரு வீட்டு வாயிலில் மூங்கில் கழிகளைக் குறுக்கும் நெடுக்குமாகத் தறித்துக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள்ளிருந்து பலர் கூடி அழுகின்ற ஒலி தெருவில் கோரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கும் தெருவில் பலர் கூடி நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் முகத்திலாவது புன்னகை இல்லை. ஆடவன் இறந்துவிட்டான் அந்தவீட்டில், அவனுடைய அந்திம யாத்திரைக்கான ஏற்பாடுகள் தாம் அங்கே நடந்து கொண்டிருந்தன. இறக்கப் போகிறவர்கள் இறந்தவனுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். 

இங்கும் புலவருக்கு மேலே நடந்து செல்ல வழி இல்லை. சில விநாடிகள் தயங்கி நின்றார். அந்த வீட்டையும் ஏற இறங்கப் பார்த்தார்! பழைய மங்கல ஒலியும் இந்தப் புதிய அழுகை ஒலியும் அவர் மனத்தில் ஒன்றாகப் பதிந்திருந்தன. 

கோலமிட்ட வீடும், கோலமிடாத வீடும், பூ வைத்த பெண்ணும், பூ வைக்காத பெண்ணும் அவர் கண்களின் பார்வைப் புலத்துள் நின்றார்கள். 

‘ஒரு வீட்டில் மங்கலகரமான கலியாணம்! ஒரு வீட்டில் துயரம் நிறைந்த சாவு. சில பெண்களின் தலை நிறையப் பூ! இன்னும் சில பெண்களின் கண் நிறையக் கண்ணீர்! இந்த உலகத்தில் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? இதைப் படைத்தவன் என்ன அர்த்தத்தில் படைத்தான்?’ நன்கணியார் சிந்தித்துப் பார்த்தார். சிந்தனைக்குள் ஆழ்ந்து நிற்கும் தத்துவ மின்னல் ஒன்று அவர் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ஒரு தெருவின் இரண்டு வரிசைகளுள் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளா? இவ்வளவு இன்ப துன்பங்களா? அப்பப்பா! இந்த உலகம் எவ்வளவு பொல்லாதது? இதைப் படைத்தவன் மட்டும் என்ன? அவனும் ஒரு பொல்லாத வனாகத்தான் இருக்க வேண்டும்? இல்லையென்றால் இப்படிப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளை ஒரே உருண்டைக்குள் போட்டுக் குழப்புவானா? ஆம்! ஆம்! இந்த உலகம், இதைப் படைத்தவன் தடுமாற்றத்திற்கு ஒரு அடையாளம்; உண்டாக்கியவனின் குழப்பத்திற்கு ஒரு சின்னம்! சந்தேகமென்ன? அப்படித்தான்! 

நன்கணியாருக்கு இந்த உலகத்தைப் பற்றிய தத்துவம் தெருவீதியின் பத்தடி தூரத்திற்குள்ளேயே கிடைத்து விடுகிறது. அவர் பாக்கியசாலி! உலகத்தின் அர்த்தம் இவ்வளவு சுலபமாகத் தெருவிலேயே அவருக்குப் புரிந்துவிட்டதல்லவா? 

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் 
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தேர் 
பைத லுண்கண் பனிவார் புறைப்பப் 
படைத்தோன் மன்ற அப்பண்பி லாளன் 
இன்னாது அம்ம இவ்வுலகம், 
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே!  (புறநானூறு-194) 

ஓரில் = ஒரு வீட்டில், நெய்தல் = சாப்பறை, பாணி = மணவீட் ஒலி, புணர்ந்தோர் = கணவன்மாரோடு கூடியவர், பைதல் = துன்பம், பண்பிலாளன் = பொல்லாதவன், இன்னாது = இனிமை அற்றது, பனிவார்பு = கண்ணீர்.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *