(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று வந்திருந்த மடல் இது:
அவசரம் ஒரு முக்கிய வேண்டுகோள், உடனடியாக பீ பாசிட்டிவ் வகை ரத்தம் தானம் செய்யுங்கள், கதிர்வேல் என்னும் ஒரு நண்பருக்கு மிக அவசரமாக அறுவை சிகிச்சை செய்யத் தேவையாய் உள்ளது, இப்படிக்கு ரமேஷ் .
அந்தச் செய்தியைப் படித்துப் பார்த்த ராகவன் அந்த மடலில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு நான் ரத்தம் தரத் தயார் உடனடியாக மருத்துவமனைக்கு வருகிறேன். கவலைப்படாதீர்கள் என்று ரமேஷிடம் சொல்லிவிட்டு தன் டொயோட்டா கொரொலாவை உயிர்ப்பித்தான். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. இதோ மருத்துவமனை வந்தாயிற்று.
வாசலிலேயே காத்திருந்த ரமேஷ் வாங்க ரொம்ப நன்றி என்றான்
நன்றியெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். சீக்கிரம் வாருங்கள். ரத்தம் அளிக்க நான் தயார் என்றான். ஒரு நர்ஸ் வாங்க மிஸ்டர் ராகவன். இங்கே வந்து இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள் என்றாள்.
ராகவன் அந்தப் படுக்கையில் படுத்தபடி நர்சிடம் ஆமாம் மிஸ்டர் கதிர்வேலுக்கு என்ன வியாதி என்றான். நர்ஸ் சார் அவருக்கு வியாதி எதுவுமில்லே. இன்னிக்கு நடந்த ஒரு விபத்திலே அவருக்கு முதுகிலே அடிபட்டு, அதிக ரத்தம் இழப்பு. ஆகவேதான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாகணும். நிச்சயமாய் அவருக்கு ரத்தம் தேவைப்படும் என்றாள்.
ஆமாம் அவசரத்துலே அவர் பேரை மறந்துட்டேன். அவர் பேரு என்ன என்றான் ராகவன்.மிஸ்டர் கதிர்வேல். தொலைக்காட்சித் தொடர்லே எல்லாம் நடிப்பாரே, அவரேதான் என்றாள். சுருக்கென்றது ராகவனுக்கு நர்ஸ் ஊசியைச் செலுத்திவிட்டாளா, இல்லையே ஓ கதிர்வேல் அவனா ராகவனின் முதல் எதிரி கதிர்வேல். ராகவனின் ஒரே தங்கை ரேகாவைக் காதலித்து, ஏமாற்றிவிட்டு அவள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவன். ‘எதையுமே பாசிட்டிவா எடுத்துக்கணும் ரேகா. இதெல்லாம் வாழ்க்கையிலே ரொம்ப சகஜம். மனசுக்கு பிடிக்காம ஒண்ணா சேந்து வாழ முடியுமா? உன்னை ரொம்ப பிடிச்சுது அப்போ. இப்போ உன்னை எனக்குப் பிடிக்கலை’ அப்பிடீன்னு சொல்லிட்டு, வேற ஒரு பெண்ணைக் கைப்பிடித்தவன்.
அவனா அவனுக்கா ரத்தம் கொடுக்கப் போகிறோம் இல்லை முடியாது ரத்தம் கொடுக்க முடியாது என்று திமிறி எழுந்தான் ராகவன். நர்ஸ் ஓடி வந்தாள். “சார், என்ன சார் ஆச்சு” என்றாள். இல்லே, நான் ரத்தம் குடுக்க முடியாது. இந்தக் கதிர்வேல் என் தங்கையின் சாவுக்குக் காரணமானவன். அவனுக்கு நான் ரத்தம் கொடுக்க முடியாது என்றான்.
சார், உங்க தங்கையோட வாழ்க்கையக் கெடுத்தவர் இந்த கதிர்வேலா இருக்கலாம். இவரோட தப்புக்கு இவருக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இவருக்கு வாழ்க்கைப்பட்ட வேற ஒரு அப்பாவிப் பொண்ணு என்ன சார் தப்பு செஞ்சாங்க. அவங்களும் உங்க தங்கை மாதிரிதானே என்றாள் என்றாள் நர்ஸ். பொட்டில் அறைந்தாற் போல் ஒரு உணர்வு ராகவனுக்கு. அதிர்ந்தான்.
உங்க ரத்தம் மாதிரியே நீங்களும் Be Positiveஆ இருங்க என்றாள் நர்ஸ். அந்த நர்ஸின் உருவத்தில் தன் தங்கை ரேகாவையே கண்ட ராகவன், புதிய தெளிவுடன் பீ பாசிட்டிவ் என்னும் சொல்லையே வந்தே மாதரம் என்று முழங்குவது போன்ற பாணியில் கையை உயர்த்தி முழங்கிவிட்டு, ரத்தம் கொடுக்கப் படுக்கையில் படுத்தான். அங்கே மானுடம் எழுந்து நின்று மரியாதை செய்தது.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.