கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 2,195 
 
 

“ரஞ்சனி, நாம ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமாடி? இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு வண்டி கிளம்ப?” தன்னுடைய லக்கேஜ்களை மேலே வைத்தபடி கேட்டாள் வேணி.

வேணியும், ரஞ்சனியும் ஒரே தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரியும் நெருங்கிய தோழிகள். இந்த அலுவலகம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இன்று இருவரும் அவர்களுடைய இன்னொரு நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் செல்கிறார்கள். இரவு ரயிலில் டிக்கெட் இல்லாமல், காலை புறப்படும் கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் பயணிக்கிறார்கள்.

“இல்லைடி வேணி.. என்ன ஒரு பதினஞ்சு நிமிஷம் முன்னால வந்துட்டோம்.. அவ்வளவுதான்..இது கரெக்டா கிளம்பிடும். அதனால என்னடி, கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லதுதானே? நான் போய் ஏதாவது நம்ப சாப்பிட வாங்கிட்டு வந்துடவா, இன்னும் டைம் இருக்கு…” என்று ரஞ்சனி கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம்டி. இங்கேயே ஏதாவது கொண்டுவந்து விற்கறதிலே வாங்கிக்கலாம்டி.. டேஸ்ட் சுமாராகத்தான் இருக்கும்… பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். இன்னிக்கு சிலமணி நேரங்கள்.. நீ உக்காருடி” என்றாள் வேணி.

“சரி” என்று கூறி ரஞ்சனி உட்கார்ந்தாள். இருவரும் அலுவலகத்தில் தினமும் நடக்கும் விஷயங்கள் பற்றியும், மேலாளர்களின் நடைமுறைகள் குறித்தும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பின்னர் பேச்சு சினிமா பக்கம் திரும்பியது.

வேணி மிகவும் தேர்ந்தெடுத்து தனக்கு பிடித்த கதை போல் உள்ள படங்களை மட்டுமே பார்க்க விரும்புவாள். ஆனால் ரஞ்சனி எல்லா படங்களையும் பார்த்து விடுவாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் என்று ஒன்று விட மாட்டாள். அவள் பார்த்து விட்டு சிலவற்றை வேணியையும் பார்க்க சொல்வாள். சில சமயங்களில் அவளுடன் சேர்ந்து போய் மற்றொரு முறை காண்பாள்.

இந்த நேரத்தில் அருகில் உள்ள அடுத்தடுத்த இருக்கைகளுக்கு பயணிகள் வந்து உட்கார ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் அரட்டையை குறைத்து எல்லா பயணிகளையும் நோட்டம் விட்டார்கள். அதுவும் வேணிக்கு எப்போதும் மகா நோட்டம். எல்லாவற்றையும் உன்னிப்பாக யாருமறியாமல் பார்ப்பதில் கில்லாடி.

இவர்கள் இருக்கைக்கு முன்புறம் நேர் எதிர் திசையில் ஒரு இளைஞன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும், உட்கார்ந்து இருந்தான். முகத்தில் ஒழுங்கு செய்யாத தாடி, அரைகுறையாக கலைந்து போன முடிகளுடன் தலை, ஜீன்ஸ், டி.ஷர்ட், டெனிம் ஜாக்கெட் இப்படியாக இருந்தான். கையில் ஒரு பெரிய தடிமனான புத்தகம், நீல நிறத்தில் ப்ளாஸ்டிக் கவர் போட்டதை வைத்து படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி தன் சிறிய லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து கொண்டும், இடையிடையே செல் போனில் மும்முரமாகவும் இருந்தவன் அவ்வப்போது இவர்களையும் கவனித்து கொண்டு இருந்தான். இவர்களின் முன்னால் இருந்த இருக்கைகளில் ஒரு வயதான தம்பதியர் அமர்ந்து இருந்தனர். அதற்கும் முன்னால் காலியாக இருந்தது. எதிர்ப்பக்கத்தில் ஒரு குடும்பம் நான்கு நபர்கள் இரண்டு குழந்தைகளுடன் சத்தமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

வேணி, ரஞ்சனி இருந்த இருக்கைக்கு பக்கத்தில் இரண்டு இருக்கைகளும், அதன் பின்னால் உள்ள ஒற்றை சீட்டும் காலியாக இருந்தன.

சரியான நேரத்திற்கு ரயில் கிளம்பி விட்டது.

“அரக்கோணம் ஸ்டாப்பிங் உண்டாடி?” ரஞ்சனி வேணியிடம் கேட்டாள்.

“இல்லைன்னு நினைக்கிறேன்” என்றாள் வேணி.

“ரஞ்சனி, நீ கவனிச்சியாடி அந்த தாடிக்காரன் நம்ப ரெண்டு பேரையும் அடிக்கடி உத்துப்பாக்கற மாதிரி இருக்கு, என்ன சொல்றே”? என்றாள்.

“பாத்தா பாத்துட்டு போறான்டி, நிறைய பசங்க இப்படித்தான் இருக்கானுங்க, விடுடி,” என்றாள் ரஞ்சனி.

“அந்தாளைக் கண்டாலே பிடிக்கலை” வேணி கோபமாக கூறினாள்.

“அய்யோ, நமக்கென்னடி, வேலையப்பாருடி அவன் எப்படி இருந்தா என்ன?” எனக்கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரஞ்சனி.

பிறகு இருவரும் மொபைல் போனில் பிஸியாகி விட்டனர். ஒருமணி நேரம் ஓடியது. இதற்கிடையே டிக்கெட் பரிசோதகர் வந்து அவர் கடமைகளை செய்து போனார். அரக்கோணத்தில் கோவை சூப்பர் ஃபாஸ்ட் அதன் அட்டவணைப்படி நின்றது.

இப்போது ஒரு இளைஞன், வயது இருபத்தேழு இருக்கலாம், உள்ளே வந்து அந்த ஒற்றை சீட்டில் உட்கார்ந்தான். கருநீல ஜீன்ஸ், இளம்பச்சை டி ஷர்ட், கூலிங் கிளாஸ், தலையில் ஸ்டைலாக அணிந்த தொப்பி, தோளில் ட்ராவல் பேக், மொபைலில் யாருடனோ பேச்சு இந்த நிலையில் இருந்தான்.

வேணியும், ரஞ்சனியும் அவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு தமக்குள் பேசிக்கொண்டனர். “ஸ்மார்ட்டாக இருக்காண்டி, இங்கே எப்படி ஏறினான்?” என்று ரஞ்சனி வேணியிடம் கேட்க, “நமக்கென்னடி, இப்போ டி.சி வருவாருல்ல, அவரு பாத்துப்பாரு!” என்று வேணி பதிலளிக்க, வண்டி நகர ஆரம்பித்தது.

“நிரஞ்சன், நீங்களா?” என்று டிக்கெட் பரிசோதகர் அந்த புதிதாக வந்த இளைஞனை பார்த்து கேட்டார்.

“ஆமாம்,சார், நான் தாமதமாக வந்ததால் ட்ரெயின் கிளம்பி விட்டது. பின்னால் உள்ள ஒரு பெட்டியில் ஏறிவிட்டேன். நல்ல வேளையாக அரக்கோணத்தில் நின்றது. உடனே இங்கு வந்து ஏறி விட்டேன். ஆனால் அங்கே இருந்த டி.சி கிட்டே இதைச் சொல்லி உங்களுக்கு தகவல் தரச்சொன்னேன் சார்” என்றான்.

“அரக்கோணம் ஹால்ட் உண்டு. அந்த டி.டிதான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணாரு, நீங்க இங்கே உட்காருங்க” என்று அந்த ஒற்றை சீட்டை காட்டினார்.

அவனும் “ஓ.கே” என்று கூறி அமர்ந்தான்.

வேணியும், ரஞ்சனியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர். பிறகு லேப்டாப்பில் இருவரும் ஏதோ ஒரு ஆங்கில படத்தை பார்க்க ஆரம்பித்தனர்.

“எக்ஸ்க்யூஸ் மீ” நிரஞ்சன் அவர்கள் சீட் அருகில் நின்றிருந்தான்.

“நீங்கள் மெர்ஜென் கம்பெனியில் ஸாஃப்ட் வேர் இன்ஜினீயர் பணியில் இருக்கீங்களா?” என்று கேட்டான்.

ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த இருவரும் ஒரே நேரத்தில், “எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டனர்.

“உங்கள் பேக் மேல் மெர்ஜென் லோகோ, கீழே பெயர் இருந்தது. பொதுவா இதெல்லாம் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள், அதை ஊகித்து கேட்டேன். தப்பாக எடுத்துக்காதீங்க. நானும் அந்த கம்பெனியில் ஒருகாலத்தில் வேலை பார்த்தவன். அதனால கொஞ்சம் உரிமையோட பேசிட்டேன்”, சிரித்துக் கொண்டே நிரஞ்சன் கூறினான்.

வேணியும், ரஞ்சனியும் சிரித்து விட்டு, “அதனால் ஒண்ணுமில்ல. எங்களுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு இதைக்கேட்டு. நாங்கள் ரெண்டு பேரும் சீனியர் லெவலில் அங்கே வேலையில் இருக்கோம். இப்போ ஒரு முன்னாள் எம்ப்ளாயியை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி” என்று ரஞ்சனி கூறினாள்.

“இப்போது எங்கே வேலையில் இருக்கீங்க, ஏன் மெர்ஜென் வேலைய விட்டுட்டு போனீங்க, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா சொல்லுங்க” என்றாள் வேணி.

நிரஞ்சன் உடனே, “இதில் என்ன ஆட்சேபணை, அப்போதான் மெர்ஜென் வளர ஆரம்பித்தது. அதற்குள் எனக்கு பெங்களூருல நல்ல ஆஃபர் ஒண்ணு ஸ்டார்ட் அப் கம்பெனியில் ஒர்கிங் பார்ட்னர்ஷிப் வசதியுடன் கிடைச்சது. கிளம்பிட்டேன். நல்ல வேளைலதான் போய் சேர்ந்தேன் போல இருக்கு. இன்னிக்கு நாலு வருஷத்தில் பெங்களூர் தவிர சென்னை, கோயம்புத்தூர்ல பிராஞ்ச் இருக்கு.. நானும் இன்னும் ஒருத்தரும் இந்த இரண்டையும் கவனிச்சுக்கறோம். நல்லாவே போய்ட்டிருக்கு பிஸினஸ்” என்றவன் தொடர்ந்து, “என்னுடைய இன்னொரு லேடி பார்ட்னர் காட்பாடில வருவாங்க.. ரெண்டு பேரும் கோவை போறோம் பிஸினஸ் விஷயமா” என்றான்.

அதன் பின்னர் மூவரும் தங்கள் பணிகளில் உள்ள இடையூறுகள் பற்றியும், மற்ற பொதுவான நிகழ்வுகள் பற்றியும், கிரிக்கெட் பற்றியும் பேசி அரட்டை அடித்துக் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே காலை உணவு அவனே இவர்களுக்கும் வாங்க, வேணி மறுக்க, “ஒரு சுவாரஸ்யமான புதிய நட்பை இதன் மூலம் கொண்டாடினால் தப்பில்லை, வேணி அவர்களே” என்று சிரித்துக் கொண்டே நிரஞ்சன் கூறியதை ஆமோதித்து எல்லோரும் சாப்பிட்டனர்.

தாடியுடன் இருந்தவனும் உணவு விற்பனையாளரிடம் வாங்கி முன்பே உண்டு முடித்து தன் பையில் உள்ள ஃப்ளாஸ்க்கை எடுத்து வெந்நீர் அருந்தினான். பக்கத்தில் உட்கார்ந்து இருந்த வயதான தம்பதியர் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த உணவை உண்ண ஆரம்பிக்க, அந்த முதியவருக்கு திடீரென்று இருமல் வரத்தொடங்க , தண்ணீர் அருந்தினாலும் நிற்காமல் இருக்க, தாடிக்காரன் தன்னிடம் இருந்த வெந்நீரை அவர் டம்ளரில் ஊற்றி குடிக்க சொன்னான். முதியவருக்கு இருமல் சற்று குறைந்தது.

“ஏ.சி உங்களுக்கு ஒத்துக்கொள்ளலேன்னு நினைக்கிறேன்.. காதைச்சுற்றி டவலை போட்டுக்கோங்க” தாடிக்காரன் பேசியபடியே, அவர் கையில் உணவு இருந்ததால், அவர் பையின் மேல் இருந்த துண்டை எடுத்து தாடிக்காரன் கட்டி விட்டு”நீங்க சாப்பிடுங்க ” என்றான்.

அந்த தம்பதியர் இவனுக்கு மிகவும் நெகிழ்வுடன் நன்றி கூறி சாப்பிட ஆரம்பித்தனர்.

இவைகள் அனைத்தையும் வேணியும், ரஞ்சனியும் கவனித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் அருகில் நின்று நிரஞ்சன் ஒரு செல்ஃபி எடுத்து “உங்கள் நம்பர் சொல்லுங்க, இதை அனுப்பறேன்” என்று கூற ரஞ்சனி கொடுத்தாள்.

“நல்ல திறமையான மார்க்கெட்டிங் ஆளு போல, நீங்க,விட்டா எங்களையும் உங்க லைனுக்கு இழுத்திடுவீங்க போலிருக்கே” புன்னகையுடன் கூறினாள் ரஞ்சனி.

“அதனால் என்ன, நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும், எங்களோட புது “ஆப்” மூலம் பல பேர் வேற நல்ல கம்பெனியில் சேர்ந்திருக்காங்க, சொந்த தொழில் தனியா தொடங்கியோ. அல்லது என் மாதிரி பார்ட்னர்ஷிப் வழியிலோ சிறிய முதலில் வெவ்வேறு துறைகளில் தொழில் தொடங்கியோ இருக்காங்க, அதுவே எங்களுக்கு பெரிய வெற்றி. இந்த செயலி பேர் “ஃப்ரஸ்ட்ரா”. நீங்க வேண்டுமானாலும் போய் ரெஜிஸ்டர் செய்யலாம். ஃப்ரீ தான்” என்றான்.

“இதென்ன பெயர் இப்படின்னு கேட்டா, இருக்கற வேலைல ஃப்ரஸ்ட்ரேட் ஆகி என்ன செய்யறதுன்னு அவஸ்தை பட்டிட்டு இருக்கிறவங்களுக்கு உதவறதுதான் இதன் வேலை. அதனால் இப்படி பேர் வெச்சோம்.” என்று சொல்லி சிரித்து விட்டு அந்த செயலியை அவர்களுக்கு தன் மொபைலில் காண்பித்தான்.

“ஃப்ரீயாவே எப்படி அவ்வளவு தூரம் உதவி செய்வீங்க, அப்போ பெயர் பதிஞ்சவங்களுக்கு செலவே ஏதுமில்லையா? ரொம்ப தாராளமா இருக்கீங்களே” என்று வேணி கேட்க, “ரெஜிஸ்டர் ஃப்ரீ, ஆனால் அதுல வர்ற எல்லா நோட்டிஃபிகேஷன்களும் உதவியா இருக்குமா உங்களுக்குன்னு சொல்ல முடியாது. அதனால குறிப்பிட்ட வகையான துறைகளில், கம்பெனிகளில் அல்லது ஒரு விருப்பப்பட்ட தொழிலில் ஈடுபட என்று தேர்ந்தெடுக்கும்போது அதற்கு உண்டான கட்டணம் உண்டு. ரொம்ப குறைவுதான். மினிமம் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையில். அந்தந்த தொழில்கள், அதன் டிமாண்ட் பொறுத்து மாறுபடும்.” என்று நிரஞ்சன் விளக்கினான்.

ரயில் காட்பாடி நிலையம் உள்ளே நுழைந்தவுடன் நிரஞ்சன் தனது செல் போனில், “தீபிகா, சி த்ரீ தெரியும் இல்லையா? நான் கீழே வர்றேன்” எனக் கூறி இவர்களிடம், “என் பார்ட்னரை கூப்பிட்டு வர்றேன். அவளும் என்னோட கோவை வர்றா, இங்கே ஒரு கஸ்டமரை பாத்துட்டு” என்று கீழே இறங்கி சென்றான்.

பின்னாலேயே அந்த தாடிக்கார இளைஞனும் செல்ல எழுந்து, பக்கத்தில் இருந்த முதியவரிடம் ஒரு சிறிய பொருளைக் கொடுத்து, “அய்யா, இது அதிமதுரம். வாயில் சும்மா அடக்கிக்கோங்க, இருமல் வராமல் இருக்கும். நான் போய் இந்த ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் நிரப்பிட்டு வர்றேன்” என்று நகர்ந்தான்.

“இந்தாளே நோயாளி மாதிரி இருக்கான், இவன் கையால் அந்த வயசானவர்க்கு கொடுத்ததை சாப்பிட்டா அவ்வளவுதான்” என்று வேணி ரஞ்சனி காதில் கிசுகிசுத்ததையடுத்து இருவரும் சிரித்தனர்.

அதே நேரத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர் உள்ளே ஏறி அந்த ஒற்றை சீட்டில் அமர்ந்து தன் மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு போன் செய்தார்.”நான் இங்கே காட்பாடில வண்டி ஏறிட்டேன். ஆம்பூர்ல இருக்கியா, ஜோலார்பேட்டைலயா?” என்று கேட்டார். அங்கிருந்து வந்த பதில் கேட்டு “ஓகே” என்று சொல்லி வேணி, ரஞ்சனி இவர்களை பார்த்து “இங்கே யாராவது உட்கார்ந்திருக்காங்களா அம்மா?” என்று கேட்டார்.

“ஆமாம் ஒருத்தர் இருக்கார். அவரோட கொலீக் இங்கே போர்டிங் ஆகறாங்க அவங்களை கூப்பிட்டு வர போயிருக்காரு” என்று ரஞ்சனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிரஞ்சன் தீபிகாவுடன் உள்ளே நுழைந்தான். அதற்குள் அந்த மனிதர் எழுந்திருக்க, நிரஞ்சன் “சார், நீங்க அங்கேயே உட்காருங்க, நானும் இவளும் இந்த ரெண்டு சீட்களை ஆக்கிரமிக்கிறோம்” என்றான். “ரொம்ப தேங்க்ஸ் தம்பி” புதிய பயணி சொன்னார்.

தீபிகாவை வேணிக்கும், ரஞ்சனிக்கும் அறிமுகப்படுத்தினான் நிரஞ்சன். “உங்களை ஒருவழி ஆக்கியிருப்பானே இவன், தன் திறமையைப் பத்தி தம்பட்டம் அடிச்சு ப்ளேட் போட்டிருப்பான். நல்லா மாட்னீங்க” என்று சிரித்துக் கொண்டே நிரஞ்சன் பற்றி கேட்டாள் அவ்விரு பெண்களிடம்.

“அதெல்லாம் இல்லை, நல்ல இன்ட்ரெஸ்டிங்கா பேசிட்டிருந்தாரு. எங்களுக்கே சொந்த தொழில் தொடங்கற அளவுக்கு ஊக்கம் கொடுத்துட்டாரு” என்று ரஞ்சனி சொன்னாள்.

“ஏய் நிரஞ்சன், இங்கே வந்து உன் ஸேல்ஸ் வேலையக்காமிச்சுட்டியா?” என்றபடியே அவள் கொண்டு வந்த ‘பேக்’ ஐ மேலே வைக்க முயற்சி செய்தாள். அந்த ஓரத்தில் உட்கார்ந்திருந்த தாடிக்கார இளைஞன் எழுந்து உதவி செய்ய”தேங்க்ஸ்” என்று சொல்லி தீபிகா உட்கார முற்பட்ட போது “யூ ஆர் வெல்கம் ” என்று அந்த இளைஞன் சிறிய புன்னகையுடன் சொல்ல, இதையெல்லாம் பார்த்த ரஞ்சனி “இதுக்கு சிரிக்க கூட தெரியுதுடி” என்று வேணியிடம் மெதுவான குரலில் கூறி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டி கிளம்பியது. அப்போது டி.சி வந்து புதிதாக ஏறியவர்களை செக் செய்து விட்டு, நடுத்தர வயதுடையவரை “நமசிவாயம் சார், நீங்க இந்த ஸிங்கில் சீட்லயே உட்காருங்க” என்றவர் தீபிகாவிடம் “நீங்க ரெண்டு பேரும் இந்த சீட்களில் உட்காந்துக்கங்க” என்று சொல்ல, நமசிவாயம் “சார், ஆம்பூரில் எத்தனை நிமிடங்கள் நிற்கும், என் நண்பன் வருகிறான். இதே கோச்தான் சீட் இருபத்தேழுன்னு நினைக்கிறேன்” என்றார். “மூன்று நிமிடங்கள் நிற்கும். கவலைப்படாதீங்க, அவரு ஏறிடுவாரு” என்று சிரித்தபடியே கூறிக்கொண்டு சென்றார் டிக்கெட் பரிசோதகர்.

தாடிக்கார இளைஞனிடம் அந்த முதியவர் மெல்லிய குரலில் ஏதோ கேட்டுக்கொண்டு உரையாடிய படி இருந்தார். அவருக்கு சிறிதாக தொண்டை கரகரப்பு ஏற்பட்டு லேசான இருமல் வரும்போது “என்னிடம் ஒரு ஆயுர்வேத இருமல் மருந்து உள்ளது, வேண்டுமா?” என்று அந்த இளைஞர் கேட்க, முதியவர் மறுத்து “கொஞ்சம் வெந்நீர் மட்டும் குடிச்சுக்கறேன்” எனக்கூறி டம்ளரை நீட்டினார்.

கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆம்பூர் வந்தடைந்தது அடுத்த ஐம்பது நிமிடங்களில். இந்த இடைவெளியில் நிரஞ்சன், தீபிகா,வேணி, ரஞ்சனி தங்கள் அரட்டை, கிண்டல் பேச்சுக்கள் மூலம் நட்பை நெருக்கமாக்கிக் கொண்டனர். இவர்களிடையே அவ்வப்போது நமசிவாயமும் சில பேச்சுக்களை நகைச்சுவையாக பேசி அவர்களை மகிழ்வித்தார்.

“நானெல்லாம் வியாபாரம் செய்யறவன். ஆம்பூரில் என் ஃப்ரெண்ட் கோவிந்தன் வருவான் பாருங்க, அவனும் அப்படித்தான். கோயம்புத்தூரில் நாங்க ரெண்டு பேரும் தயாரிக்கும் ‘லேத் மெஷின்களை’ இந்தியா முழுக்க விற்பதும், வாடிக்கையாளர்களை பார்த்து விட்டு வருவதும், மெஷின் ‘இன்ஸ்டால்’ செய்ய, எங்கள் உதவியாளர்கள் தவிர நாங்களும் போய் வருவதும், பாதி வாழ்க்கை பயணங்களில்தான் இருப்போம். வீட்ல இருக்கறவங்களை விட அதிகமாக நாங்க பேசறது எல்லாம் உங்களை மாதிரி சக பயணிகளோடுதான். ஒரு மூணு நாள் வீட்ல சேர்ந்த மாதிரி இருந்துட்டேன்னா, பொண்டாட்டி கேட்க ஆரம்பிச்சுடுவா, பிஸினஸ் டல் ஆயிடுச்சா அப்படின்னு!” என்று சொல்லி கட கட என சிரித்தார்.

அந்த நால்வரும் ரசித்து சிரித்தனர்.

அப்போது உள்ளே வந்த கோவிந்தன், நமசிவாயத்தின் நண்பர், சற்றேறக்குறைய நமசிவாயம் போல நடுத்தர வயதுடையவர் “என் இருக்கைய ஏண்டா தனியா தந்துட்டான், நீ அங்கு வர்றியா, அப்படி ஒண்ணும் எல்லா சீட்லயும் ஆள் இருக்கற மாதிரி இல்லையே?” என்று நமசிவாயத்திடம் கேட்டார்.

“கோவிந்த், தனித்தனியா நம்ப பயணம் முடிவு செஞ்சபோது புக் பண்ணது. அப்படித்தாண்டா இருக்கும். நீ அங்கேயே உட்காரு, நான் பின்னாடி வர்றேன்..” நமசிவாயம் பதில் தந்தார்.

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த தாடிக்கார இளைஞன் “கோவிந்தன் சார், எப்படி இருக்கீங்க, பாத்து எவ்வளவு நாளாச்சு, எப்படி சார் இருக்கீங்க, இப்ப யார மடக்கப்போறீங்க?” என்று கேட்க, கோவிந்தன் அவனிடம் திரும்பி “நீ, நீங்க, கேசவன் தானே, என்ன தாடியுடன், கலைஞ்ச தலைமுடி, அடையாளம் தெரியல, எல்லாம் சொல்றேன். அங்க என் சீட். வா, வா, நமசிவாயம் சேலம் வரை இங்கேதான் இருப்பான். எனக்கு பேச்சு துணையா நீ இரு”. எனக்கூறி கேசவனை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனார் கோவிந்தன்.

“டேய், இருடா, கோவிந்த், நம்ப ரெண்டு பேரையும் இந்த ட்ரெயின்ல போட்டோ எடுத்து வீட்டுக்கு அனுப்புவோம். கொஞ்சம் சந்தோஷமா இருப்பாங்க” என்று நகர்ந்து சென்ற கோவிந்தனை திரும்ப அழைத்து, வேணியிடம் தன் செல் போனைக் கொடுத்து, “அம்மா, எங்கள் ரெண்டு பேரையும் அப்படியே கேஷுவலாக ஒரு போட்டோ எடும்மா. பின்னாடி அவங்க தெரிஞ்சா தப்பில்லை” என்று நிரஞ்சன், தீபிகா அவர்களை காட்டி சொன்னார்.

“நாங்க அங்க போய்டறோம் அங்கிள் ” என்று சொன்ன தீபிகாவை தடுத்து, “நீங்க பாட்டுக்கு உக்காருங்க இங்கேயே, அப்பதான் கேஷுவலா இருக்கும்” என்று கூறி நமசிவாயமும் கோவிந்தனும் இடைவெளி விட்டு நிற்க, வேணி இரண்டு போட்டோக்களை எடுத்தாள்.

அதை வாங்கி பார்த்த நமசிவாயம், “இது போதும். நன்றி பொண்ணே” என்று வேணியிடம் சொல்லி அமர்ந்தார். கோவிந்தன் கேசவனை அழைத்துக்கொண்டு முன்னே உள்ள இருக்கை நோக்கி போனார். கேசவன் அவருக்கருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். இடையிடையே வேணி, ரஞ்சனி இருவரையும் பார்த்து விட்டு அவரிடம் ஏதோ சொன்னான். வேணி, ரஞ்சனி இதை கவனிக்கவில்லை.

“அந்த போட்டோ அனுப்பினேன், பாத்திங்களா, சரியா இருக்கா? கோவிந்தன் என்னோட தான் வரான். திருப்பூர் வர்றதுக்கு முன்னால் சொல்றேன். ரெடியாயிடுங்க” எனக்கூறி நிரஞ்சனிடம் “கோவையில் வேலை ஒண்ணும் இல்லே இன்னிக்கு. அதான் வீட்ல அவங்களை தயாரா இருக்க சொன்னா, போய் ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்த கோவிலுக்கு போகலாம்னு எண்ணம். பாக்கலாம்” என்றார் நமசிவாயம்.

ஜோலார்பேட்டையில் நின்று ரயில் கிளம்பி வேகம் பிடித்தது. தீபிகா, வேணி, ரஞ்சனியுடன் மிக சகஜமாகப்பேசிக்கொண்டிருக்க, வேகமாக ஒருவன் அந்த பக்கம் உள்ள நுழைவிடத்திலிருந்து வந்து நிரஞ்சனை கை ஜாடை செய்து அழைத்தான்.

நிரஞ்சன் உடனே அவசரமாக அவனருகே சென்றபின் இருவரும் வெளியே சென்று ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். வேணி மற்றும் ரஞ்சனி சொல்வதில் கவனம் இல்லாமல் தீபிகா நிரஞ்சனின் செயல்களை நோட்டம் விட்டாள். அதன் பின்னர் உள்ளே வந்த நிரஞ்சன், தீபிகாவிடம் காதில் ஏதோ சொல்ல அவளும் சிறிது பதட்டம் அடைவது போல் தோன்றியது. வேணி இதை நோட்டமிட்டு “எனிதிங் ராங்?” என்று அவனைக் கேட்டாள்.

“ஆமாம். ஒரு கஸ்டமர் ஆர்டர் கேன்சல் செய்ய முடிவு செஞ்சிருக்காரு, இப்போ வந்தான் பாருங்க, அவன் மூலமா வந்த கஸ்டமர், அவன் பக்கத்து பெட்டியில் இருக்கான். தீபிகாதான் அந்த கஸ்டமரோடு கோஆர்டினேட் பண்றா.. அதான் அவளும் டென்ஷன் ஆயிட்டா” என்றான்.

“தீபிகா, நீ கொஞ்சம் இன்னும் கவனமா ஹேண்டில் பண்ணிருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப சீரியசான விஷயம் இது.” என்ற நிரஞ்சனிடம் ” ஏய் பழியை என் மேல் போடாதே, உனக்கும் பொறுப்பு உள்ளது. வந்தானே, அந்த ராஜேந்திரன் அவனும் காரணமா இருக்கலாம் இல்லையா?” என்று கோபமாக கேட்டாள் தீபிகா.

“தம்பி, நான் அனுபவத்தில் சொல்கிறேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க, பிஸினஸ்ல இது நடக்கறதுதான். ரெண்டு பேரும் சேர்ந்து நேரா போய் பாக்கமுடிஞ்சுதுன்னா கஸ்டமரை பாருங்க, இல்லை உங்களோட பிஸினஸ் ஆன்லைன் அப்படின்னா, ஆன்லைன் வழியாக வீடியோ கால் செஞ்சு பேசுங்க. நேரா பேசும்போது பல விஷயங்கள், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நான் ஏதோ பெருசா புத்திமதி சொல்றதா நினைக்காதீங்க” என்றார் நமசிவாயம்.

“அதெல்லாம் இல்லை சார், சரியாத்தான் சொன்னீங்க. நானே இதுதான் முடிவு பண்ணினேன். நன்றி சார்” என்று கூறி, தீபிகாவை பார்த்து “நாம் திருப்பூரில் இறங்கிடலாம்” என்றான்.

ரயில் சேலம் வந்தடைந்தது. அதற்குள் கோவிந்தன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கேசவன் திரும்ப வந்து தன் சீட்டில் உட்கார்ந்தான். பின்னாலேயே கோவிந்தனும் வந்து நமசிவாயம் அருகே நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்.

“நான் அந்த சிங்கிள் சீட்ல உட்கார்றேன்.நீங்க ரெண்டு பேரும் இங்கே மாறிக்கங்க ” என்றான் கேசவன்.

“வேண்டாம் கேசவா, எத்தனை நேரம்தான் உக்காந்துட்டே இருக்கறது, கொஞ்சம் நின்னா தேவலாம்” என்று பதிலளித்தார் கோவிந்தன்.

“கன்ஃபர்ம் பண்ணிட்டாங்கப்பா, பக்கத்து கம்பார்ட்மெண்டில் இங்கே அவங்களும் ஏறிட்டாங்க. இன்சார்ஜை திருப்பூர் வரச்சொல்லிடுப்பா. நாம வேணுமின்னாலும் திருப்பூர்ல முடிச்சு ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு போகலாம்” என்று நமசிவாயம் கோவிந்தனிடம் கூற “ஓ.கே. ஒரு பெரிய பிரச்னை தீர்ந்துவிடும் இது மட்டும் முடிஞ்சா” என்றார்.

“நிரஞ்சன், நானும் வேணியும் ரெஜிஸ்டர் பண்ணிட்டோம் நீங்க சொன்னபடி. சீக்கிரமே ரெஸ்பான்ஸ் வரும்னு நம்பறோம்” ரஞ்சனி சொன்னாள்.

“நீங்க கவலையே படாதீங்க, நான் இதை பர்சனலா எடுத்து உங்களுக்கு நாளைக்கே ஒரு நல்ல வழி கிடைக்க ஏற்பாடு பண்றேன். பணம் ரெடியா வச்சுக்கோங்க, உடனே அக்ரிமெண்ட் போட்டுடலாம். எல்லா டீடெயில்ஸும் நாளைக்கே வரும்” என்றாள் தீபிகா.

அந்த நேரத்தில் அங்கே வந்த சூடான வடைகளை வாங்கி எல்லோருக்கும் விநியோகம் செய்தார்கள் நமசிவாயமும், கோவிந்தனும்.

“இனிமே எதுக்கு லஞ்ச், இதுவே வயிறு ரொம்பிடுச்சு” இப்படி சொல்லிக்கொண்டே எல்லோரும், கேசவன், முதிய தம்பதியர் உள்பட, வடைகளை ருசித்தனர்.

கோவிந்தன் திரும்பவும் அவர் இடத்திற்கு சென்று ஏதோ போன் செய்துவிட்டு, நமசிவாயத்தை பார்த்து கட்டைவிரல் உயர்த்தி சிக்னல் செய்தார்.

ஈரோடு ரயில் நிலையம் வந்து சேர்ந்தது எக்ஸ்பிரஸ் வண்டி. ஆச்சரியமாக கூட்டம் ரொம்பவும் குறைந்து காணப்பட்டது.

“ராஜேந்திரன் போனை எடுக்க மாட்டேங்கறான். என்ன செய்தானோ தெரில, அவனையும் திருப்பூர் இறங்கச் சொல்லிட்டேன், மறுபடியும் கன்ஃபர்ம் பண்ணத்தான் கூப்பிட்டேன். லஞ்ச் சாப்டறான் போல இருக்கு” என்று நிரஞ்சன் தீபிகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஈரோடு ரயில் நிலையம் விட்டு கிளம்பிய வண்டி வேகத்தை அதிகரிக்க, அடுத்த நாற்பதாவது நிமிடங்களில் திருப்பூரை நெருங்கியது.

இதற்கிடையே சில நிமிடங்கள் முன்பு பக்கத்து கம்பார்ட்மெண்டில் ராஜேந்திரனை பார்க்க போய் விட்டு வந்த நிரஞ்சனின் முகம் சுருங்கி இருந்ததை கவனித்த தீபிகா ஏதோ ஜாடையில் அவனுடன் பேசியபடி அவளுடைய பையை மேலிருந்து எடுக்க முனைந்தாள். இம்முறையும் கேசவன் உதவினான்.

திருப்பூர் ரயில் நிலையத்திற்குள் வண்டி நுழையும் முன்பே நமசிவாயம் எழுந்து கதவின் அருகே நின்றார்.

நிரஞ்சனும், தீபிகாவும், வேணி, ரஞ்சனி இருவருக்கும் “குட் பை ” சொல்லிவிட்டு கதவருகே செல்ல பின்னால் இருந்து வந்த கோவிந்தன், நிரஞ்சன் தோள்மீது கைவைத்து சட்டை காலரைப்பிடிக்க, முன்னால் இருந்த நமசிவாயம் நிரஞ்சனின் ஜீன்ஸ் பெல்ட்டில் இடுப்பை பிடித்து இழுத்து அவன் கைகளை பின்னால் மடக்கினார்.

அதிர்ச்சி அடைந்த தீபிகா சற்று சுதாரித்து கோவிந்தன் கைகளுக்கு கீழே குனிந்து எதிர்முனையில் ஓடினாள். கதவை திறந்து ஓட முற்பட்ட வளை எதிரே வந்த பெண் போலீஸ் பலமாக அவளை உள்ளே தள்ளி விலங்கு மாட்ட, கோவிந்தன் நிரஞ்சனின் கைகளில் விலங்கைப்பூட்ட, மொத்த கம்பார்ட்மெண்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குள் வண்டிக்குள் ஏறிய மற்ற காவல்துறையினரும், சாதாரண உடையில் இருந்த நமசிவாயம், கோவிந்தன் போன்ற தனிப்படையினரும் நுழைந்து, “சூப்பர், வெல்டன், சார்” என்று நமசிவாயத்திடமும் கோவிந்தனிடமும் கூறி நிரஞ்சன், தீபிகாவின் மொபைல், லக்கேஜ் இவைகளை கைப்பற்றி அவர்கள் இருவரையும் கீழே தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

பிறகு, நமசிவாயமும், கோவிந்தனும் உள்ளே வந்து வேணி, ரஞ்சனி இவர்களிடம், “இவங்க ரெண்டு பேரும் ‘சைபர் க்ரைம்’ செய்து நிறைய பேரை ஏமாற்றி ஒன்றரை வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளிகள். அவன் பெயர் கமலேஷ், அந்த பொண்ணு பேரு டெய்ஸி. இன்னொருத்தன் வந்தவன் பேரு காசிநாத். நான் ஏறியவுடனேயே கண்டுபிடிச்சுட்டேன். எல்லாருக்கும் தகவல் இவன் போட்டோவுடன் ரகசியமா அனுப்பியிருந்தோம். இங்கு வந்த டி.டி.இ இவன் ஏறிய விஷயத்தை தகவல் கொடுத்தார். நானும் கோவிந்தனும் திட்டமிட்டு வெவ்வேறு ஸ்டேஷனில் ஏறினோம். மீதி உங்களுக்கு தெரியும். நீங்க ஏதாவது பணம் ஆன்லைன் மூலமா அவங்களுக்கு அனுப்பினீங்களா?” எனக்கேட்க அதிர்ச்சி, குழப்பம், ஆச்சரியம் இவைகள் சூழ்ந்த மனநிலையில் இரு பெண்களும் இல்லை என தலையசைத்தனர். பிறகு, “நீ போட்டோ எங்களை எடுத்தே பாரு, பின்னாடி அவனுக ரெண்டு பேரும் இருந்தா பரவாயில்லைன்னு சொன்னேன் இல்லையா, அதை சைபர் க்ரைம் தலைமையகத்துக்கு அனுப்பி ‘ரீ கன்ஃபர்ம் ‘ பண்ணிக்கிட்டேன். வீட்டுக்கெல்லாம் அனுப்பலே” என்றார். அவர் குரல் இப்போது காவல்துறை கண்டிப்புடன் இருந்தது.

கோவிந்தன் அவர்களிடம், “இங்கே வந்தவுடன் கேசவன் என்னைப் பார்த்து கேட்டார் இல்லையா, இவங்க ரெண்டு பேருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை அங்கே அழைச்சிட்டு போய் விஷயங்கள் சொல்லி, அவரும் ரகசியத்தை காப்பாத்தி எங்களுக்கு உதவினார். நன்றி கேசவன்” என்றவர் தொடர்ந்து, “அந்த இன்னொரு ஃப்ராடை சேலத்தில் மடக்கி தூக்கிட்டாங்க. அவன் யார் மூலமாகவோ மோப்பம் பிடிச்சு போலீஸ் வர்றாங்க போலிருக்கு நம்மை தேடி, நான் ஈரோடுல இறங்கிடறேன், நீங்க திருப்பூர்ல இறங்கிடுங்கன்னு இவங்களை எச்சரிக்கை செஞ்சது எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. சேலத்தில் அவனைத்தேடிப்போன கமலேஷ், திரும்ப வந்து டென்ஷன் ஆனதை நோட்டீஸ் பண்ணிட்டோம். அவன் ஈரோடு ஸ்டேஷன்ல இறங்க முனைஞ்சாலும் அவனை பிடிக்க ரெடியா இருந்தோம். நீங்க கவனமா போங்க, நல்ல வேளையா அவனோட வலைக்குள்ள மாட்டாம தப்பிச்சீங்க” என்றவர், “மறந்துட்டேனே, இந்த கேசவன், தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் சீனியர் ஆபீஸர். நிறைய சாதனைகள் புரிந்தவர். நம்ம கோவைக்காரர், என் குடும்ப நண்பர்.” என்று பெருமையுடன் அறிமுகம் செய்து விட்டு ‘குட்பை’ கூறி நகர்ந்தார்.

வேணியும், ரஞ்சனியும் இப்போது மிகுந்த மரியாதையுடன் கேசவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்…

“அதெல்லாம் இல்லைம்மா, என்னால் முடிஞ்சத செஞ்சதுக்கு இப்படி எல்லாம் சொல்ராரு, பை தி வே நீங்க ரெண்டு பேரும் அந்த ஃப்ராடுகளோட வெப்சைட்டில் ரெஜிஸ்டர் பண்ணியிருந்தா எல்லாத்தையும் டெலீட் பண்ணிடுங்க, ஏதாவது டவுன்லோட் செஞ்சிருந்தா அதையும் சேர்த்து” என்றான் கேசவன். இருவரும் தலையாட்டினார்கள்.

இந்த களேபரங்களால் வண்டி வழக்கத்திற்கு மாறாக அதிக நிமிடங்கள் நின்று பின்னர் புறப்பட்டது. நகரும்போது இத்தனை நேரம் உத்தமர்கள் போலிருந்த, நடித்த நிரஞ்சன் என்ற கமலேஷ், தீபிகா என்ற டெய்ஸி, ராஜேந்திரன் என்ற காசிநாத் மூவரும் விலங்கிட்டபடி நின்று கொண்டிருந்ததை வேணியும் ரஞ்சனியும் பார்த்தவாறே இருந்தனர்.

“கலியுகம் சார், இதெல்லாம்தான் நடக்கும்” முதியவர் கேசவனிடம் கூறினார்.

கேசவன் “எஸ்” என்றான்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியாதுடி இந்த காலத்தில்” என்றாள் ரஞ்சனி பெருமூச்சு விட்டபடி.

“ம்ம், ஆமாண்டி, சே, மகாமோசம்..முதல்ல அதை எல்லாத்தையும் டெலீட் பண்ணுவோம் வா” என்றாள் வேணி.

அவர்களைப் பார்த்து கேசவன் “உங்களுக்கு கோவையில் எங்கே போகவேண்டும் என்று சொன்னால் நான் ட்ராப் பண்ணிடறேன். என் கார் வரும் ஸ்டேஷனுக்கு, நீங்க வித்யாசமா நினைக்கலேன்னா” என்றான்.

“இல்லை சார், எங்கள் நண்பர்கள் வருவாங்க, அழைச்சிட்டு போறதுக்கு. தாங்க்ஸ் சார்” என்றனர் இரண்டு பெண்களும்.

பிறகு வேணி ரஞ்சனியிடம், “நான்தான் தப்புக்கணக்கு போட்டுட்டேண்டி. இவனுக டீஸென்டா ட்ரெஸ் பண்ணிட்டு, மேதாவித்தனமா பேசிட்டு திருடன்களா இருக்கானுக, பல பேர் தன்னோட வெளித்தோற்றத்தில அதிகமா கவனம் செலுத்தி நேரத்தை செலவழிக்காம சூப்பர் உள்ளம் கொண்ட மனுஷங்களாவும், சாதனைகள் செய்யறவங்களாவும் இருக்காங்க. யாரையும் சீக்கிரமா இப்படித்தான்னு தீர்மானம் செய்றது தப்பு. நீ சொன்னபடி அகத்தின் அழகு முகத்தில் தெரியாதுடி…கரெக்ட் தான்” என்று உணர்ச்சி பொங்க கூறினாள்.

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் கோவை ரயில் நிலையத்தை இருபது நிமிடங்கள் தாமதத்துடன் அடைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *