70எம்எம்ல ரீல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,379 
 
 

படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது.

முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு?

குமார் சார் தான். இப்பல்லாம் வித்தியாசமான படம் னாலே அவரோட டேரக்சன் தானே.

கடந்த பத்து வருசமா சினிமா இண்டஸ்ட்ரியையே கலக்கிட்டிருக்காறு .

புதுப் படம் ரிலீசான முதல் நாளே பார்த்த சந்தோஷத்தில் பொது சனங்கள் அளவளாவிக் கொண்டே அந்த பிரபல தியேட்டரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் சின்னத் திரை சீரியலுக்கு கதை எழுதும் சசியும் அவரின் நண்பன் ரவியும் இருந்தனர்.

அதென்னமோ நல்ல சினிமான்னா டேரக்டரத்தான் புகழராங்க. எங்கள மாதிரி கதாசிரியர்கள் தான் சினிமாக்கு உயிர் கொடுக்கறோம். எவ்வளவு தான் செலவழிச்சு விதவிதமான இடத்துல ஷூட்டிங் எடுத்தாலும் கதை சப்பயா போரடிக்கற மாதிரி இருந்தா படம் ஓடாது தெரியுமா.

எதுக்கு இப்போ சலிச்சிக்குற சசி. நீ தான் விறுவிறுப்பான சீரியல் கதை எழுத்தாளர் னு பெயர் வாங்கிட்டயே. உன்னுடைய பேட்டி தங்கை மாதப் பத்திரிகை ல வந்தப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா. என்னோட ஆபிஸ் நண்பர்கள்கிட்ட எல்லாம் சொல்லி பெருமை பட்டுகிட்டேன். ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவுசிறப்பா பதில் சொல்லியிருந்த. உன்னோட முருங்க மர நிழலில் ஒரு கிராமம் சீரியல் கதை ஒரு புரட்சியாமே. சவுதியிலிருந்து ஒருமாத லீவுக்கு வந்திருக்கும் நண்பன் ரவியைப் பரிதாபமாகப் பார்த்தான் சசி.

நீ என்னோட சின்னவயசு நண்பன்கறது னால நான் உங்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடறேன். நம்ம ரெண்டுபேரும் கருப்பண்ணசாமி கொயில் திருவிழா, கொட சமயத்துல சாமியாடிய பாத்துருக்கோம் இல்ல. அப்ப அவரு குறி சொல்லறத நம்ம ஊரு மக்கள் எவ்வளவு பய பக்தியோட கேப்பாங்க.

அது போல நம்ம ஊருல பணம் உள்ளவங்க கூட தங்களோட வேண்டுதல நிறைவேத்த வீடு வீடா போய் மடிப்பிச்ச அரிசி வாங்கி சமைச்சு சாப்பிட்டு ஒரு மண்டலம் விரதமிருந்து முருகனுக்கு காவடி எடுப்பாங்களே.

அதெல்லாம் அந்தக் காலம் அதுக்கென்ன இப்போ. நீ சீரியல் கதைய எப்டி வித்தியாசமா எழுத ஆரம்பிச்ச அத சொல்லு முதல்ல,

நண்பன் ரவி இடை மறித்தான்.

அதாம்பா அந்த மாதிரி நம்ப முன்னால பாத்த, கடை பிடிச்ச கிராம கலாச்சாரமெல்லாம் இப்போ பாதி பேருக்கு தெரியரதில்ல. பெரும்பாலான சீரியல் கதைகளில் கிராம வாழ்க்கைய காண்பிச்சாலும் அத நேரடியா குடும்பக் கதையா எடுக்கறாங்க.

நானும் அதையே தான் எழுதரேன் இருந்தாலும் என் கதைகளில் அளவுக்கு அதிகமா கற்பனை இருக்கும். மேலும் கதையோட தலைப்பும் வித்தியாசமா எல்லாரும் யோசிக்கறமாதிரி இருக்கறது னால மக்கள்கிட்ட வரவேற்பு..

உதாரணத்துக்கு ஹிட் ஆன ‘முருங்க மர நிழலில் ஒரு கிராமம்’ சீரியல் தொலைக் காட்சியில் காண்பிக்க ஆரம்பிக்குமுன் அவ்வளவு எதிர்பார்ப்பு.

அதோட இன்ட்ரொடக்சன் பாட்டே ஆர்வத்த தூண்டற மாதிரி.

முருங்க மரத்துக்குக் கீழே எங்க

முத்தான வாழ்வு. அங்க

சாபத்துக்கும் சந்தனத்துக்கும் சம்பந்தம் உண்டடா

சந்தேகமிருந்தால் சனிக்கிழமை பாரடா .

அதெப்படி முருங்க மரத்துக்கு கீழ ஒரு கிராமமே இருக்க முடியும் னு.

சரி சரி கதைய சொல்லு ரவியின் எதிர்பார்ப்பு அதிகமானது,

கதையில நாலு அக்கா தங்கை கூட வசிக்கும் ஒரு இளைஞன் படிச்சு வேல பாத்து தன் குடும்பத்த காப்பாத்தின பின்ன எப்படி அந்த ஊரு பண்ணையாரு பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாருங்கறது தான்.

அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் எறும்பு அளவு சின்னதாக இருந்ததால மொத்த கிராமமும் முருங்கமரத்துக்கு கீழ இருக்க முடிந்தது. அதுக்குக் காரணம் ஒரு சாபம் தான். அந்தக் கிராமத்துப் பண்ணையாரோட தாத்தா முருங்க மரத்தடில வாழ்ந்த ஒரு சாமியாடி கட்டெறும்ப கொன்னதால அந்த எறும்பு எல்லாரையும் தன்னைய விட சின்னதாக ஆகுமாறு சபிச்சிருச்சு. .

ஒரு வருஷம் ஓடிச்சு அந்த சீரியல். அது முடிஞ்சவுடனே அதிக வரவேற்ப பாத்து அந்த சீரியலோட இரண்டாம் பாகம் பண்ணினோம்.

இரண்டாம் பாகமா. என்னப்பா இது. சின்னப்புள்ளத்தனமா ஒரு கதை சொல்லிட்டு அதுக்கு இரண்டாம் பாகம் வேறயா. ஆச்சர்யம் ரவிக்கு.

இரண்டாம் பாகத்தில் எறும்பு சைஸ் ல இருந்த அந்த ஊர்ப் பண்ணையார் தன் மக்கள கூட்டிக்கிட்டு அந்த இளைஞன் (ஹீரோ) உதவியோட காவடி எடுத்து போகிற வழியில இருந்த இடையூறுகளெல்லாம் சந்தித்து முருகர் சன்னதியை அடைந்து எப்படி சாப விமோசனம் பெற்றார் என்பதுதான்.

ரவி ஆரம்பித்தான். உனக்கு ஞாபகம் இருக்கா. உன்ன தமிழ் ஆசிரியர் எப்படி திட்டுவார்னு . பரீட்சைல எல்லாரும் கேள்விக்கு பதில் தான் எழுதுவாங்க. ஆனா நீ விடைத்தாள் ல செய்யுளுக்கான விளக்கவுரையக் கூட கதை மாதிரி இட்டுக்கட்டி 70எம்எம் ல ரீல் சுத்தி எழுதுவியே. உன்னோட குறளுக்கான இரண்டு பக்க விளக்கத்த பாத்து, தம்பி பாத்து.. திருவள்ளுவருக்கே தல சுத்தப் போகுது னு சொல்வாரே.

இப்பவும் அதே பழக்கம் தான். மாறவே இல்ல நீ.

70 எம் எம் ல கத உடரதயே வாழ்க்கையா அமைச்சிக்கிட்ட.

எனி வே. வாழ்த்துக்கள். சிரித்துக் கொண்டே விடை பெற்றான் நண்பன் ரவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *