ஆதி கணபதி செட்டியார் அந்தத் தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த அநுமார் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார்.
கிராமத்தில் வாங்கிய தங்கத்தைச் சென்னையில் விற்பதற்காகக் கொண்டு போய்க்கொண்டிருந்தார் செட்டியார்.
‘மடியிலே கனத்துடன் போகிறோம்; கொஞ்சத்துக்குச் சோம்பி வம்புக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது’ என்று இரட்டைக் கோட்டு (இரண்டாம் வகுப்பு) டிக்கட்டு வாங்கினேன், திருச்சியில் யாரோபெரிய ஆபீஸர் போலிருக்கிறது, குடும்பத்துடன் வந்து ஏறினார். கூட இரண்டு டவாலிச் சேவகர்கள் இருந்தார்கள்.
அந்த வண்டி செங்கல்பட்டுக்குக் கையெழுத்து விளங்காத நேரத்தில் போய்ச் சேருகிறது. அந்தக் குடும்பம் அங்கேதான் இறங்கியது. சோதனை போலத் தூக்கக் கலக்கம் என்னைச் சற்று அசத்திவிட்டது. கூலியாட்கள் அவர்கள் பெட்டிக்குப் பதில் என் பெட்டியை இறக்கி விட்டார்கள். வண்டிக்கு மணி அடித்து விட்டான். திடீரென்று பார்க்கிறேன், என் பெட்டியைக் காணவில்லை!
அலறிப் புடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியுடன் இறங்கினேன். வண்டியும் ஊதியது. அநுமாரே! என் சொத்தைக் காப்பற்றிக் கொடு, உன் சந்நிதியில் ராமாயணம் வாசிக்க ஆள் உயரம் வெண்கலக் குத்துவிளக்குச் செய்து வைக்கிறேன்’ என்று வேண்டிக் கொண்டே வெளியே ஓடினேன்.
நம்ம அநுமார் கைகண்டதெய்வமல்லவா? அவர்கள் சாமான் களையெல்லாம் மோட்டாரில் ஏற்றப் போகும் போது, என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போன ஆள் கால் இடறிப் பெட்டியைப் போட்டுக் கொண்டு கீழே விழுந்துவிட்டான்! நல்ல அடிபட்டிருக்கும் போலிருக்கிறது.ஆபீஸர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
நான் போய் விஷயத்தைச் சொல்லி அவர்கள் பெட்டியை ஒப்புவித்து என் பெட்டியை எடுத்துக்கொண்டு, அடுத்த ரெயிலில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டுக் கூடியிருந்தவர்கள், உடனே அந்த ஊர் அனுமாரைப் பற்றி அவரவருக்குத் தெரிந்த அற்புதக் கதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
மைசூரிலிருந்து ஹைதர் அலி அந்தப் பிராந்தியத்தின் மேல் படையெடுத்து வந்தபோது, பக்கத்திலுள்ள சோலை நத்தம் பாளையக்காரர் அநுமாரிடம் தான் அடைக்கலம் புகுந்து முறை யிட்டாராம். அன்றிரவு அநுமார் விசுவ ரூபமெடுத்து ஹைதர் அலி வரும் வழியில் நின்றாராம். ஹைதர் அலி அவரைக் கண்டு கிடுகிடுத்துப் போய் வேறு வழியில் போய்விட்டானாம். அந்தப் பேருதவிக்குக் கைமாறாகப் பாளையகாரர் அநுமாருக்குத் தங்கத்தால் கெட்டிக் கவசம் செய்து சாற்றினாராம்.ஹைதர் அலியும் அநுமாருக்குச் சில நகைகள் செய்து அனுப்பினானாம்.
இந்தக் கதையை உள்ளூர் கோவிந்தசாமி பாகவதர் அபிநயங் களோடு காலக்ஷேபப்பாணியில் சொன்னார்.
உண்மையில் அனுமாரின் அந்தத் தங்கக் கவசம்தான் ஆதி கணபதி செட்டியாரைத் தங்கம் வாங்கி விற்கும் வியாபாரத்தில் இறக்கியது.
அந்த வருஷம் செட்டியாரை அந்தக் கோயில் தர்மகர்த்தா வாகத் தேர்ந்தெடுத்தார்கள் கிராமவாசிகள். அந்தப் பொறுப்பை ஏற்றபோது செட்டியார், கோயில் சொத்துக்களை இருப்புக் கணக்குடன் ஒப்பிட்டுச் சரி பார்த்தார். நகைகளைச் சரிபார்த்த போது அவர் கவசத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார். சுமார் ஐம்பைத்தைந்திலிருந்து அறுபது தோலா எடை இருக்குமென்று சொல்லியது அவருடைய அனுபவப்பட்ட கை. அந்தச் சமயம் தங்கம் விற்ற விலையில் ஐயாயிரம் ரூபாய் போகுமென்று மனத்திற்குள்ளேயே புள்ளி போட்டுக் கொண்டார்.
திடீரென்று தங்கம் விலை ஏறியது. விராகனெடை இருபத்தைந்து, இருபத்தாறு ரூபாயாக இருந்தது, முப்பது முப்பத்தி ரண்டாக ஏறி விட்டது. அநுமார் கவசத்தின் ரூபாய் மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்குமென்று மனக் கணக்குப் போட்டார் செட்டியார். அந்தக் கணக்கில் அவருக்குத் தங்க வியாபாரம் தொடங்க வேண்டுமென்ற யோசனை பிறந்தது.
தொடக்கத்தில், “இந்தக் கிராமாந்தரத்தில் எவ்வளவு தங்கம் வந்து விடப் போகிறது, லாபம் புரண்டு விட?” என்றார்கள், அவரைச் சுற்றி இருந்தவர்கள். செட்டியாரும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் பத்தே நாட்களில் வியாபாரம் பிடித்துக் கொண்டது.
கிராமங்களில் முடங்கிக் கிடந்த தங்கம் எல்லாம் வெளிச்சம் பார்க்க வெளிப்பட்டது.பத்தேபத்து ஓலைக் குடிசைகள் கொண்ட பட்டிகளிலிருந்துகூட, ஐந்து குண்டு மணி, பத்துக் குண்டுமணி எடையாகத் தங்கம் அவர் வீட்டைத் தேடி வந்தது.
நரிக்குட்டைக் கனகசபை ஆசாரி அல்லது அவர் மகன் சுந்தர ராசு இருவரில் ஒருவர், காலை ஏழு மணி முதல் இருட்டும் வரை செட்டியார் வீட்டில் ஆஜராக இருக்க வேண்டிய நிலைமைக்கு வியாபாரம் வலுத்தது.
வரும் தங்கத்தை உரைத்து மாற்றுச் சொல்லுவது அவர்கள் பொறுப்பு. எடைபோட்டு விலை சொல்லுவார் செட்டியார்.
வியாபாரம் ரொம்ப லாபகரமாகத்தான் இருந்தது. ஆனால் போதிய ரொக்கப் பணவசதி இல்லாததுதான் ஒரு பெரிய எடைக் கட்டாக இருந்தது. வாராவாரம் வாங்கிய தங்கத்தைச் சென்னைக் குக் கொண்டு போய் விற்றுவிட்டு வந்தாலன்றி மேலே வாங்கப் பணம் இருப்பதில்லை.
அப்படிச் சென்னைக்குப் போய் வரப்பிடிக்கும் இரண்டொரு பகல்களில் செட்டியாருக்கு ஆதாயமளித்திருக்கக் கூடிய சரக்கு வேறு இடங்களுக்குப் போய்விடும். வாரக் கடைசியில், அவரே ரொக்கத் தட்டுப்பாடு காரணமாக, வரும் தங்கம் அவ்வளவையும் வாங்க முடியாமல் திணறுவார்.
மளிகை வியாபாரம், தங்க வியாபாரம் இரண்டையும் சேர்த்துச் செய்து கொண்டு, கோயில் தர்மகர்த்தாப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்ற நேரம் கிடைப்பதில்லையென்று கிராமத் தாரிடம் சொல்லி, தர்மகர்த்தாப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் செட்டியார்.
கிராமப் பெரிய தனக்காரன் கூட்டத்தில் அவர், “கோயில் பணம் ரொக்கமாக மூவாயிரம் ரூபாய்க்கு மேல் என்னிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. என் வியாபாரத்தில் அந்தப் பணத்தைப் போட்டுப் புரட்டிக் கொள்ளும் ஆசை அடிக்கடி தோன்றுகிறது. அதுதெய்வத்தின் சொத்து.அந்தமாதிரி அபசாரத்திற்கு இடம் வந்து விடக்கூடாது என்பதுதான் என்கவலை.என்னைவிட்டு விடுங்கள்” என்று சொல்லிக் கேட்டுக்கொண்டார்.
– செட்டியாரின் மனச் சுத்தத்தைப் பற்றி ஊரே புகழ்ந்தது. செட்டியாரிடமிருந்து தர்மகர்த்தாப் பொறுப்புத் தலை மாற்றப் பட்டது.
அது நடந்த அடுத்த வாரம் மாவடித்தேவன், செட்டியாரிடம் விற்பதற்காகச் சில நகைகளைக் கொண்டு வந்தான். ஊரில் அவனைப் பற்றி எப்படி எப்படியோ சொன்னார்கள். அவன் பேர்வழி சுத்தமில்லை, ஆனால் அதற்காகச் செட்டியார் அவனிடம் வியாபாரம் செய்ய மறுக்கவில்லை. அவனிடமிருந்து நகைகளை வாங்குவதில் சில சௌகரியங்களும் இருந்தன; அசௌகரியங்களும் இருந்தன.செட்டியார் சொன்ன எடைதான், விலைதான். பணமும் கொஞ்சம் முன்னே பின்னே கொடுக்கலாம், இவையெல்லாம் சௌகரியங்கள்.
ஆனால் அவனிடமிருந்து வாங்கிய சரக்கை உடனுக்குடன் உருக்கித் தங்கமாக்கி விடவேண்டும். அதற்கேற்றபடி கணக்குத் தயாரிக்க வேண்டும். அதற்கெல்லாம் கனகசபை ஆசாரியின் ஒத்துழைப்புத் தேவை. அவர் அதில் பங்கு எதிர்பார்த்தார். இவை அசௌகரியங்கள்.
ஆதி கணபதி செட்டியார் கனகசபை ஆசாரியிடம் பேசாமல் பேசி அவருடைய பங்கு விகிதத்தை நிர்ணயித்தார். நதி மூலம், ரிஷி மூலம், நகை மூலம் மூன்றையும், விசாரிக்கக் கூடாது என்ற திட்டத்தில் வியாபாரம் அதிக சிரமமில்லாமல் நடந்தது,
முந்திய வாரத்தில் மாவடித்தேவன், என்ன நகையென்று நிச்சயம் செய்ய முடியாதபடி மொத்தையாக ஒரு தங்கக் கட்டியைக் கொண்டு வந்தான். மாற்று உயர்ந்த சரக்கு, சென்னையிலே அப்போது தோலா நூற்றுப் பத்து ரூபாயில் விற்றுக் கொண் டிருந்தது. செட்டியார் திறமையாகப் பேரம் செய்து அதை வாங்கினார்.
அதை உருக்கிய போது கனகசபை ஆசாரி, “பார்த்தால் ஏதோ கோயில் நகை மாதிரி இருக்கிறது, செட்டியார்!” என்றார்.
செட்டியார், “இதற்குள்ள விலையை நான் கொடுத்து விட்டேன். இதை நாம் வைத்துக் கொண்டு அநுபவிக்கப் போவ தில்லை. தப்பாக இருந்தால் அந்தப் பாவத்தில் அவன் போகிறான். இந்த வீண் விசாரமெல்லாம் நமக்கு எதற்கு?” என்று சமாதானம் சொன்னார். அந்தத் தங்கத்தை விற்கக்கொண்டுபோன வழியில்தான், செங்கல்பட்டில் அநுமார் காப்பாற்றிக் கொடுத்தார்.
குத்துவிளக்குச் செய்யவேண்டுமென்று செட்டியார் சொன்ன வுடன் கனகசபை ஆசாரி, “நம்ம ஊர் பொன்னு ஆசாரி, அவர் மகன் மந்திரம் இவர்களைக் கொண்டே வார்க்கச் சொல்லுவோம். தகப்பன், மகன் இருவருக்கும் வெண்கல வார்ப்பு வேலைகளில் நிறையக் கைப் பழக்கம் உண்டு. என் மருமகன் ரத்தினவேலு வார்ப்புக்குச் சித்திரம் வரைவதிலும், உமிசுக்கு உருச்செய்வதிலும் கெட்டிக்காரன். அவனை வரவழைப்போம். அவன் சித்திரம் போட்டுச் செப்பில் முழு அளவில் விளக்கைச் செய்து கொடுத்து விடுவான். அதைக் கொண்டு அவர்கள் உமிசு செய்து கொள்ளலாம். விளக்கு ஒரே வார்ப்பாக அமையும். இந்தக் காலத்தில் செய் கிறார்களே, பாதம் தனி, தண்டு தனி, முகம் தனியாக; அந்த மாதிரி குத்து விளக்கைக் கண்டாலே எனக்குப்பிடிக்காது” என்றார்.
செட்டியார் அவர் யோசனையை ஏற்றுக் கொண்டார். ரத்தின வேலு வரவழைக்கப்பட்டான். அவனும் மந்திரமும் விளக்கு வார்க்கும் வேலையில் தீவிரமாக முனைந்தார்கள்.
ஒரே மண்டலத்தில் ரத்தினவேலு உருச் செய்து கொடுத்து விட்டான். விளக்கின் உச்சியில் சஞ்சீவி மலையை ஏந்திக் கொண்டு பாயும் அநுமார் சிலையை அவன் செய்திருந்ததைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள்.
மந்திரம் எங்கேயோ போய் உமிசைக்காகத் தனித் தரத்து மண் கொண்டு வந்தான். அந்த வேலையும் பூர்த்தியாகி, உலோகங்களை உருக்கி வார்க்க நாளும் பார்த்துக் குறிப்பிட்டார்கள்.
அந்த நேரத்தில் அநுமார் கோயில் தங்கக் கவசம் திருட்டுப் போய் விட்டதென்று கூச்சல் எழுந்தது. போலீஸ் விசாரணை தடபுடல் பட்டது. ஆதிகணபதி செட்டியார் வீட்டுக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்தார். செட்டியார் கணக்குகளை எடுத்துக் காட்டினார்.
அவர் வாரா வாரம் வாங்கும் தங்கத்திற்கு, ஐந்து குண்டுமணி எடையாக இருந்தாலும் விற்றவர் பெயர், விலாசம், விலை விவரங் களுடன் தனியாக நறுக்கு எழுதிப் போட்டு விடுவது வழக்கம். நறுக்கு களையெல்லாம், வாரம் வாரியாகத் தனித்தனியாகக் கட்டிப் போட்டுவைத்திருந்தார்.
ஒருவாரம்கூட அவர் நாற்பது தோலாவுக்கு மேல் சென்னைக் குத் தங்கம் எடுத்துக் கொண்டு போனதில்லையென்று கணக்குக் காட்டியது. அவர் வீட்டில் தேடிப் பார்த்த போது அந்த வாரத்தில் வாங்கிய கணக்குக்குச் சரியாக இருந்தது இருப்புத் தங்கம்.
செட்டியார் வீட்டில் திருட்டுச் சொத்து இல்லையென்று பதிவு செய்து கொண்டு போனார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
செட்டியார் மளிகைக் கடையில் உட்கார்ந்து கடைத்தெருவி லிருந்தவர்கள் கேட்க, “மடியில் கனமிருந்தாலல்லவா பயப்படா” என்று பேசினார்.
மாவடித்தேவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிப்பதாகத் தகவல் வந்தது. செட்டியார் தம் உள்ளப் பதைப்பை வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவனை விட்டு விட்டார்கள் என்று கேட்ட பிறகுதான் சரியாக மூச்சுவிட்டார்.
அன்று இரவு ஒன்பதரை மணிக்கு வெண்கலக் கலவை உருக்க வேளை குறித்திருந்தது. பகலிலேயே செட்டியார் அதற்காக வாங்கிய செம்பு, வெள்ளீயம், பித்தளை முதலியவைகளையெல்லாம் கனகசபை ஆசாரியிடம் எடுத்துக் கொடுத்து, “நீங்களே அது அது விகிதப்படி நிறுத்து எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத் திருந்து, இரவில் கன்னான் வீட்டுக்குக் கொண்டு வந்து விடுங்கள்” என்றார்.
கனகசபை ஆசாரிமூன்றையும் தனித் தனியாக நிறுத்துத் தனிப் பெட்டிகளில் போட்டுத் தம் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
அன்று செட்டியார் சென்னைக்குப்புறப்படும் முறை. விளக்கு வார்ப்புக்காக அதை ஒருநாள் ஒத்திப் போட்டார். அந்த வாரம் வழக்கத்திற்கு மேல் அதிகமாகத் தங்கம் வந்தது விற்பனைக்கு. அவ்வளவையும் வாங்கி வைத்திருந்தார்.
மாலை ஏழரை மணிக்கு செட்டியார் தம் மளிகைக் கடையில் இருந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரண்டையும் பொன்னு ஆசாரி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார். வீட்டு வாசலில் காத்திருந்த மாவடித்தேவனைக் கண்டவுடன் அவருக்குப் பக்கென்றது. 1 “ஊரெல்லாம் கசமுசலாக இருக்கிறது. இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தாய்?” என்று அவனைக் கடிந்தார்.
மாவடித் தேவன், “உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும். வாங்க உள்ளாறப் போயிடுவோம்” என்றான்.
மறுக்க மாட்டாமல் செட்டியார் அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அவருடைய தங்க வியாபாரக் கமாம்சாகப் புழங்கிய அறைக்குள் முன்னால் போய், இரும்புப்பெட்டி சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று கவனித்துக் கொண்டு தேவனை உள்ளே வரச்சொன்னார்.
மாவடித்தேவன் நேரடியாகத் தான் வந்த காரணத்தைச் சொன்னான்:“செட்டியாரே! திருடறவங்களுக்குள்ளே ஒரு முறை யுண்டு. நீங்க அதிலே தவறிட்டீங்க. நான் கொணாந்த கட்டியை எடை போட்டு நாப்பது பவுனிருக்குது, மாத்தும் மட்டமின்னீங்க. ஊருலே பவுன் எளுபத்தஞ்சு ரூவா வித்துகிட்டிருக்கிறப்போ, நீங்க எனக்கு அறுவது ரூவா வெலை போட்டுக் கணக்குச் சொன்னீங்க. அநுமார் கோயில் கவசம் எம்பத்திரண்டு பவுன் எடையாம். சொக்கத் தங்கமாம். இப்படியெல்லாம் சம்பாரிச்சு அந்தப் பணத்தை எங்கே வச்சுவைக்கப் போறீங்க, செட்டியார்?” என்றான்.
செட்டியார் அளவு கடந்த ஆச்சரியத்தைக் காட்டி, “அடப்பாவி மகனே! அநுமார் கோயில் சொத்தையா கொண்டு வந்தே? அந்தத் தெய்வம் உன்னைச் சும்மாவிட்டு விடுமா?” என்றார்.
தேவன், “ஏன் செட்டியாரே சும்மாப் பசப்பறீங்க? உப்புலே ஊறின பண்டம் இனிப்பா இருக்கும்னு தின்னேங்கறீங்களே. செயிலுக்குப் போறது எனக்குத் தண்ணி குடிக்கிற மாதிரி. நீங்க அதுக்கு லாயக்கில்லே. அவ்வளவுதான் சொல்லுவேன்! அப்புறம் உங்க இஸ்டம்” என்றான்.
செட்டியார் நைச்சியமாக, “என்ன மாவடி கன்னாப்பின்னா வென்று பேசுகிறாயே. நீ பார்த்து ஆயிரம் ஐந்நூறு அதிகம் வேண்டு மென்றால் இல்லையென்றா சொல்லி விடுவேன்? சரி. நீ இன்னொரு சமயம் வா. இப்போது நீ இங்கே வந்ததே தப்பு.போய் வா” என்றார்.
தேவன், “நீங்க என்ன ஓடியா போயிருவீங்க? பொறகாலே வந்து பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
இரவு சரியாக ஒன்பதரை மணிக்குப் பொன்னு ஆசாரி மூசையை உலையின் மேல் ஏற்றினார். செட்டியாரும், அவர் அழைத்திருந்த இரண்டு ஊர்ப் பிரமுகர்களும் கனகசபை ஆசாரி வகையராக்களும் வந்திருந்தார்கள்.
உலைக்குப் பக்கத்திலேயே நான்கு அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி, மூசையைத் தூக்கி, உருகிய உலோகத்தை ஊற்ற வசதியாக இருக்கும்படி, விளக்கு உமிசை அந்தப் பள்ளத்தில் இறக்கி வைக்கப் பட்டிருந்தது.
கிழவர் பொன்னு ஆசாரி சொல்லச் சொல்ல மந்திரம் உலோ கங்களை எடுத்து மூசையில் கொட்டினான். செம்பு உருகியவுடன் அதைக் கவனித்த பொன்னு ஆசாரி, கனகசபை ஆசாரியிடம், “என்ன அண்னே! செம்பு எடை சரியாப் பாத்துக் கொண்டு வந்தீங்களோ? நீர் குறைவாகக் காணுதே?” என்றார்.
கனகசபை ஆசாரி, “நானே நிறுத்து எடுத்து வைத்தேன். துல்லியமாக இருக்கும்” என்றார்.
பொன்னு ஆசாரி அதனுடன் திருப்தியடைந்து மற்ற உலோ கங்களைப் போடச் சொன்னார். மந்திரத்திடம் உருகிய உலோகங் களை நன்றாகக் கலக்கச்சொல்லிவிட்டுப்பதம்பார்த்து மூசைக்குள் வெண்காரத்தைத் தூவினார். மூன்றுதாதுக்களும் கலந்து வந்தவுடன் மந்திரத்தை எச்சரித்தார்.
மூசையை அவனுடன் பிடித்துத் தூக்கி ஊற்ற உதவிக்காக இருவர் தயாராக நின்றனர். பொன்னு ஆசாரி, ‘உம்’ என்றவுடன் மூவரும் மூசையைத் தூக்கி உருகிய வெண்கலத்தை உமிசத்தில் ஊற்றினார்கள்.
வார்ப்பு இறுகி ஆறுவதற்கு அவகாசம் கொடுத்து, மறுநாள் பகல் மூன்று மணிக்கு அதை உடைக்கத் தயாரானார் பொன்னு ஆசாரி. செட்டியார் கனகசபை ஆசாரியுடன் வந்து சேர்ந்தார்.
அங்கே கூடியிருந்தவர்களின் பதைப்புப் போல நடுங்கியது சுத்தியலைப் பிடித்த பொன்னு ஆசாரியின் கை, அனுபவத்தின் லாகவத்துடன் அவர் வார்ப்புக் கூட்டைத் தட்டித் தட்டி உடைத் தார். விளக்கின் தலைப் பகுதி முதலில் வெளிப்பட்டது. உச்சியில், கையில்சஞ்சீவி மலையுடன் பாய்ந்து கொண்டிருந்த அநுமார் சிலையைக் கண்டவுடன் கூடியிருந்த யாவரும், “அஹாஹா!” என்று கூவினார்கள்.
விளக்கின் முழு வடிவத்தையும் கண்ட செட்டியாருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. குழந்தை போலக் கூச்சல் போட்டுச் சிரித்து, “அந்த அநுமார் கிருபைதான் இது இவ்வளவு உயர்வாக மூளி, விரிசல் இல்லாமல் அமைந்தது!” என்றார்.
மேலும் ஒருமணி நேரத்திற்குப்பிறகு சென்னைக்குப் புறப்பட ஆயத்தம் செய்தார் செட்டியார். உடன் கொண்டு போக வேண்டிய தங்கத்தை எடுப்பதற்காக இரும்புப் பெட்டியைத் திறந்தவர், “ஐயையோ!” என்று அலறிக்கூவிவிட்டார். இரும்புப் பெட்டிக்குள் தங்கக் கட்டிகளை வைத்திருந்த கைப் பெட்டியைக் காணவில்லை! ஐம்பத்தாறு தோலா தங்கம் போய் விட்டது.
இரும்புப் பெட்டி பூட்டியபடியே இருக்க, அதற்குள்ளிருந்த கைப்பெட்டியை, தோலிருக்கச் சுளை விழுங்குவது போல மாவடித் தேவன் ஒருவனால்தான் கொண்டு போயிருக்க முடியும். உடனே அவனுக்கு ஆள் அனுப்பினார்.
அவன் ஊரில் இல்லையென்று செய்தி கொண்டு வந்தான் ஆள். “நேற்றிரவே அவன் கையில் ஓர் ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுக்க எனக்குப் புத்தியில்லாமல் போயிற்றே!” என்று தலையில் அடித்துக் கொண்டார் செட்டியார். பக்கத்திலிருந்த கனகசபை ஆசாரியிடம் கதறியழுது நடந்ததைச் சொன்னார். கனகசபை ஆசாரி இடிந்து ஊமையாக உட்கார்ந்து விட்டார்.
செட்டியார் அன்று சென்னைக்குப் புறப்படவில்லை. விளக்கு வேலையைப் பூர்த்தி செய்து, கோயிலில் சமர்ப்பித்து விட்டுத்தான் போகப் போவதாகச் சொல்லிவிட்டார் கேட்டவர்களிடம்.
ரத்தினவேலு குத்து விளக்கைச் செட்டியார் வீட்டிற்குக் கொண்டு வந்து ராவி, நகாசு வேலைகள் செய்தான்.ஒருவாரத்திற்குப் பிறகு விளக்குக்கு மெருகு போட்டவுடன் பார்த்தவர்கள், “இது வெண்கல விளக்கே அல்ல, பொன் விளக்குத்தான்” என்று சொன்னார்கள்.
அநுமாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, ஆதி கணபதி செட்டியார் விளக்கைச் சந்நிதியில் சமர்ப்பித்தார். அதன் ஐந்து கண்களும் எரிய, அதனடியில் அமர்ந்து, கோவிந்த சாமி பாகவதர் ராமாயண கீர்த்தனைகளைப் பாடிய காட்சி கண்கொள்ளா ஆனந்தக் காட்சியாக இருந்தது.
செட்டியார் விளக்கின் அருகில் நின்று அநுமாரிடம், “சுவாமி! என்னை இப்படிக் கொள்ளை கொடுக்க விட்டு விட்டாயே! என் பொருளை மீட்டுக்கொடுப்பது உன் பாரம்” என்று முறையிட்டார்.
அன்றிரவு கனகசபை ஆசாரிதம் வீட்டு முற்றத்தில் தோண்டி, அங்கே புதைக்கப்பட்டிருந்த கைப்பெட்டியை வீட்டினுள் கொண்டு போய்த் திறந்து பார்த்தவுடன் அவரும், “ஐயையோ!” என்று அலறிக் கூவிவிட்டார். அதனுள் செட்டியாரின் தங்கத்துக்குப் பதில் செப்புக் கட்டைகள் கிடந்தன! கனகசபை ஆசாரி தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
வெண்கலத்திற்காகச் செம்பு முதலியவற்றை நிறுத்து வைத்த போது, கனகசபை ஆசாரி, அபாரமான திறமையுடன் தங்கம் வைத்திருந்த கைப் பெட்டியையும் தம் வீட்டுக்குக் கடத்திவிட்டார். அதைக் கையோடு வீட்டு முற்றத்தில் புதைத்தும் வைத்தார். ஆனால் எப்படி நேர்ந்தது என்பதே புரியாமல் செம்புப் பெட்டியும், தங்கப் பெட்டியும் மாறிவிட்டன!
அன்றிரவு உருக்குவதற்காக உலோகங்களை மூசையில் கொட்டிய போது. அந்த வித்தியாசத்தை யாருமே கவனிக்க முடியாமல் போனது எப்படியென்று யோசித்து யோசித்துப் பார்த்தார். பொன்னு ஆசாரி, “என்ன அண்ணே! செம்பு எடை சரியாப் பார்த்துக் கொண்டு வந்தீங்களா? நீர் குறைவாக்காணுதே” என்று கேட்டது பளிச்சென்று அவர் நினைவுக்கு வந்தது.
ஒரே எடையுள்ள தங்கத்தையும், செம்பையும் தனித்தனியாக உருக்கினால், தங்க நீர் அளவு குறைவாக இருக்கும் என்பதை அவருடைய தொழில் அநுபவம் எடுத்துக் காட்டியது. சந்தேக மேயில்லை; அவர் செட்டியாரிடமிருந்து தட்டிக் கொண்டு வந்த தங்கம் அவ்வளவும் குத்து விளக்கில் கலந்துவிட்டது!