கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 1,715 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

9 – 10 | 11 – 12 | 13 – 14


11. நெடுங்கிள்ளியின் பரிசு 

பல எண்ணங்களுடன் பாவை அவனி சுந்தரியின் அறைக்கு வந்த புகாரின் புரவலன், பஞ்சணை வெறும் பஞ்சணையாகவே இருப்பதைக் கண்டதும், பல விநாடிகள் பிரமித்து நின்ற நிலையில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். புலவரின் கட்டாயத் திருமணத்துக்குத் தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லையென்றும், அவள் சொந்த நாடு திரும்ப உத்தேசித்ததால் அன்றிரவே அவளை நகரை விட்டு வெளியே அனுப்ப ஏற்பாடு செய்யச் சித்தமாயிருப்பதாகவும் கூறவே, நலங்கிள்ளி நடுநிசியில் அங்கு வந்தானாகையால், தான் ஏதும் செய்ய வேண்டாத நிலை அங்கு உருவாயிருப்பதைப் பார்த்ததும் பிரமித்துப் போனான் என்றால், அதில் விந்தை என்ன இருக்கிறது? அப்படிப் பிரமிப்பில் சில விநாடிகள் நின்ற அவன் நெஞ்சில் சிறிது ஏமாற்றமும்கூட உதயமாயிருந்தது. அவளை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றும், இடங் கொடுத்தால் அவளை ஸ்பரிசிக்க வேண்டும் என்றும், உள்ளூர அவன் நினைத்து அங்கு வந்ததால், அந்த உள் எண்ணத்திலும் மண் விழவே எது செய்வதென்று புரியாமல் திணறினான் நீண்ட நேரம். 

பிறகு வாயிலில் இருக்கும் காவலர் தனக்கு சாதாரணமாக வழிவிட்டதில் இருந்து, அவர்களுக்கும் அவள் மறைந்த விஷயம் தெரியாதென்பதை ஊகித்துக் கொண்ட நலங்கிள்ளி, அவள் எப்படித்தான் தப்பியிருப்பாள் என்பதை அறிய, அறையைச் சுற்றும் முற்றும் நோக்கினான். அறையின் ஒரு கோடியில் இருந்த பெரிய சாளரம் மொத்தமாகப் பெயர்க்கப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அது முன்பு இருந்த இடத்தை அணுகி அதன் மீது காலை வைத்து எட்டி வெளியே நோக்கிய நலங்கிள்ளி ‘அப்படியா விஷயம்?’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, அறையை விட்டு வெகு வேகமாக நடந்து, அரண்மனை வாசலுக்கு வந்து, அதைச் சுற்றி அந்த அறையின் நந்தவனத்தின் பகுதிக்கு வந்தான். பெயர்க்கப்பட்ட சாளரத்தின் இடம் இரண்டு பேர் நன்றாக நுழையக் கூடிய நிலையில் இருந்ததையும், சாளரத்துக்கு நேர் கீழே இரண்டு பெரிய கருங்கற்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்ததையும் கண்டதும், அவனி சுந்தரி தப்பிய விவரம் அவனுக்குப் புரித்துவிட்டாலும், அதைப் பற்றி விசாரித்தறிய மீண்டும் அறைவாசலுக்கு வந்தான். 

அரசன் இப்படி அறைக்குள் ஓடுவதையும், பிறகு வெளியே ஓடுவதையும், மீண்டும் திரும்பி வந்ததையும் பார்த்த காவலர், அந்தப் பரபரப்புக்கு என்ன காரணம் என்பதை அறியாமல் திகைத்து நின்ற சமயத்தில், நலங்கிள்ளி வினவினான், காவலன் ஒருவனை நோக்கி, “இன்றிரவு இங்கு யாராவது வந்தார்களா?” என்று. 

“யாரும் வரவில்லை; போகத்தான் செய்தார்கள்” என்றாள் காவலன். 

“யார் போனது?” என்று வினவினான் நலங்கிள்ளி சர்வ சாதாரணமான குரலில். 

“அரசகுமாரியின் காவலர்” என்றான் காவலன்.

“எப்பொழுது போனார்?”

“தாங்கள் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு”

“திரும்பி வரவில்லை?” 

“இல்லை” 

அதற்கு மேல் அவளை ஏதும் கேட்காமல், நலங்கிள்ளி மீண்டும் அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றான். அங்கிருந்த காவலனை ஒரு புரவியைக் கொண்டு வரச் சொல்லி, அதன் மீது வெகு வேகமாகத் தாவிப் புலவர் மாளிகைக்கு விரைந்தான். 

புலவர் மாளிகையை அடைந்ததும், புரவியில் இருந்து குதித்து வாயிற் கதவைப் படபடவென்று பலமாகத் தட்டவே. புலவரே கதவைத் திறந்து கையிலொரு விளக்குடன் மன்னனை நோக்கி, “நலங்கிள்ளி என்ன விசேஷம் உள்ளே வா” என்று உள்ளே அவனை அழைத்துச் சென்று, கூடத்தின் நடுவிலிருந்த மஞ்சத்தில் அமர்ந்து கொண்டார். விளக்கை சற்று எட்ட வைத்துவிட்டு, மன்னனையும் அமரச் சொன்னார். 

“உட்கார நேரமில்லை” என்று பதட்டத்துடன் கூறினான் நலங்கிள்ளி. 

“ஏன்? பறவை பறந்துவிட்டதோ?” என்று வினவினார் புலவர் புன்னகையுடன்.

“ஆம்” 

“பூதலனை தனித்துச் சிறையில் வைத்தாயா?” 

“இல்லை. அவன் எப்பொழுதும் அவளைவிட்டு அகலுவது இல்லை” 

“சரி. அரண்மனைக்கு ஒரு சாளரம் போயிற்று. அரசுக்கு ஒரு ஆயுதம் போயிற்று” என்ற புலவர், பெருமூச்செறிந்தார். 

நலங்கிள்ளியின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. “என்ன சாளரத்தைப் பூதலன் பெயர்த்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவவும் செய்தான், வியப்பு சொற்களிலும் ஒலிக்க. 

“ஏன் தெரியாமல் என்ன? பூதலன் அரண்மனையையே பெயர்க்கவல்ல சக்தி வாய்ந்தவன். எத்தனை உரமான கட்டிடமாயிருந்தாலும் ஒரு சாளரத்தை அசைத்து எடுப்பது அவனுக்கு ஒரு பிரமாதமல்ல. சாளரத்தை நிதானமாக அசைத்து அசைத்து, இணைப்புக் கட்டிடத்தை உடையச் செய்து, மெள்ள சாளரத்தைக் கீழே கிடத்திவிட்டான். பிறகு ஏதும் நடக்காதது போல் அரண்மனையை விட்டு வெளியே வந்து பாறைகளை அடுக்கி அரசகுமாரி சவுகரியமாக, நிதானமாக இறங்க ஏற்பாடு செய்திருக்கிறான். நானாகயிருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேன். ஆனால் பூதலன் உடல் வலு எனக்கில்லை” என்று, தாம் புஜபலமற்றிருப்பது பெரும் தவறுபோல் கூறினார் புலவர். 

ஒரு சந்தேகம் கேட்டான் நலங்கிள்ளி, “நமது அரண்மனைச் சாளரத்தை அசைத்து உடைக்கும்போது, கட்டிட விரிசல் சத்தம் காவலர் காதுகளில் விழுந்திருக்காதா?” என்று. 

“விழுந்திருக்காது. பூதலன் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டிருப்பான். அறை மிகப் பெரியது. சாளரம் அறை வாயிற் கதவில் இருந்து நீண்ட தூரத்தில் இருக்கிறது. சாளரத்தைப் பெயர்த்தவன் கூடியவரை சத்தத்தைக் குறைத்துத்தான் வேலையை முடித்திருப்பான்” என்று விளக்கிய புரவர். “நலங்கிள்ளி, இதில் உன் தவறும் கலந்திருக்கிறது” என்றார். 

“என் தவறா?” 

“ஆம்!” 

“என்ன தவறு புலவரே?”

“நீ பூதலனையும் இளவரசியையும் தனித் தனியாகக் காவலில் வைத்திருக்க வேண்டும். ஆனால்…” 

“ஆனால்?” 

“உன் அசிரத்தை என்று சொல்லமாட்டேன். அன்பு, அது தான் காதல், உன் எச்சரிக்கையை இளக வைத்துவிட்டது”. 

இதைக் கூறிய புலவர் நலங்கிள்ளியை உற்று நோக்கினார் நலங்கிள்ளியின் கண்கள் அவர் கண்களைச் சந்திக்கச் சக்தியற்று நிலத்தில் தாழ்ந்துவிட்டன. புலவரே, அவனைச் சமாதானப்படுத்தத் தொடங்கி, “நலங்கிள்ளி! நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டார். 

“செய்ய என்ன இருக்கிறது புலவரே?” என்று பதிலுக்குக் கேட்டான் நலங்கிள்ளி. 

“அவளைப் பிடித்து வர வீரர்களை அனுப்பு. அவள் நாட்டை விட்டு, ஏன் இந்த நகர எல்லையை விட்டே அதிக தூரம் போயிருக்க முடியாது” என்றார் புலவர். 

“தங்கள் சித்தம்” என்று சொல்லித் திரும்பப் போன நலங்கிள்ளியை, புலவரின் “நலங்கிள்ளி!” என்ற எச்சரிக்கைச் சொல் சற்றே நிற்கவும் வைத்தது, தலையைத் திருப்பவும் செய்தது. 

“என்ன புலவரே?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

“அவளைப் பிடித்து வர…” என்ற சொல்லைப் பாதியிலேயே வெட்டிய புலவர், “நீயே போகப் போகிறாய்?” என்று முடித்தார்.

“ஆம்” என்றான் மன்னன். 

“வேண்டாம். மாவளத்தானை அனுப்பு” என்று ஆணையிட்டார் புலவர். 

“நான் போனால் என்ன?” என்று சற்றுக் கடுமையாகவே வினவினான் நலங்கிள்ளி. 

“இந்தச் சமயம் புகாரின் மன்னன் தலைநகரை விட்டுக் கிளம்புவதற்கில்லை.” 

“ஏன்?” 

“ஒன்று நீ நெடுங்கிள்ளியாலோ, அவனி சுந்தரியாலோ, சிறைப்படுத்தப்பட்டால் நாட்டின் நிலைமை பரிதாபமாகிவிடும். தவிரப் பதினாறாவது நாள் சடங்கு முடியும் முன்பாக நீ எங்கும் கிளம்புவதற்கு இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார் புலவர். “அப்படிச் சொல்லும் மன்னவனை மக்களும் வெறுப்பார்கள்” என்று, இன்னொரு காரணத்தையும் சுட்டிச் சொன்னார்; கோவூர் கிழார். 

நலங்கிள்ளியின் முகத்தில் ஏமாற்றம் பெரிதும் தெரிந்தது. அவன் மெல்ல வினவினான்: “அவள் எதற்காகச் சிறையில் இருந்து தப்பினாள்?” என்று. 

புலவர் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “சிறையை விரும்பவில்லை” என்றார் பதிலுக்கு. 

நலங்கிள்ளி பெருமூச்செறிந்தான். “ஆம் புலவரே, சிறையை யார்தாள் விரும்புவார்கள்? அதை மட்டுமென்ன, நன்றி கெட்ட செய்கையை யார் விரும்புவார்கள்?” என்றும் கேட்டான் நலங் கிள்ளி. 

புலவர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தலையை ஆட்டினார். “என் உயிரை அவள் காப்பாற்றினாள். காரணம் எதுவாயிருந்தால் என்ன? உயிரைக் காப்பாற்றியது உண்மை, பதிலுக்கு அவளைக் காவலில் வைத்தோம். இதைவிட நன்றிகெட்ட செய்கை என்ன இருக்கிறது?” என்று வெறுப்புடன் கூறினான் நலங்கிள்ளி, பிறகு வெளியே விடுவிடுவென்று சென்று, புரவி மீது தாவி ஏறி, அரண் மனையை நோக்கிப் புரவியைக் காற்றிலும் கடுக ஏவினான். அரண்மனையை அடைந்ததும், தம்பி மாவளத்தான் அறைக்குச் சென்று, கதவைத் தடதடவென்று தட்டினான். அரைகுறைத் தூக்கத்துடன் கண்ணைத் துடைத்த வண்ணம் வெளியே வந்த தம்பி முழு சுரணை அடையும் முன்பாக, “தம்பி! அவனி சுந்தரி தப்பிவிட்டாள்” என்று கூறினான், பதட்டம் நிரம்பிய குரலில். 

சாட்டையால் அடிக்கப்பட்டவன் போல், அந்தச் சொல்லால் திடீரென உடம்பு கோபத்தால் நடுங்க, நன்றாக விழித்த மாவளத்தான், “என்ன! தப்பிவிட்டாளா?” என்று கேட்டான். 

“ஆம் தம்பி!”

“எப்பொழுது?” 

“நள்ளிரவுக்குச் சற்று முன்பு”. 

“இப்பொழுது நாழிகை” 

“பதினெட்டுக்கு மேலாகிறது” 

“இதுவரை நமக்குத் தெரியவில்லையா அவள் தப்பியது?”

“தெரியும். இருந்தாலும் புலவரிடம் தெரிவிக்க நான் போனேன்.” 

இதைக் கேட்ட மாவளத்தான் கோபத்தால் நகைத்தான். “சிறையிலிருந்தவர் காணவில்லையென்றால் வீரர்களை விட்டுத் தேடுவீர்களா? புலவரைப் போய் யோசனை கேட்பீர்களா?” என்று வினவினான் இளையவன், ஏளனத்துடன். 

நலங்கிள்ளி அந்த ஏளனத்தை கவனிக்கவே செய்தாள். இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தம்பியை நோக்கிச் சொன்னான், “தம்பி! இது தனி மனிதன் விஷயமல்ல. நாடுகளைப் பற்றிய விஷயம். அவனி சுந்தரி அரச மகள் எப்பொழுது நமது நாடு பிளவுபட்டுப் பலவீனப்படும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கன்னரன் மகள். சாதாரண மனிதர்களைப் பிடிப்பதுபோல் அவளைப் பிடிப்பதும் சிறையில் அடைப்பதும் தவறு. அதைச் செய்தோம், புலவரும் ஒப்புதல் தந்தால், இப்பொழுது அவள் தப்பிவிட்டதால், அதற்கும் என்ன செய்வது என்று அவரை யோசனை கேட்பது முறை”. 

இதைக் கேட்ட மாவளத்தான் “சரி. அதற்குப் புலவர். என்ன சொன்னார்?” என்று வினவினான். 

“அவனி சுந்தரியை சிறைப் பிடித்துவர உன்னை அனுப்பச் சொன்னார்” என்றான் நலங்கிள்ளி. 

அதுவரை கோபத்துடன் இருந்த மாவளத்தான் சற்றுத் தளர்ந்தான். அவன் முகத்தில் வெறுப்பு மண்டியது. “பெண்களைப் பிடித்து வருவதுதான் வீரனுக்கு அழகா?” என்று வினவவும் செய்தான் வெறுப்புக்கிடையே. 

“நானே போயிருப்பேன்…” என்று தொடங்கினான் நலங்கிள்ளி. 

“அப்படிச் செய்திருக்கலாமே? இது இளவரசிக்கும் இஷ்டமாயிருந்திருக்கும்” மாவளத்தான் சொற்களில் இகழ்ச்சி மண்டிக் கிடந்தது. 

அதைக் கவனிக்கவே செய்தான் நலங்கிள்ளி. இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், “புலவர் ஒப்பவில்லை” என்று மட்டும் கூறினான். 

மாவளத்தான் நீண்ட நேரம் ஏதும் பேசவில்லை. 

“அண்ணா போய் வருகிறேன்” என்று மட்டும் கூறி, மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான். 

அடுத்த இரண்டு நாழிகைக்குள் எல்லாம் நான்கு புரவி வீரர்களுடன் புகாரை விட்டுக் கிளம்பிய மாவளத்தான், புகாரின் எல்லையைக் கடந்ததும், அங்கு பிரிந்த இரண்டு சாலைகளின் பக்கங்களில் இருந்த குடிசைகளுக்கு ஒரு வீரனை அனுப்பி, அரசகுமாரியைப் பற்றி விசாரிக்கச் சொன்னான். அவர்களிடமிருந்து அரசகுமாரி உறையூர்ச் சாலையில் செல்லவில்லை என்பதை அறிந்து கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த ஆவூர்ச் சாலையில் சென்றான். துரிதமாக. 

நன்றாக விசாலமாக இருபுறங்களிலும் பெரும் ஆலமரங்களை வரிசையாகக் கொண்ட ஆவூர் சாலை அன்று காலைப் பயணத்துக்கு மிக இன்பமாக இருந்தது. மெள்ள வந்த தென்றலிலும் அவ்வப் பொழுது தோன்றிய கருமேகங்கள் அளித்த குளுமையும் தேகத்துக்கு மிக இன்பமாயிருந்தும், உள்ளே இருந்த கவலையில், அவற்றை அனுபவிக்கச் சக்தியற்றவனானான் மாவளத்தான். இப்படி இயற்கையின் சுகத்தை வெறுத்துப் பயணம் செய்த மாவளத்தான், மறுநாள் மாலை சற்று தூரத்தில் தெரிந்த ஒரு சிற்றூரைக் சுவனித்தான். அந்த ஊரில் சென்று விசாரித்தால் விஷயம் தெரியும் என்ற காரணத்தால் அங்குப் புரவியைச் செலுத்தினான். புரவி ஊருக்குள் புகுமுன்பே நடுத்தா வயதுள்ள ஒரு சிவ பக்தர் அவனைச் சந்தித்தார். சற்றுக் கண்ணை உயர்த்தி, “யார் மாவளத்தானா?” என்றும் விசாரித்தார். 

மாவளத்தான் சட்டென்று புரவியை நிறுத்தி, அவரைக் கூர்ந்து நோக்கினான். தங்களை எங்கோ பார்த்திருக்கிறேன் என்றான். 

“அதற்குள் மறந்துவிட்டாயா?” என்று வினவினார் அவர். 

அடுத்த விநாடி புரவியில் இருந்து குதித்த மாவளத்தான், அவருடைய அடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான். “எங்கள் குருநாதரின் பிரதம சீடர் அல்லவா தாங்கள்? இளந்தத்தர் அல்லவா?” என்றும், பணிவு நிரம்பிய குரலில் கூறினான். 

“ஆமாம் தம்பி!- இளந்தத்தன்தான்” என்று கூறிய புலவர் இளந்தத்தன்,”ஆமாம், இந்தப் பக்கம் எங்கு வந்தாய்?” என்று வினவினார். 

மாவளத்தான் விஷயத்தை விளக்கினான். 

புலவர் இளந்தத்தன் சிறிது நேரம் சிந்தித்தார். “அப்படி இங்கு யாரும் வரவில்லை. எதற்கும் வீட்டுக்கு வா. உன் புரவியும் வீரர்கள் புரவியும் அலுத்திருக்கின்றன. சற்று இளைப்பாறிப் போகலாம்” என்றார். 

இளவரசன் என்ன அவசரப்பட்டும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அவனையும் வீரர்களையும் வலுக்கட்டாயமாகத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தமது சீடர்களைவிட்டு வீரர்களையும் புரவிகளையும் கவனிக்கச் சொல்லி, மாவளத்தானுக்குத் தாமே நேரில் சவுகரியங்களைக் கவனித்தார். நன்றாக நீராடி, உணவை முடித்துக் கொண்ட மாவளத்தான், சற்று இளைப்பாறி யதும் இளந்தத்தனிடம் விடைபெற்றுக் கொண்டு, மீண்டும் வீரர்களுடன் சாலையை நோக்கிச் சென்றான். 

அவன் போவதை வாயிலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்த இளந்தத்தன், மீண்டும் உள்ளே சென்றதும், அவரது இல்லத்தின் இரண்டாவது கட்டிலிருந்து வெளியே வந்த நலங்கிள்ளி. “புலவரே, இந்தாரும் உமது பணிக்குப் பரிசு” என்று, தனது இடுப்பில் இருந்து ஒரு பொற்கிழியை எடுத்து நீட்டினான். அதைக் கையில் வாங்கித் தூர எறிந்த இளந்தத்தன், “எனது அரசத் துரோகத்துக்குப் பரிசு வேறா?” என்று சீறி, அந்தப் பொற்கிழியை விட்டெறிந்தார் தூரத்தில். அதில் இருந்த பொற்காசுகள் கூடம் எங்கும் சிதறின. 

அவர் செய்கையைக் கண்ட நெடுங்கிள்ளி நகைத்தான், இடி இடியென. “இளந்தத்தா! காலம் வரும் உன்னைக் கண்டிக்க” என்று நகைப்புக்கிடையே சீறிவிட்டு, “டேய்! யாரங்கே? அவர்களை இழுத்துவா” என்று உத்தரவிட்டான். அவனது வீரர்களுக்கு இடையில் கைகள் பிணைக்கப்பட்ட அவனி சுந்தரியும், பூதலனும் வந்தார்கள். “உம் புறப்படச் சித்தம் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டான் உறையூர் நெடுங்கிள்ளி. 


12. கரிகாலன் சத்திரம்

இளந்தத்தன் இல்லத்தில் தனது வீரர்களுடன் உணவை முடித்துக் கொண்ட மாவளத்தான், மீண்டும் ஆவூர் சாலையை நோக்கிச் சென்றானானாலும், அந்தச் சாலையை அடையும் முன்பே தனது புரவியைச் சற்று நிறுத்தி, அந்தச் சிற்றூரின் சிறு சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த தோப்புகளைக் கவனிக்கலானான். 

இளவரசன அப்படித் திடீரென புரவியை நிறுத்திவிட்டதைக் கண்ட வீரர்களும், அவனுக்குப் பின்னால் தங்கள் புரவிகளையும் நிறுத்திவிட்டாலும், அவர்களில் ஒருவன் மட்டும் இளவரசன் புரவியிருந்த இடம் நோக்கித் தனது புரவியைச் செலுத்தி, 

“இளவரசர் ஆணை என்ன?” என்று வினவினான். 

அவனுக்கு மாவளத்தான் உடனடியாகப் பதில் சொல்லாமல், பல விநாடிகள் தோப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு கேட்டான் வீரனை நோக்கி, “இந்த இரண்டு தோப்புகளில் எது அடர்த்தியாயிருக்கிறது? எதில் நாம் யாரும் அறியாமல் மறைந்திருக்க முடியும்?” என்று. 

வீரன் முகத்தில் வியப்பு மாறியது. “நாம் எதற்காக மறைய வேண்டும்? யாரைக் கண்டு அஞ்ச வேண்டும்?” என்று, மீண்டும் கேள்வியொன்றைத் தொடுத்தான் இளவரசனை நோக்கி.

மாவளத்தான் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவுமில்லை, இரண்டாம் முறை அவனை யோசனை கேட்கவுமில்லை. “உன்னுடன் இரண்டு வீரர்களை அழைத்துக் கொண்டு, இடது புறத்துத் தோப்பின் உள்ளே சென்று மரங்கள் அடர்த்தியாயிருக்கும் இடத்தில் புரவிகளுடன் மறைந்து நில். நான் மீதியிருக்கும் ஒரு வீரனுடன் வலது பக்கத் தோப்பில் மறைந்திருக்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தவித சத்தமும் செய்ய வேண்டாம்” என்று உத்தரவிட்டு, அம் மூவரும் சென்றதும், தனித்து நின்ற வீரனுடன் தான் வலது பக்கத்துச் சாலைக்குள் நுழைந்தான். 

அப்பொழுது மாலை மறைந்து மையிருள் சூழ்ந்த சமயம். அது சிற்றூர் ஆனபடியால் அதை நோக்கிச் சென்ற சிறு சாலையில் விளக்குகள் அடியோடு இல்லை. சற்றுத் தூரத்தே தெரிந்த சிற்றூர் முதல் வீதியின் நாலைந்து வீடுகளில் மட்டும் விளக்குகள் சிறிதாக மின்னின. பெரிய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த மத்திய வீடு இளந்தத்தன் வீடு என்பதைப் புரிந்து கொண்ட மாவளத்தான், தனது அருகில் இருந்த வீரனை நோக்கி, “வீரா! எனது புரவியையும் உனது புரவியையும் அழைத்துக் கொண்டு, தோப்பின் உள்ளே சென்று விடு. நான் குரல் கொடுத்தாலொழிய வெளியே தலை காட்டாதே” என்று உத்தரவிட்டுத் தனது புரவியில் இருந்து கீழே குதித்தான். 

வீரன் எதையும் சிந்திக்கவில்லை. தானும் புரவியில் இருந்து குதித்து, இரு புரவிகளின் கடிவாளங்களையும் கையில் பிடித்துப் புரவிகளை இழுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்றுவிட்டான். அவன் போனதும் மாவளத்தாள் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி புலவர் வீட்டைக் கவனிக்கலானான். 

சிறிது நேரத்திற்குள் எல்லாம் புலவர் வீட்டு வாசல் அமர்க்களப்பட்டது. பத்துப் பன்னிரண்டு புரவிகள் அதன் எதிரே கொணர்ந்து நிறுத்தப்பட்டன. உள்ளேயிருந்து அரச தோரணை யில் ஒரு வீரனும், அவனுக்குப் பின்னால் ஒரு பெண்ணும், இன்னும் ஒரு பூதாகாரமான மனிதனும் வந்தார்கள். அவர்கள் தூரத்தில் இருந்தபடியால் அவர்கள் உருவங்கள் திட்டமாகத் தெரியாவிட் டாலும் புலவர் வீட்டுப் பெரு வெளிச்சத்தின் காரணமாக மின் னிய ஆடையிலிருந்து நெடுங்கிள்ளியையும் பெரிய உடலிலிருந்து பூதலனையும் அடையாளங் கண்டுகொண்ட மாவளத்தானுக்கு பெண்ணுடையில் இருந்தது அவனி சுந்தரிதான் என்பதை ஊகிப்பது ஒரு பெரிய காரியமில்லையாததால், அந்த ஊகத்தின் விளைவாக, இளவரசன் சிந்தையில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றன. 

“நெடுங்கிள்ளியுடன் அவனி சுந்தரி – எப்படிச் சேர்ந்தாள். இருவருந்தான்  விரோதிகளாயிற்றே. ஒருவேளை மேலுக்கு விரோதிகளோ?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண் டான். “அதெப்படி இருக்க முடியும்? நெடுங்கிள்ளியின் கொலைத் திட்டத்தில் இருந்து அண்ணனைக் காப்பாற்றியிருக்கிறாளே அவனி சுந்தரி” என்றும் வினவிக் கொண்டான். 

இத்தகைய கேள்விகளால் சித்தம் குழம்பியிருந்த அவனுக்கு உண்மை மெல்ல மெல்லப் புலப்படலாயிற்று. தூரத்தில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவனி சுந்தரியை அணுகிய வீரனொருவன், அவளுக்குப் பின்னால் கத்தியுடன் சென்றதையும், பிறகு அவள் பின்னாலிருந்த கைகளை முன்னுக்குக் கொண்டு வந்து மணிக்கட்டுக்களை கரிப்படுத்திக் கொண்டதையும் மரத்தின் மேலிருந்து ஓரளவு பார்க்க முடிந்ததால், நெடுங்கிள்ளி அவளைப் பிடித்திருக்கிறான் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அவள் சிறைப் பட்டிருந்தால் பூதலனும் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்ட மாவளத்தான். மேலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த விநாடி பூதலனை நான்கு பேர்கள் மிகச் சிரமப்பட்டுத் தூக்கி ஒரு புரவி மீது உட்கார வைத்தார்கள். இரு வீரர் வாட்களை அவன் ஊட்டியை நோக்கி உருவி நீட்ட, மற்றும் இருவர் அவன் பின் பக்கத்தில் இருந்த கைத்தளைகளை நிக்கி, முன் பக்கத்தில் கைகளைக் கொணர்ந்து நன்றாகக் கயிறு கொண்டு பிணைத்தார்கள். பின்பு அந்தக் கைகளில் புரவிகளின் கடிவாளக் கயிறுகளைத் திணித்தார்கள். பிறகு நெடுங்கிள்ளி தனது புரவி மீது தாவி ஏறியதும், அந்தக் கூட்டம் சாலையை நோக்கி வந்தது. 

தோப்புகள் இருந்த இடத்துக்கு அந்த ஊர்வலம் வந்ததும். விவரம் மிக நன்றாகத் தெரிந்தது மாவளத்தானுக்கு. நெடுங் கிள்ளியின் வீரர்கள் பன்னிரண்டு பேர்கள் இருந்ததைத் தனது தோப்புக்கருகில் வந்ததும் கவனித்த மாவ்ளத்தான். பூதலனைக் காக்க மட்டும் அவர்களில் ஆறு பேர் நியமிக்கப்பட்டிருந்ததை யும், அவர்கள் முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாக அவனைச் சூழ்ந்து வந்ததையும், கவனித்ததும், “அப்பா! ஒருவனைக் காக்க எத்தனை பேர்? என்ன பயம் இவர்களுக்கு அவனிடம்” என்று வியந்து கொண்டது மட்டுமல்லாமல், “சோழர் வீரர் இவ்வளவு தானா?’ என்று வெறுத்தும் கொண்டான். “சோழர் வீரத்தை வெறுப்பதற்கு என்ன இருக்கிறது? பெண்களையுந்தான் சிறை செய்யத் தொடங்கிவிட்டோமே என்று, அதற்குச் சமாதான மூம் சொல்லிக் கொண்டான், வீரனான மாவளத்தான். 

இந்த யோசனைகள் ஒருபுறம் மனதைத் தாக்கினாலும்,அவன் நெடுங்கிள்ளியின் கூட்டத்தை அணு அணுவாக ஆராயவே தொடங்கினான். முதலில் தனது நான்கு வீரர்களைக் கொண்டு அந்தப் பன்னிரண்டு வீரர்களைத் தாக்க முடியுமானாலும், நெடுங் கிள்ளி அவனி சுந்தரியை ஆபத்துக்குள்ளாக்கித் தங்களைத் தடுத்து விட முடியும் என்பதை நிர்ணயித்துக் கொண்டான். அப்படியே நெடுங்கிள்ளியையும் மீறி அவனி சுந்தரியை விடுவித்தாலும். நெடுங்கிள்ளி செல்லும் வழி, அவன் நோக்கம், இவற்றை அறிவது கஷ்டம் என்ற யோசனையும் அவன் மனதில் எழுந்தது. ஆகவே. அந்த ஊர்வலம் சிற்றூர்ச் சாலையைத் தாண்டு மட்டும் காத்து இருந்து, பிறகு மரத்தில் இருந்து கீழே இறங்கித் தோப்புக்குள் இருந்த தனது புரவியைக் கொணரக் குரல் கொடுத்தான். வீரன் புரவியைக் கொண்டு வந்ததும் எதிர்த் தோப்பில் இருந்த மற்ற வீரர்களும் வந்துவிடவே, அவர்களில் ஒருவனை நோக்கி. “சீவகா! நீ உனது மூன்று வீரர்களுடன் நெடுங்கிள்ளியைத் தொடர்ந்து செல்! அருகில் போகாதே! அவர்கள் கவனிக்காத அளவுக்கு எட்டவே சென்று கொண்டிரு. நான் சீக்கிரம் வருகிறேன்” என்று உத்தரவிட்டுத் தன்னுடன் இருந்த வீரனுடன் மீண்டும் ஊருக்குள் சென்று, இளந்தத்தன் வீட்டு வாயிற் கதவை தட்டினான். 

இளந்தத்தனே கதவைத் திறந்தான். திறந்ததும் பிரமித்து நின்றான். “யார் மாவளத்தானா!” என்று மிதமிஞ்சிய வியப்பு குரலில் ஒலிக்க வினவினான். 

”ஆம்!” என்று ஒற்றைச் சொல்லில் பதிலை முடித்த மாவளத்தான், வீரனை வாயிலில் இருக்க உத்தரவிட்டுத் தான் மட்டுமே இளந்தத்துடன் உள்ளே சென்றான். 

உள்ளே சென்றதும், எந்தவிதத் தாமதமும் இன்றி “சரி சொல்லும்” என்றான் புலவரைக் கடுப்புடன் நோக்கி. 

புலவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “எதை சொல்லச் சொல்கிறாய் மாவளத்தான்?” என்று வினவினார். 

“எதைச் சொல்ல வேண்டுமோ அதை” இளவரசன் சொற்களில் சினம் எல்லையைத் தொட்டு நின்றது. 

புலவர் சில விநாடிகள் யோசித்தார். பிறகு குழம்பிய மனதுடன் கேட்டார், “நீ எப்படி ஊகித்தாய் மாவளத்தான்?” என்று. 

“புலவரே! மாவளத்தானை இதுவரை யாருமே ஏமாற்றியது கிடையாது” என்று அறிவித்தான், புகாரின் இளவல். 

“ஆம்! ” 

“நீரும் ஏமாற்ற முடியாது.” 

“அது தெரிகிறது, நீ இங்கு மீண்டும் வந்ததில் இருந்து” என்ற புலவர், “நீ ஏமாந்து சென்றுவிட்டாய் என்றுதான் நினைத்தேன் நீ சந்தேகப்பட எந்தக் காரணத்தையும் அளிக்கவில்லை நான். அளித்திருந்தால் உடனே பிணமாயிருப்பேன். உன்னைச் சந்தித்த சாலை முகப்பிலேயே என் நடவடிக்கைகளைக் கண் காணிக்க நெடுங்கிள்ளி ஒரு வீரனை அனுப்பியிருந்தான். நீ இங்கு வந்து உணவு அருந்தும்போது கூட பக்கத்து அறையில் இரு வீரர்கள் இருந்தார்கள், இரு வாட்களுடன்” என்று விளக்கினார் புலவர். 

அந்த விளக்கத்தைக் கேட்ட மாவளத்தான், அத்தனை கோபத்திலும் மெல்ல நகைத்தான். “புலவரே! இது சிற்றூர், தெரியும் அல்லவா?” என்று ஏதோ கேட்டான். 

எதற்காக அதை இளவரசன் கேட்கிறான் என்பதை அறியாமலே, “ஆம்! ” என்று புலவர் பதில் சொன்னார். 

“சிற்றூர்களில், மாலை நேரங்களில், ஒன்று பெண்கள் வெளிக் குளத்தில் இருந்து குடங்களில் நீர் கொண்டு செல்வார்கள் இல்லங்களுக்கு! அல்லது மறையவர் மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு மறையோதிச் செல்வார்கள். ஆனால், நான் மாலையில் வந்தபோது அத்தகைய சோழ நாட்டுக் கிராமக் காட்சி எதுவும் காணோம். நீர் மட்டும் சாலையில் குத்துக்கல் போல் நின்றிருந்தீர். அது மட்டுமல்ல, என்னைத் தடுத்து அழைத்தும் வந்தீர் இந்த வீட்டுக்கு. இங்கு வந்தபோது தெருவில் குழந்தைகள் விளையாட வில்லை. புதிதாக எவன் வந்தாலும் யார் வருகிறார்கள் என்று எட் டிப் பார்க்கும் பெண்கள் தலைகளைக் காணோம். இந்தச் சிறு வீதி அரவம் ஏதுமின்றிக் கிடந்தது. உடனடியாக ஊகித்துக் கொண்டேன், இங்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என்று. ஆகையால் நீராடி உணவு உண்டு உடனடியாகச் சென்று விட்டேன்…” என்று விளக்கினான் மாவளத்தான். 

“ஆனால் சொல்லவில்லை” என்று குறுக்கிட்டார் புலவர் 

“ஆம் சொல்லவில்லை. நீர் எங்களை ஊருக்குள் அழைத்து வந்த போது சாலையைக் கவனித்தேன். எனக்கு முன்னால் புரவிக் குளம்புகள் பல பதிந்து கிடந்தன. ஆகையால் யாரோ வீரர்கள் கிராமத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தீர்மானித்தேன். உமது தெருவின் மவுனத்தைக் கண்டதும் அது யார் என்பதும் விளங்கி விட்டது” என்று விளக்கிய மாவளத்தான், “சரி நேரமில்லை தாமதிப்பதற்கு. சற்று நேரத்திற்கு முன்பு நெடுங்கிள்ளி அவனி சுந்தரியையும் பூதலனையும் சிறை செய்து கொண்டு சென்றதைத் தோப்பில் ஒளிந்திருந்து பார்த்தேன். உமக்கு ஏதாவது விவரம் தெரிந்தால் அறிய வந்தேன்” என்றும் கூறிவிட்டு, கேள்வி கேட்கும் தோரணையில் தனது புருவங்களைச் சற்றே உயர்த்தினான். 

புலவர் அவனைக் கூர்ந்து நோக்கினார், சில விநாடிகள். பிறகு துன்பப் பெருமூச்சு விட்டு கூறத் தொடங்கினார். “நெடுங்கிள்ளி இன்று பகலில் இங்கு வந்தான், கன்னரத்து இளவரசியுடனும் அந்த பூதத்துடனும். அவர்களைப் பாதுகாக்கப் பின்கட்டில் தனது வீரர்கள் அனைவரையுமே நிற்க வைத்திருந்தான். அவர்கள் நீராட்டம், உணவு எல்லாமே பின்கட்டில் நடத்தப்பட்டது. பிறகு அவன் வீரர்கள் இருவர் சென்று இரண்டு வீதிகளிலும் உள்ள வீட்டில் மக்களை வெளியில் கிளம்ப வேண்டாம் எச்சரித்து வந்தார்கள். என்னை மட்டும் அவன் மாலையில் அழைத்து, இந்த ஊர்ச் சாலை முகப்பில் நிற்கும்படியும், நலங் கிள்ளியோ அவனைச் சேர்ந்தவர் யார் வந்தாலும் இங்கு அழைத்து வரும்படியும், முடிந்தால் அப்படியே திருப்பி அனுப் பும்படியும் கூறினான். எனக்குத் திருப்பி அனுப்ப இஷ்டமில்லாத படியால், உன்னை அழைத்து வந்தேன். ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால், நெடுங்கிள்ளியை மடக்கலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. நம் இருவர் மீதும் ஒவ்வொரு விநாடியும் கண் காணிப்பு இருந்தது. உன் உயிருக்கு அபாயமில்லாமல் உன்னை அனுப்பியதே நிரம்பப் பிரயத்தனமாயிற்று!’ 

இதைக் கேட்ட மாவளத்தான் சிந்தனையில் ஆழ்ந்தான். “ஏழைப் புலவர் என்ன செய்வார்?” என்று சற்று இரைந்தும் சொன்னான். 

“நான் ஏழைப் புலவனல்ல” என்றார் இளந்தத்தன் வெறுப்புடன். 

“பணக்காரரா?” 

“ஆம்!”

“எப்பொழுது பணக்காரர் ஆனீர்…?” 

“சற்று முன்புதான்…இதோ பார்” என்று கூடத்தில் சிதறிக் கிடந்த பொன் நாணயங்களைக் காட்டினார். 

இளவரசனுக்கு விஷயம் புரிந்தது. மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தான். “பொற்கிழியை விட்டெறிந்தும், நெடுங்கிள்ளி உம்மை உயிருடன் விட்டது உமது அதிர்ஷ்டம் புலவரே!” என்று கூறினான். 

புலவர் எவ்வித மகிழ்ச்சியையும் காட்டவில்லை. “இந்தப் பொற்கிழியின் நாணயங்கள் பத்திரமாயிருக்கும். அதற்கு உபயோகம் ஏற்படும் நாள் அதிகத் தூரத்தில் இல்லை” என்று கடுப்புடன் கூறிய புலவர், “சீக்கிரம் புறப்படு. நாளைக் காலை நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை அடைந்துவிடுவான். ஆகையால் நீ எது செய்தாலும் இன்றிரவே செய்ய வேண்டும். வேகமாகக் கரிகாலன் சத்திரத்துக்குப் போ!” என்றும் சொன்னார். 

“என்ன அங்கே…?” 

“இங்கிருந்து ஆவூருக்கு இடையில் தங்கவோ இளைப் பாறவோ வேறு இடம் கிடையாது. இன்று நள்ளிரவில் நீ அங்குச் சந்திக்கலாம் நெடுங்கிள்ளியை.” 

இதைக் கேட்ட மாவளத்தான் புலவருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டான் அந்த சிற்றூரில் இருந்து. புலவர் ஊகம் சரியாக இருந்தது. கரிகாலன் சத்திரத்தில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தான். ஆனால் அவனி சுந்தரியை நெருங்குவது அத்தனை சுலபமாயில்லை ஒரு அறையில் அவளை வைத்துப் பூட்டியிருந்தான் நெடுங்கிள்ளி. அறைக்கு வெளியே பலமான காவலையும் வைத்திருந்தான்.

– தொடரும்

– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *