கலப்பு மணக் காவலன், பெண்ணியப் பிதாமகன், எழுத்து சீர்திருத்தர், , என்றெல்லாம் விளிக்கப்படும், அச்சு ஊடகங்களின் முடிசூடா மன்னன், பல ‘லட்ச’க் கணக்கான வாசகர்களின் நல்லாதரவும், பற்பல மாநில விருதுகள், தேசீய விருதுகளுக்கெல்லாம் சொந்தக்காரருமான புரட்சி எழுத்தாளர் ‘புதியோன்’ பிரபல ‘டி.வி சேனலின்’ நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
‘கேமரா’ முன் நடித்துப் பழக்கமில்லாத அவர் நிலைக் கண்ணாடி முன் மிடுக்காய் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அமர்ந்தும் ‘சேனல்’ன் கேள்விகளுக்காகத் தயார் செய்த புரட்சிகரமான, பூடகமான விடைகளை பேசி…, கடுமையாக நடித்துப் பழகினார்.
தீவிர தொடர் ஒத்திகையால், குரலில் ஏற்ற இறக்கங்களும், புரட்சிக் கருத்துக்களுக்கேற்ற உடல்மொழி அசைவும் , முகபாவங்களும் நேர்த்தியாக அமைந்தன.
‘ஜெயகாந்தன் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த டாக்டர் ராஜேஷ்,. ஜெயகாந்தனின் தீவிர பக்தர். ‘புது வேதம்’ தொலைக்காட்சியின் தலைமை ‘எடிட்டர்’, நிகழ்ச்சிப் பதிவாளர் மற்றும் முதுநிலைப் பேட்டியாளர்.
மரியாதை நிமித்தம், தானே அவர் இல்லத்திற்குச் சென்றார். ‘போர்டிகோ’வை அலங்கரிந்த ஜெயகாந்தன் படம் புதியோன் மீது மேலும் மரியாதையைப் பன்மடங்காக்கியது.
மழைக்கோட்டுடன் கை கூப்பிய டாக்டர் ராஜேஷை இன்முகத்துடன் வரவேற்றார் புதியோன்.
“ரெடிங்களா சார்…?”
“யெஸ்…! ரெடி ! ஒரு நிமிஷம் உள்ளே வாங்க…!”
“…”
புதியோன் காட்டிய ஹாங்கரில் ‘ரெய்ன் கோட்’ மாட்டினார்.
“டீப்பாயில் அளவான சூட்டில் இருந்த தேநீரை ருசித்தபடி, ஒளிப்பதிவு பற்றிய குறிப்புக்களைச் சொன்னார் “எதுக்கும் நெர்வஸ் ஆக வேண்டாம்.. இயல்பாப் பண்ணுங்க.. ஸ்க்ரிப்ட் இருக்கில்ல..?” தொழில் ரீதியாக இருந்தது ராஜேஷின் பேச்சு.
“‘மேக்கப்’ உட்பட நிறைய ‘பிரபரேட்ரி’ வேலை இருக்கு.. …” ராஜேஷ் தன் ‘புல்லட்’டை நகர்த்தி ‘கார்ஷெட்’ ஓரமாக நிறுத்தியபின் ‘காரில்’ ஏறினார். கார் ஓட்டியபடியே ‘ரெக்கார்டிங்’ சம்பந்தமாக புதியோன் கேட்ட கேள்விகளுக்குத் தெளிவாக விளக்கமளித்துக் கொண்டே வந்தார்”
ஒப்பனை முடித்து, ‘செட்’டில் அமரவைத்து பல முறை, பல கோணங்களில் ‘ரிகர்ஸல் டேக்’ எடுத்துத் திரையில் காட்டி, தவறு சுட்டி, படிப்படியாக அச்சம் போக்கினார்கள்.
புதிய சூழலில் தன்னை இயல்பாய் பொறுத்திக் கொண்டதும் பரஸ்பரம் வணக்கத்துடன் பேட்டி தொடங்கியது.
“புதியோன்’ என்ற புனைப்பெயர்க் காரணம்…?”
“தந்தை பெரியார் எனக்குச் சூட்டிய பெயர். காரணமெல்லாம் கேட்கலையே..! ஹ…! ஹ…! ஹ…!”
‘தந்தை பெரியாரிடம் அவ்வளவு நெருக்கமா..?!’ ‘செட்’ மொத்தமும் வியந்தது. வியப்பின் உச்சத்தில் ராஜேஷ்.
வைக்கம் வீரர் பற்றிய பேட்டியாளரின் பல்வேறு கேள்விகளுக்குப் புதியோனின் அழகான, ஆழமான பகுத்தறிவு செறிந்த விளக்கங்கள் பரவசமூட்டின.
“காதல், கலப்பு மணம் பத்தி நேயர்களுக்கு…?”
தொண்டை செறுமினார். “காதல், காலத்தின் கட்டாயம். புதுக்கவிதை மாதிரி. மொத்த சமூகமும் இதை அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ‘கன்சர்வேட்டிவ்’ சமூகத்தை ‘மாடர்ன்’ சமூகமாக மாற்றி தருகிற ரசாயனம்தான் காதல்”- பஞ்ச் அடித்தார்.
“சூப்பர்’ சார்…! கலப்புத் திருமணப் பின்னணில நிறைய நாவல்கள் எழுதியிருக்கீங்க…?!” என்று துவங்கிய ராஜேஷை இடை மறித்து “நிறையன்னு சொல்லாதீங்க. அனைத்து நாவல்களுக்குமே அடிநாதம் அதுதான்.. ..ஹ..! ஹா.!.” என்றார்.
“ஓ..!! மார்வலஸ்..! கலப்புத் திருமணம்ங்கற ‘கான்செப்ட்’ உங்க மனசுல; பட்டு… பதிஞ்சி.. தெளிந்து, ‘தெரித்த’ அனுபவம் பகிரமுடியுமா…?” கேள்வியில் ஆர்வம் தூக்கலாய் இருந்தது.
“ ல்ல கேள்வி…! கல்லூரில பியுசி படிச்சப்போ, மாற்று மதங்களைச் சேர்ந்த வகுப்புத்தோழனும் தோழியும் காதலிச்சி, கலியாணம் தடைப் பட்டபோதுதான்… என் மனசுல விதை ஊனப்பட்டது.”
“ஓ!.”
“எல்லாரும் ஓர் குலம்! ஓர் இனம்!’னு மேடைல பேசற பெரும்பாலோர், செயல்னு வரும்போது ஓடி ஒளியறதுதான் இங்கே யதார்த்தம். அந்தத் திருணத்துக்குத் எதிரா நின்ன அத்தனை தடைக் கற்களையும் தவிடு பொடியாக்கி…; கடைசி வரை நின்று நானும் சாட்சிக் கையெழுத்திட்டு அந்தப் பதிவுத் திருமணம் முடிந்தது..” இதைச் சொல்லியபின் சில கணங்கள் கண்மூடி மொனமானார். கல்லூரி நாட்களை கற்பனையில் கண்டார் போலும்.
“இன்றைய முற்போக்கு இளைஞர்களுக்கு ஆதர்சமா, ரோல் மாடலா இருக்க 200 சதவீதத் தகுதி உங்ககிட்டே இருக்கறதைப் பார்த்து பெருமையா இருக்கு சார்…!” என்று மனதாரப் புகழ்ந்தார் ராஜேஷ்.
“நன்றி! இப்படி நீங்க சொல்லும்போது என் பொறுப்பு இன்னும் கூடிட்டதா நினைக்கறேன்…!” தன்னடக்கமாய்க் காட்டிக்கொண்டார்.
“உங்க நாவல்களின் வெற்றி’னு நீங்க நினைக்கறது…?”
“என் நாவல் படிச்சி, அதிலுள்ள ஞாயம் உணர்ந்து, கலப்பு மணத்துக்கு மனப்பூர்வமா ஆதரவளிச்ச பெற்றோர்களின் லிஸ்ட் தரட்டுமா..?” பதிலில் ஒரு ‘ஹம்பக்’ தெரிந்தது.
அவரே தொடர்ந்தார்.
தற்போது “நாரீமணி” வார இதழில் எழுதி வருகிற “பொதுவுடமை” என்ற தொடர் கூட கலப்புமண விழிப்புணர்வை பறைசாற்றுவதுதான். வாசகர்களின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து பெற்று வரும் நாவல் அது.!”
“ஓ..! மிக்க மகிழ்ச்சி…! இந்தப் பேட்டீல கலப்புமணம் பற்றி பதிவு பண்ண விரும்புறது…?”
“கலப்பு மணம் என்பது வீரிய ஒட்டு தாவரம் மாதிரி. வித்தியாசமான வாளிப்பான எதிர்காலச் சந்ததிகள் இதன் மூலம் மட்டுமே உருவாகும்.” என்று துவங்கி ‘சமூகக் கோபம்’ கொப்பளிக்க, உணர்ச்சி வசப்பட்டு அனல் பறக்கப் பேசினார்.
மொத்த செட்டும் மகுடிக்குக் கட்டுப் பட்ட ‘சர்ப்பமாய்’ வியந்து நின்றது. பின்னணி இசை கலந்து ஒளி பரப்பான பின் பல மறு ஒளிபரப்புகளுக்கு வாய்ப்புள்ள சிறந்த பேட்டி.
எண்ணிலடங்கா ‘டார்கெட் ஆடியன்ஸ்’களை உருவாக்கவுள்ள சிறந்த பேட்டியை தான் எடுத்திருக்கிறோம்!’ என்ற பெருமையும் பூரிப்பும் ராஜேஷ் முகத்தில் வெளிப்படையாய்த் தெரிந்தது.
பேட்டி முடிந்து வீடு திரும்பியதும் புதியோனிடம் விடைபெற்று புல்லட்டில் வீடு திரும்பினார் ராஜேஷ்.
லேசான மழைத் தூரல் ‘எழுத்தாளர் வீட்டு வரவேற்பறையில் மாட்டிய ‘ரெய்ன் கோட்’டை நினைவு படுத்தியது.
மழை வலுக்குமெனத் தோன்றியதால், ‘யூ டர்ன்’ எடுத்து, இரண்டு ‘கிலோமீட்டர்’ பயணித்து எழுத்தாளர் வீட்டிற்கு வந்தார்.
ஒருக்களித்தாற்போல் சாத்தியிருந்த கதவைத் தட்டப் போனபோது உள்ளே பேச்சுக் குரல் கேட்டுத் தயங்கினார்.
“என்னங்க…!”
“சொல்லு செங்கமலம்…”
” நம்ம பொண்ணு வைஷ்ணவிக்கு வயசாயிண்டே போறதே!.”
“…”
“பெருமாள் கிருபையில ஒரு இடம் வந்திருக்கு.”
“அப்படியா…?”
“நம்ப பிரி..வு.. இல்…லே!!!…… பரவா…யில்லை…னு…?” மனைவியை மேலே பேச விடவில்லை புதியோன்.
“என்ன பேசறே செங்கமலம். ஐந்து தலைமுறையா கட்டித் காத்துக்கிட்டு இருக்கற நம்ம குலம், கோத்திரம், ஆச்சாரம், அனுஷ்ட்டானம் … எல்லாத்தையும் காத்துல பறக்கவிடச் சொல்றியா..? அதுக்கு நான் தயாரில்லை. ஜாதி ஒண்ணா இருந்தாலும் நம்ம பிரிவு ப்யூர் ‘ஓ.சி’, அவங்க ‘பி.சி’. இந்தக் கலப்புக்கு நான் ஒருக்காலும் ஒத்துக்க மாட்டேன். ‘நோ காம்ப்ரமைஸ்’…..” ஆக்ரோஷமாகக் கத்தினார்.
‘கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இலக்கியச் சுவை நனி சொட்டச் சொட்ட, பகுத்தறிவுப் பாசரையில் புதுமைப் பூக்கள் மலர்ந்து மணம் வீசப் பேட்டி அளித்தவரா இவர்…?’- நம்ப முடியவில்லை.
‘கலப்பு மணத்தின் காவல்காரன்’ என்று பட்டம் பெற்று தந்தை பெரியார் வைத்த புதியோன் என்கிற புனைப்பெயரில் பத்திரிகை உலகத்தைக் கலக்கும் ரங்காச்சாரியா இப்படிப் பேசுகிறார்..!.’ நிருபர் ராஜேஷ் ஒரு கணம் நிலைகுலைந்து போனார்.
உடம்பு சூடேறியது. ‘சே…! இரு முகம் காட்டும் இவர் வீட்டிற்குள் நுழைவதே பாவமல்லவா..!’, என்று ஒரு கணம் நினைத்தார்.
போர்ட்டிகோவில் தொங்கிய ஜெயகாந்தன் படத்தைப் பார்த்தார். ‘தீராத ரோகியாக ஒரு கைராசி மருத்துவர் இருப்பதில் என்ன தவறு..?’ என்ற தெளிவு கிடைத்தது. கதவு தட்டினார்.
கதவு திறந்த புதியோன் அதிர்ந்தார். “எப்ப வந்தீங்க..?” குரலில் கம்பீரம் இல்லை.
“இப்பதான்! மழைக்கோட்டு எடுக்கணும்!..” புன்முறுவலோடு இயல்பாகச் சொன்னார்.
‘போர்டிகோ’வில் நின்று ரெயின் கோட் அணியும் போது பி கூல் ராஜேஷ் “சாத்தானும் வேதம் ஓதட்டும்” என்று ஜெயகாந்தன் தன்னிடம் கூறுவதை உணர்ந்தான் ராஜேஷ்.
– 20.03.2022 மக்கள் குரல் நாளிதழில் பிரசுரமான சிறுகதை