ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 771 
 
 

சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
நித்திரையில் இருந்திருப்பான், நான்கு ஐந்து முறை கதவைத் தட்டிய பிறகு கதவைத் திறந்து, “உள்ளே வா” என்றான்.

மேலே மாமரக் கிளைகள் கவிந்து நின்றிருந்தன. பக்கத்தேயும் பின்னேயும் ஈரப்பலா மரங்கள். கிணற்றடியில் கமுகுகளும் செவ்விளநீர்க் கன்றுகளும் வாழைகளும். பராமரிப்புக் குறைந்திருந்தாலும் செழிப்பாகவே நின்றிருந்தன. முற்றத்தில் கொழுத்த ஓர் அரசமரம். அந்தமாதிரிக் காட்சிகள் நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிடைத்துவிடாது. அதனால், ‘நான் வெளியிலயே இருக்கிறன்’ எனச் சொல்ல, குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு விரைந்தான்.

நான் அவனது அறைக்கு முன்னால் முற்றத்தில் நின்ற அசோகமரத்தைச் சுற்றிப் போட்டிருந்த கொங்கிறீற் கட்டில் அமர்ந்தேன்.

பெரிய வீட்டின் கதவு சாத்தியேயிருந்தது. மிஸிஸ் பெர்னாண்டோ எங்கோ வெளியே போயிருக்;கிறாள் என்று தெரிந்ததில் மனத்தில் ஓர் ஆசுவாசம். இல்லாவிட்டால் உள்ளே வந்திரு என்று வற்புறுத்தி அழைத்துப்போய், உனது சிநேகிதன் இரவு இரண்டு மணிவரை லைட்டைப் போட்டுக்கொண்டு கரண்டை வீணாக்குகிறான் என்றோ, அவன் கடையில் வாங்கிவந்து சாப்பிடும் சாப்பாட்டு மணம் குடலைப் பிடுங்குகிறது, காலையில் வெளியே வந்தால் எலிகள் இழுத்துவந்து போட்ட எலும்புத் துண்டுகள் முற்றம் முழுக்க பரவிக் கிடக்கிறதெனவோ ஏதாவது குறையைச் சொல்லிக்கொண்டு இருந்திருப்பாள்.
ஸரமகோதாசனைப்பற்றிச் சொல்ல அவளிடம் எப்போதும் ஒரு குறை இருந்துகொண்டிருக்கிறதேயென நான்கூட பலதடவை வியந்திருக்கிறேன். குறையாகச் சொல்ல ஒன்றுமில்லாத நாளில்தான் அவனைப்பற்றி ஏதாவது விசாரித்திருக்கிறாள். ஏன் இன்னும் உனது சிநேகிதன் கலியாணம் செய்யவில்லையென்று கேட்பாள். இல்லையேல் சகோதரங்கள் இருக்கின்றன என்கிறாயே, அப்படி யாரும் வந்து போவதில்லையே, இவன்கூட போய்வருகிற மாதிரித் தெரியவில்லையே, ஏன் எனக் கேட்பாள். ஒரு பரஸ்பர உசாவுகையை மீறிய கரிசனையோடுதான் அவள் அவ்வாறெல்;லாம் கேட்பதாகத் தோன்றியதில், நானும் விகற்பமில்லாமல் எல்லாவற்றையும் மறைக்காமலே சொல்லியிருக்கிறேன்.

அதற்காக ஸரமகோதாசன் புறுபுறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு.

வியர்வை அரும்புநிலை காட்டிக்கொண்டிருந்ததில் மெல்லிய காற்றின் அசைவும் சுகம் செய்தது. சலசலவென மேலே அரசமிலைகள் எழுப்பிய சத்தம் சூழவும் செறிந்துகொண்டிருந்தது. சுமார் நூறு யாருக்கு அப்பால் பிரதானசாலையில் வாகனங்களும், மக்களும் கிளர்த்திய இரைச்சல் அந்த அரசமிலைச் சரசரப்பில் அடங்கிவிட்டிருந்ததாகத் தோன்றியது. சத்தமே சத்தத்தை அடக்கி நிசப்தத்தை விழுத்திய அற்புதமான அந்த தருணத்தை மனத்துள் எண்ணியபடி நான்.

நேரமாக ஆக சற்று பொறுமை குறைந்து வந்துகொண்டிருந்தேன். ஸரமகோதாசன் வர தாமதமாவதினால் மட்டுமில்லை, இந்தமாதிரி ஓர் இடத்தில் வந்து இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அமர்ந்திருக்க முடியப்போகிறது என்ற எண்ணத்தினாலுமாகும் அது.

இந்த இடத்துக்கு என்ன குறை? இங்கிருந்து ஏன் போகவேண்டுமென நினைக்கிறான்? எத்தனை மாதத்துக்கு ஒருதடவை இவன் வீடு மாறுவான்? பழைய இடம் சரியில்லை, வேலைக்கு வந்து போவது கஷ்டமாயிருக்கிறதென்று இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மட்டக்குளியாவிலிருந்து கிராண்ட்பாஸிலுள்ள இந்த வீட்டு அறைக்கு வந்திருந்தான். அதற்குள்ளேயே இவனுக்கு இந்த இடம் அலுத்துப்போனது. கடந்த பத்தாண்டு கொழும்பு வாழ்க்கையில் மாறிமாறி பதினைந்து இடங்களில் தங்கியவனை என்ன சொல்வது? நாற்பது வயதாகியும், இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்கிற எண்ணமும் இல்லை. ஒரு மேசை, இரண்டு கதிரைகள், ஒரு கட்டில், அதற்கு மேல் போட ஒரு தும்பு மெத்தை, ஒரு ஸ்டவ், ஒரு கேத்தில், ஒரு அலுமீனியப் பானை, இரண்டு அலுமீனியச் சட்டிகள், இரண்டு எவர்சில்வர் அகப்பைகள் தவிர இவன் எடுத்துச்செல்ல வேறு தளபாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லையென்பது ஒரு வசதியேயில்லை இவனுக்கு. அதற்குப் பதிலாக ஆயிரம் நூல்களும், நூறு பழைய பேப்பர் கட்டுகளும் வைத்திருக்கிறான். அவற்றை ஏற்றி இறக்குவதிலுள்ள சிரமம் எனக்குத் தெரியும். இவன் வீடு மாறிய இரண்டு வேளைகளில் கூடவிருந்து பட்ட அனுபவத்தில் நானடைந்த ஞானத்தை இவனால் அந்த பதினைந்து தர அறை மாற்றங்களினாலும் ஏன் அடைய முடியவில்லை?

போன ஞாயிறு விடுமுறையில் என்னை வீட்டிலும் இருக்கவிடாமல், ‘வா வீடு பாக்கவேணும், இஞ்ச படுத்தால் எனக்கு நித்திரை வருகுதில்லை, மச்சான்’ எனச் சொல்லி, காலை பத்து மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரை என்னை இழுத்தடித்துக்கொண்டு திரிந்தான். தெருப் பெயரும் இல்லாமல், வீட்டு நம்பரும் தெரியாமல் யாரோ கொடுத்த இடக்குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு கொட்டாஞ்சேனையில் ரஹீம் காக்காவின் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? எனக்குச் சீயெண்டு போய்விட்டது. திட்டினாலும் என்ன, அவனுக்கு கோபமா வரப்போகிறது? சிரித்தபடியே கேட்டுக்கொண்டு இருக்கப் போகிறான். பிறகு பேசியென்ன, திட்டியென்னவென்று நானும் அவன் அறை பார்த்து முடிக்குமட்டும் கூட இருந்துவிட்டுத்தான் வந்தேன்.

அந்தத் தெருவில் கடந்த பதினைந்து வருஷங்களாகக் குடியிருக்கிற எனக்கு ஏறக்குறைய அதேயளவு காலத்துக்கு மிஸிஸ் பெர்னாண்டோவை பழக்கமாகியிருந்தது. பார்த்து, இரண்டொரு வார்த்தைகள் பேசிய பழக்கம்தான். இரண்டு மகன்களில் இளையவனுக்கும் கல்யாணமாகி அவன் வேறு வீடு சென்ற பிறகு உண்டான தனிமையில்போலும், கண்டபோது லேசாகச் சிரித்து அண்மைக் காலத்தில் ஓர் அன்னியோன்யத்தைக் காட்டிக்கொண்டாள். அந்த நம்பிக்கையில்தான் நான்கு மாதங்களுக்கு மேலாக அறை வாடகைக்கு உண்டு என்ற அறிவிப்புப் பலகையிருந்த அந்த வீட்டுக்கு ஸரமகோதாசனுக்காக நான் அறை கேட்டு வந்தது.
ஒரு மாலைநேரத்தில் தன் மகன்களின் குடும்பத்துடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மிஸிஸ் பெர்னாண்டோ எனது நண்பனென்பதாலேயே தயக்கமின்றி அறையை வாடகைக்குத் தந்தாள். வீட்டோடு இணைந்திருந்த கராஜை அறையாகத் திருத்திக் கட்டிய அந்த இடத்துக்கு மாதத்துக்கு இரண்டாயிரத்து இருநூறு ரூபா வாடகை என்பது அதிகமென நான் தயங்கியபோது, ஸரமகோதாசன்தான் அது தனது கம்பெனிக்கு நடந்து போகிற தூரத்திலுள்ள வசதியைக் கருத்தில்கொண்டு ‘பேசாமல் வா, நாளைக்கே அட்வான்ஸைக் கொண்டுவந்து குடுத்திடுவம்’ என இரண்டாம் பேச்சில்லாமல் என்னை அடக்கினான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை ஸரமகோதாசன் என்ற பெயரை பத்திரிகையிலோ சஞ்சிகை எதிலுமோ கண்டதாகத்தான் ஞாபகமிருந்தது. அந்தப் பெயரின் புதுமைக்காகவே அவனது எழுத்தை மினக்கெட்டு வாசித்துமிருக்கிறேன். அதிகமாகக் கவிதைகள்தான். சுமாராக இருப்பதாகவேதான் தோன்றியிருந்தது. நேரடியான சந்திப்பு எதிர்பாராதவிதமாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஓர் இலக்கிய விழாவில் ஏற்பட்டது. அந்த முகத்தை எங்கோ பார்த்திருப்பதாக நான் தடுமாற ஸரமகோதாசன்தான், ‘ஒரே ஊர் ஆக்கள் பஸ்ஸிலை கிஸ்ஸிலை இல்லாட்டி சந்தையிலையெண்டாலும் கண்டிருக்க ஏலும்தானே’யென்று கூறிச் சிரித்தான். அந்தப் பேச்சும் சிரிப்பும்தான் அவனை உடனடியாக என் ஞாபகத்துக்குக் கொண்டுவந்தன. ‘டேய், நீ முருகதாஸெல்லே’ என நான் இருபது வருஷங்களுக்கு முந்திய பள்ளிக்கூட காலத்தை ஞாபகம் கொண்டேன். பிறகு கேட்டேன்: ‘அதென்ன, ஸரமகோதாசன்?’
‘வித்தியாசமாய் இருக்கட்டுமனெண்டு வைச்சன்;’ என்றான்.

அன்றிலிருந்து விழுந்ததுதான் இந்த வளையம். என் காலிலே வட்டமாய், பொருத்து அற்றதாய், பிறர் கண்ணுக்குத் தெரியாததாய்க் கொழுவியிருக்கிறதே ஓர் இரும்பு வஸ்து, அதைத்தான் சொல்கிறேன்.
ஸரமகோ அபாரமான சிந்தனை ஆற்றலுள்ளவன். ஒரு விஷயத்திலே தீர்வு தேவையென்ற நிலையில் அவனிடம் அபிப்பிராயம் கேட்டால், யோசிச்சுச் சொல்கிறேன் என்றமாதிரிப் பதிலெதுவும் வராது. உடனேயே பிரச்னையை விளக்கி தனது முடிவைக் கூறக்கூடிய ஆற்றல் அவனிடம் இருந்தது. ஞாபகசக்தியும் அதிகம். அவன் வேலைசெய்யும் பத்திரிகை அலுவலகத்தில், ஏதாவது அரசியல் நிகழ்வின் விபரங்களைத் தேடவேண்டியிருந்தால், ஆசிரியர் உட்பட, சகஊழியர்கள் யாவரும் அவனைத்தான் அணுகுவது. ஆண்டு, மாதம் அச்சொட்டாகச் சொல்வான். இலக்கிய, கலை விவரணப் பட விவகாரங்களில் அவனது கருத்துக்கள் மிகத் தீர்க்கமானவை. காலம்பூராவும் ஒரு தீவிர வாசகனாகவே இருந்துவிடுவதற்காகத்தான் தனது தனிமையை அவன் அந்தளவு தீவிரமாய் திருமணமே செய்யாமல் உறுதிப்படுத்தினானோ என பல சமயங்களில் நான் எண்ணியதுண்டு.

அவன் கால்விலங்காக இருப்பதைப் பிரக்ஞையில் கொண்டுவருகிற நேரங்கள் அடிக்கடி நேரும். அவசரமாய்ச் செல்லவேண்டிய ஓர் இடத்துக்கு அவனுடன் சென்று அனுபவித்தால்தான் அது தெரியும். ஏன் கூட்டிவந்தோம் என்று வருத்தப்படுகிற அளவுக்கு ஆகிவிடும். அந்தளவு நிதானமான அசைவு. உடம்பு சற்று பெரிதான அவனுக்கு இயல்பென நினைக்கிற அளவுக்கும் அது இருக்காது. வேண்டுமென்றே அந்தமாதிரி மினக்கெடுத்துவதாகத் தோன்றும். அதனால்தான் அவனுடன் வேலைசெய்யும் திருமதி கண்மணி செல்வன், ‘உன்ரை விவேகத்துக்கு உன்னிட்ட கொஞ்சம் வேகம் மட்டும் இருந்திட்டா நீ எங்கையோ இருக்கவேண்டிய ஆள்’ என்று சொல்லியிருக்கிறாள் போலும்.

அதுமட்டுமில்லை. எதையும் வித்தியாசமாகச் செய்வதென்பது அவனது மனநிலையே ஆகியிருந்தது. எப்படி அவ்வாறெல்லாம் அவனால் சிந்திக்கமுடிகிறதோ? மற்றவர்கள் யோசிக்காத ஊடுகள் கண்டு அந்த இடங்களில் அபிப்பிராயம் சொல்வதும், செயல்படுவதும் சிலநேரங்களில் அந்தத் தன்மைகளைச் சிலாகிக்கிற எனக்கே இம்சையாகி இருக்கின்றன. ஆனாலும் அவன் இவற்றையெல்லாம் வலிந்து செய்வதில்லை என்பதில்தான் இந்த நட்பு இவ்வளவு காலமும் இழுபட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.

வீடு மாறுவதிலுள்ள சிரமத்தை விட்டுவிடலாம். ஒருமாத முன்னறிவித்தல் இல்லாமல், அடுத்த கிழமை அறையை விட்டுவிடப் போகிறேனென்றால், கொடுத்த முன்பணத்தை யார் தூக்கிக் கொடுத்துவிடப் போகிறார்கள்? மிஸிஸ் பெர்னாண்டோ முன்பணத்துக்கு எதுவும் செய்துவிடமாட்டாள்தான். ஆனாலும், நீ முன்னரே சொல்லிவைக்கவில்லை, வேறு யாராவது வாடகைக்கு வந்து தருகிற பணத்தில்தான் உனது முன்பணத்தைத் திருப்பித்தர இயலுமென்றோ, உடனடியாக இல்லை, இரண்டு வாரம் கழித்து வா என்றாலோ என்ன செய்வது?

நான் பேசி ஏதாவது ஒழுங்குசெய்வேன் என எண்ணியிருப்பானோ? பணமாகவும் எதுவும் உதவி செய்துவிட முடியாத நிலைமை எனக்கு. அதனால்தான் சொல்லியிருந்தேன், ‘அட்வான்ஸை திருப்பியெடுக்கிற பொறுப்பு உன்னோட’ என்று. ‘அதை நான் பாத்துக்கொள்ளுறன்’ என்றிருந்தான்.

எப்படி பணத்தைத் திரும்பப்பெறப் போகிறான்? மிஸிஸ் பெர்னாண்டோவோ கண்டிப்பான மனுஷி.

மிஸிஸ் பெர்னாண்டோவுக்கு வேறும் இரண்டு மூன்று வீடுகள் கொழும்பில் இருந்தன. வாடகைக்குக் கொடுத்திருந்தாள். மேலும் ஆயுள் காப்புறுதி முகவராகவும் வேலைசெய்தாள். இதனாலெல்லாம் அவள் வீட்டிலே தங்குகிற நேரம் குறைவாகவே இருக்கும். அடிக்கடி விகாரைக்குப் போவதையும் தவறாமல் செய்கிறவள். போன வாரத்தில் ஒரு மாலையில் வேலை முடிந்து வந்துகொண்டிருந்த என்னை இடையிலே சந்தித்தாள். ‘என்ன, உன் சிநேகிதன் இப்படியெல்லாம் செய்கிறான்? அங்கே அவன் உதறுகிற பழைய பேப்பர்களில் இருந்து தூசெல்லாம் எனது வீட்டுக்குள்ளே வந்து படிகிறது. அய்யோ, கரப்பான் பூச்சிவேறு அந்தப் பழைய பேப்பர் கட்டுகளுக்குள் இருந்து தொலைத்துவிடப் போகிறது. அவனிடம் சொல்லி வை, அந்த பழைய பேப்பர்க் கட்டுகளை எந்தநேரமும் நோண்டிக்கொண்டிருக்க வேண்டாமென்று. பழைய பேப்பர்க் கடையிலே கொண்டுபோய்ப் போடச் சொல்லு.’

‘நான் சொன்னவுடன கேக்கவேபோறான்’ என்று நினைத்தாலும், ‘சொல்லுறன்’ என்று அவளுக்குச் சொல்லியிருந்தேன்.

ஸரமகோவிடம் இதைச் சொன்னபோது, ‘என்னிட்டையும் சொன்னாள்’ என்று அவன் சிரித்தான்.

அன்றைய முன்னிரவு நியூ கொலனியல் பாரில் கழிந்துகொண்டிருந்தது. பத்து மணிக்கு மேலே அங்கிருந்து கிளம்பி சாப்பாட்டுக்கு கொட்டாஞ்சேனைச் சந்தியிலுள்ள ஒரு கடைக்குச் சென்றோம். திரும்ப வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தபொழுது, அதுவரையிருந்த பேச்சின் திசையை மாற்றி, “அட்வான்ஸ் குடுக்க என்ன செய்யப்போறாய்?” என்று ஸரமகோவிடம் கேட்டேன்.

“வாற மாசம் பத்தாந்தேதி சனிக்கிழமை வீடு மாறுறதாய் இருக்கிறன். இன்னும் சரியாய் ரண்டு கிழமை கிடக்கு. சனிக்கிழமை நான் சாமான் தூக்கிறதுக்குள்ளை அட்வான்ஸ் மொத்தமும் தந்திடுவாள்” என்று நிதானமாய்ச் சொன்னான்.

“எப்பிடியடா? மிஸிஸ் பெர்னாண்டோவே சொன்னாளா?”

“வீடு மாறப்போற வி~யத்;தையே நாளைக்குத்தானே சொல்லப்போறன்.”

எனக்கு நம்பிக்கையில்லை, இவன் ரஹீம் காக்காவுக்குச் சொன்னபடி பத்தாம் திகதி வீடு மாறிப் போவானென்று. அறை பார்த்து ஒரு கிழமை ஆகின்றது, வீடு மாறுகின்ற வி~யத்தையே இன்னும் வீட்டுக்காரிக்குச் சொல்லாமல் இருக்கிறான், இவன் கடைசிநேரத்தில் கரச்சல்படப் போறான்.

அதை அவனிடமே சொன்னேன்.

“பாப்பம்” என்றான். சற்று யோசனையோடு சுணக்கமாய்ச் சொன்னதுபோல்தான் தோன்றியது.

பத்தாம் திகதி சனிக்கிழமை மாலை ‘புத்தக, பேப்பர்’ கட்டுகளை ஏற்ற ஸரமகோ வரச்சொல்லியிருந்தான். நான்கு மணியளவில் வந்துவிடச் சொல்லியிருந்தும் ஆறு மணிக்குச் சற்று முன்னராகத்தான் என்னால் அங்கே செல்ல முடிந்திருந்தது.

அட்வான்ஸ{க்கு என்ன நடந்திருக்குமென்று எண்ணியபடியே உள்ளே சென்றேன்.

ஸரமகோ சாமான்களை எடுத்து வெளியே வைக்க அப்போதுதான் ஆரம்பித்திருந்தான்.

“என்ன அவசரம், நான் வந்தபிறகு துவங்கியிருக்கலாம்தானே!” என்றேன்.

“வேன் வரப்போகுது. உன்னைப் பாத்துக்கொண்டிருந்தால் சரிவராதெண்டு நானே துவங்கியிட்டன்.”

“மிஸிஸ் பெர்னாண்டோ எங்கை? உள்ளை நிக்கிறமாதிரித் தெரியேல்லை.”

“அவள் வெளியிலை போயிட்டாள்.”

“அப்ப அட்வான்ஸ்..?”

“காலமையே வாங்கியிட்டனே” என்றான்.

நான் அதிர்ந்துபோனேன்.

வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் ஒரு மனக் கசப்பு வளர்ந்த பின்னரும், தகுந்த முன்னறிவித்தல் எதுவுமில்லாமல் பத்து நாளையில் வீடு மாறப் போவதாகச் சொன்னதும் அட்வான்ஸை எப்படி மிஸிஸ் பெர்னாண்டோ தூக்கிக்கொடுத்தாள்?

என் திகைப்பைப் பார்த்து ஸரமகோ சிரித்தான்.

மேலே எதுவும் பேசாமல் புத்தகக் கட்டுகளை எடுத்து வெளியில் வைக்க ஆரம்பித்தோம். இன்னும் சில பேப்பர்க் கட்டுகள் மிச்சமிருந்த நிலையில், “கொஞ்சம் பொறு, நான் எப்பிடி அட்வான்ஸை சுணக்கமில்லாமல் எடுத்தனெண்டு இன்னமும் நீ மண்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறது தெரியுது. இப்ப கீழ பார், உனக்கே எல்லாம் விளங்கும்” என்றுவிட்டு பேப்பர்க் கட்டுகளில் ஒன்றை மெதுவாகத் தூக்கினான்.

நான் கீழே பார்த்தேன்.

கரப்பான் பூச்சிகள்! கொழுத்தவை, சிறியவை, குஞ்சு குருமனுகள் என ஒரு நூறுக்கும் மேலான கருப்பு உருண்டைகள் மறைவிடம் தேடி அங்குமிங்குமாய் ஓடித் திரிந்தன. நான் பாய்ந்து விலகினேன்.
கரப்பானிலிருந்து ஒரு மோசமான வெடில் வீசிக்கொண்டிருக்கும். அதைவிட மோசமான வாடைகொண்டது அவை இட்ட கறுப்பு எச்சக் குறுணிகள். ஒரு பேப்பர்க் கட்டுக்குக் கீழேயே இவ்வளவு இருக்கின்றனவெனின், மீதிக் கட்டுகளுக்குக் கீழே எவ்வளவு ஆயிரம் இருக்கக்கூடும்! எனக்குக் குமட்டல் வருவதுபோல இருந்தது.

“தூக்கு, முதல்ல வெளிய போகவேணும்.” நான் குனிந்து இரண்டு கட்டுக்களை கரப்பான்களை உதறுவதற்காக இரண்டு மூன்று முறை பொத்துப்பொத்தென்று அவற்றை நிலத்தில் தூக்கிப் போட்டுவிட்டு எடுத்துக்கொண்டு விரைவில் வந்துவிட்டேன். அப்போதுகூட சளிஞ்சுபோன ஒரு கொழுத்த கரப்பானின் உடல் எனது சப்பாத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பதை என்னால் காண முடிந்திருந்ததில் உடம்பு பதறிக்கொண்டிருந்தது. மீதிக் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு ஸரமகோ நிதானமாக வெளியே வந்தான்.

“இப்ப தெரிஞ்சிருக்குமே மிஸிஸ் பெர்னாண்டோ ஏன் அட்வான்ஸைத் தந்து என்னைத் துரத்திவிடுறமாதிரி அவசரப்பட்டாளெண்டு. இதுதான் நான் பாவிச்ச ஆயுதம், தம்பி. எனக்கே இந்தப் பழைய பேப்பர்க் கட்டுக்களை குப்பையிலை போட்டிடலாமெண்டுதான் முதல்ல இருந்துது. ஆனா எண்டைக்கு மிஸிஸ் பெர்னாண்டோ என்ரை அறை வாசல்ல வந்துநிண்டு, ‘என்னாலை இதுகளை கண்ணாலை பாக்கவும் ஏலாது, ஸரமகோ. அண்டைக்கு வீட்டுக்குள்ளை வந்திட்ட ஒரு கரப்பான்பூச்சியைப் பிடிச்சுக்கொண்டுபோய் வெளியிலைவிட நான் பட்டபாடு இருக்கே, அது அந்த புத்தபெருமானுக்குத்தான் தெரியும். நான் ஒரு உண்மையான புத்தசமயக்காரி தெரியுமோ? என்ரை வாழ்க்கையில் ஒரு உயிரைக்கூட நான் இதுவரை கொலைசெய்தது கிடையாது. இந்தக் கிழவியிலை கொஞ்சம் அனுதாபம் வை, ஸரமகோ. இந்தப் பழைய புத்தகங்கள் பேப்பர்க் கட்டுக்களை ஏன் நீ பழைய பேப்பர்க் கடையிலை போடக்கூடாது? நல்ல காசுகூடக் கிடைக்கும்’ என்று சொன்னதுதான் எனக்கு வாசியாய்ப் போச்சு. இந்த ஆயுத ஏவலிலதான் மிஸிஸ் பெரனாண்டோ அட்வான்ஸை தூக்கித் தந்தது. எனக்குத்தான் வீடு மாறுற தேவையிருந்தது. இதுகளின்ர புண்ணியத்தால என்னை வீட்டைவிட்டுக் கிளப்புற தேவையை மிஸிஸ் பெர்னாண்டோவுக்கு நான் உண்டாக்கியிட்டன்” என்றான் ஸரமகோ.

கரப்பான் பூச்சியென்றால் எனக்கும் அருவருப்புத்தான். என்றாலும் ஸரமகோ சொன்ன காரணத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடியாதிருந்தது.

எண்பத்து மூன்றாமாண்டுக் கலவர காலத்தில் முழுக் கொழும்புப் பகுதியிலுமே இந்த வட்டாரத்தில்தான் அதிகமான கொலைகள் விழுந்திருந்தன. அந்தளவுக்கு காப்பார், கேட்பார் இல்;லாத தமிழரின் வதைநிலமாக இது இருந்தது. வீதியோரத்தில் நான் கண்ட காட்சிகளும், இரவிரவாய்க் கேட்ட மரண ஓலங்களும் இந்தப் பகுதியிலுள்ள எந்தச் சிங்கள மனிசரையும்தான் இந்த விஷயத்தில் என்னைச் சந்தேகிக்க வைக்கும்.

மிஸிஸ் பெர்னாண்டோவே ஆயுதமெடுத்துகொண்டுபோய் எந்தத் தமிழனையாவது வெட்டாமல் இருந்திருக்கலாம். நடந்த கொலைகளை இனத்துவம் மதாபிமானம் காரணமாய் நியாயப்படுத்தாமலாவது இருந்திருப்பாளா? ஸரமகோ இதையெல்லாம் யோசிச்சிருக்க வாய்ப்பில்லை. கரப்பானுக்கு பயமென்றால் பூச்சி மருந்து வாங்கிவைத்துவிட்டு பேசாமலிருந்துவிட்டிருப்பாளே.

“நீ விட்ட கரப்பான் படைக்குப் பயந்து மிஸிஸ் பெர்னாண்டோ அட்வான்ஸை தூக்கித் தந்ததெண்டு நீ நினைக்கிறாய். கரப்பானை ஒழிக்கிறதுக்கு இப்ப நல்லநல்ல பூச்சிமருந்தெல்;லாம் வந்திருக்கு. நான் நினைக்கிறன், ஒருநாள் அவளுக்கு நாரிப்பிடிப்பு வந்திட்டுதெண்டு நீ தைலம்போட்டு உரஞ்சிவிட்டதாய்ச் சொன்னியே, அதை நினைச்சுதான் உன்னை இழுத்தடிக்காமல் அட்வான்சைத் தந்திருக்கிறாள்.”
“தன்னால ஒரு பூச்சியைக்கூட கொலைசெய்ய ஏலாது எண்டு மிஸிஸ் பெர்னாண்டோ சொன்னதை நீ அப்ப நம்பேல்லையோ?”

“அவ்வளவு அ ஹிம்சையுள்ள ஆக்கள் எங்கயுமிருப்பினம் எண்டதை என்னால நம்பவே ஏலாது. அந்த இனக்கலவர காலத்திலை அழிஞ்ச தமிழ்ச் சனத்தின்ரை கணக்குத் தெரியுமோ உனக்கு?” நான் சூடேறிக்கொண்டிருந்தேன்.

ஸரமகோ தன் இயல்பான இழிப்போடு என்னைப் பார்த்தபடியிருந்தான். பிறகு சொன்னான்: “என்ரை நம்பிக்கையை நான் அடைஞ்சதே இப்ப இருக்கின்ற மிச்சத்தின்ரை கணக்கினாலதானே.”

என்ன சொல்லுறான் இவன்?

“ராசன், இண்டைக்கும் கொழும்பில நீ இருக்கிறாய், நான் இருக்கிறன், இன்னும் எத்தினையோ தமிழ்ச் சனம் இருந்து வாழுதெல்லோ? எப்பிடியெண்டு நினைக்கிறாய்? நல்ல சனங்கள் எங்கயும் இருக்குதுகள், மச்சான். அதுமாதிரி மிஸிஸ் பெர்னாண்டோவையும் நல்ல ஒரு புத்தசமயக்காறியாய் நான் நம்பினன். அதாலைதான் என்ரை ஆயுதங்களும் அவவிலை வேலை செய்துது. பழைய பேப்பர்க் கட்டுக்களை எறியுற எண்ணம் இப்ப என்னிட்டை இல்லை. ஏனிண்டா ரஹீம்காக்காவையும் நல்ல ஒரு முஸ்லீமாய் நான் நம்புறன். சரி, வேன் வந்திட்டுது, வா வந்து கொஞ்சம் கைகுடு” என்றுவிட்டு வாசலடிக்கு நடந்தான் ஸரமகோ.

நான் திகைத்துப்போனேன்.

ஸரமகோ தன் அகண்ட இழிப்பைச் செய்தான். தாறுமாறான பெரியபெரிய பற்களில்கூட ஒருவர் அந்தளவு அவலட்சணமில்லாமல் சிரிக்க முடியுமோ?

“இன்னுமேன் அங்க நிக்கிறாய்? வா..வா” என்றான்.

சந்தியில் நின்ற அரசமரத்திலிருந்து ஓர் இலை மெல்ல உதிர்ந்து இறங்கிவந்து என்மேல் வழிந்திறங்கியது. மிஸிஸ் பெர்னாண்டோவின் சாந்தமான பார்வை என் மேனியெங்கும் படர்வதுபோல் உணர்ந்தேன். ஸரமகோ சொன்ன மிச்சத்தின் கணக்கு இப்போது புரிவதுபோலிருந்தது.

– ஜீவாநதி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *