கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,329 
 

‘‘நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்.. நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு காத்திருக்கும் போதுதான் அந்த பஸ் வரவே வராது.. இல்லனா எதிர்த்த மாதிரியே போகும். இல்ல ஈ போக முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கும்..

காலைல எவ்வளவு சீக்கிரத்தில வந்தாலும் எல்லா பஸ்லயும் கூட்டம் நிரம்பி வழியுது.. என்ன செய்யட்டும் ..நானும் சீக்கிரம் வந்து பஸ் ஏறலாம்னு நினைச்சா கூட குளிச்சு கிழிச்சு கிளம்ப எட்டு மணியாயிடுது..

இதோட ஆபிஸ் மூணு இடத்துக்கு மாறிடுச்சு.. அப்பவும் ஒரே பஸ் தான். வடபழனில இருந்து அந்த நூறடி ரோட்டுல போலீஸ் ஸ்டேசனுக்கு எதித்த மாதிரி நின்னா வடபழனி டெப்போல இருந்து 5E வரும். பெசன்ட் நகர் வரைக்கும் போகும்.. முதல்ல ஆபீஸ் சைதாபேட்டைல இருந்துச்சு.. அப்பவும் 5E தான்.. அதுக்கப்புறம் பெசன்ட்நகர்க்கு ஆபிஸ் மாறுச்சு.. இப்ப அடையாருல. அதனால பஸும் மாறல.. டைமும் மாறல.. இப்ப இன்னும் கொஞ்சம் சீக்கிரமா போக வேண்டியிருக்கு.. அதுவும் ட்ராபிக்ல நின்னு நின்னு போறதுக்கு பஸ் பின்னால டிக்கெட் எடுக்காம நடந்தே போகலாம்னு தோணும்… ஆபிஸ்ல ட்ராபிக்னு சொல்லி தப்பிக்க முடியாது..அதான் சென்னைல ட்ராபிக் அதிகம்னு தெரியுமே.. முன்னமே கிளம்பிவர வேண்டியதுதானே அப்டின்னு சொல்வாங்க.. சில நேரங்கள்ல அப்டியே சீக்கிரம் கிளம்பினாலும் அப்பவும் மாட்டிக்குவோம்.. ட்ராபிக்ல..

அதுமட்டுமில்ல நீங்க டூவீலர்ல வச்சிருக்குற ஒரு எழுத்தாளராவோ, கவிஞராவோ இருந்தா ஒவ்வொரு சிக்னலா நிக்கும் போதும் மொபைல்ல இல்ல நோட்பேட்ல எழுத ஆரம்பிச்சா ஒரு வருஷத்துல ஒரு நாவலே வெளியிட்டுடலாம்.. அந்தளவுக்கு டிராபிக்.. அதுவும் கோயம்பேடு சிக்னல் கேக்கவே வேணாம்.. அரைமணி நேரம் ஒருமணி நேரம்லாம் சர்வ சாதரணமாதான் இருக்கும்..

உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா? சென்னைல இருக்குறவங்களுக்கு தெரியும். சென்னைல வந்து பஸ்ல போகாம இருந்துருந்தா மத்த ஊர்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்காது .

சென்னைல முழுக்க கவர்மென்ட் பஸ்தான்.. தனியார் பஸ் கிடையாது.. அப்டி சொல்லிக்கலாமேயொழிய ஒவ்வொரு பஸ்லயும் ஒவ்வொரு டிக்கெட் ..வைட் போடுனா.. அதுக்கு தனி டிக்கெட் .. இன்னொன்னு டோர் உள்ள பஸ்.. அதுக்கு தனி டிக்கெட்.. இன்னொரு பஸ் இருக்கு.. சொல்ல மறந்துட்டனே ஏசி பஸும் இருக்கு..அதுலெல்லாம் நம்மள மாதிரி ஆட்கள் ஒரு நாள் டிக்கெட் எடுத்து போறதுக்கு மத்த பஸ்ல போன அஞ்சு நாளைக்கு போயிட்டு திரும்பிடலாம் அவ்வளவு காஸ்ட்லி..

பஸ்ல ஏறுனா இன்னொரு தொல்லை இருக்குங்க.. நீங்க முன்னால நின்னாலும் சரி..பின்னால நின்னாலும் சரி.. உட்கந்திருந்தாலும் சரி..நின்னாலும் சரி.. நீங்க இன்னொருத்தருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தே ஆகணும்.. ஒருதடவை எடுத்துக் கொடுத்தா என்ன கொறஞ்சிடுவோம்னு சொல்றீங்களா? ஒருதடவை ரெண்டு தடவை கிடையாதுங்க.. பஸ் ஒவ்வொரு ஸ்டாப்ல நின்னு கிளம்பும் போதெல்லாம்தான்.. நீங்க ஒரே டைம்ல ரெண்டு வேலை பாக்குற மாதிரி.. உங்க ஸ்டாப் வந்தவுடனே இறங்கி போற பயணியும் நீங்கதான்.. அதுவரை பஸ்குள்ள கண்டக்டரும் நீங்கதான்… டிக்கெட் வாங்கி கொடுத்து மீதி சில்லரை வாங்கி கொடுக்குறதுக்குள்ள உங்களுக்கு வேர்த்து கொட்டிடும்..

சரி.. கண்டக்டர் என்ன பண்ணுவாருனு தான கேக்குறிங்க.. அவர் நின்ன இடத்த விட்டு.. இல்ல.. இல்ல அவர் பின் கதவோரத்துல உக்காந்திருக்க சீட்ட விட்டு எந்திரிக்க மாட்டாரு.. அவர சொல்லி குத்தமில்லீங்க.. உள்ள காலாற நடக்கவா இடம் இருக்கு. மூச்சு கூட அடுத்தவன் மேல தான் விட வேண்டியிருக்கு.. அந்தளவுக்கு கூட்ட நெரிசல்.. இதுல சில பேர் பண்ற அலும்பு இருக்கே சொல்லவே முடியாது.. இப்படி தான் தினமும் ஒவ்வொரு பொண்ணும் என்னை போலவே போறாங்க வலிகளோட வேலைக்கு..

சரி.. நான் போக வேண்டிய 5E வந்திடுச்சு.. வரட்டுமா?’’

மூன்று மாதத்திற்குப் பிறகு வடபழனி சிக்னலில்..

‘‘அப்பாடா பைக் வந்துடுச்சு. இனி செம ஜாலிதான். நினைச்ச நேரத்துக்கு எங்கே வேணாலும் போகலாம். பஸ்க்கு காத்திருந்து நேரத்த வீணாக்க வேணாம். நேரடியா எந்த இடத்துக்குப் போகனுமோ அந்த இடத்துக்கே போகலாம். பஸ்னா குறிப்பிட்ட இடத்துல இறங்க வேண்டியிருக்கும். ட்ரெஸ்ஸ அயர்ன் செஞ்சுப் போட்டாலும் பஸ்ல கசங்கிப் போயிடும். இப்ப பைக்ல போறதால கசங்காது. இரவு தாமதமா வீட்டுக்குத் திரும்ப வேண்டியிருந்தாலும் இனி கவலையில்லை. என்ன.. சிக்னல்லதான் ரொம்ப நேரம் நிக்க வேண்டியிருக்கு. சரி.. சிக்னல் போட்டாச்சு.. கிளம்புறேன்.. அப்புறம் பார்க்கலாம்.

ஆறு மாதத்திற்குப் பிறகு வடபழனி டெப்போவில் ஒரு நாள்..

‘‘நல்ல வேளை..5E நிக்குது. கூட்டமே இல்ல. இப்பதான் வந்திருக்கும் போல. எப்படியும் பஸ் கிளம்ப 10 நிமிஷம் ஆகும்னு நினைக்கிறேன். ஒரு வாரத்துக்கு முன்னால வரை பைக்ல போய்ட்டிருந்தேன். சென்னைல செல்ஃப் ட்ரைவிங் பண்றது சாதனையான விஷயம். என்னோட மேலதிகாரி ‘சென்னைல பைக்ல போறவங்க முன்னாலயோ, பின்னாலயோ இடி வாங்காம போக முடியாது. ஆனா மேஜர் ஆக்ஸிடென்ட் நடக்காது. அவ்வளவு ட்ராஃபிக்’ அப்டினு சொல்வாரு. அது உண்மைதான்னு பைக் எடுத்த முதல் நாளே புரிஞ்சுக்கிட்டேன்.

(பைக் ஓட்டுன அனுபவத்த பத்தி தனிப் புத்தகமே எழுதுற அளவுக்கு விஷயம் இருக்கு.. அது தனி சப்ஜெக்ட்)

போன வாரம் ஒரு மேஜர் ஆக்ஸிடன்ட்.. மயிரிழையில் உயிர் தப்பிட்டேன். வீட்டில் அப்பா, தம்பி, தங்கை எல்லாரும் சொல்லிட்டாங்க. ‘இனி பைக் எடுக்காதே’னு.. அவனும் கூட ‘ஒரு ரெண்டு மாசத்துக்காவது பஸ்லயே போமா’னு சொல்லிட்டான். சரினு இன்னைக்கு பஸ்ல கிளம்பிட்டேன். பஸ்ல கூட்டம் ஏற ஆரம்பிச்சுடுச்சு. வடபழனி நூறடி ரோட்டுல மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்குறதால லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னல்ல இடது பக்கம் திரும்ப முடியாதுனு போர்டு வச்சுட்டாங்க. அதனால பஸ் இப்ப இன்னும் சுத்திப் போகுது. வடபழனி முருகன் கோவில் வழியா போய் லெஃப்ட் எடுத்து லக்ஷ்மன் ஸ்ருதி வழியா நேரா போகுது.

அப்பா என்ன ஆச்சர்யம் கன்டக்டர் எந்திரிச்சு வந்து டிக்கெட் கொடுக்குறாரு..

‘அடையாறு ஒன்னு’

‘பதினொரூவா’

போகப் போக கூட்டம் வந்துடும் அதனால அவரால வர முடியாது. முதல் ஸ்டாப்ல ஏறுனா கன்டக்டரே டிக்கெட் கொடுத்துடுவாரு. அடுத்தடுத்துனா முதல்ல சொன்ன மாதிரிதான். நாம எடுத்துக் கொடுக்கனும்.

நல்லவேளை நான் முதல் வாசல் பக்கத்துல இருக்குற ஜன்னலோர சீட்டுல உக்காந்திருக்கேன். அதனால மத்தவங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுக்குற வேலை இல்லை. பஸ்ல போகும் போது படிக்க புத்தகமும் வச்சிருக்கேன். ஏன்னா பஸ்ல போக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகும். அதனால என்ன? படிக்கிற நேரமா அதை மாத்திக்கலாம். அது போரடிச்சா எஃப்.எம் கேட்டுக் கிட்டே போகலாம். பைக்ல போகும் போது ஃபோன் வந்தா பேச முடியாது. இப்ப பேசலாம். நிறைய வேடிக்கைப் பாத்துட்டே போகலாம். க்ளவுஸ், ஹெல்மெட், ஸ்கார்ஃப் இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஏதும் தேவை இல்லை. தாகமெடுத்தா தண்ணி குடிச்சுக்கலாம். ரொம்ப முக்கியமான விஷயம். பைக்ல போகும் போது ஏதாவது ஒரு தலைப்போ, வார்த்தையோ, கவிதையோ நினைவுக்கு வந்தா உடனே நோட் பண்ணாததால மறந்து போயிடும். அதனால நிறைய கவிதை காத்துல காணாம போயிருக்கு. இப்ப அப்டி இல்லை. ஏதாவது நினைவுக்கு வந்தவுடனேயே குறிச்சுக்குவேன். இப்ப எனக்கு ஒரு கதைக்கான கரு கிடைச்சுருக்கு. அத குறிச்சுக்கணும். அப்புறம் உங்களோட பேசுறேன்.

என்ன.. கதைத் தலைப்பு என்னனு கேக்குறீங்களா?

‘5E’

Print Friendly, PDF & Email

1 thought on “5E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *