ஐப்பசி, கார்த்திகை, மார்கழியென்று மாதம் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கும். வயிற்றுப் பசிக்குப்போக, தினந்தினம் செலவுகள் என்று காசு கரைந்து கொண்டே இருக்கும். அப்படி இப்படியென்று சேர்த்த காசில், பொன்னென்றும் பொருளென்றும் வாங்க முடியாது. அதற்குள் பண்டிகைக் காலம் வந்துவிடும். கிராமத்து மனிதர்களிடம் சொத்தென்றும், சேர்த்த காசென்றும் எதுவும் இல்லை. உடம்பும் உழைப்பும்தான் அவனுக்கு அடையாளம்.
ஆனாலும், கிராமத்து மனிதர்கள் பண்டிகையையும், திருவிழாவையும் அனுப விப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடுவதே இல்லை. கைமாற்று அல்லது கடன் வாங்கியாவது, அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி… அப்போது சந்தோஷமாக உறவாடுவான். நம்ம தஞ்சாவூர், திருவாரூர் பக்கம் தை மாச அறுவடை, மண்ணில் கால்வைத்தாலே… நெல்லோட வாசனைதான். தைப் பொங்கல் நெருங்க நெருங்க, வீட்டுக்கு வீடு, சுவர்வைக்க மண் ஊறும். பெருசுகள், வயிற்றைக்கூட நனைக்காமல் தரையை மொழுவுவார்கள். மண் பூசி, வெண் கிளிஞ்சல்கள் காய்ச்சி வெள்ளையடித்தால் போதும், வீடுகள் களை கட்டும். பொங்கல் வைப்பது, சூரியனை வணங்குவது, மாடு விரட்டுவது என்று மண்ணுக்கும், மனிதனுக்குமான உறவே அப்போதுதான் வெளிச்சமாகும்.
ஆனால் ஒன்று… தை மாசம் வந்தாலே நம்ம பைரவனுக்கு தினந்தினம் போராட்டம்தான். பகல் முச்சூடும் வேலை. இரவெல்லாம் அடித்துப்போட்ட மாதிரி தூக்கம். ஒவ்வொரு நாளும், ‘யாண்டா சீக்கிரம் விடிஞ்சிது’ என்று தோன்றும். பொழுது விடிந்ததும் கறுப்பு சைக்கிளில் படிந்த சுண்ணாம்பைத் துடைப்பதுதான் அவனின் முதல் வேலை. சுண்ணாம்பு, படிந்தது படிந்ததுதான். அது போகாது. ஆனவரையில் கழுவி, தகர டின், பெயின்ட் டப்பா, ஏணி என்று சைக்கிளில் கட்ட வேண்டும். வேலை செய்யும் இடத்துக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கே ஒருநாள் கூலி தர வேண்டும்.
ஏணி மரத்தின் கடைசிப் படியில் நின்று வெள்ளையடிக்கிறபோது, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வேலை செய்ய வேண்டும். நிதானங்கெட்டு விழுந்தால் அவ்வளவுதான், பார்க்கிற பிழைப்பிலேயும் மண் விழுந்துவிடும்.
பொங்கல் நெருங்க நெருங்க, பைரவனைத் தேடி ஆள் மேல் ஆள் வந்துவிடுவார்கள். ஒருத்தனும் உள்ளூரான் கிடையாது. எல்லோரும் அசலூர்க்காரர்கள். பைரவ னுக்கு இருக்கிற வேலை சுத்தம், அந்தச் சுத்து வட்டாரத்தில் வேறு யாருக்கும் இல்லை. ஏழெட்டு ஊர்க்காரர்கள் வேலைக்குச் சொல்லிவிட்டுப் போவார்கள். சொல்லிய நேரத்தில் வேலையை முடிக்காவிட் டால், வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுவார்கள். பணிவான பதிலைச் சொல்லிச் சமாளித்து அனுப்புவான். பைரவனைப்போல உழைக்கிறவன் எல்லோருக்குமே வேரூன்றி இருக்கிற நம்பிக்கை ஒன்றுதான்… ‘தை பிறந்தால் வழி பிறக்கும்!’
வெண்பனிக் காலத்தின் அதிகாலைப்பொழுது. ஊர் எங்கிலும் வெள்ளைப் பனிமூட்டம். வீடுகளும், வயல்களும், வாய்க்கால் வரப்புகளும், பனி மூட்டத்தில் மறைந்திருந்தன. மண் தரை எங்கிலும் ஈரத்தின் பிசுபிசுப்பு. மரிக்கொழுந்து வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள்.
மஞ்சள் சூரியன் இன்னும் எழுந்தபாடு இல்லை. அதற்குள் தகர டின்னையும் ஏணியையும் எடுத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு, வேலைக்குப் புறப்படத் தயாரானான் பைரவன். தாழம்பூ மட்டை, சுத்தியல், அதோடு நூல் கயிற்றினையும் எடுத்து, நரம்புப் பைக்குள் போட்டபடி, ‘இன்னியோடு இந்த வேலைய முடிச்சிப்புட்டு, அடுத்தது கொட்டூரு வேலைய முடிக்கணும்’ என்று அவனின் மனது புலம்பிக்கொண்டு இருந்தது.
“என்ன பைரவா? வேல மும்முரமா நடக்குதுபோல. நடக்கட்டும் நடக்கட்டும்… உம்பாடு இப்போ கொண்டாட்டந்தான்” – வாயில் வந்ததை அள்ளிவிடுவதுதான் குஞ்சுப்பிள்ளை பழக்கம்.
“அட! யாண்ணே… நீங்கவேற வவுத்தெரிச்சலக் கௌப்புறீங்க. அவஅவன் படுறபாடு அவனுக்குத்தான் தெரியும்” என்றான் பைரவன். குஞ்சுப்பிள்ளை, பைரவனின் வார்த்தைகளை வாங்கிக்கொண்டு, “என்னடா… சொல்லுற” என்றார். “அதயேண்ணே கேக்குறீங்க. நல்ல பொழப்பு, உசுரோட போராடுற பொழப்பு. ஒண்டியா அந்த ஊரு… இந்த ஊருன்னு அலைய வேண்டியதா இருக்கு. ம்…”
“சரிப்பா… நம்ம ஊருலயே ஆளக் கூப்புட வேண்டியதானே. எத்தினி பய வெட்டியாச் சுத்திக் கிட்டு இருக்கான்.”
“எங்கண்ணே…. ஒருத்தனும் வர மாட்டேங்குறான். வெட்டியாச் சுத்துனாலும் சுத்துவான்போல. வேலக்கின்னா எவன் வர்றான்? தனியா அலைஞ்சி திரியணுமுன்னு என் தலையில எழுதியிருக்கு. யாரக் குத்தஞ் சொல்லி என்னாவப்போது?” என்று புலம்பலுடன் வேலைக்குப் புறப்பட்டான்.
அதற்குள் பைரவனின் பொஞ்சாதி மரிக்கொழுந்து, “என்னங்க… வேல வுட்டு வர்றப்போ, பேரளம் கடத் தெருவு போயிட்டு வாங்க. வூட்டுல மொளகாத் தூளும், புளியும் இல்ல.”
“அத இங்கியே வாங்குனா என்னா? வேல முடிஞ்சி வூடு வந்து சேர்றதே பெரும்பாடா இருக்கு. இதுல பேரளம் வேற போயிட்டு வரணுமா?” என்று பைரவன் கோபப்பட்டான்.
“இங்க வாங்குற மொளகாத்தூளு மண்ணு மாதிரி இருக்கும், பரவாயில்லியா?” என்றதும், பைரவன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சைக்கிளைத் தள்ளினான்.
உழைப்புக்கான பொழுது ஆரம்பித்தது. மார்கழிச் சூரியன் மெள்ள மேலே எழும்பிக்கொண்டு இருந்தது. சில்லென்ற குளிருடன் லேசான காற்று வீசிக்கொண்டு இருந்தது. நெற்கதிர்கள் மஞ்சள் முத்துக்களாக மிளிர்ந்து, காற்றில் ஆடி அசைந்துகொண்டு இருந்தன. நெல் வயலில் ஆட்கள், வேகவேகமாக கதிர் அறுத்துக்கொண்டு இருந்தனர். மாநிலத்தம் அம்பளார் வாய்க்காலைக் கடந்து, அய்யனார் கோயிலை நெருங்கினான். ஊர் எல்லையில் இருக்கிற குலசாமி அய்யனாரைக் கும்பிடாமல் ஒருநாளும் போனதில்லை. புழுதி மண் ரோட்டில் இருந்து ஒத்தையடிப் பாதையில் சைக்கிளைத் திருப்பினான். கருவேல மரத்தின் அடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு, கோயிலை நெருங்கினான். நாணல் புதர்களுக்கு இடையில், அய்யனாரின் செம்பழுப்புக் குதிரைகள், வெள்ளைக் குதிரைகள், பச்சைக் குதிரைகளென முன்னும் பின்னும் வரிசையாக நின்றிருந்தன. ஊர்க் காவலன் அய்யனார் நெஞ்சை நிமிர்த்தி, கம்பீரப் பார்வையில், ஆள் உசர அருவாளுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அண்ணாந்து, கைகள் நடுக்கத்துடன், “அப்பா அய்யனாரே… இந்த தைக்காச்சும் நாலு காசு சேந்து, வாங்கின கடனை அடச்சிப்புட்டு, நிம்மதியா நல்ல சோறு ரெண்டு சாப்புடணும். அதுக்கு நீதான் சாமி வழிகாட்டணும்” என்று அய்யனாரைக் கும்பிட்டு, விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு கிளம்பினான்.
கறுப்பு சைக்கிளை எவ்வளவுதான் மிதிச்சாலும், அது போகிற வேகம்தான் போகும். திருவாரூர் தேர்போல. மாங்குமாங்குன்னு சைக்கிளை மிதிக்கிறபோதுதான், அவனின் நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும். “இந்த ஓட்ட சைக்கிள வெச்சிக்கிட்டு, பத்து மைலு மிதிச்சிக்கிட்டுப் போறதுக்குள்ள மனுசன் பிராணன் போயிடுது. இப்படி ராவும் பகலும் ஒழச்சி ஒழச்சி என்னத்ததான் கண்டோம். உடம்பு சீவன் போனது பத்தாதுன்னு, ஊரச் சுத்தி கடன் வேற. ம்… சனியன் இதுக்கெல்லாம் என்னிக்கித்தான் விடிவுக் காலமோ?” – காட்டுக்குள் புலம்பிக் கொண்டு வந்தால் யாருக்குக் கேட்கப்போகிறது?
நெடுஞ்சேரிக்குப் போகிற வழி யில்தான் செம்பியநல்லூர். ஒரு வழியாக சினிமா கொட்டகையில் இடைவேளை விடுவதுபோல், கட்டபிள்ளை டீக்கடை. ஒரு டீயைக் குடித்துவிட்டு, வெத்தலையைப் போட்டாத்தான் இனி சைக்கிள் அங்கிருந்து நகரும். அப்போதுதான், அவனின் கால்களுக்கும் சற்று நேரம் ஓச்சல்.
“கடமுட கடமுடன்னு இந்தக் கப்பி ரோட்டுல எப்படித்தான் வர்றியோ? இந்த சைக்கிளக் குடுத்துப்புட்டு, ஒரு புது சைக்கிள் வாங்கப்புடாதா?” என்றார் கட்டப்பிள்ளை.
“எங்கண்ணே… எம் பையன் ஒரு கட்ட சைக்கிளு கேக்குறான். அத வாங்கிக் கொடுக்க முடியல. நமக்கு எதுக்குண்ணே புது சைக்கிளு? அட அதவுடுங்கண்ணே… வெத்தலயக் கொடுங்க. மணி ஆயிட்டு… நான் கௌம்புறன்” என்று வெத்தலைய வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தான். சைக்கிள் சீட்டின் மேல் வெற்றிலை பொட்டலத்தைப் பிரித்து, வெற்றிலை போட்டு, அதோடு புகையிலையையும் சேர்த்து அதக்கிக்கொண்டான்.
வெற்றிலை பாக்கு இல்லைஎன்றாலும், புகையிலை இருந்தால் போதும்… வேலை ஓடிவிடும். எண்ணி 10 நாளைக்கு, நெடுஞ்சேரி வாத்தியார் வீட்டில்தான் வேலை. இருக்கிற 20 நாட்களில் மாயவரம், பாவட்டக்குடி, கொட்டூர், வாரக்குப்பம், திருமாளம் என்று வேலை செய்யவேண்டிய வீடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. எப்படியோ… பொங்கலுக்குள் எல்லோர் வீட்டுக்கும் வெள்ளையடித்து முடிக்க வேண்டும். இழுக்கடித்தால், பொழுது விடிந்ததும் பைரவனின் வீட்டு வாசலுக்கு வந்துவிடுவார் கள்.
நேற்றுகூட, “என்ன பைரவா… ஒரு வாரத்துக்கு முன்னாடியே வர்றேன்னு சொன்ன… இன்னும் வந்துக்கிட்டுருக்க. மாயவரம், நெடுஞ்சேரின்னு போற, பக்கத்துல இருக்குற திருமாளத்துக்கு வரமாட்டுற” என்றார், சொக்கலிங்கக் கோனார்.
பைரவன் முழியைப் பிதுக்கிக்கொண்டே, “இல்லங்க… வேல கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. அதாங்க வர முடியல. இன்னும் ரெண்டு, மூணு நாளு பொறுத் துக்குங்க… கண்டிப்பா வந்துர் றேன்” என்றான்.
“என்னமோ போ, நீ நல்லா வேல செய்வன்னு அக்கம்பக்கத்துல சொன்னதாலதான், இப்படி அலஞ்சிக்கிட்டு இருக்கேன். இல்லீன்னா, இந்நேரம் வேற ஆளவெச்சி வேலய முடிச்சிருப்பேன்.”
“கவலப்படாமப் போங்கண்ணே… சீக்கிரமா வேலய முடிச்சிப்புடுறேன்” என்று பொறுப்பாகப் பதில் சொல்லி அனுப்பினான் பைரவன்.
ஒரு வாரத்துக்கெல்லாம் அந்த ஊரு… இந்த ஊரென்று வேலை முடிந்தது. இன்று மதியத்துடன் கொட்டூர் வேலையும் முடிந்துவிடும். மீதம் இருப்பது வாரக்குப்பமும், திருமாளமும்தான். வெள்ளையடித்த வீட்டை வாசலில் நின்று ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். சுவரின் நீல வெண்மை வெயிலில் மிளிர்ந்து, கண்களைக் கூசச் செய்தது. பச்சை வர்ண பார்டரும் சேர்ந்து, பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
‘அப்பாடா, திருமாளத்தையும் வாரக்குப்பத்தையும் முடிச்சிப்புட்டோம்னா, சோலி முடிஞ்சிது’ என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
உச்சிப்பொழுது தொடங்கியது. வெயிலின் உக்கிரம் கூடிக்கொண்டே போக, தார் சாலையில் இருந்து அனல் ஆவியாக வெளியேறிக்கொண்டு இருந்தது. அவனின் சட்டைப் பைக்குள் பணமும், உடம்பு முழுக்க வலியும் இருந்தது.
‘வூட்டுக்குப் போயி சிவனேன்னு தூங்கணும்’ என பைரவன் நினைக்க, எப்போதும்போல், மரிக்கொழுந்து மளிகைச் சாமான் வாங்கி வரச் சொன்னது ஞாபகம் வந்தது. மாங்குடி வழியாக வீட்டுக்குச் செல்லாமல், சைக்கிளைப் பேரளத்துக்குத் திருப்பினான். கோவிந்தச்சேரி நெருங்கும்போது உடலெங்கும் வலியெடுக்க ஆரம்பித்தது. சரியான தூக்கம் இல்லாமல் கண்களில் எரிச்சல். எப்படியோ… பேரளத்தை நெருங்கிக்கொண்டு இருந்தான். பண்டாரவடை வந்ததும், உடலெங்கும் சீவன் இல்லாமல் கை, கால்கள் இழுக்க ஆரம்பித்தன. கண்களில் இருள் சூழ ஆரம்பித்தது. அதற்கு மேல் சைக்கிளை மிதிக்க முடியாமல், நிதானம் இழந்து சைக்கிளுடன் நடுரோட்டிலேயே விழுந்தான். அதற்குப் பின் என்ன நடந்ததுஎன்றே தெரியவில்லை.
பைரவன் ஏதோ புண்ணியம் செய்தவன். அவனுக்குத் தெரிந்தவன் வீட்டு வாசலிலேயே விழுந்திருக்கிறான். அவர்கள் எல்லோரும், பைரவனை ஓரமாகத் தூக்கிக் கொண்டுவந்து தண்ணீர் கொடுக்க, அவனுக்கு மூச்சுப் பேச்சில்லை. எல்லோரும் பதறிய நேரம் பார்த்து, எதிரில் பைரவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரப் பையன் பன்னீர் வந்துகொண்டு இருந்தான். ஆளும் பேருமாகச் சேர்ந்து, பைரவனைத் தூக்கிக்கொண்டு பேரளம் தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள்.
“கேஸ் ரொம்ப சீரியஸ். இங்க பாக்க முடியாது. காரைக்கால், திருவாரூர் கொண்டுபோங்க” என்று டாக்டர் கையை விரித்தார். என்ன செய்வதென்று புரியாமல் கார் எடுத்துக்கொண்டு, காரைக்கால் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
கிராமத்து மனிதர்களிடம் இருக்கும் உயர்ந்த குணம் இதுதான். தன்னோடு இருக்கிற மக்களுக்கு ஆபத்து என்றால், தன் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றுவான். மனிதனுக்கு ஒன்றுஎன்றால், மனிதன்தான் காப்பாற்றுவான், காப்பாற்றணும். கடவுளெல்லாம் நேரில் வராது.
அந்திப்பொழுது. பைரவன் கண்களைத் திறந்தான். குளுக்கோஸ் பாட்டில் ஏறிக்கொண்டு இருந்தது. அருகில் பன்னீர் நின்றிருந்தான். “அண்ணே, ஒண்ணுல்லண்ணே… டாக்டரு சரியாயிடுமுன்னு சொல்லிட்டாரு. நீ மனசப் போட்டு அலட்டிக்காத இரு. நான் போயி அக்காவ அழைச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். வெளியில் பண்டாரவடைக் காரர் இருந்தார். “அண்ணே… ராத்திரி ஒரு ஏழு மணி வரைக்கும் இருங்கண்ணே. அதுக்குள்ள அக்காவ அழைச்சிட்டு வந்துடு றேன்” என்று சொல்லிவிட்டு அண்டக்குடிக்குப் புறப் பட்டான்.
சாயங்காலம். அண்டக்குடி மேலக்கட்டுத் திடலைத் தாண்டி வேகவேகமாக நடந்துகொண்டு இருந்தான் பன்னீர். மரிக்கொழுந்து வயலில் வேலை முடிந்ததும், மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டு தலையில் கூடையுடன் அசதியாக வீடு திரும்பினாள். வேகவேகமாக நடந்து வரும் பன்னீரைப் பார்த்தும் ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றாள்.
“அக்கா, ஒன்ன எங்கெல்லாம் தேடுறது?” பன்னீர் முகத்தில் இருந்த பதற்றத்தைப் பார்த்து,
“ஏன் தம்பி… என்ன விஷயம்?” எனக் குழம்பினாள்.
“ஒண்ணுல்லக்கா… நம்ம அண்ணனுக்கு ஒடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேத்துருக்கு. ஊசிகீசிலாம் போட்டு, குளுக்கோஸ§ ஏத்துனத்துக்கு அப்புறம் இப்பப் பரவாயில்ல. டாக்டர் சரியாயிடுமுன்னு சொல்லிட்டாரு. நீ பயப்படாம ஒடனே ஆஸ்பத்திரி கௌம்பி வா” என்றதும், பதற்றத்தில் கூடையை வரப்பில் போட்டுவிட்டு, “என்ன தம்பி சொல்லுற?” எனப் பதறிய மரிக்கொழுந்து கண்களில் மழை.
“என்னக்கா, இவ்வளவு சொல்லுறேன்… அப்படியே நிக்கிற? சட்டு புட்டுனு கௌம்பு. சீக்கிரமா ஆஸ்பத்திரி போவோம்” என்றதும், மரிக்கொழுந்து யோசனையுடன், “இல்ல தம்பி… கையில வேற பரம் பைசால்ல. அடவுவைக்கவும் வூட்டுல பண்ட பாத்திரம்னு எதுவும் இல்ல. இப்புடி டாண்ணு போயி ஒருத்தங்களுட்ட கேட்டா யாரு தருவா?”
“உன்னோட நெலமைய எடுத்துச் சொன்னீன்னா, தரப்போறாங்க. நம்ம ஊருக்காரங்க அப்புடி ஒண்ணும் நெஞ்சில ஈரம் இல்லாதவங்க இல்ல. போக்கா தருவாங்க” என பன்னீர் சொன்னதும், மரிக்கொழுந்து வேகமாக ஓடினாள்.
உயிருக்காகப் போராடுகிறபோதுகூட, உழைப்பவன் கையில் காசு இருக்காது. கஷ்டமென்றால் கடன் வாங்குவதும், ஓயாமல் உழைக்கிற காலத்தில் அக்கடனை அடைப்பதுமே கிராமத்து மனிதர்களின் இதுநாள் வரையிலான மாறாத நிலைமை. எப்படியோ, யார் யாரிடமோ கடனை வாங்கி மரிக்கொழுந்து ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தாள். குளுக்கோஸ் பாட்டிலுடன் பைரவனைப் பார்த்ததும், மரிக்கொழுந்துவின் கண்கள் கலங்கி மனதுக்குள் புலம்பிக்கொண்டாள்.
‘ஆடி ஓடி வேல செஞ்ச மனுசன், யாரு கண்ணு பட்டுச்சோ? ம்…’ பைரவன் நிதானத்துக்கு வந்ததும், அவனின் நினைப்பெல்லாம் வேலையை முடிக்க வேண்டுமே என்று இருந்தது.
“வாரக்குப்பத்துலேந்து ஆளு வந்தாங்களா? திருமாளத்துலேந்து சொக்கலிங்கக் கோனாரு வந்தாரா?” என பைரவன் மரிக்கொழுந்துவிடம் கேட்க, “ஆளு பொழைக்கிறதே ஆபத்துல இருக்குதாம். இப்ப வெள்ளஅடிக்கிறதுதான் முக்கியமா?” என்று மரிக்கொழுந்து, கோபத்துடன் பைரவனைத் திட்டினாள். பைரவன் மௌனமானான்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, உடல்நலம் கொஞ்சம் தேறி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து சேர்ந்தான். படுத்த படுக்கையாகக் கிடந்தான். வெள்ளைஅடிக்கச் சொன்னவர்களும், பைரவனின் நிலைமையைப் புரிந்துகொண்டு, ஒன்றும் பேசாமல் சென்றனர்.
இன்னும் இரண்டு நாட்களில் தைப் பொங்கல். ஊரே கொண்டாட்டமாக இருந்தது. பெண்கள், பொடுசுகள் என எல்லோரும் சேர்ந்து வேளார் வீட்டுக்கு பொங்கப் பானை வாங்கச் சென்றுகொண்டு இருந்தனர். பொடுசுகளைக் கையில் பிடிக்க முடியவில்லை. அதுகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஊர் சனங்கள் பொங்கப் பானையைத் தலையில் ஒன்று, கையில் ஒன்று, இடுப்பில் ஒன்றெனப் பயபத்திரமாகத் தூக்கி நடந்தனர்.
மண் பூசின வீடெல்லாம் வெள்ளையடித்து பளிச்சென்று இருந்தது. வீட்டு வாசலில் சாணத்தால் மொழுகி, அதன் மேல் வெண்ணிறக் கோலம். சிலரின் வீட்டு வாசலில், பொங்கல் அடுப்புக் கல்லை மொழுகிக்கொண்டு இருந்தனர். ஊரே பொங்கல் வேலையில் மும்முரமாக இருந்தது.
இரவுப் பொழுது. விடிந்தால் தைப்பொங்கல். ஏதோ யோசனையில் பைரவன் படுத்திருந்தான். அவனின் பையன் செல்வன் ஓடி வந்து, “அப்பா… அப்பா… மணியர சன், சக்திவேலு, மாடசாமி,தேவி வூட்டுலல்லாம் கரும்பு வாங்கிட்டாங்க. நம்ம வூட்டுல மட்டுந்தான் வாங்கல. எல்லாரு வூட்டுக்கும் வெள்ள அடிச்சிருக்காங்க… நம்ம ஊட்டுக்கு மட்டுந்தான்…” என்று ஏக்கமாக இழுத்தான்.
பையனின் முகத்தில் இருந்த ஏக்கத்தைக் கண்டு மனமுடைந்து போனான் பைரவன். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல், வாயடைத்து நின்றான். சிறிது நேரம் கழித்து மெள்ள எச்சிலை முழுங்கி, வார்த்தையை எழுப்பினான்.
“பக்கத்து வூட்டு மாமாகிட்ட கரும்பு வாங்கிட்டு வரச் சொல்லிஇருக்கேன். ராத்திரி வாங்கிட்டு வந்துடுவாரு… இப்ப நீ போயித் தூங்கு” என்றதும், செல்வன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் உறங்கினான். செல்வனுக்கு இன்று நல்ல குணம். அடம்பிடிக்காமல் உறங்கினான். ஊரும் உறங்கிக்கொண்டு இருக்க, பைரவன் மட்டும் உறக்கம் வராமல் தவித்தான். இரவு மெள்ள நகர்ந்துகொண்டு இருந்தது. பொழுது விடிய விடிய… ஓரிரு ஆட்கள் பொங்கல் சாமானை பேரளத்தில் இருந்து வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். தெருவில் ஆட்கள் பேசிக்கொண்டே நடப்பது இவன் காதில் விழுந்துகொண்டு இருந் தது. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல், எப்படியோ விடியற்காலையில் சற்று அசந்து தூங்கினான்.
தைப் பொழுது… பைரவன் கண் விழித்தான். மரிக்கொழுந்து சின்னதாக ஒரு பானையில் பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தாள். அடுப்பு நெருப்பை ஊதிக்கொண்டே, வியர்வை வழிந்த முகத்துடன் பைரவனைப் பார்த்தாள்.
“ஏது புள்ள காசு… யாருகிட்ட கடன் வாங்குன?” என்றான் பைரவன்.
“அது ஏன் இப்போ? ஏந்திருச்சி குளிங்க. சாமி கும்புட்டுட்டுச் சாப்புடலாம்” – மரிக்கொழுந்து சொல்வது, பைரவனின் காதில் விழுந்துகொண்டு இருக்க, அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து, ‘பொங்கலோ… பொங்கல். பொங்கலோ… பொங்கல்’ என்று பொடுசுகளின் சத்தம் வேறு மனதைச் சலனப்படுத்தின. அதோடு, “டொங் டொங் டொங் டொங் டொங்” என்று தாம்பாளத்தில் கொட்டுகிற சத்தமும் அவன் காதுகளில் கேட்டுக்கொண்டு இருந்தது.
“பொங்க பொங்கப்போது… எந்திருச்சு வாங்க” – மரிக்கொழுந்து மறுபடியும் கூப்பிட்டாள்.
அவனின் கண்கள் வெள்ளைஅடிக்காத தன் வீட்டு வெற்றுச் சுவரையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வந்து, கொஞ்ச கொஞ்ச நேரம் வெள்ளையடித்த தன் வீட்டுச் சுவர். பாதி வெள்ளைஅடித்தும், பாதி அடிக்காமலும் இருப்பது அவனின் வாழ்வை அப்பட்டமாக வெளிக்காட்டியது.
‘ஊரல்லாம் வெள்ளயடிச்சி நம்ம வூட்டுக்கு வெள்ளையடிக்க முடியலயே’ என்ற ஏக்கம். கண்கள் கலங்கி, மனது கனக்க ஆரம்பித்தது.
“பொங்கலோ… பொங்கல். பொங்கலோ… பொங்கல்” என, செல்வன் தாம்பாளத்தில் கொட்டு அடித்துக்கொண்டே இருந்தான். அந்த ஒலியானது பைரவனின் வீட்டுச் சுவரெங்கிலும் பட்டு எதிரொலித்துக்கொண்டு இருந் தது. பைரவன் பொங்கல் பானையையே பார்த்துக்கொண்டு இருந் தான்.
பானையில் பொங்கல் பொங்கி வரும் நேரம்… காற்று வழியாக வந்த பொங்கலின் வாசனை அவனைக் கடந்து போக, வெண் சுவரில் இருந்து வந்த வெள்ளைஅடித்த வாசனை மட்டும் பைரவனையே சுற்றிக்கொண்டு இருந்தது!
– ஜனவரி 2010