கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,957 
 
 

ஜஸ்டினின் பள்ளிக்கூடம்

ஜஸ்டின், டீச்சரின் முன்பு கை கட்டி நின்றிருந்தான். அவனது நோட்டு டீச்சரிடம்

இருந்தது. ‘டி.ஜஸ்டின் பெர்லின் ராஜ், 3-ம் வகுப்பு, பி- செக்ஷன்’ என நோட்டின் மீது எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது ஒட்டப்பட்ட லேபிளில் இருந்த பொம்மைக்கு மீசை, தாடி வரைந்து இருந்ததைக் கவனித்தான். டீச்சரின் கையில் இருந்த குச்சி ஜஸ்டினைப் பயமுறுத்தியது. ஆனால், அவன் பயந்த மாதிரி டீச்சர் கடைசி வரைக்கும் லேபிளைப் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றிக் கேட்கவும் இல்லை. நோட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். இவனுக்கு உள்ளுக்குள் லேசான பயம்.

இந்த டீச்சருக்கு ‘கண்ணுருட்டி’ எனப் பெயர் வைத்தவன் ஜஸ்டின்தான். கையில் குச்சியை வைத்துக்கொண்டு புறங்கையைத் திருப்பச் சொல்லி அடிக்கும்போது, கண்கள் இரண்டையும் உருட்டி உருட்டி மிரட்டுவார். உதடுகள் சத்தமே இல்லாமல் எதையோ முணுமுணுக்கும். அடி மட்டும் இடியாக விழும். இப்போது கண்ணுருட்டி டீச்சரின் கண்களைப் பார்த்தான். ஒன்றும் உருட்டிய மாதிரி தெரியவில்லை. ஆனால், ரொம்பவும் யோசனையாக நோட்டைப் பார்த்தாள். மற்ற பையன்கள் ‘சிக்கிட்டல்ல’ என்பதுபோல் பழிப்புக் காட்டினார்கள். இத்தனைக்கும் இவன் ஸ்கெட்ச் பேனாவால் கலர் அடித்து வரைந்திருந்தான்.

நேற்று, ‘எல்லாரும் அவங்கவங்க வீட்டை வரைஞ்சு எடுத்துட்டு வாங்க’ என டீச்சர் சொன்னார். ராத்திரி முழுக்க இதே வேலையாக இருந்து வரைந்து எடுத்து வந்தான். ஆனால், ஏனோ டீச்சருக்குப் பிடிக்கவில்லைபோல. இறுதிக்கும் இறுதியாக டீச்சர் நோட்டை ஜஸ்டினிடம் காட்டி, “இது என்ன?” என்றார்.

“எங்க வீடு டீச்சர்.”

“எது… இதுவா?”

“ஆமா டீச்சர்.”

ஜஸ்டின் திருத்தமாகப் பதில் சொன்னான். குதிகாலை மேலே உயர்த்தி நோட்டில் வரைந்திருக்கும் வீட்டை ஒருமுறை பார்க்க முயற்சித்தான். உயரம் போதவில்லை. அவனுக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டை வீடெனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்? டீச்சர் மேஜையில் இருந்த வேறு ஒரு பையனின் நோட்டை எடுத்துக்காட்டி “இது என்ன?” என்றார்.

“பிரகாஷோட வீடு டீச்சர்.”

“ஆனா, நீ வரைஞ்சிருக்குறது வீடு இல்ல, தெரியுதா?”

ஜஸ்டினின் நோட்டை அவனது முகத்துக்கு நேரே டீச்சர் திருப்பிக் காட்டினார்.

“இது எங்க வீடுதான் டீச்சர். லீவு விட்டதுல இருந்து நானு, எங்க அம்மா, அப்பா எல்லாரும் இந்த வீட்லதான் இருக்கோம்.”

ஒரு பெரிய மௌனத்தைத் தொடர்ந்து பெருமூச்சுவிட்ட டீச்சர், “சரி, போயி உக்காரு.” என்றார்.

அப்புறம் எங்கே இருந்து பையன்கள் பாடம் படிக்க? அந்த வகுப்பு முடிவதற்காகக் காத்திருந்தவர்கள், டீச்சர் வாசற்படியைத் தாண்டியதும் தாவிப் பறித்தார்கள் ஜஸ்டினின் நோட்டை. ‘எங்கள் வீடு’ என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு வரையப்பட்டு இருந்தது.

படத்தைப் பார்த்ததும் பையன்களுக்கு குஷி. ஆளாளுக்கு ஒரே சிரிப்பு. ஒருத்தன் மூக்கைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.

“ஜஸ்டினு… ஒனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லடா. காலையில எந்திரிச்சதும் அப்படியே உக்கார்ந்துக்கலாம்.”

“இவன் புளுவுறான்டா… இந்த மாதிரி எங்க தெருவுலகூடதான் ஒரு கக்கூஸ் இருக்குது.”

வகுப்பின் அந்தப் பக்கமாக அமர்ந்திருந்த ஒரு சிறுமி ஓடி வந்து நோட்டை எட்டிப்பார்த்து சிரிப்போடு திரும்பி ஓடி, மற்றவர்களிடம் கதை சொல்லத் தொடங்கினாள்.

“போடா… கக்கூஸைப் போயி வீடுங்குற?”

பல்முனைத் தாக்குதல் அவனைப் பதற்றப்படுத்தியது.

“எது கக்கூஸு… இது எங்க வீடுறா.”

“வீட்டுக்குள்ளதான்டா கக்கூஸ் இருக்கும். கக்கூஸுக்குள்ளயா வீடு இருக்கும்?”

“எல்லாம் இருக்கும். வேணும்னா, எங்க வீட்டை வந்து பாரு.”

“நாத்தம் அடிக்காதா?”

“எங்க உக்கார்ந்து சாப்பிடுவ?”

நோட்டைப் பிடுங்கிப் பைக்குள் வைத்துக்கொண்டான். இனிமேல் இவர்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லப்போவது இல்லை என்பதுபோல் எல்லோரையும் முறைத்துப் பார்த்தான். கொஞ்சம் விட்டால் ஜஸ்டின் நிச்சயம் அழுதுவிடுவான்.

உண்மையில் அவனுக்கும் குடி வந்த இந்த மூன்று மாதங்களில் அவனது புதிய வீட்டைப் பிடிக்க வில்லை. பக்கத்தில் வேறு எந்த வீடும் இல்லாமல், விளையாட்டுத் துணைக்குக்கூட யாரும் இன்றிப் பெரிய துயரமாக இருந்தது. ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும்தான் வீடு ரொம்பப் பிடித்துவிட்டது. அதிலும் அப்பா, வாழ்க்கையில் தான் மிகப் பெரியதாகச் சாதித்துவிட்டதாக நம்பினார். புது வீட்டுக்கு வந்த பிறகு குடித்துவிட்டுக் கண்ட இடத்தில் விழுந்துகிடக்காமல், பொறுக்கிய பேப்பர் மூட்டையோடும் குவார்ட்டர் பாட்டிலோடும் வீட்டுக்கே வந்துவிடுகிறார். இதில் அம்மாவுக்குப் பெரிய மகிழ்ச்சி. இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் அம்மா முகத்தில் மலர்ச்சி தெரிகிறது. அப்பாவோ, கிட்டத்தட்ட தினமும் இந்த வீட்டைக் கண்டுபிடித்த தனது சாமர்த்தியம்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஜஸ்டினின் புது வீடு

மஞ்சள் பூக்கள் பூத்து உதிரும் அடையாறு காந்தி நகர் நிழற்சாலை ஒன்றில், இரண்டு எதிர்எதிர் அடுக்ககங்களுக்கு இடையில் இருந்தது ஜஸ்டின் பெர்லின் ராஜின் வீடு. மாநகராட்சியின் நவீன கட்டணக் கழிப்பறை மற்றும் குளியலறை. வாசல் சுவரின் மேலே மஞ்சள் பெயின்ட் அடித்து கறுப்பு மையால் அழுத்தி எழுதி இருந்தார்கள். இரண்டு குளியல் அறைகள். நான்கு கழிப்பறைகள். எல்லா அறைகளிலும் பைப் மட்டும் இருக்கின்றன. இன்னும் திறப்பு விழா நடக்காததால், தண்ணீர் இணைப்பு தரவில்லை. இதன் பொருட்டு அரசாங்கத்தின் மீது தேவசகாயத்துக்கு நிறையக் கடுப்பு இருந்தது.

“என்னாத்த …… புடுங்குன கெவர்மென்ட் நடத்துறானுவ? கக்கூஸ் கட்டுனவனுவ தண்ணி வுட வேணாம்? வர்றவன் குண்டி கழுவ எங்கன்னுட்டுப் போவான்?”

“சத்தம் போட்டுப் பேசாதங்கறேன்… நாமளே திருட்டுத்தனமா இருக்கோம். இதுல சட்ட நியாயம் வேற.”

“என்னாடி திருட்டுத்தனம்? எவன் வீட்டை உடைச்சுத் திருடினேன் இப்போ? கக்கூஸைக் கட்டிவெச்சு அதுக்கு ஒரு கதவும் போடாம, திறப்பு விழாவும் நடத்தாம இருக்குறது என் தப்பா, அவன் தப்பா?”

“திறப்பு விழான்னா என்னாப்பா?”

“அதாடா ஜஸ்டினு… யாராச்சும் மந்திரிமாருங்க வருவாங்க. இந்தச் சுவத்துக்கும் அந்தச் சுவத்துக்கும் நடுவால கலர் பேப்பரைக் கட்டி கத்தரிக்கோலால வெட்டுவாங்க. அப்புறமா மந்திரி மொத கக்கூஸ் போவாரு. அதை போட்டோ எடுத்து பேப்பர்ல போடுவாங்க.”

“கக்கூஸ் போறதையா?”

“ஆமாடா மவனே. அப்புறமா நாமளே அந்த பேப்பரைப் பொறுக்கியாறுவோம்.”

கடகடவெனச் சிரித்தார் தேவசகாயம். காலையில் இருந்து பொறுக்கிய காகித மூட்டைகளைப் பிரித்துப் போட்டு, தரவாரியாகக் காகிதங்களைப் பிரித்துக்கொண்டு இருந்த மேரியம்மாளும் சிரிப்பில் இணைந்துகொண்டாள். அவளது கைகள் பொறுக்கி வந்த பேப்பரில் இருந்த சாமிப் படங்களை மட்டும் தனியாக எடுத்துவைத்துக்கொண்டு இருந்தன. அது இந்து சாமியோ, எந்த சாமியோ, சாமிப் படங்கள் அனைத்தையும் கிழித்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தப் படங்களைக் கடைசியில் இருக்கும் கழிப்பறைச் சுவரில் பார்க்கலாம். அதுதான் மேரியம்மாளின் சாமி ரூம்.

ஜஸ்டினோ, சினிமா விளம்பரங்களில் இருக்கும் விஜய் படங்களை மட்டும் குறிவைத்துக் கிழித்துக்கொண்டு இருந்தான். மூன்று மாதங்களில் மூன்று பக்கச் சுவர் களை விஜய் படங்களைக்கொண்டு நிரப்பிவிட்ட அவனது இலக்கு நான்காவது திசையில் இருக்கும் சுவரையும் விஜய்யின் ஆக்ரோஷத்தால் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

“என்னிக்கு கார்ப்பரேஷன்காரன் வந்து வெரட்டப்போறானோ… தெரியலை. அதுக்குள்ள ஒட்டிருடா ஜஸ்டினு”- மகனை நோக்கிச் சிரித்தாள் மேரியம்மாள்.

அவன் அதைக் காதில் வாங்காமல் விஜய்யைக் கத்தரிப்பதில் கருத்தாக இருந்தான். பழைய வீடாக இருந்தால், ரெண்டே நாட்களில் நூற்றுக்கணக்கான விஜய் படங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கும். அங்கு பக்கத்து வீட்டில் இருந்த வேல்முருகனிடம் அஜீத் படங்களைக் கொடுத்து, அதற்கு ஈடாக விஜய் படங்களைப் பெற்றுக்கொள்ளும் பண்டமாற்று முறையை மேற்கொண்டு இருந் தான்.

ஜஸ்டினின் பழைய வீடு

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இதே அடையாறில் மத்திய கைலாஷ் பக்கத்தில் இருக்கும் பிளாட்ஃபார்ம் ஒன்றில்தான் குடியிருந்தது ஜஸ்டினின் குடும்பம். அங்கு இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று குடும்பங்கள். திடீரென பிளாட்ஃபார்மை ஒட்டியிருக்கும் சுவரில் இந்தக் கடைசியில் ஆரம்பித்து, அந்தக் கடைசி வரைக்கும் அழகிய ஓவியங்கள் வரையப்போவதாகச் சொல்லி, கார்ப்பரேஷன்காரர்கள் விரட்டிவிட்டார்கள். மற்ற இரண்டு குடும்பங்களும் திசைக்கு ஒன்றாகச் சென்றுவிட, கார்ப்பரேஷனில் துப்புறவுத் தொழிலாளியான தனது நண்பர் ஒருவரைப் பிடித்தார் தேவசகாயம். அவரது உதவிதான் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் இந்தக் கழிப்பறை.

“திறந்துவெச்சாலும் இந்த ஏரியாவுல ஒருத்தனும் வர மாட்டான். நீ பாட்டுக்கு ஆளுக்கு ஒரு ரூபாக் காசை வாங்கிட்டு, கழுவிவிட்டமா, சம்பாதிச்சமான்னு சத்தம் போடாம இருந்துக்க. ஓடுற வரைக்கும் ஓடட்டும்” என்றார் நண்பர்.

“வர மாட்டாங்களா? ஏம்ப்பா… அந்த ஏரியாவுல யாருக்கும் கக்கூஸே வராதா?”

“அட நீ வேற. அவங்கல்லாம் வீட்டுக்குள்ளேயே நாலஞ்சு கட்டிவெச்சிருப்பாங்க. அது சரிப்பட்டு வரலைன்னு ஹோட்டல்ல ரூம் போட்டு கக்கூஸ் போவாங்க. நீ பாட்டுக்கும் கவலைப்படாம இரு… போ.”

குடும்பத்தோடு வந்தார். இத்தனை நாட்கள் தான் பட்ட சிரமத்துக்கு எல்லாம், கல்வாரி மலையில் இருந்து கருணை பொழியும் கர்த்தர் ஒரு நல்வழியைக் காட்டிவிட்டதாக நம்பி மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார் தேவசகாயம். இரண்டு கோணிச் சாக்குகளில் சில பாத்திரங்களோடு இந்த வீட்டுக்குள் நுழைந்த நாள் தான் ஜஸ்டினின் குடும்பம் முதன் முதலாக ஒரு சிமென்ட் கூரைக்குக் கீழே வந்த நாள். ஜஸ்டின் பிறந்த சமயத்தில் சைதாப்பேட்டை கூவம் கரையின் குடிசை ஒன்றுதான் வீடு. மழைக் காலத்தில் வீடு சாக்கடைக்குள் மூழ்கிவிடும். எல்லா நாட்களிலும் வீட்டு வாச லில் விதவிதமான கழிவுகளுடன் கறுப்புத் திரவ நதி கடந்துபோகும். அதற்கும் வந்தது ஆபத்து. மேம் பாலம் கட்டப்போவதாகச் சொல்லி, எல்லாக் குடிசைகளும் ஒரே நாளில் தரை மட்டமாக்கப் பட்டன. அதன் பின் குடிசைக்கும் வழியின்றி பிளாட்ஃபாரமே கதியானது. இப்போதுதான் இந்த ‘வீடு’!

உள்ளே ‘சொர்ர்ர்ர்’ என்று சத்தம் கேட்டது. தேவசகாயம் எட்டிப்பார்த்தார். கடைசிக் கழிப்பறையில் ஒண்ணுக்கு அடித்துக்கொண்டு இருந்தான் ஜஸ்டின். ஓடிச் சென்று பொடேரென பொடனியிலேயே போட்டார்.

“குடியிருக்குற வீட்டுக்குள்ள ஒண்ணுக்கு அடிக்கிற… ராஸ்கல்.

“யப்பா… இது கக்கூஸுப்பா!” மறுபடியும் பொடனியிலேயே ஒரு போடு.

“இன்னொரு தடவை இதை கக்கூஸுன்னு சொன்னே, தொலைச்சிருவேன். எவன் வேணும்னாலும் கக்கூஸுன்னு சொல்லட்டும். உனக்கு இது வீடு. புரியுதா?”

அதிலிருந்து ஐயம் திரிபற ஜஸ்டினுக்கும் அது வீடானது. மேரியம்மாளோ, “மொதமொதலா இப்படி ஒரு வீட்டுக்கு வந்திருக் கோம். பால் காய்ச்சணும்” என அடம்பிடித்தாள். அவள் பால் வாங்கப் போன இடைவெளியில் தேவசகாயம் தன் தொழில்நுட்ப அறிவைக் காட்ட முற்பட்டார். கட்டணக் கழிப்பறையின் டாய்லெட் பீங்கான் குழிப் பகுதியில் ஒரு கல்லைப் போட்டு மூடி, அதன் மேலே ஒரு தகரத்தைப் போட்டு சமப்படுத்தினார். இப்போது அது பார்க்க அடுப்பு போலவே இருந்தது. போலவே என்ன… அதுதான் இப்போது அடுப்பு.

“கக்கூஸ்லயா பால் காய்ச்சு வாங்க?” கேட்ட மேரியம்மாளை அக்னிக் கண்களுடன் முறைத்துப் பார்த்தார் தேவசகாயம். தன் தொழில்நுட்ப அறிவு கண்டு கொள்ளப்படாத ஆற்றாமை அவரைக் கடுப்பேற்றியது. கணவனின் கோபத்துக்குப் பயந்து மேரியம்மாள் ‘அடுப்பை’ மூட்டத் தொடங்கினாள். பாத்திரத்தில் பால் காய்ந்தது. அது பொங்கி வரப்போகும் சமயம் டாய்லெட் பீங்கான் பொடேரென வெடித்துச் சிதற, பதறிப்போனாள் மேரியம்மாள். அவளைவிட அதிகமும் பயந்தார் தேவசகாயம். உலக வரலாற்றில் முதன்முதலாக கழிப்பறையில் பால் காய்ச்சிக் குடிபோகும் பெருமையை ஜஸ்டினின் குடும்பம் ஜஸ்ட் மிஸ் பண்ணிவிட்டது. ஆனாலும், முதல் நாள் வீட்டுக்குள் வந்ததை யாராலும் மறக்க முடியவில்லை.

நடுநிசியில் லத்தியால் தட்டி எழுப்பிவிடும் போலீஸ், கண்களைக் கூசச் செய்யும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள், ஹாரன், இரைச்சல், உடலை உறிஞ்சும் கொசுக்கள், கழிவுகளின் துர்நாற்றம்… எதுவுமற்ற அந்த முதல் நாள் இரவு ஜஸ்டினுக்கு அமைதியான உறக்கத்தைப் பரிசளித்தது. ஆனால், தேவசகாயத்துக்கும் மேரியம்மாளுக்கும் தூக்கம் வந்தபாட்டைக் காணோம். “சொறி புடிச்சவன் கைக்கு சொறிஞ்சாத்தான் சொரணையா இருக்குமாம்”- என்று சிரித்தார். குறைந்த நகைச்சுவையேகொண்ட அந்த வார்த்தைகளுக்குக் கொஞ்சம் மிகையாகவே சிரித்தாள் மேரியம்மாள். இருவரின் சிரிப்பும் எதிர்பார்க்கப்பட்ட தீண்டலில் சந்தித்தன. தேவசகாயமும் மேரியம்மாளும் முதன்முதலாக நான்கு சுவர்களுக்குள் உறவுகொண்டார்கள். உடல் இன்பத்தின் உண்மை ருசி அவர்களை மிதக்கவைத்தது. ஊரும் பொழுதும் அடங்கிய பின்னிரவில் பயமும், அவசரமும், பதற்றமும் நிறைந்திருந்த பழைய நிமிடங்கள் இருவரின் கண் முன்னால் துளித் துளியாக வந்து போயின.

ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி வாசலில் கிடைத்தது என்று ஒரே இடத்தில் இருந்து நான்கைந்து மூட்டை பேப்பரை அள்ளி வந்துவிட்டார் தேவ சகாயம். கூடவே, கையில் ஒரு குவார்ட்டரையும் பிடித்து வந்தார். வந்ததில் இருந்து கடும் போதையில் ஒரே பாட்டு. “நாதர் முனி மேலிருக்கும் நல்ல பாம்பே… உனக்கு நல்ல பெயர்வைத்தது யார் சொல்லு பாம்பே…” விஜய் பாடல்களைப் பாடச் சொல்லி ஜஸ்டின் நேயர் விருப்பம் கேட்க, மேரியம்மாள் அவன் தலையில் தட்டினாள். “புள்ளைய ஏன்டி அடிக்கிற… நீ இங்க வா ராசா. எனக்கு இந்த விஜய் பாட்டெல்லாம் தெரியாது மவனே… நீ சொல்லிக் குடு. அப்பா பாடுறேன்” -ஜஸ்டினுக்கு முகம் எல்லாம் சிரிப்பு.

“வாடா மாப்பிளே… வாழைப் பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?”

“என்னது, மாப்பிள்ளையா… நான் உன் அப்பன்டா!” – தேவசகாயம் பெருஞ்சிரிப்புச் சிரித்தார். பிறகு, ஜஸ்டினின் இரு தோள்களிலும் இரு கைகளை நேராகவைத்துக்கொண்டு, “ஜஸ்டினு, அந்தா மினுக் மினுக்குனு லைட் போட்டுக்கிட்டு குடியிருக்காங்க பாரு மாடிக்காரங்க. அவங்ககூட மாசம் பொறந்தா, கரன்ட்டு பில்லு, தண்ணி பில்லு, டி.வி. பில்லு எல்லாம் கட்டணும். நம்ம வீட்டுக்கு எதுவும் கெடையாது. எல்லாம் ஃப்ரீ. அதான் உன் அப்பனோட பவரு.”

ஜஸ்டின் காலையில் வகுப்பறையில் நடந்ததைச் சொன்னான். யாருமே இதை வீடென நம்ப மறுப்பதைச் சொன்னான். உடனே, தேவசகாயத்துக்குக் கோபம் வந்துவிட்டது. “எவன்டா சொன்னான் இதை வீடு இல்லேன்னு. எவன் வீட்டுலயாவது ஆறு ரூமு இருக்குமா? நம்ம வீட்டுல இருக்குல்ல. நல்லா பெருமையாச் சொல்லு.” – அந்தப் பெருமைதான் பெரிய துயரத்தைக் கொண்டுவந்து சேர்த்தது

ஜஸ்டினின் நண்பர்கள்

விளையாட ஆள் இல்லாமல் அலுத்துச் சலித்துப்போன ஜஸ்டின், மெதுவாகத் தன் வீட்டின் பின்பக்கம் இருந்த அடுக்ககச் சிறுவர்களின் விளையாட்டுக்குள் நுழைய முயன்றான். எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. ஜஸ்டினைப் பார்த்த உடனேயே ‘போய் பந்து பொறுக்கிப் போடு’ என்றார்கள். ஆனாலும், அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்காவது நாளில் அவன் வயது நண்பர்கள் கிடைக்கவே செய்தனர். ஆனால், அவர்கள் பேசிய இங்கிலீஷ்தான் ஜஸ்டினைப் பாடாய்ப்படுத்தியது. அவர்கள் போகோ, ஜெட்டிக்ஸ், டோரா, புஜ்ஜி என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்க, இந்த ரேஸில் தன்னால் பங்கெடுக்க இயலாமல் போய்விடுமோ எனப் பயந்த ஜஸ்டின், “என்கிட்ட 500 விஜய் போஸ்டர் இருக்கே” என்றான் பார்த்தி என்கிற பார்த்தசாரதியிடம்.

ஒரு விஜய்க்கே எகிறிக் குதிக்கும் பார்த்தி, 500 விஜய் என்றால் விடுவானா? “ப்ளீஸ்டா… எனக்குக் காட்டுடா” என்று கெஞ்சினான். பார்த்தி உள்ளிட்ட மூவர் குழுவுடன் ஜஸ்டின் தன் வீடடைந்தபோது அங்கு மேரியம்மாளும் இல்லை, தேவசகாயமும் இல்லை. “இதுதான் வீடு” என ஜஸ்டின் காட்டியதும் வாசலுடனேயே புறமுதுகு காட்டி ஓடிவிட்டார்கள் அத்தனை பேரும்.

ஜஸ்டினின் புதிய/பழைய வீடு

விடிந்தும் விடியாத அதிகாலையில் ஜஸ்டினின் வீட்டு வாசலில் ஏரியா கவுன்சிலர் வந்து நின்றார். அபார்ட்மென்ட் செகரெட்டரி வந்தார். இன்ஸ்பெக்டர் வந்தார். மாநகராட்சி அதிகாரி வந்தார் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்தார்கள். பேச்சு மூச்சு எதுவும் இல்லை. தேவசகாயத்தின் தலையைப் பிடித்து தரதரவென இழுத்து வெளியே போட்டனர். மேரியம்மாளும் ஜஸ்டினும் பின்னாலேயே ஓடி வந்துவிட்டனர்.”டெண்டர் விட்டு, ஏலம் எடுத்து, பணத்தைக் கொட்டிக் கட்டடம் கட்டுனா, குந்துனாப்ல வந்து குடும்பம் நடத்துறியா நீ?”என்றைக்கோ ஒருநாள் எதிர்பார்த்ததுதான். அது இன்றைக்காகிவிட்டது. பேப்பர் மூட்டைகளும் சாமான்களும் பிளாட்ஃபாரத்தில் வீசப்பட்டன. கணவனின் ‘கனவு வீடு’ அவரது கண் முன்னால் பறிபோவதைக் கண்டு மேரியம்மாள் அழுதாள். ஜஸ்டினுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இவனுடன் நேற்று விளையாடிய பார்த்தி அண்ட் கோ தூரத்தில் கேட்டுக்கு அந்தப் பக்கம் நின்று எட்டி எட்டிப் பார்த்தது. அரை மணி நேரத்தில் எல்லாம் காலி. அதே பிளாட்ஃபார்மில் கொஞ்ச தூரம் தள்ளி இருந்த இடம் ஜஸ்டினின் புதிய குடியிருப்பானது.

மூன்றாவது நாளே, அந்த மாநகராட்சிக் கட்டணக் கழிப்பறைக்குத் திறப்பு விழா நடத்தப்பட்டது. முடி அதிகம்கொண்ட தடித்தவன் ஒருவன் வாசலில் மேஜை போட்டு அமர்ந்திருந்தான். யூரின் மட்டும் 2 ரூபாய், டாய்லெட் எனில் 4 ரூபாய் என சில்லறைகளாக வாங்கிக்கொண்டு இருந்தான். தேவசகாயத்துக்கு நாள்தோறும் அந்தக் காட்சியைக் காணச் சகிக்கவில்லை. தன் வீடு தன் கண் முன்னால் சீரழிவதைக் கண்டு அவர் மனம் நடுங்கியது. மேரியம்மாளுக்குக் கணவனின் பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றாலும், அவள் எதுவும் செய்வதற்கு இல்லை.

அன்று வழக்கத்துக்கு மாறாக ஒன்றுக்கு இரண்டு குவார்ட்டர்களைப் பிடித்து வந்தார் தேவசகாயம். முடிந்த வரைக்கும் குடித்தார். ஜஸ்டினையும் அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடந்தார். அவர்களின் பழைய வீடு வந்தது. வாசலில் நிற்பவனிடம் சில்லறைக் காசுகளைக் கொடுத்துவிட்டு உள்ளே போனார். ஜஸ்டின், விழிகள் அதிர்ச்சியுற உள்ளே பார்த்தான். அவன் ஒட்டிய எந்த விஜய் படங்களும் அங்கு இல்லை. அவற்றின் மீது ‘மூலம், பௌத்திரம், விரைவீக்கம்’ என்ற மஞ்சள் வண்ண போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மேரியம்மாளின் பூஜை அறையில் மனித மலம் மிதந்துகொண்டு இருந்தது. சிகரெட் துண்டுகள் இறைந்துகிடந்தன. தேவசகாயமும் மேரியம்மாளும் புணர்ந்த அறையின் சுவர்கள் எங்கும் கரிக்கட்டைகளால் வரையப்பட்ட பாலுறவுச் சித்திரங்கள். ஏதேதோ ஆண், பெண் பெயர்கள். அலைபேசி எண்கள். அடுப்படியாகப் பயன்படுத்திய அறை முழுவதும் கழிவுகள். பான்பராக் எச்சில்கள். எங்கும் நாற்றம். தேவசகாயம் அடக்கமாட்டாதவராகப் பெருங்குரலில் அழத் தொடங்கினார். அப்பாவின் அழுகை ஜஸ்டினுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது.

“யப்பா… ஒண்ணுக்கு அடிக்கட்டுமா?”

“அடிறா… ஒண்ணுவிடாம எல்லா ரூம்லயும் அடிச்சுவிடு.”

ஆனால், அவர் அடிக்கவில்லை. தேவசகாயம் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்தார். அவருக்கு யார் மூஞ்சியிலாவது ஒண்ணுக்கு அடிக்க வேண்டும்போல் இருந்தது!

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *