கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 1,461 
 

(2013ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 3-4 | காட்சி 5-6 | காட்சி 7-8

ஐந்தாம் காட்சி 

(இரவு அங்காடி தெரு போன்ற அமைப்பு. வணிகர்களின் பேச்சொலிகள் ஒலிகளாக ஒலிக்கின்றன. ஒதுக்குப்புறமான இடத்தில் புலவர் உருத்திரங்கண்ணனார் அமர்ந்திருக்கிறார். மாரி என்ற வளர் இளம் பருவத்து இளைஞன் மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறான்.) 

மாரி: அண்ணா. வணக்கம். இது என்ன பூட்டிய கடையின் முன் அமர்ந்திருக்கிறீர்கள். கடையை வாங்க உத்தேசமா?

உருத்திரங்கண்ணனார் : ம்ஹும். வணிகர் ஆவதற்கு வாய்ச் சாமர்த்தியம் வேண்டும். புத்திசாலித்தனம் வேண்டும். 

மாரி : மெத்தப் படித்த நீங்களே இப்படிச் சொன்னால் படிக்காத நாங்கள் என்ன சொல்வோம்? 

உருத்திரங்கண்ணனார் : வெற்றிக்கும் படிப்புக்கும் தொடர் பில்லை. ஊக்கமும் உழைப்பும் கொக்கு போன்ற செயல்பாடும்தான் அவசியம். படித்தவர்கள் சிலர் பல சமயம் சறுக்கித்தான் விழுகிறார்கள். 

மாரி : சரியாகச் சொன்னீர்கள். நானும் ஊக்கத்துடன் உழைத்து வாழ்வில் முன்னேறிக் காட்டுகிறேன். சரி. ஊர் உறங்கும் வேளையில் அல் அங்காடியில் அமர்ந்திருக்கிறீர்கள். 

உருத்திரங்கண்ணனார் : உறக்கம் பிடிக்கவில்லை. அதனால் இரவிலும் உயிரோட்டமாக இருக்கும் இந்த அல் அங்காடித் தெருவைப் பார்த்தபடி உலா வந்தேன். இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கிறேன். 

(தள்ளாடியபடியே மேடையின் வலப்பக்கத்திலிருந்து புலவர் தாமோதரனார் வருகிறார். அவருடன் ஒரு சீனரும் வருகிறார்.) 

உருத்திரங்கண்ணனார் : தாமோதரா. என்ன இது தள்ளாட்டம்… 

தாமோதரனார் : உள்ளே மது பானம் போனால் வருவது தள்ளாட்டம். இது புரியாதா புலவருக்கு? 

மாரி: பார்த்தீர்களா… எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார். 

தாமோதரனார் : மாரி இல்லையேல் காரியம் இல்லை. மாரி என்னை என்ன சொல்லி புகழ்கிறான்…? 

உருத்திரங்கண்ணனார் : அவைப்புலவர் இப்படி அங்காடி தெருவில் போதையில்… ஏன் இந்த அலங்கோலம்…? 

தாமோதரனார் : சீனத் தோழரே. இவரும் அவைப்புலவர். அன்றைக்கு நிகழ்ச்சியில் வெளுத்துக் கட்டினாரே உலகம் உள்ள வரை போர் இருக்கும் என்று. அவர்தான் இவர். உருத்திரங்கண்ணனாரே. இவர் சீன சீமைத் தோழர்…. இவர் என் சொற்பொழிவைக் கேட்டு சொக்கிப் போய் கையுறையாகப் புட்டிகளை மதுபானப் புட்டிகளை அள்ளித் தந்தார். 

மாரி: அண்ணா. ஒருமுறை சீன தேசத்தவர், முதல் நாள் நட்பு என்று அணைத்துக் கொண்டார்கள். அடுத்த நாள் படையெடுத்து வந்தார்கள். சிறு பகுதி நிலத்தைப் பறித்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். 

தாமோதரனார் : இவர் நம்முடைய விருந்தினர். இவருடைய தேசத்தைப் பற்றித் தவறாகப் பேசலாமா? அதிகப் பிரசங்கித்தனம்… சீனத்துத் தோழரே… எல்லாம் இந்தப் புலவர் கொடுக்கும் இடம். விடலைச் சிறுவனை மன்னித்து விடுங்கள். 

மாரி : எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அண்ணா உருத்திரங் கண்ணனாரே! நான் விடைபெறுகிறேன். 

(மாரி மேடையின் வலப் பக்கமாகச் செல்கிறான்) 

சீனன் : புலவர் உருத்திரங்கண்ணனாரே, நான் அவருக்குப் போதை பானங்களை அறிமுகப்படுத்தவில்லை. அவரேதான் கேட்டார். நான் கொடுத்தேன். நீங்கள் இந்த யாத்ரீகனைத் தவறாக நினைக்கக்கூடாது. 

ருத்திரங்கண்ணனார்: தங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. நீங்கள் எங்கள் நாட்டு விருந்தினர். தங்களை முகம் கோணச் செய்வோமா? புலவரை எங்கே சந்தித்தீர்கள்? விடுதியில் தங்களுடனேயே தங்க வைத்திருக்கலாமே… வீதிக்கு அழைத்து வந்து விட்டீர்களே இந்த நிலையில்… 

தாமோதரனார் : மறைவில் குடித்தால் நல்லது. மன்றில் அருந்தினால் பொல்லாதது. இது எந்த ஊர்நியாயம்? சீனத் தோழரே… இவருடைய நண்பர் பெரிய மனிதர் நாட்டைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு நாளெல்லாம் மச்சு வீட்டில் குடித்துக் கொண்டிருக்கிறார். பணிவிடைக்கு மாற்றான் மனைவி… 

உருத்திரங்கண்ணனார் : தளபதியைப் பற்றித் அவதூறாகப் பேசாதீர்கள். அவர் குடிப்பதற்காக நீர் குடிக்க வேண்டுமா? அவர் வாழ்ந்து முடித்தவர். நீர் வாழ வேண்டியவர். பெரியவர்களின் நற்குணங்களைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். தீயவை தீயபயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். போதைப் பாதை உமது நற்பெயர், வாழ்க்கை அனைத்தையும் சீரழிக்கும். உடல் நலனையும் கெடுக்கும்… 

தாமோதரனார் : அடடா! என்ன கரிசனம்! சீனரே நான் இவரது உற்ற நண்பன். அத்தை மகன். அத்தான். இவரோ அரண்மனையில் உள்ள பல பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகுபவர். என் திருமணத் தடையைப் போக்க இவரால் முடியவில்லை. முடித்துத் தருகிறேன் என்று வாய்ப்பந்தல் கட்டினார்… 

உருத்திரங்கண்ணனார் : நான் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா? முல்லையின் தந்தையார் யார் என்ற தகவலை அறிய முடியவில்லை. அதைப் பெரிதுப் படுத்தாமல் திருமணம் செய்து வையுங்கள் என்று உமது தந்தையாரிடம் என் அத்தை அன்பரிடம் மன்றாடினேன். அவர் இறங்கி வரவில்லை. நான் என்னதான் செய்வது? 

தாமோதரனார் : தந்தையார் இரக்கம் காட்டவில்லை. இறங்கி வரவில்லை. இது நீர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவர் இறங்கி வரவில்லை. அதனால் நான் போதையில் இறங்கி விட்டேன். சரிதானா சீன நண்பரே… 

உருத்திரங்கண்ணனார் : சீனரே… மன்னரும் தளபதியும் நகர சோதனைக்கு மாறுவேடத்தில் வருகிற நேரம். தயவு செய்து இவரை விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அங்கு வந்து இவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். 

சீனர்: ஐயா. வாருங்கள். 

தாமோதரனார்: சீனர் தமிழ் நன்றாகப் பேசுகிறீர். எங்கே அழைத்துச் செல்கிறீர்கள். 

சீனர் : சீனாவிலிருந்து தமிழ் மொழி வான் வழியாகவே ஒலிக்கிறது. நீர் வாரும். போவோம். 

(சீனரும் தாமோதரனாரும் மேடையின் இடப்பக்கமாகச் செல்கிறார்கள்) 

உருத்திரங்கண்ணனார் : (பாடுகிறார்) 

மூங்கில் இலைமேலே 
தூங்கும் பனி நீரே. 
தூங்கும் பனி நீரை 
வாங்கும் கதிரோனே… 

(மாறுவேடத்தில் அரசரும் தளபதியும் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறார்கள்) 

அரசன் : எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என்று பார்த்தேன். தளபதி நமது புலவர் உருத்திரங்கண்ணனார் நன்றாகப் பாடுகிறீர். இது உமது பாட்டா? 

உருத்திரங்கண்ணனார்: வணக்கம் மாமன்னரே. தளபதியாருக்கு வணக்கம்.. இந்தப் பாடல்… ஏற்றக்காரர்கள் பாடும் நாட்டுப் புறப்பாட்டு. கவி சக்ரவர்த்தி கம்பனை வியக்க வைத்த பாடல். 

அரசன் : மன்னிக்க வேண்டும். எனக்கு என்னவோ இலக்கிய நாட்டம் இல்லை. என் மனைவி வாயைத் திறந்தாலே புலவர்களின் பாடல்களைப் பற்றித் தான் பேசுகிறாள். அவள் பேசுவதைப் புரிந்து கொள்வதற்காக இலக்கியம் கற்க வேண்டும் என்ற ஆசை துளிர்க்கும். ஆட்சி நிர்வாகத்துக்கிடையில் நேரம் கிடைப்பது இல்லை. 

தளபதி : நம் புலவர் இமைப்பொழுதும் வீணாக்காதவர். நேர நிர்வாகம் அறிந்தவர். 

அரசர் : இலக்கியம் மட்டும் அல்ல. நேரத்தை நிர்வகிக்கும் முறையையும் இவரிடம் கற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களா… தளபதி…? நாங்கள்தான் நகர சோதனைக்கு என்று ராத்திரிப் பூச்சிகளாக சுற்றுகிறோம். இளம் புலவருக்கு என்ன… மஞ்சத்தில் துஞ்சாமல் அல் அங்காடி தெருவில்… என்ன செய்கிறீர் புலவரே…? சங்கீத சாதகம் செய்கிறீரா நள்ளிரவில் சந்தை இடத்தில்…? (சிரிக்கிறார்) 

தளபதி : மக்களைப் பல்வேறு கோணங்களில் பார்த்தால்தானே பாடல் புனைய முடியும் மாமன்னரே. அதனால் இரவு உலா வந்திருக்கிறார். 

அரசர் : அப்படியா? நம்மைப் போல் இவர்களுக்கும் இருபத்து நான்கு மணி நேரப் பணி அப்படித்தானே… தளபதி. சரி. அவர் அவரது பணியைப் பார்க்கட்டும். நாம் செல்வோம். வருகிறேன் புலவரே. 

உருத்திரங்கண்ணனார் : மாமன்னருக்கு வணக்கம். நன்றி. 

(இருவரும் மேடையின் இடப்பக்கம் நோக்கி செல்கிறார்கள். தளபதி செல்வதற்கு முன் புலவரின் தோளைப் பரிவுடன் தொட்டுவிட்டுச் செல்கிறார்.) 

(சீனர் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறார்) 

உருத்திரங்கண்ணனார் : நல் உதவி செய்தீர்கள். எங்கே என் நண்பன்? விடுதி அறையில்தானே இருக்கிறான்? 

சீனர் : (சிரிக்கிறார்) 

உருத்திரங்கண்ணனார் : ஏன் நகைக்கிறீர்கள்? (சற்றே கோபமாக) 

சீனர் : உம்முடைய அத்தான் குடிக்கவில்லை. அவர் நற்பண்புகள் மாறாதவர்.குடியில் விழுந்து கிடப்பது போல் நடித்தால் மனம் இரங்கி அவருக்குத் திருமணம் விரைவாக முடிக்க நீங்கள் உதவி செய்வீர்கள் என்று அவர் கூறினார். ஒத்துழையுங்கள் என்றார். இருவரும் சேர்ந்து நடித்தோம். எப்படி எங்கள் நடிப்பு? 

உருத்திரங்கண்ணனார்: உமது நடிப்புத்திறனை எல்லாம் தூக்கி உடைப்பில்தான் போட வேண்டும். 

சீனர் : உடைப்பு என்றால்… 

உருத்திரங்கண்ணனார் : உங்களிடம் இருக்கும் தமிழ் மொழி வழிகாட்டியில் தேடுங்கள். எங்கே அவர்…? 

சீனர் : என் அறையில்தான் இருக்கிறார். படுத்த உடனே உறங்கி விட்டார். எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை. உம்மிடம் உண்மையைச் சொல்லி விடலாம் என்று வந்தேன். நாட்டுக்கு வந்த விருந்தினரிடம்நீர் கோபித்துக் கொள்கிறீர். நான் போகிறேன். (சீனர் கோபித்துக் கொண்டு வேகமாக மேடையின் வலப்பக்கமாக வெளியேறுகிறார்) 

உருத்திரங்கண்ணனார் : நடித்துக் காட்ட நான்தானா கிடைத்தேன். இனிமேல் இவர்கள் பக்கம் நான் தலைவைத்துப் படுக்க போவதில்லை. 

(மேடையின் இடப்பக்கமாக வெளியேறுகிறார்) 

(திரை) 

ஆறாம் காட்சி 

(பலத்த மழை பெய்யும் ஒலி. பின்னணியில் கல்மண்டபம் போன்ற அமைப்பு. மரிக்கொழுந்து மழைக்கு அங்கு ஒதுங்கி இருக்கிறாள்.) 

மரிக்கொழுந்து : (தனக்குத்தானே) மழை என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை போலிருக்கிறது. நான் மட்டும் கோயிலுக்கு வந்து மழையில் மாட்டிக் கொண்டேன். இந்த மழை நிற்கும் வரை இங்கே இருக்க வேண்டியதுதான். பேச்சுத் துணைக்குக் கூட யாரும் அருகில் இல்லையே. இறைவா… குளிர வேறு ஆரம்பித்து விட்டதே… 

(கீழே யாரோ படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். யாராக இருக்கும் என்று குனிந்து பார்க்கிறாள்.) 

மரிக்கொழுந்து: எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார். அப்படியே அக்கா முக ஜாடையும் என் முக சாயலும் அச்சாக இருக்கிறதே. அப்பாவின் உறவினராக இருப்பாரோ…நடுங்குகிறாரே… காய்ச்சலோ… (தொட்டுப் பார்க்கிறாள்.) நன்றாக சுடுகிறதே… 

(நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஓடி வந்து ஒதுங்கி நிற்கிறார்.) மரிக்கொழுந்து: அரண்மனை மருத்துவர் சிவனாருக்கு வணக்கம். சிவனார் : வணக்கம் அம்மா. தாங்களா… நலம்தானே… 

மரிக்கொழுந்து : நலமாக இருக்கிறோம் அனைவரும். இவர் காய்ச்சலில் நடுங்குகிறார். காப்பாற்ற வேண்டும். தாங்கள் நல்ல நேரத்தில் இங்கு வந்தீர்கள். 

சிவனார் (குனிந்து நாடி பிடித்து பார்க்கிறார்…) ஆண்மகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா… இவர் ஒரு பெண்மணி மழை சற்றே ஓய்ந்திருக்கிறது. நான் போய் பெண்மணிகள் இருவரை அழைத்து வருகிறேன். இவரைத் தூக்கிச் செல்ல வேண்டும். தங்கள் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளிக்கட்டுமா? 

மரிக்கொழுந்து : கண்டிப்பாக. என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். (மருத்துவர் மேடையின் வலப்பக்கமாக செல்கிறார்) 

மரிக்கொழுந்து கீழே அமர்ந்து குளிரில் நடுங்கும் பெண்மணியின் கைகளை வாஞ்சையோடு பிடித்துக் கொள்கிறாள்) 

(விளக்குகள் அணைகின்றன.) 

(காட்சி மாற்றம்) 

(விளக்குகள் மீண்டும் ஒளிரும்போது பின்னணியில் மரிக்கொழுந்து வீட்டின் கீழ்தளம்.) 

(மிகப்பெரிய ஆசனம் ஒன்றில் கனத்த சரீரம் உடைய பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் அருகில் மற்றொரு சிறிய ஆசனத்தில் மரிக்கொழுந்து அமர்ந்திருக்கிறாள்.) 

மரிக்கொழுந்து : அப்பா… உன்னைப் பார்க்க இத்தனை ஆண்டுகளாய் நான் காத்துக் கிடக்க வேண்டியது ஆகி விட்டது.தாமரை அக்கா… வேண்டாத பணிகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு விட்டாய் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. 

தாமரை : நான் இப்பொழுது எது சொன்னாலும் உனக்குப் புரியாது. சமயம் வரும்போது விரிவாகக் கூறுகிறேன். 

(மல்லிகை வருகிறாள்) 

தாமரை : என்னை அம்மா என்று அழைக்க மாட்டாயா… மல்லிகை. நான் இங்கு வந்து பத்து நாட்களாகி விட்டது. இன்னும் என் மீது கோபம் தீரவில்லையா? 

மல்லிகை : அம்மா… பூங்குழலியின் திருமணத்திற்குப் போய் வருகிறேன். 

தாமரை : என்னிடம் தானே கூறுகிறாய் செல்வி… 

மல்லிகை: அம்மா மரிக்கொழுந்து அம்மா… உங்களைத்தானே… 

நான் பூங்குழலியின் திருமணத்திற்குப் போய் வருகிறேன். 

மரிக்கொழுந்து : மல்லி உன் அம்மாவாக நினைத்துப் பேச வேண்டாம். என் அக்காவாக நினைத்து இரண்டொரு வார்த்தைகள் பேசலாம் அல்லவா? 

மல்லிகை : தங்கள் தமக்கையாரா? உடல் நலம் சரியாகிவிட்டதா பெரியம்மா. அன்புத் தங்கையார் தாங்கு தாங்கு என்று தாங்கும்போது தங்களுக்கு எப்படிப்பட்ட காய்ச்சலும் பறந்தோடி விடும். பேசிவிட்டேன் அம்மா. வருகிறேன். 

(முல்லை அவசர அவசரமாக வருகிறாள்.) 

முல்லை : என்னை விட்டு விட்டுச் செல்கிறாயே அரக்கி. கிராதகி. உன் மீது இடி விழ. முண்டம். 

மல்லிகை : பார்த்தீர்களா அம்மா. நட்டாற்றில் விட்டு விட்டுப் போன தமக்கையிடம் தாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி பொங்க அன்பைப் பொழிகிறீர்கள். இவளோ என்னை எப்போதும் திட்டிக் கொண்ருக்கிறாள். இரண்டு பேரும் இரட்டைப் பிறவிதானே அம்மா. இவள் மட்டும் எப்படி எனக்கு தமக்கை ஆவாள்? கேட்டுச் சொல்லுங்களேன் தங்கள் தமக்கையாரிடம். 

மரிக்கொழுந்து : நான் கேட்டு வைக்கிறேன். நீங்கள் இருவரும் திருமணத்திற்கு சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புங்கள். போய் வாருங்கள். (அதட்டல் தொனி) 

மல்லிகை : தமக்கையைப் பற்றிப் பேசினால் மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. பார். இப்படித்தான் இருக்க வேண்டும் சகோதரிகள். நீயும் இருக்கிறாயே…வா.. 

(முல்லையும் மல்லிகையும் வேகமாக செல்கிறார்கள்)… 

(மரகதம் வருகிறாள். தாமரையிடம் பழச்சாறு உள்ள குவளையைத் தருகிறாள். தாமரை பருகுகிறாள்) 

மரிக்கொழுந்து: நான் கூட இரவு நேரங்களில் உறங்கி விடுவேன். இவள்தான் விழித்திருந்து தங்களுக்கு உரிய நேரத்தில் மருந்துகளையும் பத்திய உணவையும் கொடுத்து வந்தாள். தங்கமான மங்கை. 

தாமரை : உனக்கு என் ஆசிகள். நல்ல கணவனும் நன்மக்கட்பேறும் உனக்கு அமைய வாழ்த்துகிறேன். 

மரிக்கொழுந்து : அக்காவிடம் பாசமாக நடந்து கொள்ளும்படி அவர்களிடம் எடுத்துக் கூறச் சொன்னேன். அதை இவள் செய்ததாகத் தெரியவில்லை. 

மரகதம் : தங்கள் கட்டளையை நிறைவேற்றாமல் இருப்பேனா? ஆன மட்டும் இருவரிடமும் பேசிப் பார்த்தேன். இருவரும் அசைந்து கொடுக்கவில்லை. தாமரை அம்மாவை கோயில் மண்டபத்தில் காய்ச்சலில் துடிப்பதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை தருகிறார் எசமானி அம்மா என்று இவர் வந்தவுடனேயே இருவரிடமும் டோடிச் சென்று கூறினேன். ஓடியதில் என் முட்டியில் அடிபட்டதுதான் மிச்சம். அவர்கள் மஞ்சத்தைவிட்டு எழுந்து வரவே இல்லை. அதன் பிறகு நாள்தோறும் பேசி வருகிறேன். காதில் கேட்டுக் கொள்வதே இல்லை. நான் உள்ளே சென்று பணிகளைக் கவனிக்கிறேன். (மரகதம் செல்கிறாள்) 

தாமரை : இவர்களுடைய தந்தை யார் என்றாவது சொல்லுங்கள் என்று நச்சரித்தாய் அல்லவா? 

மரிக்கொழுந்து : அது தெரியாததால்தான் முல்லைக்கும் புலவர் தாமோதரனாருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடியாமல் அந்தரத்தில் நிற்கிறது. 

தாமரை : இதுபோன்ற பிரச்சினைகள் வரும் என்று தெரிந்துதான் குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கச் செய்தேன்.நீ பிரகாசக் கவிராயனைக் காதலித்து வந்தாய் என்று சொன்னார்கள். இருவரும் என் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகிவிடுவீர்கள். சமுதாயத்தில் எந்தக் கேள்வியும் எழாது என்று நான் திட்டமிட்டேன். 

மரிக்கொழுந்து: (சிரிக்கிறாள்) கவிராயரை நான் காதலித்தேனா.. யார் சொன்னார்கள். அவர் என்னிடம் பேசியதுகூட இல்லை. ஒருமுறை அவர் நமது பெற்றோரிடம் வந்து என்னைப் பெண் கேட்டார். அப்பாவும் அம்மாவும் அக்காவுக்கு மணம் முடிக்காமல் தங்கைக்குத் திருமணம் நடத்த முடியாது. காலம் கனியட்டும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள். அதன் பிறகு ஒருமுறை கடற்கரைக்குச் சென்ற தந்தையை ஆழிப்பேரலை பாசத்துடன் இழுத்துக் கொண்டது. நீ எங்கு போனாய் என்பது யாருக்கும் தெரியவில்லை. அம்மாவுக்கு நானும் எனக்கு அம்மாவுமாக இருந்து வந்தோம். திடீரென புலவர் பெருமான், உன் குழந்தைகளைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். குழந்தைகள் அச்சு அசலாக உன் முகத்துடன் இருந்ததால் நான் சந்தேகப்படவில்லை. பாட்டியின் பாசத்தையும் பார்த்தவைதான் இந்தக் குழந்தைகள். 

தாமரை : குழந்தைகளுடன் உன்னை ஏற்றுக் கொள்பவன் கிடைத்திருப்பானே… 

மரிக்கொழுந்து : திருமணம் என்பது எதற்கு? மகப்பேறுக்குத் தானே? இடுப்பு நோகாமல் மடியில் குழந்தைகள் தவழும்போது எனக்கு எதற்கு திருமணம்…? என்று நினைத்தேன்.நீ தான் அம்மா. நான் சிற்றன்னை என்று சொல்லிச் சொல்லித்தான் வளர்த்தேன். என்னை சித்தி என்றுதான் அழைப்பார்கள். நீ வந்து சேர வேண்டும் என்று தினந்தோறும் தெய்வத்தை வேண்டி வந்தேன். நீ வந்ததும் பார். இளமைத் திமிர். என்னை அம்மா என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். 

தாமரை : அவர்களது கோபம் நியாயமான கோபம்… நான் சற்றே காலார நடந்து காற்று வாங்கி வருகிறேன்… (செல்கிறாள்) 

(மரகதம் வருகிறாள்) 

மரகதம்: எசமானி அம்மா… அவர் இருவரின் தந்தை யார் என்று சொல்வதாக பேச்சைத் தொடங்கினார். நீங்கள் வேறு என்னவோ பேசி திசை திருப்பி விட்டீர்கள்… 

மரிக்கொழுந்து : அதைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டே இருக்கிறாள் அக்கா… எதற்கு ஆண்வேடம்? அதற்கும் பதில் இல்லை. பசியாறலாமா… உணவு தயார் ஆகி விட்டதா? 

மரகதம் : தயார் ஆகி விட்டது. வாருங்கள். தங்கள் தமக்கையார்… 

மரிக்கொழுந்து : அவளுக்குப் பத்திய உணவுதானே. அவள் வந்ததும் நீ பரிமாறு. 

மரகதம்: சரி. வாருங்கள் அம்மா. 

(இருவரும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.) 

(விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிர்கின்றன. அதே காட்சி அமைப்பு. பாடினியார், மரிக்கொழுந்து மரிக்கொழுந்து என்று குரல் கொடுத்தபடி மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள். அங்கேயே நிற்கிறாள்.) 

(மரகதம் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்) 

மரகதம்: வாருங்கள். வாருங்கள். உள்ளே வாருங்கள். 

பாடினி : நீ கூப்பிட்டால் ஆயிற்றா? வீட்டுக்கு உடையவர்கள் வந்து அழைக்கட்டும். 

(மரிக்கொழுந்து இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்) 

மரிக்கொழுந்து: வாருங்கள். என் குடிலுக்குத் தாங்கள் வந்திருப்பது என் பாக்கியம். வாருங்கள். மரகதம் ஏன் அங்கேயே நிற்க வைத்திருக்கிறாய்? பண்பு தெரியாதவளே… 

மரகதம் : நான் அழைத்து விட்டேன். அவர்கள் நீங்கள் அழைத்தால்தான் உள்ளே வருவேன் என்றார்கள். 

மரிக்கொழுந்து : சரி. நீர் மோர் எடுத்து வா. 

(மரகதம் செல்கிறாள். பாடினியார் உள்ளே வருகிறார்.) 

மரிக்கொழுந்து : நாம் இருவரும் பேதைப் பருவத்திலிருந்து தோழிகள். ஆனால் காலம் நம்மைப் பிரித்து விட்டது. அமருங்கள்.(இருவரும் ஆசனங்களில் அமர்கிறார்கள்) 

பாடினியார் : நான் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டேன். அதனால் எனக்கு ஒன்றும் இறுமாப்பு இல்லை. நீ என்னுடைய திருமணத்திற்கு வந்ததுடன் சரி. அதன்பிறகு நீ என்னைப் பார்க்க வரவில்லை. நீ என்னை மறந்தாய். நானும் உன்னை மறந்தேன். ஒரே இரத்தம் கொண்ட உறவினர்களே நண்பர்கள்போல் எப்போதோ பார்த்துக் கொள்ளும்நிலை வந்து விட்டது. இதில் நட்புக்கு மட்டும் நிலைத்த பந்தம் இருந்து விடமுடியுமா என்ன? 

மரிக்கொழுந்து: மறந்து விட்டேன் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது? மற்ற பெண்களைப் போன்ற வாழ்க்கை எனக்கு அமையவில்லை. கல்யாணம் ஆகாதவள், தங்களைப் போல் ஆண்டு அனுபவிப்பவர் வீடுகளுக்குச் சென்றால் கண்ணூறு வரும் என்பார்களே… அதை எண்ணித்தான் பழைய நட்புகளை அறுத்துக் கொண்டேன். 

பாடினியார் : இந்த சமாதானத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியுமா? 

மரிக்கொழுந்து: என் மனநிலையை நான் சொன்னேன். ஏற்பதும் ஏற்காததும் தங்கள் மனநிலையைப் பொறுத்தது. நான் என்ன செய்ய முடியும்? 

(மரகதம் நீர் மோர் தருகிறாள். பாடினி அதனை வாங்கி மேசையில் வைக்கிறாள்.) (மரகதம் திரும்பிப்போகிறாள்) 

பாடினியார் : உன்னிடம் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். நம்முடைய பால்ய சிநேகிதத்தின் அடிப்படையில் அந்த உதவியை எனக்குச் செய்வாய் என்று நான் எதிர்பார்த்து வந்திருக்கிறேன். 

மரிக்கொழுந்து: சொல்லுங்கள். முடிந்தால் செய்கிறேன். 

பாடினி : என் மகன் பித்துப் பிடித்தவன் போல் இருக்கிறான். அவைப் புலவன் என்ற நிலையை அடைந்து என்ன பயன்? அரண்மனைக்குப் போய் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறான். 

மரிக்கொழுந்து : (இறுக்கத்துடன்) தங்கள் மகனைப் பீடித்த நோய்க்கு மருந்து எங்கள் வீட்டில் இல்லை. 

பாடினி : உங்கள் வீட்டில்தான் இருக்கிறது. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நானும் என் கணவரும் காதலர்களைப் பிரித்து விட்டோம். இப்பொழுது மகனின் நிலையைப் பார்த்ததும் என் கணவர் மனம் மாறிவிட்டார். தாமோதரன் விரும்பிய பெண்ணை மணம் முடிக்க சம்மதித்து விட்டார். 

மரிக்கொழுந்து : நான் என்ன செய்ய வேண்டும்? 

பாடினி : என்ன மரிக்கொழுந்து இப்படி பேசுகிறாய்… முல்லை இப்பொழுதெல்லாம் என் மகனிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. நான் செய்த தவறுக்கு மகனைத் தண்டிக்கலாமா? முல்லையிடம் என் மகனிடம் சமாதானம் ஆக இருக்கச் சொல். சுபநாளில் சுபவேளையில் நாம் சந்தித்து மங்கலப் பொழுதுக்கு நாள் குறிக்கலாம். 

மரிக்கொழுந்து : தங்களுக்குத் தெரியாததா? இன்றைய தலைமுறையினரிடம் நாம் எதையும் திணிக்க முடியாது. எல்லாம் அவர்கள் விருப்பம்போல்தான். உடை, ஜடை, ஆடை, ஆபரணம்.. ஒப்பனை. அலங்காரம்…. அவர்களுக்கு வேண்டிய ஆடவரைத் தேர்ந்தெடுப்பதும் அப்படியேதான்… 

பாடினி : தோழிக்காக விட்டுக் கொடுக்காமல் பேசுவாய் என்று பார்த்தால் விட்டேற்றியாகப் பேசுகிறாய்… 

மரிக்கொழுந்து : என் எத்தனத்தில் முடிகிற காரியமாக இருந்தால் முடியும் என்று சொல்வேன். முல்லையோ கோபத்தில் இருக்கிறாள். 

பாடினி : ஆறுவது சினம். 

மரிக்கொழுந்து : ஆறும் வரை காத்திருப்போம். 

பாடினி : என் மகனுடைய நிலைமையை எண்ணிப் பார் மரிக்கொழுந்து… 

மரிக்கொழுந்து : (ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கிறாள்) (ஆவேசமாகப் பேசுகிறாள்). விழா மேடை அருகே பக்குவம் இல்லாமல் நீங்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நஞ்சு குடித்தாள் என் பெண். அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால், அவள் மீது பாசம் வைத்திருக்கும் நானும் அவள் தங்கை மல்லிகையும் உயிர் தரித்திருப்போமா? அவள் அவசரப்பட்டு சாப்பிட்டது வீர்யம் மிக்க நஞ்சாக இல்லாமல் இருந்ததாலும் அவளைப் பிழைக்க வைக்க நான் படாத பாடுபட்டேன். நானே மருத்துவம் பார்த்தேன். வெளியே யாருக்கும் சொல்லவில்லை. உங்களிடம் கையெடுத்து வணக்கம் கூறிய இளம் மங்கையிடம் கொடிய வார்த்தைகளைக் கொட்டிவிட்டு அவளை மேலே அனுப்பப் பார்த்தீர்கள். ப்பொழுது மகனுக்காக இங்கே வந்து நிற்கிறீர்கள். இதுதான் பெரிய குடும்பத்தினருக்கு அழகா? கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமோ என்பார்கள். எனக்கு தெய்வம் கொடுமையைத்தான் செய்து வருகிறது. 

காலமும் நேரமும் சாதகமாக இல்லை. பெண் கேட்கும் படலம், பெண்ணைத் தங்கள் மகனிடம் மனத்தைத் திருப்பச் செய்வது இதெல்லாம் காலம் கனியும்போது பார்த்துக் கொள்ளலாம். 

பாடினி : நீ உணர்ச்சிவசப்படுகிறாய். சொல் பொறுக்காமல் உன் 

மகள் விடம் குடித்தாள் என்றால் அதற்கு நானா பிணை? மரிக்கொழுந்து : பிணை நீங்கள் ஆக முடியாதா?… தற்போது இனிமேல் நாம் உரையாடுவதை நிறுத்துவது உத்தமம் என்று நினைக்கிறேன். 

பாடினி : சரி.நான் பிறகு வருகிறேன். மனதைக் குளுமையாக்கிக் கொண்டு நான் கூறியதை செயல்படுத்து. விடை பெறுகிறேன்.(வலப்பக்கமாக போகிறாள்) 

(சற்று நேரங்கழித்து தாமரை வலப்பக்கத்திலிருந்து வருகிறாள்) 

மரிக்கொழுந்து: நீ எங்கே இருந்தாய்…? 

தாமரை : வாசலில்தான் நின்று கொண்டிருந்தேன். 

மரிக்கொழுந்து : நான் அந்த அம்மையாரிடம் மாட்டிக் கொண்டு எப்படி விழிக்கிறேன் என்று வேடிக்கை பார்த்தாயா? 

தாமரை : முல்லை உயிர் துறக்க நினைத்தாள் என்பதை நீ சொல்லவில்லையே… 

மரிக்கொழுந்து: சொல்லி என்ன பயன்? என் மகள்களுக்கு என்ன நடந்தால் உனக்கு என்ன? நீ ஏதோ இரகசியமான அரசாங்கக் காரியங்களைச் செய்து வருகிறாய் போலும். அதையே செய். சம்சார பந்தம் உனக்கு வேண்டாம். கவலை வேண்டாம். என் மகள்களும் என்னைப் போல் கன்னியாகவே இருந்து காலத்தைக் கழிக்க மாட்டார்கள். தகுந்த ஏற்பாடுகளைச் செய்த பின்னரே உயிர் துறப்பேன். 

(முல்லையும் மல்லிகையும் மேடையின் இடப்பக்கத்தி லிருந்து வருகிறார்கள். 

தாமரை : மரிக்கொழுந்து ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய்? வார்த்தைகளால் என்னைக் கொல்கிறாய். 

மரிக்கொழுந்து: (மகள்களிடம்) நீங்கள் இருவரும் கல்யாண வீட்டிலிருந்து எப்போது வந்தீர்கள்? 

மல்லிகை : நாங்கள் எப்போதோ வந்து விட்டோம். நீங்கள் சாப்பிட்டு உறங்கிக் கொண்டிருந்தீர்கள். என்னிடம் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு, புலவரின் தாயிடம் போட்டு உடைத்து விட்டீர்களே. என்ன அம்மா இப்படி அவசரப்பட்டு விட்டீர்கள். 

மரிக்கொழுந்து : தவறுதான். அவள் அவளுடைய மகனைப் பற்றியே விசாரப்பட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு உணர்ச்சி வேகம் ஏற்பட்டு விட்டது. 

முல்லை: பார்த்தீர்களா… பெரியம்மா… மூச்சுக்கு முந்நூறு முறை எங்களைத் தன் மகள்களாகக் கொண்டாடுகிறாள் எங்கள் அம்மா. நீங்கள் உங்களை எங்கே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எங்கள் அம்மா எங்களை எப்படி பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் இதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். 

மரிக்கொழுந்து : முல்லை. நீங்கள் இருவரும் பேச வேண்டாம். வார்த்தைகளால் தேள் போல் கொட்டுவீர்கள். உள்ளே செல்லுங்கள். 

தாமரை : நீ மட்டும் தேனொழுக என்னிடம் பேசுவதாக நினைப்பா?…யானையைப் பார்த்த குருடனைப் போல் நீங்கள் மூவரும் என்னைப் பார்க்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து இருக்கலாம் என்று நினைத்தது மிகப் பெரிய தவறு. என் நிலைமைக்குத் தக்க காரணம் இருக்கும் என்று நினைக்கவே மாட்டீர்களா? 

முல்லை : நாங்கள் தங்களை இருக்கச் சொல்லவில்லையே. எங்களுக்கு நல்லது நடத்துவதைப் பொறுப்பாய்ச் செய்து முடிப்பேன் என்று அம்மா முழங்கியதைக் கேட்டீர்கள் அல்லவா? உடல் வலிமை பெற்றதும் தங்கள் அரசாங்கப் பணிகளைத் தொடருங்கள். எங்கு இருக்க நினைக்கிறீர்களோ அங்கு இருங்கள். (மரிக்கொழுந்து முல்லையின் கன்னத்தில் அறைகிறாள்) 

மல்லிகை : அவள் என்ன சொல்லிவிட்டாள் என்று கை ஓங்குகிறீர்கள்? முல்லை இந்த வீட்டின் தலைவி அம்மா மரிக்கொழுந்து. அவர் தமது விருப்பத்தின்படி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். யாருக்கு வேண்டு மானாலும் புகலிடம் தரட்டும். நீ தலையிடாதே வா… 

(இருவரும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.) 

(சற்று நேரம் அமைதி நிலவுகிறது. தாமரை மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறாள். அக்கா அக்கா என்று அழைத்தபடியே மரிக்கொழுந்து அவளைப் பின் தொடர்கிறாள்.) 

(சில நிமிடங்கள் கழித்து முல்லை அங்கு வருகிறாள்) 

முல்லை : அழகிய மயில் 
பாங்காய் நடனம் புரியும் 
இல்லத்தில் -உன் உள்ளத்தில் 
பழகுதற்கு இனிய மன்னா! 
புறக்கணிப்பது 
தகுமோ உனக்கே? உனக்கே உரிய 
ஏந்திழையைப் புறக்கணிப்பது 
தகுமோ உனக்கே….? 

(மரகதம் வருகிறாள்) 

மரகதம் : சின்னம்மா… என்ன இது. இல்லத்தில் புயல் வீசிக் கொண்டிருக்க நீங்கள் மயில் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்… 

முல்லை : மண்டு மண்டு. நீதானே புதுப்புது நாடகங்கள் சிந்திக்கச் சொன்னாய்… அதுதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். 

மரகதம்: ஆமாம். இது என்ன புது நாடகம்? சொல்லுங்கள். யார் இந்த மயில்… 

முல்லை : மயிலுக்குப் போர்வையைத் தந்த மன்னன் தெரியுமா? 

மரகதம் : ஒரு ராசா மயிலுக்கே போர்வையைக் கொடுத்தாரா…?

முல்லை : முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.

மரகதம்: தங்களுக்காகவா… வீட்டு வாசலில் தேர் இல்லையே… எங்கே அது… 

முல்லை : ம்ஹும் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருக்கிறேன். 

முல்லை : கேள். முல்லைக் கொடிக்குப் பற்றுக் கோடாகத் தன்னுடைய தேரையே கொடுத்தான் பாரி வள்ளல். குளிரில் நடுங்கி நிற்கும் மயிலைக் கண்டு போர்வையைத் தந்தான் பேகன். 

மரகதம்: பேகனுடைய கதையா உங்கள் நாட்டிய நாடகம்…?

முல்லை : கதைத் தலைவன் பேகன். பேகனின் மனைவி கண்ணகி.

மரகதம் : தெருக்கூத்து நாடகங்களில் கண்ணகியின் கணவன் கோவலன் என்பார்களே… 

முல்லை: பேகனின் மனைவியின் பெயரும் கண்ணகி. 

மரகதம் : எங்கள் தெருவிலேயே நான்கு மரகதம் இருக்கின்றோம். 

முல்லை : அது போலத்தான். நற்பண்புகளுக்குக் குறைவில்லாத அரசன் பேகனிடம் ஒரு குறை. 

மரகதம் : குறை இல்லா மனிதனைக் காண முடியாதே. முறைக்காதீர்கள். சொல்லுங்கள். 

முல்லை: பேகன், வீட்டில் இருக்கும் மனைவியான குலமகளைப் புறக்கணித்து, பரத்தையரிடம் விழுந்து கிடக்கிறான். 

குலமகள் கண்ணகியின் கண்ணீரைப் புரிந்து கொண்ட புலவர் பெருமக்கள் கபிலர், பரணர் ஆகியோர் அரசனிடம் பதமாகப் பேசி அவனை நல்வழிப் படுத்துகின்றனர். மனைவியிடம் சேர்த்து வைக்கின்றனர். அதுதான் நான் பாடிய பாட்டு. 

மரகதம் : பாட்டு பாடி குடும்பத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. எழுதுங்கள். நான் அடுப்படி நாட்டியம் பார்க்கிறேன். 

முல்லை : அது என்ன அடுப்படி நாட்டியம்? 

மரகதம்: உங்களுக்குப் பசியாற உணவு தயாரிப்பது… நான் சூடான உணவுகளைத் தயாரித்து வழங்குகிறேன். ஆனாலும் நீங்கள் சாப்பிடுவது பழையது… எப்படி சொல்லுங்கள்… பார்ப்போம். 

முல்லை : தாத்தா சேர்த்து வைத்த செல்வத்தால் நாங்கள் வாழ்கிறோம் என்று சொல்கிறாயா?…. நானும் தங்கையும் நாட்டியம் ஆடி சம்பாதிக்கவில்லையா..? 

மரகதம் : இப்பொழுதுதானே… நாட்டியம் படியளக்கிறது. தங்களுக்குத் தெரியாதா? தங்கள் தாத்தா தந்த செல்வம், நாட்டியம் சொல்லிக் கொடுத்து ஈட்டிய வருமானம் இதை எல்லாம் வைத்துத்தான் சிக்கனமாக செட்டாக வாழ்க்கை நடத்தித் தங்களை வளர்த்தார் எசமானி அம்மா. அவருக்கு என்று வரும் செலவைத் தவிர்ப்பார். தங்கள் இருவருக்கும் என்றால் அள்ளி இரைப்பார். சரி. நான் போகிறேன்…

(மல்லிகை வருகிறாள்) 

மல்லிகை : இன்னொரு கண்ணகி நாடகம் எந்த அளவில் இருக்கிறது? 

முல்லை : அது பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சிந்தனை ஓட்டத்தை அம்மா தடுத்து நிறுத்தி மனத்துக்குள் அமர்ந்து விடுகிறார். 

மல்லிகை : மரிக்கொழுந்து அம்மா நமக்காக அளப்பரிய தியாகம் செய்திருக்கிறார். நாம் நன்றிக் கடன் செலுத்துவது எப்படி என்று புரியவில்லை. 

முல்லை : நம் திருமணங்களுக்கு முன் அம்மாவுக்குத் திருமணம் நடத்தி விட்டால்… 

மல்லிகை : என்ன உளறுகிறாய்… யாராவது கேட்டால் சிரிப்பார்கள். மரகதமே விழுந்துவிழுந்து சிரிப்பாள். பேரிளம் பெண்ணுக்கு உற்ற துணையாக யார் வருவார்கள்?

முல்லை : சற்று நேரத்திற்கு முன் அம்மா, பெரியம்மாவிடம்… சரி… 

நம்மைப் பெற்ற அம்மாவிடம் என்ன முழங்கினார்கள்…? 

மல்லிகை : நம் இருவருக்கும் நல்லது நடத்திப் பார்ப்பேன் என்றார்கள். அதற்கு என்னடி… 

முல்லை : நாம் இருவரும் மணக்கோலம் கண்டு புகுந்த வீடு போய் 

விட்டால் அம்மாவுக்கு யார் துணை…? 

மல்லிகை : அதுதான்… காணாமல் போன அக்காள் வந்து விட்டாரே… சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து விதித்தவரை வாழவேண்டியதுதான். 

முல்லை : விதித்த வரைதான் எல்லோருக்கும் வாழ்வு. நம்மைப் பெற்ற தாயார் செய்வதெல்லாம் மூடு மந்திரம்…மர்மம்… கேட்டால் யானையைப் பார்த்த குருடனைப் போல் தம்மை அனைவரும் பார்ப்பதாக குறைபட்டுக் கொள்கிறார். அம்மாவுக்கு ஒரு துணையை ஏற்படுத்தினால் என்ன… என்று நான் நினைக்கிறேன். 

மல்லிகை : நல்ல யோசனைதான். இதற்கு அவர் சம்மதிப்பாரா… கற்பனை நன்றாக இருக்கிறது. நடக்குமா என்பது கேள்விக்குறிதான். சரி. பேரிளம் பெண்ணுக்குத் திருமணம் நடத்துவது பற்றிப் பிறகு பார்ப்போம். பாடினியார் வீடு வரை வந்து விட்டாரே. சம்மதமும் தெரிவித்து விட்டாரே. இன்னும் ஏன் அவரை அலைக்கழிக்கிறாய். ஆண்பாவம் பொல்லாதது. 

முல்லை: இப்பொழுது வீட்டில் புலவர் முடங்கிக் கிடப்பதுதான் தெரிகிறது! அன்று என் மீது நெருப்பாய் வார்த்தைகளைக் கொட்டினார்களே… 

மல்லிகை : ‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை’ என்றார் கவியரசு. வேண்டாம் பிடிவாதம்… காதலை முடிவுக்குக் கொண்டு வா. கடிமணத்திற்கு ஏற்பாடு செய்து கொள். 

முல்லை : என் காதலன்… ஆடல் கலை ஒன்றுதான். 

முல்லை மேடையின் இடப்பக்கமாகச் செல்கிறாள்.) 

(மல்லிகை ஆசனத்தில் அமர்கிறாள்.) 

(சேலைத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே மரகதம் வருகிறாள்.) 

மல்லிகை : என்ன… வியர்த்து விறுவிறுக்க வருகிறாய்.. 

மரகதம்: ஆமாம். எசமானி அம்மாளுக்கு உப்பு இல்லா உணவு. பெரிய அம்மாவுக்கு பத்திய உணவு. தங்கள் இருவருக்கும் வேறு விதமான உணவு. 

மல்லிகை : நாங்கள் உன்னை அளவுக்கு மீறி வேலை வாங்குகிறோமோ? 

மரகதம் : சீச்சி. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. விதம் விதமாக சமைக்கக் கற்றுக்கொண்டு விட்டேனே. எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்து வருபவர் எசமானி அம்மா. அவருக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறேன்? திருமண வீட்டிற்குப்போனவர்கள் சாப்பிடாமல் வருவது முறை இல்லையே… 

மல்லிகை : நாங்கள் அதிகநேரம் அங்கிருந்தால்… 

மரகதம் : பெண்கள் வம்புபேசுவார்கள் என்று மணப்பெண் கழுத்தில் மங்கலநாண் ஏறியதும் வந்து விட்டீர்களா…

மல்லிகை: ஆமாம். சரி முல்லையிடம் என்ன பேசினாய்… 

மரகதம் : நான்… ஒன்றும் பேசவில்லையே. ராசா பேகனின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். சரி சாப்பிட வாருங்கள்… 

மல்லிகை : வேறு ஒன்றும் பேசவில்லையா? 

மரகதம் : இல்லையே… 

மல்லிகை: சரி போகட்டும். அவளிடம் பதமாய்ப் பேசி புலவரை சந்திக்கச் சொல். அப்போதுதான் கெட்டி மேளம்கொட்டும். 

மரகதம்: இந்த மாதிரி கடினமான வேலையை எல்லாம் அம்மாவும் மகளும் என் தலையில் கட்டுகிறீர்கள். அவர் காதல் வேண்டாம் நடனம்தான் என் மூச்சு என்று சொல்லி விட்டார். 

மல்லிகை : உணர்ச்சிவேகத்தில் அப்படித்தான் பேசுவாள். புலவரை ஒருமுறை பார்த்துவிட்டால் பொத்தென்று அவர் காலில் விழுந்து விடுவாள். 

மரகதம் : இதைப் பெண்களின் பலம் என்பதா? பலவீனம் என்பதா?

மல்லிகை: பலமும் இல்லை பலவீனமும் இல்லை. இயற்கை விதி. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு சக்தியால்தான் மனித குலம் வாழ்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். பெண்கள் தங்களுக்கு வேண்டும் என்ற நேரத்தில் ஆண்களுடன் இருப்பது வேண்டாம் என்ற நேரத்தில் ஆண்களைத் திட்டுவது என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு உதவாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதே நலம் பயக்கும். தனியாக வாழ்ந்துவிட முடியாதா ஏன் முடியாது என்று தோன்றும். ஆனால், ஒரு வெற்றிடம் தெரிந்து கொண்டே இருக்கும். வெற்றிடம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. 

மரகதம் : நன்றாகப் பேசினீர்கள். இப்பொழுதே… 

மல்லிகை : முல்லையிடம் பேசுகிறாயா… 

மரகதம் : இல்லை இப்பொழுதே யாராவது மங்கலமுடிச்சு இட வந்தால் கழுத்தை நீட்டி விடலாம் என்று தோன்றுகிறது. அப்படி இருந்தது தங்கள் பக்குவப் பேச்சு. எங்கிருந்து வந்தது இத்தனை பொறுமை பொறுப்பு பக்குவம்…? 

மல்லிகை : உன்னிடமிருந்து கற்றேன் என்று வைத்துக் கொள்ளேன்… 

மரகதம்: என்னிடம் கற்பதற்கு என்ன இருக்கிறது? 

மல்லிகை : பொறுமை, கடின உழைப்பு, சோம்பல் இல்லாமை, உணர்ச்சி வசப்படாமல் இருத்தல், வார்த்தைகளை அளந்து பேசுதல் இவற்றை எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்… 

மரகதம் : நான் இப்படியா… எனக்கு தெரியவில்லை. மல்லிகை : உனக்குத் தெரியாது. மற்றவர்களுக்குத்தான் தெரியும். மரகதம்: தங்களிடமிருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். மல்லிகை : என்ன அது? 

மரகதம் : மற்றவர்கள் குணங்களைக் கூர்ந்து கவனித்து அறியும் பண்பு. 

மல்லிகை : சாமர்த்தியமான பெண்தான் நீ. வா. பசியாறலாம். 

அக்காவையும் அழைத்து வா. 

(இருவரும் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்) 

(திரை) 

– தொடரும்…

– அமைதிப் புறா (நாடகம்), முதற் பதிப்பு: ஜூலை 2013, கௌரி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *