(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாலையில் இருந்து தொடர்ந்து இரவு முழுவதும் பாட்டம் பாட்டமாகப் பெய்து அடம்பிடித்த பெருமழை கிழக்கு வெளுக்க முன்னரே அடங்கியிருந்த போதும் வானம் வெளுக்கவில்லை. மழை இருட்டு அப்பிக்கிடக்கின்றது. பிரகாசமற்ற வானத்தில் மழை மேகம் கறையாய்ப் படிந்து கவிழ்ந்துள்ளது.
விடிந்து வெகு நேரமாகிவிட்டது! இலை உதிர்ந்து கள்ளிக்கம்பாய் நீட்டிக்கொண்டிருக்கும் றப்பர் மரங்கள் யாவும் ஈரம் சொட்டிக்கொண்டிருக் கின்றன. கான்கள், குட்டைகள் யாவும் நிரம்பிப் புதுவெள்ளம் பாய்கின்றது. கலங்கிப் பாயும் புதுவெள்ளத்தில் தென்னை மட்டை முதற்கொண்டு தகரப்பேணி வரை துடுப்பில்லாமல் இனாமாக நீந்திக்களித்துக் கொண்டிருக்கின்றன.
இராமையா புரண்டு படுத்தான். குளிர், உடம்பை ஊசியாய்த் துளைத்து எடுத்தது. உடம்பு முழுவதையும் மறைக்க அந்தத் துண்டுக்கம்பளியால் முடியவில்லை. தலைப்பாகத்தை மறைத்தால் கால்பகுதி அடங்காது சில்லிட்டது. கால்களுக்கு ஆதரவாக கொஞ்சம் இழுத்துவிட்டால் நெஞ்சுக்கு மேலே…கழுத்தோடு…காதுகள் குடையச் சில்லிட்டுத் தொண்டை கம்ம… காதுகளில் கம்பிகளைச் செருகுவதுபோல…சிவ…சிவா…பற்கள் கிட்டித்து வெடவெடத்து நடுங்குகின்றன. கீழே விரித்திருந்த படங்குத் துண்டுவேறு ஈரம் பொசிந்த தரையில் ஊறி உடலில் நமைச்சலை ஏற்படுத்துகின்றது. “இனியும் படுக்க முடியாது. எழுந்திக்க வேண்டியதுதான். எழுந்து என்ன செய்வது…அடுப்படியில் குந்திக் குளிர் காய்வதற்கும் “…வேலை…
சிகப்பியைப் பார்த்தான். அவள் எவ்வித சிரத்தையுமே இல்லாது படுத்துக்கிடந்தாள். முதிர்ந்து தளர்ந்த உடம்பு சுரணையற்றுக்கிடந்தது.
முன்பெல்லாம் குளிர் என்றால் இப்படியா…? அப்படியே சிகப்பியை அணைத்து…அணைத்து…எத்தனை இன்பமாக அவள் இப்பொழுது அவனுடைய சிகப்பி மட்டுமல்ல தொங்கவீட்டு பாட்டி…அவனும் தொங்கவீட்டு பாட்டாவாகிவிட்டான். காலம்தான் எப்படி ஓடிவிட்டது.
அவன் நாட்டிய ஒட்டுமரங்கள் யாவும் தண்ணீர் ஊற்றாக வாளிவாளியாகப் பாலைத் தருகின்றன.
அது பங்குனி மாதம். இலையுதிர் காலம். பங்குனி மாதங்களில் றப்பர் தோட்டத்தில் வேலை கம்மியாகிவிடும். இலையுதிர்ந்து தளிர்கொழுந்து; விடுகின்ற காலமாதலால் கற்பகத்தருவாகப் பாலைச்சுரந்து நிற்கும் பட்டைகள் ஊமைகளாகிவிடுகின்றன. எனவே பால்வெட்டுக்கு ஓய்வு கொடுத்து விடுவார்கள்.
இந்த மாதம்தான் சீக்கில்லாமல் வேலை செய்தவர்களுக்கு ‘போனஸ்சோடு’ கூடிய வருட விடுமுறை கிடைக்கும். மற்றவர்களுக்கு ஏதோ இல்லையென்று சொல்லாமல் இரண்டொரு நாள் வேலை கிடைக்கும். இது அரிசி ரேசனுக்குத்தான் சரியாக இருக்கும்.
இந்த வருடம் நல்ல மழை! பால்வெட்டுகாரர்களுக்கு சோதனைக்கு மேல் சோதனையாகப் போய்விட்டது. இரண்டு மாதங்களாக ஒழுங்காக வேலை கிடைக்கவில்லை. கான்கட்ட, மருந்தடிக்க ….. மைபூச… என்று இருந்த சில்லறை வேலைகளையெல்லாம் தேடி… தேடிக்கொடுத்தும் தலைக்கு மூன்று நாட்களுக்குமேல் கிடைக்கவில்லை.
என்ன செய்வது? நாலைந்து பேர் இரகசியமாக நாட்டுக்கு வேலைக்குப்போய் வந்தார்கள். என்ன வேலை – எங்கு வேலை என்பதெல்லாம் அவர்களுக்குள்ளேயே பரமரகசியமாக இருந்தது. இன்னும் நாலு பேருக்குத் தெரிந்தால் வேலை நாள்கள் குறைந்துபோய் விடும் என்பது மட்டுமல்ல! ” எங்களுக்கும் வேலை கொடுங்க” என்று இவர்கள் கேட்டுக்கொண்டு நின்று குழையும் அழகிலேயே நாட்கூலி குறைந்துவிடும். பின்னர் நாளொன்றுக்கு ஆறு ரூபாயும் பகல் சாப்பாட்டுக்கு சாப்பாடும் என்றிருக்கும் வேலை, ஐந்து ரூபாதான். சாப்பாடு கிடையாது என்றாகிவிடும்.
அப்படியொரு போட்டிச்சந்தை நாட்டுக்கூலி வேலை!
தோட்டத்தில் செக்ரோலில் பதிவு உள்ளவர்களுக்கே வேலையில்லை. ராமையா போன்ற பென்சன் எடுத்த கிழடுகளை எங்கே கவனிக்கப்போகின்றார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோட்டத்து இளைஞர்களுக்கு ஒரு யோகம் அடித்தது. தொடர்ந்து பெய்கின்ற மழை தோட்டத்தை ஊடறுத்து நாட்டிற் செல்லும் தார்ப்பாதையை அடித்துக்கொண்டு போய்விட்டது.
றோட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு மேல் இருக்கும் வளைவு சற்றுப் பயங்கரமானது. கவனமில்லாமல் வந்துவிட்டால் வாகனங்கள் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே, பள்ளத்திற் தலைகுப்புறத் தோப்புக்கரணம் போட்டு நிற்கவேண்டியதுதான். இப்படி வருடத்தில் நாலோ ஐந்தோ நடந்து தோட்டத்து வாண்டுகளுக்குக் காட்சி கொடுக்கத் தவறவில்லை!
முடக்கில் அமைந்திருக்கும் பாலம்தான் இப்படியென்றால் பாலத்திற்கடியில் ஓடும் சிற்றாறு எப்பொழுதுமே வஞ்சகம் செய்தது கிடையாது. நிதானமாக நடந்துகொள்ளும். வருடம் முழுவதும் அதன் கருணையினால்தான் தோட்டத்தில் நீர் விநியோகம் சீராக நடந்து கொண்டிருக்கின்றது.
கோடையின் கொடுமை அகோரமாகத் தாண்டவமாடினாலும் கண்ணாடி போன்று தெளிந்த நீர் ஸ்படிகமாக ஓடிக்கொண்டிருக்கும். வேலை முடிந்து வீடு திரும்பும் ஆயாசத்தில் அப்படியே இரண்டு தடவை உடம்பை நனைத்துவிட்டால் போதும் உடம்பில் புதுத்தெம்பு புகுந்துவிடும். களைப்பு …ம் ….. போன இடம் தெரியாது.
தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் மட்டுமல்ல பால் ஸ்டோரே இதன் தயவில்தான் குளிர்ந்துபோய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கொட்டும் மழையா? நாலு டிவிசன் அழுக்கையும் சுமந்துகொண்டுபோய் பள்ளத்தில் ஆற்றில் சேர்த்துவிட்டு இரண்டே நாட்களில் கட்டுக்கடங்கி நிதானமாக ஓடிக்கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட குணம் கொண்டதுதான். ஆனால் இம்முறை பெய்த பெருமழைப் போக்கை மாற்றிவிட்டது. மேற்கிலிருந்து வந்த வெள்ளம் கரை புரண்டு …. ஓடி… பெருக்கெடுக்க மண் சரிந்து…அப்படியே வாரிச்சுருட்டி… விடியற்காலையில் பார்த்தபோது றோட்டுப் பிள்ளையார் கோயில் முடக்குப் பாலத்தைக் காணவில்லை. இரண்டு கரைகளிலும் ஒன்றையொன்று பார்த்தபடி பஸ்கள் நின்றுவிட்டன. கிராமசபை உறுப்பினர் எம்.பி. வீட்டிற்கு ஓடினார். எம்.பி. வீட்டில் இருந்து டெலிபோன் ஓடியது!
மறுநாளே பாதை புனரமைப்பு வேலை ஆரம்பமாகியது. மண் நிரப்ப, கல் உடைக்க இப்படிப் பல வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன.
இராமையா கிழவன் தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு அங்கேபோய் நின்றான். ஓவசியர் ஆட்களை வாட்டசாட்டம் பார்த்துப் பொறுக்கி எடுத்தார். “இந்த றோட்டெல்லாம் இராஜா கூனி அடித்து நான் வெட்டியதுதானுங்க” இராமையா கிழவன் முதலில் திறமையைக்கூறி நின்றான். காலையில் வெறும் சாயத் தண்ணிதாங்க…பின்னர் வறுமையைக் கூறிக் கெஞ்சி நின்றான். ஹூம்… வேலை கிடைக்கவில்லை.
நான்கு நாட்களின் பின்னர் பொறுக்கி எடுத்த ஆட்களுக்கே மண்விழுந்தது. வேலை செய்யாது விட்டாலும் சம்பளப்பட்டியலில் இடம்பிடிக்க நற்சாட்சிக் கடிதங்களுடன் வந்தவர்களைச் சேர்க்க இவர்களில் பத்துப்பேரை நீக்கவேண்டியதாயிற்று.
இடுப்பில் கம்பாயத்துடன் மண்சுமந்து பாவையர் சுப்பவை சருக்கு’ அழகு காட்ட…செக்ரோலில் பேர் விழுந்தது.
தோட்டத்தில் ஓய்வு மாதம். மழை வேறு! இரவு பகலாக சிங்கு… சிங்குன்னு ஓடிக்கொண்டிருக்கும் றப்பர் ஸ்டோர் வேறு அடங்கிப்போய்க் கிடக்கின்றது. மழை விட்டபாடாக இல்லை. ஒட்டுப் பாலாக நீண்டுகொண்டிருக்கின்றது.
“என்ன இந்த வருஷம் இப்படி மழை, வானம் பொத்துக்கிட்ட மாதிரி”. “ஆமா ஒரு ஊரு அழிஞ்சாத்தான் நிற்கும்போல! மாரிமுத்துவும் இராமையாவும் நேற்று ஒத்த கடையிலிருந்து திரும்பும்போது கதைத்துக்கொண்டு வந்தார்கள்.
இருவரும் வயது ஐம்பத்தி ஐந்தைத் தாண்டிவிட்டபடியால் பென்சன் எடுத்துவிட்டார்கள். இராமையாவுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள மனைவி சிகப்பி மட்டுமே இருக்கிறாள். ஆனால் மாரிமுத்துவிற்கு அப்படி அல்ல! மகள் என்றும் மருமகன் என்றும் பேரன் பேத்தி என்றும் பலர் உள்ளனர். ஆனால் கவனிப்பதுதான் கிடையாது.
இன்னமும் இவன் கையைப் பார்ப்பவர்களும் உண்டு. வருகிற பென்சன் கால்வயிற்றுக் கஞ்சிக்கே போதாது! எனவே கிடைத்த சில்லறை வேலைகளைச் செய்து காலத்தை ஓட்டிவருகின்றனர்.
தோட்டத்தில் பதிவு பெற்றவர்களுக்கே வேலையில்லை. புதிதாக வேறு ஐம்பது ஏக்கர் காணி இல்லாத கிராமத்தவர்களுக்கு பிரித்து வழங்கப் போகின்றார்கள் என்ற செய்தி உலாவி வயிற்றில் புளியைக் கரைத்தது.
வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயிறு இருக்கின்றதே!
இராமையாவும் மாரிமுத்துவும் நாலு மைல்கள் நடந்து டவுணுக்குப் போனார்கள். புதிதாக மில்கட்டும் இடத்திற்குப்போய் எடுபிடிவேலை கிடைக்குமா என்று கேட்டுப் பார்த்தார்கள். முதலாளி கண் டாக்டரைப் பார்க்கச் சொன்னார். கண்ராக்டர் கையை விரித்தார்.
பவுடர் பூச்சுக் கலையாத பெண்கள் அலுங்காமல், குலுங்காமல் வேலை செய்தனர். இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வரும்போது மழைவேறு பிடித்துக்கொண்டது. தெப்பமாக நனைந்து விட்டார்கள்.
“என்னண்ணே காலையில் கழுவிவிட்ட மாதிரி வானம் கெடந்திச்சி. இப்ப… சனியன் இப்படி ஒரேயடியாக பெய்யுது”
“சுள்ளுன்னு வெயில் அடிக்கிற நேரமே நினைச்சேன். எப்பதான் மழைவிடப் போவுது…?”
குன்றுகளையும் மேடுகளையும் மறைத்து நிரை நிரையாக அணிவகுத்து வளர்ந்து நிற்கும் பால் மரக் காட்டினூடே அமைந்த ஒற்றையடிப்பாதை வழியாக வீடு திரும்பினர்.
“ஈன ஜென்மம் எடுத்தேனே ஐயனே என்னைய ஏன் படைத்தாய்” நாட்டில் லப்பா வீட்டில் போட்ட ‘கள்’ தலைக்கேற தட்டுத்தடுமாறியபடி பிச்சைக் கிழவன் பாடிக் கொண்டு போவதைக் கண்டு இருளில் பேச்சை அடக்கினர்.
காலைப்பால் அந்தி வெட்டு என்று நாளொன்றுக்கு இரண்டு பேர் போட்ட தோட்டம்தான் இன்று இப்படியாகிவிட்டது. மழைவேறு கொட்டிக்கொண்டு சோதனைப்படுத்துகின்றது.
அன்று மாலை தலைவர் வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது. குடைகள் திண்ணைவரை உள்ளே போய்விட தலைபொத்த மட்டைகளும் றப்பர் சீட்டுகளும் வெளியே திண்ணைச் சுவற்றில் சாய்ந்து அழுதுகொண்டிருக்க, தலைவர் ஆலோசனைக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். “இதுக்குத்தான் மாச சம்பளம் வேணும்னு கேட்டுப் போராடினோம். காட்டிக்கொடுத்துப் புட்டானுக…” தொண்டர் தலைவன் முத்து ஆத்திரமாகக் கூறினான்.
“இப்ப அதெல்லாம் பேசிப் பயனில்லை. நடக்கவேண்டிய காரியத்தைப் பாருங்க” சிவனு காரியத்தில் கண்ணாக இருந்தான். எல்லோரும் ஆமாம் போட்டனர்.
கூட்டத்தில் எடுத்த முடிவோடு தலைவர் கணக்குப்புள்ளையைச் சந்தித்தார். அந்த வருட – எஸ்டிமேட்டில் புத்தாகச் சில்லறை வேலை ஒன்றும் இல்லாதபோதும் றப்பர் மரங்களுக்கிடையில் கொக்கோ நட, வாரத்தில் பெண்களுக்கு இரண்டு நாள் ஆண்களுக்கு மூன்று நாள் கொடுப்பது என்று முடிவாகியது.
இந்த முடிவைத் தலைவர் பெருமையோடு கூறினார். மாத இறுதியில் மாவட்டக் கமிட்டித் தேர்தல்வேறு நடைபெறவிருக்கின்றது. தலைவர் அதற்கு நிற்கிறார். எனவேதான் விட்டுக்கொடுக்காமல் பேசிவந்தார்.
“எங்களுக்கு ஒண்ணும் இல்லியா…?” இராமையா, மாரிமுத்து இன்னும் பென்சன் எடுத்தவர்கள் கேட்டார்கள்.
உங்களுக்கு வழி பொறந்திருக்கு. நம்ம எட்டாம் நம்பர் பழைய மரம் இருக்கல்லியா; அதை அடுப்புக்கு வெட்டப்போறாங்களாம். யார் விறகிற்கு ஐம்பது சதம் கைகாசுக்கு வெட்டுவீங்களாம்…”
“ஐயோ இது அநியாயம்! முன்பு யாருக்கு ஒரு ரூபாய்க்கு வெட்ட முடியாதுன்ன மரமாச்சே…. அதுவும் வரக்கட்டு… அங்கு லொறி கறுத்த வண்டிகூடப் போக முடியாதே!” முத்து மீண்டும் நியாயம் பேசினான்.
“இந்தா முத்து தொரை சொன்னதைத்தான் நான் வந்து சொல்றேன்…எனக்குமட்டும் தெரியாதா?…தலைவர் தன் நியாயத்தைக் கூறினார்.
“தலைவர் சொல்றது நியாயம்”- யாரோ கூட்டத்தில் ஒத்துப்பாடினார்.
“மண்ணாங்கட்டி ஞாயமம். மொக்குப்பத்தி முடிச்சி விழுந்துபோன நார்மரம்… இந்த கிழடுகளால ஒரு மரத்தைக்கூடத் துண்டு போட முடியுமா? இன்னொரு இளைஞன் எடுத்துக்கூறினான்.
“இந்தாப்பா…. விருப்பம்னா செய்ய வேண்டியதுதான். இதுல ஒன்னும் வற்புறுத்தல் கிடையாது”. தலைவர் ஒருபடி மேலே போனார்.
ஏன் இந்த கல்லுகட்ட, மண்பால் எடுக்க இப்டி ஏதாவது சில்லறை வேலை கேட்டுப்பாக்கிறதுதானே ” இளைஞன் விடவில்லை.
“சரி… சரி…எங்க தலைவிதி இப்ப….நீங்க ஏன் சண்டை போடுறீங்க…” மாரிமுத்துக் கிழவன்தான் அமைதிப்படுத்தினான்.
கிழவர்களுக்கு ஏதோ வேலை கிடைத்த திருப்தி. இதுவும் நழுவிப் போய் விட்டில் என்ன செய்வது?
“எங்களால் முடியாது. நாளொன்றுக்கு ரெண்டு இளந்தாரி சேர்ந்தாலும் ஐஞ்சி ரூபாவுக்கு வெறகுவெட்ட முடியாது”. இளைஞர்கள் பின்வாங்கி விட்டனர். வேறு வேலை கிடைக்கும் என்ற தெம்பு அவர்களுக்கு!
நாலு டிவிசனுக்கும் கடைசித் தொங்கலில் அமைந்திருப்பதுதான் எட்டாம் நம்பர் பழையமலை. கல்லுக்காடு இடை இடையே பெரிய பெரிய பழைய மரங்கள். எத்தனையோ மலைகளில் பழைய மரங்கள் அழிக்கட்டுப் புல்லுமலைகள் கொழுத்தப்பட்டு, புதிய ஒட்டுமரங்களை உண்டாக்கி விட்டார்கள். ஆனால் இது என்றும் பழைய மலையாகவே உள்ளது!
புதிதாக வெட்டுப்பழகும் அத்தனை பேரும் இங்கேதான்! பெரிய மரங்கள். எட்டிய மட்டும் கங்கு வெட்டில்’ பட்டை சீவிப் பால் உறியப்பட்ட மரங்கள்! இன்று பட்டையே இல்லாது நெஞ்சைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. விலா எலும்புகளின் தோற்றம்.
தன் பாலை வாளி வாளியாக வழங்கிவிட்டு இன்று ஸ்டோர் அடுப்பு விறகிற்குத் தயாராக நின்று கண்ணீர் வடிக்கும் பால்மரக்காடு அது.
ஆம் எட்டாம் நம்பர் பழைய மலை! இராமையாக் கிழவன் நீண்ட நாட்களாக அங்கே பால் வெட்டியுள்ளான். தனக்குத் தொழில் கொடுக்கும் ஒவ்வொரு மரங்களையும் தனது இதயத்தில் இருத்தி நேசித்துள்ளான்.
சிலுசிலுவென்றிருக்கும் அந்த எட்டாம் நம்பர் மலையில் அவன் சிகப்பியை சந்தித்த நாள்கள் இப்பொழுதும் நெஞ்சில் பாலாக ஊறுகின்றதே.
சிரட்டை நிறைந்து வழியும் பாலைச் சேகரிக்கும் பொழுது அவை வெறும் மரங்கள் மட்டுமல்ல!! அவனை வளர்க்கும் தாய்!! அவனை வாழ்விக்கும் தெய்வம். இந்த உணர்வு இன்றும் அவனை விட்டு நீங்கவில்லை!
இப்பொழுது அவைகளை வெட்டிச்சாய்த்து அறுத்து அறுத்து நெஞ்சுமுட்டும் ஏற்றத்தில் உருட்டித் தள்ளிக்கொண்டு வந்து அடுக்க வேண்டும்.
ஒரு யார் விறகிற்கு கூலி ஐம்பது சதம். அதற்காக அறுக்கவேண்டும். சிகப்பி எழுந்து தேநீர் தயாரித்துக் கொடுக்கிறாள். இராமையாக் கிழவன் படுக்கையில் அமர்ந்தபடியே தேநீரைப் பருகிறான். பின்னர் சிறிதுநேரம் அடுப்படியில் இருந்து குளிர் காய்ந்துகொண்டிருக்கிறான்.
“ராமையா அண்ணண் புறப்படலியா…?” அழைத்தபடியே வந்தான் மாரிமுத்துக்கிழவன். தோளில் கோடரி இருந்தது.
“இதோ வந்திட்டேன் மாரி அரம் வச்சிருக்கியா?”
“ஹூம், கிடையாது. தண்ணிக்கல்லு இருக்கு… தீட்டிக்குவோம்”. வானம் பிரகாசமாக இல்லை. மழைக்குறி.
முதுமை அவர்கள் உடம்பில் கனிந்திருந்த போதும் உழைப்பு என்ற உறுதி. நம்பிக்கையைக் கொலுவேற்ற தீரத்துடன் அவர்கள் நடந்துகொண்டிருக்கின்றனர். மழை பொசிந்துகொண்டு வந்தது.
இலையை உதிர்த்துக் குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டு இளமைபோய் முதுமையில் சோர்ந்து நிற்கும் தங்களை வாழ்வித்த அந்தப் பால் மரக்காட்டினை அழிக்க அவர்களுக்கு மனம் இல்லை. இருந்தாலும் வேறுவழி…?
மரங்களுக்கு மட்டுமா அந்நிலை…இத்தனை காலமும் உழைத்து…உழைத்து இன்று உடலில் வலுவற்ற நிலையிலும்… தங்கள் நிலைமை அவர்களுக்கு நன்கு புரிந்தது.
அவர்கள் வேகமாக நடக்கின்றனர்.
– சமர், அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.