அன்புப் பார்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 3,646 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழ மன்னன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அருகில் அமைச்சர் அமர்ந்திருந்தனர். கலைவலாளரும் புலவரும் தமக்குரிய இருக்கையில் இருந்தனர். நாட்டு வளப்பத்தைப் பற்றியும் கலைச் சிறப்பைப் பற்றியும் மன்னன் உரையாட, மந்திரிமாரும் தகுதியறிந்து பேசினர். பேச்சு மெல்ல மெல்ல வேளாளரைப் பற்றிப் படர்ந்தது.

“இந் நாட்டின் நெல் வளத்தை உலகம் முழு வதுமே கொண்டாடுகிறது. சோணுடு சோறுடைத்து என்ற பழமொழியே இதற்கு அடையாளமாகும். இந்த நாட்டில் உள்ள வேளாளர்களின் செல்வச் சிறப்புக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல இயலாது. நம்முடைய பண்டாரத்தில் செல்வம் குறையினும் வேளாளர் செல்வம் என்றும் குன்றாது” என்று மன்னன் பெருமிதத்தோடு பேசினான்.

“பரம்பரை பரம்பரையாக வேளாளர் கொடுக்க, முடியை வாங்கிச் சூட்டிக்கொள்ளும் வழக்கம் சோழ குலத்துக்கு உரியது. நாட்டின் பெருமையும், வளப்ப மும் அவர்களால் அதிகமாகின்றன என்பதைத் திரு வள்ளுவர் முதலிய புலவர்கள் அருமையாகச் சொல்லியிருக்கிறார்களே!” என்றார் ஒர் அமைச்சர்.

“இப்போதும் பிற நாட்டிலிருந்து வருவாருக்கும், இந்நாட்டுப் புலவருக்கும் அளவின்றி வாரி வழங்கும் வேளாண் செல்வர் பலர் இருக்கிறார்கள், நம் சடையப்ப முதலியாரைப் போன்ற செல்வரையும் வள்ளலையும் வேறு எந்த நாட்டிலே பார்க்க முடியும்?”

“சடையப்ப வள்ளல் நல்ல கலையுணர்ச்சி உள்ளவர். தமிழுக்கு அடிமையாகி விடுபவர். கலைத் திறமை உள்ளவர்களைக் கண்டால் அன்னையினும் அன்புவைத்துப் பாதுகாப்பவர். ஒரு மாதத்துக்கு முன் அவருடைய கலையுணர்வையும் செல்வப் பெருமையையும் தெரிவிக்கும் செய்தி ஒன்று நிகழ்ந்தது. அது மன்னர்பிரான் திருச்செவியை எட்டியிருக்கக்கூடும்” என்றார் வேளாளராகிய அமைச்சர் ஒருவர்.

“என்ன அது?” என்று ஆர்வத்தோடு வினவினன் வேந்தன்.

“வடநாட்டிலிருந்து அருமையான துகில் ஒன்று கொணர்ந்தான், ஒரு வணிகன். அது மிக மெல்லிய தாய் அருமையான பூவேலைப்பாடு உடையதாய் இருந்தது. சரிகையால் கரையிருந்தால் உறுத்து மென்று பட்டாலே பூத்தொழில் செய்திருந்தான். பல காலம் முயன்று நெய்த அதைத் தக்க விலக்கு விற்க வேண்டுமென்று எண்ணின அவன், தமிழ் நாட்டில் விலைபோகும் என்று வந்தானாம்.”

அரசன் இடைமறித்து, “அவன் நம்மிடம் வர வில்லையே!” என்றான்.

“சடையப்ப வள்ளலைப் பற்றிக் கேள்வியுறாவிட்டால், ஒருகால் இங்கே வந்திருக்கக் கூடும். ஆனால் அவன் அப்பெரியாரிடம் சென்றதனால் சோழநாட்டின் பெருமை எங்கும் பரவ இடம் உண்டாயிற்று” என்றார் அமைசசர்.

“நீங்கள் சொல்வது விளங்கவில்லையே!” என்று கேட்டான் சோழ மன்னன்.

“இந்த ஆடையை விலை கொடுத்து வாங்குவார் உலகத்திலே சிலர்தாம் இருக்கக்கூடும். பல நாடுகளில் திரிந்து ஒருவரையும் காணாமல் இங்கே வந்தேன். இதை நெய்ய மேற்கொண்ட உழைப்புக்கு மேலே, விற்பதற்காகத் திரியும் சிரமம் அதிகம்” என்று கூறிக்கொண்டு வந்த அந்த வணிகனேச் சடையப்பரிடம் சிலர் அழைத்துச் சென்றார்களாம். அவர் அந்தத் துகிலைப் பார்த்ததும் அதன் வேலைப் பாட்டை உணர்ந்துகொண்டார். அந்தக் கலைஞனைப் புகழ்ந்தார். அவன் கேட்பதற்கு மேற்பட்டே பொன் தந்தாராம்”.

“இப்போது அந்தக் கலைஞன் எங்கே?”

“ருசி கண்ட பூனை உறியை எட்டி எட்டித் தாவும் என்பதுபோல இன்னும் சிரமப்பட்டு இத்தகைய ஆடைகளை நெய்து, தமிழ் நாட்டில் விலைப்படுத்தலாம் என்று எண்ணிப் போயிருப்பான்”.

“சோழ நாட்டின் பெருமையை அவன் மற்ற நாட்டில் போய்ச் சொல்லுவான் என்றது. இதனால்தானா?”

“அதுமட்டும் அல்ல; சோழ நாட்டில் உள்ள ஒரு குடிமகனாரே இதற்கு விலை கொடுத்தாரென்ருல், அத்தகைய பலர் வாழும் சோழ நாட்டுக்கு அரசராக வீற்றிருப்பவர் எத்தனை செல்வராக இருப்பாரென்று அவன் வியப்புற்றானாம்.”

அரசன் புன்னகை பூத்தான். பிறகு, “அந்தத் துகிலை நாமும் பார்க்க விரும்புகிறோம். சடையப்ப முதலியாரை வருவித்து அளவளாவும் ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கும்’ என்ருன். அரசன் குறிப்பை அறிந்த அமைச்சர் சடையப்ப வள்ளலுக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர் துடையில் ஒரு சிலந்தி உண்டாகி அதனால் எங்கும் செல்ல முடியாமல் இருந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சோழ மன்னனுக்கு, அந்த நுண்துகிலைப் பார்க்கும் ஆர்வமும், முதலியார் விரைவிலே குணமடைய வேண்டும் என்ற விருப்பமும் அதிகம் ஆயின.

முதலியாருடைய சிலந்தி ஓரளவு குணமாயிற்று. அரசன் அழைத்தபோதே செல்லவேண்டும் என்ற மனவேகம் அவருக்கு இருந்தது. ஆனல் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல நடக்கலாம் என்ற தைரியம் வந்தவுடன், அரசவைக்கு வருவதாகச் சொல்லி அனுப்பினர். அரசனும் பிறரும் அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

வழக்கப்படி தக்க கையுறைகளோடு சடையப்ப வள்ளலார் அரசனது அவைக்களத்தில் புகுந்தார். அரசன் அன்பு ததும்ப, “வாருங்கள் வாருங்கள். உடம்பு எப்படி இருக்கிறது? இங்கே அமருங்கள்” என்று உபசரித்தான். வள்ளல் மன்னனுக்கு அருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உடம்பு முழுவதையும் பார்த்தான் அரசன். பின்பு அவர் உடுத்திருந்த துகிலைப் பார்த்தான். பெருவிலை கொடுத்து வாங்கிய அற்புதமான ஆடைதான் அது. மிக மிக மெல்லியதாக இருந்தது. உடம்பு தெரியும்படி இருந்தாலும், சில சில இடங்களில் பூ வேலை செய்து கவசம் இட்டாற்போல அமைந்திருந்தது. அதையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த மன்னனிடம், “அவ்வளவு கூர்மையாக மன்னர்பிரான் எளியேனைப் பார்ப்பது என்னைக் கூசச் செய்கிறது” என்றார் முதலியார்.

“இந்த ஆடையின் வரலாற்றைக் கேட்டோம். சிலந்தி வலை பின்னியது போல் இருக்கும் இது, உண்மையிலே சிறந்த துகில்தான். உங்கள் துடையில் சிலந்தி வந்ததாமே, சிலந்தியிருந்த இடத்தில் சிலந்தி நூல் போன்ற இது இருப்பது பொருத்தமாக இருக்கிறது. நல்ல வேளை சிலந்தி போய்விட்டதல்லவா?” அமைச்சர் அரசனது சாதுரியத்தை அறிந்து மனத்துள் வியந்தனர்.

“சிலந்தியின் தொல்லை இன்னும் சிறிது இருக்கிறது” என்றார் முதலியார்.

“அடடா, அப்படியானால் ஏன் அவசரப்பட்டு இங்கே வரவேண்டும்? உங்கள் மேனிக்குத் துன்பம் உண்டாக்கும் அந்தச் சிலந்தியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் துடையில் அல்லவா இருக்கிறது?”

“என் தாய் கூறுவது போலல்லவா அரசர் பெருமான் அன்புரை இருக்கிறது? இத்தனை உள்ளன்புடையார் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை.”

அமைச்சர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திடுக்கிட்டார்கள்.

“மன்னர் பிரானுடைய பார்வைபட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் புண்ணும் ஆறிப்போகும்’ என்றார் முதலியார்.

மன்னனுக்கே, ஏன் இப்படிச் சொன்னோம் என்ற சங்கடம் உட்டாகிவிட்டது.

‘அரசர்பிரான் திருவுள்ளப்படியே அந்தப் புண்ணைக் கண்ணால் குளிர்ந்து பார்த்துப் போக்கட்டும்.”

இவ்வாறு சொன்ன முதலியார் உடனே துடையில் சிலந்தி இருந்த பக்கக்கைச் சிறிதளவு கிழித்தார். இரண்டு கைகளாலும் துகிலைப் பற்றி அந்தத் துவாரத்தின் வழியே, ஆறிவரும் புண் தெரியும்படிச் செய்தார். மன்னனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. புண்ணைக் கண்டல்ல. அத்தனை பொன் கொடுத்து வாங்கிய ஆடையை, மிகவும் அலட்சியமாகக் கிழித்துவிட்டதைக் கண்டு திடுக்கிட்டான். அமைச்சரும் பிறரும் ஒரே ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“என்ன, இதைக் கிழித்துவிட்டீர்களே!: என்றான் அரசன்.

“ஏன், மன்னர்பிரானுடைய தாயன்பு தழுவிய பார்வைக்கு இது எம்மாத்திரம்?”.

“இவ்வளவு அருமையான வேலைப்பாடுடைய இது வீணுயிற்றே!” என்று இரங்கினான் சோழ வேந்தன்.

“இதைப்போல் ஆயிரம் வாங்கலாம்; மன்னர் பிரானுடைய அன்பை வாங்க முடியுமா?” என்றார் முதலியார்.

இந்த நிகழ்ச்சியை,

உள்ளற் கரிய துடையாடை கீறிய தொன்றுமொரு
வள்ளல் தகைமையொ டொத்துளதால்

என்று தொண்டை மண்டல சதகமும்,

தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை

என்று திருக்கை வழக்கமும் பாராட்டுகின்றன.

– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.

இலக்கிய ஆதாரங்கள்

தொண்டை மண்டல சதகத்தில் உள்ள 13-ஆம் பாட்டு இவ் வரலாற்றுக்கு ஆதாரம். பாட்டு முழுவதும் பின்வருமாறு :

தெள்ளத் தெளிந்தவர் செய்தக்க
தோர் முறை செய்யிலையா
எள்ளத் தனைமலை யத்தனை
யாம் என்பதின்றறிந்தோம்
உள்ளற் கரிய துடையர்டை
கீறிய தொன்றுமொரு
வள்ளல் தகைமையொ டொத்துள
தால்தொண்டை மண்டலமே.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *