வரவேற்பறையில் காத்திருந்த இருவரை உள்ளே வருமாறு அழைத்தான் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரனான முஸ்தபாவின் உதவியாளன்.
உட்கார்ந்திருந்த முஸ்தபா எழுந்து இருவரையும் கை குலுக்கி வரவேறற்றான். வெல் கம் சார், நீங்க எவ்வளவு பெரிய புரொடியூசர், என்னைய தேடி வந்திருக்கீங்க ஆச்சர்யமாயிருக்கு.
எனக்கு அதை விட ஆச்சர்யமாயிருக்கு, நீங்க எங்களை வரவேற்ற விதம், ரொம்ப சந்தோசமாயிருக்கு, நாங்க வந்த விஷயம் என்னன்னா இழுத்தார்.
தயங்காம சொல்லுங்க, நான் எதுவா இருந்தாலும் உதவி செய்யறேன்.
நீங்க செய்யற உதவி அப்படீன்னா என்னோட அடுத்த் படத்துல நீங்க நடிக்கணும்.
நானா? வாய் விட்டு சிரித்தான், எனக்கு நடிப்பெல்லாம் வராது சார்..ஆளை விடுங்க,
அப்படி எல்லாம் சொல்லாதீங்க முஸ்தபா, இன்னைக்கு நீங்கதான் தமிழ்நாட்டின் கிரிக்கெட் நம்பிக்கை நட்சத்திரம், ஆளும் அம்சமா இருக்கறீங்க. உங்க விளையாட்டை பார்க்கறதுக்கு இலட்சக்கணக்கான இரசிகர்கள் காத்துகிட்டிருக்காங்க
ஆமா அது கிரிக்கெட்டுலதான….
அந்த இரசிகர்களை அப்ப்டியே சினிமாவுக்குள்ள கொண்டு வரணும்னா நீங்க அதுல நடிக்கணும்.
சார் என்னோட இரசிகர்கள் என் விளையாட்டைத்தான் இரசிச்சு பார்ப்பாங்களே தவிர சினிமாவுல நான் நடிச்சா பார்க்க மாட்டாங்க.
அப்படி சொல்லாதீங்க முஸ்தபா நீங்க கிரெவுண்ட்ல இறங்கறப்ப கேக்கற இரசிகர்க்ளோட சத்தம்..உங்க ஆட்டம் முடிஞ்சு கேலரிக்குள்ள போற வரைக்கும் கேட்டுகிட்டே இருக்குதுல்ல..
சார் மறுபடியும் சொல்றேன், அவங்க எல்லாம் கிரிக்கெட்டை நல்லா தெரிஞ்ச்வங்க, அதுல நான் ஆடற தன்னம்பிக்கையான ஆட்டத்தை பார்த்து இரசிக்கறாங்க, நாளைக்கு என்னைய மாதிரி ஒருத்தர் இதே மாதிரி ஆட ஆரம்பிச்சா இரசிகர்கள் அவரையும் இரசிச்சு பார்ப்பாங்க,
நீங்க என்ன வேணா சொல்லுங்க, உங்களை வச்சு படம் எடுக்கறதுன்னு தீர்மானம் பண்ணிட்டோம்,அதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் கொடுக்க தயார், நீங்க ஒகே மட்டும் சொல்லுங்க..
“கோடி” என்றதும் முஸ்தபாவின் முகம் மெல்ல மலர்ந்தது. என்னதான் தமிழகத்தில் பிரபலமாய் இருந்தாலும் இருவது வயதில் இருக்கும் தான் இன்னும் தேசிய அளவுக்கு பிரபலமாகி, அதன் பின் நாட்டுக்காக விளையாண்டு அப்படி போனாலும் இவ்வளவு தொகையை பார்க்க முடியுமா?
சரி யோசிச்சு சொல்றேன். முன்னர் குரலில் இருந்த உறுதி காணாமல் போயிருந்தது.
அது போதும், இந்தாங்க அட்வான்ஸ்..ஐம்பது இலட்சம்..அவன் கையில் பெட்டியை திணித்தனர்.
ஐம்பது லட்சமா? மனதுக்குள் கணக்கு போட்டவன், இதற்கு எத்தனை “மேட்சுகள்” விளையாட வேண்டும்,
நாங்க வரட்டுமா? கை கூப்பி விடை பெற்றனர்.
தமிழக அணியும், மற்றொரு மாநில அணியும் மோதும் முக்கிய்மான “மேட்ச்”.. பயிற்சியாளர் முஸ்தபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“முஷ்தபா! நல்லா கவனி, நம்ம டீமோட் விக்கெட் விழுந்துகிட்டே இருக்கு, நீ கவனமா ஆடணும்”, தலையை ஆட்டிய முஸ்தபா இரசிகர்களின் பெருத்த கரகோஷ்த்துக்கிடையே மைதானத்துக்குள் இறங்கினான்.
எதிரணியின் பந்து வீச்சாளர் முதல் பந்தை எறிவதற்காக ஓடி வருகிறான்.தட்…தட்… அவனது ஓடும் வேகம் ஒரே சீராகவும் கோட்டுக்கு அருகே வந்து புயல் வேகத்தில் பந்தை ஏறிகிறான். அதுவரை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த முஸ்தபா, அந்த பந்து அவனருகில் வர சற்று பயந்து விலகி ஒதுங்க அது அவனை கடந்து விக்கெட்டை விட்டு சற்று விலகி வெளியேறுகிறது.
பார்த்துக்கொண்டிருந்த இரசிகர்கள் அந்த பந்தை சிக்சருக்கு அனுப்பவான் என்று எதிர்பார்த்தவர்கள் இவன் இப்படி ஒதுங்கி வழிவிடுவான் என்று எதிர் பார்க்காமல் ஐயோ…என்று அலறினர்.
அடுத்த பந்து..அதே வேகம் இப்பொழுதும் அந்த பந்தை அடிக்க முடியாமல் தடுமாறினான்.
அடுத்து, அடுத்து, ஹூஹூம்..அவனால் பந்தை தொடவே முடியவில்லை. என்னவாயிற்று முஸ்தபாவிற்கு? இரசிகர்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க, கடைசி பந்தில் நடு விக்கெட் பந்தில் பட்டு தெறித்து விழ எதிரணியின் பந்து வீச்சாளர் மகிழ்ச்சியில் குதித்தான்.
இரசிகர்கள் கவலையுடன் என்னவாயிற்று முஸ்தபாவிற்கு…?
முஸ்தபா..சோகத்துடன் தான் ஏன் இப்படி மோசமாக விளையாண்டோம் என்ற கவலையுடன் நடந்து வந்தான். அவனால் நிமிர்ந்து யாரையும் பார்க்க முடியவில்லை.
அடுத்தடுத்து வந்த மூன்று மேட்சுகளிலுமே முஸ்தபா எடுத்த ரன்கள் 3…6….2 அவனால் பந்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. தடுமாறினான்.
என்னவாயிற்று முஸ்தபாவிற்கு? இரசிகர்களின் மனதில் எழுந்த கேள்விதான், தமிழக பத்திரிக்கைகளிலும் எதிரொலித்தது.
முஸ்தபாவின் வீட்டில் தனியறையில் கவலையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். என்னவாயிற்று எனக்கு? பந்தை கண்டதும் இப்படி ஒரு நடுக்கம் வருகிற்தே, இனி நான் விளையாடவே முடியாதா?..யோசனையுடன் எதிரில் இருந்த தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஏதோ ஒரு படத்தில் கதாநாயகனும், நாயகியும் ஒட்டி உரசி பாடிக்கொண்டிருந்தனர்.
அழகு கண்ணா… அருமை கண்ணா..உன அழகே அழகு என்று கதாநாயகி நாயகனை நோக்கி பாடிக்கொண்டிருக்க,
சட்டென்று இவன் மனதில் ஒரு “பிளாஷ்” ஒரு வேளை இப்படியும் இருக்குமோ, இருக்கலாம், நிச்சயமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன் அவனை சந்திக்க வந்த தயாரிப்பாளருக்கு போன் போட்டான். அவர் லைனில் வர “சார் என்னைய மன்னிச்சுக்குங்க். என்னால சினிமாவுல நடிக்க முடியாது, உங்க கிட்டே வாங்கின பணத்தை இப்பவே கொடுத்து அனுப்பிடறேன். மன்னிச்சுங்குங்க..” அவர் பதில் பேசுமுன் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு போனை அணைத்தான்.
அடுத்த மேட்சில் அவனது மட்டை பல சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசித்தள்ளியது. இரசிகர்கள் இவனது ஆட்ட்த்தை இரசித்து களித்தனர்.
அவர்களுக்கு தெரியுமா? “முஸ்தபா” சினிமாவில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட நாள் முதல் தனது அழகு கெட்டு போக கூடாது என்று மனதளவில் எண்ணம் உருவாகிவிட்டதால், அவனது இயல்பான தன்னம்ம்பிக்கை தன்னை விட்டு போய் எதிர் கொண்ட பந்துக்கு பயந்து விளையாண்டு கொண்டிருந்தான். இப்பொழுது தன் அழகு, மற்றும் உடலை பற்றி கவலையை விட்டு விட்டதால், அவனது விளையாட்டு இப்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது.