55 வார்த்தைகள் கொண்ட சிறுகதை பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 8,857 
 
 

குழதைகளின் அறிவுரை

அது ஒரு மழைக்காலம். ஜொவென மழை, தெருவோரப் பிள்ளைகளின் குதுக்குலம் ஆடையில்லாமல்.. குடைப் பிடித்துப் போன பெரியவர் சொன்னார்.

“ஏய் பசங்களா… மழையில் நனையாதிங்க சளிப்பிடிக்க போகுது”

“ம்ம்…பிடிக்கட்டும். இந்த மழை இப்ப போனா வராது. உங்க குடையில் பெரிய ஓட்டை இருக்கு அதைப்பார்த்துப் பிடிங்க” என்றதுங்க வாண்டுகள்.

பெரியவர், குழந்தைகளின் பேச்சை ரசித்து, யோசித்தார். இப்போது மழையின் வேகம் அதிகமானது. குடை முன்பைவிட அதிகமாகவே ஒழிகியது. குடையை விலக்கிய பெரியவர், குழந்தைகளுடன் சேர்ந்துக் கொண்டார்.

பொய்க் காதல்

“நான் இத்தனை வருடம் காதலிச்சும், நீ என் காதலை புரிந்துக்கொள்ளல..“

“அப்படி இல்ல சிவா, என் நிலையை நான் உனக்கு எப்படி புரியவைப்பேன்”

“புரிந்தது எல்லாம் போதும் பிரியா, நாளைக்கே நீ என்னுடன் வரனும். நாம் எங்காவது போய், நம் புது வாழ்கையை ஆரம்பிப்போம்”

“…ம்ம் ”

“சரி நாளைக்கு நைட்டு 11 மணிக்கு கார் எடுத்துட்டு வரேன், நீ கிளம்பி இரு” “..ம்ம், சரி ” “ஆ.. சொல்லமறந்துட்டேன், எந்தக் காரணம் கொண்டும் உன் புருசனுக்கு சந்தேகம் வந்துடக்கூடாது”

நடு இரவு பயம்

அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தேன். காரிருள். நிலவின் மங்கின ஒளி. நாய்களின் அழுகுரல். என் மனதில் எப்போதோ இருந்த பேய் பயம், இப்போது வந்தது. யாரோ பின் தொடர்வதாக உணர்ந்தேன். நான் பயந்து ஓடினேன். அது என் பின்னால் தொடர்ந்தே வந்தது. வீடு வந்து விட்டது. உள்ளே செல்ல வேகம் எடுத்தேன், தோளைப் பிடித்து ஏதோ ஒன்று இழுத்தது.

பயத்துடன் திரும்பினேன். வீட்டின் முருங்கை மரக்கிளை, தாழ்ந்திருந்தது. என் நிழலும் என் பின்னால் இருந்தது.

அவசரம்

பச்சை விளக்கு எரிந்துக்கொண்டிருக்கிறது. மஞ்சள் சிக்னல் விழப்போகிறது.

5,4,3,..

வேகமாக வந்துக்கொண்டிருந்த இருசக்கர வாகனம், அதைப்பின் தொடர்ந்து வேகமாக வந்தக் கார். மஞ்சள் தாண்டி சிவப்பு விழுந்துவிட்டது. வலது பக்கம் வந்த கார் மீது பைக் மோதியது. அக்கார்மீது பின்னே வந்த காரும் மோதியது. பெரும் விபத்து. மூன்று உயிர்கள் பிரிந்தது.

“தலைக் கவசம், உயிர் கவசம். சீட் பேல்ட் அனியவும். சாலை விதியை பின்பற்றவும்” என்ற வாசகங்கள் தாங்கிய டிஜிட்டல் திரை, இன்னும் ஒளிர்விட்டுக்கொண்டே இருந்தது.

கவனக் குறைவு

பாலைக் காயிச்சிக் கொண்டிருந்தாள். பால் பொங்கி வழிந்தது. அந்நேரம் பிள்ளைகளின் சண்டை,

“யேய், சும்மா இருங்க..” என்றுச்சொல்லி கேஸ் அடுப்பை அணைத்தாள்.

“நேரம் ஆகிவிட்டது. காலை 5 மணிக்கேல்லாம் எழுந்து சமையல் பார்த்தாகனும். இப்போதே மணி 10 ஆகிவிட்டது” என்று நினைத்துக்கொண்டே படுக்கைக்கு சென்றாள்.

வீட்டின் ஜன்னல், கதவு எல்லாம் சாத்தப்பட்டிருந்தது. ரெகுலேட்டர் முழுவதும் ஆஃப் செய்யாமல் சிறிது மேல் நோக்கியே இருந்தது.

கேஸ் காற்றில் மெல்லக் கலந்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவே அவர்களுக்கு மிக நிசப்தமாக இருந்தது.

மனிதன் மறந்துவிட்டான்.

இளம் ஆட்டுக்குடியை தாயிடம் இருந்து பிரித்து வந்துவிட்டார்கள். அது பால்குடிக்கூட மறக்கவில்லை.

அந்த வீட்டின் நாய், குட்டிகளை ஈன்றது. அக்குட்டிகள் அங்கு ஓடியாடி விளையாடியது. ஆடு சோகமாக இருப்பதைக் கண்டது. அதைப் பார்த்து தன் சிறு குரலால்,

“வ்வ், வ்வ்..” என்று கீச்சிட்டது. அதை மெல்ல நக்கால் வருடியது..

நாய்க்குட்டிகள் செல்ல, பின்னாலே ஆட்டுக்குட்டியும் சென்றது. மடிக்காம்பில் பாலை உறிஞ்சியது. ஆட்டை, நாய் முகர்ந்துப் பார்த்தது.

நன்றிக்கெட்ட மனிதர்களின் பேச்சு, இன்னும் அந்த வீட்டுக்குள் கேட்டுக்கொண்டேதான் இருந்தது.

புத்திசாலியான முட்டாள்

மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தான். தூரத்தில் சாலையின் ஓரம், டிராஃபிக் போலிஸ் கைக்காட்டியது. அவன் நடுங்கியவாரே நிறுத்தினான்.

“தம்பி, என்னை அந்த திருப்பத்துல இறக்கிவிடு“ என்றார் போலிஸ்.

வண்டி சிறிது தூரம் சென்றது. அவன் பயம் தெளிந்தவனாய் சொன்னான்.

“சார் நீங்க கைக்காட்டி நிறுத்த சொன்னதும் நான் பயந்துட்டேன். எங்க நீங்க என்கிட்ட லைசன்ஸ் கேட்பிங்களோ.. என்று நினைச்சுட்டேன்..”

“என்னது, லைசன்ஸு.. இல்லையா… வண்டிய ஓரங்கட்டு” என்றார்.

சிறிது நேரத்தில் போலிஸின் சட்டைப் பாக்கெட் சிறிது கனமானது.

வாத்தியார் மனம்

அந்தப்பள்ளியிலே அவரே கண்டிப்பான வாத்தியார். மாணவர்கள் அவரைப்பார்த்து மிரளுவார்கள். தலைமை ஆசிரியரே அவரிடம் தயங்கியபடிதான் பேசுவார். அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர். அவர் வருகைப்பதிவேட்டின் பொறுப்பாளர்.

அந்த இளம் ஆசிரியை, நேரம் கழித்தே வந்தார். தினமும் அப்படியேத்தான் வருகிறாள். அவர்,

“ஏன் தினமும் நீங்க லேட்டா வரிங்க.. இதெல்லாம் சரிபடாது” என்றார்.

“சார், நாளையிருந்து சீக்கிரம் வந்துடுரேன்” எனறு சொல்லி, ஒரு புன்முறுவல் செய்தாள். அவள் அவரைப்பார்த்துக்கொண்டே சென்றாள்.

இப்போது அவரின் கண்டிப்பு, காற்றில் மெல்லக் கரைந்துக்கொண்டிருந்தது.

சிலைகளால் மனிதன் வாழவில்லை, சாகிறான்.

சிங்கத்தின் கர்ஜனை அவரின் குரல். அந்த மக்களின் தலைவன். இறந்து சிலையாகி நிற்கிறார். அந்தலைவனுக்கு பிற்ந்த நாள், ஊரேங்கும் போஸ்டர். யாரோ சுவற்றில் ஒட்டப்பட்ட அவரின் படத்தில் மாட்டுச்சாணியால் அடித்துவிட்டார்கள்.

ஊரே கலேபரம் ஆகிவிட்டது. துப்பாக்கிச்சுடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தார்கள். அதில் ஐந்துப்பேர் செத்தார்கள். விசாரனை கமிஷன் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அறிக்கைகள் ஒருவர் மாற்றி ஒருவர் விடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது கேட்பாறற்ற அந்த சிலையின் வழுக்கு மண்டையில், வழிந்துக்கொண்டிருந்தது காக்கைகளின் எச்சம். ஆனால் இன்னும் அவரின் கர்ஜனை மட்டும் குறையவில்லை.

பொய்யான சுதந்திரம்

இரு நாட்டு தேசியக் கொடியும் பறக்கின்றது. எல்லையில் சமாதானப்பேச்சு வார்த்தை முடிந்தது. செங்கோட்டையில் சுதந்திர தின உரை வாசிக்கப்படுகிறது. சில நிமிடத்தில் பிரிவினைவாதிகள் சுடுகிறார்கள்.

இராணுவமும் பதறுகிறது. துப்பாக்கிகளின் சத்தமிடையே, அங்கு சில உயிர்கள் பறிக்கபடுகிறது.

இங்கு, “ஆடுவோமே பள்ளிப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்.” என்ற பாடலுக்கு பள்ளிக் குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. அந்த வட்டத்துக்குள்ளே சுற்றி வந்து சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள்.

வானத்தில் தொலைத்தூரப் பறவை, பார்த்துக்கொண்டே சென்றது.

திருந்தியவன்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

“ஏம்பா யாருப்பா.. படியில் நிக்கிறது. மேல ஏறிவா..” என்று நடத்துனரின் மிதமான கண்டிப்பு.

ஒரு நடுத்தர வயதுடையவன் கம்பியை பிடித்துக்கொண்டிருக்க, அவன் பின்னே கைலிக் கட்டிய ஆசாமி, அவன் கைவிரல்கள் நடுத்தர வயதுடையவன் பேன்ட் பாக்கெட் அருகில் இருந்தது.

வண்டி ஓட்டத்திலே இறங்கினான் கைலி ஆசாமி. அவசரமாய் பர்ஸை திறந்துப் பார்த்தவனுக்கு பேரதிற்ச்சி. பணம் இருக்கும் இடத்தில் அடுகுக்கடை ரசீது.

கைலி ஆசாமி, போய்க்கொண்டிருந்த அந்த பேருந்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எறும்புகளின் இரக்கம்

நீண்ட வரிசையில் சென்றுக்கொண்டிருந்த எறும்புகளைப் பார்த்து, கொசு ஏளனமாக சிரித்தது.

“நீங்க செல்லும் தூரத்தை நான் ஒரு நொடியில் கடந்துவிடுவேன்” என்றது. கொசுவின் பேச்சைக்கேட்டு எறும்புகள் பதிலேதும் சொல்லாமல் சென்றது.

கொசுவுக்கு அந்தக் குழந்தையின் இரத்தம், ரொம்ப பிடிக்கும். கொசு, குழந்தையைக் கடிக்க, குழந்தை “வீள்..” என்றுக் கத்தியது. தாயின் கை, கொசுவை ஒரு அழுத்து, அழுத்தி, வீசியேறிந்தது.

அது எறும்புகள் சென்ற பாதையில் போய் விழ்ந்தது. எறும்புகள், தங்கள் தோள்களின் மேல், அக்கொசுவைத் தூக்கிச் சென்றது.

அவன் நினைத்தான்.

அந்த பேருந்து நிலையத்தில் அழகான பெண்ணொருத்தி நின்றுக் கொண்டிருந்தாள். அவன் தினமும் அவளையேத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். இவளுக்கும் அவன் பார்கிறான் என்று நன்றாக தெரியும்.

அன்று அவன், தைரியம் வந்தவனாய், அவள் அருகில் செல்கிறான். மனம் படபடக்கிறது, நா எழவில்லை, தயங்கியவாரே கேட்டான்.

“எக்ஸ்கீயூஸ்மீ, நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க, உங்க பேரு என்ன..?”

“ஆ.. ஏம் பேரு இருக்கட்டும், உங்க பேரு என்னே..?” என இருக்கைகளும் தட்டிவாரே கேட்க..

அவன் திரும்பிப் பார்காமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான்.

கௌருவத்துக்கு வாழும் மக்கள்

“கௌருவமா வாழ்ந்த மனுசம்பா.. யாருக்கும் தொல்லைக் கொடுக்காம செத்துப் போயிட்டான்” என்று இறுதிச்சடங்கிற்கு வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஏலே செத்தது என் பங்காளிலே, சாவ கௌருவமா எடுக்கனும்..” என்று சொல்லிக்கொண்டே அவர், ஆள் உயர மாலையைப் போட்டார்.

வெடிச்சத்தம் காதைப் பிளக்க, பறை அதிர, பிணம் ஊர்வலத்திற்கு ஆயுத்தமானது.

“செத்த, என் பிணத்த வச்சு, இன்னும் என்னடா கௌருவம் பார்கிறீங்க…?” என பிணம் நினைத்திருக்குமோ, என்னமோ..!

பிணத்தின் முகத்தில் இழையோடிய சிரிப்பு, ஆனால் அதை யாரும் கவனிக்க மறந்துவிட்டார்கள்.

ஓர் கற்பனை

அழுக்கேறிய பழைய சட்டையும், பேன்ட்டும் துவைப்பதற்காக, கொக்கியில் தொங்கிக்கொண்டிருந்தது. சட்டையின் நாற்றம் பொறுக்காமல் பேன்ட்,

“ஏய், வேர்வ நாற்றம், தள்ளிப்போ..” என்றது. “உன் மேல ஓரே மூத்திர நாற்றம்” என்று சட்டை சொல்ல..

அந்த வீட்டு பெண்மணி இரண்டையும் வாஷிங் மெஷினில் போட்டாள். பின் உலர்வதற்காக கொடியிலும் போட்டாள்.

அங்கும் அவைகள் அதேச் சண்டைத்தான் போட்டுக்கொண்டிருந்தது. அப்போது வீதியில் ஒரு குரல்,

“பிளாஸ்டிக் சாமானுக்கு பழைய துணிமணி வாங்குரதே…” என்று. பேன்ட்டும், சட்டையும் அக்குரலை உன்னிப்பாக கேட்டது.

ஒரு உண்மைச் சம்பவம்

நாட்டின் பணவீக்கம் அதிகமாகிவிட்டது. பங்குச்சந்தை படும் வீழ்ச்சி. பொருளாதார நிபுணர்களுடன், நீதி அமைச்சர் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு நிபுணர்,

“வங்கிகளின் ரெப்போ வட்டி வீகிதத்தை அதிகப்படுத்தனும் மற்றும் அரசின் செலவினத்தை குறைக்கனும்” என்றார்.

இறுக்கமடைந்த முகத்துடன் இதையேல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அமைச்சர்,

“ஹெலொ” என்றார். எதிர்முனையில் பேசிய பெண்,

“சார் நாங்க டூபாகூர் பேங்கள இருந்து பேசுறோம். உங்களுக்கு பர்சனல் லோன் வேணுங்களா..” என்றாள்.

அமைச்சரின் மூஞ்சி மேலும் இறுக்கமடைந்தது.

பேசினான்; பேசுவான்..

அவன் அந்த இயக்கத்தின் முக்கிய பிரிதிநிதி. அன்று உலக மகளிர் தினம், மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசினான்,

“அன்றோ பாரதியும், பெரியாரும் சொன்னார்கள். அதையே இன்று நான் சொல்கிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் பலத்காரம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை” என்று அவனின் பேச்சில் அனல் பறந்தது.

அவனின் பேச்சு அன்று மாலை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வேலைக்காரி குனிந்து வீட்டைப் பெறுக்கிக்கொண்டிருந்தாள்.

அவன் டிவியை பார்க்கவில்லை.

அதேக் கதை மாறியது

நிலவில் தேவையான ஆக்ஸிஜன், நீர் எல்லாம் உற்பத்திப் பண்ணியாகிவிட்டது. ஒரு தலைமுறை மனிதர்கள் அங்கு வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நிலவில் பஞ்சாங்க தேதி எல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமாவாசை, பௌர்ணமி மட்டும் குறிக்க முடியவில்லை.

நிலவில் குழந்தைகள் சோறு உண்ண மறுக்கிறது.

“என் ராசா, என் கண்ணு.. அதோ பாரு பூமி, அங்க பாரு, நம்ம பாட்டி வடை சுடுறாங்க..” என்று சொல்லி, அம்மாக்கள் பூமிச்சோறு கூட்டிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பூமி செழிமை இழந்து வயதானவர்களின் முதியோர் இல்லமாக மாறிக்கொண்டிருந்தது.

யார் திருடன்.? கண்டுப்பிடிக்கிறது போசிஸ்.

தொலைப்பேசி சத்தம். தூக்க கலைப்புடன் ரைட்டர், “ஹெலொ..” என்றார்.

“சார் எங்க வீட்டுல திருடு போயிடுச்சு.. நாங்க ஒரு கல்யாணத்திற்காக போனோம். பிரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை காணோம்” என்று பதறிக்கொண்டே உரிமையாளர் சொல்ல…

அங்குச் சென்ற காவல்துறை அதிகாரி அறையை நோட்டமிட்டார். அங்கு சிதறிய துணிகளூகிடையே ஒன்று ஜொலித்திருந்தது.

அவர், அத்துணியை விலக்கிப் பார்த்தார். இரண்டு சவரன் மதிப்புள்ள ஒரு செயின் இருந்தது.

(குறிப்பு: அந்த இரண்டு சவரன் செயின் திருடன் கணக்கில் சேர்ந்துக்கொண்டது.)

விதை விதைத்தால் அறுவடை நிச்சயம்.

குழந்தைகளின் சுட்டித்தனம் அதிகமாகவே இருந்தது. அதுவும் வேலுவின் நான்காவது படிக்கும் பையனின் லூட்டி, அவனை மிகவும் எரிச்சலுட்டியது.

சத்தம் அதிகமாகவே, அவன், குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு போய், பிள்ளைகளை அடித்துவிட்டான்.

“இதுப்போல நீ சும்மா எரிச்சல் படுத்திக்கொண்டிருந்திங்க, உன்னை ஹோஸ்டல்ல சேர்த்துடுவேன். வீட்டுக்கே வரமுடியாது” என்று மிரட்டல் தொனியில் சொன்னான்.

அந்தப் பையன், அவன் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டுக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பல வருடங்கள் கழிந்தது. முதியோர்களின் சத்தம் அங்கு அதிகமாக கேட்க, கனத்த மனதுடன் வேலு உட்கார்ந்துக்கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *