(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அண்ட சராசரமெல்லாம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது போலிருந்தது.
அந்தச் சத்தம் கேட்டவேளை லெப்டி னன்ட் கேர்ணல் மார்க் ரிச்சர்ட்சன் கழிவறைக்குள் அமர்ந்திருந்தார். மலச் சிக்கலால் சதா அவதிப் படும் மனிதர் அவர். அது அவரோடு பிறந்த ஒரு பிரச்சினையாக இருந்தது.
மார்க் ரிச்சர்ட்சன் அமெரிக்க இராணுவத் தில் கடமை புரிந்து ஓய்வு பெற்றவர். ராணுவத் தில் சேர்ந்து சில மாதங்களில் முதலாம் ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக்குக்கெதிரான பாலைவனப் புயல் போரில் பங்கு கொண்டார். பிறகு செருப்பு எறி வாங்கிய இரண்டாம் ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சேவை செய்தார்.
அங்கெல்லாம் கடமையில் இருக்கும் போதும் இந்த மலச் சிக்கலால் அவர் மிகவும் துன்புற்றார். அப்போது அந்தத் தேசங்களில் ஆங் காங்கு குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடித்துக் கொண்டிருந்தன. தொடர்ச்சியாக ஓட்டத்திலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஒரு நாளில் ஆகக் குறைந்தது மூன்று முறை அகப்படும் இடங்களில் தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்து கொள்வார். இதனால் அவருடன் வரும் படைச் சிப்பாய் களுக்குத் தொல்லை மிக்க ஓர் அதிகாரியாகவும் இருந்தார். இவரோடு கிளம்புவதென்றாலே சிப்பாய்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள ஆரம் பித்துவிடுவார்கள். இதை அவரும் தெரிந்துதான் இருந்தார். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட இயற்கை உபாதையை என்னதான் செய்து விடமுடியும்?
கடைசியாக கியூபாவின் குவான்டனாமோ பே சித்திரவதை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தார் மார்க் ரிச்சர்ட்சன்.
அந்தச் சத்தத்தில் கட்டடங்களின் கண்ணாடிகள் யாவும் உடைந்து சிதறியிருந்தன. அந்தச் சத்தம் வித்தியாசமானதாகத் தெரிந்தது அவருக்கு. ஏதோ ஓர் ஆபத்து மிக்க அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. மீண்டும் ஒரு 9 -11 நிகழ்ந்து விட்டதோ என்றும் எண்ணினார்.
நேராக வந்து நாட்காட்டியில் 2050ம் ஆண்டு மே மாதம் 11 என்ற அன்றைய திகதியை அங்கிருந்த பென்சிலால் கீறி அடையாளப் படுத்தினார். குறிப்பு எழுதுவது அவரது முக்கியமான பணி. அவரது அனுவத்தையும் தொழில் முறை அவதானத்தையும் கொண்டு அன்று ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்து விட்டது என்பது அவரது தீர்மானமாக இருந்தது. தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார். வெண்புள்ளிகளைத் தவிர வேறு எதுவும் அதில் தெரியவில்லை. இரண்டு நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவருடைய இதயத் துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு வித அச்ச உணர்வு காலிலிருந்து உடல் முழுவதும் மெதுவாகப் பரவ ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் அவரது கைத் தொலைபேசி சிணுங்க ஆரம் பித்தது. நடுங்கும் கரங்களால் அதை எடுத்துக் காதருகில் வைத்தார். அடுத்த மாநிலத்திலிருக்கும் அவரது மருமகன் பேசினான்.
“மாமா… வெளியே எங்கும் போய் விடாதீர்கள்.. நான்கு மாநிலங்களில் உள்ள முக்கிய பாதுகாப்புத் தலங்களில் வைக்கப் பட்டிருந்த அணுக்குண்டுகள் வெடித்துள்ளன… அந்தப் பிரதே சங்கள் பிணக்காடாய் மாறியுள்ளதாகச் செய்திகள் கிடைத்திருக் கின்றன… கதிர் வீச்சுத் தாக்கம் இருக்கும்… வெளியே எக் காரணங் கொண்டும் செல்ல வேண்டாம்…”
பேச்சுத் துண்டிக்கப்படுவதற்குள் தன்னையறியாமல் தலையில் கையை வைத்தார். அவருக்குக் குழப்பமாக இருந்தது. அதியுச்சப் பாதுகாப்பில் இருக்கும் நாட்டில் எப்படி இது சாத்தியமாயிற்று?
சாய் கதிரையில் அமர்ந்த அவர் பல நூறு எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டார். யுத்தக் களக் காட்சிகள் அவர் கண்முன் விரிந்தன. துப்பாக்கிகள் ஓய்வில்லாமல் ரவைகளைச் சிதற விட்டுக் கொண்டி ருந்தன. பீரங்கிகள் நெருப்புக் கோளங்களாகக் குண்டுகளை வெளிப் படுத்திக் கொண்டிருந்தன. விமானங்கள் அதியுச்சப் பேரிரைச்சலுடன் மேலும் கீழும் பறந்து குண்டுகளைப் பூமியில் போட்டுக் கொண்டிருந்தன. போர்க் கப்பலில் இருந்து அவை எழுந்து பறப்பதையும் வந்து இறங்குவதையும் புதிய தொழில் நுட்பக் கமராக்கள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தீச்சுவாலை கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. கட்ட டங்கள் தவிடு பொடியாகிக் கொண்டிருந்தன. பெரு மரங்கள் தெருக்க ம் இரத்தச் ளுக்குக் குறுக்காக உடைந்து விழுந்திருந்தன. சகதிகளுக்குள் மனித உடல்கள் கிடந்தன. மனித அவயவங்கள் ஆங் காங்கே சிதறிக் கிடந்தன. கால் நடைகள் கருகிக் கிடந்தன. உயிர் தப்பிய வர்களும் காயம் பட்டவர்களும் உதவிக்கு ஆளின்றி உலகுக்குக் கேட்காத தமது அவலக் குரலை அதியுச்சத் தொனியில் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்க இராணுவ வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அகப்பட்ட பெண்களைக் குழுக்களாகச் சேர்ந்து கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிப் பெரு மிதத்துடன் மார்க் ரிச்சர்ட்சனை நோக்கி வந்த சில வீரர்கள் அவருக்கு முன்னால் நின்று சல்யூட் அடித்தார்கள்.
அன்று இரவு 8.00 மணிக்கு மின்சாரம் வந்தது. தொலைக் காட்சியின் அலை வரிசைகளை மேய்ந்தார். இயங்கிய அலை வரிசைகளின் தகவல்களால் அவருக்குக் கலக்கம் ஏற்பட்டது. தமது நாட்டு அணுக் குண்டுகளே வெடித்திருந்தன என்பதை அறிய வந்த போது அவருக்கு இன்னும் ஆச்சரியாக இருந்தது. அதை நம்ப முடியாமல் தத்தளித்தார். ஹிரோஷிமாவையும் நாகசாக்கியையும் விட அதிகமான பாதிப்பு ஏற்பட் டிருந்தது. அரசு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியது. ஏனைய அணுக்குண்டுகள் வெடிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளில் விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு அலைந்தார்கள்.
கதிர் வீச்சுப் பயம் காரணமாக எந்த ஒரு நாடும் உதவிக்கு முன்வரவில்லை. தெருவோரங்களிலும் கட்டடச் சிதைவுகளுக்குள்ளும் மக்கள் செத்துக் கிடந்தார்கள். காணுமிடமெல்லாம் மக்களது ஓலம் கேட்ப தாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. தொலைக்
காட்சிக் கமராக்கள் கூட உடையாத கட்டடங்களூடாகவே காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வந்த கப்பல்கள் தமது பயணத்தை வேறு திசையில் திருப்பிச் சென்றன. அமெ ரிக்காவுக்கான பயணங்களை சகல நாட்டு விமான சேவைகளும் கால வரையறையின்றி ரத்துச் செய்திருந்தன.
எதிர்பாராத அளவு திடீரென அதிகரித்த வெப்பம் காரண மாகவே இத்துயரம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று சில விஞ்ஞானிகள் கருத்துச் சொன்னார்கள். ஓசோன் படை, அது, இது என்று புரியாத வார்த் தைகளைால் விஞ்ஞானிகள் புதுப் புதுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.
வல்லாதிக்கம் பெற்ற அமெரிக்கா என்பது தகர்ந்து கிடப்பதாக உணர்ந்தார் ரிச்சரட்சன். பெருமைகள் யாவும் வீணானவை என்பதைப் புரிந்து கொண்டார். எல்லைக்கு மீறிய எதுவும் ஆபத்தானது என்பதை இன்று தான் மட்டுமல்ல, முழு அமெரிக்காவும் படித்துக் கொண்டதாக எண்ணினார். உலகத்தின் முன்னால் அமெரிக்கா நிர்வாணமாக நிற்பதான ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டது. உலகப் பரப்பில் அமெரிக்கா தனித்து விட்டதாக, கைவிடப்பட்ட ஒரு தேசமாக ஒரு கணத்திலேயே மாறி விட்டி ருந்ததை அவரால் உணர முடிந்தது.
உலகம் பூராவும் உள்ள நாடுகளின் தலைவர்களும் மக்களும் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருப்பதை ஓர் அலை வரிசை ஒளிபரப்பியது. யாருடைய வார்த்தைகளிலும் வஞ்சம் தீர்க்கும் சொற்கள் இருக்கவில்லை என்பதை அவர் அவதானித்தார். அமெரிக்காவின் எதிரி களாக அறியப்பட்டவர்களும் அறிவிக்கப்பட்டவர்களும் கூட அனுதா பத்தையும் தங்களது கவலையையும் வெளிப்படுத்தினார்களே தவிர ஒரு சுடு சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை. தனது அழிவைத் தானே அமெரிக்கா தேடிக் கொண்டதாகவேனும் யாரும் சிறிய விரலைக் கூட நீட்டவில்லை.
மற்றொரு அலை வரிசையில் உலகம் பூராகமுள்ள நாடுகளில் மக்கள் அமெரிக்க மக்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பது காட்டப் பட்டது. எல்லா மதத்தவர்களும் மனமுருகிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்துக் கோவில்கள்… கிறிஸ்தவ தேவாலயங்கள்…. சர்வமத நிலையங்கள் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்தார்கள். ஜப்பானின் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பொது மைதானங்களில் வயது வேறுபாடின்றி லட்சக் கணக்கில் மக்கள் கூடியிருந்தார்கள். உணவு, நீர் ஆகியவற்றை மறந்து, தம்மை மறந்து அம்மக்கள் நின்றபடி உருகி உருகிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியதை முழு உலகும் ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது.
சவூதி அரேபியாவின் பள்ளி வாசல் ஒன்றில் இடம் பெற்ற பிரார்த்தனையை மற்றொரு தொலைக்காட்சி நேரடியாகக் காட்டியது. பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மக்களை நோக்கி கமரா மெதுவாக நகர்ந்தது…
அங்கு இரண்டு கரங்களிலும் பெருவிரல்களைத் தவிர வேறு விரல்களற்ற ஓர் இளைஞன் தனது மூளிக் கைகளையேந்திப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.
‘அவன்… அவன்…’
ஆம்… மார்க் ரிச்சர்ட்ஸனுக்கு ஞாபகம் வந்தது.
குவான்டனாமோவில் பயங்கரவாதத்தின் பெயரால் நான்கு
வருடங்கள் சித்திரவதை அனுபவித்தவன்…. தனது அதிகாரிகளால் வேண்டுமென்றே விரல்கள் பறிக்கப்பட்டவன்…
“ஓஹ்… ஜீஸ…” என்று அலறினார் அவர்.
அவரின் கண்களிலிருந்து அவரை அறியாமலேயே கண்ணீர் வழிந்தது.
– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.