76ல் ஒரு விடுமுறை நாளில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 154 
 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோப்பி குடித்து விட்டு வெளியே வந்து காசு கொடுத்துக் கொண்டிருக்கும் போது யோகன் சொன்னான்: “பார்த்தீரா. இதுதான் நான் சொன்னது”. 

கடை முகப்பிலிருந்து ஸ்பீக்கர், பிரபலமான ஒரு சிங்கள பொப் பாடலைக் காதடைக்கப் பாடிக்கொண்ருந்தது. கஷியரின் மேசையருகில் சுழன்று கொண்டிருந்தது ரேப். 

கடந்த பயணம் யாழ்ப்பாணம் வந்திருந்த போது. சசி கூட இதை அவதானித்திருந்தான். 

சுவீப் ரிக்கற் வான்களும் விளம்பரச் சேவை ஒலி பெருக்கியுமாய், கடைக்குக் கடை அலறுகிற பாட்டுக்களோடு சேர்ந்து, தெருவால் கார் பஸ் அடிக்கிற ஹோண் சப்தங்களைக் கூடக் காதில் விழாமற் பண்ணிக் கொண்டிருக்கிற அதே பட்டணந்தான். ஆனால்- 

“…இப்ப அநேகமான கடைகளில் இப்பிடித்தான்” என்றான் யோகன், மீண்டும். 

“ஒரு ஃபஷன் போலை? ” சசி சிரித்தபடி மூன்று பீடா வாங்கினான். 

சைக்கிள்களை எடுத்து உருட்டிக் கொண்டு, தெருவைக் கடந்ததும், 

“ஏன், அதிலை என்ன பிழை?” என்று கேட்டான் ஸ்ரீநிவாசன் 

“வெறுமனை ஒரு பாட்டைப் போட்டு ரசிக்கிற சங்கதி மட்டுமில்லை இது. ஸ்ரீநி..வேற சில விஷயங்களையும் யோசிக்க வேண்டியிருக்கு” 

“நீங்கள் மாத்திரம் வெள்ளவத்தையிலை எல்லாம் செய்யலாம். என்ன?” 

ஸ்ரீநியின் இந்தக் கேள்வியும் அதன் வேகமும் சசிக்குச் சிரிப்பை மூட்டின. 

“இந்த வெங்காயக் கேள்வியை நீரும் கேளாதேயும்!….” 

“அதையும் இதையும் ஒப்பிடவும் ஏலாது…! சும்மா கொச்சைத்தனமா எல்லாத்துக்கும் வெள்ளவத்தையை உதாரணத்துக்கு இழுக்காதையுங்கோ….” 

“இதெல்லாம் எங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிற விஷயங்களாயிருக்கலாம்-!” 

“அப்படியில்லை. ஸ்ரீநி… நீர் சொல்லுற நல்லுறவுக்கும் ஒற்றுமைக்கும் நாங்கள் எதிரில்லை. ஆனா, அந்த நல்லுறவு எண்டதும் ஒருவழிப்பாதை இல்லை..!… இண்டைய நிலையிலை எங்கட பரந்த மனப்பான்மை. விட்டுக் கொடுக்கிற போக்கு. நல்லுறவைக் காட்ட நாங்கள் எடுக்கிற முயற்சி இதுகளெல்லாம் எங்கட பலவீனமெண்டுதான் எடுத்துக் கொள்ளப்படுகுது… ஆனபடியா, இப்படிச் சின்ன விஷயங்களிலை கூட – அது தற்செயலோ, என்னவோ இனி நாங்கள் கொஞ்சம் கவனமா நடக்கிறதுதான் நல்லது போலிருக்கு….” 

ஸ்ரீநிவாசன் பதில் சொல்லவில்லை. பேசாமல் நடந்தார்கள். திஸ்ஸ பேக்கரியைத் தாண்டும் போது அந்தப் பாட்டுக் காதில் விழுந்தது. பேக்கரி -ஷோ கேஸின் மேலிருந்த ரேடியோவிலிருந்து வந்த பாட்டு,

“டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா 
கொவிரால கொடட்ட அல்லா” 

கேட்டு எத்தனை நாட்கள்! சசி அப்படியே ஒருகணம் நின்றான். 

இந்தப் பாட்டு இப்படித்தான் – அடிக்கடி கேட்க முடிகிறதில்லை. எப்போதாவது இருந்துவிட்டு காதில் விழுகிறது. அப்படி விழுவதுதான் நல்லதென்றும் தோன்றுகிறது – அலுத்துப் போகாமல். 

இதைக் கேட்கிற போதெல்லாம் அவனுக்குப் பச்சைப் புல் வாசனை நினைவுக்கு வருகிறது. எட்டு வருஷங்களுக்கு முன்னால். ஒரு மாணவனாக இருந்தபோது. முதற் தடவையாக இந்தப் பாட்டை அவன் கேட்டான். அப்போதிருந்தே இதைக் கேட்க நேரிடுகிற அந்த எதிர்பாராத சந்தர்ப்பங்கள் எல்லாம் மகிழ்ச்சியைத் தந்நிருக்கின்றன. 

பச்சைப்புல் வாசனை மட்டுமல்லாமல், கட்டு பெத்தையின் கபூக்தரை. காட்டுச் சூரியகாந்திச் செடிகள். மெஷறிங்ரேப் தியோடலைற் தசாநாயக்கவின் வெள்ளைத் தொப்பி-எல்லாங் கூட ஞாபகத்திற்கு வருகின்றன… இன்னும் அந்த டிக்கிரி மெனிக்கா. கமக்காரர்கள் எல்லாம் எப்படி இருப்பார்களென்ற கற்பனை… 

‘-டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா…’ 

எவ்வித துள்ளாட்டமுமின்றி, மொஹிதீன் பேக்கின் குரலில். அமைதியாகக் கம்பீரமாக அந்தப் பாடல் வருகிறது மனதை வருடிக் கொடுப்பது போல. 

மென்காற்றில் அலை தவழும் நெற்கதிர்களின் அமைதி இளந்தூற்றல் வெறும் மேலில் தழுவுகிற பரவசம். 

இந்த மூன்று நிமிஷத்தை அவன் இழக்கக் கூடாது.

“மச்சான். இதிலை கொஞ்சம் நிண்டிட்டுப் போவம்..” என்றான் சசி. 

– கிருஷ்ணன் தூது தொகுதியில் இடம் பெற்றது 1982

– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *