விழித்தெழு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 866 
 
 

விடிந்ததும் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்று ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ராகவன் மனைவி சுந்தரிக்கு இதில் விருப்பமில்லை. அவள் தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருக்கிறாள். மேமாத விடுமுறையில் தனியார் மருத்துவமனையில் லேபராஸ்கோப்பு கருவி மூலம் செய்யப்படும் டியூபெக்டமி எனப்படும் பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக சொல்லி தடுத்துப் பார்த்தாள். சிறிது நேரத்தில் ராகவனின் அலைபேசி ஒலித்தது. ராகவனின் அம்மாவும் தன் பங்குக்கு தடுத்துப் பார்த்தாள். அதில் தவறொன்றும்மில்லையென்று அம்மாவை சமாதானப்படுத்தினான்.

ராகவன் அந்த குடியிருப்பில் வாடகைக்கு இருக்கிறான். அவன் வீட்டிற்கு அடுத்தாற்போல் மரியதாசும்,மேரியும் இருக்கிறார்கள். தினசரி இதழில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை பற்றி செய்தி வந்தது முதல் மரியதாசுக்கும் மேரிக்கும் சண்டை வலுத்திருந்தது. மரியதாசை சிகிச்சை செய்து கொள்ளும்படி மேரி வற்புறுத்துவதால்தான் பிரட்சனை. பெண்களைவிட ஆண்களுக்கு சுலபமாக செய்துவிடும் சிகிச்சை இது என்பதும், இதில் சதையை கிளிப்பதோ தையல் போடுவதோ இல்லையென்பதும், பத்தே நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும் இரண்டு மணி நேரத்திற்குள் எழுந்து எப்போதும் போல் வேலைகளை செய்யலாம் என்றும் மேரி மரியதாசிடம் சொல்லிப் பார்த்தாள். ஆண் இந்த சிகிச்சையை செய்து கொண்டால் ஆண்மையை இழக்க நேரிடும்மென்றும்,கருத்தடையென்றாலே அது பெண்களுக்கே உரிய சிகிச்சை எனவும் மேலும் ஒரு வருடத்திற்கான விடுமுறைகளை கனிசமாக எடுத்துவிட்டதால் சொற்பமாக உள்ள விடுமுறையை மொத்தமாக எடுக்க இயலாதுயென்றும் இந்த சிகிச்சைக்கு குறைந்தது நான்கு நாட்கள் ஓய்வு தேவைப்படும் என்றும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் விடுப்பு எடுத்துக் கொண்டால் மேலதிகாரியின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும் என்றும் தினமும் மேரியிடம் எதிர்வாதம் செய்து கொண்டிருந்தான், மரியதாசு.இறுதியாக மரியதாசின் அம்மா கிறுத்துவர்கள் கருத்தடை செய்து கொள்ள கூடாது என ஊரிலிருந்து கடிதம் போட்டிருந்தாள்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவுகளை முடித்துவிட்டு ராகவனும் சுந்தரியும் கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனை வளாகம் வந்து, என்.எஸ். வி.கேம்ப் நடக்கும் இடத்தை விசாரித்து சென்றனர். இந்த சிகிச்சை செய்து கொள்வதற்கான மனுவை அதிகாரி தந்ததும் அதை வாங்கி படித்து முழு விபரங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தான்.அதற்கு பின் முறையே ரத்த பரிசோதனையும்,சிறுநீர் பரிசோதனையும் செய்து கொண்ட பின் முதல்மாடியில் உள்ள வார்டில் அமரச் செய்தனர்.சிறிது நேரத்திற்கு பின் முடிகளை மழிக்கும் நாவிதன் ராகவனை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று மர்மஸ்தானத்தில் உள்ள முடிகளை மழித்துவிட்டான்.இத்தனை சடங்குகளுக்கு பின் அந்த மிகப் பெரிய அறையில் ராகவனும் சுந்தரிமட்டுமே அமர்ந்திருந்தனர்.கீழ் தளத்தில் இந்த சிகிச்சைக்கான தொடக்க விழா நடந்து கொண்டிருந்தது.சமூக நலத்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியின் பேச்சொலி சன்னமாக காற்றில் கலந்து ராகவனுக்கும் சுந்தரிக்கும் கேட்டுக் கொண்டிருந்தது.மருத்துவமனை சுற்றி இருந்த தூங்குமூஞ்சி மரமும் பெருங்கொன்றை மரமும் குளுமையான காற்றை அறைக்குள் அனுப்பிக் கொண்டிருந்தது. ராகவனுக்கு நன்றாக தூக்கம் வந்தது.இந்த சிகிச்சை செய்து கொள்ள ஆண்கள் முன்வராததை இடையிடையே சுந்தரி சொல்லிக் கோண்டிருந்தாள். மணி 12.30 தாண்டியதும் நிகழ்ச்சி முடிந்துவிட்டபடியால் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் தளத்திற்கு வந்தார்கள்.ராகவனும் விழித்துக் கொண்டான்.ராகவனின் மனுவையும் மருத்துவ அறிக்கைகளையும் படித்துப் பார்த்துவிட்டு ஆட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் நாளை வரும்படி மருத்துவர் கேட்டுக் கொண்டார். ராகவன் அதற்கு மறுப்பு தெரிவித்து இன்றே தனக்கு சிகிச்சை செய்துவிடும்படி கேட்டுக் கொண்டான்.மூன்றாவது தளத்தில்தான் சிகிச்சை அறை இருக்கிறது.முதலில் மருத்துவர் சென்று முதன்மை மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு ஆயாவிடம் ராகவனை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார்.ராகவனையும் சுந்தரியையும் அமரச் செய்து சாப்பிட சொன்னார்கள். உயர்தர சைவ உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நளபாகச் சோறு. அநேகம் பேருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சோறு அபரிமிதமாக மிஞ்சி இருந்தது.சுந்தரி அதை நுனுக்கமாக கவனித்தாள்.பின்பு சிறிது நேர ஓய்வுக்கு பின் ராகவனை துணிகளை களைந்துவிட்டு துண்டை கட்டிக் கொண்டு சிகிச்சை அறைக்கு செல்லும்படி தியேட்டர் பாய் சொன்னார். குளிரூட்டப்பட்ட அறைக்குள் படுக்கையில் நிர்வாணமாக ராகவன் படுத்துக் கொண்டான். அறையின் ஒரு புதுமனம் வீசிக் கொண்டிருந்தது.முதன்மை மருத்துவரும் அவருடன் நான்கு மருத்துவர்களும் ஒரு செவிலியும் சேர்ந்து ஆறு பேர் இருந்தனர். இது அறுவை சிகிச்சை இல்லாததால் அனதீசியா கொடுக்கவில்லை என்பதால் நடப்பது அத்தனையும் ராகவன் உணர்ந்தான்.ஊசியால் மெல்லிய கருப்பு நூலை அவன் ஆண் உறுப்புக்கு கீழ் நுழைத்து கட்டும் வேலை முடிந்தது.அது அந்த காலத்து பெரியவர்கள் போடும் மர்மமுடிச்சாக இருந்தது. பதிநைந்தே நிமிடத்திற்குள் முடித்துவிட்டு ராகவனை வெளியே அமரச் சொன்னார்கள்.பின்பு அவனது மருத்துவ அறிக்கையிலும் மனுவிலும் கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கினார் அதிகாரி.ஒரு வாரத்திற்கான மருந்துவில்லையும், இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அரசு தரும் ஊக்கத் தொகை ரூபாய் 1500ஐம் தந்து அதிகாரி கைகுலுக்கினார்.

ராகவனும் சுந்தரியும் தரைதளம் வந்தபோது, அந்த மருத்துவர்களில் ஒருவர் கை நிறைய ஆணுறை தந்து, “சார், இதில் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.கருத்தரிக்கவும் வாய்ப்பு இருக்கு கவனமா இருங்கோ.தெரு நாய்களுக்கு செய்த ஆபரேஷன்தான் இது.மனிதர்களுக்கும் செய்யச் சொல்லி மேலிடத்து பிரஷர் எங்களுக்கு..!”-என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

ராகவனும் சுந்தரியும் பேருந்து நிறுத்தம் வந்து தாழ்தள சொகுசு பேருந்தில் இருக்கைகளை தேடி அமர்ந்து கொண்டனர்.எப்போதும் சதா பேசிக் கொண்டே இருக்கும் தம்பதிகளிடையே பேச்சொலி அற்று அமைதியாக இருந்தது.

– 2022 நவம்பர் ‘தமிழ் நெஞ்சம்’ மின்னிதழில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *