வென்றிலன் என்ற போதும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,583 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏழுமணி! தாண்டியபோது வேதநாயக வாத்தியார் கங்கைத்துறையைத் தாண்டி விட்டார். இன்னும் ஒரு மைல் தூரம் இருக்கின்றது பாடசாலைக்கு. வலப்பக்க மாகக் கொட்டியார்க் குடாக் கடலும் இடப்பக்கம் தென்னந் தோட்டங்களும் பற்றைக்காடுகளுமாகக் கிடந்த அந்தப் பிராந்தியத்தில் மேற்காகச் செல்லும் திருக்கோண மலை வீதியில் சைக்கிளை உருட்டிக் கொண்டு அவர் நடந்தார். மாசி மாதத்துப் பின் பனியில் கடலோரமாக ஊதா நிற அடம்பன் பூக்கள் நனைந்து சோபையற்றுத் தோன்றின. தெரு ஓரத்தே காவிளாய்ப் பற்றைகளிலும் நாகதாளிப் புதர்களிலும் சிலத்திவலையாகப் பனிபடர்ந்திருந்தது.

வீதி வழியே சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த வேதநாயகம் தன் சைக்கிளைக் கட்டை வேலியிற் சார்த்தி வைத்துவிட்டு ‘ஏறுகடப்பை’ ஏறிக் கடந்து வெண் மணலிற் கால் புரள எதிரே தெரிந்த குடிசையை நோக்கி நடந்தார். மணல் வெளியிலே மணிலாச் செடிகள் மஞ்சள் பூக்களோடு சடைத்துக் கிடந்தன. அதிகமான செடிகள் வாடி அறுவடைக்குத் தயார் என் பதை அறிவித்துக் கொண்டிருந்தன.

குடிசைக்கு முன்னே துண்டொன்றினால் உடல் முழு வதையும் போர்த்துக் கொண்டு சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த சைமன் “வாங்க ஐயா” என்று அவரை வரவேற்றான்.

“மகன் எங்கே. பள்ளிக்கு வரல்லியா?”

“நாங் போகச் சொன்னது ஐயா. கூட்டிற்றுப் போங்க”

நான்காம் வகுப்பிற் படிக்கும் சில்வெஸ்ரர் தன் தந்தையின் பின்னால் மறுகினான். தந்தையார் “போடா ஐயாவோட” என்று விரட்டியபோது அவன் தன் புத்த கங்களை எடுத்துக்கொண்டு வாத்தியாரின் பின்னால் நடந்தான்.

இருவரும் ஏறுகடப்பைத் தாண்டி வெளியே வந்தனர். ஆசிரியர் தம் சைக்கிளை உருட்டிக்கொண்டு பாட சாலையை நோக்கி நடந்தார். வீடு வீடாகச் சென்று கிச்சா, தனுஷ்கோடி, அப்துல்லா, ராணி என்று பிள்ளை பிடித்துக் கொண்டு அவர் நடந்தார்.

மகாவலி கங்கைக்கும் உப்பாற்றுத் துறைக்கும் இடைப்பட்ட மணல் வெளியில் அவர் பாடசாலை இருந் தது. எப்போதோ ஒரு காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார் கட்டிய பாடசாலை. தினவரவு இடாப்பிலே ஐம்பத்தி ரண்டு பிள்ளைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் வருகை தருபவர்கள் இருபதிற்குள்ளாகத்தான் இருக்கும். வைகாசி மாதம் ‘அனுவல்’ எடுக்கும்போது நாற்பத்தி ஒன்று எனச் சராசரி வரவு காட்டினாற்தான் அந்தப் பாடசாலைக்கு இன்னோர் ஆசிரியரை அரசாங் கம் நியமிக்கும். இதற்காகத்தான் வேதநாயகத்தார் வீடு வீடாகச் சென்று பிள்ளை பிடிக்கிறார்!

அவர் ‘பிடித்து வந்த’ பிள்ளைகளோடு பாடசாலை யில் பிரவேசிக்கையால் எட்டரை மணியாகி விட்டது! ஏற்கனவே பாடசாலைக்கு வந்த மாணவர்களில் பெண்கள் பாடசாலையின் உட்புறத்துச் சீமெந்துத் தளத்தைக் கூட்டிப் பெருக்கியிருந்தார்கள். ஆண்கள் காய்ந்த தென்னம்பாளைகளால் வெளிப்புறத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பாடசாலையிலே முஸ்லீம் மாணவர்கள் இருந்தார்கள். நெற்றியிலே துலாம்பரமாகத் திருநீறு பூசிய சைவ மாணவர்கள் இருந்தார்கள். கச்சான் காற்றுக் காலத்திலே கங்கை நெத்தலிக்கு கரைவலை விரித்த நீர்கொழும்பு மீனவர் சிலர் சீசன் முடிந்ததும் அங்கேயே தங்கிவிட்ட காரணத்தினால் அவர்களின் பிள்ளைகளான கத்தோலிக்க மாணவர்களும் இருந்தார் கள். இதனாற் பாடசாலையை பிதாவுடையவும், சுதனு டையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே தொடங்குவதா, அல்லது ‘மௌலாய சல்லி யலா’ என்ற சலவாத்துடன் தொடங்குவதா, அல்லது திருச்சிற்றம் பலம் சொல்லித் தேவாரம் பாடித் தொடங்குவதா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டதில் வேதநாயகத்தார் ஏறத்தாழ ஒரு நிரீச்சுரவாதியாகவே மாறிப்போனார்! நல்லகாலமாகப் ‘புத்தங் சரணங் கச்சாமி’ பற்றி அவர் சிந்திக்க வேண்டிய தேவையில்லா திருந்தது.

வேதநாயக வாத்தியார் தன் சைக்கிளை தாழ்வாரத் திற் சார்த்தி வைத்து விட்டு, அதிலிருந்த பணிஸ் பையை எடுத்து அறைக்குள் வைத்துவிட்டு இடாப்பு வகையறாக்களை எடுத்துக்கொண்டு தன் யதாஸ்தானமான மேசையடிக்கு வந்தார்.

ஐந்தாம் வகுப்பிலே ஒரே ஒரு மாணவன் தான், அவன் அதிகமாகப் பாடசாலைக்கு வருவதில்லை ஆனால் அன்று வந்திருந்தான். நான்காம் வகுப்பில் நான்கு பேரும் வந்திருந்தார்கள்.

நாலாம் வகுப்புக் கணக்குப் புத்தகத்தை எடுத்து முப்பத்தி நான்காம் பக்கத்திலுள்ள கணக்குகளைச் செய்யும்படி அவ்வகுப்பைப் பணித்துவிட்டு, நான்காம் வாய்ப்பாட்டைக் கரும்பலகையில் எழுதி அதனை மனனம் பண்ணும்படி மூன்றாம் வகுப்பைப் பணித்து, இரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பிரதி பண்ணும் படி பாடத்தைக் காட்டிவிட்டு 1-ம் வகுப்பு மாணவர்களைத் தங்கள் கற்பலகைகளில் மீன் படம் வரையும்படி கட்டளையிட்டு அரிவரி வகுப்பு மாணவர்களின் அருகே மணலில் அமர்ந்து ஆனா, ஆவன்னா எழுதுவித்தார். பாடசாலை களை கட்டிவிட்டது.

பத்தரை மணிவரையும் பாலர் வகுப்பையும் முதலாம் வகுப்பையும் தான் அவர் கவனிக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு பணிசையும் பாலையும் கொடுத்து அனுப்பி விட்டுத்தான் மற்ற வகுப்புக்களைக் கவனிக்க வேண்டும். அதுவும் ஒரு மணிவரை தான். இதுதான் அவரது நேர சூசி!

ஆனா ஆவன்னா எழுதி முடிந்த பின்னர் முதலாம் வகுப்பிற்கும் பாலர் வகுப்பிற்கும் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார் வேதநாயகம்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு-அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி ஆசிரியர் பாட, அதைக் கேட்டு மாணவர்கள் பாடிக் கொண்டிருக்கும்போது….

“ஐயா. சில்லி ஓடப்போறானாம் ஐயா” என்றான் தனுஷ்கோடி.

“இல்லய்யா. இந்தக் கள்ளுக்காறன் பொய் சொல்றது” என்றான் சில்லி என்ற சில்வெஸ்டர். தனுஷ் கோடி கள்ளிறக்கும் நாடாரின் மகன்.

பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த. ஆசிரியர் தன் வகுப்பை அந்தரத்தில் விட்டுவிட்டு முறைப் பாட்டுக்காரனையும் எதிரியையும் உறுக்கி “வாசிப்புப் புத்தகத்தை எடுத்துப் படியுங்கடா” என்று கட்டளை யிட்டுவிட்டு மீண்டும் பாலர் வகுப்புக்கு வந்தார். கைக் கடிகாரம் பத்து மணிக்கு மேலாகி விட்டதைக் காட் டிற்று.

குடாக் கடலில் வெடி கேட்டது. ‘டைனமற்’ வெடி. வெடி கேட்டதும் சில்லி பாய்ந்து விழுந்து அடம்பன் கொடிகளைத் துவைத்துக் கொண்டு கடலை நோக்கி ஓடினான்,

“ஐயா. சில்லி ஓடிற்றான். நாங்கபோய்ப் பிடிச்சிற்று வாறம் ஐயா”.

“போய்ப் பிடிச்சுவாங்க” என்று உத்தரவு கொடுத்த தும் ஐந்தாம் வகுப்புக் காதரும், நாலாம் வகுப்புத் தனுஷ் கோடியும், கிச்சா என்ற கிருஷ்ணபிள்ளையும் அவனைத் துரத்தி ஓடினார்கள்.

ஆசிரியர் பாலர் வகுப்புக்கும் முதலாம் வகுப்புக்கும் பணிசையும் பாலையும் கொடுத்து வீட்டுக்கனுப்பினார். பின்னர் மூன்றாம் வகுப்பிற்கு வாசிப்புப் பாடம் நடத்து கையில் இரண்டாம் வகுப்பினர் கணக்குச் செய்தார்கள். கணக்குப் பாடம் முடிவுற்றதும் இரண்டாம் வகுப்பையும் வீட்டுக்கனுப்பலாம் என்றெண்ணிக் கொண்டார் வேத நாயகம், அவர் கணக்குகளைப் பார்த்துக் கற்பலகையில் வெண்கட்டியால் ‘பாஸ்’ போட்டுக் கொண்டிருக்கையில் துரத்திச் சென்ற மூவரும் சில்லியை இழுத்துக் கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தனர்.

சில்லி தெப்பமாக நின்றிருந்தான். அவன் கையிலே அடம்பன் கொடியிற் கோத்த பென்னம் பெரிய கயல் மீன் ஒன்று இருந்தது.

“ஐயா இவன் வீட்ட ஓடப் போனான். பிடிச்சுக் கொண்டு வந்திற்றம்” என்றார்கள் அவனைப் பிடிக்கச் சென்ற மூன்று மாணவரும்.

“இல்லய்யா. நான் தண்ணிக்க பாஞ்சி மீன எடுத்திற்றுப் பள்ளிக்கதான் வந்தன். இவங்க என்னைப் புடிச்சு இழுத்திற்று வாறாங்க” என்றான் சில்லி.

“சரி எல்லாரும் வகுப்பில போய் இருங்க” என்று கட்டளையிட்ட வேதநாயகம், மீனை வாங்கித் தாழ்வாரத்து வரிச்சுக் கம்பில் தொங்கவிட்டு விட்டு, எல்லாருக்கும் பணிசும் பாலும் கொடுத்தார். சில்லிக்கு இரண்டு பணிஸ் கொடுத்தார்.

பிள்ளைகள் பணிஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஆசிரியர் இடாப்படையாளம் பண்ணினார். அன்று இடாப்பிலே பிள்ளைகளின் வரவு ஐம்பது. சராசரியை தாற்பத்தொன்றாக்க அவர் இந்தத் தகிடுதத்தத்தைச் செய்யவேணடியிருந்தது!

கறுப்புப் பேனையால் வரவு பதிந்த பின்னர் சிவப்புப் பேனையால் சாப்பாட்டு அடையாளம் பண்ணிக்கொண்டிருக்கையிற் தனுஷ்கோடி கத்தினான். “ஐயா. சில்லி ஓடிற்றான் ஐயா. நான் போய்ப் பிடிச்சிற்று வாறன்”

தனுஷ்சோடி அவனைத்துரத்திக்கொண்டு ஓடினான். கிச்சாவும் காதரும் கூடத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.

இடாப்படையாளத்தை முடித்துப் பாற்கணக்கையும் பதிந்த பின்னர் ஆசிரியர் வெளியே வந்து பார்த்தார்.

ஓடிப்போன சில்வெஸ்ரர் கால் தடுக்கி மணலிலே முகங்குப்புற விழுந்திருந்தான். அவன் கையிலிருந்த இரண்டு பணிசில் ஒன்றை நாய் கவ்விக் கொண்டு ஓடியது. மற்றதைக் காகங்கள் கொத்திக் கொண்டி டிருந்தன. துரத்திவந்த மூவரும் சில்லியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

“விடுங்கடா அவனை”ஆசிரியர் பலத்து சத்தமிட்டுக் கொண்டே அவனை நோக்கி நடந்தார். பிடித்திருந்த மூவரும் கையை விட்டதும் சில்லி எழுந்து சிட்டாகப் பறந்தான். ‘இனி அவன் பாடசாலைக்கு வரமாட்டான். இன்றைக்கு அவனுக்கு பணிசும் இல்லை. போகும்வழியில் அவனுக்கு பணிஸ் கொடுத்து விட்டுத்தான் போக வேண்டும்’ என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர் மற்ற மூவரோடும் பாடசாலைக்குட் சென்றார்.

பாடசாலைத் தாழ்வாரத்து வரிச்சிலே இன்னமும் கயல் மீன் தொங்கிக் கொண்டுதான் இருந்தது. மூதூரில் இது முப்பது ரூபாய்க்கும்மேல் பெறும். இந்த மீன் பழுதாய்ப் போகுமுன்னமே இதை வீட்டுக்குக் கொண்டு போகவேண்டும் என்று எண்ணிய வேதநாயகத்தார், இடாப்புக்கள், லொக் புத்தகம் முதலானவைகளை எடுத்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் பாட சாலையை மூடினார்.

சில்லியின் புத்தகங்களையும் இரண்டு பணிசையும் “சில்லியிடம் கொடு” என்று அவன் அயல் வீட்டுக்காரி லட்சுமியிடம் கொடுத்துவிட்டு இறப்பிலே தொங்கிய மீனைச் சைக்கிள் ஹாண்டிலிற் கொழுவிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார் வேதநாயகம். அப்போது நேரம் ஒரு மணி!

– இளம்பிறை ’67

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *