அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அதைக் கண்ட அவன் நண்பன் தீபக், “மகிழ்ச்சியா இருக்க வேண்டிய நேரத்தில் உங்களுக்கு ஏன் இந்தக் கண்ணீர்?” என்றான்.
“இந்த வெற்றி சாதரணமானது இல்லை. என் மகன் வினோத்தின் உணர்வுகளும் திறமைகளும் மிதிக்கப்பட்டப்ப அவன் திறமையை வெளியில் கொண்டுவர அவனும் அவன் நண்பர்களும் எடுத்த முயற்சியின் வெற்றி.” என்றான் சுரேந்தர்
“ஒண்ணும் புரியலை சுரேந்தர். நீ இந்த விழா முடிஞ்சதும் விளக்கமாச் சொல்லு. இப்ப விழா மேடைக்கு உங்களைக் கூப்பிடுறாங்க போங்க.” என்றான் தீபக்.
மேடையில் வினோத்க்கு நல்ல பாடகர் என்ற விருது வழங்கப்பட்டது. பரிசுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும் சொகுசு வீடும் வழங்கப்பட்டு விழாவும் கோலாகலமாக முடிந்தது. விழா முடிந்து வீட்டில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறிய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
வினோத் நண்பர்கள் அவனைத் தூக்கிக் கொண்டாடினார்கள். நீ சாதித்துவிட்டாய் வினோத் என்று உரக்க கத்தினார்கள். இதையெல்லாம் கண்ட தீபக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. பாடல் போட்டியில் கலந்து கொள்வது இப்போது சாதரணமாக ஆகிவிட்ட ஒன்று இவர்கள் ஏன் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“தீபக், என்ன கனவு கண்டுட்டு இருக்க?” என்று சுரேந்தர் கேட்டு வந்தான்.
“கனவு இல்லை சுரேந்தர். இங்கு நடப்பது ஒண்ணும் புரியலை. அதான், யோசிச்சிட்டு இருக்கேன்.” குழப்பத்துடன் சொன்னான் தீபக்.
“உன் குழப்பத்துக்கு என்ன காரணம்னு நான் சொல்றேன். வா அந்தப் பக்கம் போய் உட்கார்ந்து பேசலாம்.” இருவரும் தனியாக ஒரு இடம் பார்த்து அமர்ந்தனர்.
“வினோத்க்கு பார்வை இல்லைன்னு உனக்கு நல்லாத் தெரியும். அவனை நாங்க அந்தக் குறை தெரியாம வளர்த்ததும் உனக்குத் தெரியும் இல்லையா?” என்று தீபக் கேட்டான்.
“ஆமாம் இது வினோத் பிறந்ததிலிருந்து நான் பார்ப்பதுதானே…” சுரேந்தர் சொல்ல.
“ம்ம்… அவனுக்கு நல்ல குரல் வளம் இருக்குன்னு பாட்டுப் பாடுறதுக்கு ரொம்ப ஆசைப்பட்டான். அவனுக்கு முறையான பயிற்சி இல்லை. ஆனால், கேட்கிறதை வச்சு நல்லாப் பாடுவான்.” தீபக் சொல்ல.
“என்னடா? இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சதுதானே நீ புதுசாச் சொல்ற.” என்று பொறுமையிழந்துக் கேட்டான்.
“இருடா பொறுமையா கேள். அவன் கல்லூரியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பாடினான். அவன் நண்பர்கள் அவனுக்குப் பக்கபலமா இருந்தாங்க. அப்ப தேசிய அளவில் நடந்த பாட்டுப் போட்டியில் கலந்துக்க இவங்க கல்லூரியும் போனாங்க. பாட்டுக் குழுவில் எல்லோர் பெயரும் இருந்துச்சு. ஆனால், வினோத் பெயர் மட்டும் இல்லை.
வினோத்தும் அவன் நண்பர்களும் கல்லூரி முதல்வர்கிட்ட கேட்டதுக்கு வினோத்துக்குப் பார்வையில்லை. அதனால், அவனை டெல்லி கூட்டிட்டுப் போக முடியாது.” என்று முதல்வர் சொல்ல.
“அவனை நாங்க கவனிச்சிக்கிறோம். நீங்க அவனுக்கு வாய்ப்புக் கொடுங்க” என்று வினோத் நண்பர்கள் கேட்டனர்.
“வினோத் முறைப்படி எந்தப் பயிற்சியும் எடுக்கலை. அதனால், அவனை நாங்க தேர்வு செய்ய முடியாது.” என்று முதல்வர் சொல்ல.
“வினோத் நண்பர்கள் போராடியும் அவர் சம்மதிக்கலை. பிறகு வினோத் வீட்டுக்கு வந்து பார்வை இல்லைன்னு முதல் முறையா அழுதான். அவன் அழறதைப் பார்த்து அவன் நண்பர்களும் கூடச் சேர்ந்து அழுதனர். நானும் காவ்யாவும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம்.” என்றான் சுரேந்தர்.
“என்ன? முடிவு பண்ணீங்க தீபக்.” சுரேந்தர் கேட்க.
“தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பாட்டுப் போட்டியில் வினோத்தைக் கலந்துக்க வைக்க முடிவு செஞ்சு அவனை நேர்முகத் தேர்வில் கலந்துக்க வச்சோம்.”
“அப்ப தேர்வாளராக வந்த பிரபலப் பாடகர் வினோத் குரல்வளத்தைக் கேட்டு எங்ககிட்டப் பேசினார். வினோத்துக்கு நல்ல குரல்வளம் இருக்கு. அதனால், அவன் முறையா இசையைக் கத்துகிட்டு இந்தப் போட்டியில் கலந்துகிட்டா வெற்றி வினோத்க்குதான் அவனுக்கு இசையை நான் கற்றுக் கொடுக்கிறேன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிர்யே தினமும் வீட்டுக்கு வந்து சாலமனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமில்லாம இசையில் தேர்வும் எழுத வச்சார். அதில் முதல் மாணவனா வந்தான். மூணு வருஷம் கடுமையான பயிற்சி எடுத்து தனியார் தொலைக்காட்சியில் நடத்திய பாட்டுப் போட்டியிலும் கலந்துகிட்டு முதல் பரிசையும் வாங்கிட்டான். அது மட்டுமில்லாம பிரபல மூணு இசையமைப்பாளர்கள் அவர்கள் இசையமைக்கும் படங்களில் பாட ஒப்பந்தம் செய்திருக்காங்க. அந்த வெற்றியைதான் இன்னைக்குக் கொண்டாடுறாங்க தீபக்.” என்று பழைய கதைகளைச் சொன்னான் தீபக்.
“ஓ! நான் இல்லாத இந்த மூணு வருஷத்தில் இவ்வளவு நடந்திருக்கா? சரி சுரேந்தர் கல்லூரி முதல்வரை இந்த விழாவுக்கு அழைக்கலையா?” என்று சுரேந்தர் கேட்க.
“அவன் நண்பர்கள் அவரைக் கூப்பிட்டிருக்காங்க. ஆனால், அவர் வரலை.” என்றான் தீபக்.
சுரேந்தர் முதல்வரை பார்க்க மறுநாள் கல்லூரிக்குச் சென்றார். அங்கு முதல்வரிடம் தன்னை யாரென்று அறிமுகபடுத்திக் கொண்டு, “நான் உங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தைப் பேசிட்டு போயிடுறேன்.” என்றான் சுரேந்தர்.
“ஒரு மாணவனின் விருப்பம் உணர்வுத் திறமை எதையும் புரிஞ்சிக்க முடியாத நீங்க… இந்தக் கல்லூரியில் படிக்கிற நாலாயிரம் மாணவர்களைப் எப்படிப் புரிஞ்சிப்பீங்க? நீங்க இந்தக் கல்லூரிக்கு முதல்வரா இருக்கிற தகுதி உங்களுக்கு இருக்கா?” என்று கேட்டவன் வருகிறேன் என்று சென்றுவிட்டான்.
போகும் வழியில் கோயிலுக்குச் சென்று வினோத் பெயருக்கு அர்ச்சனைச் செய்துவிட்டுச் சென்றான். நமது அருகில் இருப்பவர்களையும் நாம் சில நேரங்களில் உதாசீனப் படுத்துகின்றோம். அவர்களுக்கும் உணர்வுகள் ஆசைகள் இருக்குமென்று மறந்துவிடுகின்றோம். அவ்வாறு செய்யாமல் மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுக்க முயற்சிப்போம்.