“இங்க பார்டா அநியாயத்தை….” வியப்பில் முணுமுணுத்து தான் விரித்திருந்த தினசரியைத் தூக்கிக் கொண்டு தலைமை இயக்குனர் அறைக்கு ஓடினார் ஏகாம்பரம். வயது ஐம்பது.
இவரும் அவரும் நிர்மல் – விமல் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் முதலாளிகள். ஆத்மார்த்த நண்பர்கள். ஒரே வயது.
“இந்த விளம்பரம் பாரு!” சொல்லி தினசரியை அப்படியே அவர் முன் விரித்து எதிரில் அமர்ந்தார் இவர்.
சந்திரசேகரன் கண்களில் விளம்பரம் பட்டது.
சின்னக் கட்டம் போட்ட விளம்பரம். அதில் சிறு அளவு புகைப்படத்தில் அழகு அம்சமாய் ஒரு பெண். கீழே….
“பெயர் : நிர்மலாராணி.
படிப்பு : பி.ஏ. கணனி, தட்டச்சு, சுருக்கெழுத்து.
வயது : 25 விதவை. உறவு சனம் இல்லா ஆதரவற்றவள்.
எந்த வேலையும் செய்யத் தயார்.
வேலை கொடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 810/ 8 , பாரதியார் வீதி, செயின்ட் ஜோசப் அநாதை இல்லம். காரைக்கால். 609 602. கைபேசி எண் : 98897 78688”
“வேலை கொடுக்கிறவங்கதான் விளம்பரம் கொடுப்பாங்க. இவள் வேலைதேடி வித்தியாசமாய் விளம்பரம் கொடுத்திருக்காள்! வேலை இல்லா திண்டாட்டத்தின் உச்ச கட்ட கொடுமை இது. பரவாயில்லே. புத்திசாலி!!” மெச்சிய சந்திரசேகரன்…..
“ஆமா…இதை ஏன் என்கிட்டே காட்டினே…?” கேட்டு எதிரில் அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்தார்.
“வேலை கொடுக்க…”
“நம்மகிட்டேயா…? என்ன வேலை…?”
“அதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் – பாணியில் எந்த வேலையும் செய்யத் தயார்ன்னு சொல்லி இருக்காளே…!” விஷமமாய்ச் சிரித்து கண்ணடித்தார் ஏகாம்பரம்.
சந்திரசேகரனுக்கு அதன் அர்த்தம் புரிய…உடலின் சூடு விர்ரென்று ஏறி 100த் தொட்டது.
“அப்போ உடனே தொடர்பு கொண்டு ஆளை வரவழை!” சொன்னார்.
ஏகாம்பரம் தினசரியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
மறுநாள் காலை மணி 10.00
தள தள மேனி. தக்காளி நிறம். எம்மதமும் சம்மதமான முகமென்பதால் நெற்றியில் திலகம் இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. அது அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அழகாக இருந்தது. முகத்தில் மெல்லிய சோக இழை மட்டும் இல்லை என்றால் இவள் விதவை என்று யார் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.
எதிரில் வந்து நின்ற அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அளவெடுத்துவிட்டார் சந்திரசேகரன். அருகில் ஏகாம்பரம்.
“உட்காரும்மா…”சொன்னார்.
அமர்ந்தாள்.
கைநீட்டி கோப்புகள் கொடுத்தாள்.
வாங்கி படிப்புகளைப் பார்த்தவர். முகத்தில் திருப்தி.
அதை அப்படியே அருகிலிருந்த நண்பன் கையில் நகர்த்தினார். பார்த்த அவருக்கும் திருப்தி.
“உன் விளம்பரத்தில் கண்டது போல எந்த வேலையும் செய்யத் தயாரா..?” ஏகாம்பரம் கேட்டார்.
“தயார் சார்..!”
நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“உனக்கு வேலை தர்றோம். அதுக்கு முதல் வேலையாய் உன் இருப்பிடத்தை எங்க குவார்ட்டரசுக்கு மாத்தனும்…”
“சரி சார்!!” நிர்மலாராணியின் முகம் பிரகாசமானது.
‘வேலை கொடுத்தாச்சு. என்ன வேலைன்னு சொல்லனுமே..!’ – சந்திரசேகருக்குள் யோசனை.
“ஆமாம். இப்படியொரு விளம்பரம் குடுத்திருக்கிறீயே..! இது யார் கொடுத்த யோசனை…?” ஏகாம்பரம் நாசூக்காக பேச்சை ஆரம்பித்தார்.
“வேலை தேடி அலுத்துப்போன விரக்த்தியில் நானே இப்படி கொடுத்தேன் சார்.”
“புத்திசாலித்தனமா யோசனை. ஆனா…”
“என்ன சார்…?”
“எங்களை மாதிரி நல்லவர்கள் கண்ணில் பட்டதால் இது மாதிரி உட்கார்ந்து பேசுறே. கெட்டவர்கள் கண்ணில் பட்டிருந்தால்..?”
‘ஏகாம்பரம் கோத்து வாங்கி ஆளை வழிக்குக் கொண்டு வரப் பார்த்து சேதியைச் சொல்லப்போகிறார்!’ – சந்திரசேகருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
நிர்மலாராணி யோசனையாய்ப் பார்த்தாள்.
“நேர்முகத் தேர்விற்குன்னு உன்னை இப்படி அழைச்சி தொட்டிழுத்தான்னா…?!” ஏகாம்பரம் கொக்கியைப் போட்டார்.
“வெட்டிடுவேன் சார்!” ராணி சடக்கென்று பதில் சொன்னாள்.
கேட்ட இருவருமே துணுக்குற்றார்கள்.
‘படுப்பேன் சார்ன்னு சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்த்தால்…!’ – சந்திரசேகரன் சமாளித்துக்கொண்டு…
“என்ன! இப்படி எதிர்பார்த்து கையில் கத்தி கபடா தயாரா எடுத்து வந்திருக்கியா ..?” கேட்டார்.
“இல்லே சார்!”
“பின்னே..?”
“கராத்தே தெரியும். சின்ன வயசுலேயே கத்திருக்கேன். தொட்ட அடுத்த வினாடியே அவனுக்கு மரண அடி!” சொன்னாள்.
இருவரும் அரண்டார்கள். உள்ளுக்குள் வேர்த்தார்கள்.
‘ஆளைத் தொடமுடியாது. அந்த தைரியத்தில்தான் இவள் துணிந்து இப்படியொரு விளம்பரம் கொடுத்திருக்காள். வேலை தருகிறேன் என்று சொல்லி இப்போது இல்லை என்று சொல்லி அனுப்புவது சரி இல்லை!’ அவர்கள் மனதில் ஓட…
“என்ன வேலை சார்..?” ராணியே அவர்களைப் பார்த்துக் கேட்டாள்.
“கணனி ஆப்ரேட்டர் வேலை!” ஏகாம்பரம், சந்திரசேகரன் இருவரும் ஏககாலத்தில் சொன்னார்கள்!!