வைக்கோல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 812 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை…நாஞ்சில்நாடன்.


“34 18 59”

”ஆமாம் ஐயா!”

“மிஸ்டர் எல்.ஆர்.கேட்டன்?”

”இல்லை ஐயா! வெளியே போயிருக்கிறார்!”

“எப்போது திரும்ப எதிர்பார்க்கப்படுகிறார் என்று தயவு செய்து சொல்ல முடியுமா?”

“தெரியாது… நீங்கள் யார் பேசுவது?”

”நான் வால்ஸ் (இன்டியா) லிமிடெட்டிலிருந்து சோமசுந்தரம் பேசு கிறேன்… இன்று காலை பத்தரை மணிக்கு – பாம்பே டூ பாராபங்கிக்கான ஒரு கன்ஸைன்மெண்டை எடுத்துக் கொள்வதற்கு இரண்டு லாரிகள் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். மணி பத்தே முக்கால் ஆகிவிட்டது. இன்னும் காணோம்… அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா…?”

”இல்லை ஐயா! அவர் வந்ததும் உங்களுக்கு டெலிபோன் செய்யச் சொல்கிறேன்…உங்கள் நம்பர் என்ன என்று சொல்ல இயலுமா?”

“எடுத்துக் கொள்ளுங்கள்… 375898.395902…”

“நன்றி-அவர் வந்ததும் சொல்கிறேன்…”

தொலைபேசியைக் கிடத்திவிட்டுச் சோமசுந்தரம் டிபார்ட் மெண்டுக்குள் நுழைந்தான். கார்பென்டர்கள் மும்முரமாக பேக் செய்து கொண்டிருந்தனர். மொத்தம் பத்தொன்பது பெட்டிகள். மரப் பெட்டி கள். நேற்றே பன்னிரண்டு ஆகிவிட்டது. காலையில் மேலும் மூன்று பெரிய பெட்டிகள் ஆகிவிட்டன. இன்னும் மூன்று பெரிய பெட்டிகளும் சில்லரைச் சாமான்கள் போடுவதற்கான கடைசிப் பெட்டியும்தான் பாக்கி. அரை மணி நேரத்தில் ஆகிவிடும்.

பிரஷ் வைத்து யாரிடமிருந்து யாருக்கு என்பதைப் பெட்டிகள் மீது பிரகாஷ் எழுதிக் கொண்டிருந்தான். பாராபங்கி என்பதில் ‘என்’ விடு பட்டுப் போனதைத் திருத்தச் சொன்னான் சோமசுந்தரம். பதினொன்றுக் குள் டிரக்குகள் வந்துவிட்டாலும் இரண்டு மணிக்குள் லோடிங் ஆகி விடும் என்று எண்ணினான்.

“வண்டி எப்போதையா வருகிறது?”

பாரமேற்றுபவர்களின் தலைமையாள் கேட்டான்.

“வந்துவிடும். பதினைந்து நிமிடங்களுக்குள்…”

இருக்கையில் வந்து அமர்ந்து, ஆக்ட்ராய் இன்வாய்ஸ் டைப் செய்யப்பட்டிருந்ததைச் சரி பார்த்துக் கையெழுத்துப் போட்டான். அடுத்து மெஷினைச் சேர்ப்பதற்காக உதிரிச் சாமான்களுக்கு இரண்டு சப்ளையர்களை ஞாபகமூட்டினான். இன்னும் டிரக்குகள் வரவில்லையே என்பது ஞாபகம் வந்தது.

“இஸ் இட் ஸ்பீட் காரியர்ஸ்?”

“எஸ் பிளீஸ்…!”

“மிஸ்டர் எல்.ஆர்.கேட்டன்?”

“அவர் வெளியே போயிருக்கிறார்…!”

“நீங்கள் யார் பேசுவது?”

“இங்குள்ள டைப்பிஸ்ட்…”

“வேறு யாரும் பொறுப்பான ஆள் இருந்தால் பேசச் சொல்லுங்கள்…”

“ஒரு நிமிடம், இங்கே டிராஃபிக் மானேஜரோடு பேசுங்கள்…” “ஹலோ…!”

“தயவு செய்து சொல்லுங்கள்…”

“இன்று காலை பத்தரை மணிக்கு இரண்டு டிரக்குகள் தருவதாக உங்களது மிஸ்டர் கேட்டன் உறுதி சொல்லியிருந்தார். மணி பதி னொன்றே கால் ஆகிவிட்டது. லோடிங் ஆட்கள் வந்து காத்திருக் கிறார்கள். டிரக்குகள் எப்போது வரும் என்று சொல்ல முடியுமா?”

“வந்து விடும்… மிஸ்டர் கேட்டன் அதற்காகத்தான் வெளியே போயிருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் வந்துவிடும்…”

ஒருவகை இருப்புக் கொள்ளாத நிலை சோமசுந்தரத்தின் மனத்தில் பரவியது. ஃபோர்மேன் வேறு வந்து லாரிகள் எப்போது வருகின்றன என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

இரண்டு லோக்கல் கால்களுக்குப் பதில் சொல்லிவிட்டு மீண்டும் டிபார்ட்மெண்டுக்குள் போனான். வண்டி வந்துவிட்டதா என்று யாரோ கேட்டார்கள். அனிச்சையாகவே இல்லை என்று பதில் சொன்னான்.

இந்த டிரான்ஸ்போர்ட் ஆட்களே இப்படித்தான். ஒன்பது மணி என்றால் பத்தரைக்குத்தான் வருவார்கள். டிராஃபிக் ஜாம், போலீஸ் தொந்தரவு, விபத்து என்று ஏதாவது வழக்கமான காரணங்கள். மற்றவர்களின் கவலை அவர்களுக்குப் புரிவதேயில்லை.

சோமசுந்தரம் புகழ் வாய்ந்த ஒரு டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் கம்பனியின் ஸ்டோர் கீப்பர். மாதத்தில் மூன்று வைன்டிங் மெஷின்கள் செய்கிற திறன் அவர்கள் டிவிஷனுக்கு உண்டு. பக்கத்துக்கு அறுபது கொண்ட நூற்றிருபது ஸ்பின்டில்மெஷின் இலட்சத்து எழுபத்தையா யிரம் விலை. கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து அடி நீளம் வரும். மெஷினை அசெம்பிள் செய்து நிறுத்திய பிறகு அதைப் பிரித்து மரப்பெட்டிகளில் பேக் செய்து, இரண்டு லாரிகள் ஏற்பாடு செய்து லோடு ஏற்றிப் பாதுகாப் பாக அனுப்புவது சோமசுந்தரத்தின் கடமைகளில் ஒன்று.

ஆறு மாத காலமாகத்தான் அவன் இந்தப் பொறுப்பில் இருக்கிறான்.

ஆனால் இந்த முறை கவலைக்குக் காரணம் உண்டு. அன்று நாள் டிசம்பர் இருபத்துமூன்று. இருபத்து நாலும் இருபத்தைந்தும் விடுமுறை கள். இருபத்தைந்துக்குள் மெஷின் அனுப்பப்படும் என்பது கோடௌன் ஆர்டர் நிபந்தனைகளில் ஒன்று. தவறினால் பெனால்டி கிளாஸ் வேறு பய முறுத்தியது. எனவே இந்த வைன்டிங் மெஷினை அசெம்பிளிக்கு எடுத்து துக் கொள்ளும்போதே அவனுடைய சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஃபோனில் சொல்லியிருந்தார். “இருபத்து மூன்றுக்குள் மெஷின் போகும்படியாகப் பார்த்துக்கொள்” என்று.

இருபதாம் தேதியே அனுப்பி விடலாம் என்பது சோமசுந்தரத்தின் நம்பிக்கை. ஆனால் போதாத காலம். ‘ஆமதாபாத்திலிருந்து பதினைந் தாம் தேதி அவனுடைய சப்ளையர் அனுப்பிய நான்கு பெட்டிகள் பதி னெட்டில் பம்பாய் அடையவில்லை. சாதாரணமாக மூன்று நாட்கள்தான் ஆகும். தவறினால் நான்காவது நாள் காலையில் பெட்டி வாசலில் கிடக்கும். நான்கு பெட்டிகளில் நூற்றிருபத்தைந்து கோன் ஹோல்டர்கள். அது இல்லாமல் மெஷின் மூளியாக நின்று கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் பம்பாய்க் கிளையையும் ஆமதாபாத் கிளையையும் துளைத்துக் கேட்டு, அதன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டருக்கு அறிவித்து, அவர் பரோடா, ஜாம்நகர், சூரத், நவ்ஸாரி எங்கும் டிரங்க்கால் போட்டு கடைசியில் பல்சார் கிளைக்குத் தவறிப் போய்ச் சேர்ந்து விட்டிருந்த பெட்டிகள் பம்பாய்க்குத் திரும்பி வர இருபத்திரண்டு ஆயிற்று. எனவே இந்த மெஷின் இன்று போயாக வேண்டும் என்று சோமசுந்தரம் பரபரத்தான்.

மணி பதினொன்றே முக்கால்.

எரிச்சல் வந்தது. எல்லாம் சோதனை போல் வருகிறதே என்று தோன்றியது. இதற்குமுன் இந்த டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு அவன் பிஸினஸ் தந்ததில்லை. ஆனால் ஹெவி என்ஜினீயரிங் டிவிஷனைச் சேர்ந்த ஆபீசர் ஒருவர் சிபாரிசு செய்தபோது மறுக்க முடியவில்லை. எனவேதான் இவர்களுக்குக் கொடுத்தான். இப்படிக் கழுத்தை வெட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

மீண்டும் ஸ்பீட் காரியர்ஸுக்குப் ஃபோன் செய்தான்.

”சோமசுந்தரம் பேசுகிறேன்… மானேஜரோடு பேச வேண்டும்.”

அவர்லைனில் வருவதற்காகக் காத்திருந்து-

“ஏற்கனவே பன்னிரண்டு ஆகிவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”

“மன்னியுங்கள்… உங்கள்டிரக்குகளுக்காகத்தான் மிஸ்டர் கேட்டன் காத்தாபஜார் போயிருக்கிறார்… எந்த நிமிடமும் நீங்கள் லாரிகளை எதிர்பார்க்கலாம்…”

பேக்கிங் முடிந்துவிட்டது. சாதாரணமாக மெஷின் போகின்ற அன்று வேலை நடப்பதில்லை. ஆங்காங்கே உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லா முகங்களும் இவனிடம் அதே கேள்வியைக் கேட்டன.

மீண்டும் இருக்கைக்கு வந்து எண்களைச் சுழற்றினான். “டிராபிக் மானேஜர் ப்ளீஸ்…”

“நான்தான்.”

“ஹலோ, என்ன நடந்தது…?”

“ஸாரி மிஸ்டர் சோமசுந்தரம். இதோ நானொரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு காத்தா பஜார் போகிறேன். மிஸ்டர் கேட்டன் ஏற்பாடு செய்த டிரக்குகள் வரவில்லை. என்றாலும் வேறு இரண்டு இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் வரும்…”

“ப்ளீஸ்…”

சோமசுந்தரத்தின் மனம் கணக்குப் போட்டது. பன்னிரண்டரைக்கு டரக்குகள் வந்தாலும் மூன்றரை மணிக்குள் லோடிங் ஆகிவிடும். லாரி ரசீதை வாங்கி உடனேயே ஸ்பெஷல் மெசஞ்ஜர் மூலம் ஹெட் ஆபிசுக்கு அனுப்ப வேண்டும். நாலு மணிக்குள் அங்கே கிடைத்தால் இன்சூரன்ஸ் முதலாய சடங்குகளுக்கு வேண்டிய பில்லுக்கு டெலகிராம் செய்ய வசதியாக இருக்கும்.

கொஞ்சம் ஆசுவாசப் பட்டான். மேசைக்கு வந்திருந்த அடுத்த மெஷினுக்கான பேலன்ஸ் லிஸ்ட்டைப் பார்வையிட்டான். ஸ்டாக்கில் பால் பெயரிங் இல்லை என்று கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது.

“மிஸ்டர் காமத், பத்தாம் தேதி 250 எண்ணங்கள் பிபி-101 வந்தனவே, என்ன ஆயிற்று?”

”எஸ். இருநூற்றைம்பது வந்தது. அதில் இருநூற்று முப்பதுதான் அப்ரூவ் ஆயிற்று. நூற்றுப்பத்து இந்த மெஷினுக்குக் கொடுத்திருக்கிறோம்..”

“ஸ்டாக்கிலே நூற்று இருபது இருக்கவேண்டுமே?”

“அதிலிருந்துதானே கோயம்புத்தூர் பிராஞ்சுக்கு எண்பது எண்ணங்கள் ரீபிளேஸ் செய்திருக்கிறோம்… சர்வீசிங் ஆர்டர் ஆஃப்…”

“ஓ எஸ்… அது எனக்குப் படவில்லை… ஓகே!”

மதிய உணவுக்காக மணி ஒன்றடித்தது.

‘இந்த டிரான்ஸ்போர்ட் ஆட்களுக்கு என்னவாயிற்று?’

சோமசுந்தரம் டயல் செய்தான்.

“உங்களுக்காகத்தான் டிராஃபிக் மானேஜர் காத்தா பஜார் போயிருக்கிறார்…”

“மிஸ்டர் கேட்டனிடம் இருந்து ஏதாவது தகவல்…?”

“நோ.”

டெலஃபோனை வைத்துவிட்டு கேன்டீனுக்குச் சாப்பிடப் போனான். சர்வரிடம் இரண்டு முறை எரிந்து விழுந்தான். இவனைப் பார்த்து ஜோக் அடித்த டைம் கீப்பரை முறைத்தான்.

ஒன்று இருபதுக்கு இருக்கைக்கு வந்தவனுக்கு ஒன்றும் ஓட வில்லை.மீண்டும் தொலை பேசியைச் சுழற்றினான்.

“ஸ்பீட் காரியர்ஸ் ஹியர்…”

“மிஸ்டர் கேட்டன் அல்லது டிராஃபிக் மானேஜர்…’

“மிஸ்டர் சோமசுந்தரம்… கவலைப்படாதீர்கள். டிரக்குகள்கிடைக்கும்.”

“எப்போது?”

”இன்னும் அரை மணி நேரத்துக்குள்…”

“அதெப்படி முடியும்? தகவல் எதுவும் வந்ததா?”

“இல்லை, நான் நினைக்கிறேன்…”

”உங்கள் நினைப்பை எல்லாம் குப்பைத் தொட்டியிலே போடுங் கள். ஆட்களுக்கு எவன் தாத்தாகம்பெனி ஓவர் டைம் தருவது?”

“சார்… நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள்…!”

“நான்சென்ஸ்!… அந்த நாய் மகனிடம் சொல். இனி வால்ஸ் இண்டியாகம்பெனிக்குள் நுழையக்கூடாது என்று.”

“என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இருநூறு ரூபாய் சம்பளத் துக்கு நான் இதுவும் கேட்க வேண்டியதாக இருக்கிறது!”

டெலஃபோனைக் கீழே வைத்தவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மணி இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இனிமேல் வேறொரு கம்பெனியை அணுகி, அவர்கள் லாரியனுப்பி… இன்று முடிகிற காரியமா?

இருபத்தாறாம் தேதி மெஷினை அனுப்பினால் என்ன என்று தோன் றியது. இதைச் சோமசுந்தரம் முடிவு செய்ய இயலாது. எனவே சீஃப் எக்ஸிகியூட்டிவுக்கு ஃபோன் செய்தான். ஆபரேட்டர் எடுத்தாள்.

“மிஸ்டர் தாருவாலா பிளீஸ்!”

“மிஸ்டர் சோமசுந்தரம்… அவர் டைரக்டர்களுடன் இருக்கிறார்.”

“அவசரமாக அவரோடு பேச வேண்டும்.”

“ஆனால் தனக்கு ஃபோன்கால்கள் எதுவும் அனுப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறாரே…!”

“இது அர்ஜெண்டான விஷயம் என்று சொல்லுங்கள்.”

“ஒன்று செய்யுங்கள், மிஸ்டர் சோமசுந்தரம்… அவரது டைரக்ட் நம்பரில் முயலுங்கள்…”

தொடர்பைத் துண்டித்து விட்டு ஐந்து நொடிகள் சிந்தித்தான். டைரக்ட் நம்பரைச் சுழற்றினான். 2. 5. 4. 8. 3…. 6.

“ஹலோ…”

அவரின் அழகான குரலை அவன் இனம் கண்டு கொண்டான்.

“குட் ஆஃப்டர் நூன் சார். சோமசுந்தரம் ஹியர்…”

“எஸ். சோமசுந்தரம்…”

மெஷினை இருபத்தாறில் அனுப்பலாமா?”

”ஏன்?”

“இன்னும் டிரக்குகள் வந்தாகவில்லை…சார்…!”

“அதை நாம் செய்யலாகாது. மில் ஆட்களுக்குச் சொல்லிவிட்டேன், இன்றைக்கே அனுப்பிவிடு. இல்லாவிட்டால் நம் பெயர் கெட்டுப் போகும். யாரையாவது அனுப்பிப் பார். அல்லது வேறு ஒரு டிரான்ஸ் போர்டில் முயற்சி செய்து பார்.”

மிக எளிதாகச் சொல்லிவிட்டார். செய்கின்ற போதல்லவா தெரி யும்? எவன் தாத்தா இப்போது டிரக்குகள் வைத்துக் கொண்டிருக்கிறான்? இதென்ன கடையில் வாங்குகின்ற சாதனமா?

சோமசுந்தரத்துக்குச் சிந்தனை செயல்படவில்லை. குழப்பமாக இருந்தது. கட்டளைகளை நினைத்தால் கலக்கமாகவும் இருந்தது.

டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் ஆளை அனுப்பிப் பார்ப்பது என்பது வீண் வேலை. வெறும் லெட்டர் ஹெட், ஒரு டெலிபோன், ஒரு டைப்பிஸ்ட், இரண்டு பார்ட்னர்கள் மட்டுமே கொண்ட கம்பெனி என்பது அவனுக்குப் புரிந்தது. அவர்கள் ஃபிளைட் ஓனர்கள் அல்ல, கமிஷன் ஏஜண்டுகள். எனவே ஆளை அனுப்புவதும் அனுப்பாததும் ஒன்றுதான்.

இப்போது என்ன செய்வது?

வேறு இரண்டொரு லாரிக் கம்பெனிகளை அவனுக்குத் தெரியும். அவர்கள் தென்னிந்தியாவில் இயங்குபவர்கள். இது உ.பி. போக வேண்டிய மெஷின். என்றாலும் அவர்களில் யாராவது உதவ முடியுமா என்று பார்க்கலாமே! அவன் யஷ்வந்த்ரா லாரி சர்வீசுக்கு ஃபோன் செய்தான்.

“மிஸ்டர்ரங்கனேக்கர் பிளீஸ்?”

“ரங்கனேக்கர்தான்.”

“ஹலோ… நானொரு நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்டிருக் கிறேன்… ஒரு உதவி செய்ய முடியுமா?”

இவன் சொன்னதையெல்லாம் அவர் கேட்டார்.

‘அவகாசம் போதாதே. இடையே ட்ரான்ஷிப்மென்ட்கூடாது என்று வேறு சொல்கிறாய்…?”

“என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

“ம்… ஒன்று செய்… கேஜி பிரதர்ஸ்க்கு ஃபோன் செய். 323192… 324576 மிஸ்டர் வீரையா என்று கேள். என் பெயரைச் சொல்…அவர் செய்ய முடியுமா என்று பார்ப்போம்.”

வீரையாவுடன் நீண்ட நேரம் உரையாடி, வாதாடி, இந்த உதவியை ஆயுள் உள்ளளவும் நினைவில் வைத்திருப்பேன் என்று சொல்லி எதிர் காலத்தில் முடிந்த அளவுக்கு பிஸினஸ் தருவதாக ஆசைகாட்டி-

வாடிபந்தரில் அன்லோடு ஆகிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஜே 7238-ஐ நான்கு மணிக்குத் தருவதாகவும், ஐந்தரைக்குள் இரண்டாவது டிரக்கை அனுப்புவதாகவும் வீரையா வாக்குறுதி அளித்தபோது, சோம் சுந்தரதுக்கு ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று தோன்றியது.

சீஃப் எக்ஸிகியூட்டிவுக்கு ஃபோன் செய்தான். ஐந்து மணி கடந்தால் பாரம் ஏற்றுபவர்களுக்கு மேலும் நூற்றைம்பது ரூபாய் தர வேண்டும் என்று இவன் சொன்னான்.

“திஸ் இஸ் வெரி பூவர் அரெஞ்ச்மென்ட் சோமசுந்தரம்…”

இவனுக்கு அவர் இயல்பு தெரியும். இப்படி அவர் சொல்கிறார் என்றால் – முட்டாள் பயலே! நீ என்ன வேலை செய்து பிடுங்குகிறாய் என்று பொருள். அவர் ஒருவனைச் சாதாரணமான ஆள் என்றால் அவன் கடைந்தெடுத்த ராஸ்கல் என்று அர்த்தம். எனவே அவர் செய்த ரிமார்க் சோமசுந்தரத்தின் இதயத்தில் தைத்தது.

“சாரி சார்… நாலரை மணிக்குள் உங்களுக்கு ரசீது கிடைக்கும்படி செய்கிறேன்…”

நல்ல காலமாக நாலே காலுக்கு முதல் டிரக் வந்தது. லாரியோடு ரசீதுப் புத்தகம் கொண்டுவந்த ஆளிடம் கெஞ்சி லோடிங் ஆரம்பிக்கும் முன்பே ரசீது போட்டு வாங்கி, தலைமை அலுவலகத்துக்கு டாக்ஸி மூலம் அனுப்பி-

பாரம் ஏற்றும் ஆட்களின் தலைவன்வந்து நின்றான். ஏன் நிற்கிறான் என்று சோமசுந்தரத்துக்குப் புரிந்தது. ”கவலைப்படாதே, கம்பெனி ஓவர் டைம் தரும்” என்றான்.

“அதில்லை ஐயா… ஏழு பேரில் மூன்று பேர் இன்றிரவு பூனா போகிறார்கள்… எனவே இரண்டாவது டிரக் லோடு செய்வதற்கு வேறு ஆட்கள் வேண்டும்…”

“அதைப் பின்னால் பார்க்கலாம்… முதலில் இதைச் சீக்கிரம் லோடு செய்யுங்கள்…”

”ஐலசா” குரல்கள் மராட்டி மொழியில் கேட்க ஆரம்பித்தன. தொழிலாளர்கள் எல்லோரும் கைகளில் சோப்பை வழித்துக் கைகழுவத் தயாரானார்கள். வேறு ஆட்களுக்கு இப்போது எங்கே போவது? சோம சுந்தரம் ஃபோர்மேனோடு கலந்து ஆலோசித்தான். இருவருமாகப் புஷ்டி யான ஆட்களில் நான்கு பேரை நிறுத்தி வைத்தார்கள்.

ஐந்தரை மணிக்கு சீஃப் எக்ஸிகியூட்டிவிடம் இருந்து சோமசுந்தரத் துக்கு ஃபோன் வந்தது.

“லோடிங் ஆரம்பித்து விட்டதா?”

“எஸ் ஸார்…

“இரண்டாவது டிரக் எப்போது கிடைக்கிறது?”

“ஆறு மணிக்குள்…”

”அச்சா…! நீ போகுமுன் எனக்கு ஃபோன் செய்… வீட்டில்தான் இருப்பேன்…”

ஆறு மணிக்கு முதல் லோடிங் முடிந்தது. ஆறரை மணிக்கு டிரான்ஸ் போர்ட் கம்பெனியிடம் இருந்து ஃபோன் வந்தது. வீரையா…

“சாரி சார்… இரண்டாவது டிரக் இன்னும் அன்லோடு ஆகவில்லை. நாளைக்கு எடுத்துக் கொள்ளட்டுமா? ரசீதுதான் இன்றைய தேதியில் தந்தாகிவிட்டதே….!”

“நோ மிஸ்டர் வீரையா… ஏற்கனவே லோடிங் பீபிளுக்கு ஓவர் டைம்… நாளைக்கும் வரச்சொன்னால் மீண்டும் பணம் வீண்…”

“ஓஹோ… ரைட்டோ சார்… அப்போ ஏழரை மணிக்குள் இரண்டாவது டிரக் வரும்…”

“சீக்கிரம் அனுப்பி வைக்க முயலுங்கள்.”

“முயற்சிக்கிறேன்”

வானம் இருண்டுவிட்டது. காம்பவுண்டில் லைட் இல்லை. ஒயர் சுருளைத் தேடி எடுத்து, பல்ப் வாங்கி, லைட் போட்டு-

சோமசுந்தரத்துக்குப் பசித்தது. இருந்தாலும் இப்போது வெளியில் போகும் நிலையில் இல்லை. நேரம் நொடி நொடியாக நகர்ந்தது. ஆறு ஐம்பது, ஐம்பத்து ஐந்து, ஏழு, ஏழு ஒன்று –

சரியாக ஏழே காலுக்கு வண்டி வந்தது. மிஞ்சி இருந்த நான்கு பேரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு பேரும் சட்டையைக் கழற்றிப் போட்டுப் பனியனிலிருந்த சோமசுந்தரமும் –

இந்தச் சத்தங்களோடு பாரமேற்றுவதும் உற்சாகமாகத் தானிருந்தது. ஒரு கடமையை முடித்துவிட இயலும் என்ற தெம்பு… வியர்வை சொட்டச் சொட்ட… கால்களில் புழுதியும் கைகளில் அழுக்குமாகப் பத்தொன்பதாவது கேசையும் லாரியில் ஏற்றிய பிறகு சோமசுந்தரம் ஒரு பெரும் சாதனையைச் செய்த மனநிலையில் இருந்தான்.

ஸ்டாம்ப் ரசீதில் கையெழுத்து வாங்கிப் பணத்தைக் கொடுத்து விட்டு, சோப்பை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனான். குளிர்ந்த நீரை முகத்தில் அறையும்போதே தோன்றியது:

‘நல்ல வேளை, எட்டரை மணிக்காவது வேலை முடிந்தது. ஒரு வேளை, இருட்டில் பாரம் ஏற்றும் போது பெட்டி ஏதாவது பிடியிலிருந்து சறுக்கினால், யாருக்காவது ஏதாவது நேர்ந்தால், எத்தனை பேருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று எண்ணுகையில் மனம் துணுக் குற்றது.

கையைக் கழுவிக்கொண்டு வந்து, பிரீஃப் கேசில் போட்டுக் கொண்டு வரும் டர்க்கிதுண்டில் துடைத்துவிட்டு சீஃப் எக்ஸிகியூட்டிவ் வீட்டு நம்பரைச் சுழற்றினான்.

“49 56 48?”

“ஆமாம்…”

“மிஸ்டர் தாருவாலா பிளீஸ்…”

“அவர் வெளியே போயிருக்கிறார். நீங்கள் யார் பேசுவது?”

“சோமசுந்தரம்… வைண்டிங் டிவிஷன்.. ரே ரோட்டிலிருந்து பேசுகிறேன்…அவர் எப்போது திரும்பி வருவார் என்று சொல்ல முடியுமா?”

”நோ.. ஒரு டின்னருக்குப் போயிருக்கிறார். இரவு பன்னிரண்டோ, ஒன்றோ ஆகலாம். ஏதாவது செய்திகள் உண்டா…?”

“மெஷின் லோடிங் ஆகிப் போயாயிற்று என்று சொல்லுங்கள்… நன்றி.”

ரிசீவரைக் கிடத்தும்போது, உற்சாகமெல்லாம் வடிந்து, அவன் வைக்கோலாக நின்றான்.

நன்றி: https://nanjilnadan.com/2012/08/12/வைக்கோல்/

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *