45வது வார்டு வேட்பாளர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 6,925 
 
 

மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த மயானம், பராஅத் (புதுக்கணக்கு) அன்று ஒளி மயமாகக் காணப்பட்டது.

புதைகுழிகளில் கிடக்கும் உற்றார் உறவினர்களைப் பார்த்து, நீங்கள் முந்தி விட்டீர்கள், நாளை நாங்களும் உங்களோடு வந்து சேருவோம்’ என்று கண் கசியாமல் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு மயானத்தி லிருந்து திரும்புவார்கள். இனி, அங்கு செல்வது அடுத்த ஆண்டில் இதே பராஅத் இரவில். உருண்டு போன ஓர் ஆண்டிற்குப் பின் மீண்டும் வந்த பராஅத் இரவில் மயானத்திற்குச் சென்று ஆறுதல் வார்த்தையைப் புதுப்பிப்பதற்கான ஒருக்கூட்டல்கள் நடந்தன, பள்ளிவாசல் முற்றத்தில், மாலையில் சன்னதித் தெருவிற்குச் செல்லும்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒருக்கூட்டல்கள் எதற்கென்று முதலில் புரியவில்லை.

பள்ளிவாசலுக்குள் நுழையுமிடத்தில் தொங்கவிடப்பட்ட பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘இன்று பராஅத் இரவு. விசேஷத் தொழுகையும் பயானும் (சொற்பொழிவு) நடைபெறும். பயானுக்குப் பின் கபர் ஜியாரத் {புதைகுழிப் பிரார்த்தனை). கடைசியாக, விசேஷ துஆ (பிரார்த்தனை) நடைபெறும்.’

பிடரியில் வால் தொங்க விட்டுத் தலைப்பாகை கட்டிய மவுலவி மிஸ்வாக் {பல்துலக்கல்) செய்து கொண்டிருந்தார். நெடுநாள்களாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பிய அந்தச் சந்தேகத்தை அவரிடம் அப்போது கேட்டேன்.

‘பராஅத் என்னா , என்னது?’

என்னை ஏற இறங்கப் பார்த்ததிலிருந்து, என்னை ஓர் அறிவிலி என்று அவர் எண்ணியதை அவர் பார்வையைக் கொண்டு அனுமானித்துக் கொண்டேன்.

‘புதுக்கணக்கு.’

‘அப்படீன்னா?’

‘நன்மையும் தின்மையும் கூட்டிக் கழித்து அய்ந்தொகை எடுத்து, அல்லா புதுக்கணக்கு போடுத நாள்’.

‘தின்மை கூடினா?’ நான் கேட்டேன்.

‘நரகம்.’

‘நன்மை கூடினா?’

‘சொர்க்கம்.’

‘சொர்க்கத்துக்குப் போக?’

‘பள்ளிவாசல்ல வந்து இன்னு நடக்குத துஆவில் (பிரார்த்தனையில்) கலந்தா, இன்னு வரை செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். நாளை முதல் அஞ்சு நேரம் தொழுது அமல் (நன்மைகள்) செய்தா சொர்க்கத்துக்குப் போகலாம்’ என்றார் மவுலவி.

வாய் கொப்பளித்து விட்டு டீக்கடைக்கு நேராக நடந்த மவுலவி யுடைய கை விரல்களுக்கிடையில் தஸ்பீஹ்(ஜபமாலை) மணிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

சன்னதித் தெரு ஓரம் பள்ளிவாசல் கட்டட விஸ்தரிப்புப் பணிக்காகக் குவித்துப் போடப்பட்ட ஆற்று மணல் குளிர்ச்சியில் உட்கார்ந்து, நான் செய்த நன்மை தீமைகள் எல்லாவற்றையும் நினைவில் ஓட விட்டு, ஓர் உத்தேச கணக்குக் கூட்டிப் பார்க்கையில், தீமைகள்தான் அதிகமெனப் பட்டது. நினைவில் நீண்டு நீண்டு வந்த பட்டியலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, செய்த நன்மைகள் பால் நினைவைத் திருப்பிய போது, வெகு நேரமெடுத்த நினைவுகூரலுக்குப் பின் செய்த ஒரே ஒரு நன்மை மட்டும் நினைவுக்கு வந்தது. நாகூர் கனிக்கு வயிற்று ஆபரேசனுக் காக ரண்டு வட்டி குறைத்து, எட்டு வட்டிக்குப் பணம் கொடுத்து உதவியது.

அதுனால சாவ வேண்டிய அவன் சாவாம பொளச்சிட்டான்!

இது ஒன்றைத் தவிர வேறு எதுவும் நினைவில் தட்டுப்படவில்லை.

நகரசபைத் தேர்தலில் 45-வது வார்டில் போட்டி போட வேண்டியிருப்பதால், பள்ளிவாசலடியில் தொப்பி விற்பனை செய்யும் பாயிடமிருந்து புதுத் தொப்பி ஒன்று மறு பேச்சில்லாமல் வாங்கித் தலையில் போட்டுக் கொண்டேன். பாய் முகம் பார்க்கத் தந்த கண்ணாடிக்குள் தொப்பி போட்ட என் முகத்திற்கு ஒருதனி அழகு! வேட்பாளரானதால் இன்றைய இரவு துஆவில் கலந்து கொண்டு, இன்றளவு செய்த எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரி, முதலில் குற்ற மீட்சி பெறுவது, வெற்றி வாய்ப்புக்குத் தேவை என்ற முடிவுக்கு வந்தேன். தேர்தலுக்குப் பின் இனி வட்டி வாங்குவதா, கலப்படம் செய்வதா போன்ற அன்றாட வியாபார வளர்ச்சிப் பணிகள் பற்றிய மறு பரிசீலனை.

பனி இற்றிடும் நடுச்சாமத்தில் ஆறுதல் சொல்ல மயானத்திற்குச் செல்லும் போது தாடை எலும்புகள் நடுங்காமலிருக்கவும் மவுலவியின் சொற்பொழிவு கேட்பவருக்கு உறக்கம் வராமல் இருக்கவும் பள்ளிவாசல் முற்றத்தில் அண்டாவில் சுக்கு வெந்நீர் தயாரிப்பதில் மும்முரமானார், சமையல்காரர் சேக்கப்பா. தீமைகள் செய்பவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தண்டனைகள் பற்றியும் நன்மைகள் செய்பவர்கள் அனுபவிக்கக் கூடிய இன்பங்களையும் நல்ல பதவிகளைப் பற்றியும் குர்ஆன் வாசகங் களையும் நபிமொழிகளையும் கூறி மவுலவி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

சுக்கு வெந்நீர் குடிப்பதற்காகவும் பூந்தி வாங்கவும் உறக்கமிழந்து கலபிலாவென்றிருந்த சுட்டித் தலைகளில் ரண்டு போடு போட்டுவிட்டு, ஜமாஅத் (ஊர்) நிர்வாகஸ்தர்களில் ஒருவர் அதட்டி எச்சரித்தார். ‘ஒரு பையனுக்கும் பூந்தி தரமாட்டேன்.’ முரட்டுக் குரல் கேட்டு அரண்டு போன பெட்டைப் பிள்ளைகள் சிறிது நேரம் சலம்பாமல் அடங்கி உட்கார்ந்து கொண்டனர். கப்சிப் என்றான பசங்கள் ஆற்றுமணலில் கரணமடித்தனர். இதற்கு மத்தியில் தொண்டை கிழிய சொற்பொழி வாற்றிக் கொண்டிருந்த மவுலவியின் முன் கொட்டாவி போட்டு உட்கார்ந்திருந்தவர்களின் கண்கள், சுக்கு வெந்நீர் அண்டாவையும் பூந்திப் பெட்டியையும் மொய்த்தன. சுக்கு வெந்நீரும் பூந்தியும் அவர் களுடைய கால்களிலும் கண்களிலும் கட்டுகள் போட்டு அவர்களை அங்கிருந்து எழுந்திருக்கவிடவில்லை.

தலையில் தொப்பியுடன் தூணோடு கட்டப்பட்டவனாகச் சாய்ந்து கொண்டிருந்த என் சிந்தனை, வேறு திசைக்குத் திரும்பியது. மயானப் பிரார்த்தனைக்குப் போகவேண்டுமா, வேண்டாமா? இங்கிருந்து செல்வோரை எதிர்நோக்கி, அங்குப் பலர் பற்பல உணர்ச்சி வேகத்தோடு விழித்துக் கொண்டிருப்பார்கள். கதீஜா, மீராம்மா, அப்துல்லா போன்றோர் நிச்சயமாக. கோபமும் வெறுப்பும் எள்ளலும் எல்லாம் ஒன்றுகூடிக் கூரிய முனையாக உருமாறிக் குத்து ஏறி நெஞ்சு காயப் படுவதற்காக, அவ்வளவு தூரம் நடந்து போக வேண்டுமா என்ற யோசனை ஒரு பக்கம். தேர்தல் நெருங்கிவிட்டதால் மக்கள் தொண்டனாகப் போக வேண்டிய கட்டாயம் வேறு.

ஜீவ உடலிலிருந்து ஆறுதல் கூற வருவோரை எதிர்நோக்கி எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்கும் வாக்குரிமை இழந்த புதைகுழி உலக மக்களோடு பேசுவது எப்படியென்று தெரியாத மனக் குழப்பம். பூமியின் உரப்பான மேல் அடுக்கைக் குத்திச் சுரந்து பேச்சு ஒலி உள்ளே ஒலிக்க, ஏதாவது துவாரங்கள் போடப்பட்டிருக்கலாம். மண்ணும் புழுக்களும் மாமிசங்களைத் தின்றுவிட்டுத் துப்பிய எலும்புகளில் மீண்டும் சதை ஒட்டி, உயிர் பெற்று, கேள்விப் புலனும் அக்னி வார்க்கும் பார்வைப் புலனும் இன்றைய ஓர் இரவுக்காக மட்டும் இரவலாகத் திருப்பிக் கிடைக்கலாம். நெருப்பு வார்க்கும் கொடூரப் பார்வையின் அனல் தாக்கத்தையும், குழந்தைகளின் வளர்ந்த கை நகங்களுடைய பிராண்டலில் பிய்ந்து தொங்கும் சதைகளின் காந்தலையும் தாங்கிக் கொள்வது பற்றிய பயம் எனக்குள் எழுந்தது. துஆ (பிரார்த்தனை) செய்தால், இரக்கமுள்ள இறைவன் ஒருகால் மன்னிக்கக் கூடும். ஆனால் புதையுண்டவர்களுடைய மன்னிப்பைப் பெற முடியுமா? அவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களின் பயங்கரம் அப்படிப்பட்டவை. அவற்றின் அழுத்தத்தில் புதையுண்டு போனவர்கள், தொந்தரவற்ற அந்த உலகத்தில் அமைதியாக நடமாடிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் அவர் களுடைய பார்வையில் படும்படி செல்வது உசிதமாயிருக்குமா என்ற அச்சம் என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.

தூக்கத்தைக் கலைக்க சுக்கு வெந்நீர் பரிமாறப்பட்ட நேரம், பள்ளிவாசல் முன்தளத்தில் குழுமியிருந்தவர்கள் உற்சாகமடைந்தனர், அடுத்துப் பூந்தி நேர்ச்சை வாங்கி விட்டு மெள்ள நழுவ.

‘புதைகுழி பிரார்த்தனைக்குப் பிறகு அபூர்வ துஆவும் அதற்குப் பிறகு பூந்தி நேர்ச்சையும் வழங்கப்படும்’ என்று மைக்கில் அறிவிப்புச் செய்தது காதில் விழுந்ததும், முட்புதரில் சிக்கிக் கொண்ட தவிப்பு, சிலரைப் போல் எனக்கும். புதைகுழிக்குப் போக வேண்டுமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருக்கையில், போயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்ட கவலை என்னை வதக்கியது. தேர்தலில் நிற்பதால் செய்த பாவங்களை அபூர்வ துஆ மூலம் கழுவி வாருகாலில் களைய பள்ளி வாசலுக்குச் செல்லும்போது பொடிப் பையன் சொல்லிவிட்டான்.

‘வாப்பா, எனக்கு பூந்தி நேர்ச்சை கொண்டு வரணும். நான் உறங்காம இருப்பேன்.’

உறங்காமல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அவனுக்குப் பூந்தி நேர்ச்சை கொடுத்தாக வேண்டும். அபூர்வ பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக அனைத்துக் கடைகளும் அடைத்துவிட்ட இந்தச் சாம வேளையில் எங்கே போய் பூந்தி வாங்கிச் சின்னப் பையனின் வாயை அடைக்க? பூந்தி நேர்ச்சைக்காகவும் வாக்குரிமை உள்ள மக்களின் பார்வையில் படுவதற்காகவும் தயங்கிக் கொண்டிருந்த நான் மயானத் திற்குப் போக முடிவு செய்தேன்.

***

புதைகுழி உலக மக்களின் விடிகாலையான இரவு பன்னிரண்டுக்குச் சில நிமிடங்கள் எஞ்சியிருக்க, மவுலவியின் தலைமையில் ஊர்வலம் பள்ளிவாசலிலிருந்து மயானத்தை நோக்கி நகர்ந்தது. சாக்கடையில் குறுக்காகக் கட்டிய பாலமும் இரு மருங்கிலும் குடிசைகள் நிரம்பிய இடைவழியும் தாண்டியது. புராதனத்தைக் குறிக்கும் பாசி படிந்து கறுத்துப்போன மினாராவுடன் கூடிய வளைவான நுழைவாயிலை எட்ட வெகு நேரமானது. மவுலவி சாப் அடக்கம், அனைவருடைய நடையும் என்னுடையது போல் தயங்கியதாக இருந்ததால்தான் மயானத்தை அடைய இவ்வளவு கால தாமதம்? ஊர்வலத்திலிருந்து சில ஆசாமிகள் இடையே தங்களை உருவிக் கொண்டது பிறகுதான் தெரிய வந்தது.

நுழைவாயிலில் நின்று பார்த்தபோது பார்வை எட்டியதூரம் வரை மயானம் பரந்துவிரிந்து காணப்பட்டது. அதன் விரிவில் ஆங்காங்கே புதைகுழிகள்- கூனலாக, தரைமட்டமாக, மண் உள்ளிடிந்து குழிகளாக, இவற்றில் மறைந்து கொண்டிருப்பவர்கள் யார் யாரெல்லாம் என்று தெரியாவிட்டாலும், கதீஜா, மீராம்மா, அப்துல்லா, பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் நிச்சயம் விழித்துக் கொண்டிருக்கக் கூடும். இவர்களை இங்கு அடக்கம் செய்யும்போது தலைமறைவாகவும், கண்டுக்கிடாமலும் இருந்ததால், இவர்களுடைய கிடப்பிடம் தெரிந்து கொள்ள முடியவில்லை. முதல் முறையாகச் செல்வதால் என் வருகையை இவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இறப்பு என்பது பிறர் பார்வையிலிருந்து மறைந்திருப்பது என்பதால் மறைந் திருந்து நம்முடைய ஒவ்வொரு அசைவையும் இவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கலாம்.

உள்நடுங்க, மயானத்திற்குள் கால் வைத்த என்னுடைய உடம்பு, அந்தக் கொடும் பனியிலும் கதீஜாவைப் பற்றிய நினைப்பில் திடீரென வேர்த்துக் கொட்டியது. எல்லோரும் மஃப்ளரைக் காதடக்கி இறுக்கிய போது நான் மட்டும் மஃப்ளரை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டேன். அதற்குப் பிறகுதான் மன வெப்பு கொஞ்சம் தணிந்தது. வெப்பு தணிந்து வேர்ப்பு அடங்கியதும், உடல் தளர்ந்து கண்கள் மசங்குவது போலிருந்தது. மவுலவியும் அவருடன் வந்த ஊர்ச்சனங் களும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தனர். என்னைத் தனிமைப்படுத்திவிட்டு எல்லோரும் ஓடிப் போய்விட்டார்களே என்ற தவிப்பு. அந்தத் தவிப்பில் என் உடல் பாரம் குறைந்து கொண்டே வந்தது. புழுதி மணலைத் துளைத்து உள்ளே பதுங்கும் குழியானைப் பூச்சி அளவிற்குப் பாரமற்றுச் சுருங்கினேன். மயான பூமியின் உரப்பான மேல் அடுக்கைத் துளைத்துக் கொண்டு குழியானைப் பூச்சியாக உள்ளிறங்கி இருட்டைத் தடவிக் கொண்டிருக்கையில் என்னைச் சுற்றிலும் ஒரு நீல வெளிச்சம் பரவியது. முகர்ந்துணர்ந்த வாசத்தி லிருந்து அங்கு ஒரு சந்தன மரம் நிற்பது தெரிந்தது.

‘சொகமா இருக்கீகளா?’

குரல் கேட்டு நாலாப் பக்கமும் பரவினேன். யாரும் பார்வையில் படவில்லை. திகைப்புடன் நிற்கையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. நினைவில் தங்கியிருந்த குரலாகத் தோன்றியது. எப்போதோ கேட்டு இன்னும் மறக்காத சிரிப்பொலி! எத்திசையிலிருந்து வந்தது என்று தெரியாமல் தடுமாறுகையில் ‘இங்கே பாருங்கோ’ என்றொரு குரல். பார்த்தேன்.

கதீஜா! சந்தன மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். இப்படி வீட்டின் பின் வளாகத்திலுள்ள மரத்தில் கட்டிய ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கையில், அவள் அன்று லாவண்யவதியாகக் காட்சி தந்தாள். அந்த லாவண்ய மயக்கத்தில் கயிறு உருவிவிடப்பட்ட மனசு கட்டுக்கடங்கவில்லை. அன்று இரவு வீட்டின் பின்பகுதியிலுள்ள கூடத்திற்கு வெளியே நிலவு பெய்த சிலிர்ப்பில் அவளைத் தனிமையில் பார்த்த அதே உடையில், உடம்பிலிருந்து முகர்ந்த அதே வாசனை வீச உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

‘நான் யாரு?’ என் நினைவாற்றலை சோதித்தாள்.

‘கதீஜா.’

முன்பு அதிகம் பேசாமலிருந்த அவளுடைய குரலில், எந்த இடறலும் இல்லாமல் இருந்தது.

‘நாங்கொ ஒங்களுக்கு சூம்பி எறியக் கூடிய மாங்கொட்டைகள், இல்லையா?’

பேசத் தெரியாத ஊமைப் பெண்ணாக அடுக்களைக்குள் கிடந்த அவள் இப்படியெல்லாம் திடமாகப் பேச எப்படிக் கற்றுக் கொண்டா ளென்று வியந்தேன்.

‘நான் அப்படி நெனக்கல்ல.’

‘தகப்பனில்லாம, வாதம் பிடிச்ச உம்மாவைக் காப்பாற்ற, கஞ்சிக்காக ஒங்கெ ஊட்ல வேலைக்கு வந்தேன்.’

‘மூணாம்தரமா உன்னைக் கட்டணுமென்னுதான் நெனச்சேன்.’

‘நெனச்சா போதுமா?’

அப்படியே குன்றிப்போனேன்.

‘என்னவெல்லாம் ஆசை வார்த்தைகள் சொன்னா… புத்தி கெட்ட நானும் நம்பிவிட்டேன்.’

‘அந்த நேரம் அப்படியெல்லாம் சொல்லத் தோணிச்சு.’

‘ஒன் குழந்தைய நான் பிரசவிச்சிருந்தேன்னா அதுக்கு இப்பம் ஒன்னரை வயசாயிருக்கும்.’

‘நீ எடுத்தது அவசர முடிவு.’

‘கல்யாணமாகாம ஒரு குழந்தையைப் பெத்து வச்சிட்டு, யார் மூஞ்சில முளிச்சிட்டு வாழ?’

அவள் கண்களிலிருந்து பறந்த நெருப்பால், தோலில் கொப்பளங்கள் உண்டாகாமலிருக்க விலகி நின்றேன். அவிழ்ந்து குலைந்து விழுந்த அவளுடைய கூந்தலில் சாம்பிராணி வாசம் வீசியது.

‘என்னே ஒன்னும் செய்து போடாதே.’கெஞ்சினேன்.

‘செய்யனுமென்னா, “கஞ்சிக்கில்லாத உன்னை நானா கல்யாணம் பண்ணுவேன்னு நெனச்சா?” என்னு கேட்டியே, அண்ணு மத்தியான சாப்பாட்லெ ஒனக்கு விஷம் கலந்து வச்சிருப்பேன்.’

‘தவறு நடந்து போச்சு கதீஜா.’

‘யாருக்குத் தவறு?’

‘என் தவறு.’

‘நீ செய்த தவறுக்கு, அரளிவேர் அரச்சுக் குடிச்சு, நானே என்னை மாச்சிக்கிட்டு இங்கே வந்தேன். இங்கேயுமா தொந்தரவு தர வந்திருக்கே? ஆண்டவன் உன்னை மன்னிப்பான். ஆனா நீ தந்த ஜீவன் என் வயிற்றுக் குள்ளே கெடந்து துடிதுடிச்சுதே அது உன்னை மன்னிக்காது.’

என் முகத்திற்கு நேராகக் காறித் துப்பியது போலிருந்தது. மேல் நோக்கிப் பறந்த ஒரு தீப்பொறிக்குள், ஒரு பாம்பு நுழைந்து அந்தரத்தில் ஊர்ந்து சந்தன மரக் கிளையில் சுற்றிக் கிடந்தது.

தானாக ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சல் கயிற்றைப் பிடித்துக்கொண்டு என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீராம்மா. முகம் சிதைவுற்று, வெளியே துருத்திக் கொண்டிருந்த கண்கள் இரத்த வண்ண மாக இருந்தன.

‘என்னப்பா, ரொம்ப சொத்துச் சேத்தியா?’

கேள்வியில் முழங்கிய கடினம், நெஞ்சாங் குலையைப் பிடுங்கி வீசிய அதிர்ச்சியில், அப்படியே உட்கார்ந்து விட்டேன்.

விலைப் பத்திரத்தில் அவளின் கையொப்பம் வாங்கிய மாலையில், அவளுடைய வீட்டிலிருந்து அவளைத் தெருவில் இறக்கிவிட்ட அதே உடையில். கதுப்புச் சொட்டிப்போன கன்னத்தில், அன்று ஓடை தோண்டி ஓடிய கண்ணீரின் ஈரம் உலரவில்லை . இப்போது அவள் கண்களில் வேதனை காணப்படவில்லை. கனல் துப்புவதாகக் காணட் பட்டன. கையேந்தி அன்று தயை கேட்டு இரந்து கொண்டிருந்த அவள் இப்போது ஒரு மேடைப் பேச்சாளியைப் போல் தலை நிமிர்ந்து முகத்திற்கு நேராகக் கை சுட்டிக் கேட்டாள்.

‘என் ஊட்டை இடிச்சிட்டு மாடி ஊடு கட்டினியா?’

‘ஒரு சின்ன வீடு.’

‘இங்க வந்துமா பொய் சொல்லுற? நாங்கள் இங்கே கெடந்தாலும் அங்கே உள்ள செய்திகள் தெரியாமலில்லை.’

‘மூணு மாடியிலெ கொஞ்சம் பெரிய ஊடு.’

‘என் மகளுக்குத் தலைப்பிள்ளைப் பிரசவம் பார்க்கத்தான் பக்கத்து ஊட்டுக்காரன் எண்ணு உன்கிட்ட மூவாயிரம் கடன் வாங்கினேன் பணம் திருப்பித் தந்தப்பம்தான் நீ பத்துவட்டி போட்டு கணக்கு பெருக்கிச் சொன்ன.’

‘உனக்குத்தான் பத்து வட்டி. மத்தவங்களுக்கெல்லாம் 12 வட்டி.’

‘மாசம் பத்து வட்டி என்று முன்னே சொல்லியிருந்தா, வாங்கியிருக் மாட்டேன்.’

‘நாட்டு நடப்பு உனக்குத் தெரியும்னு நெனச்சேன்.’

‘மகளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற பரபரப்பில, நீ நீட்டின வெறும் பத்திரத்திலெ விரல் உருட்டினேன். முப்பதாயிரம் வாங்கின தாட்டும், அதுக்குப் பத்து வட்டியும் போட்டு, கணக்குச் சொன்னா, உன்கூட வந்த அடியாள்களுக்குப் பயந்து போய் என் ஊட்டை எழுதித் தந்தேன். என் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் இப்பொ இங்கே கெடக்கேன்.’

‘வெறும் பத்திரத்திலெதான் கையொப்பம் வாங்கறது வழக்கம்.’

‘மூவாயிரத்திற்கு முப்பதாயிரமென்னு எழுதணுமா?’

‘போலீஸ்காரங்க, கட்சி நிதி, அதிகாரிகள் எல்லாருக்கும் குடுத்துப் போனா எனக்கு நான் தந்த மூவாயிரமும் வட்டியும்தான் மிஞ்சும்.’

அவள் பார்வை கொடூரமாக இருந்தது. பயந்து போய் சற்றுப் பின்வாங்கி நின்றேன்.

‘பயப்படாதே.’ ‘உன்

கண்ணைப் பார்க்க பயமாயிருக்கு.’

‘பயமாகத்தான் இருக்கும். போலீஸ்காரங்களைக் கொண்டு வந்து நீ என்னைத் தெருவில் இறக்கிவிட்ட பிறகு, ஒரு மண் வீட்டுலெ குடியிருந்தேன். படுத்திருந்த என் மேலே சுவர் இடிஞ்சு உயிர் போச்சு. மேக்கூரையிலுள்ள ஒரு பனங்கம்பு குத்தி கண்ணு வெளியே வந்துட்டு. அதுதான் உனக்குப் பார்க்க பயமாயிருக்கு.’

‘மன்னிச்சுக்கோ. முன்னே வந்த உங்களுக்கு ஆறுதல் சொல்லத்தான் நாங்கோ திரண்டு வந்திருக்கோம்.’

‘உங்க ஆறுதல் எங்க நிம்மதியைக் கெடுக்குது. உறங்காமலே உங்களை வருஷம் முழுதும் சாபம் போட்டுக்கிட்டே இருக்கோம்.’

‘மீராம்மா! சாபம் போடாதே. நான் நம்ம 45-வது வார்டு வேட்பாளராக நிக்கேன்.’

‘ஆண்டவன் மன்னிச்சாலும் நாங்க மன்னிக்க மாட்டோம்’ என்றது காதில் ஈயம் உருக்கி ஊற்றியது. என் பார்வையில் படும்படி ஒரு கீரி ஓடி வந்து ஊஞ்சல் கட்டியிருந்த சந்தனமரத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தது. பிறகு மெல்ல நகர்ந்து கீழ்க் கிளையில் சுற்றிக் கிடந்த பாம்பின் பக்கம் போய் உட்கார்ந்து கொண்டது. மீராம்ம போன இடம் தெரியாத திகைப்பில், சுற்றும் முற்றும் பார்க்கையில் ஏதோ ஒன்று பொத்தென்று காலடியில் வந்து விழுவது போல் இருந்தது அந்த நடுக்க அதிர்வு விலகுமுன் ஒரு அதட்டல் கேட்டது.

‘வந்தாயா..?’

அப்துல்லா!

‘அப்துல்லாதாண்டா நான்’

‘அப்துல்லா! நம்ம சிறுபிள்ளையில் கோலிக்காய் விளையாடினோம். நண்பர்களாக வளர்ந்தோம்.’

‘அதனால்தான் ஒச்சுக் கட்டினியா?’

‘பணவிஷயமாவும் போ, சில நேரம் புத்தி கெட்டுப் போவும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி ஒண்ணுமே தெரியாதப்பா.’

‘என்னையுமா தெரியல்ல.’

‘எனக்குப் புத்தி கெட்டுப் பேதலிச்சிட்டு.’

‘கதீஜா தற்கொலை செய்ததைக் கேட்டதும் நீ ஓடிப் போயிட்ட, பயந்து யாரும் அவா பக்கம் போவல்ல. நான் போயி அவொ ப்ளவுசுக் குள்ளே கையைப் போட்டு, அவொ போலீசுக்கு எழுதி வச்சிருந்த காயிதத்தை எடுத்து எரிச்சுப் போட்டென். காயிதம் போலீஸ் கையில் சிக்கினா நீ எவ்வளுவ வருஷம் கம்பி எண்ணணும்? திடீர் ஜன்னி வெட்டில் இறந்து போனாள்னு ஒரு பொய்யைச் சொல்லி, கொமரிப் புள்ளை மய்யித்தை (சடலம்) போட்டு வைக்கப்படாதுணு ராவோடு ராவே போலீஸ் தெரியாம அடக்கம் செய்தேன். இப்படியெல்லாம் உதவி செய்த என்னைக் கட்சி ஆளுகளை விட்டுக் கொன்னு போட்டியோ’

‘நீ செத்துப் போவானு நெனக்கலப்பா.’

‘தந்த பணத்தைத் திருப்பிக் கேட்டதினாலே, என்னைக் கொன்னு போட்டா.’

‘நீ பணம் கேட்டு தொல்லை தந்துக்கிட்டிருந்தா, அப்பொ வந்த கோபத்திலெ செய்து போட்டேன். ஒன்கிட்ட இருந்து மூவாயிரம் வாங்கித்தான் மீராம்மாவுக்குக் குடுத்தேன். அவொ தரல்ல. நான் என்ன செய்வேன்?’

‘என் பையனுக்கு காலேஜ் அட்மிஷனுக்கு வச்சிருந்த ரூவா.’

‘ரூவா திருப்பிக் கேட்காமலிருக்க சும்மா ஒரு பயங்காட்ட, லேசா ஒரு தட்டு தட்டி விடுங்கப்பா என்று தொண்டர்களுக்கிட்ட சொன்னேன்.’

‘லேசா தட்டவா செய்தானுவோ? மானாங்கண்வரியா வெட்டி அந்த எடத்திலே சாச்சுப் போட்டானுவோ. பாவிப் பயலுவோ அந்த இடத்திலயாவது போட்டானுவளா? பாறை இடுக்குலெ தூக்கிப் போட்டதினாலெ ஏழு நாளா புழுத்துப் போய், ஈ மொச்சி நாறிக் கெடத்தேன். ‘

‘உன் கதை கேக்கச் சங்கடமாத்தான் இருக்கு. வருத்தப்படுறேன்.’

‘எலிக்க மரணம் கேட்டு பூனை வருத்தப்பட்டுதாம்.’

‘நான் அப்படியல்ல.’

‘உன்னை நீ சொல்லியா நான் தெரியனும்? என் மவனைப் பாக்கதுண்டா?’

‘சில நேரம் பிராந்திக் கடையில சந்திப்போம்.’

‘பாத்தியா, கெட்டுக் குட்டிச்சுவராப் போனான். என் ரூவாயெ நீ தந்திருந்தாண்ணா அவனைப் படிக்கவெச்சி ஆளாக்கியிருப்பேன்.’

‘தப்பு நடந்து போச்சு. மன்னிச்சுக்கோ. உன் மகனுக்கு வேலை இல்லேன்னா, வட்டிப் பணம் வசூல் செய்ய நானே வேலைக்குச் சேத்துக்கிடுதேன்.’

‘ஒங்கிட்ட வேல பாத்து உயிர் வாழுவதை விட, அவன் குடிச்சுக் குடிச்சுச் செத்துட்டு இங்கே வரட்டும். இங்கேயாவது கொஞ்சம் நிம்மதி உண்டு .’

‘அப்துல்லா, நம்ம 45-வது வார்டு வேட்பாளரா நிக்கேன். எனக்கு ஓட்டுப் போட உன் பெஞ்சாதி பிள்ளைகளுக்கு ஒரு கனவு காட்டப்பா.’ பணிவுடன் வேண்டினேன்.

‘நீ ஒரு பணிவும் காட்டண்டாம். ஆண்டவன் மன்னிச்சாலும் படுபாவியான உன்னை நான் மன்னிக்க மாட்டேன்.’

அப்துல்லா காறி உமிழ்ந்த எச்சில், முகத்தில் விழுந்ததாகத் தோன்றிய இடத்தைத் தடவிப் பார்க்கையில், நசுப்புத் தெரியவில்லை. அதற்குள் ஒரு கழுகு சந்தன மரக் கொம்பை நோக்கி வெரசலாகத் தாவியது. பாம்பும் கீரியும் சேர்ந்து உட்கார்ந்திருந்த கொம்பில், கழுகு உட்கார்ந்து கொண்டு என்னை நோட்டமிட்டது. கழுகுக்குள் அப்துல்லா கூடு விட்டுக் கூடு பாய்ந்த கண்சிமிட்டு வேகம் மலைப்பைத் தந்தது. பாம்பாகவும் கீரியாகவும் கழுகாகவும் உருமாறி மறைய ஆற்றல் பெற்ற அந்த உலகம் விசித்திரமானதாகத் தோன்றியது. அங்கு இரவும் பகலும் இல்லை. ஊணும் உறக்கமுமில்லை.

கண்களைக் கூசவைக்கும் ஒளித்துண்டுகளாக நாலாத் திசைகளி லிருந்தும் வேகமாகப் பறந்து வந்த சிட்டுக் குருவிகள் என்னை நகர விடாமல் வலம் வந்து என்னைச் சுற்றி வேலி கட்டின. பிறகு திசைகளை அடைத்துக் கொண்டு, திசைக் காவலர்களாய் உட்கார்ந்து கொண்டன. என்னை வியப்பில் தூக்கி வீசிக் கொண்டு, சிட்டுக்குருவிகள் உட்கார்ந் திருந்த இடத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் சீருடையில்! வெள்ளைச் சட்டையும் நீல டிராயரும் போட்ட பிஞ்சு முகங்கள். சின்னக் கண்கள். செல்ல உதடுகள்.

‘எங்களைத் தெரியுதா?’

‘கண்டு மறந்தது போல இருக்கு.’

‘மறந்திருப்பா. நாங்கொ பொறந்தது சேரியில இல்லியா?’

‘இப்பம் ஞாபகமிருக்கு. சத்து உணவுக் கூடத்துல வாந்தி எடுத்து.’ ‘நாங்களேதான்.’

‘வருத்தப்படுதேன்..’

‘ஊட்டுல தின்ன தீவனம் இல்லாமத்தானே சத்துணவு தின்ன முனிசி பாலிட்டி பள்ளிக்கூடத்திலெ சேர்ந்தோம்.’

‘அந்த அப்துல்லாதான் கலப்படம் செய்ய வழி சொன்னான் மக்களே.’

‘எங்களை மக்களேன்னு கூப்பிட்டுப் பொய் சொல்லாதே. எங்களுக்கு முன்னே அவரு இங்கே வந்தாச்சே! எங்களை அவருதான் வரவேற்றது.’ ‘அப்படியா? தவறுக்கு வருந்துகிறேன். உங்க வீடு?’

‘இப்பம் இங்கதான்.’

‘அந்த வழுக்கைத்தலையன்தானே உங்க ஹெட்மாஸ்டர்?’

‘ஆமாம்.’

‘அவரு என்கிட்ட நிறையத் துட்டு வாங்கினாரு.’

‘கலப்பட உணவு என்று அவருக்குத் தெரியுமா?’

‘தெரியாமலா?’

‘உன்னை எப்படி உட்டாங்கோ?’

‘துட்டுதான்; அரசியல் செல்வாக்குதான்.’

‘ஆண்டவன் தண்டிக்கமாட்டானா?’

‘தண்டனையிலிருந்து தப்பத்தான் துஆவிலே கலந்துக்கிட வந்தேன்.’

‘ஓ! இது புதுக்கணக்கு நாளா? எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தீளோ ?’

‘நான் 45-வது வார்டு வேட்பாளர். வெற்றி பெற்றால்தான் உங்க வாப்பா உம்மாவுக்கு பட்டா நிலம்! எனக்கு ஓட்டு போட ஒரு கனவு காட்டுங்க, மக்களே.’

காறி உமிழும் சப்தம் கேட்டது. உடன் சிறகடி ஓசையும். இருள் பரவிய கண்ணிலிருந்து சீருடை அணிந்த மாணவர்கள் மறைந்தனர். வந்தது போல் சிட்டுக் குருவிகள் ஒளி சிந்திப் பறந்து உயர்ந்தன. சந்தன மரக் கிளைகளின் சுள்ளிக் கம்பில் உட்கார்ந்து கொண்டன. பிறகு கழுகின் சிறகுகளுக்கடியில் பம்மிக் கொண்டன. கண்ணுக்குள் குப்பென்று புகுந்த இருட்டில், சுள்ளிக் கம்பிலிருந்த சிட்டுக்குருவிகள் மறைந்ததைக் காண முடியவில்லை . கழுகின் முதுகில் ஏறி சிட்டுக்குருவிகள் பறந்து மறைந்த பாதையைக் கண்கள் துழாவுகையில், சந்தனமரமும் நொடியிடையில் அப்புறமாகிவிட்டது.

அங்கு மீண்டும் சிறிது நேரத்திற்குப் பரவி இருந்த நீல ஒளி தேய்ந்து தேய்ந்து இருளாக இறுக்கியது. எனக்குள் பூட்டப்பட்டிருந்த வாசல் உள்ளிருந்து திறக்கப்பட்ட போது, என்னைச் சுற்றிக் கொண்டிருந்த புதைகுழி உலகச் சுவர் பிளந்து விலகியது. தலைக்கு மேல் மூடியிருந்த மண் அட்டியில் விழுந்த வெடிப்பு வாயிலாக, ஒரு கை என்னை மேலே இழுத்துப் போட்டது. வெறுமையான மயானத்தில்

திரண்டு வந்தவர்களெல்லாம் போய்விட்டார்கள். புதைகுழிகளுக் கிடையில் ஆங்காங்கே நாட்டப்பட்டிருந்த மூங்கில் கழைகளில் மாட்டி யிருந்த மின்விளக்குகள் மவுனமாயின. பாசி பிடித்திருந்த ஒற்றை மினாராவின் முகட்டில் ஒரு விளக்கு மட்டும் முணு முணுத்துக் கொண்டிருந்தது. முட்புதர்களுக்கிடையே தெரிந்த ஒற்றையடித் தடம் நோக்கி நடந்து, மயானத்திற்கு வெளியே வந்த பிறகுதான் மூச்சு சீரானது. ஓரங்களில் குடிசைகள் நிறைந்த இடைவழி, பள்ளிவாசல் முற்றத்தில் முடிவுற்றது. பூட்டப்பட்ட பள்ளிவாசலை இருள் கவ்விக் கொண்டிருந்தது. சொட்டிட்ட பனி ஈரப்படுத்திய ஆற்றுமணலில் உட்கார்ந்தபோதும் உள்ளில் பற்றிக் கொண்டிருந்த நெருப்புத் தணிய வில்லை .

– கல்கி, தீபாவளி மலர் 1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *