விருதுகளுக்கு அப்பால்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 2,453 
 
 

அறைக்கதவை மெல்ல தட்டினான் குமரன்….

எப்போதுமே கதவைத் தாள் போட்டு உறங்கும் வழக்கம் கலையரசனிடம் கிடையாது.

அவனது‌ வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்தானே…!

கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே ஒருபோதும் எதையும் மூடி மறைக்கத் தெரியாத , அல்லது விரும்பாத வெள்ளை மனம் அவனுடையது…

சினிமா மோகத்தில் கிராமங்களை விட்டு வெளியேறி , வெட்கம், மானம், சூடு ,சுரணை எல்லாம் துறந்து கலையார்வம் ஒன்றே குறியாக , நினைத்ததை சாதிக்கும் வரை போராடும் ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி.இப்போதல்ல..!அறுபதுகளில்…..!

மாரியப்பன் கலையரசனாக மாறியதும் இதில் அடக்கம்..

தன் திறமையை மட்டுமே நம்பி வந்தவர்களை கலைத்தாய் அரவணைத்து ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவாளா..?

எல்லோர் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதானே..!

மாரியப்பன் மிகமிக சாதாரணமானவன்.. நடுத்தர உயரம் , கொஞ்சம் கருத்த நிறம் , தடித்த உதடுகள் , அகலமான மூக்கு…..!

நடிப்பு அவன் ரத்தத்தில் ஊறியிருந்தது.

“நீயெல்லாம் ஒரு ஹீரோவாக ஆசப்படுறியே….! என்ன கொடுமை ? என்று கேட்கும் இயக்குனர்கள்… தயாரிப்பாளர்கள்….!

ஏன் நடிகான மட்டும்தான் கலைத்துறையில் சாதிக்க முடியுமா…?

இரண்டு முன்று முறை கதை சொல்லும் வாய்ப்பு கிட்டியதும் மெல்ல ஒரு துணை இயக்குனரைப் பிடித்துக் கொண்டான்…
ஐந்தே வருடங்கள்…!

இவனை நம்பி பணம்போட்ட தயாரிப்பாளர் குமணன் தான் இன்றுவரை இவன் கும்பிடும் தெய்வம்..

அடுத்தடுத்து முதல் மூன்று படங்களும் ஹாட்ரிக்…

பணம், பதவி அந்தஸ்து….!

ஆனால் தலைக்கனம் மட்டும் கூட வந்து ஒட்டிக்கொள்ளவில்லை…

காலையில் குடிப்பது கம்பங்கூழ்தான்…

எடுக்கும் படங்களுக்கும் மண்வாசனை தான்…

உடுக்கும் வேட்டியும் , உள்ளத்தைப் போல வெள்ளைதான்….

இப்போது இதெல்லாம் ஆறின பழங்கஞ்சி….

அவரது கடைசி மூன்று படங்கள் பெட்டியில் படுத்ததும் இவனும் கட்டிலில் முடங்கிப்போனான்..!

குமரன் மட்டும் கூட இல்லாமலிருந்தால் அவனும் மனைவி அரசி போன இடத்திற்கு போய்ச்சேர்ந்திருப்பான்..

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் குமரன்..

இன்னுமா உறக்கம். ?

நேற்று வெகுநேரம் முழித்துக் கொண்டிருந்ததை அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அவனுக்கு உணர்த்தியது நினைவுக்கு வந்தது…

“சார்…. சார்…. மணி பத்தாச்சு…! குளிச்சிட்டு கீழ வாங்க… பலகாரம் எல்லாம் ஆறிப்போச்சு…!”

போகத் திரும்பியவனை அவரது கரகரத்த குரல் தடுத்து நிறுத்தியது…

“குமரன்.. இரு. ! பலகாரம் கெடக்குது..பசியே இல்ல..!
உக்காரு..உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…!”

புதிதாக என்ன சொல்லப் போகிறார்..?

வாராவாரம் நடக்கும் சம்பவம்தானே..!

குமரன் , கலையரசன் கட்டிலருகே ஒரு இருக்கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்….

***

“குமரன்..நேத்து ஒறக்கமே வரல..பழைய படம் ஒண்ணு..நானு எடுத்த படம்தான்..”

குமரனுக்குத் தெரியும்.. இப்படித்தான் ஆரம்பிக்கும்….

“ஆமா சார்.. விடிய விடிய விளக்கு எரிஞ்சுகிட்டே இருந்திச்சு….உடம்ப கெடுத்துக்கிறீங்களே…..!

கூடவே வேண்டாத சமாசாரங்களையும் உள்ளே தள்ளியிருப்பாரே…!

அரசி போனபின் அவருக்கு கம்பெனி கொடுக்க யார் இருக்கிறார்கள்…?

“என்ன படம் சார்..? ‌ ‘அந்த ஒரு நாள்‘ தானே..!”

“குமரன்…! என்ன கோபுரத்து உச்சியில உக்கார வச்ச படம்….நானாய்யா எடுத்தேன்? நம்பவே முடியல…! மூணாவது படம்…! வெள்ளிவிழா…!”

“சார்… உங்களுக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்த படமாச்சே…! மறக்க முடியுங்களா…? “

கண்களை மூடி ஐந்து நிமிடம் அப்படியே மௌனம் காத்தான்.

கண்ணிலிருந்து கரகரவென்று வழிந்த நீரைத் துடைத்தபடி..,

“குமரன்..என்ன மக்கள் அடியோட மறந்துட்டாங்களா…? இந்த மாதிரி ஒரு படத்த மறுபடியும் என்னால எடுக்க முடியாதுன்னு நெனச்சுட்டாங்களா…? சொல்லு குமரன்….!”

கலையரசன் இது மாதிரி நேரங்களில் ஒரு குழந்தையாகிவிடுவான்…

“யாரு சொன்னாங்க..? இப்ப வர படங்கள பாத்து ஜனங்க செம கடுப்புல இருக்காங்க…! நீங்க மட்டும் சரின்னு சொன்னா மறுபடியும் ஃபீல்டுல இறங்கி ஒரு கலக்கு கலக்கமாட்டீங்களா..?”

முடியுமா….? என்னால் முடியுமா….?

ஒருநாளும் நடக்காது..! மக்களின் ரசனை மாறிவிட்டது…. மாற்றிவிட்டார்கள்..!

அவர்கள் ரசிப்பதற்காக கலையரசன் படம் எடுப்பதா…?

என்னுடைய காலம் முடிந்து விட்டதா..?

ஆனால் இன்னும் தாகம் தணியவில்லையே..!

கலையரசனுக்கு எதைப் பார்த்தாலும் வெறுப்பாயிருந்தது…!

“குமரா.. போய் பலகாரத்த சூடு பண்ணு..பத்து நிமிஷத்துல கீழ வரேன்..!”

***

குமரனும் ஓடி வந்தவன்தான்… ஆனால் கலை தாகத்தைவிட வயிற்றுப் பசியும் தாகமும்தான் அவனை வீட்டைவிட்டு துரத்தியது..

“எங்கியோ கண்காணாம போய் பொழச்சிகிடு…

இங்கிட்டு இருந்தா பட்டினியிலேயே உசிரு போயிடும்.உங்கப்பன் உன்ன அடிச்சே கொன்னுப்புடுவான்…”

குமரனின் தாய் மாமன் தான் , தாயில்லாத அவனைக் கையில் கொஞ்சம் பணத்துடன் சென்னைக்கு ரயிலேற்றி விட்டான்..

குமரன் செய்யாத எடுபிடி வேலையில்லை..சிரிக்க சிரிக்கப் பேசுவான்..

“டேய்.. நீயெல்லாம் சினிமாவுல சேந்தேன்னு வையு , நாகேஷ் கணக்கா பெரிய ஆளா வருவ..

சுற்றியுள்ளவர்கள் உசுப்பேற்றி விட இண்டு இடுக்கில் நுழைந்து , கோடம்பாக்கத்தில் ஒரு ஸ்டூடியோவில் புகுந்து விட்டான்..

சிலசமயம் அவனது பன்ச் டயலாக் உதவி இயக்குனரின் புருவத்தை உயர்த்த வைக்கும்..

“யாரிந்த பையன் ? என்று ஒரு நாள் கலையரசனே கேட்டபோது , அவரது படத்தில் வரும் வெள்ளுடை தேவதைகள் அவன் மேல் பூமாரி பொழிந்தனர்…

கலயரசனுக்கு குமரனை மிகவும் பிடித்துப்போனது..

ஆனால் குமரன் சினிமாவின் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். ‘எப்படியும் ஜெயித்துக் காட்டுவேன் ‘ என்கிற வெறி இல்லை..
ஒரு தாழ்வு மனப்பான்மை அவனை பின்னுக்கே இழுத்துக் கொண்டிருக்கும் வரையில் கலையரசனால் எப்படி அவனை எப்படி முன்னுக்கு கொண்டு வர முடியும்…?

“சார்..நீங்க என்ன நம்புற அளவுக்கு மத்தவங்க என்ன ஏத்துக்கலனு நல்லா புரிஞ்சு போச்சு.. திரும்பிப் போகவும் எண்ணமில்ல . எடமுமில்ல..!
நான் உங்களுக்கு உதவியாக உங்க நிர்வாகத்த பாத்துக்கிட்டு இருக்கிறதே போதும்னு நினைக்கிறேன்.. அதுக்கு உங்க அனுமதி கெடச்சா போதும்…”

மெள்ள மெள்ள அவன் குடும்பத்தின் ஒரு அங்கமானான்..அரசி போகும்போது கூட,

“குமரா…. சார் தமிழ் சினிமாவுக்கு கெடச்ச ஒரு பொக்கிஷம்.. சூதுவாது தெரியாத மனுசன்..உன்ன நம்பிதான் அவர விட்டுபோட்டு போறேன்..கடைசி வரைக்கும் கூடவே இருக்கணும் செய்வியா.!”

செய்து கொண்டுதானே இருக்கிறான்…..!

***

கலையரசன் கீழே இறங்கி வரும்போது குமரன் மேசையில் பலகாரத் தட்டுக்களுடன் காத்திருந்தான்.

“தேவானை உங்களுக்காக சுடச் சுட பொங்கல் , வடை , சாம்பார் , கொத்சு எல்லாம் செஞ்சு வச்சு என்ன பிரயோசனம்..? எத்தன வாட்டி சுட வைக்கிறது..?”

“உக்காரு குமரா…! பசியே எடுக்காம சாப்பாடு எப்பிடி உள்ளே எறங்கும்..? நான் சாப்பிடலனா நீயும் பட்டினி கிடப்ப..! அதான்..!”

“அப்போ எனக்காகத்தான் உங்க வயிறு ரொம்புதா..?”

“இன்னோரு காரணமும் இருக்கு..உன்னோட சாப்பிடும்போது தான் பழைய சம்பவங்களையும் சாப்பாட்டோட சேத்து அசபோட முடியுது…!

முதல் முதல்ல தேசிய விருது வாங்க டெல்லி போனது நியாபகம் வருது…!

அரசி கட்டாயப்படுத்தி பேன்ட், சர்ட் போடவச்சா…!

தமிழத்தவிர ஒண்ணும் பேச வராது…ஒருபய கூட என்ன கண்டுக்கல…

என்னோட படத்தில வர க்ளைமேக்ஸ் காட்சியப்பாத்து கையைத் தட்டினதுதான் நினவுல இருக்கு.. அப்புறம் நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி..!

ஒருத்தர் விடாம என் கையக் குலுக்கி வாழ்த்து சொன்னப்போ…! குமரா..! இப்போ எங்க போனான் அந்த கலையரசன்..?”

“அதுக்கப்புறம் மூணு முறை தேசிய விருது வாங்கிட்டீங்களே…!

வேட்டியிலதானே போவீங்க..! இங்லீஷில பொளந்து கட்டினீங்களே!

வேட்டிக்கும் , தமிழுக்கும் , அது வரைக்கும் இல்லாத மரியாதைய வாங்கிக் கொடுத்திட்டீங்களே….!

எல்லாம் சாதிச்சிட்டீங்க…! சும்மா பழச நெனச்சு உங்கள நீங்களே வாட்டிக்கிறீங்க…!”

“குமரா…! கலைஞன் ஒருநாளும் சாதிச்சு முடிச்சதா நினைக்கவே மாட்டான். அதுதான் அவனோட பலமும் பலவீனமும்..!

எனக்குள்ள இருக்கிற எல்லா கற்பனைக்கும் வண்ணம் பூசி திரையில பாக்க என் இதயம் துடிக்கிற துடிப்பு…!
உனக்குக் கூடவா கேக்கல….?”

கைகள் பொங்கலை அளைந்து கொண்டிருந்ததே தவிர மனம் எங்கேயோ அலை பாய்ந்து கொண்டிருந்தது…..!

***

கலையரசன் கீழே இறங்கி வந்து ஒரு வாரமாகிறது.

பசியில்லை..உறக்கமில்லை…. முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கவலையின் ரேகைகள் பதிது புதிதாய் கோலமிட்டிருந்தது.

மருத்துவரையும் அழைத்து காண்பித்தாயிற்று..

“உடம்புக்கு ஒண்ணுமில்லை குமரன்… ஒரு நல்ல மனநலமருத்துவர்தான் சார பழைய நெலமைக்கு கொண்டுவரமுடியும்….! சீக்கிரமே காட்டுங்க….!”

இப்போதெல்லாம் கலையரசன் தனது படங்களைப்போட்டு பார்ப்பதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை..

“சார்….’ இரண்டாம் பதிப்பு ‘ சினிமா பாக்கலாமா…? இதுவும் விருது வாங்கின படம்தான் சார்.. நீங்களும் நடிச்சிருக்கீங்க…நினைவுக்கு வருதா…?”…

ஆம்..

ஒரு படத்திலாவது நடித்தே தீருவது என்ற வெறியை தன் படத்தில் நடித்தே தீர்த்துக் கொண்டது எப்படி மறக்கும்..?

அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதும் அவர் வீட்டை அலங்கரித்தது.

“ஒண்ணும் வேண்டாம் குமரா…! எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…

கண்ணுக்கு முன்னால இல போட்டு , உக்கார வச்சு , விருந்து பரிமாறி , சாப்பிடக்கூடாதுன்னு , ஒரு பசியில துடிக்கிற மனுசன்கிட்ட சொன்னா அவன் நிலமை எப்படியிருக்கும்…? யோசிச்சு பாரு. !”

“சார்.. நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லாயில்ல…! நீங்க அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் சார்…உங்க கிட்ட இன்னும் எத்தனை திறமை கொட்டிக் கிடக்குது…!

நீங்கதான் பழையபடி திரும்பி வந்து மக்களுக்கு விருந்து பரிமாறப்போறீங்க.! அதுக்கு முதல்ல உங்க மனச தளரவிடக்கூடாது…
நாளைக்கு நாம டாக்டர் கிட்ட போறோம்.!”

“குமரா.. தயவுசெய்து வற்புறுத்தாத…..!?என்னால முடியாது….!”

கலையரசன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்..

***

“சார்….கீழ பத்திரிகை நிருபர் கூட்டம் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…! உங்க கிட்ட பேட்டி எடுத்தே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்க..உங்கள பாக்காம போகமாட்டாங்களாம்….!

தயவுசெய்து ரெடியாய்ட்டு கீழ இறங்கி வாங்க சார்…!”

“என்ன குமரா..? திடீர்னு என்மேல் இவ்வளவு கரிசனம்..? இப்பத்தான் கலையரசன கண்ணுக்குத் தெரியுதா ?

எல்லோருமா சேந்து எனக்கு குழி வெட்டி புதச்சிட்டு இப்போ தோண்டியெடுத்து வெளிய வான்னா ? . மூச்சு முட்டுது குமரா…!?

“சார்.எல்லாம் கூடி வந்திருக்கு.. மறுப்பு சொல்லாம வாங்க.. எல்லாம் அந்த பொன்னுத்தாயி ஆச்சியோட ஆசீர்வாதம்..! “

***

இந்த பத்து நாளில் என்ன நடந்தது ? ஆசீர்வாதமா … இல்லை இரசவாதமா..?

போனவாரம் செவ்வாய்க்கிழமை செய்தித்தாள்களில் கொட்டை எழுத்தில் , மாநிலம் முழுவதும் , தெருவெங்கும் , வீட்டுக்கு வீடு திரும்பத் திரும்ப காதில் விழுந்த ஒரே செய்தி…..

இப்படியும் நடக்குமா….?

‘மூன்று முறை தேசிய விருது பெற்ற பழம்பெரு இயக்குனர் இமயம், கலயரசனின் காலடியில் உயிரை விட்ட மூதாட்டி பொன்னுத்தாயின் கடைசி சில மணித்துளிகள்..!

மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இயக்குனர் இமயம்…!

***

ஒரு வாரமாக வெறும் கஞ்சிதான்.. அதுவும் வற்புறுத்திக் கொடுத்தால் நாலு வாய்…!

“உங்களுக்கு பிடிச்ச பாட்டு போட்டு விட்டிருக்கேன்….அதையாச்சும் கேளுங்க!

“குமரா…நிறுத்திடு..! நெஞ்சப் பெசையுது குமரா…!”

ஏதாவது மாயம் நடந்தாலொழிய பழைய கலையரசன் திரும்ப வரமாட்டார் என்று குமரனுக்கு புரிந்து விட்டது…

அன்றைக்கு திங்கட்கிழமை..

வாசலில் செக்யூரிட்டி செல்வம் யாரை அதட்டிக் கொண்டிருக்கிறான்…?

ஒரு வயதான மூதாட்டி.. கையில் கம்பைப் பிடித்தபடி, கூடவே ஒரு சிறுவன்… அவள் பேரனாயிருக்க வேண்டும்…

“நாந்தான் சொல்லிட்டேயிருக்கேனில்ல பாட்டி..! இப்படி பிடிவாதம் பிடிக்கிறியே..!சாரு படுக்கையில் இருந்து எழுந்திரிச்சே ஒரு மாசமாவுது…. அவரைப் பாத்து என்ன பண்ணப்போற…? கண்ணு வேற தெரியலன்னு சொல்ற…? “

“ஐயா…! எம்புட்டு தொலையிலேயிருந்து வந்திருக்கு எங்க ஆயா தெரியுங்களா…? போறதுக்கு முந்தி அவர ஒரு தடவையாவது பாக்கணும்னுதான் உசிர கையில பிடிச்சுகிட்டு அலையுது….!

ஒரே நிமிசம்… பாத்துட்டு போய்விடுவோம்..!நம்புங்கையா….!

“என்னப் பாக்க ஒரு ரசிகரா….? இன்னமும் என்ன நியாபகம் வச்சுருக்கிற ஒரு ஜீவனா…? அவுங்கள உள்ள கூப்பிட்டு உக்கார வைய்யா…!

கலையரசன் எழுந்து நிற்கிறான்.ஒரு மாதத்துக்கு பிறகு.!

“இங்க கூட்டிக்கிட்டு வரலாமா….? நீங்க எறங்க முடியுமா..?”

“என்ன சொல்ற குமரா..? என்னப்பாக்க வேண்டியே வயசான காலத்துல இத்தன தொலவுலேயிருந்து வந்திருக்காங்க..என்னால கேவலம் , இந்த படி எறங்க முடியாதுன்னு சொன்னா நான் மனுசனே இல்ல…

கண்மூடித் திறப்பதற்குள் கீழே இருந்தான் கலையரசன்..

அந்த மூதாட்டியைப் பார்த்து மலைத்துப் போய் நின்றான் கலையரசன்..அப்படியே அவன் அப்பத்தாவின் சாயல்..

“ஆத்தா…! என்னத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களே..! எங்கிட்ட அப்படி என்னத்த கண்டுபிட்டீங்க? வாங்க..பக்கத்துல வந்து உக்காருங்க…! என்ன தெரியுதா…? எம்முகத்த பாத்திருக்கீங்களா…?”

“அய்யா..! உங்க ஒவ்வொரு படத்துக்கும் முத ஆளாக போயி நிப்பேன்…!எங்க கிராமத்துல கூட ஒரு படம் எடுத்தீங்க!

அட..நம்ம ஊரா இதுன்னு மலச்சு போயி நின்னவதான்…! உங்க முகத்தை அப்போ பாத்ததுதான்..

பாவி எனக்கு கொடுத்து வைக்கலியே.கடைசி வரைக்கும் உங்க படத்த பார்த்துகிட்டே சாகணும்னு ஆசப்பட்டேனே..!

இப்போ உங்க முகத்தக் கூட பாக்க முடியாம கண்ணு ரெண்டும் போயிரிச்சே ராசா…”

கலையரசன் பாட்டி கையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்…
வார்த்தைகள் தொண்டையில் சிக்கித் தவித்தது.

“ராசா..! உன்னத் தொட்டு பாக்கலாமா..?”

உடம்பு மயிர்கூச்செறிந்தது கலையரசனுக்கு….!

***

பொன்னுத்தாயி கலையரசனின் தலையில் கைவைத்து உச்சி மோந்தாள்…!

“நீ ரொம்ப காலத்துக்கு நல்லா இருக்கணும் ராசா..!“

தங்க கீரீடம் தலையில் ஏறியது..!

கைகள் இறங்கி முதுகை ஆதுரத்தோடு தடவியதும், பொன்னாடைகள் போர்த்தப்பட்ட பெருமிதம்..!

கழுத்தைக்கட்டிக்கொண்டு முகத்தை வழித்து திருஷ்ட்டி கழித்தாள் கிழவி…!

பூமாலைகள் கழுத்தில் விழுந்தன..!

“படம் எடுக்கிறத நிறுத்திப்புடாத என்கண்ணு…!

“இங்க வாடா எம் பேராண்டி….! பையில இருக்கிற பணியாரத்தை எடு…!

“இது உனக்காக நானே செஞ்சது..என்னால முடிஞ்சது இதுதான் சாமி…..”

கலையரசன் பாட்டியை ஆரத் தழுவிக் கொண்டான்.

பணியாரத்தை உடனே எடுத்து சுவைத்தான்..

ஆயிரம் விருதுகளுக்கு ஈடாகுமா இந்த பரிசு ?

“இது உங்க பேரனா? பக்கத்துல வாப்பா..? உன் பேர் என்ன…?”

“கலையரசன் சார்.. ஆயா எப்பவும் என்ன கூட்டிட்டு தான் கொட்டாய்க்கு போகும்..உங்க பழைய படம் எல்லாம் பாத்திருக்கேன்..பாட்டிக்கு காட்சி காட்சியா சொல்லுவேன்..

சார்..ஒண்ணு சொல்லணும்னு ஆசையா இருக்கு..!

பெரியவனானதும் உங்கள மாதிரி நம்ப கிராமத்து வாசனைய ஊரெல்லாம் மணக்க வைக்கணும்… நீங்கதான் எனக்கு வழிகாட்டணும்..”

காலைத் தொட்டு கும்பிடப்போன பொன்னுத்தாயை அப்படியே தூக்கி நிறுத்தினான் கலையரசன்..

“ஆத்தா..நானில்ல உங்களக் கும்பிடணும்.. என்னோட என் கலையே அழிஞ்சு போச்சுன்னு இருந்தவனுக்கு “இதோ ..உனக்கு ஒரு வாரிசு உருவாயிட்டிருக்குன்னு ‘ காட்டிக் குடுத்த என் தெய்வம் நீங்க…!

கிழவி தடாலேன்று அவன் பாதங்களில் விழுந்தாள்…

கலயரசனுக்கு புரிந்து விட்டது…

பேரனை சேர்கக விரும்பிய இடத்தில் சேர்த்து விட்டாள்…! அவளும் தான்!

***

“என்ன வரீங்களா சார்.. ரொம்ப நேரம் காக்க வைக்காதீங்க..! சனங்களுக்கு உங்கமேல இருந்த மதிப்பும் மரியாதையும் திரும்ப வந்திடிச்சு…இந்த பொன்னான நேரத்த தவற விடக்கூடாது சார்…!”

குமரன் பேசிக் கொண்டே போனான்..

“குமரா… எனக்குள்ள இருந்த பயமெல்லாம் போயிரிச்சு..அடுத்த தலைமுறைக்கு என்னக் கொண்டுபோய் சேத்துட்டு போய்ட்டாளே எங்காத்தா பொன்னுத்தாயி…எனக்குள்ள இப்போ புது ரத்தம் ஓடுது குமரா..!

யார நம்பி படம் எடுக்கணும்னு குழம்பி தவிச்ச கலையரசன் இப்போ மாறிட்டான்..எனக்கும் ரசிகன் இருக்கான்…! வெறும் ரசிகன் மட்டுமில்ல..என்னோட கனவுகளுக்கு புது மெருகு பூசி திரைக்கு கொண்டு வரப்போற என்னோட வாரிசு….!

வா…கீழ போலாம்….!

இரண்டிரண்டு படியாக குழந்தையைப் போல தாவிக் குதித்து கீழே இறங்குகிறான் கலையரசன்….!

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *