வேரோடு கழன்று வீழ்ந்த பெரு நிலை விருட்சங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 9,165 
 
 

ரமணி படிக்கிற காலத்திலேயே ஒரு தனிப் போக்கு படிப்பிலே மனம் செல்லாமல் உடல் மாயையாய் வருகின்ற விழுக்காடு கொண்டு அலைகிற மந்தமான துருப்பிடித்த சிந்தனை மனம் அவளுடையது கலாவிற்கு அவளோடு நெருக்கமான பழக்கமுண்டு இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படிக்கிற காரணத்தினால் ரமணியை அவளுக்கு நன்றாகத் தெரியும் ரமணியின் ஒரு சிறு அசைவையும் துல்லியமாகப் புரிந்து கொள்கிற அறிவு நிலைக் கண்ணோட்டம் அவளுக்கு இயல்பாய் வாய்த்தது.

வகுப்பிலே படிப்பிலல்ல அழகிலே கொடி கட்டிப் பறக்கிற ,முடி சூடா ராணியாகத் தன்னை விளப்பரப்படுத்தி அவள் பேசும் போதெல்லாம் , இப்படி வெறும் அழகையே நம்பி மோசம் போக இருக்கும் அவளின் எதிர்காலம் குறித்து அவளுக்காகக் கவலைப்பட்டு மனம் கரைந்து கண்ணீர் வடிக்கக் கலா ஒருத்தியால் மட்டுமே முடிந்தது

அடிக்கடி அவள் மார்பு தட்டிப் பெருமையாகச் சொல்லுகிற ஒரேயொரு விடயம் “இந்த வகுப்பிலே நான் தான் முதல் அழகி. ஆனால் படிப்பில் அவள் மூளையைக் கடைந்து கல்வி புகட்டினாலும் அவள் தேற மாட்டாள். அவ்வளவு மக்கு அவள் மனசுக்கு வெளிச்சமாவதெல்லாம் அழகை மெருகூட்டுகிற விடயங்கள் மட்டும் தான் சினிமா நடிகைகளுடன் தன்னை ஒப்பிட்டு அவள் பேசுகிற கம்பீரக் குரல் வகுப்பறை முழுவதும் ஒரு பிரகடன ஒலியாக சப்தமிட்டு ஒலிக்கும் போது அதை உள் வாங்கிய அதிர்வுகளுடன், டீச்சரே கடுங் குரலெடுத்துப் பேசிய தருணங்களுமுண்டு

“உப்படியே நீர் சினிமாக் கனவுகளையே கண்டு கொண்டிருந்தால் உருப்பட்ட மாதிரித் தான்” உமக்கு படிப்பு ஏறப் போவதில்லை. போய் வீட்டிலை இரும்”

அது ஒரு சாபம் மாதிரித் தன்னைக் கவிழ்த்து விடும் என்பது கூட அறியாமல், என்னவொரு பெருமித நடைஅவளுக்கு எனினும் வீட்டில் அந்த அழகை மேளம் தட்டிக் கொண்டாட ஒரு ஈ காக்காய் கூட மிஞ்சவில்லை அவளைச் சுற்றி இருந்த மனிதர்களுக்கு உலகாயுதப் பிரக்ஞையே அடியோடு வரண்டு போன மாதிரி ஒரு நிழற் கோலம் அப்படியொரு செல்லரித்த வறுமையில் வயிறு தீப்பற்றியெரியும் போது, இந்த அழகும் அவளும் எந்த மூலைக்கு எடுபடும்? அதிலும் மூத்தவளாய், வேறு பிறந்து தொலைத்து விட்டாளே, அவளைக் காசு கொடுத்துக் கரையேற்றலாமென்றால் முடிகிற காரியமா>

அப்பாவோ சாதாரண தபால்காரன். படிப்பு நின்ற பிறகு அவளைப் பெண் பார்க்க வெளி நாடே திரண்டு வந்ததென்னவோ உண்மை தான் அவர்கள் கையறு நிலை அறிந்து ஒருவரும் ஒட்டவில்லை கடைசியில் பிரான்ஸிலிருந்து கையில் பிள்ளையோடு இரண்டாம் தாரமாக ஒருவன் வந்து சேர்ந்தான் அவனை அவள் தலையில் கட்ட இது ஒரு நல்ல தருணம்

அவளுக்கு அதைப் பற்றிய கவலை வந்ததாகத் தெரியவில்லை.அழகே குறியாக இருக்கிற அவள் மனதில் அந்த நிலையில் கூடப் பிடிபட்டது ஒரேயொரு விடயம் மட்டும் தான். கண்ணை மூடிக் கொண்டு வெளிநாட்டு மண்ணில் காலூன்றி இறங்கினாலே போதும் வானத்து ஒளியிலே கிரீடம் தாங்கி மிதந்து உயிர் சஞ்சாரம் செய்யும் ஒரு தேவதையாகவே மாறி விட அது ஒரு பொன்னான தருணம் ஆம்! அவள் அப்படித் தான் நம்பினாள்

வெளிநாட்டுக் காசு இருந்தால் உலகையே விலைக்கு வாங்கி விடலாம் தன் புறம் போக்கு அழகை இன்னும் மெருகூட்டி வெளிச்சம் போட்டுக் காட்ட அந்த மனிதன் வழியால் வரப் போகிற காசு மழை ஒரு வரப்பிரப்பிரசாதமாக தன் காலடிக்கு வந்து சேர்ந்த அந்தத் தருணத்தை அவள் மிக அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்ந்தது ஒரு கெட்ட கனவு போல் கலாவின் கண்களை உறுத்தி மனம் வருந்தி அழ வைத்த்தது அவளுக்குச் சொல்லாமல் மறைத்து வைத்து ரமணி எந்தக் காரியத்தையுமே செய்ததில்லை அதிலும் தன் அழகே எடுபட்டுக் கண் கொள்ளாக் காட்சியாகத் தான் தேர் ஏறி ஊர்வலம் வரப் போகிற இந்த உண்மையை அறிந்தால் கலா கூட எவ்வளவு சந்தோஷப்படுவாள்

உண்மையில் கலாவைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியேயல்ல மாறாக அவள் விழுக்காடு காணப் போகிற மனதை நெருடும் அந்தத் திருமண விபத்து குறித்து கலா மனதில் சந்தேகம் கொள்ள வைக்கும் ஆயிரம் கேள்விகள் அந்த அக்கினிக் குண்டத்தில் இப்போது அவள், கல்யாணம் நடந்த போது அவளுக்கும் அழைப்பு வந்தது . தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிலே மிக அமர்க்களமாக ராஜன் என்ற அந்தப் பையனுக்கும் ரமணிக்கும் இடையிலான அக் கல்யாணம் ஒரு வேடிக்கைக் காட்சியாக நடந்தேறியது கடைசி வரை அவன் குழந்தையைக் கண்ணில் காட்டவே இல்லை அது குழந்தையுமல்ல பருவம் கண் திறக்க இருக்கும் பதினொரு வயசுப் பெண் குழந்தை

தனது கேவலமான உடற் பசியின் பொருட்டு அதற்கு வடிகாலாய் அவன் எப்பொழுதோ ஒரு தறி கெட்ட நேரத்தில் ஒரு பிரஞ்சுக்காரியுடன் கொண்ட மிகக் கீழ்த் தரமான உறவின் பலனாக, அவன் பெயர் சொல்லும், வாரிசாக இந்தப் பெண் குழந்தை உண்மையில் ரமணிக்கும் இது தெரிந்திருக்குமோ? தெரிந்தாலும் ஏன் இதை அவள் ஏற்றுக் கொண்டாள்?

பெற்ற குழந்தை கூட அறியாமல், திரை மறைவில் இன்னுமொரு கபட நாடகம் அதுவும் கறை படாத சுத்தமான தமிழச்சியை வேண்டி ராஜன் கெட்ட கேட்டிற்கு இப்படி ஒரு தமிழ் தாலி ஏறுவதே சுத்த அபத்தமான கண் துடைப்பு இதிலே ரமணிக்கு மனம் கொள்ளாத பெருமிதக் களை வேறு தான் ஒரு சினிமா நடிகை மாதிரிப் பிரகாசித்து, ஒளி தேவதையாய் மிதக்க இதுவே பெரிய பலம் என்கிற மாதிரி அப்படியென்ன பெரிய பலம்? அது தான் இந்த வெளிநாட்டுப் பணக் கொடை

அவள் விசா வந்து பிரான்ஸுக்குப் பயணமாகும் வரை அவளை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு கலாவிற்குச் சந்தர்ப்பம் கிட்டவில்லை அங்கு போன பின்பு முகம் மறந்து போன கதை தான் அவள் என்னவானாளோ தெரியவில்லை இது நடந்து ஒரு யுகம் கழிந்தது போல் இருக்கிறது

நீண்ட காலத்திற்குப் பிறகு கலாவின் இன்னுமொரு தோழி வழியாக ரமணி பற்றிப் பேச நேர்ந்தது அவள் பெயர் சாந்தி மூவருக்கும் சம வயது இராமநாதன் கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கும் போது ரமணியை விட அவளோடுதான் கலாவுக்கு நெருக்க்கம் அதிகம். அவள் ஒரு பி. ஏ பட்டதாரி கொஞ்சநாள் யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணமாகி லண்டன் போன பிறகு எப்போதாவது அபூர்வமாகப் போனில் பேசுவாள் அந்த மேலைநாட்டு யந்திர வாழ்க்கை தனக்குச் சலிப்பைத் தருவதாக அப்போதெல்லாம் பெரும் மனக் குமுறலோடு, அவள் கூறுவதைக் கேட்டு கலாவுக்கு நெஞ்சை அடைக்கும் கண்னீர் வராத குறையாக மனம் நொந்து அவள் கேட்பாள்

“என்ன நீ இப்படிச் சொல்லுகிறாய்? ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சவுடன் ,ரமணிக்கு வந்த சந்தோஷத்தை நீயும் தான் பார்த்திருப்பியே அதிலும் ஒரு தரங்கெட்ட கல்யாணம். சொல்ல நாக் கூசுது”

“அவளை இடை மறித்து மனம் குழம்பிச் சாந்தி கேட்டாள்

“என்ன சொல்லுகிறாய் கலா? தரங்கெட்ட கல்யாணமா?எனக்குப் புரியேலை”

“இதைப் பற்றி நீ கேள்விப்படாதது பெரிய ஆச்சரியமாக இருக்கு சொன்னால் நீ திகைச்சுப் போவாய். ரமணி நினைச்சது என்னவோ அவள் நினைப்பு என்ன? பெரிய அழகியென்ற நினைப்பு “

“அழகியாகவே இருந்திட்டுப் போகட்டும் அதுக்கு இப்ப என்ன? “

“ஒரு விபத்து மாதிரி அவளுக்கு நடந்த கல்யாணம் .அதிலே அவளுக்கு ஏற்பட்ட கறை இருக்கே! அதிலே தீப்பிடிச்சு எரிஞ்ச மாதிரித் தான் இப்ப அவள் அழகு. இதைக் கேட்டால் நீயும் தலையிலை அடிச்சுக் கொண்டு அழுவாய். அதை நான் சொல்லி உன்னையும் குழப்ப விரும்பேலை அது எனக்குள் . மறை பொருளாகவே இருந்திட்டுப் போகட்டும்

“இல்லை கலா இப்படி விடயங்களை மூடி மறைப்பதாலே நீ சொன்னியே .அந்த விபத்து இன்னும் வளரும். அதிலிருந்து மீள்வதற்கு இது தான் வழியென்று நீ நம்புகிறதை நினைக்க எனக்குப் பெரிய மன வருத்தமாக இருக்கு. சொல்லு கலா. யார் அவன்?அந்தக் கேடு கெட்டவன்”

“நீயும் வெளிநாட்டிலை தான் இருக்கிறாய் அந்த அனுபவத்தை வைச்சு ஒரு வேளை நீ இதைச் சகஜமாகவும் ஜீரணிக்கக்க் கூடும் எனக்கு இதைக் கேட்டதிலிருந்து தலை வெடிச்சு உயிரே போற மாதிரி ஒரு அவஸ்தை”

“ அப்படியென்ன விஷத் தகவல் உன் மண்டைக்குள்? சொல்லு கலா”

“சொல்லுறன் ரமணியின் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத் தறி கெட்டுப் போன கோலச் சிதைவு. வயசுக் கோளாறு. வாழ்க்கை விபரீதம் சாக்கடைக்குள் விழுந்து எழும்பின மாதிரி அவன். அவனைப் போய்——–சீ இதை எப்படி என்ரை வாயாலை சொல்லுறது? ஆனாலும் நீ கேட்டதுக்காகச் சொல்லுறன் வெள்ளைக்காரி மூலம் அவனுக்கு ஒரு பிள்ளை கூட இருக்கு அதுவும் கல்யாணம் செய்யாமலே கழுத்தில் தாலி ஏறாமலே அவனுக்கு ஒரு சுத்தமான தமிழச்சி கேக்குதாம் பாவம் ரமணி கடைசியிலே அவள் அழகுக்கு இந்தக் கதியா?”

“கலா காசு வேணும் தான்.. நான் மறுக்கேலை அதுக்காக இப்படியொரு சாக்கடையிலை போய் விழுகிற இளைஞர்கள் பற்றி நீ சொல்லுகிற இந்த ஒரு புதினம் மட்டுமல்ல நானும் நிறையக் கேள்விப்பட்டனான் எங்கள் இளைஞர்களுக்கு இது ஒர் பெரிய சறுக்கல் வெளிநாட்டுக் காசுக்கு ஆசைப்பட்டு என்ன ஓட்டம் ஓடியிருப்பினம் எப்படியெல்லாம் வேஷம் போட்டுக் கப்பலேறிப் போயிருப்பினம் கடைசியிலே கண்டபலன்? ஒழுக்கம் இப்படிக் காற்றிலே பறக்கிறது மட்டும் தான் இதை ஆரிட்டைச் சொல்லி அழ? சரி விடு. ரமணியின் நிலைமை பற்றி யோசிப்பம். அழகிலே முடி சூடின அவளுக்கா இந்தக் கதி? அவள் புருஷனுக்கு இரண்டுங்கெட்டான் வாழ்க்கை. பிரஞ்சுக்காரியை விடவும் முடியாது. அந்தப் பிள்ளைக்குப் பதினாறு வயது முடிகிறவரைக்கும் இவன் காசு கொடுத்து ஆக வேண்டுமே. இந்த லட்சணத்தில் ரமணியின் வாரிசாக மூன்று பிள்ளைகளாம் இதையெல்லாம் நினைச்சால் இப்பவே இந்த நாட்டை விட்டு ஓட வேணும் போலை எனக்கு வெறி வருகுது”

“இது முடிகிற காரியமா சாந்தி? உன்ரை பிள்ளைகள் உங்கை படிக்கினம் என்ன மனக் கஷ்டம் இருந்தாலும் படிப்பு முக்கியமல்லே? இனிமேல் நடக்கிறதைப் பற்றி யோசிப்பம் இப்பவும் சில பேருக்கு இன்னும் உந்த வெளி நாட்டு மோகம் போகேலை அதை மாத்திற வழியைப் பற்றி யோசிப்பம் “

“எனக்குத் தலை சுத்துது நீ தான் அதை என்னெண்டு சொல்ல வேணும்”

“சொல்லுறன் கொஞ்சம் அமைதியாய்க் கேள் வேதம் சொல்லுவம் ஆன்மீகக் கண் திறக்க நிறைய விடயங்களைச் சொல்லிக் கொடுப்பம் “

“என்னவோ போ உதெல்லாம் நடக்கிற காரியமா?

“அப்ப என்ன தான் இதுக்கு வழி/

“எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கல்லே நீ சொல்லுகிற வழியிலை நற்பிரஜைகளாய் இதுகளை வளர்த்தெடுப்பதே இப்ப இருக்கிற நிலைமையில்,எல்லாத்தையும் விட மிகப் பெரிய தார்மீகக் கடமையென்று நாம் நம்புகிறன் என்ன சொல்கிறாய் ?

“நீயே அதுவும் திசைமாறிப் போன வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து இதைச் சொல்லும் போது கேக்கிற எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு இனி நான் சொல்ல என்ன இருக்கு நீ என்ரை வழிக்கு வந்ததே பெரிய அருட் கொடை மாதிரி என்னைப் புல்லரிக்க வைக்குது ரமணி தான் பாவம் எப்பவோ ஒரு நாள் நாங்கள் சொல்லுகிற இதை அவளும் புரிஞ்சு கொள்ளத் தான் போகிறாள். அது வரைக்கும் காத்திருப்பம்

என்னவோ நீ சொல்கிறாய் நடந்தால் எல்லோருக்கும் அது ஒரு விடிவு தான் நடக்க வேண்டு,மே””

“நடக்கும் நிச்சயம் நடக்கும் என்று சொல்கிற போதே விடிவு கண்ட ஒரு புதிய சகாப்தமே மனசுக்குள் உயிர் ஊடுருவி ஒளி கொண்டு பரவிக் கிடக்கிற மாதிரி அந்த உணர்ச்சிப் புல்லரிப்பில் பேச்சு நின்ற மெளன தவம் அவளிடத்தில் அதன் பிறகு அவர்களிடையே நிகழ்ந்த போன் உரையாடல் முடிந்து போன அந்த ஒரு கணம் நின்று போய் ஒரு யுகம் கழிந்த மாதிரி இருக்கிறது அவர்கள் புறம் போக்கு நினைவலைகள் நிறைந்த உலகிடையே பேச வாய் திறந்து மூச்செடுக்க இனி வெகு நேரமல்ல ஒரு யுகமே பிடிக்கும்

“ ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *