A, B, C அல்லது D

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 11,221 
 
சற்றே அகலமான ரிப்பனைப்போல் நீண்டிருந்த அந்தக் காகிதத்தில், மொத்தம் இருநூறு சிறு வட்டங்கள் இருந்தன. இடது ஓரத்தில், ஒன்றில் தொடங்கி ஐம்பதுவரை வரிசையாக எண்கள் அடுக்கியிருக்க, ஒவ்வொரு எண்ணுக்கும் எதிரே, நான்கு வட்டங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேனாவால் முழுமையாகத் தீற்றி நிரப்பவேண்டும் என்று புரொ·பஸர் தெளிவாக அறிவித்திருந்தார், ‘சும்மா வெறுமனே டிக் செஞ்சாலோ, பெருக்கல் குறி போட்டாலோ மார்க் கிடையாது, எந்த ஆன்ஸர் சரின்னு நினைக்கறீங்களோ, அந்த வட்டத்தை க்ளியரா ஷேட் செய்யணும். அப்போதான் எக்ஸாம் எழுதற டிஸிப்ளீன் வரும்’

பேராசிரியர்கள் எல்லோருமே, ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுகிறார்கள். வாக்கியக் கட்டமைப்புகளைத் தமிழில் வைத்துக்கொண்டு, அங்கங்கே ஆங்கில வார்த்தைகளை இட்டு நிரப்பினால்தான் அவர்களுக்குச் சரிப்படுகிறது.

ஆனால், அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே படித்தாகவேண்டிய எஞ்சினியரிங் பாடங்களையெல்லாம், தமிழைத்தவிர வேறு பாஷையில் பேசியறியாத பையன்களுக்குச் சொல்லித்தருவதென்றால், இப்படி ஏதாவது நூதன வழிமுறைகளைக் கண்டுபிடித்தால்தான் உண்டு. இல்லையென்றால், வகுப்பறையில் நடத்தப்படுவது நமக்குரிய பாடம்தானா என்றுகூட நிச்சயமாகத் தெரியாதவர்களாக எல்லோரும் திருதிருவென்று விழித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிப்பதில்லை.
மூன்றாவது வரிசையில் ஓரமாக அமர்ந்திருந்த கலைவாணன், ஒரு ரகசியப் பெருமூச்சுடன் தனது மேஜை மேலிருந்த கேள்வித் தாளை இன்னொரு முறை வெறித்துப் பார்த்தான். அடுத்த ஒன்றரை மணி நேரமும், விரல் சொடுக்கும் நேரத்தில் ஓடி மறைந்துவிடாதா என்றிருந்தது அவனுக்கு.

பால் வெள்ளைக் காகிதத்தில் கொசகொசவென்று எறும்புகள் மொய்த்ததுபோல் வரிசையாகக் கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள், அவற்றில் சரியான விடையைக் கண்டறிந்து, அதற்குரிய வட்டத்தைத் தீற்றி நிரப்பவேண்டும். இதைவிட சுலபமான தேர்வு முறை இருக்கவேமுடியாது.

ஆனால், அந்தச் சுலபத்துக்குள்தான், எல்லாக் கஷ்டமும் ஒளிந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் கலைவாணன். ஒவ்வொரு கேள்விக்கும், சரியான பதிலைக் கொடுத்துவிட்டு, ஆனால் அதைச் சட்டென்று கண்டுபிடித்துவிடமுடியாதபடி, சுற்றிலும் தவறான பதில்களை நிரப்பிவிடுவது கொடூரமான அநீதியாகத் தோன்றியது அவனுக்கு.

இப்படி மொத்தம் ஐம்பது அநீதிகளைச் செய்துவிட்டு, அந்தக் களைப்பில் சாய்ந்து அமர்ந்திருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். ஒரு கோணத்தில் பார்க்கிறபோது, அவர் அசந்து தூங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அதேசமயம், எங்கேனும் பேச்சுக் குரலோ, கிசுகிசுப்புச் சத்தமோ கேட்டால், சட்டென்று பொங்கியெழுந்து தண்டித்துவிடுவதுபோலவும் தென்பட்டார்.

கலைவாணன் அவரை வெறுப்போடு பார்த்தான். அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவ, மாணவிகள் எல்லோருமே, அதே அளவு வெறுப்புடன்தான் புரொ·பஸரை இப்போது சபித்துக்கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக எண்ணினான் அவன்.

ஆனால், எல்லாச் சாபங்களும் பலித்துவிடுவதில்லை. கட்டாயமாக பலிக்கும் சாபங்களை வழங்கவேண்டுமானால், நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கவேண்டும். ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால், அப்புறம் யாரையும் சபிக்கத் தோன்றாது.

கலைவாணன் மீண்டும் தனது கேள்வித் தாளை பஸ்பமாக்கிவிடுவதுபோல் பார்த்தான். உலகத்தில் நல்லவர்களையும், கெட்டவர்களையும் ஒன்றாகச் சேர்த்து வாழவைக்கும் கடவுள்போல், அந்தக் கேள்வித் தாளில் சரியான விடைகளையும், தவறான விடைகளையும் கலந்து கட்டி நிரப்பியிருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். இந்தக் குவியலிலிருந்து, சரியான விடைகளைமட்டும் பொறுக்கியெடுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பெயர், பரீட்சை. த்தூ !

‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே’, கிறிஸ்துவப் பாதிரியார்போல் கனவில் பேசினார் பத்மனாபன். அவர் கையில் ஒரு சிறிய மரத் துண்டு இருந்தது. அதை வெகு தூரத்தில் வீசி எறிந்துவிட்டு, ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி, அம்பது பூ பூத்ததாம்’, என்று பெண் குரலில் ராகமிழுத்துப் பாடினார் அவர்.

கண்களை மூடியபடி, தலையை பலமாக உலுக்கிக்கொண்டான் கலைவாணன். கனவு உடைந்து, ஐம்பது பூக்களும் திசைக்கொன்றாகச் சிதறி விழுந்தன. ஒவ்வொரு பூவிலும் நான்கு இதழ்கள். அவை ஒவ்வொன்றும், சிறு வட்டங்களாகி, அவனுடைய விடைத்தாளில் நிறைந்திருக்க, இப்போது எதில் எந்த வண்ணத்தைத் தீற்றி நிரப்புவது ?
பேனா நுனியைக் கொறித்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான் அவன். கல்லூரி அரங்கத்தை ஒட்டினாற்போலிருந்த ஒரு மரத்தில், பழுப்பும், பச்சையுமாக இலைகள் கலைந்து நிரம்பியிருப்பதை அசுவாரஸ்யமாக வெறித்தவாறு, புரொ·பஸர் மாதாந்திரத் தேர்வை அறிவித்த அந்த வெள்ளிக்கிழமையை நினைத்துக்கொண்டான் கலைவாணன்.

இந்த விஷயத்தில் அவரைக் குற்றம் சொல்லவேமுடியாது. மற்ற ஆசிரியர்களைப்போல் திடுதிப்பென்று நினைத்துக்கொண்டாற்போல் பரீட்சை வைக்காமல், ஒரு வாரம் முன்பாகவே, தேர்வுக்கான தேதி, எந்தெந்தப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், அந்த ஒரு வாரத் தவணைதான் பிரச்சனையாகிவிட்டது. காலண்டர் மறந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், அவர் கொடுத்த ஏழு நாள்களும் விருட்டென்று தரையைப் பிளந்துகொண்டு எங்கோ மூழ்கி மறைந்துவிட்டன. மாதாந்திரத் தேர்வுதானே என்கிற அலட்சியத்தில், இன்னும் நாள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், பரீட்சைக்கு முந்தின நாள்கூட ராத்திரிமுழுதும் உட்கார்ந்து படித்துவிடலாம் என்கிற தைரியத்தில், ‘நாளைக்கு’, ‘நாளைக்கு’ என்று தள்ளிப்போட்டு, இறுதியில், அந்தக் கடைசி ராத்திரி வந்தபோது, மறுநாள் தேர்வு என்கிற விஷயமே அவனுக்கு நினைவில்லை.

இன்றைக்கு வகுப்பில் நுழைந்தபோதுகூட அவனுக்கு இந்தத் தேர்வைப்பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. ஆனால், பெண்கள் எல்லோரும் ஆளுக்கொரு புத்தகத்துடனோ, அல்லது, வகுப்புக் குறிப்புகளை ஜெராக்ஸ் செய்த காகிதங்களுடனோ நிலையற்று அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான், கொஞ்சம் சந்தேகப்பட்டு விசாரித்தான், ‘சும்மா ஜோக் அடிக்காதீங்க கலை, இன்னிக்கு மன்த்லி டெஸ்ட், உங்களுக்குத் தெரியாதா ?’, என்று புருவம் சுருக்கிச் சொன்னாள் ஜெனி·பர்.

அந்த அதிர்ச்சியை அவன் முழுவதுமாக ஜீரணிப்பதற்குள், புரொ·பஸர் வந்துவிட்டார். விறுவிறுவென்று வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வினியோகிக்கப்பட்டன. எல்லோரும் கொஞ்சம் தள்ளித்தள்ளி அமர்ந்துகொண்டு, தேர்வு தொடங்கிவிட்டது.
தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கிற எல்லோரையும் வெறுப்போடு முறைத்தான் கலைவாணன். முக்கியமாக, இந்த ஹாஸ்டல் பையன்கள். நேற்று மாலைமுழுக்க அங்கேயேதானே சுற்றிக்கொண்டிருந்தேன், யாராவது ஒரு பயல் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியிருக்கக்கூடாதா ?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான், ஹாஸ்டல் வாழ்க்கையின் சகல சௌகர்யங்களையும் மீறி, அதன்மீது ஒரு வெறுப்பு விழுந்துவிடுகிறது. பள்ளிக்கூடத்தில் படித்தபோது, இப்படி ஒரு பரீட்சையை மறந்திருப்பானா கலைவாணன் ? அவனே மறந்தாலும், அப்பாவும், அம்மாவுமாக, ஒரு முறைக்கு இருபது முறையாவது ஞாபகப்படுத்தி ‘எல்லாப் பாடமும் படிச்சு முடிச்சாச்சா ?’, என்று நச்சரித்துத் துளைத்திருப்பார்களே.

அப்போதெல்லாம், அவர்கள்மீது கோபம்தான் வந்தது. பெற்ற பிள்ளையை நம்பாமல், இப்படி விசாரணைக் கைதியைத் தோண்டித் துருவுவதுபோல் தொந்தரவு செய்கிறார்களே என்று பலமுறை மனதுக்குள் புலம்பியிருக்கிறான். ஆனால், அந்தத் தோண்டல்களும், துருவல்களும் இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று இப்போதுதான் ஓரளவு புரிகிறது.

சிவந்த கண்களை அழுந்தத் தேய்த்துக்கொண்டான் கலைவாணன். வாட்சைப் பார்த்தபோது, இன்னும் ஒரு மணி நேரத்துக்குமேல் மீதமிருந்தது.

இப்போது இந்தத் தேர்வில் தோற்றுவிட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தான் அவன். மாதாந்திரத் தேர்வுகளில் ·பெயில் ஆவதொன்றும் கிரிமினல் குற்றமில்லை. ஆகவே, பெரிதாக எதுவும் நடந்துவிடாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
ஆனாலும், இதில் சில மறைமுகப் பிரச்சனைகள் ஒளிந்திருக்கின்றன. நிறைய மார்க் எடுக்கிற பையன்களைதான் ஆசிரியர்களுக்குப் பிடிக்கும். ஆகவே, இந்தத் தேர்வில் சொதப்பியபிறகு, புரொ·பஸர் பத்மனாபனின் பார்வையில், கலைவாணன் ஒரு மக்குப் பையன் என்று தீர்மானமாகிவிடுகிற சாத்தியங்கள் உண்டு. அவர்தான் இந்தத் துறையின் தலைமைப் பேராசிரியர் என்பதால், அவருடைய இந்த எண்ணம் மற்ற ஆசிரியர்களின்மீதும் படியக்கூடும். எல்லோருமாகச் சேர்ந்து, அவனைக் கல்லூரியிலிருந்து தள்ளிவைத்துவிடுவார்களோ என்னவோ.

தனது அதீத கற்பனையை எண்ணி மெல்லச் சிரித்துக்கொண்டான் கலைவாணன். ஒரு மாதாந்திரப் பரீட்சையைச் சரியாக எழுதவில்லை என்பதற்காக, தன்னுடைய எதிர்காலமே இருண்டுபோய்விடப்போவதில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. என்றாலும், மனதின் ஒரு மூலையிலிருந்த குற்றவுணர்ச்சி, அவனை அலைக்கழித்துக்கொண்டுதானிருந்தது.
கை விரல்களைக் கோர்த்து, முன்னே நீட்டி சொடக்கெடுத்தபடி, சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் கலைவாணன். அவனைத்தவிர மற்ற எல்லோரும் மும்முரமாகப் படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருந்தார்கள். ஒரு தலைகூட நிமிர்ந்திருக்கவில்லை.

மீண்டும் ஒருமுறை தனது கேள்வித் தாளைப் புரட்டினான் அவன். பெரும்பாலான கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றின. ஆனால், அந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறோம் என்பதுபோல் ஒரு மெலிதான நினைவு, கிணற்றினுள்ளிருந்து கத்துகிற பூனைக்குட்டியின் கீச்சுக் குரல்போல் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்தக் கேள்விகளுக்கான பதில்கள், மேலும் குழப்பமூட்டின. ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C, D என்று இலக்கமிட்டு நான்கு பதில்கள் தரப்பட்டிருந்தன. ஆனால், புரிந்த கேள்விகளின் பதில்கள் புரியாமலும், புரியாத கேள்விகளின் பதில்கள் நான்குமே புரிவதுபோலும் தோன்றியது. எல்லாக் கேள்விகளுக்குமே, நான்கு சரியான பதில்கள் இருப்பதாகத் தோன்றியது கலைவாணனுக்கு.

இதற்குமுன் எந்தப் பரீட்சையும் கலைவாணனுக்கு இத்தனை சிரமமாக இருந்ததில்லை. பள்ளி நாள்களில், தினந்தோறும் மாலையில் அன்றன்றைய பாடங்களைப் படித்துவிடுகிற பழக்கம். ஆகவே, தேர்வு சமயங்களில் எல்லாப் பாடங்களையும் வேகமாக ஏழெட்டுமுறை புரட்டிவிட்டாலே போதும்.

என்றாலும், கலைவாணனைப் பொறுத்தவரை, தேர்வுக்குரிய பாடங்கள் ஒவ்வொன்றிலும், எந்த ஒரு தலைப்பையும் விட்டுவைக்காமல் படித்தாகவேண்டும். இல்லையென்றால் அவனுக்குத் திருப்தியே இருக்காது. சில சமயங்களில், சக நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறபோது, அவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்து கேள்வி கேட்கச் சொல்வது, மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது என்று பலவிதங்களில் தனது தயார்த்தன்மையைச் சோதித்துப்பார்த்துக்கொள்வான்.

அதேபோல், ஒவ்வொரு தேர்வுக்குமுன்பும், பேனா முனையில் ததும்புமளவு இங்க் ஊற்றிக்கொள்வான். ஒருவேளை அந்தப் பேனா மக்கர் செய்துவிடுமோ என்கிற பயத்தில், இன்னொரு உபரி பேனாவும், பென்சில், ரப்பர், ஸ்கேல், காம்பஸ் வகையறாக்களும் ஜாமின்ட்ரி பாக்ஸில் கட்டாயமாக இருக்கும். பரீட்சை எழுதிமுடித்தபின், தாள்களைக் கோர்த்துக் கட்டுவதற்கான நூலைக்கூட கையோடு கொண்டுசென்றுவிடுகிறவன் அவன்.

கல்லூரிக்கு வந்தபின், அந்த கவனமெல்லாம் அவசியமற்றதாகிவிட்டது. தினசரி இங்க் ஊற்றி, பழுது பார்த்து, அக்கறையாகப் பராமரிக்கவேண்டிய தடிமன் பேனாக்களை மறந்து, உபயோகம் தீருமுன்பே வீசியெறிய நேர்ந்துவிடுகிற மெலிந்த பிளாஸ்டிக் பேனாக்களுக்கு மாறியதில் தொடங்கி, முன்பிருந்த எல்லா ஒழுங்கும் தடம்புரண்டுவிட்டது.

முதலாண்டு ஆரம்பத்தில், ராக்கிங் பிரச்சனைகளுக்கு பயந்து, எப்போதும் ஹாஸ்டலில் ஒளிந்திருந்தபோதுகூட, ஓரளவு ஒழுங்காகப் படிக்கமுடிந்தது. ஆனால், அதன்பிறகு நண்பர்களோடு வெளியே சுற்றத்தொடங்கியதிலிருந்து, ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை. தினசரிப் படிப்பெல்லாம் அதீதமான பழக்கம் என்று தோன்றிவிட்டது. தேர்வுக்குச் சில நாள்கள்முன்பு, முழுமூச்சாக உட்கார்ந்து படித்தாலே நல்ல மார்க் வாங்கிவிடலாம் என்று ஓரிரு அனுபவங்களிலேயே தெரிந்துகொண்டுவிட்டான் கலைவாணன்.

அது ஒரு அனுபவம் என்றால், இன்றைக்கு நேர்ந்திருப்பது வேறொரு அனுபவம். பங்குச் சந்தையில் லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள், பிறிதொரு நாளில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல, முற்றிலும் சிநேகிதமற்ற ஒரு கேள்வித் தாளைக் கையில் வைத்துக்கொண்டு திகைப்போடு அமர்ந்திருக்கவேண்டியதாகிவிட்டது. ஆவேசமான பெரிய போர்க்களத்தில், ஆடைகளற்று நிர்வாணியாக நிற்கிறவன்போல் தன்னை உணர்ந்தான் கலைவாணன்.

அவனைச் சுற்றி அமர்ந்திருந்த எல்லோருமே, மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களும் ஒழுங்காகப் படித்தார்களா, இல்லை, குத்துமதிப்பாக ஏதோ விடைகளைத் தீற்றுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், கேள்விகளைப் படித்து பதில் எழுதுகிற தைரியமாவது அவர்களுக்கு இருக்கிறது.

கலைவாணன் மறுபடி தனது கேள்வித் தாளை நிச்சயமில்லாமல் புரட்டினான். உச்சிமுதல் பாதம்வரை விறுவிறுவென்று பார்வையை ஓட்டியதில், ஐம்பது கேள்விகளில், மொத்தம் மூன்று கேள்விகளுக்குமட்டும் அவனுக்கு பதில் தெரிந்திருப்பதாகத் தோன்றியது.

அந்த மூன்று கேள்விகளுக்குமட்டும் சரியான பதிலைத் தீற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடலாமா என்று யோசித்தான் கலைவாணன். இப்போதைய நிலைமையில், வேறு எந்த வழியும் அவனுக்குத் தென்படவில்லை. என்றாலும், அப்படிச் செய்வதில் ரிஸ்க் அதிகம். ஒன்றரை மணி நேரப் பரீட்சையை, முப்பத்தைந்து நிமிடங்களில் முடித்துவிட்டுப் போகிறவனை, எந்த புரொ·பஸரும் வியந்து, மதிக்கப்போவதில்லை. போதாக்குறைக்கு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அவனுடைய விடைத் தாளின் வெறுமையைப் புரட்டிப் பார்த்து, மனதுக்குள் திட்டிக்கொண்டிருப்பார்கள். அந்த எரிச்சலில், பூஜ்ஜியத்துக்குக் குறைவாக மார்க் சுழித்துவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே, படுகுழியில் விழுவதானாலும், கொஞ்சம் கௌரவத்தோடு விழுவதுதான் நல்லது என்று முடிவுகட்டிக்கொண்டான் அவன். எப்படியாவது ஒன்றரை மணி நேரத்தை இங்கேயேதான் கழித்தாகவேண்டும். அதன்பிறகு, எல்லோரோடும் சேர்ந்து விடைத்தாளைச் சமர்ப்பிக்கும்போது, அவன் ஐம்பது கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறானா, இல்லையா என்று புரொ·பஸர் கவனிக்கப்போவதில்லை.

ஆனால், இப்போது மிச்சமிருக்கிற நாற்பத்தேழு கேள்விகளையும் என்னதான் செய்வது ?

மறுபடி யோசனையில் விழுந்துவிட்ட கலைவாணனுக்கு, முந்தைய நாள் இரவுதான் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. விடுதியின் டி. வி. அறையில், உருப்படாத ஹிந்திப் படமொன்றை நண்பர்களோடு சேர்ந்து கிண்டல், கேலியுடன் ரசித்த நேரத்தில், கொஞ்சமாவது படித்திருக்கலாம்.

நேற்று அவனோடு படம் பார்த்தவர்கள் யாரும், இப்போது இந்த அறையில் இல்லை என்று கசப்புடன் நினைத்துக்கொண்டான் கலைவாணன். அவர்களெல்லாம் வேறு வகுப்பு. A, B, C அல்லது D என்ற நான்கில் ஒன்றைக் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்கிற அவசியம் அவர்களுக்கு இன்றைக்கு இல்லை.

நட்ட நடு ராத்திரியில், புரியாத பாஷைப் படம் பார்க்காமல், பொறுப்போடு உட்கார்ந்து படித்தவர்களெல்லாம், இப்போது குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென்று பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்க தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கலைவாணனுக்குத் தெரியவில்லை. இப்படி நினைக்கும்போதே, அவனுடைய தலையில் யாரோ ஏழெட்டு வட்டங்களை வரைந்து, அவற்றின் நடுமத்தியில் அம்பு எய்வதுபோல் ஒரு கற்பனை தொனித்தது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கலைவாணன், நேராக நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய கேள்வித்தாளில், அவனுக்கு விடை தெரிந்திருந்த அந்த மூன்று கேள்விகள்மட்டும், தனியே ஜொலிப்பதுபோல் தோன்றியது. இத்தனை அவமானகரமான சூழ்நிலையிலும், அந்த மூன்று கேள்விகள்மட்டும் தன்னைக் கைவிடாதது எப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.

அடுத்த பல நிமிடங்களுக்கு, அந்தக் கேள்விகளையே நன்றியுடன் வெறித்துப் பார்த்தவண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் கலைவாணன். அந்த மூன்று மதிப்பெண்களுக்குத் தான் எந்த விதத்திலும் தகுதியுள்ளவனில்லை என்று தோன்றியது அவனுக்கு.
அன்றைய தேர்வு முடிவடைவதற்கான அடையாளமாக, ஒரு நீண்ட அலாரம் ஒலித்தது. தூக்கத்திலிருந்து கலைக்கப்பட்டவர்போல் திடீரென்று விழித்தெழுந்த புரொ·பஸர், அவசரமாக எல்லோருடைய விடைத் தாள்களையும் சேகரிக்கத் தொடங்கினார். அவரிடம் தருவதற்காக கலைவாணன் தனது வெற்று விடைத் தாளை மடித்தபோது, அதிலிருந்த இருநூறு வெள்ளை வட்டங்களும் அவனைப் பார்த்து அகலச் சிரித்தன.

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *