கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 181 
 
 

புலமை வாழ்க்கை, கற்றறிந்தவர்கள் கைகொடுத்து உதவி புகழும் பெருமையும் செய்யும் இன்பம் நிறைந்ததுதான். ஆனால் அத்தகைய கற்றவர்களோ, அறிந்தவர்களோ, கவிதையை உணர்ந்து பாராட்டுபவர்களோ இல்லாதபோது அது பாலை வனத்தில் மல்லிகைப் பதியனாய்ப் பாழ்பட்டுப் போவது ஒரு தலை. தன் படைப்புக்களையும் சொல் நயத்தையும் அதியற்புத மனோபாவப் பிணிப்புக்களையும் தானே சுவைப்பது, படைத்த சில விநாடிகள் மட்டும்தான் கவிஞனுக்கு இயலும். அந்தச் சில விநாடிகளுக்கு அப்பால் அவற்றைப் போற்றிப் புகழ்ந்து பேண இரசிகன் என்ற பெயரில் இரண்டாவது மனிதன் ஒருவன் தேவை. அப்படிப் போற்றிப் பேணி ஆதரிக்கும் இரசிகன் ஒருவன் கிடையாதபோதுதான் இராமச்சந்திர கவிராயருக்கு எல்லாம் ஒரே சூனியமாகத் தோன்றியது. மனிதர்களின் கலை உணர்ச்சியைப் பற்றியே சந்தேகமாகிவிட்டது அவருக்கு மனத்தளர்ச்சி சாதாரண மனிதனைக் காட்டிலும் நுண்ணுணர்வு மிக்க கவிஞர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களைப் பூரணமாகத் தன்னில் ஆழ்த்திக் கொண்டு விடுகிறது. இந்த நியதி வரம்பிற்கு இராமச்சந்திர கவிராயர் மட்டும் விதி விலக்கா என்ன?

நாள் முழுவதும் தாம் பாடிய அரிய பாடல்களுடன் பல வள்ளல்களிடம் அலைந்து அலைந்து கால்கடுத்துவிட்டது. தங்கள் உள்ளத்தைப் போலவே வீட்டுத் தலைவாயிலின் நிலைப் படியையும் குறுகலாகவே வைத்திருந்த இரண்டோர் வீடுகளில் வாசல் நிலையில் முட்டிக் கொள்ளவும் நேர்ந்தது. ‘ரஸனைக்குக் கூட வஞ்சகமா? என் பாட்டு நன்றாக இருக்கிறது என்று உணருகிறார்கள். பாராட்ட வேண்டுமென்று ஆசைப்படு கிறார்கள். ஆனால் துணிவில்லை! மனச்சாட்சிக்கு வஞ்சனை புரியும் இவர்களை வஞ்சகர்கள் என்றால் தவறென்ன?’

சிந்தனை வேகத்துடன் போட்டியிடுவது போல நடந்து கொண்டிருந்தார் கவிராயர். எதிரே பிரம்மாண்டமான கோபுரத்துடன் ‘பெண்ணொருபாகனார் திருக்கோயில் தென் பட்டது. அதன் மகாமண்டபத்துக் குறட்டில் தலையில் கையை வைத்தவாறு உட்கார்ந்து கொண்டார் கவிராயர். தாம் பாடிய பாடல்களை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருந்தது அவருக்கு! சுவடியை அவிழ்த்தார். முதலிலிருந்து இறுதிவரை நன்றாகப் படித்தார். இரண்டாவது மனிதன் அவற்றைப் படித்தால் எவ்வளவில் ஈடுபாடு கொள்ள முடியும் என்று எண்ணிப் பார்த்தார். அதிலுள்ள செஞ்சொற்களும் சீரிய பொருள் நயமும் அவனைக் கவரத் தவறமாட்டா என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இந்த எண்ணம் ஒரு நொடிதான் நிலைத்தது. மறு நொடி ‘ஏதோ உதவாத வெற்றுரை போலும்! அதனால்தான் கவனிப்பாரில்லை’ என்று எண்ணினார். இவ்வாறு உணர்ச்சிவசப்பட்ட தீர்மானங்களுடன் போராடிப் போராடி அவர் மனம் புண்பட்டுப் போனது. மன அமைதியை நாடிப் பெண்ணொருபாகனார் கோவிலக்குள் சென்றார். கோவிலின் மூலத் தானத்தை அடைந்ததும் பெருமானைப் பாட வேண்டுமென்று கூறியது அவரது உள்ளுணர்வு. தன் துயரை அவனாவது அறியட்டுமே என்பதுதான் அவர் எண்ணமோ என்னவோ! பாடுகிறார்,

“வஞ்சகர்பால் நடந்திளைத்த காலிற் புண்ணும்
வாசல்தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சிற் புண்ணும்
தீருமென்றே சங்கரன் பாற்சேர்ந்தே னப்பா!”

கவிராயர் பாட்டை இன்னும் முடிக்கவில்லை. அதற்குள் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றிச் சுவரில் எழுதி யிருந்த சில சித்திரங்கள் அவருடைய கண்ணில்படுகின்றன. ஒன்று – பிட்டுக்கு மண் சுமந்த இறைவன் பிரம்படிபடுவதைச் சித்திரித்தது. மற்றொன்று, கண்ணப்பன் ஒரு காலால் பெருமானை உதைத்துக் கொண்டு அவருக்குக் கண்ணளிக்கும் காட்சியை விளக்கியது. இன்னொன்றில், அருச்சுனன் கைலாயத்தில் இறைவனை அவன் வேடனுருவாக வந்தபோது வில்லால் அடிப்பதைக் காட்டியது.

“இங்கும் அந்தத் துன்பம்தானா?” எனக் கூறிக் கொண்டே கவிராயர் பாட்டைத் தொடர்ந்தார்,

“கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப்
பஞ்சவரில் அன்றொருவன் வில்லாலடித்த புண்ணும்
பாரென்றே காட்டி நின்றான் பரமன்றானோ!”

பாட்டு முடிந்தது. பெண்ணொரு பாகனாரிடம் தன் துன்பத்தை முறையிட வந்தார் இராமச்சந்திர கவி. அவரோ தம் துன்பத்தைக் கவிராயரிடம் காட்டாமல் காட்டி முறையிட்டுவிட்டார்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *