விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 17,645 
 

விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு மக்கள் அனைவரையும் ஆவலோடு எதிர் பார்க்க வைத்த படம் ‘அடலேறு!’ அதன் ஹீரோ விஷ்ணு காந்தே தயாரிப்பாளரும் கூட.

விஷ்னு காந்த்க்காக மட்டும் நிச்சயம் ஐம்பது நாட்கள் ஓடும் என்ற நம்பிக்கையில் வினியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு விலையை பல மடங்கு உயர்த்தி, மாவட்ட உரிமைகளை வாங்கிக் கொண்டார்கள்! கிட்டத்தட்ட நூறு கோடிக்கு விற்பனையானது அந்தப்படம்!

தேவையற்ற சண்டைக் காட்சிகள், மூன்று கதா நாயகிகளுடன் ஆறு டூயட் பாட்டு. எல்லாமே ஏற்கனவே அவருடைய பல படங்களில் வந்த காட்சிகள் தான்! படம் அட்டர் ஃபிளாப்! டிஸ்ரிபியூட்டர்களுக்கு ஏகப் பட்ட நஷ்டம்! வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்கள்.

விஷ்னு காந்த் ஒரு வித்தியாசமான மனிதர்! ஏற்கனவே இது போன்று ஒரு படம் சரியாக ஓடாத பொழுது, அவரே அனைவரையும் கூப்பிட்டு, அவர்களின் நஷ்டத்தை ஈடு செய்தார்.

இம்முறையும் விஷ்னு காந்த்திடமிருந்து எல்லோருக்கும் அழைப்பு வந்ததால், எல்லோரும் ஒரு எதிர் பார்ப்போடு போனார்கள்!

அமைதியாக வந்த விஷ்னு காந்த் மேடையில் ஏறி அனைவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.

“ நண்பர்களே! நம் தொழிலைப் பற்றிய என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்! போன முறை என் நிதி நிலமை மிக நன்றாக இருந்தது. அதனால் நானே உங்களைக் கூப்பிட்டு, நீங்கள் கேட்காமலேயே உங்கள் நஷ்டத்தில் பங்கு பெற்றேன்! அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!

இந்தப் படத்தால் இன்று என்னுடைய நிதி நிலைமை அதள பாதாளத்திற்குப் போய் விட்டது! என்னால் உங்களிடம் தான் மனம் விட்டுப் பேச முடியும்! இன்று எனக்கு சுமார் ஐம்பது கோடி கடன் சுமை ஏற்பட்டு விட்டது! சிலர் நடவடிக்கை எடுத்து என் சில சொத்துக்களையே ஏலத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள். எனக்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? இங்கு இருபத்திஐந்து விநியோகஸ்தர்கள் கூடியிருக்கிறீர்கள். நீங்க இந்த நேரத்தில் ஆளுக்கு இரண்டு கோடி கொடுத்தால் நான் நிலைமையை சமாளித்து விடுவேன். நம் அடுத்த படத்தில் அதை சரிக் கட்டிக் கொள்ளலாம்!..”

என்று ஹீரோ பேசப் பேச விநியோகஸ்தர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் ஆடு திருடிய கள்வனைப் போல் பார்த்துக் கொண்டார்கள்!

– 6-4-2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *