ஸ்டெல்லா சிஸ்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 1,764 
 
 

மருந்தை “உவ்வே”…..என்று முகத்தில்  உமிழ்ந்த பெண்ணை கனிவுடன் பார்த்த ஸ்டெல்லா, அம்மா இங்க பாருங்க, முதல்ல வாயில போட்ட உடனே கசக்கத்தான் செய்யும், தயவு செய்து அப்படியே முழுங்கி ஒரு வாய் தண்ணீர் குடிச்சுடுங்க, ப்ளீஸ்..மீண்டும் மருந்தை ஸ்பூனில் ஊற்றி அந்த நோயாளி பெண்ணின் வாயருகே கொண்டு சென்றாள்.

ஸ்டெல்லாவின் முகத்தின் மீது துப்பிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அந்த பெண் சற்று சுணங்கியாவாறு அம்மா நீ மாத்திரையா கொடுத்தா அப்படியே முழுங்கிடுவேன், குழந்தை தனமாய் சொன்ன பெண்ணை பார்த்து அப்படி கொடுக்கறதா இருந்தா கொடுத்துடமாட்டேனா? இது “தண்ணியா” குடிச்சாத்தான் கேட்கும், புன்னகையுடன் சொல்லியவாறு அவள் வாயை திறக்க சொல்லி ஊற்றியவள், உடனே ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து கொடுத்தாள். கசப்பு தாங்காமல் முகம் சுழித்த அந்த பெண் உடனே தண்ணீரை வாங்கி வாயில் ஊற்றிக்கொண்டாள்.

ஸ்டெல்லா நகர்ந்து அடுத்த கட்டிலில் படுத்திருந்த நோயாளியை பார்க்க சென்றாள். அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த அந்த நோயாளி ஏம்மா அவங்க அப்படி துப்பிட்டாங்க, உங்களுக்கு கஷ்டமாய் இல்லையா? ஸ்டெல்லா பதிலொன்றும் சொல்லாமல் புன்னகையுடன், இப்ப உங்களுக்கு எப்படி இருக்குது, “பிசியோ” பண்ணிணீங்களா? நடக்க முயற்சி பண்ணறீங்களா? கேட்டவளிடம் எங்க காலை கீழே வச்சா விண்ணு விண்ணுன்னு வலிக்குது, எப்பத்தான் சரியாகும்? சரியாயிடும், கவலைப்படாதீங்க, பேசிக்கொண்டே, அந்த நோயாளியின் காலில் கட்டியிருந்த கட்டை மாற்றி விட்டு சரி அப்படியே சாஞ்சு உட்கார்ந்துக்குங்க, டாக்டர் வந்துடுவாரு, அடுத்த நோயாளியை பார்க்க சென்றாள்.

மதியம் சாப்பிட்டு முடித்து சற்று ஓய்வாய் உட்கார்ந்திருந்த ஸ்டெல்லாவின் முன்னால் அவளின் தம்பி அழுது கொண்டே வந்து நின்றான். அவனை அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஸ்டெல்லா அவனை அழுத முகமாய் பார்த்தவள் பதட்டத்துடன் ராபர்ட், என்னாச்சு ? யாருக்காவது ஏதாவது ஆயிடுச்சா?

இல்லைக்கா, வீட்டுல ஆரோக்கியம் அண்ணன் அப்பாகிட்டே வந்து அசிங்க அசிங்கமா பேசி ..அதற்கு மேல் அவனால் பேசமுடியாமல் விக்கினான்…

சரி முதல்ல வா சாப்பிட்டு வந்துடலாம், வெளியே கூட்டி வந்து அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தாள்.

இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது மதிய உணவு இடைவேளை முடிய. தம்பி சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் அவளை அப்படியே கவலைக்குள்ளாக்கியிருந்தது. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பணம் இரண்டு லட்சத்தை கொடுக்கலையின்னா, என்னவேனா செய்யறதுக்கு தயங்க மாட்டேன், அதுவுமில்லாம,  அப்பாகிட்டே அசிங்கம் அசிங்கமா சத்தம் போட்டுட்டு போயிடுச்சாம். அப்பாவும் கண்ணீரும் கம்பலையுமா நகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சா வேலை செய்யற  பொண்ணுகிட்டே சொல்ல சொல்லி பையன் கிட்டே சொல்லி விட்டுருக்காரு.அவனும் அக்காகிட்டே சொல்லிட்டு ஊருக்கு கிளம்பிட்டான்.

“ஸ்டெல்லா” நேரமாச்சு போலாமா ? கூட வேலை செய்யும் பார்கவி கூப்பிட்டாள். சட்டென தன்னிலை பெற்ற ஸ்டெல்லா வேகமாய் முகம் கழுவ சென்றாள்.

ஆனால் மனம் முழுக்க தம்பி ராபர்ட் சொல்லி சென்ற வார்த்தைகள் மட்டுமே மனதில் நின்றது. ஆரோக்கியம் அவர்கள் ஊரில் வட்டிக்கு விடும் தொழில் செய்து கொண்டிருப்பவர். பண விஷயத்தில் இரக்கம் என்பதும், அவருக்கும் அவரது அடியாட்களுக்கும் கொஞ்சம் கூட கருணை கிடையாது. ஸ்டெல்லாவின் அப்பா இவளுக்கு “நர்சிங்” கோர்ஸ் படிக்க வாய்ப்பு வந்தவுடன் எங்கும் கடன் வாங்காமல் படிக்க வைக்கத்தான் முயற்சி செய்தார். அதனால் வங்கியில் கடன் வாங்கி படிக்க வைக்க நினைக்கவில்லை.

ஆனால் இயற்கை அவரை காலை வாரி விட்டது. ஸ்டெல்லா இரண்டாம் வருடம் போகும் போதே சரியான மழை இல்லாமல் விவசாயம் படுத்து விட்டது. அப்படி இருந்தும் வீட்டிலிருக்கும் நகைகளை வங்கியில் வைத்து சமாளித்து பார்த்தார். முடியவில்லை. கடைசியில் ஆரோக்கியத்தைத்தான் நாட வேண்டியிருந்தது. ஆரோக்கியமும் பணம் கொடுக்கும்போது தேனொழுக பேசி கொடுக்கத்தான் செய்தார். ஆனால் அவரது குணம் இவர்கள் திரும்ப பணம் கொடுக்கும் போதுதான் தெரிந்தது. “வட்டிக்கு வட்டி”, அவர்களை வாட்டியது

விவசாயத்தில் வருமானம் இல்லாமல் இவள் இந்த நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு இரண்டு வருடங்களாய் வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாரித்து அனுப்பியும் முதலை வாயில் போன இரையை போல ஆரோக்கியத்திடம் சென்றது.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கிடையில் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் வார்டுபாய் வந்து “சிஸ்டர்” ஒரு பேஷண்ட் உங்க ஊர்க்காரராம், எமர்ஜென்சியில இருக்காங்க. சொல்லவும் ஸ்டெல்லா எமர்ஜென்சி வார்டு நோக்கி விரைந்தாள்.

அங்கு ஆரோக்கியம் பேச்சு மூச்சில்லாமல் படுத்து கிடப்பதையும், அருகில் அவர் மனைவி கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தாள். அருகில் அவளுக்கும் தெரிந்த ஒரு சிலர் ஆரோக்கியத்தின் அருகில் நின்று கொண்டிருந்தனர். இவள் விரைந்து பக்கத்தில் செல்லவும் ஆரோக்கியத்தின் மனைவி இவள் கையை பற்றிக் கொண்டு திடீருன்னு பேசிகிட்டிருந்தவரு அப்படியே மயங்கி விழுந்துட்டாரு. தட்டி எழுப்பி பார்த்தும் எந்திரிக்கவேயில்லை.. அழுது கொண்டே சொல்ல..அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற பரபரப்புடன் டாக்டரை வரவவழைக்க விரைந்தாள் ஸ்டெல்லா

வழக்கம் போல நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைகள் ஆரம்பித்தாலும், கூட பணிபுரியும் பணியாளருக்கு தெரிந்தவர்கள் என்ற முறையில், ஆரோக்கியத்துக்கு இன்னும் வேக வேகமாக சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு “ இண்டன்சிவ் கேர்” யூனிட்டுக்கு அனுப்ப்பட்டார்.

பதினைந்து நாட்கள் ஓடியிருந்தது, ஆரோக்கியம் நல்ல தெளிவுடன் குணமாகி இருந்தார். தினமும் ஸ்டெல்லா அவள் “டூட்டி” முடிந்து பத்து பதினைந்து நிமிடங்கள் அவருக்கு பணிவிடைகள் செய்து விட்டு . அவர் மனைவியிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு  அவள் தங்கும் ஹாஸ்டல் அறைக்கு சென்றாள்.

ஆஸ்பத்திரியில் ஆரோக்கியத்தை “டிஸ்சார்ஜ்” செய்ய சொல்லி விட்டார்கள். போகுமுன் முன் அவர் மனைவி ஸ்டெல்லாவின் கையை பிடித்துக்கொண்டு அன்னைக்கு உங்கப்பாகிட்டே போய் கண்டபடி பேசிட்டு வந்துட்டேன்னு சொன்னாரு, ஆனா அதை எதுவும் மனசுல வச்சுக்காம எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணியிருக்கே, கண்ணீருடன் சொல்ல, ஸ்டெல்லா புன்னகையுடன் தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க, நீங்கன்னு இல்லை யாரு வந்திருந்தாலும் கண்டிப்பா என்னோட கடமையை நான் செஞ்சிருப்பேன். அவர்களை தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தாள். 

அவர்களை அனுப்பி வைத்துவிட்ட ஸ்டெல்லாவின் மனதுக்குள் எப்படி “ஆரோக்கியத்திடம் வாங்கிய கடனை” அடைக்கப்போகிறோம் என்ற கவலை மீண்டும் சூழ்ந்து கொண்டாலும் பக்கத்து படுக்கையில் இருந்து வந்த நோயாளியின் “வலியின் அரற்றலை ” கவனிக்க விரைந்தாள்.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *