விழிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 966 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருள் ஒளியை விழுங்கத் திருட்டுத்தனமாக பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்தது. 

ஊரெங்கும் பதற்றம், பதகளிப்பு! 

ஒளி இருளை எதிர்க்கின்றது. 

ஊர் மக்கள் அவசர அவசரமாகக் கிடைத்ததைக் கொண்டு தங்கள் வயிற்றை அரைகுறையாக நிரப்புவதற்கு முயல்கின்றனர். 

ஒளிக்கும் இருளுக்கும் மோதல். 

தங்களைத் தயார்படுத்துகின்றனர் கிராம மக்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில். 

ஊர் உறங்கவில்லை, சுறுசுறுப்பாகத் தானிருக்கின்றது. கன்னங்கரேலென்ற மையிருளில் உலகம் புகைந்து கிடக்கின்றது. 

இரவிலோ பகலிலோ எங்கோ, எந்த வேளையிலோ, எது தான் நடக்குமோ என்று மனோ அவஸ்தை மக்களுக்கு. இன்று நேற்றல்ல, எத்தனையோ நாள்களாக, எவ்வளவோ காலமாக இதே அவலநிலைதான் மக்களுக்கு. 

ஊரடங்குச் சட்டம்… 

எங்கோ தூரத்தில் நாய்களின் குரைப்பு சங்கிலித் தொடராக. 

நான்கு பக்கங்களாலும் வேலியை வெட்டிக் கொண்டு பல திக்குகளாலும் வந்து கொண்டிருப்பவர்களால் வீடு சுற்றி வளைக் கப்படுகின்றது. 

பாதையால் வருவதற்கு அவர்களுக்கு அச்சம் . அமுக்க வெடியில் கால்கள் இழப்பதைத் தவிர்ப்பதற்கு புதிய வழிகளால் வருகின்றார்கள் அவர்கள். 

வந்தவர்களின் தோள்களில் துப்பாக்கிச் சனியன்கள். சிலரது தோள்களில் ‘ஷெல் ‘ அடிக்கும் கருவிகள். 

ஒரே ஆரவாரம், அமர்க்களம். 

வீட்டுக்குள் இருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள் எல்லோரும் இந்த எதிர்பாராத சுற்றிவளைப்பால் பயந்து பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவருகின்றார்கள். தேடல் ஆரம்பிக்கின்றது. 

வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றார்கள் வந்த வர்கள். எதுவித பயனுமில்லை. 

தேடல் நடத்திய மும்மூர்த்திகள் வெளியே வருகின்றார்கள். 

வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள்? அவர்களின் வயதென்ன? தொழிலென்ன? வருமானம்? எனப் பலவித கேள்விகள். 

வெளியே நின்று கொண்டிருப்பவர்களை குறிப்பாகப் பெண்களை நோட்டம் விடுகின்றார்கள் மும்மூர்த்திகள். இந்த வீட்டில் தேடல் முடிகின்றது. அடுத்த வீட்டில் தேடல். பின் அடுத்த வீட்டில். 

ஊரே அல்லோலகல்லோலம். 

மாலைவேளையுடன் தேடல் முடிகின்றது. 

கிராமத்தில் அடிக்கடி தேடல் நடக்கின்றது. 

தேடல், ஊரில் தேடல், வீட்டில் தேடல், ஆட்களில் தேடல், நண்பரைத்தேடல், எதிரியைத்தேடல், இலக்கியத்தேடல், ஆத்மீகத்தேடல், கண்கண்ட தெய்வத்தை விட்டுவிட்டு கண்ணுக்குப் புலப்படாத தெய்வத்தை தேடி கற்பனைச் சவாரி செய்யும் தேடல், தேடல் பலவிதம். 

நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றார்கள் தேடலுக்கு. சில வேளைகளில் இரண்டு, மூன்று பேர், சில நாள்களில் காலையில், சில நாள்களில் மாலையில், சில இரவுகளிலும் கூட தேடல். எப்பொழுது, எதற்காக என்றே கூற முடியாது. 

கிராம மக்கள் பீதியும் ஆத்திரமுமடைகின்றார்கள். கிராமிய அமைதியும், ஆனந்தமும் சீர்குலைகின்றன. மதிய வேளை, 

வீடுகளில் ஆண்கள் இல்லை. வேலைக்குச் சென்று விட்டார்கள். பெண்கள் மும்முரமாகச் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

திடீரென சங்கிலித் தொடரான நாய்களின் குரைப்பு.

துப்பாக்கிகளுடன் மும்மூர்த்திகள். ஒருவன படலையடியில், மற்றவன் வீட்டு வாசலில், மூன்றாமவன் மெதுவாக குசினிக்குள் நுழைகின்றான். அவனது கால் எதிர்பாராமல் ஒரு பாத்திரத்தில் இடறுப்படுகின்றது. 

தங்கம் திடீரெனத் திரும்புகின்றாள். 

அவள் எதிரில் மும்மூர்த்திகளில் ஒருவன். 

கொடிய கண்களின் வெறித்தனமான பார்வை தங்கத்தைப் பீதி கொள்ளச் செய்கின்றது. 

அலறியடித்துக் கொண்டு வெளியே பாய்கின்றாள். பக்கத்துக் கதவால் அவள் கிணற்றடிப்பக்கம் வந்துவிட்டாள்.

தங்கம் தப்பி ஓடிவிட்டாள் அடுத்த வீட்டிற்குள். 

செல்லம்மா மீன் வெட்டிக்கழுவிக்கொண்டிருக்கின்றாள்.

ஆளரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றாள். படலையடியில் ஒருவன், இடையில் மற்றொருவன். 

அவனுக்குப் பின்னால் மற்றவன் பல்லை இளித்தபடியே நிற்கின்றான். 

துள்ளி எழுகின்றாள செல்லம்மா. 

கோபத்தில் அவளது முகம் புடைக்கின்றது. 

கண்ணகியின் விழிகளாய் அவளது கண்களில் கோபத் தீ. 

“அடே கிட்டவந்தால் வெட்டுவண்ரா” 

கத்தியை ஓங்கிக்கொண்டு கோபாவேசமாக கர்ச்சிக்கின்றாள் செல்லம்மா. 

அவன் திகைத்து நிற்கின்றான். 

“இப்ப நான் உன்ரை கப்டனிட்டைபோறன் பார், ஆரெண்டு நினைச்சாயடா?” 

கத்தியை சுழற்றிக்கொண்டு குரலை மேலே உயர்த்தி தொண்டை கிழியக் கத்துகின்றாள் செல்லம்மா. 

சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வருகின்றார்கள். மும்மூர்த்திகள் மெதுவாக நழுவுகின்றார்கள்.

தண்ணீர் வாளியுடன் மலசல கூடத்திற்குச் செல்கின்றாள் முத்தம்மா. 

கதவைச் சாத்துவதற்கு அவள் திரும்பிய போது தனது பல்லைக் காட்டிக்கொண்டு அவளை நோக்கி வருகின்றான் ஒருவன் 

“கிட்ட வராதையடா”, 

அவள் எச்சரிக்கின்றாள். 

அவன் கேட்கவில்லை. அவளை நெருங்குகின்றான் 

“வராதையடா”

மீண்டும் கத்துகின்றாள். 

அவன் கிட்ட வந்து விட்டான். 

பயத்தில் அவளது உடல் நடுங்குகின்றது. விழிகள் பிதுங்குகின்றன. 

திடீரெனப் பலம் பெற்றவளாய் தனது கையிலுள்ள வாளித்தண்ணீரை அவனது மூஞ்சியில் எத்துகின்றாள். அவன் அதிர்ந்துபோய் நிற்கின்றான். 

முத்தம்மா அலறியபடியே வெளியே ஓடுகின்றாள். ஊர் மக்கள் திரள்கின்றனர். 

மும்மூர்த்திகள் மெதுவாகக் கழல்கின்றனர். 

சொட்டன் கந்தையா வீட்டுச் சந்தியில் இரண்டு இளைஞர்கள், இருவரும் சாரமும் சேட்டும். 

ஒருவனுக்கு கிட்டத்தட்ட பதினெட்டு, மற்றவனுக்கு மார்க்கண்டேயருடைய வயதிருக்கும். 

இளைஞர்களின் நடமாட்டத்தில் சந்தேகம். 

இதையறிந்த கந்தசாமியும், குமாரவேலுவும் இளைஞர் களிடம் செல்கின்றனர். இளைஞர்கள் ரியூட்டரிச் சந்திக்குச் செல்கின்றனர். கந்தசாமியாக்கள் விடவில்லை. இளைஞர் களைத் தொடர்கின்றனர். 

“இதுக்கு கெதியாய் ஒரு முடிவுகட்ட வேணும். தொடர விடக்கூடாது.” 

தனது சடைமயிரைச் சிலுப்பிக் கொண்டு கோபாவேசமாகக் கூறுகின்றான் ஒரு இளைஞன். 

“ஓம் தம்பி இதுக்குக் கெதியிலை முடிவுகட்டத்தான் வேணும். நீ சொல்லிறது சரிதான். அவங்கடை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு. 

குமாரவேலு முதுகில் தட்டிக் கொடுப்பது போல ஒத்தூதுகின்றார். 

இளைஞர்களுக்கு உற்சாகம் 

“ஒண்டில் இண்டைக்கு அல்லது நாளைக்கு இரவுக் கிடையிலை அலுவலை முடிச்சுப் போடவேணும். இரண் டொருத்தரை முடித்தால்தான் அவங்கடை கொட்டம் அடங்கும்.” 

சடை வளர்த்த இளைஞன் கூறுகின்றான். 

அவன் பேசிய தோரணையில் ஒருவித அவசரச் சாயல் வெளிப்படுகின்றது. 

“நாங்களும் அதைத்தான் விரும்பிறம் தம்பியள். ஆனால்..”

குமாரவேலு இழுக்கின்றார். 

“என்ன? என்ன ஆனால்.” 

இளைஞன் வெட்டிக் கேட்கின்றான். 

“இந்தப் பகுதியிலை நெருக்கமாய் சனங்கள் குடியிருக்குது. 

“அதுதான்… 

கந்தசாமி ஆரம்பிக்கின்றான். 

“அதுக்கென்ன?” 

இளைஞன் அவசரமாகக் குறுக்கிடுகிறான். 

“டே ஆவேசம், நீ பேசாதை. நான் கதைக்கிறன்”.

குமாரவேல் ஒருவித பதற்றத்துடன் கந்தசாமியை அடக்கிவிட்டு தான் தொடர்கின்றார். 

“தம்பியள் முந்தநாள் எங்கடை புளியடி வயிரவ கோயிலடி யிலை சும்மா ஒரு வெடிவெடிச்சுது. அது பண்டார வெடி. கொஞ்ச நேரத்திலை அவங்கள் வந்தாங்கள். றோட்டுக்கரையிலை யுள்ள எல்லா வீட்டுக் கண்ணாடி யன்னல்கள், கதவுகள் எல்லாத்தையும் அடிச்சு நொருக்கினாங்கள்.”

“பிறகு?” 

ஒரு இளைஞனின் கேள்வியில் அலட்சிய தோரணை.

“அதோடை விட்டாங்களே? றோட்டாலை போய் வந்த ஆக்கள் எல்லாரையும் அடிச்சு உதைச்சாங்கள், துவக்கு சுறோங்குகளாலை எத்தனை பேற்றை கை கால்களை அடிச்சு முறிச்சாங்கள். மண்டையளைப் பிளந்தாங்கள்.” 

“அப்ப இப்ப என்ன செய்யிறது?” 

இளைஞன் விசனத்துடன் கேட்கின்றான். 

“நாங்கள் நாலஞ்சு பேர் நாளைக்கு முகாம் பொறுப்பதிகாரியைச் சந்தித்துக் கதைச்சுப் பார்க்கலாமெண்டிருக்கிறம். நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறியள்?” 

இளைஞர்களுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க முயல் கின்றார் குமாரவேலு. 

“அவங்களோடை கதைச்சாப் போலை பிரச்சினை தீர்ந்திடு மெண்டு நினைக்கிறியளோ?” 

அது சரிவராவிட்டால் தாங்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார் குமாரவேலு. 

“அந்த முயற்சியும் தோற்றால் நாங்கள் உங்களிட்டை தான் வருவம். உங்களை விட்டிட்டு நாங்கள் வேற ஆரிட்டை போகேலும்?” 

இளைஞர்களுக்கு ஒருவித திருப்தி. 

“சரி நடத்திப் பாருங்கோ பாப்பம்.”

இளைஞர்கள் கூறிவிட்டு அவ்விடத்தை விட்ட கல்கின்றனர். 

பல ஸ்தாபனங்களின் தலைவர் பதவிகளை வரிந்தெடுத் துத் தனது தலையில் சுமந்துகொண்டு இதன் மூலம் தனது வளங்களைப் பெருக்கிவிடுகின்ற தலைவர் சுந்தரம் கிராம மக்களுக்குத் தலையைச் சுற்றிவிட்டார். 

கிராமத்தின் இன்றைய அவல நிலைபற்றி ஆராய்வதற்கு பிள்ளையார் கோவிலடியில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு தலைவர் சுந்தரமும் அவரைப்போல வசதி படைத்த சில பெரிய குடும்பங் களைச் சேர்ந்த ஒருவர்தானும் வரவில்லை. 

தலைவர் சுந்தரத்தின் தலைமையில்லாமல் இந்தக் கிராமத்தில் எந்தவொரு பொது வைபவமும் நடக்காது. நடத்த முடியாது. ஆனால் இன்று? 

இந்தக் கிராமத்தில் இழப்பதற்கு ஒன்றுமேயில்லாத ஆனால் ஆத்மபலத்தை மாத்திரம் கொண்ட எண்ணற்ற தொழிலாளர்களும், விவசாயிகளும், பொறுப்பதிகாரியைச் சந்தித்துப் பேசுவதற்கு தாங்களாகவே முன் வந்திருக கிறார்கள். 

உழவுகாரக் குமாரவேலு, சீமெந்துத் தொழிற்சாலை புல்டோசர் மணியம், சி.ரி.பி.மெக்கானிக் மயில்வாகனம், ஆவேசம் கந்தசாமி, நிறுதூளி இராசையா ஆகிய பஞ்ச பாண்டவர்கள் பொறுப்பதிகாரியைச் சந்திப்பதற்காகக் கூட்டத்திலுள்ள எல்லா மக்களாலும் ஒரே மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். 

“எல்லோரும் நிண்டுபிடிக்கக்கூடிய நல்ல உரமான காய்கள்” என்று வேலுப்பிள்ளை பெருமையுடன் கூறுகின்றார். 

“போர் எண்டால் போர், சமாதானம் எண்டால் சமாதானம் எண்ட திமிர்த்தனமான பேச்சை மறந்திட்டியளோ?” 

கூட்டத்திலுள்ளோரைப் பார்த்து ஆவேசம் கந்தசாமி கேட்கின்றான். 

“என்ன மறக்கின்றதா?” கூட்டத்திலுள்ளவர்களில் அநேகர் ஒரே குரலில் கூறுகின்றனர். 

“பேச்சை மறந்தாலும் ஆளை எப்படி எங்களாலை மறக்கேலும்?” 

புல்டோசர் மணியத்தின் கூற்று. 

“இவர் தான் எல்லாத்துக்கும் மூலகர்த்தா, இவர்தான் இந்தப் பிரச்சினைக்கு எண்பத்திமூன்றுக்கு முன்னரே எப்பவோ ஏடு துவக்கி வைச்சவர். இவற்றை ஆக்களோடைதான் இண்டைக்கு நாங்கள் பேசப்போறம் எண்டதை மனதிலை வைத்திருக்க வேணும்.” 

கந்தசாமி நிதானமாகக் கூறுகிறான். கூட்டத்திலுள்ள வர்கள் கந்தசாமி கூறியதை பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 

“கதைக்கிறதுக்கு நாங்கள் நாலைஞ்சு பேர் போனாப் போலை சரிவராது. மக்கள் எல்லாரும் ஒண்டு திரண்டு போனால்தான் அவங்க படியிறங்கி வருவான்கள்”

கந்தசாமி தூரதிருஷ்டியுடன் கூறுகின்றான். 

“முதலிலை நாலைஞ்சு பேர் போவம், அது பலன் தராட்டி நாங்கள் ஊர்மக்கள் எல்லோரும் திரண்டு போவம்”. 

குமாரவேலு கூறுகின்றார். 

பஞ்சபாண்டவர் சென்றனர். 

“எங்கடையாக்கள் சரியான கட்டுப்பாடுடையவை. அவை கண்டபடி வெளியில போகமாட்டினை. அதுக்கு நான் இடம் குடுக்கவும் மாட்டன். உங்களுடைய ஆக்கள்தான் ஊருக்கை இறங்கித் தொல்லைகள் குடுக்கினம் எண்டு நான் நினைக்கிறன்”. 

பேச்சுவார்த்தை நடந்துவதற்கு வந்த குமாரவேலு ஆட்களைப் பார்த்து கூறுகின்றான் முகாம் பொறுப்பதிகாரி. 

தங்கடை முறைப்பாட்டை தங்களுக்கெதிராகத் திருப்பி விட முயற்சிப்பதை உணர்கின்றான் கந்தசாமி. 

“என்ன சொல்லுறாய்? என்ன? எங்கடை ஆட்கள்தான் எங்களுக்கு தொல்லை தாறாங்களோ?” 

கோபாவேசமாகப் பொங்கி எழுகின்றான் கந்தசாமி. அவனுடைய நெற்றி நரம்பு விண்ணென்று புடைக்கின்றது. கண்கள் தீச்சுவாலையைக் கக்குகின்றன. 

“அடே ஆவேசம், கொஞ்சம் பொறடா மோனை.”

மயில்வாகனம் அவனைச் சாந்தப்படுத்துகிறார்.

“தேடல் எண்ட சாட்டிலை உங்கடை ஆக்கள்தான் அடிக்கடி வந்து ஊர்மக்களுக்கு தொல்லைகள் குடுக் கிறார்கள்” என்பதை ராணுவ அதிகரிக்கு ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகின்றான் புல்டோசர் மணியம். 

“சரி அப்பிடியெண்டால் இந்த முகாமிலையுள்ள எல்லாரையும் நான் இங்கை கூப்பிடுறன் ஊருக்கை ஆரார் வந்து தொல்லை குடுக்கிறார்கள் எண்டு உங்களாலை அடையாளம் காட்ட முடியுமா?” 

அதிகாரி கந்தசாமியாக்களைக் கேட்கின்றான். 

இதனால் வரவிருக்கும் பின் விளைவுகளை உத்தேசித்து கந்தசாமியாக்கள் மௌனமாயிருக்கின்றார்கள். 

“எங்கடை முகாமிலிருந்து சில யூனிபோம்கள் திருட்டுப் போய் விட்டன. உங்கடையாக்கள்தான் திருடியிருக்கிறார்கள் எண்டு எங்களுக்கு நல்லதாய்த் தெரியும். அந்த உடுப்பைப் போட்டுக் கொண்டு வந்து, அவங்கள் கொலைகள், கொள்ளை கள், எல்லாம் நடத்திப் போட்டு எங்களுடைய ஆட்களில் பழியைப் போடுறாங்கள் எண்டு எங்களுக்கு நல்லாய்த் தெரியும். நீங்கதான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்”. 

அவர்கள் விரக்தியுடனும் வெப்பியாரத்துடனும் திரும்பு கின்றனர். ஆனால் அவர்கள் ஆத்ம உறுதியை இழக்கவில்லை. முகாமிலிருந்து திரும்பிய கந்தசாமியாக்கள் ஓய்ந் திருக்கவில்லை. அவர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றார்கள். 

கந்தசாமி கோயில் வடக்கு வீதிக்கு அருகாமையிலுள்ள அந்த தென்னஞ்சோலை மாடிவீட்டில் மும்மூர்த்திகளுக்கு “தீர்த்த” வைபவம் நடக்கின்றது. ‘மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயமும் கோழி இறைச்சிக் கறியும் ‘நைவேத்தியம்’. 

ஆவேசம் கந்தசாமியாக்களுக்கு இந்த இரகசியத் தகவல் கிடைக்கின்றது. 

‘தீர்த்த’ வைபவச் செலவுக்கான ‘உபயத்தை’ தலைவர் சுந்தரம் பொறுப்பேற்றுள்ளார் என்று உள்வீட்டிலிருந்தே கந்த சாமியாக்களுக்கு நம்பகரமான தகவல் கிடைத்திருக்கின்றது. இரவு பத்து மணி. 

கிராமம் கும்மிருட்டில் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருக்கின்றது. 

மயான அமைதியைக் கிழித்துக்கொண்டு நாய்களின் சங்கிலித்தொடரான குரைப்பு. 

கோயில் மணி மூன்று தடவைகள் ஓசை எழும்புகின்றது. ஊரிலுள்ள ஒருசில வசதி படைத்த பெரிய குடும்பங்களைத் தவிர, விவசாயிகள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், வாலிபர்கள் ஆகிய அனைத்து உழைக்கும் மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஊழிக்கால பிரளயத்தின் போது கடல் குமுறிக் கொந்த ளித்து மூர்க்கத்தனமான பயங்கர இரைச்சலை எழுப்பவது போல, அலை அலையாகத் திரண்டு வருகின்ற இந்த உழைக்கும் மக்களுடைய வஜ்ரக்குரல்களின் ஏகோபித்த இருள் திரையைக் கிழித்துக் கொண்டு ஒளி கம்பீரமாக பேரொலியும், அவர்கள் எழுப்புகின்ற பல்வேறு எக்காள வந்து கொண்டிருக்கின்றது. சத்தங்களும் ஒன்றிணைந்து ஒரு பயங்கரப் பேரிரைச்சலாக ஜனித்து வியாபித்து வானமண்டலத்தை முட்டிமோத எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. 

அணிதிரண்டு வருகின்ற இந்த மக்களின் கரங்களிலுள்ள தீப்பந்தங்கள் செவ்வொளி வீசி ஜுவாலித்துக் கொண்டி ருக்கின்றன. 

மதுபோதையில் காற்றில் மிதப்பதைப் போலச் வந்து கொண்டிருக்கின்ற மூன்று உருவங்கள் பேரிரைச்சல் கேட்டு பீதியில் திரும்பி ஓட முயல்கின்றன. 

பயங்கரமான தீய சக்தி ஒன்று தங்களைக் கபளீகரம் செய்வதற்கு தம்மைப் பின்தொடர்வது போல நினைத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவர்கள் தமது சக்தி அனைத்தையும் திரட்டி ஓட்டமெடுக்கின்றார்கள் அந்த மும்மூர்த்திகள். 

முகாம் காவலரணில் தூங்கிவிழுந்து கொண்டிருந்த சிப்பாய் பேரிரைச்சல் கேட்டுத் திடுக்குற்று எழுகின்றான். 

மூன்று உருவங்கள் தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டி ருப்பதை அந்தச் சிப்பாய் காண்கின்றான். 

நித்திரை வெறியில் கிடந்த அவனுக்குப் பெரும் அதிர்ச்சி, கிலியடைந்த அவனுடைய கையிலுள்ள இயந்திரத் துப்பாக்கி சடசடத்துக் கனைக்கின்றது. 

அலையலையாகத் தூரத்தில் வந்து கொண்டிருக்கின்ற மக்கள் கோயில் மதிலுக்குப் பின்னால் ஒதுங்கிப் பாதுகாப்பு. தேடுகின்றனர். 

மரண அமைதி! 

சிறிது நேரத்தின் பின் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர். 

மூன்று இராணுவச் சிப்பாய்களின் சடலங்கள் முற்பகலில் ராணுவத்தினரால் பனங்காட்டுப் பகுதியில் தகனம் செய்யப்படுகின்றன. 

தாழம்பற்றைக்குள் மறைந்திருந்த, மாடு மேய்க்கும் பையன்கள் இருவர் இதை அவதானிக்கின்றார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் ஓடிவந்து இந்த தகவலை கிராம மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். 

கிராமம் நிம்மதியாக மூச்சு விடுகின்றது. 

காவலரணைத் தாக்க வந்த மூன்று பயங்கரவாதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காலாதிகாலமாக ஆராதிக்கப்பட்டு வந்த கிராமத்தின் கௌரவம் விஸ்வரூபமெடுத்துக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. 

– 1996, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *