வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 1,527 
 
 

வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  

நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம். இந்தத் தலக்கெட்டுக்கு அந்தக் கொடுப்பனை இல்லை. கேரள அரசாங்கம் சாராயக் கடையை அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக்கொண்ட பிறகு, இப்போது வேலந்தாவளத்துக்குப் பெருமை சொல்ல மிஞ்சியிருப்பது கள்ளுக்கடை ஒன்று மட்டுமே. உடல் உழைப்பாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மானசீக மஸாஜ் பார்லர் அது.  

என்ன, உங்களுக்கும் வேலந்தாவளத்துக்கு வந்து கள்ளுக் குடிக்க வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசையா?  

வாருங்கள், வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது.  

கேரள மாநிலத்தின் எல்லைக் கோட்டின் மீதே அமைந்த அவ்வூருக்கு கோயமுத்தூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. பாலத்துக்கு அந்தப் பக்கமே அவை பயணம் முடிந்து திரும்பிவிடும். பாலத்துக்கு இந்தப் பக்கம் கேரளா. பாலம் முடிந்தவுடனே சொன்னிக்கைப் பக்கமாக, ஆற்றின் தெற்குக் கரையில் கள்ளுக்கடை. பாலத்திலிருந்து தாழ்வான பார்வை பார்க்கும்போதே தரையில் மிதக்கும் மனிதர்கள் தட்டுப்படுகின்றனர். கூச்சலும் குழப்பமுமான பன்மொழிப் பேச்சுச் சத்தங்களோடு தாளத்துடன் பாட்டுச் சத்தமும் கேட்கிறதா உங்களுக்கு?  

ஊருக்குப் புதிதாக வருபவர்களுக்கே உரித்தான ஆர்வத்தோடு பராக்குப் பார்த்தபடியே வந்து சரிவில் இறங்குகிறீர்கள். அழுக்கும் கந்தையுமணிந்த மனிதர்கள், உடலுக்கும் மனதுக்கும் ஆறுதலை, அந்த மகத்துவம் மிகுந்த பானத்தில் தேடிக்கொண்டிருக்கின்றனர். குத்தவைத்தும், மண்ணிலேயே அமர்ந்தும், நின்றும் எனப் பல மாதிரிகளில். அடேயப்பா, இவ்வளவு கூட்டமா என்ற வியப்பு உங்களுக்கு. உள்ளூர் குடிமக்கள் கொஞ்சம் பேர்தான். தமிழ்நாட்டில் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையுமே அரசாங்கம் அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக்கொண்டதால், எல்லையை ஒட்டிய தமிழக ஊர்களிலிருந்தும், அதற்கு அப்பாலிருந்தும் வருகிற வாடிக்கையாளர்களே அதிகம். உங்களைப் போலவே கோயமுத்தூரிலிருந்து கூட நகரப் பேருந்து பிடித்து இதற்கென வருகிறவர்கள் உள்ளனர். இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையுமல்லவா, அதனால் வார நாட்களை விடத் தெரக்கு.  

கடை வாசலெங்கும் நிறைந்திருக்கும் அவர்களின் நடுவே ஆங்காங்கு ப்ளாஸ்டிக் மக்குகள், மேனாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் நீண்ட முழு பாட்டில்கள் தட்டுப்படுகின்றன. கண்ணாடி டம்ளர்களோ, ப்ளாஸ்டிக் டம்ளர்களோ அல்லாமல் அந்த மக்குகளில்தான் கள்ளைக் குடிக்கின்றனர் என்பதையும்; கள்ளுக்கெனத் தனியே பாட்டில்கள் இல்லாமல் மேனாட்டு மதுவுடையதும் பீருடையதுமான பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர் என்பதையும் கண்டுகொள்கிறீர்கள். வெளியே இருந்து குடித்துக்கொண்டிருக்கும் மக்களால் ஆங்காங்கே வைக்கப்பட்டுவிடும் அவற்றை வெற்றிலை மென்றுகொண்டிருக்கும் வேலைக்காரியும், உயர்ந்த ஒல்லி வேலைக்காரனும் சேகரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பால் பிள்ளைவாதக் கால்கள் கொண்ட இன்னொரு வேலைக்காரர் கழுவிக்கொண்டிருக்கிறார்.  

வாந்தியெடுத்து வீலாகி, அதன் மீதே ஈ மொய்க்க மல்லாந்துவிட்டவனுக்குப் பக்கமே ஒருவன் போத்திறைச்சியோடு ஆப்பம் தின்றுகொண்டிருக்கிறான். ஊசி பாசிக்காரியின் இரண்டு வயதுப் பெண் குழந்தை மக்கை காலியாக்கிவிட்டு, தேர்ந்த குடிகாரர்கள் போல அழகாக வாய் துடைத்துக்கொள்கிறது. என்ன, திகைத்துப் போய் நின்றுவிட்டீர்கள்? இதுதான் அவர்களின் வாழ்க்கை; இதுதான் அவர்களின் அவலம்; இதுதான் அவர்களின் நிம்மதி. பிஞ்சானாலும், பழுத்ததானாலும்.  

ஒரு தலித் தம்பதிக்குள் ஸ்ருங்காரப் பிணக்கம், நல்ல சுதி. பின்னாலேயே ஆண்களின் சச்சரவில் புளித்த பச்சைத் தெறிகள் சராங்கமாக விழுந்துகொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் நிறையப் பேர் குடித்துக்கொண்டிருக்கின்றனர், அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். யாருமே இந்தப் பச்சைத் தெறிகள் பற்றிப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆவேசமாக ஒருவன், “நான் தாய்ப்பால் குடிச்சு வளந்தவன்டா,… உன்னையாட்ட தந்தைப்பால் குடிச்சு வளருல” என்கிறான்.  

இதுதான் அவர்களின் எதார்த்தம்.  

வாருங்கள், இன்னும் வகை வகையான அனுபவங்களை இங்கே பெறத்தானே போகிறீர்கள்! அதற்குள் இவற்றுக்கே நீங்கள் அசரவோ அதிரவோ செய்தால் எப்படி? இந்த சூழ்நிலையிலும் குடிப்பிடச் சாளையிலிருந்து, ‘வாராய் நீ வாராய்’ என்ற பாட்டுக் குரல் கேட்கவில்லையா? முடிவிலா மோன நிலையை நீ, மலை முடிவில் காணுவாய் வாராய் என்று அது அழைப்பது உங்களைத்தான். போங்கள். போய் கள்ளு பாட்டில் வாங்கி வாருங்கள். ஓரண்ணம் ரெண்டண்ணம் வீசினால், அவர்களின் முடிவிலா மோன நிலையை தற்காலிகமாகவேனும் நீங்கள் அடையலாம்.  

விநியோகிப்பிடத்தில் வாடிக்கையாளர்கள் வந்து வந்து, ‘சின்னக் கவுண்ரே,… எனக்கு ஒரு பாட்டல் குடுங்கொ’, ‘குமாரு,… நமக்கு ரெண்டு குடப்பா’ என்று வாங்கிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தென்னையொண்ணு குடுங்க, பனையொண்ணு குடுங்க என்று கேட்டு வாங்கிக்கொள்கின்றனர். பேதம் பிரித்துக் கேட்காதவர்களுக்கு தென்னங்கள்ளே கொடுக்கப்படுகிறது. அரை பாட்டில் கேட்கும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி பட்டையான மேனாட்டு அரை பாட்டிலிலோ, உருண்டையான சிறு பீர் பாட்டிலிலோ அல்ல; இந்த முழு பாட்டிலிலேயே பாதியளவு கள்ளு தரப்படுகிறது. பாதியளவு கள்ளு உள்ள பாட்டில்கள் இல்லாவிட்டால் கப்பெடுத்துட்டு வரச் சொல்கிறான் விற்பனையாளன. கழுவப்பட்ட மக்குகளை எடுத்து வரும்போது, அங்கே அதற்கு கப்பு என்று பேர் எனத் தெரிந்துகொள்கிறீர்கள். அதில் உத்தேச மதிப்பீடாக கண்ணால் அளவெடுத்தே பாட்டிலைச் சரித்து பாதியளவு ஊற்றுகிறான். மிச்சமுள்ள பாதி, அரை பாட்டில் கேட்கும் மற்ற யாருக்காவது வழங்கப்படுகிறது.  

சின்னக் கவுண்ரே என அழைக்கப்பட்ட குமார், கவுண்டர் ஜாதியினத்தவன் என நீங்கள் நினைத்திருக்கையில், அவன் வெளிப்படையாகவே ஜாதி தெரியக்கூடிய தலித் வாடிக்கையாளர்களிடம் கன்னடம் பேசுவது உங்களைக் குழப்புகிறது. உயர் ஜாதியினராகத் தெரியக் கூடிய சிலரும் அவனிடம் அதே போல கன்னடத்தில் பேசுகிறார்கள். விஷயம் இதுதான்: அவர்கள் கவுண்டர்கள் அல்ல, கௌடர்கள் எனப்படும் ஒக்கலிகர்கள். இங்கத்திய மக்களுக்கு கவுண்டர்களுக்கும் கௌடர்களுக்கும் வேறுபாடு புரியாமல் அவர்களையும் கவுண்டர் இனத்தின் வேறு குலம் எனக் கருதி, ஒக்கலிகக் கவுண்டர்கள் என்று சொல்வார்கள். வாஸ்த்தவத்தில் இங்கே பெருவாரியாக இருக்கும் வெள்ளாளக் கவுண்டர்கள், பூளுவக் கவுண்டர்கள் ஆகியோர்தான் கவுண்டர் இனத்துக்கு உட்பட்டவர்கள்.  

ஜாதிகள் பற்றி விலாவாரியாகப் பேசுவது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நானும் ஜாதி – மதம் பார்க்கிறவனல்ல. ஆனால், ஜாதிகள் வேண்டாமென்றாலும் நம் சமூகங்களில் ஒழித்துவிட முடிகிறதா? மேலும், இது கிராமப்புறம். ஏன், நகரங்களிலும், உங்கள் குடும்பத்தில் – தெருவில் – அலுவலகத்தில் ஜாதி குறுக்கிடாமல் இருக்கிறதா? சமூகம், அரசியல், கலை – இலக்கியம் எல்லாவற்றிலும் ஜாதி இருக்கிறது. இனம், மதம், அவற்றின் இன்னோரன்ன பிரிவுகள் இருக்கின்றன. இந்தியா முழுக்கவும் என்பது மட்டுமன்றி, அன்னிய நாடுகளிலும் இனப் பேதம், பிரிவு பேதம், அதன் சமூக – அரசியல் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. ஜாதி, மதம் இல்லாத மனித சமுதாயம் காலங்காலமாகவே வெறும் லட்சியக் கனவுதான். எதார்த்தம், நடைமுறை ஆகியவை எப்போதும் கனவுகளுக்கு எதிரானவை.  

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்களே அறிந்தோ அறியாமலோ உங்களுக்குள்ளேயும் ஜாதி – மத உணர்வுகள் இருக்கத்தான் செய்யும். கவுண்ரே என்ற அழைப்பையும், கன்னட உரையாடலையும் கேட்டு நீங்கள் குழம்பப் போய்த்தானே இப்போது இந்தப் பேச்சு வந்தது! சரி, இனி வேண்டாமென்றால் விட்டுவிடுகிறேன். நீங்கள் வந்தது கள்ளு குடிப்பதற்காக. உங்களின் இந்த ஓய்வு நாளை உற்சாகமாகக் கழிப்பதற்காக. அதில் குறுக்கிடாமல் விலகிக்கொள்கிறேன். நானும் நீங்களும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் வந்தால் கூட உங்களிடம் அட்சரம் மிண்ட மாட்டேன், போதுமா? 


இப்போது உங்கள் முறை. “கள்ளு என்ன விலை” என்று கேட்டு, இருபது ரூபாயை நீட்டியதும், “ஒண்ணார்ருவா சில்ற இருந்தாக் குடுங்கணா” என்றுகொண்டே பாட்டிலை எடுத்து வைக்கிறான் விற்பனையாளன். மீதிப் பணம் வாங்கிக்கொண்டு, பலகை மேல் வைக்கப்பட்ட பாட்டிலை எடுத்துக்கொள்ளும் நீங்கள், “என்னங்ணா மூடியில்லாம ஓப்பனா இருக்குது?” என்று சந்தேகிக்கிறீர்கள்.  

கணக்குகள் எழுதத் தொடங்கிவிட்ட விற்பனையாளன் நிமிர்ந்து உங்கள் முகத்தை அவதானிக்கிறான். “தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றீங்களா?”  

“ஆமாங்ணா, கோயமுத்தூர்லர்ந்து வர்றன்…”  

“கள்ளுக்கு மூடி போடக் குடாதுங்ணா. நொரை பொங்கிரும்” என்றுவிட்டு கணக்கில் மூழ்குகிறான்.  

பாட்டிலோடு படியிறங்குகிறீர்கள். தமிழ், மலையாள, கன்னடக் குரல்களின் நடுவே நரிக்குறவர்களின் – நாகரியோ என்னவோ பாஷை, அவர்கள் கூண்டுக்குள் வைத்திருக்கும் கதுவேரிகளைப் போலவே கீக்கலக்கோ கீக்கலக்கோ என்று கெச்சட்டம் போடுகிறது. ஆதிவாசிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மலசன் ஒருவன், உடும்பைக் கயிற்றில் கட்டிக் கோரத்துக் கொண்டு வர, அங்குள்ளவர்கள் விலை விசாரிக்கின்றனர். நீங்களும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஞாபகம் வர வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உங்களின் மிக அண்மையில், “ஆய்… ஊ…” என்று சத்தம் எழவே திடுக்கிட்டுத் திரும்புகிறீர்கள். சட்டை மேல் பனியன் அணிந்த ஒரு மனப்பிசகர், குங்ஃபூ போஸில் காற்றில் கைகள் வீசி, ஒரு காலில் அரைவட்டமாகச் சுழன்று, தூக்கிய மறு காலால் இல்லாத எதிரியின் முகரக்கட்டையைப் பேர்த்துவிடுகிறார். பிறகு சுற்றியுள்ளவர்களைக் கை நீட்டி விரல் துப்பாக்கியால், “ட்ரிஞ்சுக்கோவ்… ட்ரிஞ்சுக்கோவ்…” என்று சுட்டுவிட்டு, சட்டென முகத்தைப் பரிதாபமாக ஆக்கிக்கொண்டு, “சாமீ… டீ குடிக்கறக்கு ரெண்ட்ருவா குடுங் சாமீ…” என்று வெள்ளை வேட்டிக்காரரிடம் கையேந்துகிறார்.  

“நீயெப்ப டீக் குடிச்சிருக்கற ஜாக்கிசான்? தென்னம் பாலுதான குடிப்ப?” என்றபடியே பாக்கெட்டில் தொளாவும்போது, தலையைச் சொரிந்தபடியே சொத்தைப் பல் தெரிய அவ்வளவு வெகுளியாகச் சிரிக்கிறார். எல்லாத் தெருப் பைத்தியங்களையும் போலவே அவருக்கும் ஒரு கதை, அவர் பைத்தியமானதற்குக் காரணம், இருக்கிறது; அந்த சோகம் இப்போது எதற்கு?  

நீங்கள் வந்திருப்பது கொண்டாடுவதற்காக. எனவே, நீங்கள் பாட்டுக்கு குடிப்பிடத்துக்கு வருகிறீர்கள். சவுரியம் வேண்டுபவர்கள், சாவகாசமாக அமர்ந்து குடிப்பவர்கள், சத்தஞ் சள்ளுகளை விரும்பாதவர்கள், பாடக சிகாமணிகள், ரசிக சிகாமணிகள் ஆகியோருக்கான இடம் அது. சாக்கணாக் கடையும் அதோடே இணைந்திருக்கிறது. உட்காருவதற்கும் ஏனங்களை வைப்பதற்கும் பெஞ்சுகள்தான். ஏனங்கள் பெஞ்ச் உயரமாக இருக்கும் என்பது மட்டுமே வித்தியாசம். குடிமக்கள் அவற்றில் வழிந்திருக்க, தரையில் அமர்ந்து கள்ளுக் கேனில் தாளமிட்டபடி வெங்கலக் குரலில் பாடிக்கொண்டிருக்கிறார் பதிமலையான் பண்டாரம். குடிமக்களில் சிலர் தலையாட்டியபடியும், கைகளை அசைத்தபடியும் ரசித்துக்கொண்டிருக்கின்றனர்.  

காலி பாட்டில்களையும் கப்புகளையும் சேகரித்துக்கொண்டிருந்த உயரமான ஒல்லி வேலைக்கரன், “வாங் சார்,… வாங்! எடமிருக்குது வாங்! டேய், தள்ளிக் குக்குடா! நீயொருத்தனே ரெண்டாளெடத்துல நெரவீட்டிருந்தீன்னா வாரவீக குக்க வேண்டாமாடா?” என்று அத்தச்சோட்டுப் பெரியவரை அடே புடே போட்டு அதட்டி, உங்களுக்கு இடம் பண்ணிக் கொடுக்கிறான். அதைக் கேட்டு நீங்கள் தருகும்போது, வேலைக்காரன் உங்களது சுத்த சுகாதாரங்களைப் பார்த்து, “இங்கெல்லாம் அப்புடித்தானுங் சார், பதனாறடி தள்ளி நின்னு கையக் கட்டி, சாமீ சாமீன்னு கும்பட வேண்டியவன், பக்கத்துல வந்து குக்கிக்குவான். வரப்படாத எடத்துக்கு வந்தமுன்னா அப்புடித்தானுங். சுத்த பத்தமா இருந்தானுகன்னாலுந் தேவுல. கெரகத்த, தண்ணி வாக்கறானுகளா ஒண்ணா! பாருங் அவம் மேலுந் துணியுமெல்லாம்; தண்ணியக் கண்டே மாசமாயிருக்குமாட்டிருக்குது. நீங் உக்காருங் சார்” என்று இன்னும் கலவரப்படுத்துகிறான். நீங்களும் சங்கட்டத்தோடு அழுக்கு பெஞ்ச்சின் மீது கைக்குட்டையை விரித்து உட்கார்ந்துகொள்கிறீர்கள்.  

“சார், கப்பு வேணுங்ளா சார்? இருங் எடுத்தாரன்” என்று போகிறவன், தன் கைகளிலிருந்த காலி பாட்டில் மற்றும் கப்புகளின் சேகரத்தைக் கழுவப் போட்டுவிட்டு, கழுவப்பட்ட கப்பு ஒன்றை உங்களுக்காக எடுத்து வருகிறான். பக்கத்தானிடமிருந்த அரிப்பியை மட்டு உதிரும்படிக் கவிழ்த்துத் தட்டி சுத்தப்படுத்தி உங்களிடம் நீட்டுகிறான். “சாக்கணா என்ன வேணுங் சார்?” என்று கேட்டு, இருப்பவற்றை ஒப்பித்து, சாக்கணாக் கடை ச்சேச்சியிடமிருந்து வாங்கி வந்து கொடுக்கிறான். “வாங்கீட்டுப் போனதுக்கெல்லாம் கரெக்ட்டா காசு வாங்கிக்க கொத்தவர” என்று ச்சேச்சி குரல் கொடுக்கவும், “அதெல்லாம் நாம் பாத்துக்கறனுங் ச்சேச்சீ. சாரு நம்ம ரெகள்ருக் கஸ்ட்டம்பருதான்” என்று பதில் கொடுத்துவிட்டு, 

“இங்கெல்லாம் அப்புடித்தானுங் சார். பின்னக் குடுக்கறங்கற பேச்சே இருக்கப்படாது. தெரக்குல கெவுனிக்க முடியுங்ளா…? அலுங்காம முட்டீட்டுப் போயிருவானுக. கண்ணு தப்புனாப் போதும் – ரெண்டு பாட்டல் வாங்கீட்டு வந்து, ஒண்ணக் குடிச்சுப் போட்டு, ஒண்ண இப்புடியே இடுப்புல சொருகி, வேட்டிய மடிச்சுக் கட்டீட்டுப் போயிருவானுக. ஆனாட்டி உங்களப் பெலத்தவீககிட்ட அப்புடி கட்டன்ரைச்சா இருக்க முடியுங்ளா…? நீங்க எத்தன ரீஜண்டான ஆளு. அதனாலதான் நம்ம ரெகள்ருக் கஸ்டம்பருன்னு சொன்னன். அப்புடிச் சொல்லீட்டா அவியளுக்கும் ஏச்சுப்போட்டுப் போயிருவாங்களோன்னு சம்சியம் இரகாது பாருங். 

“பின்னியொரு காரியம்ங் சார்,… நம்முளுக்கு கப்பு பாட்டல் பொறுக்கறதுதான் வேல. அது கடை வேலைங் சார். சாக்கணாக் கடைக்கு கையாள் தனியாக் கெடையாது. அதோடொண்ணா இதையும் பாத்தம்னா, ச்சேச்சிக்குஞ் செரி, உங்களப் பெலத்தவீகளுக்குஞ் செரி,… ஒரு சகாயம். மனுசனுக்கு மனுசன் வேற என்னுங் சார்? அப்பற அவியளாப் பாத்து ரெண்டு – மூணு குடத்தா, பீடிக்குக் கீடிக்கு ஆகும். பின்னென்னுங் சார், நாமென்ன அதைய வெச்சு திப்புசுல்தான் கோட்டையா கட்ட முடியும்? இல்ல, நம்ம தருத்தரந்தான் தீந்தரப் போகுதா…? ஆனாட்டி இந்த மாறக் கச்சராப் பார்ட்டிகளுக்கெல்லாம் கள்ளு சாக்கணா வாங்கிக் குடக்கறக்கு நிக்கமாண்டனுங் சார். அதுகளே ஒர்ருவா ரெண்ட்ருவாய்க்கு சாக்கணா வாங்கீட்டு நக்கீட்டுக் குடிக்கறதுக. அதுகளுக்கு வாங்கிக் குடத்தா நம்முளுக்கென்ன ட்ரிப்சு கெடைக்கும்? அதெல்லாம் அவனுகளே போயி வாங்கிக்க வேண்டீதுதான். 

“அப்பற இன்னியொன்னுங் ஸார். எச்சக் கப்புப் பொறுக்கறவன்னாலும் நான் சாதீல ………. சாதி. அந்தசு கெவுரிதிய உட்டுக் குடக்க முடியுங்ளா…? இங்க வாரதுகள்ல ஈன சாதிகதான் தாஸ்த்தி. உங்களையாட்ட கோயமுத்தூரு கட்டி அனேக ஊருகள்ளயுமிருந்து வருவானுக. அவனுக என்னுதாம் பேண்டு போட்டு வந்தாலும், பொச்சுக் களுவீட்டு வந்தாலும், உங்களையாட்ட வெள்ளைஞ் சொள்ளைமா மினுக்குனாலும், ஈன சாதி, ஈன சாதி இல்லீன்னு ஆயிருமாங் ஸார்? பாத்ததுமே கண்டுபுடிச்சுப் போடுவேன். மசுருன்னாக் கூட அவனுகளுக்கு வாங்கிக் குடக்க நிக்கமாண்டன். தேவைன்னா நியே போயி வாங்கிக்கடா பண்ணாடின்ட்ருவன். இங்கத்தவனுகளுக்கு நம்மட சாதி என்னோன்னு தெரியறதுனால எவனும் நிமண்ட மாண்டான். பின்ன, அவனுக எச்சப் பாட்டலு – எச்சக் கப்பு பொறுக்கறதுக்கு நம்ம தலைல எளுதி வெச்சிருக்கறான். எச்சையத் துப்பி அளிக்க முடியுமா, அளீ லப்பர்ல அளிக்க முடியுமா? ஏதோ நம்ம கேடு காலம். இல்லீனா ஏருப் புடிக்கற கையி ஏனுங் எச்சக் கப்பு பொறுக்கோணும்? 

“எங் கதை கெடந்துசாது பெருங்கதை. ஆனாட்டி உங்களயப் பாத்தா,… மிந்திப் பாத்த கேவகமே இல்லியேங் சார்? மின்னப் பின்ன வந்திருக்கறீங்ளா…? எத்தறயோ பேரு வாராங்க போறாங்க. எல்லாத்தயும் பாக்கவா முடியும். ரெகள்ரா வந்து, இப்பாட்டப் பளக்கப்பட்டுட்டம்னு வெச்சுக்கங்… ஒரு சலக்காப் பாத்தம்னாலும், ஆனையாட்டப் பன்னெண்டு வருசமானாலும் மறக்க மாட்டனுங் சார். நீங்க இன்னைக்குத்தான் ப்பஸ்ட்டுங்களா? எந்தூருங் சார்? கோயமுத்தூர்ல எவடத்தாலீங்? அத்தத் தொலைலருந்து எப்புடி இங்க வந்தீங் சார்? 

“ஓ,… கதாசிரீரு சொல்லீங்ளா? அவுரு நமக்கு நல்ல பளக்கமுங்ளாச்சே…! குமாரில்லீங்,… அதானுங் அங்க கள்ளுக் குடக்கற பையன்,… அவுரோட சிநேகிதகார்ருதானுங் நம்ம கதாசிரீரு. எப்புடீம் எட்டுக்கொருக்கா இங்க குமாரப் பாக்க வருவாப்புடீங். வேலந்தாவளம்னு வந்துட்டா ஒரெட்டு வந்து பாக்காமப் போக மாண்டாருங். செரிச் செரி,… நீங் குடீங். நானிப்புடித்தேன் புடிச்சுப்போச்சுன்னா பேசு பேசுன்னு பேசீட்டே இருப்பனுங். மனுசனுக்கு மனுசன் வேற என்னுங் சார்?” என்றபடியே பந்நி எறைச்சி கேட்டவருக்கு சப்ளை செய்யப் போகிறான்.  

ஜாதி பேசாதே என்று கதாசிரியனைக் கதையிலிருந்து அக்கட்டால போகச் செய்துவிட்டீர்கள். ஆனாலும் பாத்திரங்கள் பேசுவதை என்ன செய்ய முடியும் உங்களால்? ஜாதிகள் இருந்தாலும் தொலையுது, ஜாதிப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் சரிதான் என்று ஏற்றுக் கொள்வதைத் தவுத்து!  

கள்ளை சோடா ஊத்தியா, தண்ணி ஊத்தியா, எப்படி நீர்க்கச் செய்வது என்று பக்கத்துப் பெரியவரைக் கேட்கிறீர்கள். “இல்லீங் பண்ணாடி. கள்ளுல அதொண்ணும் வேண்டீதில்லீங்கொ. அப்புடியே குடிக்க வேண்டீதுதான். அடீல மட்டு இருக்குது பாருங் சாமீ,… அது மட்லும் உள்ள வராம அரிச்சூத்திக்குங்கொ. பளக்கமில்லாதவீக மட்டக் குடிச்சா, வாயில வகுத்துல புடுங்கீரும்” என்று எச்சரிக்கிறார். நீங்களும் நிதானமாக அரித்து கப்பை நிறைத்துக்கொள்கிறீர்கள். கள்ளு வாசனை உங்களுக்கு ஒமட்டுகிறது. மேலும், வெச்சு வெச்சுக் குடிக்கிற கண்ணாடிப் பழக்கம் கொண்டவர் நீங்கள். அதனால் ஒரு மொறடு குடித்துவிட்டு வைக்கிறீர்கள். உங்களது முகமும் வாயும் கோணுகின்றன.  

“சாமீ,… அப்புடிக் குடிச்சா குடிக்க முடியாதுங் பண்ணாடி. வாய் வெச்சா எடுக்காம கப்பக் காலியாக்கீரோணும்” என்று பெரியவர் சொல்வதை முயன்று பார்க்கிறீர்கள். முடியவில்லை. மீன் ஒரு விள்ளல், கள்ளு ஒரு வாய்; கப்பைக் கிழங்கு ஒரு துண்டு, கள்ளு ஒரு வாய் என்று கஷ்டப்பட்டு இறக்குகிறீர்கள். அப்படியும் அரைக்காக் கப்புதான் தீர்ந்திருக்கிறது.  

மெல்லக் குடிக்கலாம். என்ன அவசரம்? வெச்சு வெச்சே குடியுங்கள், உங்கள் கண்ணாடிப் பழக்கம் போலவே.  


குடிப்பவர்கள் குடித்துக் கொண்டும், பேசுகிறவர்கள் பேசிக்கொண்டும், ரசிப்பவர்கள் ரசித்துக்கொண்டுமிருக்க, கள்ளுக் கேனில் ப்ளாஸ்டிக் தாளத்தோடு கள்ளக்குரலில் பதிமலையான் பண்டாரம் பாடிக்கொண்டிருக்கிறார்.  

“அலைபாயுவ்ங் கடலோரெளம்
இளமான்கள் போலே  
வுளையாடி  
இசைபாடி  
வுழியாலே  
உறவாடி  
இன்பௌவ்ங் காணலாம் –  
வுண்ணோடுவ்ம் முகிலோடுவ்ம்  
வுளையாடுவ்ம் வொண்ணிலவே ஏஏ…”
 

“அட்டகாசம்ங்ண்ணா…!”  

“அபாரம்! அருமெ!”  

– என்று பாராட்டுகள் எழுகின்றன.  

“கண்டசாலாவே எந்திரிச்சு வந்து பாடுனாப்புடி இருக்குதுங்ணா” என்கிறான் ஒருத்தன்.  

“அது கண்டசாலாவல்லப்பா. திருச்சி லோகநாதன்” என்கிறான் இன்னொருத்தன். 

“ஆரா இருந்தா என்ன, அவுரு எந்திரிச்சு வந்து பாடுனாப்புடியே இருக்குது.”  

பதிமலையான முகத்தில் அவையடக்கம் ஒளி வீசுகிறது. “எல்லாம் அந்தப் பதிமலையான் செயல்” என்று பதிமலை இருக்கும் திக்கைக் காட்டி கை கூப்பித் தொழுகிறார். துண்ணூற்றுப் பட்டை நடுவே வெளிவட்டச் சந்தனம், உள்வட்டக் குங்குமம் துலங்க, தெய்வீகம் மிளிரும் அவர் இப்படிக் கள்ளுக்கடையில் பாடுவது வினோதமாகத் தோன்றுகிறது உங்களுக்கு. அவருக்கு இருக்கிற ஐவேசுக்கு ஆர்க்கெஸ்ட்ரா, அசத்தப் போவது யாரு என்றெல்லாம் போகலாம்தான். ஆனால் அவரது ஆத்மார்த்தம் இந்தக் கள்ளுக்கடையிலல்லவா குட்டியாக்காரணம் போட்டுக்கொண்டிருக்கிறது!  

“இசைத்தமிழ் நீஈஈ செய்த  
அருவ்ஞ்சா… ஆதனை!  
நீஈஈ இருக்கய்யிலே எனக்கேன்  
பெருவ்ஞ்சோ… ஓதனை?” 

“ட்டிய்யாரு மகாலிங்கமேதான்! சம்சியமே இல்ல. அவுரேதான் மறு பொறப்பு எடுத்து வந்துட்டாரு…” 

“சில்ல்ல்ல்லென்று பூத்த
சிறுநெருஞ்சிக் காஆஆ…. ஆட்டினிலேஏஏ…”  

“ஆஹா! ப்பிறமாதம்!” 

“நில்ல்ல்லென்று கூறி  
நிறுத்தி வழி போ…ஓனாளே…”  

அறியாமலே உங்களின் கை அனிச்சையாக ராக சஞ்சாரத்தில் அலையாடுகிறது. தகுந்தாற் போல தலையும் அசைகிறது. தொகையறா முடிந்து, செந்தமிழ் தேன்மொழியாள் என்று பல்லவியை எட்டுக் கட்டையில் எடுத்ததுமே, சொல்லி வைத்த மாதிரி ஏக திக்கிலிருந்தும் கைத் தாளங்கள் எழுகின்றன. அதில் உங்களுடையதும் ஒன்று. பாடல் முடிவுற்றதும் கைத் தாளங்கள் கைதட்டல்களாகப் பரிமாணமடைகின்றன. ரசிகர்கள் நேயர் விருப்பம் கேட்கத் தொடங்கினார்கள். அவரும் சந்தோஷத்தோடு நிறைவேற்றி வைத்தார். ஆடாத தலையெல்லாம் ஆடியது. மும்முரமாகப் பாடு பளமை பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட நிறுத்திவிட்டு, பதிமலையான் பாட்டுக்கு செவி சாய்க்கத் தொடங்கினார்கள். பாட்டு லயிப்பில், இறங்காத கள்ளும் எறக்கத்துல சைக்கிள் போறாப்புடி தானாகவே போய்விட்டது உங்களுக்கே தெரியவில்லை.  

ஆனால் அதில் ஒன்றும் போதை ஏறியதாகக் காணோம். பீர் குடித்த மாதிரி லேசாக ஒரு பிருபிருப்பு, அவ்வளவுதான். “எச்சக் கப்பு பொறுக்கி வகுத்த நொப்புனாலும் குடியானவன் குடியானவன்தான்டா…” என்று யாருக்கோ சவுண்டு விட்டுக்கொண்டிருந்த கொத்தவரையைக் கூப்பிட்டு, இன்னொரு பாட்டில் வாங்கி வரச் சொல்கிறீர்கள். தென்னையா – பனையா என்று அவன் கேட்கும்போதுதான் அதன் வித்தியாசங்களைக் கேட்க முன்பே தவறிவிட்டதை எண்ணிக்கொண்டு விசாரிக்கிறீர்கள். “தென்னங் கள்ளுக்கு மப்பேறுங் சார்; பனங்கள்ளுல அத்தற மப்பு இரகாது. ஆனாட்டி நல்ல தூக்கம் வரும். அப்பறம் தென்ன சூடுங் சார்; பனை குளும. வெலையொண்ணும் வித்துவேசமில்லீங். பின்னொரு காரியம்ங் சார்,… தென்னங்கள்ளு வருச முச்சூடும் இருக்கும். பனங்கள்ளு சீசனுக்கு மட்லுந்தான். அப்புசி, கார்த்திக, மார்களி. அது தீந்துச்சுன்னா குளோஸ். உப்பவே பனங்கள்ளு கம்மிதானுங். ஆயிரம் – ஆயிரத்தெரநூறு லிட்டர் விக்கற எடத்துல, ரெண்டு கேஸ், மூணு கேஸ்தான் பனங்கள்ளுன்னாப் பாத்துக்கங்ளே! அது அத்தற மூவாகாதுங் சார்” என்றதும், மப்பேறாவிட்டாலும் பரவாயில்லை, அதன் சுவை மற்றும் குணநலன்களையும் பரீட்சிக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றுகிறது. “கள்ளுக்கு கையோட காசு குடுத்துத்தான் வாங்கோணும்ங் சார்” என்று உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போகிறான்.  

பனங்கள் இனிப்போடிருக்கிறது. வாசனையும் தென்னை போல் ஒமட்டவில்லை. இதம் பதமாக இறங்குகிறது. கள்ளுக் கப்போடு உங்களைக் கடந்து போகும் ஒருவன், “கௌங்குத் துண்டொண்ணு குடுங் ஸார்” என்று உங்களிடம் வாங்கி, ஒரே மூச்சில் காலியாக்கிவிட்டு, கப்பைத் துண்டை வாய்க்குள் வீசிக்கொள்கிறான். நீங்கள் அவித்த முட்டைக்கு ஆர்டர் கொடுக்கிறீர்கள். நேயர் விருப்பங்களில், “ஒரு கூடை சன் லைட்” என்கிறான் கலர் பனியன் வெடலைப் பையன். பக்கத்திலிருந்த சிநேகிதகாரன் அவனது பொடனியில் பொளோச்சென்று தட்டி, “எவன்டா திருவாத்தானா இருக்கற? அப்புடியாப்பட்ட பாட்டெல்லாம் பாடற வாயாடா அது? பண்ணாடி பூசாரியாக்கொ. மணவற கிணவறயல்லாம் சோடிப்பாரு. அவுரப் போயி அந்த மாறப் பாட்டப் பாடச் சொல்ற? பண்ணாடீ,… நீங்க இந்த மாறயே பளய பாட்டொண்ணு அம்சமா எடுத்துடுங் பண்ணாடி” என்றான். 

பதிமலையான் தொண்டைச் சங்கைத் திருத்திக்கொண்டு குரலெடுத்தார்.  

“ஒரு நாள் போதுமா…?  
இன்றொரு நாள் போதுமா…?  
நான் பாட  
இன்றொரு நாள் போதுமா…?”
  

“அப்புடிப் போடு தன்னானீன்னான்னாம்! கேட்டயாடா பூவாயா? எப்புடியாப்பட்ட பாட்டு,… அவுரு எப்புடியாப்பட்ட ஆளு!”  

“குழலென்றும்,..  
சஸசா – சாஸ ரிரிரீ-ரீரி  
யாழென்றும்…  
சஸ்ஸாச ரிர்ரீரி மம்மாம” 

“ராகத்த எப்புடி வளச்சுக் கட்டி இளுத்துட்டு வாராறு பாரு! கலைஞ்சானமுடா அவுரு! கலைம்பாமணி பட்டமே குடுக்கோணும்!”  

கலைஞானம் சற்று தொண்டையை நனைத்துக்கொண்டு வரப்பீடியை இழுத்துப் புகைவிட்டது. பண்டாரமெப்ப வாய மூடுவாரு, பெஞ்செப்ப காலியாகும் என்று காத்திருந்த மாதேரிப் பையன்களில் ஒருவன் பெஞ்ச்சில் இடது கையை வெறுங் கையாகவும், வலது கையில் கல்லை வைத்தும் கொட்டிக்கொண்டு, தாளம் போட்டபடி பாடத் தொடங்கினான். இன்னொருவன் ருவ்வாய்க் காசில் காலிப் பாட்டலில் தட்டி கண்ணாடி ஓசையும் சேர்த்தான். தரக்கேடில்லை. ஆனால் அந்த நேரத்தில், “ஆஹா… அமீது வந்துட்டாப்புடியப்பா!” என்ற குரல் எல்லோரது கவனத்தையும் திருப்பியது. கோவையிலிருந்து வரும் அவன் இங்கத்திய இன்னொரு நட்சத்ரப் பாடகன். ஆகையினால் ஆரவாரமான வரவேற்பு. அவனும் ஒரண்ணம் வீசிக்கொண்டு, அச்சம் என்பது மடமையடா என்று ஒரு இழுப்பு இழுக்க, நான் நீ என்று முண்டியடித்து தாளம் போடலானார்கள். நின்றபடியே பாடும் அவன் அங்குமிங்கும் ஆட்களிடம் ஓடி, கையைச் சுழற்றி அபிநயித்தான். உடலை முன்னுக்கு வளைத்துக்கொண்டே வந்து, ரெண்டாக மடித்தது போல் குனிந்தான். உச்சகட்டம் முடிந்ததும், “பாடுனா இந்த மாதிரிப் பாடணும்; இல்லாட்டி சாகணும்!” என்று சொல்லிக்கொண்டான்.  

அந்தத் தற்பெருமைக்காரனின் பாட்டு பிடித்தாலும், அவனது வாய்ச் சவடால் உங்களுக்குப் பிடிக்கவில்லை. பதிமலையானின் தன்னடக்கத்தை நினைத்துக்கொண்டு அவர் இருந்த திக்கில் திரும்பினால், அவரைக் காணோம். அவரும் அவனைக் கண்டுதான் விலகிச் சென்று, கள்ளுக்கடைக் கதவோரம் போட்டிருக்கும் மர நாற்காலியில் அமர்ந்திருக்கிற தாடிக்காரச் செக்கரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அமீதின் பாடல்களுக்கு ஏகோபித்த பாராட்டுகள். ஒருவன் பாராட்டியதோடு நில்லாமல், ஓடிப் போய் அரை பாட்டில் கள் வாங்கியாந்து சமர்ப்பித்தான். அதை அப்படியே அண்ணாக்க விட்டடித்தான் அமீது. அடி பாட்டிலில் மட்டு தனியே கழன்றது போல் நின்றது. கள்ளு வாங்கிக் கொடுத்த ரசிகனிடம் உங்குளுக்கு என்ன பாட்டு வேணுங்ணா என்று கேட்டு, அதையும் பாடினான். ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும், “பாடுனா அமீது மாதிரி பாடணும்; இல்லாட்டி சாகணும்” என்று சவடாலடித்தான்.  

இதைக் கேட்டு பையன்கள் எதிர்ப் பாட்டெடுத்தனர். அவர்களின் பம்பரக் கண்ணாலே பாடலுக்கு மற்ற சிலர் எழுந்து ஆடவும் செய்தனர். இருப்பினும் ஹமீது சம்மதிக்கவில்லை. தலையை வலுவாக இடம் வலம் ஆட்டிக்கொண்டு மறுத்தான். டெம்ப்போ பத்தல, ராகம் தப்புது என்றான். உடனடியாக அவன் வாளை மீனுக்கும் பாடவே, கைத்தாளங்களும் ஆட்டங்களும் சில்லுக் கிளப்பின. “பாடுனா இந்த மாதிரிப் பாடணும்; இல்லாட்டி சாகணும்! யாருகிட்ட,… அமீதுகிட்டயா…? அமீதுகிட்ட எவனும் நெருங்கக் கூட முடியாது” என்று கை முஷ்டியில் கட்டை விரல் உயர்த்தி ஆட்டினான்.  

இரண்டாவது பாட்டில் கள்ளு முடிந்தும் உங்களுக்கு மப்பு ஏறவில்லை. லேசான பிருபிருப்பு, சற்று மிதமானதாக ஆகியிருந்தது; அவ்வளவுதான். இனி பனை வேண்டாமென்று தென்னை ஒரு பாட்டில் வாங்கி வரச் செய்தீர்கள். நேரமாகிவிட்டதால் புளிப்பேறி, வாசனையும் காட்டமாகியிருந்தும் கூட உங்களுக்கு அது தொந்தரவாக இல்லை. கடுசான சில்லிச் சிக்கனைக் கூட கடித்து நொறுக்கிவிட்டீர்கள். ஆட்டம் பாட்டக் கொண்டாட்டங்களும் உற்சாகத்தைக் கிளப்பி, உங்களையும் ஆட்டம் போட வைத்துவிட்டது. எப்போதுமே நீங்கள் மேல்பார்வையால் பார்த்துக்கொண்டிருந்த அந்த விளிம்பு நிலை மக்களுடன் சேர்ந்து ஆடியது, மகத்தான மானுடக் கலப்பை உங்களுக்குள் தோற்றுவித்துவிட்டது. வாழ்வில் இதுவரை அனுபவித்திராத நெகிழ்வு. வாழ்க்கை, மனிதன், நேயம் என்கிற சொற்களுக்கெல்லாம் மெய்யான அர்த்தம் இங்கேதான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்கிறீர்கள். 

அப்போது உங்கள் மண்டைக்குள் ஒரு மினியேச்சர் ஒளி வட்டம் சுழலத் தொடங்குகிறது. அதன் அதிவேகத்தில் கண்கள் செருகி ஒருவிதமாய் வருகிறது. கொண்டாட்டம் போதும் என்று நிறுத்திக்கொண்டு, சாக்கணாக் கணக்கை செட்டில் பண்ணினீர்கள். கொத்தவரைக்கு ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுத்ததும், “டேங்க்குசுங் சார். எப்ப வந்தாலும் நம்மளயக் கூப்புடுங்” என்று சலாம் போடுகிறான். நீங்களும் தலையாட்டிக்கொண்டே எழுந்து ரெண்டெட்டு நடந்ததும் கால்கள் உலகளந்தன. மூன்றாவது அடிவைப்பில் கண்கள் இருட்டுக்கட்டி, குப்பறக்கா விழுந்துவிட்டீர்கள்.  


நீங்கள் விழிக்கிறபோது குடிப்பிடத்தின் ஒரு ஓரமாக சாக்கொன்றில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை அறிகிறீர்கள். சாயந்திரமாகியிருக்கிறது. இவ்வளவு நேரமா மயங்கிக் கிடந்தோம்? மணி எவ்வளவு? மணிக்கட்டைத் திருப்பியவர், ஐயோஓஓஓ என்று எக்கோவில் பதறுகிறீர்கள். வாட்சைக் காணோம். விரல்களைப் பார்த்தால் இரண்டு பவுன் மோதிரமும் இல்லை. கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி, சட்டைப் பையிலிருந்த செல்ஃபோன், பேன்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸ்… எதுவும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தால், நீங்கள் முன்பு பார்த்திருந்த எந்த வாடிக்கையாளரும் இல்லை. வேறு ஆட்கள்தான் குடித்துக்கொண்டிருக்கின்றனர். 

வெம்பறப்போடு எந்திரித்து, என்ன ஏதெனப் புரியாமல், இல்லாத பாக்கெட்டுகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, மூளிக் கையை வெறித்துக்கொண்டிருக்கும்போது, “சார்,… உங்க வாச்சு, பணம், செல்ஃபோனெல்லாம் கடை மேனேஜருகிட்ட இருக்குது” என்று சாக்கணாச் சேச்சியின் குரல்.  

அப்பாடா! சமாதானம். பயந்தபடி எதுவும் களவு போகவில்லையே…! விற்பனையிடத்துக்குப் போகிறீர்கள்.  

விற்பனையாளன் விற்பனை முசுவில் இருக்கிறான். அவனுக்கு இந்தப் பக்கம் ஒரு நாற்காலியில் தடித்த, வாட்டசாட்டமான நபர் பீடி வலித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் பக்கம் பெஞ்ச்சில் மெலிந்த குறுந் தாடிக்கார இளைஞன், ஏதோ மலையாளப் பத்திரிகையில் மூழ்கியிருக்கிறான்.  

“ஏனுங்க,… இதுல யாரு மேனேஜர்?” என்று கேட்கிறீர்கள். எல்லோருமே திரும்பிப் பார்க்கின்றனர். “ஓ…! நீங்கதானா? நாங் கூட ஆராச்சும் கள்ளு வாங்க நிக்கறவிகளாக்கும்னு நெனச்சுட்டைன். ஏனுங்கொ, ஒரு அளவாக் குடிக்கறதில்லையா? தூரம் தொலைலிருந்து வந்திருக்கறீகொ! போதம் கெட்டு விளுகற முட்டுமா குடிக்கறது?” தடித்தவர் கேட்கிறார்.  

“நீங்கதான் மேனேஜருங்களா ஸார்?”  

“அவுரில்லீங். அவுரு கள்ளுக் கொண்டு வர்றவரு. மேனேஜர்னு இங்க யாரும் இல்ல. நம்மளயத்தான் சொல்லியிருப்பாங்க. மெய்யால உங்கனால பெரிய தும்பமாப் போச்சுங்க” என்கிறான் விற்பனையாளன். 

“ஸாரிங்க,… எனக்குப் பழக்கமில்லாமத்தான்…” 

“அதுக்கொசரம் சொல்லுலீங்க. இங்க வீலாகறது சகஜம்தான். ஆனா உங்ககிட்ட வேறொரு கைகாரியமும் நடந்துபோச்சு” என்றவன், அதற்குள் வாடிக்கையாளர்களை கவனிக்கவே,”ஏனுங் பவுலோஸண்ணா, வேற ஏதாவது பிரச்சனையா?” என்று குறுந்தாடி இளைஞன் தடித்தவரைக் கேட்கிறான்.  

“பிரச்சனையான்னா கேக்கறீகொ? பெரிய அடிதடி ரகளையே ஆயிப்போச்சு. இவுரு வீலாயி உளுந்தமே கொத்தவரைதான் சாக்குல படுக்க வெச்சிருக்கறான். இன்னைக்கு நாயத்துக்கௌம, நல்ல தெரக்குமாச்சு. அமீதும் வந்து ஆட்டம் பாட்டமா இருந்திருக்கறாகொ. அந்த முசுவுல இவுரு பக்கம் க்கோந்துட்டிருந்த கொத்தவர, அலுங்காம இவுரு மணிப்பர்ஸ லவுட்டீட்டான்.” 

“கொத்தவரையா? அவுரா?” நீங்கள் அதிர்ச்சியடைகிறீர்கள். 

“அந்தத் திருட்டு ராஸ்கோல்தான். கராத்தேச் சண்ட போட்டுட்டிருந்த ஜாக்கிசான் இதைப் பாத்துட்டு எங்கட்ட வந்து சொல்லவும், அவனக் கூப்புட்டு விசாரிச்சம். ‘ஏன்டா, கடைக்கு வாறவுகொ போறவுகொ திருடுனாலும் போச்சாது. நீ கடைல வேல செய்யறவன் திருடுனா கடைக்கல்லோ கெட்ட பேரு! அடிக்கவும் புடிக்கவும் ஒண்ணும் மாட்டம், எடுத்திருந்தாக் குடுத்துரு’ன்னு தஞ்சமாக் கேட்டைன். இல்லவே இல்லீன்னு சாதிச்சான். சட்டச் சோப்பு, அண்டர்வேயருச் சோப்பு எல்லாம் ச்செக் பண்ணியும் பர்ஸ் இல்ல. பின்ன, ரூமுக்குள்ள கூட்டீட்டுப் போயி பெடைச்சல்தான். சிவக்குமாரு கொன்னியடைச்சு அப்புனதுமே, ‘நான் எடுத்தது நெசமுன்னா எனக்கு சாவு வருட்டும், எம் பொண்டு புள்ளைக எல்லாமே சாகுட்டும்’னு சத்தியம் பண்ணனான். இப்புடி சாவுச் சத்தியம் பண்றானேன்னு, மத்தவீகளா இருந்தா நம்பத்தான செய்வாகொ. சத்தியம்னா அவனுக்கு சக்கரப் பொங்கல்னு நமக்குத் தெரியும். அவனேய்,… வெளைஞ்செடுத்த கள்ளனாக்கும் கேட்டீங்களா…? பின்ன ஒண்ணும் வெச்சுப் பாக்குல. பரவலா விட்டு வீக்குனைன். ச்சுண்டு பிஞ்சு ரத்தம் வந்ததுக்குப் பெறவாக்கும் உண்மையக் கக்கனான். எடுத்த பர்ஸ ஆருகிட்டயோ குடுத்து வெச்சிருந்தான். வாங்கிட்டு வரச் செஞ்சோம். அவனொண்ணும் பர்மண்டு ஆளொண்ணுமல்லவே,… இனிமே வேலைக்கு வரண்டாம், இந்தப் பரிசரத்துலயே பாக்கக் கூடாதுன்னு முடுக்கியுட்டுட்டோம். என்னுட்டாக்கும் இவுரோட வாச்சு, மோதரம், ச்செயினு, செல்ஃபோனு எல்லாத்தயும் எடுத்து வெச்சது.”  

விற்பனையாளன் கவருக்குள் போட்டு வைத்திருந்த உங்கள் உடைமைகளைக் கொடுத்து சரி பார்த்துக்கொள்ளச் சொன்னான். அனைத்தும் சரியாகவே இருந்தன. நீங்கள் அவர்களுக்கு நன்றி சொன்னீர்கள்.  

“போனது போச்சாது. இனிமே இப்படி நடக்காமப் பாத்துக்குங்கொ. திருட்டுப் போனா நிர்வாகம் பொறுப்பல்ல கேட்டீங்களா…! சொல்றனைன்னு தப்பா நெனைக்காதீகொ. நாங்களும் கள்ளு யேவாரம் பண்றவுகதான், நாங்களும் குடிக்கறவுகதான். ஆனாட்டி அளவாக் குடிங்கொ, கேட்டீங்களா…?” பவுலோஸ் அறிவுரைக்கிறார். விற்பனையாளனிடமும் அவரிடமும் நீங்கள் மறுபடியும் மறுபடியும் நன்றி கூறி விடைபெறும்போது, குறுந்தாடி இளைஞன் உங்களைப் பார்த்து மர்மமாகப் புன்னகைக்கிறான். இளக்காரத்துக்கோ பரிதாபத்துக்கோ அப்பாற்பட்ட, உங்களால் விளங்கிக்கொள்ளவே முடியாத மோனலிஸாப் புன்னகை அது.  

முற்பகல் முதல் நடந்த சம்பவங்களை நினைத்தபடியே நீங்கள் இன்னும் மீளாத பிரமிப்போடு கடையிலிருந்து வெளியேறுகிறீர்கள்.  

எது எப்படியானாலும், இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்தான் இல்லையா? 

பின்குறிப்புகள்:  

1. சம்பவம் நடந்த மறுநாள், ஊருக்குள் வைத்து, தன்னைக் காட்டிக் கொடுத்து வேலை பறிபோகச் செய்த ஜாக்கிசானை மனப்பிசகர் என்றும் பாராமல் தாக்கி மண்டையுடைத்தான் கொத்தவரை. இப்போது அவர் மருத்துவமனையிலும் அவன் சிறையிலுமாக இருக்கின்றனர். ஜாதியைச் சொல்லித் திட்டியதாகவும் வழக்கு. 

2. உங்களைப் பார்த்து மோனலிஸாப் புன்னகை புரிந்த குறுந்தாடிக்காரன் யார் தெரியுமா? உங்களை வேலந்தாவளத்துக்கு வரவழைத்துவிட்டு, கதையிடையே உங்களிடம் சீராடிப் போனானே, அந்த இவன்தான் அவன். 

– வாரமலர், 01-09-2009 & 08-09-2009 இதழ்கள். வெல்க்கம் ட்டு வேலந்தாவளம் என்ற தலைப்பில் வெளியானது.  

கதாசிரியர் குறிப்பு:  

வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.  

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *