மளிகைக்கடையில் எண்ணை விலையைக்கேட்டதும் பக்கிரிசாமிக்கு பயங்கர கோபம் கடைக்காரர் மீது வந்து விட்டது. “நேத்து சொன்ன வெலையை விட இன்னைக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபா அதிகமாயிடுச்சு மார்க்கெட்லன்னு சொல்லறியே…. நாளைக்கு கொறைஞ்சா இன்னைக்கு கொள்முதல் பண்ணின வெலைல இருந்து கொறைச்சுக்கொடுத்திருவியா? நானும் பாக்கறேன் ஏறுனா மட்டும் ஏத்தி விக்கறீங்க, எறங்குனா எறக்கி விக்கிறதில்லை. ஜனங்கள கோமாளிகன்னு நெனைச்சிட்டிருக்கீங்களா? பத்து ரூபா சம்பாறிக்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா?” என எண்ணை வாங்காமல் கடையை விட்டு வெளியேறினார்.
சென்றவரை அங்கு நின்றிருந்த இன்னொரு வாடிக்கையாளர் வழி மறித்து “அண்ணே உங்களை மாதர ஊருக்கு நாலு பேரு இருந்தாப்போதும் சிஸ்டம் ரொம்ப சரியாயிடும். தட்டிக்கேக்கனம். அப்பத்தான் இவங்களுக்கு புத்தி வரும்” என தன்னைப்புகழ்ந்ததை மகிழ்ச்சியாக ஏற்று அவருடன் “நன்றி” எனக்கூறி கைகுலுக்கியதோடு, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், இடம் தேவைப்பட்டால் தன்னை வந்து பார்க்கலாம் எனவும் கூறி தனது அலைபேசி எண் அடங்கிய விசிட்டிங் கார்டை அவரது கையில் திணித்து விட்டு கெத்தாக வீட்டிற்குச்சென்றார்.
விசிடிங் காட்டு வாங்கியவர் அடுத்த நாளே பக்கிரிசாமியின் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று காத்திருந்தார். தனது விலையுயர்ந்த புதிய காரில் வெள்ளையும் சொள்ளையுமாக வந்து இறங்கினார். காத்திருந்தவர் கையெடுத்து வணங்கியும் கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்றார்.
அங்கு காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக அவரைச்சென்று சந்தித்து விட்டு வெளியே வந்தனர். அவர்கள் உண்மையிலேயே இடம் வாங்க வந்தவர்கள் போல் தெரியவில்லை என சந்தேகம் ஏற்பட்டது. ‘விலை ஏற்றுவதற்க்கான நாடகமோ…?’ எனவும் யோசனை வந்த போது உள்ளே இருந்து அழைப்பு வர எழுந்து சென்று பக்கிரிசாமி முன் பவ்யமாக அமர்ந்தார்.
“இங்கே என்னப்பார்த்துப்பேச எதுவுமில்லை. ஒரே எடத்த ஒன்பது பேரு கேட்டா நான் என்ன பண்ணுவேன்? உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க செண்டுக்கு ஒரு லட்சம் கூடுதலா வெச்சா சைட் உங்களுக்குத்தான். இங்கே பேரம் பேசற வேலை இல்லை. ஒரே வெலை தான். போன வருசம் சைட் போட்ட போது செண்ட் பத்து லட்சம். நேத்தைக்கு வரைக்கும் இருபது லட்சம். இன்னைக்கு உங்களுக்காக இருபத்தொன்னு. இதையே நாளைக்கு வந்து கேட்டீங்கன்னா இருபத்தஞ்சாக்கூட இருக்கலாம்” என்றார் சிகரெட்டைப்பற்ற வைத்தவாறு பக்கிரி சாமி.
“நீங்க சொல்லறது மார்க்கெட் ரேட்டா சார்?”
“மார்க்கெட்டாவது, மண்ணாங்கட்டியாவது. இங்கே மார்க்கெட்டே என்னோட மனசுதான். அதுல என்ன தோணுதோ அதுதான் வெலை.”
“இது உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா சார்”
“இத பாரு இந்த மாதரி என் கிட்ட பேசப்படாது” முகத்தை கோபமாகக்காட்டினார் பக்கிரிசாமி.
“உங்கள மாதரி ஊருக்கு நாலு பேரு இருந்தா சிஸ்ஸடத்துக்கு ரொம்பக்கஷ்டந்தான்” எனக்கூறி வெளியேறினார் இடம் வாங்க வந்தவர்.