(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தியாகு கொழும்புக்கு வந்ததிலிருந்து தனது வலது கால் சுளுக்கிக் கொண்ட உணர்வுக்குட்பட்டுக்கொண்டிருந்தான். உண்மை யாகவே கால் சுளுக்கிக்கொண்டவன்போல், காலை உதறிக்கொண் டான். ஆனால், சுளுக்கு இருந்தால்தானே அதிலிருந்து விடுபடுவ தற்கு? அப்படி ஓர் உணர்வு – வெறும் உணர்வு – ஒருக்கால் முழங்காலுக்குள் நிற்பதுபோல், பின் கணுக்காலுக்கு விரைவது போல், பின் தொடைக்குமேலே சென்று அரையை இறுக்கிக் கொள்வதுபோல்! தியாகுவுக்குத் தெரியும் தனக்கு அப்படி ஒரு சுளுக்கும் இல்லை என்று. இருந்தாலும் அந்த உணர்வினால் பீடிக்கப்பட்டிருந்தான். அதிலிருந்து அவனால் விடுபட முடியாத ஓர் அந்தரம். அந்த உணர்வு கூடிக்கொள்ளும்போதெல்லாம் அவன் தன்னை அறியாமலே தன் சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையைத் தொட்டுப்பார்த்துக்கொள்வான். ரோட்டில் நடக்கும்போது இந்த உணர்வு ஏற்பட்டுவிட்டால் அடிக்கொருதரம் அவன் கை, அடையாள அட்டையைத் தொட்டுப் பார்த்துக்கொள்ளும். அறையில் இருக்கும்போது இந்த உணர்வு ஏற்படும் சந்தர்ப்பங்களில், ஏனோ, அவனால் மேசையில் கிடக்கும் அடையாள அட்டையைப் பார்க்காமல் இருக்கமுடிவதில்லை.
இதுபற்றி பூரண விசாரணை அவனுக்கு இல்லை. இருந்த போதும் அவனுக்கு அவன் சுபாவம்பற்றி ஓர் உள்ளுணர்வோட்டம் உண்டு. சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே அவனிடம் இந்தக் கோணங்கிக் குணாம்சங்கள் தொற்றிக்கொண்டு வருவது அவனுக் குத் தெரியும். இந்த பித்தலாட்டங்களை சிலவேளைகளில் அவன் அம்மா கண்டுவிட்டு, “என்னடா, கோணங்கிக் கூத்தாடுற?” என்று எரிந்துவிழுந்ததும் அவனுக்குத் தெரியும்.
பாடசாலையில் அவன் எல்லோருக்கும் பயந்தவன். வம்புதும் புக்குப் போகாதவன். ஆசிரியர் வகுப்பில் இல்லாதபோது, அவன் சகமாணவர்கள் வகுப்பையே புரட்டியெடுத்துக்கொண்டிருக் கும்போது, இவன் பேசாது ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருப் பான். அந்தப் பார்வையில் ஒவ்வொருவரது குணக்கோளாறுகள் வெளியே துருத்திக்கொண்டு நிற்பது இவனுக்குப் பட்டெனத் தெரிவதுபோல்… சிரிப்புமேலிடும்போது, வாயைக் கையால் பொத்தி, சிரிப்பை அடக்கிக்கொள்வான். ஏதாவது சிறிது விபரீதமாகப் போய்விட்டால், இவன் பயந்துபோவான். இவனுக்கு வேர்த்துக் கொட்டும். இவனைப் பயமுறுத்தி வேடிக்கை காட்டுவதற்காகவே சிலர் அட்டகாசம்செய்வதும் உண்டு. அப்பொழுதெல்லாம். இவனுக்கு ‘ஒண்டுக்கு’ போகவேண்டும்போல் இருக்கும் அல்லது வயிற்றை கலக்குவதுபோல் வந்துவிடும். இவன் உடனே மேசையில் முகத்தைக் குப்புறப்போட்டுப் படுத்துக்கொள்வான். அதைக் கண்டு மாணவர்கள் அட்டகாசம் இன்னும் பெரிதாக வெடிக்கும். வகுப்புக்கு யாராவது ஆசிரியர் வந்து பாடத்தை ஆரம்பிக்கும் மட்டும் இவன் தலையை நிமிர்த்தமாட்டான்.
ஒருமுறை பாடசாலைக்குப் புதிதாக வந்த ஆசிரியர் ஒருவர் கணக்குப் படிப்பித்துக்கொண்டிருந்தார். அவர் கரும்பலகையில் கணக்கை எழுதிக்கொண்டிருந்தபோது சுட்டித்தனத்துக்குப் பேர்போன, அவன் பக்கத்தில் இருந்த காந்தன் என்பவன் அவர் எழுதுவதை அபிநயித்தான். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்த போது, ஆசிரியர் கோபத்தோடு திரும்பினார். அப்போது எல்லோ ரது சிரித்த முகங்களும் காந்தனை நோக்கித் திரும்பியபோது, அவன் பக்கத்தே இருந்து ‘திருதிரு’வென முழித்துக்கொண்டிருந்த தியாகுதான் ஆசிரியரின் பார்வைக்கு வித்தியாசமாகப்பட்டான். அவர் உடனே கோபம் கொப்பளிக்க தியாகுவை எழுந்துவரும்படி கட்டளையிட்டார். தியாகுவுக்கு வேர்த்தது. எழுந்துசெல்லமுடியாது கால் மரத்துப்போனதுபோல் தெரிந்தது. இருந்தாலும் அவன் ஒருவாறு எழுந்து, காலை இழுத்து இழுத்து அவர் அருகே போக முயன்றான். கொஞ்சத்தூரம் போயிருக்கமாட்டான், திடீ ரென என்ன நினைத்துக்கொண்டானோ, வகுப்பைவிட்டுத் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான்! பின்னர் அவனது சகமாணவர் கள் எல்லோரும் சேர்ந்து அவனை வளைத்துப் பிடித்து ஆசிரியர் முன் கொண்டுபோய் நிறுத்தியபோது, அவன் கண்கள் பயத்தினால் படபடத்த விதத்தையும், முகம்போன போக்கையும் பார்த்தபோது ஆசிரியருக்கே பெரும் பரிதாபமாகப் போய்விட்டது.
அப்போது, அவனுக்கு வயது பன்னிரண்டு. தியாகுவுக்கு அந்த நினைவு அடிக்கடி மேலெழும். அவன் மட்டுமேன் அப்படித் தொட்டதுக்கும் பயந்து நடுங்க வேண்டும்? அவன் அவற்றிலிருந் தெல்லாம் விடுபட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றிருக்கி றான். ஆனால், நெருக்கடிகள் நேரும்போது அவன் பழையவனாகவே குவிந்துபோகிறான். அவனால் மற்றவர்கள்மாதிரி நிமிர்ந்துகொள்ள முடிவதில்லை.
1983 ஜூலையில், கொழும்பில் அவனது சொந்தக்காரர்கள் பலர் செத்துப்போனதுபற்றி, அவன் அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். அவள், அவர்கள் செத்தவீட்டுக்குப் போய்வந்தபோது, அவர்கள் எப்படிக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர், நெருப்புக்குள் தூக்கிப்போடப்பட்டனர், வெட்டிப் புதைக்கப்பட் டனர் என்பதுபற்றி எல்லாம் கதைகதையாகச் சொன்னாள். இவனுக்கு ஏனோ அடிவயிறு அளைவதுபோல்பட்டது. எப்படி ஒருவன் இன்னொருவனை அடித்துக் கொல்லமுடிகிறது, நெருப்புக் குள் தூக்கிப்போட முடிகிறது என்பதுபற்றி அவனுக்குப் புதிராகவே இருந்தது. அப்படியெல்லாம் எப்படிக் கொல்லமுடிகிறது என்று அவன் அம்மாவிடம் கேட்டிருக்கிறான். அப்பொழுதெல்லாம் “அப்படிக் கொல்லிறவங்களெல்லாம் அரக்கச் சாதிகள்” என்று அவள் சொல்லியிருக்கிறாள். நல்ல காலம் அவன் அப்பா கொழும் பில் வேலை பார்க்கவில்லை என்பதில் அவனுக்குச் சந்தோஷம். அவன் அப்பா அக்கராயன்குளத்தில் கமம். அவர், காடு வெட்ட வென்று கத்தியோடு போய் மரக்கிளைகளைத் தறிக்கும்போது, ‘ஆ’ என்று அவன் தனக்குள் முனகிக்கொண்டு, தன் கழுத்தைத் தடவித் தடவிப்பார்த்துக்கொள்வான்.
இன்னொருமுறை அவன் யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தியில் கவசவாகனங்கள் சகிதமாக ஆமிக்காரர்களை முதன்முதலாகக் கண்டபோது, நெஞ்சு பதற அவன் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டான். “அம்மா, அம்மா” என்று அவன் எதையோ கேட்க முற்பட்டபோது, “சத்தம்போடாம வாடா, ஆமிக்காரன்கள் நிக்கி றாங்கள்” என்று அவன் அம்மா அடக்க, அவன் கண்கள் அகல விரிய ஆமிக்காரர்களைப் பார்த்து, “அம்மாடி, இவங்கள்தானா ஆக்களைக் கொல்லிறவங்கள்! அதென்ன, அந்தப் பெரிய கறுத்த வானுக்குள் என்னவோ சுத்திச்சுத்தி வருகுது! விசுவுக்கெண்டா எல்லாம் தெரியும், நாளைக்குப் பள்ளிக்கூடத்தில் அவனட்டை கேக்க வேணும்…”
பிறகு, அவன் விசுவுவைப் பள்ளிக்கூடத்தில் சந்தித்தபோதும் அதுபற்றி அவனோடு கதைக்கமுடியாமல் போய்விட்டது. அவனது இயல்பான குணம் அந்தளவுக்கு விசுவுவோடு சரளமாகக் கதைக்க விடவில்லை. கதைக்கலாம், கதைக்கலாம் என்று அவன் ஒத்திப் போட்டுக்கொண்டிருப்பதற்குள் விசுவு பள்ளிக்கூடம் வராமலே விட்டுவிட்டான். விசுவு எங்கே போய்விட்டான்? கொஞ்சநாட் களுக்குப் பிறகு தியாகுவுக்கு எல்லாம் தெரியவந்தது. அவனது கிராமத்துப் பெரிய பையன்கள் சிலரோடு சேர்ந்து, விசுவும் இயக் கத்துக்குப் போய்விட்டானாம்! அவனுக்கும் தியாகுவின் வயது தானே? அவனுக்கு என்ன துணிச்சல்! இந்தப் பெரிய ஆமிக்காரங் களை அவனால் எப்படிக் கொல்லமுடியும்? தியாகுவுக்கு அதை நினைத்தபோதே ‘ஒண்டு’க்கு வருமாப்போல் இருந்தது. சில நாட்களுக்குப் பின்னர் விசுவும் இயக்க நண்பர்களோடு ஊர்ப் பக்கம் வந்து கூட்டம் ஒன்று போட்டான். அப்போது, இவனும் அவனைப் போய்ப் பார்த்தான். விசுவுவின் கையிலிருந்த ஏ.கே.தான் இவனைப் பயமுறுத்தியது. ஆனால், விசுவு அதை வெகு அநாயாச மாகக் கையில் வைத்திருந்த பாணி இவனுக்குப் பிரமிப்பூட்டுவதாய், இவன் கைகளை விறைக்கவைப்பதாய் இருந்தது.
வேறொருமுறை இவன் பட்டணம் போனபோது, யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் இருந்த மின்கம்பத்தைச் சுற்றி, ஒரு கூட்டம் கூடி எதையோ மொய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தது. இவன் அப்பா கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே போனார். அவரின் கையைப் பிடித்துக்கொண்டே உள்நுழைந்து பார்த்தபோது, இவனுக்குக் காலும் கையும் நடுங்கத்தொடங்கின. அங்கே, மின்கம் பத்தோடு யாரோ ஒருவன் தலைதொங்கக் கட்டப்பட்டுக் கிடந் தான். அவன் நெஞ்சிலிருந்து கட்டிகட்டியாக இரத்தம் வழிந்து நிலத்தில் சிந்தியிருந்தது. கழுத்தில் ஒரு மட்டை கட்டப்பட்டுத் தொங்கியது. அதில், அவன் செய்த குற்றங்கள் எழுதப்பட்டிருந்தன. அவன் அப்பாவின் வாய் அதை ஒவ்வொன்றாய்ப் படிப்பதுபோல் பட்டது. இவனுக்கோ அவ்வெழுத்துக்கள் வெள்ளெழுத்துக்களாகிக் கொண்டிருந்தன. அவன் கண்முன்னே பாடசாலையிலுள்ள அதி பரின் அறையில் தொங்கிய, சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாத ரின் படம் பெரிதாகத் தெரிந்தது.
அங்கே நிற்கமுடியாது, அவன் அப்பாவின் கையைப்பிடித்து இழுத்தான். ஒருவாறு அவன் அவரை இழுத்துக்கொண்டு ரோட் டில் நடந்தபோது, அவனுக்கு என்னவோ அந்தரமாக இருந்தது. அவனுக்குள் பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.
சாகிறது என்றால் என்ன? செத்துப்போய்க்கிடந்தவன் இப்ப டியே இனி இல்லாமல்போய்விடுவானா? அவனுக்கு உயிர் கொடுக்க முடியாதா?
தியாகுவுக்கு ஏதோ செய்யவேண்டும்போல் இருந்தது. அவனது அப்பா சட்டைப் பையில் இருந்த தனது அடையாள அட்டையை வெளியே எடுத்துப் பார்த்தார். அவனது அண்ணா சுவிஸிலிருந்து அனுப்பிய காசை மாற்றுவதற்கு யாழ்ப்பாணம் கொமேர்ஷல் வங்கியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
மின்கம்பத்தில் கட்டப்பட்டுக் கிடந்தவனுக்கு அடையாள அட்டை இருக்குமா? அவன்ர அடையாள அட்டையை இனி என்ன செய்வார்கள்?
“அப்பா” என்று தியாகு ஆரம்பித்தான்.
“என்னடா” என்றார் தகப்பன்.
“இனி அவன் உயிர்க்கமாட்டானாப்பா?”
“எவனடா?”
“அவன்தான், அந்தக் கம்பத்தில் கட்டியிருக்கிறவன்…”
“உனக்கென்ன விசராடா? செத்தவை ஆரும் உயிர்ப்பினமே?”
“அப்ப, அந்த யேசுநாதர் உயிர்த்தவர் எண்டு எனக்கு சூசை சொன்னானே?”
“அது யேசுநாதர்! இவன் சாதாரண ஆள், நாங்கள் செத்தா செத்ததுதான்!”
அப்பா சொல்லி முடிப்பதற்குள் அவனுக்குள் ஓர் அந்தரம்.
“அப்ப செத்துப்போனா அதற்குப் பிறகு எங்களுக்கு ஒன்றும் தெரியாமல்போயிருமாப்பா?” தியாகு தட்டுத்தடுமாறிக் கேட்டான்.
“என்னடா விசர்க் கதை கதைக்கிற, சும்மா அலட்டாமல் வா!”
தியாகு அதன்பின்னர் ஒன்றும் கதைக்கவில்லை.
ஆனால், அவனுக்குச் சாகிறதென்றால் என்ன என்று பார்க்க வேண்டும்போல் ஓர் ஆசை எழுந்தது. செத்தால் என்ன நடக்கும்? திடீரென அவனுக்குப் பயமாக இருந்தது. செத்தபின் உயிர்க்க முடியாதென்ற நினைவு வந்ததும் அவனுக்குள் ஓர் அந்தரம். ஏதோ பெரிதாக எழுந்து, திரண்டு அவன் தொண்டையை அடைப்பது போல் ஓர் உணர்வு. அப்பொழுதெல்லாம் அடிக்கொருதரம் அவன் வெறும் எச்சிலை விழுங்கி, விழுங்கித் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.
இப்படியெல்லாம் யாருக்கும் எழாத அசாதரண நினைவுகள் ஏற்பட்டுவிட்டால் அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்தமாதிரி நினைவுகள் அவனுக்குள் அடிக்கடி ஏற்பட்டுக்கொண் டேயிருக்கும். அதனால், அவனுக்குள் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒருவித பயம், நீர்க்குமிழிகள்மாதிரி எழுந்தெழுந்து உடைந்த வண்ணம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனால், அவனுக்குள் சதா நடுக்கம். இந்த நடுக்கத்தால் அவனது வகுப்பு மாணவர்கள் அவனை எதிலும் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்கள் பாஷையில் அவன் ஒரு சோணகிரி! இப்படி, அவன் ஒதுக்கப்படும்போதெல் லாம் அவனுக்குத் துக்கம் ஏற்படுவதற்குப் பதில் தன் தலையில் எந்தவித பொறுப்பும் சுமத்தப்படவில்லை என்ற ஆறுதலும் திருப்தி யும்தான் ஏற்படும். கூடவே, தனக்குள் தானே ஒதுங்கிக்கொள்ளும் ஒதுக்கத்தின் சுய அணைப்பு. அந்த ஒதுக்கத்துள் இருந்துகொண்டு தனக்குள் விசாரணைகளையும் கேள்விகளையும் எழுப்பிப் பதில் காண்பதில் அவனுக்கு ஒரு தனி வேட்கை.
அண்ணா வெளிநாட்டுக்குப் போனபின்னர், இவன் பள்ளிக் கூடமும் அக்கராயன் குளக்கட்டுமாகத் திரிந்தான். பயந்தவனாக இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரனாய் இருந்தான். எதையாவது படிப்பதென்றால் அவனுக்கு எப்பவுமே ஆர்வம். கிழிந்த பத்திரிகைத் துண்டையும் எடுத்துப் படித்துக்கொண்டிருப்பான். அவற்றைப் படித்துவிட்டுத் தனக்குள்ளேயே எதையாவது யோசித்து மென்று கொண்டிருப்பான். ஒருநாள் அவன் பத்திரிகையொன்றில் நடுபக்கத் தில் வந்திருந்த கார்ட்டூனைப் பார்த்தான். அதில், ஜே.ஆர். ஜெய வர்த்தனா இலங்கையைத் துண்டாக்கிய படத்தோடு 1957இல் கண்டி யாத்திரை சென்ற படம் சித்திரிக்கப்பட்டிருந்தது. அதுபற்றி அப்போது அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்னர் அதுபற்றி அவன் தெரிந்துகொண்டபோது, அதை அவன் வேறு கோணத்தில் பார்த்துச் சிந்தித்தான். இலங்கையை முதன்முதலில் துண்டாடிப் பார்த்தவர் ஜே.ஆர்.தான். அப்படிச் சிந்திக்கும்போது அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொள்வான்.
தியாகுவுக்கு இந்த விஷயங்கள் விளங்கிய காலத்தில்தான் இந்திய ராணுவம் தமிழ்ப் பகுதியெல்லாம் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. தமிழ்த்தேசிய ராணுவத்திற்கான ஆட் சேர்ப்பும் நடந்துகொண்டிருந்த காலம். இவன் அக்கராயன் போவதற்காக யாழ். பஸ் நிலையத்திற்கு அருகே வந்துகொண்டிருந் தான். அப்போ எங்கிருந்தோ திடீரெனத் தோன்றிய ஒரு வான், பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அதிலிருந்து இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளியே குதித்தார்களோ இல்லையோ, பஸ் நிலையத்தில் நின்ற இளவட்டங்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தியாகுவுக்கு விசயம் விளங்கியதுதான் தாமதம், கால்போன திக்கில் ஓட வெளிக்கிட்டான். “அண்ண என்னைப் பிடிக்காதீங்க” என்று தனக்குள்ளேயே பெரிதாய்க் கத்தியவனாய் ஓடினான். வெகுதூரம் ஓடிவிட்டுத் திரும்பிப்பார்த்தபோது, இவனை யாரும் துரத்திவருவதாய் இல்லை. ஒருவாறு மனப்பயம் தெளிந்தவன், அன்று தன் பயணத்தைத் தொடராது வீட்டுக்குத் திரும்பி விட்டான்.
ஒருவாறு கண்ணயர்ந்தபோது ஒரு கனவு கண்டான். கொந்த ளிக்கும் கடலுக்குள் அவன் அமிழ்வதும் மேலெழுவதுமாய் உயிருக் காகப் போராடிக்கொண்டிருக்கின்றான். அப்போது ஒரு படகு மிதந்துவருகிறது. தத்தளித்துக்கொண்டிருக்கும் இவன், தன்னருகே வந்த அதன் தலைப்பக்கத்தை தாவிப் பிடிக்கிறான். தாவிப்பிடித்து அதில் ஏற முற்படும்போது திடீரென அது இலங்கையின் உருவமாக மாறுகிறது. இவன் கைபிடித்திருந்த பகுதியில் ஒருவன் தோன்று கிறான். அது ஜெயவர்த்தனாபோல் தெரிகிறது. அவன், கையில் ஒரு கத்தியை எடுத்து இவன் பிடித்திருந்த பகுதியை வெட்டித்தள்ளு கிறான். இலங்கையின் கால்வாசிப் பகுதி கையோடுவர அவன் மீண்டும் தண்ணீருக்குள் தத்தளிக்கிறான். அவனுக்குத் தாங்க முடியாத நிலை வந்தபோது, பெரிதாக அலறிக்கொண்டு கண் விழிக்கிறான். அப்பாடா! அது கனவு; அவன் இவ்வளவு நேரமும் கனவா கண்டுகொண்டிருந்தான்?
அவன் ஆறுதல் மேலிட எழுந்து உட்கார்ந்தான். எப்பொழுதும் அவன் நெருக்கடியால் பாதிக்கப்படும்போது அவனுக்குத் தண்a ருக்குள் அமிழ்வதுபோல் கனவு வருவதுண்டு. அதன் காரணமும் அவனுக்குத் தெரியும். அவன் சிறுவனாக இருந்தபோது அவன் ஊர்க் குளத்தில் குளிக்கப்போய்த் தண்ணீருக்குள் தாண்டபோது காப்பாற்றப்பட்ட அனுபவத்தின் ஆழமான பதிவு, இப்படி நெருக் கடி ஏதும் ஏற்படும்போது கனவாகத் தலைகாட்டுவதுண்டு. இப்போ அவன் அண்மையில் பத்திரிகையொன்றில் பார்த்த கார்ட்டூன் படமும் சேர்ந்துகொண்டு, அவனுக்கு எட்டியிருந்த அரசியல் அறிவையுைம் சேர்த்துக் குழைத்து அவனுக்குக் கனவாக வெளிக் காட்டிற்று. தியாகு இதை மிக எளிதாகவே விளங்கிக்கொண்டான்.
அவன் உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு!
இந்திய ராணுவம் வந்ததிலிருந்து அக்கராயனில் அப்பரின் கமத்தோடு அதிகமாக நேரத்தைக் கழித்தவன், அது போனதற்குப் பிறகு, ஊரில் அடிக்கடி தலைகாட்டினான். இக்காலங்களில் அவன் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டான். இருந்தாலும் அவன் பழைய பயந்தவனாகவே இருந்தான். தாமரை இலைத் தண்ணீர் மாதிரி உருண்டுகொண்டு, ஆனால், எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு திரிந்தான். இக்காலத்தில் சுவிஸுக்குப் போயிருந்த அவன் அண்ணா, தம்பி தியாகுவையும் அங்குவரக் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தான்.
இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, அவனுக்குத் திடீரென மூத்திரம் முடுக்குவதுபோலிருந்தது. அதன்பின்னர் அவன் அப்பா அவனைக் கொழும்புக்குப் போய் இதுபற்றி அவன் அண்ணனோடு ‘போனில்’ கதைத்து ஒழுங்குபடுத்துமாறு கூறியபோது அவனுக்கு அடிவயிற்றைக் கலக்குவதுபோலிருந்தது. அன்றிரவு அவன் வெகு நேரம் நித்திரைகொள்ளமுடியாது புரண்டு, புரண்டு படுத்தான். பின் அவன் கண்ணயர்ந்தபோது, அவனை யாரோ தண்ணீருக் குள் அமிழ்த்தி மேலெழமுடியாது செய்வதுபோல்… செய்வது போல்…அவன் பெரிதாகக் கீச்சிட்டலறி விழித்துக்கொண்டான். அப்போது, அவனைத் தண்ணீருக்குள் அமிழ்த்திய அந்தக் கை, அவன் தாவிப்பிடித்தேறிய படகை இரண்டாக வெட்டிய கை, எல்லாம் ஒன்றுபோல் தோன்றி விகாரரூபம் எடுத்துப் பயமுறுத் தின, ஒரு சாத்தான் மாதிரி… அவன் எழுந்து ஒண்டுக்குப் போனான்.
இக்காலத்தில்தான் கொழும்பில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் தகர்க்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் போடப்பட்டது.
இது தியாகுவுக்கு நல்லதாகவே முடிந்தது. அவனது கொழும் புப் பயணம் ஒத்திப்போடப்பட்டது. கொழும்புக்குப் போகவேண்டு மென்பதால் ஏற்பட்ட மனக்கொந்தளிப்பு அடங்குகிறது. அவன் மனம் ஆறுதல் அடைகிறது.
இப்படி ஒத்திப்போடப்பட்ட அவனது பயணம், ஆறேழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடக்கப்பட்டு வெகு அண்மை யில்தான் அவனைக் கொழும்புக்குக் கொண்டுவந்துசேர்த்திருந்தது.
தியாகு மேசையில் கிடந்த தனது அடையாள அட்டையைப் பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர், அவனது மாமா போனில் கூறியது ஞாபகத்திற்குவரவே, கொள்ளுப்பிட்டிக்குப் போக ஆயத்த மானான். கொழும்பிலுள்ள ஒரு நண்பருடைய வீட்டில் அவனது பாஸ்போட் எடுக்கும் விசயமாகப் போய்க்கதைக்கும்படி கூறியிருந் தார்.
அடையாள அட்டையை எடுத்துப்பார்த்து, பத்திரமாகத் தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டு வெள்ளவத்தையில் தான் தங்கியிருந்த லொட்ஜைவிட்டு வந்து கொள்ளுப்பிட்டிக்கு பஸ் எடுத்தான். சீமாவத்தை ஒழுங்கை அருகில் பஸ்ஸைவிட்டு இறங்கியவன், சற்றுத் தள்ளியிருந்த 15ஆவது லேனை நோக்கி நடந்தான். அப்படியும் இப்படியும் ஒருவித வெருட்சி தெறிக்கப் பார்த்தவனாய், அசாதாரணமாக நிமிர்ந்த நடையோடு போய்க் கொண்டிருந்தான். ராணுவ ட்றக்குகள் இரண்டொன்று அவனுக்கு எதிர்ப்புறமாக விரைந்துகொண்டிருந்தன. அதில் நிறைந்திருந்த ராணுவத்தினரைப் பார்த்தபோது அவனுக்கு ஏனோ அச்சம் மேலெழுந்தது.ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் அவன் ஊரில் பார்த்த தமிழ்த் தேசிய ராணுவம் நினைவுக்கு வந்தது. அவனுக்கு ஏனோ கால்சுளுக்குவதுபோல் இருந்தது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் முன்னே நடந்தான். முன்னால் பத்து யாருக்கு ஒருவராய் ராணுவத்தினர் துவக்கோடு நின்றுகொண்டிருந்தனர். இன்னும் சிலர், போவோர் வருவோர் சிலரை இடைமறித்துச் சோதித்துக்கொண்டிருந்தனர். இவனுக்கு அடிவயிறு வற்றிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. இவன், அவர்களைப் பார்த்தும் பார்க்கா ததுமாய் இன்னும் அதிகரித்த அசாதாரண நிமிர்வோடு பேவ்மென் டோரமாக நடந்ததை மாற்றிச் சிறிது அகல நடந்தான். வாகனங்கள் போக்குவரத்துக் குறைந்ததால் ஆமிக்காரர்கள் இல்லாத அடுத்த பக்கம் போய்விட வேண்டும் என்ற குறியோடு அவன் போனபோது, ஒரு ராணுவத்தினன் அவனைப் பார்த்து, அருகே வரும்படி சைகை செய்தான். இவனுக்குக் கால் ஒன்றோடொன்று இடறுப் படப்போவதுபோல் தெரிந்தது. இருந்தாலும் இவன் சமாளித்துக் கொண்டு அவனைப் பார்க்காதவன்போல் நடந்தான். உடனே அந்த ராணுவத்தினன் சத்தம்போட்டுக் கூப்பிட்டான். இருவரது பார்வையும் ஒன்றாய்ச் சந்தித்தன. இவனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை. ‘திருதிரு’வென முழித்துக்கொண்டு அவனருகே நடந்தான். ஒருசில வினாடிகள் சென்றிருக்காது, ஆமிக்காரனை நோக்கி நடந்தவன், என்ன நினைத்துக்கொண்டானோ, திடீரென ஆமிக்காரனைக் கடந்து ஓட வெளிக்கிட்டான். அவனுக்கு அப்படி ஓடக்கூடாதென்று நல்லாகவே தெரியும். இருந்தாலும் அவன் கால்களுக்கு அது தெரிவதாய் இல்லை. இவன் பத்து யார் தூரம் ஓடியிருக்கமாட்டான். அதற்குள், “ஒன்ன கொட்டியெக், ஒன்ன கொட்டியெக்” என்று கத்தியவாறு ஆமிக்காரன் பாய்ந்தான்! அவனது குரல் கேட்டு, ரோட்டில் போய்க்கொண்டிருந்தவர்கள் உஷாரானார்கள். தியாகுவுக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்காரன் ஒருவன் அவன்முன்னேபோய், அவனை மோதுவது மாதிரி வெட்டி மடக்கிப்பிடித்தான். மோட்டார் சைக்கிளை ஒருபுறமாகச் சாத்திவிட்டு தனது ஹெல்மெட்டை எடுத்து, தியாகு வின் மூஞ்சியிலும் தலையிலுமாக விளாசினான். தியாகு குனிந்து தலைக்குமேலே கைகளைத் தூக்கியவாறு அடிகளை வாங்கினான். இதற்குள் அவனைச் சமீபித்த ஆமிக்காரன் துவக்குச் சோங்கினால் அவன் நெஞ்சிலும் மூஞ்சியிலும் அடிவயிற்றிலுமாகக் குத்தினான். அவன் முதன்முதலாக நோவென்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டிருந்தான். முகத்திலிருந்து இரத்தம் வழிந்தது. சொண்டு பிளந்து துருத்துவதுபோலிருந்தது. இதற்கிடையில் “ஒன்ன கொட்டி யெக், ஒன்ன கொட்டியெக்” என்று கூக்குரல் இட்டவாறு ரோட்டால் சென்றவர்களெல்லாம் அவனைச் சூழ்ந்து காலாலும் கையாலும் உதைத்தனர், அடித்தனர். கையில் அகப்பட்டவற்றாலும் எடுத்து மொத்தினர். ‘இதைத்தான் ஆட்களை ஆட்கள் அடித்துக் கொல்லுறது’ என்று அம்மா சொன்னாவா? 83இல் இப்படித்தான் தமிழர்கள் எல்லோரும் அடித்துக்கொல்லப்பட்டனரா? அந்த நேரத்திலும் தியாகுவுக்கு அவை மின்னல் கீற்றுக்களாய் மின்னி மின்னி ஓய்ந்தன. தொடர்ந்து உதையும் அடியும் விழுந்துகொண் டேயிருந்தன. அவனால் தலை உயர்த்த முடியவில்லை. இந்நேரத் தில் நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண்மணி கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தாள். அவன் அம்மாவின் சாயலையுடைய அவள் ஏதோ ஆதரவுகாட்ட வருகிறாளோ என்ற, சூழலுக்கு மாறான நப்பாசை அவனுக்குள் கசிந்தபோது, வந்தவள் “கொட்டி திரஸ்த வாதயா, மறண்டோன!” என்று கத்தியவளாய், கையில் இருந்த குடையால் அவன் மூஞ்சியில் குத்தினாள். அது, அவனது இடது கண் புருவத்தின் மேலால் சறுக்கிக்கொண்டுபோனது. அவளின் குடையின் முனை உடைந்துசிதறியது. அவன் இன்னும் தலை உயர்த்தவில்லை. அவனது அடையாள அட்டை நிலத்தில் கிடந்தது. அதை எடுக்கலாமா என்ற வெற்றுணர்வு ஓடியபோதும் அது முடியாதென்பது அவனுக்குத் தெரியும். அவன் அடையாள அட்டைமேல் பலர் ஏறி உரசிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அது மயக்கமா? அல்லது அவன் சாகப்போகிறானா? அதைப்பற்றி அறிய அவன் கனகாலமாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது இப்படி எதிர்பாராதவிதமாக வந்து சம்பவித்திருக்கின்றதா? இப்படித்தான் சாகிறதா? அவனுக்கு எல்லாமே கைகடந்துபோய்க் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. அவன் ஒரு சிறு துவாரத்திற்குள் போக முனைவதும் பின்னர் ஏதோ ஓடிச்சென்று பொறுக்க, பின்னடைவதுமான நிலையை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவன் வேகமாக முழுமன ஒப்புதலோடு அந்தத் துவாரத்துள் புக முற்படும்போது அந்த முடிச்சு வந்து பொறுத்தது. அந்த முடிச்சுப் பொறுக்கும்போதுதான் அவனுக்கு அந்தரம் ஏற்பட்டது. தண்ணீருக்குள் அமிழ்ந்துபோகும் அந்தரம். கையைக் காலை அடிக்கும் அந்தரம். அவனை அந்தத் துவாரத்துள் நுழையவிடாமல் தடுக்கும் முடிச்சு என்ன? அவனுக்கு அந்த நிலையிலும் அது மங்கலாக மிதந்துவந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் அவர்கள் ஊடாட்டத்தால் சோபைபெற்றுத் தெரியும் அவன் வாழ்ந்த வீடும், களைத்துப்போய் முற்றத்து வேம்பின் கீழ் கிடக்க, காற்றள்ளி வரும் அந்தச் செம்மண் வாசனையுமாக அந்த முடிச்சுத் திரண்டு வந்து, வந்து அவனை அந்தத் துவாரத்தினுள் நுழையவிடாமல் தடுத்தது… அம்மா…
தியாகுவை இப்போது அடித்துக்கொண்டும் உதைத்துக் கொண்டும் ஆமி ட்றக் அருகே இழுத்துக்கொண்டுபோகிறார்கள். அவன் நடக்கமுடியாமல் இழுவுண்டுபோகிறான். அவனுக்கு நினைவு தப்பி எல்லாமே இருண்டுபோகிறது. ஒரே வீச்சாக அவன் அத்தத் துவாரத்தை நோக்கி விரைகிறான். ஆனால், அந்த முடிச்சு அவனை விடவில்லை. அந்த முடிச்சு அங்காலும் இல் லாமல் இங்காலும் இல்லாமல் இடையில் பொறுத்துக்கொண்டிருக் கிறதுபோல…
அவன் தண்ணீருக்குள் அமிழ்கிறான். மூச்சடங்கும் அந்தர நிலை. கையையும் காலையும் போட்டு உதறுகிறான். எதையாவது எட்டிப்பிடிக்க வேண்டும் போன்ற அந்தர நிலை. அவன் கண்ணுக்கு ஏதோவொன்று படுகிறது. அதை அவன் பாய்ந்து ஒரே அலக்காகப் பற்றிக்கொள்கிறான். அதை அவன் பற்றிக்கொண்டதுதான் தாமதம், அவன்முன்னே நின்ற அத்தனை சனங்களும், “ஒன்ன கொட்டியெக், ஒன்ன கொட்டியெக்” என்று சத்தமிட்டவாறு, அவன் பற்றிப் பிடித்ததை கத்திகொண்டு வெட்டுகின்றனர். வெட்டி, வெட்டி ஒரேயடியாகத் தம்மிலிருந்து அவனையும், அவன் பற்றியதையும் தள்ளிவிடுகின்றனர்.
அவன் வெட்டப்பட்ட பகுதியோடு அள்ளுப்பட்டுச் செல்கி றான். தன்னையறியாத நிம்மதியோடு அவன் மிதந்துகொண்டிருந்த போது, அவன் தான் பற்றிப்பிடித்திருப்பதைப் பார்க்கிறான். அவன் கண்கள் ஆச்சரியத்தால் விரிகின்றன. அது, அவனை அந்தத் துவாரத்தினுள் நுழையவிடாது தடுத்த முடிச்சுப் போல் தெரிகிறது.
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.