விலை மதிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 6,073 
 
 

“பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்”

“நான் எங்கேயும் போகமாட்டேன் தேவா, ஆனால் வேலை வந்துட்டா என்ன பண்ண”

“ஆமா பரமு நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்க, உயிரை எடுக்கும் வேலைதானே, அதுக்கு ஏன்? இவ்வளவு கவலை உனக்கு”

“செய்யும் தொழிலே தெய்வம் தேவா, எப்படி கவலைப்படமா இருக்க முடியும்”

“வேணாம் பரமு நீ பண்ற வேலையை தெய்வத்துக்கு சமமா பேசாத, ஒவ்வொரு உயிரும் கடவுள் கொடுப்பது, அதை எப்போது எடுக்க வேண்டும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும், ஒரு உயிரோட விலை மதிப்பு என்னவென்று தெரியமா, நீ இந்த வேலையை செய்ற, வேணாம் பரமு இந்த வேலையை விட்டு விடு”

“தேவா நமக்கு அதுவா முக்கியம், பணம் பணம், அது இதுல நிறைய கிடைக்கு, இதுக்கு மேல என்ன வேணும் தேவா”

“ஒரு உயிர் இந்த உலகத்துக்கு வர, எவ்வளவு கஷ்டப்படுதுன்னு தெரியுமா, இந்த வேலை வேணாம் பரமு, வேற நல்ல வேலை பாரு, நானே உனக்கு வேற வேலை வாங்கித் தரேன்”

“நீ என்ன பேசுற எந்த வேலை பார்த்தாலும், மாசம் பத்தாயிரம்தான் கிடைக்கும், அதை பார்த்து பார்த்து செலவு பண்ணனும், இது அப்படி இல்லை நமக்கு லட்சம் வரை கிடைக்கும்”

“உன்னால நிம்மதியா இருக்க முடியுதா, ஒரு ஆளை போட்டா அதை மறக்க தண்ணியடிக்க, எதுக்கு இந்த வாழ்க்கை பரமு” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பரமு கைபேசி அழைக்க, அதில் பேசி முடித்ததும்.

“தேவா நீ சும்மா வலவலன்னு பேசாத, இன்னும் பத்து நாளில் வேலையை முடிக்கனும், என் பிள்ளை பிறக்கும் போது, செலவுக்க என்ன செய்யன்னு யோசிச்சேன் வேலை வந்துவிட்டது”

“ஏய் தங்கச்சி பிரசவ நேரத்துல வேண்டாம், சொன்னா கேளு, இப்ப நீ தங்கச்சி கூட இரு”

“அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கே, இந்த வேலை அதுக்குள்ள முடிஞ்சிரும், மருத்துவச் செலவுக்கும் பணமும் கிடைக்கும்”

“நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்ட, நீ செய்ற வேலை உன் குடும்பத்தை பாதிக்காம பார்த்துக்க, அதான் என்னால சொல்ல முடியும், சரி வா வீட்டுக்கு போலாம்”

“நீ போ நான் கொஞ்சம் ஏத்திவிட்டு வரேன்”

“நீ எங்கேயும் போகவும் வேணாம், எதையும் ஏத்தவும் இறக்கவும் வேணாம், அந்த பணத்துல தங்கச்சிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு போலாம்”

பரமு சம்மதம் சொன்ன வேலைக்கு முன் பணமும் வாங்கியிருந்தான், முன் பணம் வாங்கிவிட்டால் அந்த வேலையை சொன்ன நேரத்தில் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவான், இது அவன் தொழில் தர்மம், அதனால் இன்றுதான் அந்த வேலையை முடிக்க வேண்டும், அதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

“என்னங்க பிரசவ நேரத்துல என்னை தனியா விட்டு போறீங்க, இது நமக்கு முதல் குழந்தை வேற, எனக்கு வேற பயமா இருக்கு”

“எதுக்கு இப்ப பயப்படற, நான் மூன்று மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவேன், அதுவரை பொறுத்துக்கம்மா, தேவா கைபேசி எண் உன்னிடம் இருக்குல்ல, ஏதாவது அவசரம்ன்னா அவனை கூப்பிடு அவனும் அவன் பொஞ்சாதியும் வருவாங்க”

“அப்படி என்னங்க வேலை பார்க்கீங்க, இந்த மாதிரி நேரத்துல என் கூட இருக்கவிடாம, உங்க முதலாளி இப்படி பண்றார், அவருக்கு குடும்பம்ன்னு எதுவும் இல்லையா”

“ஹா ஹா ஹா இப்ப எதுக்கு அந்தப் பேச்சு, மழை வேற அடிஅடின்னு அடிக்குது, நான் புறப்படறேன் நீ பயப்படாம இரு” என்று போதை ஏற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டிருந்தான், அப்போது அவன் மனைவி கத்தும் சத்தம் கேட்க, வேகமாக உள்ளே ஓடினான், அங்கு அவள் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா என்ன ஆச்சு ஏன் கத்துற?, வயித்த ஏன் பிடிச்சிருக்க வலிக்குதா?”

“ஆமாங்க பிரசவ வலி வந்துட்டு போல, என்னால முடியல அம்மா……. ஆ…… ஆ…” என்று அவள் அலற, பல உயிர்களை சாதரணமாக எடுத்த, தன் மனைவி வலியில் துடிப்பதைப் பார்த்ததும் பயத்தில், தன் நண்பன் தேவாவை கைபேசியில் அழைத்து ஆட்டோ பிடித்து வரச் சொன்னான்.

சிறிது நேரத்தில் தேவாவும் அவன் மனைவியும் வர, “பரமு மழை அதிகமா இருப்பதால் ஆட்டோ எதுவும் கிடைக்கல, இரு பக்கத்தில ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்கிறேன்” என்று ஓடினான்.
அருகில் உள்ளவர்களும் வர, அதில் ஒருவர், “எனக்கு தெரிந்த டாக்டர் பக்கதிலதான் இருக்காங்க, அவங்களுக்கு சொல்லிட்டேன், இப்ப அவங்க வந்திருவாங்க” என்றார்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் வர, பெண்கள் மட்டும் உள்ளே இருக்க ஆண்கள் வெளியே சென்றனர், பரமுவிற்கு அடித்த போதை முழுவதும் இறங்கியிருந்தது, அவன் கைகளில் நடுக்கத்துடன் தவிப்புடன் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான், தன் மனைவியின் அலறல் சத்தத்தை அவனால் கேட்க முடியவில்லை காதை மூடிக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேவா, அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, வீட்டிற்குள் பரமுவை போகச் சொன்னான், “எதுக்கு தேவா என்னை உள்ள போகச் சொல்ற, அவ கத்துவதை வெளியில் இருந்தே கேட்க முடியல”

“போ உள்ள அப்பதான் உனக்கு தெரியும், ஒரு உயிர் வெளிய வர இரு உயிர்கள் எப்படி கஷ்டப்படுதுன்னு பார், அதைப் பார்த்தால்தான் உனக்கு தெரியும், நீ சாதாரணமாக எடுக்கும், அந்த உயிரின் விலை மதிப்பு என்னவென்று தெரியும்” என்று கதவைத் திறந்து அவனை உள்ளே தள்ளி கதவை தாழ்பாள் போட்டான்.

உள்ளே சென்ற பரமு தன் மனைவியைப் பார்த்ததும், தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான், அவள் அலறுவதையும் துடிப்பதையும், அவனால் பார்க்க முடியவில்லை, “தேவா கதவை திற அவள் துடிப்பதைப் பார்க்க என்னால முடியல, அவள் கத்துவதைக் கேட்க முடியல, அவள் நிலைமையப் பார்க்க பார்க்க, என் உயிர் போய்விடும் போல இருக்கு தேவா, கதவை திற தேவா” என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவன் மனைவி வீறிட்டு அலறுவதை கேட்டதும், உறைந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவளின் அலறல் சத்தத்துடன் குழந்தையின் அழுகை சத்தமும் கேட்க, குழந்தையை பார்த்த சந்தோஷம், மனைவியின் கஷ்டம் இதையெல்லாம் பார்த்தவன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தது.

குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதும் தேவா கதவை திறக்க, தேவாவை கட்டிக் கொண்டு அழுதான், “இனிமேல் இப்படி வேலையை செய்யமாட்டேன் தேவா, எவ்வளவு கஷ்டங்களுடன் வரும் உயிரை, ஒரு நொடி கூட யோசிக்காம நான் சுலபமா எடுக்கிறேன், இந்த வேலையை செய்யமாட்டேன் தேவா, எனக்கு வேற வேலை பார்த்துக் கொடு தேவா, இந்த கை கறைப்பட்ட கை, இந்த கையால என் குழந்தையை தூக்க மாட்டேன், இந்த பணத்தை வாங்கியவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, என்னை சுத்தம் செய்துவிட்டு வந்து, என் குழந்தை தூக்கறேன் தேவா” என்று பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான், பரமு புது மனிதனாக திரும்பி வருவான் என்று அவன் செல்வதையே தேவா மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *