கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 4,826 
 

மாயாஜாலம் செய்வதில் இப்போதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.. எனது ஒவ்வொரு காட்சிக்கும் நான் நினைத்ததைவிட அதிகமாக மக்கள் வந்து குவிகிறார்கள். குழந்தைகள் பெண்கள் அதிகம். ஒரு தொழில் வெற்றிப்பெற அந்த தொழில் குழந்தைகளால் பெண்களால் விரும்பப்படவேண்டும் என்பது புரிந்தது. அந்த புரிதல் என்னிடம் ஒழுங்கும் ஒழுக்கமும் உலகின்மீது அன்பும் வளர செய்து வாழ்க்கையை தழைக்கசெய்தது.

ஒழுங்கும் ஒழுக்கமும் அன்பும் கொண்டு செயல்செய்யும்போது நம்மீது நமக்கு நம்பிக்கையும் உலகின்மீது நட்புணர்வும் உண்டாக்கிவிடுகிறது. அதுவே வெற்றிபடிகட்டு.

எனக்கு இந்த தொழில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தந்தது, அந்த தொழில் மீது கொண்ட பத்தியால் அது எனக்கு சோறும் போட்டு புகழையும் அள்ளித்தருகிறது. விரும்பியதை செய்பவனும், விரும்பி செய்பவனும் வெற்றிபெறுகிறான். வாழ்க்கையில் முத்திரை பதிக்கிறான். வாழ்ந்தவன் ஆகிறான்.

ஒவ்வொரு காட்சி முடியும்போதும் என்னை மொய்த்துக்கொள்ளும் குழந்தைகள் என்னை பெரும்நதியின் சுழியாக்கி அதில்பூவிழதாய் சுழல்வதை கண்டுகொண்டு இருக்கிறேன். பலபெண்களின் கண்களில் இவர் எனது நட்பு எனது உறவு என்பதுபோன்ற மலர்ச்சியை பார்க்கிறேன். பார்க்கும்போதெல்லாம் உள்ளத்தால் புன்னகைப்பார்கள். அவர்கள் கண்களில் ஒரு பிரளயபாசம் ததும்புவது நிஜம்.

மாயாஜால காட்சியின் இறுதியில் நான் ஒரு ஆள் உயர முகம்பார்க்கும் கண்ணாடியில் நுழைந்து காணாமல்போகி கூட்டத்தின் நடுவில் இருந்து எழுந்து வருவேன். அப்போது எனது ஆடைக்குள் இருந்து வண்ண வண்ண ரோஜா மலர்களை எடுத்து கூட்டத்தை நோக்கி வீசுவேன். கூட்டம் ஆனந்தத்தில் கொந்தளிப்பில் அலையடிக்கும். நான் காணாமலாகி மீண்டும் எழும்கணம்வரை உள்ள அந்த சூனிய நேரத்தில் ஒவ்வொரு மனமும் தவிப்பதை உணர்ந்து உள்ளம் விரிவேன்.

குழந்தைகள் பெண்கள் நுண் உணர்வோடு எளிதில் கலந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் அந்த கணத்தின் உணர்வில் முழுவதும் திளைக்கிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்று எல்லாம் அவர்கள் கேள்வி கூண்டிற்குள் சிக்கி ஆனந்தத்தை பறக்கவிட்டுவிடுவதில்லை. எனவே பெண்களும் குழந்தைகளும் ஆனந்தத்தின் பரிபூரணத்தை நுனிவரை சுவைத்துவிடுகிறார்கள்.

அந்த கணத்தில் அவர்களுக்கு எனது பிரிவு இதய நடுக்கத்தை ஏற்படுத்தி தவிக்கவிடுகிறது. மீண்டும் எனது வருகை பேரானந்தத்தை தந்து இதயத்தை மலரச்செய்கிறது. ஒவ்வொரு முகத்திலும் என்ன ஒரு ஆனந்த தாண்டவம்.. ஒவ்வொரு முறையும் அது அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆனந்த எல்லையை நீட்டித்தருகிறது. எனவே பலர் பலமுறை வருகின்றார்கள். அதற்காகவே நானும் ஒவ்வொரு முறையும் வேறு ஒரு தளத்தில் எனது மாயாஜால காட்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பேன். எனது திறமைக்கு அது சவால், அது அவர்களுக்கு இன்பத்தின் நீட்சி.

ஆண்கள் எதந்த மகிழ்ச்சிக்கு முன்னும் தனகங்காரத்தை முன்னே கொண்டுவந்து வைத்து அவர்களின் நிழ்கால ஆனந்தத்தை உடையவிட்டுவிடுகிறார்கள். அதனாலே அவர்களின் அங்கார அறிவு அவர்களை உணர்வுவெள்ளத்தில் கரையவிடுவதில்லை. கல்லாகிவிடுகிறார்கள். அது ஒரு சுமை. அதை பலம் என்று நினைத்து ஏமாறுகின்றார்கள் ஆண் நுண்ணுர்வு கொள்ளும்போதும் அதன்மீது கலை மலரும்போது அவன் பெண்ணாகிறான். கண்ணனை காதலிப்பவர்கள் எல்லாம் ராதைகள் என்பது எத்தனை உண்மை. பெரும்பாலான ஆண்களால் பெண்ணாக முடியவில்லை எனவே கலைகள் ஆண்களுக்கு பெரிய இன்பத்தை தருவதில்லை. கலைகளை விரும்பும் மனிதன் அகம் பெண்ணின் அகமாக மாறுவதால் பெரும்பாலான ஆண்கள் கலைகளை அலட்சியம் செய்கிறார்கள். அது ஒரு மலர்ச்சி, சப்பாத்திக்கள்ளியில் பொன்நிறபூ பூப்பதுபோல, அதை ஆண் பலகீனம் என்று அலட்சியம் செய்கிறான், அந்த அலட்சியம் அவர்களை அகங்காரியகவே வைத்து ஒருநாள் கீழே தள்ளி சிரித்துவிட்டுப்போய்விடுகிறது. விழுந்தவர்கள் எழுந்து பார்க்கும்போது கலை அவர்கள் தொடமுடியாத தூரத்தில் அமர்ந்து கண்மூடிக்கொள்கிறது. அறிவென்று அகங்காரத்தைப்பிடித்து தொங்கும் ஆண்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான். ஆனால் சிரிப்பதில்லை. பரிதாபமானவர்கள். அகங்காரம் முள்போல்தான், பாது காப்பு தரும், ஆனல் ஒருபோதும் அது மலராது.

ஒரு நாள் ஒரு பெரிய வெற்றுக் குடுவையில் ஏழு வண்ணமணிகளைப்போட்டு பட்டுதுணியால் மூடித் திறந்தேன். அதில் தண்ணீர் நிரம்பி அலையடித்தது அலைகளுக்குள் ஏழு வண்ணவண்ண மீன்கள் நீந்திக்களித்தன. மீண்டும் அந்த குடுவையை பட்டுதுணியால் மூடி குடுவைக்குள் கையைவிட்டு கையை வெளியே எடுத்தேன். மெழுகுமினுப்பு உடைய ராஜபாளையம் வெள்ளைக்குட்டி, அதை மேடையில் விட்டேன். குட்டிராஜா போன்ற கம்பீரம். அடுத்து ஒரு சிப்பிப்பாறை, அடுத்து பொங்கும்பால்நுரைபோல் ஒரு லெப்பரடார் குட்டி. அந்த உயிர் உள்ள பட்டுபேபியை மேடையில் விட்டேன் துள்ளிக்குதித்து ஆங்குமிங்கும் ஓடியது. அடுத்து ஒரு கோல்டன் ரிட்ரிவர் அடுத்து கருப்பும் இளங்காவியும் கலந்த பியஜில் அடுத்து தேங்காய் பஞ்சில் செய்ததுபோல பூட்லே அடுத்து அடுத்து அடுத்து என்று பதிநான்கு பேபிகளை எடுத்து மேடையில் விட்டேன். மேடையே ஒரு உலவும் பூக்கள் நிறைந்த தோட்டம். அனைவர் உள்ளமும் உயிர் துடிப்பில் அன்பில் துள்ளிக்குதித்தது. ஏழுமீன்கள் எப்படி பதிநான்கு நாய் குட்டியாகியது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு கண்ணிலும்.

நான் நாய்குட்டிகளை பேபி என்றுதான் அழைப்பேன். அன்பைதவிர வேறு ஒன்றும் அறியாத குழந்தைகள் அவை.

காட்சி முடிந்தபோது ஒரு தாய் மூன்றுவயது தனது குழந்தையோடு வந்து “ஒரு சின்ன குடுவைக்குள் இத்தனை குட்டிகளையா அடைப்பீர்கள்?” என்று எனது சட்டையை பிடித்து இழுத்தார். அவளின் பெரிய அழகான கண்களில் முத்து முத்தாய் நீர். ஆத்திரநெருப்பு. அந்த மஞ்சள் முகத்தின் நீண்ட நாசியின் முனை சிவந்து அதில் நீர்வடிந்தது. பின்னால் ஓடிவந்த கணவன் “சாரி சார்” என்று மனைவியை இழுத்து அணைத்து கூட்டிப்போனார். அந்த தாயின் குழந்தை தனது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் ஜெயினை கழட்டி அங்கிள் இதை அந்த பூட்லேவுக்கு போடுங்கள் என்று வீசினாள். கணவனும் மனைவியும் திகைத்து நின்றார்கள்.

எனது தொழிலில் தெய்வத்தை கண்ட கணம் அது. அதுவும் ஒரு கையில் வாளும் மறுகையில் மலரும் ஏந்திய தெய்வம். நான் எங்கே இருக்கிறேன் தெய்வமே!.

நாளுக்கு நாள் மக்களின் விளம்பரத்தாலேயே மாநிலம் முழுவதும் எனது மாயாஜாலகாட்சியை நடத்த அழைப்புகள் வந்துக்கொண்டே இருந்தது. நித்தம் நித்தம் எனது மாயாஜாலகாட்சி எங்காவது ஒரு ஊரில் நடந்துக்கொண்டுதான் இருந்தது.

ஒவ்வொரு காட்சியையும் மூன்று மணி நேரம் நடத்துவேன். காட்சி தொடங்கி ஒன்றரை மணிநேரத்தில் இருபதுநிமிட இடைவேளை, மீண்டும் காட்சியை தொடங்கி சரியாக ஒன்றரை மணிநேரத்தில் முடித்திருப்பேன்.

மக்கள் கூடும் இடம் என்றால் சிறு சிறு கடைகள் தோன்றுவது இயல்புதானே. மனிதன் வாங்கவும் விற்கவும் வாழ்வின் பெரும்பகுதியை பயன்படுத்துகிறான். மகிழ்கிறான். பொம்மைகடைகள், பழரசக்கடைகள், காப்பி, டீ, சிற்றுண்டி. இனிப்பு கடைகள். நான் நினைத்தால் எல்லாவற்றிலும் ஆதாயம் கேட்கலாம், அதில் எனக்கு விருப்பம் இல்லை. சின்ன புழுவுக்கு ஆசைப்படும் பெரியமீன்களை தண்ணீர் தன்னுள் இருந்து கரையேற்றிவிடுகிறது. இதுபோன்ற சிறு வியபாரிகளின் வாழ்த்தும் வணக்கமும் என்னை மேலும் சிறக்கவைத்தது. நல்லது எப்படி செய்தாலும் பயன் பெரிதாகத்தான் இருக்கும். அவர்களே எனக்கான விளம்பரமாகவும் இருந்தார்கள்.

எந்த ஊரிலும் ஒருவாரத்திற்குமேல் எனது காட்சிகள் நடைபெற நான் விரும்புவது இல்லை. நான் இருக்கும் ஊரில் ஒருவாரத்திற்கு திரையரங்குகள் ஈ ஓட்டும். அவர்களும் அவர்களை நம்பி இருக்கும் தொழிலாளிகளும் நலமாக வாழட்டும்.

ஒர் ஆண்டு காலமாக நண்பன் அசோக்குமார் சிதம்பரம் அண்ணாகலையரங்கத்தில் எனது காட்சிகள் நடக்க தேதி கேட்டுக்கொண்டே இருந்தான். அடுத்தவாரம் வருகின்றேன் என்று தேதிக்கொடுத்து விளம்பரம் செய்ய சொன்னேன். அவனும் விளம்பரம் செய்து பார்வையாளர் சீ்ட்டுகளை விற்கதொடங்கிவிட்டான். நல்ல வியபாரம் பெரும் கூட்டம் வரும் என்றான். நிறைய சிறுகடை வியபாரிகள் குத்தகைக்கு இடம் கேட்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கொடுக்கட்டுமா என்று கேட்டான். வேண்டாம் சிறு சிறு வியபாரிகள் விதவைகள் ஊனமுற்றவர்களுக்கு நலிந்தவர்களுக்கு ஏழைகளுக்கு கொடு என்று சொல்லிவிட்டேன்.

“தெரியும் இருந்தும் ஒரு வார்த்தைக்கு கேட்டேன்“ என்று சிரித்தபடி போனை வைத்தான்.

எங்கு எனது மாயாஜால காட்சி நடந்தாலும் முதல்நாளே சென்று அந்த அரங்கம் மேடை சூற்றுசூழல் அனைத்தையும் பார்த்து வைத்துக்கொள்வேன். அந்த இடத்தை எனக்கு பழகிய இடமாக மாற்றிக்கொள்வது எனது வழக்கம். வெற்றி என்பதே உதிப்பும் உழைப்பும் சார்ந்தது. ஒரு சதவீத உதிப்புக்கு நூறுசதவீத உழைப்பை போடுகின்றவர்கள்தான் தன்னையும் வளர்த்துக்கொண்டு உலகத்தையும் வளர்க்கிறார்கள். நான் உழைப்பை நம்புகிறவன். எல்லாம் தலைவிதி என்போருக்கும் உழைத்தால் உயரலாம் என்பதுதான் விதி. நானும் நண்பனும் முதல்நாள் அரங்கத்திற்கு சென்று எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தோம். நண்பன் ஒவ்வொரு இடத்தையும் அங்கு என்ன என்ன இருக்கும் என்பதை விளக்கிக்கொண்டு வந்தான்.

இது பர்சனல் வே.

இது எமெர்ஜன்சி வே

இங்கு ஜெனரேட்டர் இருக்கும்

இது பொம்மை கடை

இது காப்பி கடை

இது வளையல்கடை

இது டீ டிபன் கடை

இது ஜுஸ் கடை

இது அம்புஜம் பலகாரக்கடை.

அம்புஜம் பலகாரகடை என்னும்போதே நண்பன் நாக்கில் எச்சில் இனித்து விழுங்குவது தெரிந்தது. அவன் கழுத்தில் மேடுதட்டிய கண்டம் ஏறி இறங்கியது. அவனின் மீசை இல்லா மஞ்சள் முகத்தில் பளபளப்பு.

நான் லேசாக புன்னகைத்துக்கொண்டேன்.

“உனது மேஜிக்ஜோவுக்கு கூட்டம் முண்டுதோ இல்லையோ அம்புஜம் பலகாரக்கடைக்கு கூட்டம் முண்டும், இங்க எந்த ஷோ நடந்தாலும் அம்புஜம் கடையில் சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டம் வரும்“ என்றான் சிரித்தபடி. அவன் கண்கள் மின்னயது. எனக்குள் இறங்கியது முள்.. நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

நண்பன் இது இது இது என்று சொல்லிக்கொண்டே வந்தான். எனக்குள் எதுவும் நுழைந்ததாக தெரியவில்லை. நண்பன் நுழைந்ததாக சொல்லிக்கொண்டே வந்தான்.

அண்ணாகலையரங்கத்தில் முதல்காட்சி. மக்கள் கூட்டம் ஆனந்தவெள்ளம். மாயாஜாலத்தை தொடங்கினேன். காட்சியின் வண்ணத்தில் வகையில் ஒன்றரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை. இடைவேளை மணியை ஒலிக்க தொடங்கட்டுமா என்று கண்களாலேயே கேட்ட உதவியாளனிடம். வேண்டாம் என்று கண்களாலேயே சொல்லிவிட்டு காட்சிகளை தொடர்ந்தேன். மனதிற்குள் ஒரு குரூர சிரிப்பு. பழகிய ரத்தசுவையின் இனிப்பு. கூட்டம் ஆனந்த மயக்கத்தில் நிலைகுத்தி நின்றது. நண்பன் அசோக் பரவசத்தில் இருந்தான். மூன்று மணி முடிந்துதான் காட்சியை நிறுத்தினேன்.

கூட்டம் இன்னும் இன்னும் என்பதுபோல் இருந்து எழுந்து போனது. நான் மேல் அங்கியை கழட்டி உதவியாளனிடம் கொடுத்தேன். தலையில் ஒரு முகத்தை மறைக்கும் தொப்பியை வைத்துக்கொண்டு நானும் அசோக்கும் கூட்டத்தோடு சேர்ந்து போனோம். நான் அம்புஜம் கடையைப்பார்த்தேன். அம்புஜம் கடையில் உட்கார்ந்து இருந்தாள். ஒன்று இரண்டுபேர் பலகாரங்கள் வாங்கினார்கள். அம்புஜம் கலைந்து செல்லும் கூட்டத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். மனதிற்குள் முள்பிடிங்கிய சுகம். கூட்டம் அம்புஜம் கடையை தாண்டி வீட்டுக்கு போய்கொண்டே இருந்தது. நான் நண்பனின் கண்களைப்பார்த்தேன். அதில் எதுவும் தெரியவில்லை. என் கண்கள் பிரகாசித்தது அவனுக்கு தெரியுமா?

அவன் என்தோள்களைத்தட்டி “பின்னிட்ட மாப்பிளை, வா அடுத்த ஷோவுக்கு தயார் ஆவோம்“ என்றான்.

“வா, அம்புஜம் கடைக்கு போயிட்டு வருவோம்” என்றேன்

“இந்த நக்கல்தானே வேண்டாம் என்கிறது, நீதான் பெரிய ஆள், உனக்குதான் வெற்றி” என்று என் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு அரங்கிற்கு சென்றான். எனக்கு மிதப்பதுபோல் இருந்தது.

நான் அடுத்த ஷோவிற்கு தயாராகிக்கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் நிற்பதுபோல் மனம் உணர்ந்து திரும்பிப்பார்த்தேன் யாரும் இல்லை.

மீண்டும் தயாராகிக்கொண்டு இருந்தேன். இப்போது யாரோ பின்னால் நிற்கும் நிழல் முன்னால் விழுந்தது. திரும்பிப்பார்த்தேன். அம்புஜம். கையில் பிடித்திருந்த முந்தானையுடன் இரண்டு கையையும் குவித்து கும்பிட்டாள்.

என்ன? என்பதுபோல் பார்த்தேன்.

“ஐயா உங்கள் மாயாஜாலகாட்சி எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. எனக்குதான் பாக்க குடுத்துவைக்கல, நான் பிழைக்கிற பிழைப்புக்கு அதெல்லாம் எங்க“ என்று சிரித்தாள்.

சிரிப்பு இத்தனை உலர்ந்து இருக்குமா? எனக்குள் சுமை ஏறி அழுத்தியது.

“வட்டிக்கு வாங்கிப்போட்டு முதலாக்கி ஏதோ இதுபோல கடைப்போட்டுதான் ஐந்துபுள்ளைங்க வயித்த கழுவுறேன்“ என்றபோது அவளையும் மீறி அவள் கண்ணீர் உதிர்ந்தது. கூப்பிய கைகளை இறக்கி தளர்ச்சியாக நடந்துபோனாள்.

போகும் அவளை பார்த்துகொண்டே நின்றேன். என்கால்கள் தல்லாடியது. பசித்தது எனக்கு.

நெஞ்சுவெடிக்க சத்தமாய் “அம்மா!“ என்றேன். யாருக்கும் கேட்கவில்லை. எனக்கு மட்டுமே கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *