கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 9,105 
 

தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது.
சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ?

பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப்போகிறாள்?

கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரிய கரண்டியால் கலக்கிவிட்டு, ஒருசொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப்பார்த்தான் பாவாடை.
உப்பு கொஞ்சம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றவே, அரக்கப்பரக்க இரண்டு உருளைக்கிழங்கை வெட்டி சுத்தம்செய்து, கொஞ்சம் பொடிசாக வெட்டி சாம்பாரில் போட்டான். இடைப்பட்ட நேரத்தில் பெரட்டி வைத்திருந்த கோபிஸ்கீரையை, டப்பர்வேரில் போட்டு மூடினான்.ஒரு கட்டு அப்பளப்பூவைப் பொரித்து எடுத்தான்.
அதையும் மூடி போட்ட டின்னில் பத்திரப்படுத்துவதற்குள், சாம்பார் கொதித்துவிட்டது. இப்போது உப்பு சரியாக இருந்தது.[உப்பு கூடிப்போனால் உருளைக்கிழங்கை வெட்டிப்போட்டால் சரியாகிவிடும் என்பது கண்டெய்னரில் உடன் வசிக்கும் தோழர்கள் சொல்லிக்கொடுத்த பாடம்.]

சாம்பார்ப் பாத்திரத்தை துணியால் பிடித்து இறக்கி வைத்ததோடு சமையல் வேலை முடிந்துவிட்டது. சாம்பார் கறி, கோபிஸ் கீரை பெரட்டல்,
பொரிச்ச அப்பளப்பூ, இதைவிட சொர்க்கம் உண்டா?

ஊரில் இருந்தவரை ஒருநாளாவது குசினிப்பக்கம் போயிருப்பானா? அதுக்கான சந்தர்ப்பத்தை, ஆத்தாவாகட்டும், கட்டிக்கொண்டுவந்த பொன்னுத்தாயி
ஆகட்டும். ஒருநாள் கூட அந்த அனுபவத்தையே பாவாடைக்கு கொடுத்ததில்லை. ஆனால் இங்கு சிங்கப்பூரில் கட்டுமானத்தொழிலாளியாக வேலை செய்து
வாங்கும் சொல்ப சம்பளத்துக்கு , சுயம்பாகம் தான். இந்த சாப்பாடே அமிர்தம் தான்.மாசக்கடைசியில்தான் கோழி வாங்குவார்கள். மதியம் சுடச்சுட பொன்னி
அரிசிச்சோற்றில் ஊரே மணக்கும் கோழிக்கறியும் , தயிரில் போட்ட வெள்ளரிக்காய் பச்சடியும், அப்பளமுமாய் ஒரு பிடிபிடித்தால் நாக்கும் மனசும் சொக்கிப்போகும்.

சாப்பாடு முடிந்த கையோடு தேக்காவுக்குப்போனால், ஊர்க்கார நண்பர்கள் பலரையும் அங்குதான் சந்தித்து மகிழ்வான்.சனி, ஞாயிறுகளில், பாவாடையைப்
போலவே, தமிழ் நாட்டிலிருந்து வந்த பலருக்கும் தேக்காத்திடல், தேக்காக்கடைத்தெரு,தேக்காவின் முக்கு மூலை,என சிராங்கூன் சாலை முழுவதும் நிரம்பிவழியும் நண்பர்களை சந்தித்து அளவளாவுவது போல் சந்தோஷம் வேறில்லை.,என்னமோ தமிழ்நாட்டையே பார்க்கும் மகிழ்ச்சியில் மண்பாசத்தோடு அன்போடு பேசிக்கொள்வார்கள். கையில் காசிருந்தால் நண்பர்களைப் பார்த்துவிட்டு, எல்லோருமாகச் சேர்ந்து புதிதாக ரிலீசாகியிருக்கும் ,
ஏதாவது ஒரு தமிழ் சினிமாவுக்குப் போவார்கள்.

பின்னே? இங்கு நமக்கு யாரிருக்கிறார்கள்? ஒட்டா,? உறவா? கூப்பிட்டு குலாவவும், குசலம் விசாரிக்கவும், அன்போடு ஒரு வாய் சோறுபோடவும் ,
இங்கு யாரைத்தெரியும்? விரக்தியில் அவ்வப்போது பாவாடை ஊரை நினைத்து ஏங்குவான்.

காலையில் கண்ணைப்பிட்டுக்கொண்டதுமே, எதையாவது வயிற்றுக்குப் போட்டுவிட்டு, தங்குமிடத்துக்கு அருகிலேயே உள்ள, பெரிய பெரிய ராட்சத
மெஷின்கள் நிற்கும் கட்டுமானத்தளத்துக்குப்போய்,வேலையைத் தொடங்கினால், மதியம் சாப்பாட்டுக்காகத்தான் வெல்டிங் மெஷினிலிருந்து நிமிர்வான்.
கசங்கிய உடையும், வியர்வை நாற்றமுமாய், கைகளைக் கழுவிக்கொண்டு பொட்டலத்தைப் பிரித்தால், காலையில் கட்டிக்கொண்டு வந்த சாப்பாட்டை
நிமிஷத்தில் சாப்பிட்டுவிட்டு வெல்டிங் மிஷினுக்குப்போய்விடுவான். எப்பொழுதாவது தட்டுக்கெட்டுப்போனால்தான் கேண்டீன் சாப்பாடு,வாங்குவான்.
சில சமயம் பொரிச்சமீன்,அல்லது ஒரு கோழித்துண்டு,சோற்றோடு இருக்கும்.ஆனால் சாப்பாட்டுக்காசுதான் யானைவிலையாக கண்ணை எரித்தது.
இதில் தவ்வு பொரிச்சது,தெம்பே சம்பால், கங்கொங்கீரை,போன்ற சிங்கப்பூர் உணவு அயிட்டங்களை அவனால் சாப்பிடவே முடியவில்லை.

பேசாமல் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வெறும் குழம்பும் சோறுமாய் சாப்பிட்டு விட்டு எழவேண்டிய நிலை..

இதனால் தான் தலையே போனாலும் பிறகு கேண்டீன் பக்கம் பாவாடை தலை வைத்தும் படுத்ததில்லை.

இதற்கு ஒரு ரசமாவது வைத்துவிட்டால் ஊறுகாயைத்தொட்டுக்கொண்டு சாப்பாட்டுக்கடையை முடித்துவிடலாம்.

மாலை 5 மணிக்குமேல் கிடைத்தால் ஓவர்டைம் செய்வான். இரவுவேலை முடிந்து வருவதற்குள் கண்டெய்னர் நண்பர்கள் சமைத்து
வைத்திருப்பார்கள் .

குளித்து சாப்பிட்டுவிட்டு , கைத்தொலைபேசியில் காசிருந்தால் பொன்னுத்தாயிக்குப் போன் செய்வான். பொன்னுவுக்கு இதுதான் மாசம்.
பெரிய பயலுக்கும் மூணுவயசாகப்போகுது.

கையடிபட்டு ஊருக்குப்போனப்ப எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தும், வேண்டாம் வேண்டாம்னு மசுக்குள்ள நினைச்சாலும் ஆண்டவன் சித்தம்
வேறாக இருந்தது.

பொன்னுவின் மெத்தென்ற உடம்பும், மாமா ‘ என்ற கொஞ்சும்விளிக்கும் முன்னே, பாவாடையும் சராசரி மனுஷன் தானே?

”எல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான்” என்று பொன்னுத்தாயிக்கு ஆறுதல் சொன்னாலும், இந்தக்குழந்தை வயிற்றில் தங்கியதிலிருந்தே பொன்னு படாத பாடுபடுகிறாள்.மூத்த பயலுக்கு பாவாடை கூடவே இருந்தான், பொன்னுவுக்கு வாய்க்குப் பிடிச்சதையெல்லாம் பார்த்துப்பார்த்து வாங்கிப்போட்டான்.ஆத்தாவும் வக்கணையாய் சமைத்துப்போட்டு பார்த்துக்கிட்டதில் ஏப்பைசாப்பையில்லாமல், புலிக்குட்டி மாதிரி ஒரு பயலைப் பெத்துப்போட்டாள் பொன்னுத்தாயி.

ஆனால் இப்போது ஆத்தாவுமில்லை. மாமியார்தான் வீட்டையும் மகளையும் பார்த்துக்கொள்கிறார்.மாமனார் என்னதான் பொன்னுத்தாயிக்கு அப்பாவாக
இருந்தாலும் , பாவாடை மாசாமாசம் காசு அனுப்பினால் தான் அங்கு அடுப்பு எரியும் நிலை.

எல்லாவற்றையும்விட வயிற்றுச்சுமையையும், உடலியலாமையயும்கூட மறந்து ,
” நீங்க எப்படி மாமா இருக்கீங்க? சாப்பிட்டீங்களா மாமா?என்னப்பத்தி கவலைப்படாதீங்க மாமா, நீங்க உங்க உடம்பைப்பாத்துக்குங்க மாமா, “
என்று மூச்சுக்கு முந்நூரு மாமா போட்டு, பரிவோடு பொன்னு உருகும்போதே நெகிழ்ந்து நெக்குருகிப்போய் நிற்பான் பாவாடை.தக்‌ஷணமே ஓடிப்போய் மனைவியைக் கட்டிக் கொள்ளமாட்டோமா என்று அவ்வளவு தாபமாய் இருக்கும்.ஆனால் இந்தியா என்ன கிட்டத்திலா இருக்கு ,நினைச்சவுடனேயே ஓடிப்போய் வருவதற்கு? திருச்சிக்கு அந்தண்டை உள்ள ஒரு குக்கிராமத்துவாசியான தான் கடல் கடந்துவந்ததே பெரிய விஷயம். ஆனால் சிங்கப்பூருக்கு வருவதற்காக பொன்னுத்தாயியின் தாலிக்கொடி தவிர்த்து,
அத்தனையும் விற்றும் கூட, ஏஜண்டுக்காசுக்கு சாப்பாடு போடும் நிலத்தையே ஒத்திக்கு கொடுத்துவிட்டுத்தான் வரவேண்டியிருந்தது. சாப்பாட்டுக்கும் ,
சொல்ப செலவுக்கும் மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சக்காசை அப்படியே ஊருக்கு அனுப்பிவிடுவான்.

மருத்துவச்சி அம்மா சொன்ன டானிக்குகளையெல்லாம் மாமனார் வாங்கிக்கொடுப்பதாக பொன்னு கூறினாள்.

என்றாலும் சதா வீங்கிய காலும் வாடியமுகமுமாய் நடமாடும் ,பொன்னுத்தாயியின் நினைப்புதான் பாவாடைக்கு.

ஒருவருஷமாய் உன்னைப்பிடி, என்னைப்பிடி, என்று முக்கிமுனகி எப்படியோ ஏஜண்டுக் கடனைக் கட்டியாச்சு.

இனி ஒத்திக்கு வச்ச நிலத்தையும் மீட்கணும். அதற்காக கிடைத்த ஓவர் டைமையெல்லாம் செய்தான். அப்படியும் கைக்கெட்டியது,
வாய்க்கெட்டாத குறையாக , செலவு தலைக்குமேல் போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த விபத்து நடந்துவிட்டது.

உயிர்போகும் வலியில் ரத்தவெள்ளத்தில் விரல்முனை துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்தான் பாவாடை. நினைவு வந்தபோது அழுதழுது
அவனுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது.ஆனால் அந்த நேரத்திலும் அவனுக்கிருந்த ஒரே ஆறுதல் சூப்பர்வைசர் மணியம் தான்.

ஒருநாள் விடாமல் பாவாடையை வந்து பார்த்துக்கொண்டார். மருத்துவமனையிலிருந்து பேர் வெட்டியதும்,சீனத்தவுக்கையிடம் பேசி ,
உடனே ஊருக்கு அனுப்பிவைத்தார். திரும்பிவந்ததும் , கை கொஞ்சம் நலமானவுடன் பாவாடையால் சும்மா இருக்க முடியவில்லை.

நாலுமாசம் கட்டாய மருத்துவவிடுப்பு இருந்தாலும்,நிலைமை அவனை இருக்கவிடவில்லை. வெல்டிங் வேலைக்கு போகாவிட்டாலும்,
செங்கல்லை உடைத்து, மண்ணைக்குழைக்கும் வேலை என்றில்லை.

ஆத்திர அவசரத்துக்கு, பெயிண்ட் அடிப்பது, கூட்டிப்பெருக்குவது, என்று தன்னால் முடிந்த எல்லா வேலயையும் செய்தான்.சூப்பர்வைசர் மணியம்
மனிதாபிமானம் மிக்கவராக இருந்ததால் , அவனுடைய விபத்துக்கு இன்ஷூரண்ஸ் காசுக்கும் வேண்டிய ஏற்பாடு செய்திருந்தார்.

எப்படியும் அடுத்த வாரம் காசு வந்துவிடும் என்று மணியம் சார் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.. அட, ! அதற்குள் இத்தனை மாசங்கள் ஓடிவிட்டதா ?
அதே நேரம் காசு வரப்போகுதே எனும் நினைப்பே மனசுக்குள் சீனிப்பாகாய் இனித்தது. தீபாவளி வேறு வருகிறது.

சிங்கப்பூரில் எங்கு பார்த்தாலும் தீபாவளி களை கட்டிவிட்டது. தேக்காவில் நடக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு
பணம் கிடைக்கிறது? துணிமணி, நகைகள், ஏன் அவர்கள் வாங்கும் சப்பாத்து கூட அவ்வளவு விலையாக இருந்தது.பார்க்கப்பார்க்க பாவாடைக்கு அப்படி
மலைப்பாக இருந்தது. காலையிலிருந்து ராத்திரி வரை மாடாய் உழைச்சாலும் நமக்கு கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே??

ஹ்ம்ம், அடுத்த ஜென்மத்திலாவது நாமும் சிங்கப்பூரில் பிறக்கணும், என்று மனசார ஏங்கினான் பாவாடை

தீபாவளி நெருங்க நெருங்க பாவாடைக்கு கவலை அரித்துத்தின்ன ஆரம்பித்துவிட்டது. கைவிரல் புண்ணு நல்லா காய்ஞ்சுபோனாலும்,
முன்போல் ஒவர்டைம் கிடைப்பதில்லை. மாலை ஐந்து மணிக்கே வேலை முடிந்து வந்துவிடுவதால் சமையலை பாவாடையே செய்தான்.

துணிகளைத் துவைத்து, கண்டெய்னரின் பக்கத்திலேயே ரஃபியா கயிறு கட்டி துணிகளை தொங்கவிட்டான்.டி.வி.யைத்திறந்து வைத்துக்கொண்டால்
ஊர் செய்திக்கு ராத்திரி 10 மணிவரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. படம் பார்க்கவோ, சீரியல் பார்க்கவோ அவனுக்கு மனசில்லை. சதா பொன்னுவின் நினைப்பாகவே இருந்தது. சின்னப்பயல் வேறு போன வாரம் போன் போட்டப்ப , “ யப்பா, ! அம்மாக்கு பாப்பா வருதுப்பா, நீ வரும்போது எனக்கு சிங்கப்பூர்
பொம்மை வாங்கி வறியாப்பா? “என்று குதூகலித்தபோது பாவாடை பரவசமும் கவலையுமாக நிலைகுலைந்து நின்றான்.

“ டயறு ,கண்ணு, வறேய்யா, ! அப்பா வறேன் டயறு, ‘ என்று சொல்லும்போதே, அழுதுவிட்டான்.

பயலுக்கு வீரமுத்து என்று அவனுடைய அப்பா பெயரைத்தான் வைத்தார்கள்,ஆனால் ஆத்தா வாங்கிக்கொடுத்த சின்ன சைக்கிள் பொம்மையை,,அக்குவேறு ஆணிவேறாக பிய்த்துப் போட்டுவிட்டு,வெறும் சைக்கிள் டயறையே உருட்டிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்து , டோய், டயறு, டயறுபயலே, “ என்று சும்மா கொஞ்சி அழைக்கப்போக, பிறகு அதுவே நிலைத்துவிட்டது.

” எப்படி கூப்பிட்டா, என்னா ? எம்புள்ள, என் ராசா !

” என்ன பாவாடை மெய்ம் மறந்து நிக்கறே ? ஊரு ஞாபகமா ? ” வீடு திரும்பிக்கொண்டிருந்த சூப்பர்வைசர் மணியம்தான் மோட்டோர்பைக்கை
நிறுத்திக் கேட்டார்.

“ஆமாண்ணே” என்றானே தவிர அவனால் பேச முடியவில்லை.”கவலைப்படாதே, ! இன்னும் ரெண்டு நாள்ளெ இன்ஷூரன்ஸ் காசு வந்துடும்,
கை அடிபட்டு 10 மாசத்துக்கும் மேலாயிடுச்சி இல்லே? “

மணியம் போய்விட்டார்,.பாவாடைக்கு இன்ஷூரன்ஸ் காசு கிடைக்கப்போகிறது என்றவுடனே யே நண்பர்கள் எல்லோருமே கூடிவிட்டார்கள்.

ஆளாளுக்கு அவர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.ஆசுபத்திரியில் கிடந்த செலவுக்கும் ,வேலையில்லாமல் ஊருக்குப்
போய் வந்த செலவுக்கல்லாம் சேர்த்து வைத்து , இன்ஷூரன்ஸ் காசில் அப்படியே கழித்துக்கட்டிவிட்டுத்தான் கொடுப்பார்களாம்,எல்லா செலவும் போக
மிச்சம் என்ன இருக்கப்போகிறது? வாய்க்குள்ளெ வழித்துப்போட அவல் பொரியாவது கிடைச்சாப்போறாதா? என்ற நிலையில் நண்பர்கள் பேசப்பேச
பொறி கலங்கி நின்றான் பாவாடை.

”இதாச்சும் பரவாயில்லை, வெளிநாட்டு ஊழியரான பங்களாதேஷ் பையனை, அடிபட்டுக்கிடந்த கையோட தூக்கிட்டுப்போயி, ஏதோ ” அல்லூரிலெ “
வீசிட்டுப் போயிட்டாங்களாம், இன்னொரு சீனத்தவுக்கை, விபத்து நடந்த பயலை யாருன்னே எனக்குத்தெரியாதுன்னு சொல்லி, அவன்
கள்ளக்குடியேறின்னு, கூசாமப்பொய் சொல்லி போலீசிலே புடிச்சுக்குடுத்துட்டானாம்.இங்கே எல்லாமே” கெப்புறு” புடிச்ச பசங்கதானே,
இப்பவும் பாரு, உனக்குச் செலவு பண்ணின காசுக்காக பணத்தைப் பிடிச்சுக்கிட்டு அம்பதோ, நூறோ குடுத்துட்டு விரட்டத்தான் போறாங்க,
ஹ்ம்ம், பரவாயில்லை, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு ஓடிப்போகவேண்டியது தான்.”

“ அட, என்னப்பா, எதுக்கு இடிஞ்சி போறே? கிடைக்கற காசுக்கு ஊருக்குப்போயி, ஒரு பொட்டி கடை வச்சாவது, நம்ம ஊரிலே
பொழைச்சிட்டுப்போறோம், என்னா இப்ப, ? ”’ நண்பர்கள் ஆறுதல் கூறுவதாக எண்ணி பேசப்பேச நிலைகுலைந்து போய் நின்றான் பாவாடை.

காலையிலேயே எழுந்து குளித்து சாமி கூட கும்பிட மனசில்லாமல், மணியம் சாரோடு புறப்பட்டான்.

அலுவலகவாசலில் வந்து நின்றபோது பாவாடை விரக்தியின் எல்லையில் இருந்தான்.நினைக்க நினைக்க குமுறிக்குமுறி வந்தது அழுகை.
துண்டிதமான விரல் நுனியின் மொண்ணைத்தனம் பார்க்கப்பார்க்க வயிற்றை அள்ளிப் பிடுங்கியது.

” எதுக்கு இந்த நாசம் புடிச்ச ஊருக்கு வந்தேன்.சிங்கப்பூராம், பெரிய சிங்கப்பூர்,.கஞ்சியோ, கூழோ, குடிச்சுட்டு சொந்த ஊரிலேயே, பொஞ்சாதி,
பிள்ளையோட கிடந்திருக்கலாமே, வெறும் கையோட நான் எப்படி ஊருக்கு வருவேன்,பொன்னு, உனக்கு ஒரு மூக்குத்தி, சின்ன ஒரு மூக்குத்தி
கூட வாங்கிட்டு வர வக்கில்லாதவனாயிட்டேனே, பொன்னு, என்னை மன்னிச்சுடு பொன்னு,! ஊர்க்காரவிங்க முன்னே நான் எப்படி தலை நுமுந்து நடப்பேன், “விசித்து விசித்து அழுதான் பாவாடை.

” உள்ளே வா பாவாடை ,”மணியம் வந்து அன்போடு அழைக்க, சீன முதலாளி,அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.ஏதேதோ, பாரங்களைக்
காட்டி பாவடையிடம் பேசிய ஆங்கிலம் அவனுக்குப் புரியவில்லை.கையொப்பமிடவேண்டிய இடத்தில் கையொப்பமிட்டு நிமிர,முதலாளி,

செக்கை எடுத்து நீட்டினார்.,, மணியம் சிரித்தார்.

” -மூணு லட்சம்ரூபா , கிட்டத்தட்ட பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் கிடைச்சிருக்கே, என்ன மகிழ்ச்சி தானே?
இனியாவது கண்ணைத் தொடைச்சுக்கோ ”

ஒருவினாடி நம்பவே முடியாமல் ஸ்தம்பித்துப்போய் நின்றான் பாவாடை.

”மூணுலட்சம் ரூவாயா? எனக்கா? அண்ணே, இந்த ரூவாயெல்லாம் எனக்காண்ணே? ”

” பின்னே, ஒரு விரலையில்லே இழந்திருக்கே, வேலை இடத்திலே அடிபட்டதாலே , கம்பெனி தானே பொறுப்பு எடுத்துக்கணும், அது
தான் இன்ஷூரன்ஸ் தொகையா உனக்கு கிடைச்சிருக்கு. ஆனா இனி ஒருபோதும் இந்த முட்டாள்தனத்தை செய்யாதே?
மெஷின்ல விபத்து ஏற்படறதுக்கும் , தானா விபத்தை ஏற்படுத்திக்கறதுக்கும் உள்ள வித்தியாசம் எனக்குத்தெரியும், ஆனா, நான் உன்னை முதலாளி
கிட்டே காட்டிக்கொடுக்கலை, எப்படி பதறிப்போனேன் தெரியுமா?. , ஏதோ, உன் நல்ல காலம் ,வெறும் விரல் முனை துண்டிப்போட போச்சு,
இன்னும் ஏதாவது விபரீதமா ஆகியிருந்தா,ஊரிலே உன் மனைவி, குழந்தைகளோடநிலைமை என்ன ஆகியிருக்கும்னு நினைச்சுப்பாரு?
யாருக்கு கஷ்டம் இல்லெ,? அதுக்காக இப்படியா வேணுண்ணே,விரலை மெஷினில்—- —-? “

பொலபொலவென்று அழுதுவிட்டான் பாவாடை,,

” அண்ணே, அண்ணே,சிங்கப்பூரு சிங்கப்பூரு தாண்ணே ! “என்று கரைந்து கரைந்து அழுத பாவாடையை தட்டிக்கொடுத்த மணியத்துக்கும் கண்கள் நனைந்துதான் போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *