என்றும் போல் இன்றும் றீற்றா நடுச்சாம வேளையில் இரவின் ஊமையான இருளில் நடந்து கொண்டிருக்கிறாள். எந்தநாளும், இந்த இரண்டுங் கெட்டான் பொழுதில், அவள் கையில் ஒரு ‘பாக்’கும் தூக்கிக் கொண்டு, தன்னந் தனியாகத்தான் செல்வது வழக்கம். அவளுக்கு இந்த நேரமில்லை, எந்த நேரமென்றில்லை – பகலிலும் இரவிலும் உழைப்புத்தான். இன்று அவளுக்கு முன்னால் அவளுடைய இரு பெண் குழந்தைகளும் போகின்றார்கள். அவர்களை இவள் அழைத்துக்கொண்டு போகிறாள். சிறிய காற்றோடு சேர்ந்து வீசும் மார்கழி மாதக் குளிரில் குழந்தைகள் கைகளை மார்போடு இறுகக் கட்டிக் கொண்டிருக்கின்றன.
றீற்றா இன்றைக்கு அழகாகவே இருக்கின்றாள். தன்னைச் சோடித்துக் கொண்டதிலும் குறைவில்லை. நெற்றியில் குங்குமப் பொட்டும் உண்டு. அவளுடைய முகத்தின் உணர்ச்சி நரம்புகளில் மட்டும் மனோ விகாரத்தின் விசாரணையும், எதிர்காலம் என்னவென்று தெரியாத வெருட்சியும் ஊறிவிட்டிருந்தன.
இன்று வீதிகளும், வீடுகளும் கலகலப்பாக இருக்கின்றன. நாளை வரும் கிறிஸ்மஸ் திருநாளைக் கொண்டாடும் முகமாக, கத்தோலிக்க வீடுகள் ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இடை, இடை, அங்கங்கே வெடிச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
உலக மக்கள் துன்பங்களில் இருந்து ஈடேற வழி கண்டு, அவர்களுக்காகத் தன்னைப் பரித்தியாகம் செய்து கொண்ட மனுக்குலத்தின் இரட்சகரான யேசு மனிதனாகப் பிறக்கப்போகின்ற தினம் நாளை.
றீற்றா தன் பிள்ளைகளோடு ஒவ்வொரு வீட்டினதும் பிரகாசத்தையும், குதூகலத்தையும் பார்த்துக்கொண்டே செல்கிறாள். ஆனால், மனத்தினுள்ளே தனது கடந்த கால வாழ்க்கையின் அடிச்சுவடுகள் உருவெடுத்து நின்று உயிர் மூச்சு விடுகின்றன. அவள் மார்பு இன்று அதிகமாகவே உயர்ந்து தாழ்ந்து கொண்டிருக்கின்றது.
வீட்டு வாசல்களில் பலவிதமான வெளிச்சக் கூடுகள் சந்தோஷமான கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை வரவேற்றுத் தொங்குகின்றன. மூன்று வாலிபர்கள் ஒரு வீட்டின் முன்னால் நின்று. வெளிச்சக் கூடுகளை உயரத்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். றீற்றா அவர்களைத் தாண்டிச் சென்றாள்.
“கறுப்பி போறாளடா!”
“எங்கை போறாள்… அவளும் கோயிலுக்குத்தான் :
துப்பட்டியும் செபமாலையும் கையிலிருக்கு!”
“ஐஞ்சு ரூபா இருந்தாக் காணும் ; இப்ப கூப்பிடலாம் ஆளை ; நல்ல குளிர்.”
“ஐயோ, டேய்! பலபேர் பார்த்த சரக்கு; நோய் பிடிக்குமடா!”
“டேய் பசாசு! பரிசுத்தமான நாளிலும் உனக்குக் கெட்ட எண்ணம் போகலே!”
அந்த இளைஞர்களை அவளுக்குத் தெரியாது. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது அவளுடைய காதில் குளிர் காற்றோடு வந்தடித்துச் சுடுகின்றது. அவளுக்கு அது சர்வ சாதாரணம். அவளை யாழ்ப்பாண நகரத்தின் மூலை முடுக்குகளில் காணாதவர்கள் இருக்கவே முடியாது,
“ரக்ஸிக்காரர்களுக்கு மிகவும் தெரிந்தவள் றீற்றா, நகரத்தின் வீதிகளில், மார்பகங்களை உயரப் போட்டு கால்களை மெதுவாக எடுத்து அசைத்து வரும்போது அவளை அறிந்து விரும்புபவனும், அறியாது வெறுப்பவனும் ஒரு முறை நின்று இரசித்து விட்டுத்தான் போக வேண்டும்; அப்படித்தான் நடக்குது. ஆண்டவன் அவளுடைய அங்கங்களில் எதையும் கூடவோ, அன்றிக் குறையவோ படைத்துவிட வில்லை. நிறந்தான் கறுப்பு, கறுப்பா? அழகான கறுப்பு! உண்மையில் அவளுடைய கண்களின் பார்வையில் உலகம் சுழலும். அவள் அழகில் எவரும் ஏற்றுக்கொள்ளும் புனிதம் உண்டு.
இன்று அவள் எல்லாவற்றையும் மனதில் இருந்து ஒதுக்கி, மறக்கடித்து, தான் செய்த பாவங்களைக் குருவானவரிடம் கூறி தன்னைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கத்தோடு, பாவ சங்கீர்த்தனம் செய்வதற்காகக் கோயிலுக்குச் செல்கிறாள். ஏழு வருடங்களாகப் பாவ சங்கீர்த்தனம் செய்வதை மறந்து, சுதந்திரமாக இந்த உலக வாழ்க்கையின் இருள் சந்துகளில் புரண்டு வந்தவள், இந்தக் கிறிஸ்மஸ்க்கு தன் பாவங்களை ஆண்டவனிடம் கூறி, இதய பாரங்களைக் குறைக்க எண்ணினாள். இன்றைக்கு அந்த இளைஞர்கள் கூறியதைப் போன்ற வார்த்தைகளை அவளுடைய ஆத்துமா கேட்க விரும்பவில்லை. அவள் விருப்பம் போலவா எல்லாம் நடக்கிறது?
ஒரு மகோக்கனி மரத்தின் கீழ், இருட்டுப்பட்ட இடத்தில் நின்று திரும்பி அவர்களைப் பார்த்தாள், கண்கள், அந்த இளைஞர்களை அருவருப்புடன் நோக்கிச் சபித்து விட்டுத் திரும்பின. வெறுத்த மனத்தோடு அவர்களை நோக்கிக் காறித் துப்பினாள்.
தன்னை மறைத்துக் கொள்வதற்காகத் துப்பட்டியை விரித்து, முட்டாக்கு இட்டுத் தலையை மூடிக்கொண்டு நடந்தாள்.
“ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கும் எவனும் அவளுடன் விபசாரம் கட்டிக்கொண்டதற்கு ஒப்பாவான்” … யேசு கிறிஸ்துநாதர் சொன்ன வாசகம் அவள் நெஞ்சுக்கு மனப்பாடம். ஆனால் மறந்து போனதைப் போல் அடிக்கடி சொல்லி ஞாபகப்படுத்திக் கொள்வாள்; அது ஒரு திருப்தி. அவளுடைய வாழ்க்கை , அனுபவத்தில், யேசுவின் வாசகத்திற்கு ஆதரவான மனதுடையவன் எவனும் இல்லை; அவள் காணவேயில்லை.
கிறிஸ்தவர்கள் அநேகர்கள் கோயிலுக்குச் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். றீற்றா, கோயிலில் யாரு மின்றி, கோயில் வெறுமையாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். அவள் கோயிலில் தனிமையை விரும்பினாள். அவள் வீடு இருண்டு கிடக்கும். தாய்க்கிழவி பாயோடு கிடந்து நித்திரை; யேசுநாதரின் படத்துக்கு முன்னால் மட்டும் நித்திய விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.
இருட்டைச் சாதகமாக்கி எத்தனை பேர், நடந்து கொண்டிருக்கும் அவள் மீது கண்களை ஆசையோடு வீசி விட்டுப் போகிறார்கள் – மரியாதைக்குப் பயப்படுபவர்களும் தான்! றீற்றாவுக்கு அந்த நகரத்தில் பெரிய மனிதர்கள் என்று கூறுபவர்களின் நிறை எவ்வளவு என்று தெரியும். இந்த உலகத்தின் போலித் தனத்தையும் அவள் மதிக்கவில்லை. ஒரு காலத்தில் பெரிய மதிப்பு வைத்திருந்தாள். கணவன் இறந்து, பகிரங்கமாக வெளியே வந்துவிட்டபின், இப்போது உலகம் அவள் காலடியில் கிடப்பதுபோல்.
“டேசி, மரியா! மெதுவா நடவுங்கோ! ?
குழந்தைகள் சற்று விரைவாக நடந்துவிட்டார்கள், றீற்றாவின் இதயத்தைத் தடவிக் கொடுப்பவர்களும் அணைத்துக் கொள்பவர்களும் சிரிப்பு மூட்டிக் கொள்பவர்களும் அந்தக் குஞ்சுகளே. அவர்களை நன்றாக வாழவைக்க அவள் வாழ்கிறாளாம்; வாழக்கை அப்படி அமைந்துவிட்டது – தன்னையே என்றும் தானே விலை பேசிக்கொள்ளும் உழைப்பு அவர்கள் எல்லோருக்கும் வாழ்வளிக்கின்றது.!
றீற்றா நீண்டதூரம் நடந்து வந்து பெரிய கோயில் வாசலில் ஏறினாள். கால்கள் கூசின. சேலைத் தலைப்பை எடுத்து தன் மார்பைப் போர்த்துக் கொண்டாள். “ஏசுவே என்னை இரட்சியும்,” அவள் ஆசைப்பட்டது போல் கோயில் இருக்கிறது. அங்கு யாருமில்லை, குருவானவர் பீடத்தின் முன்னால் செபத்தில் இருக்கிறார். கோயிலின் இடது மூலையில், மாட்டுக் கொட்டிலில், பாலன் பிறந்த காட்சியை அழகுபடச் செய்திருக்கிறார்கள். றீற்றா பாலன் பிறப்பு மேடைக்கு முன்னால் முழந்தாளிட்டு இருந்தாள். இரு குழந்தைகளையும் தன் முன்னால் இருத்தி, கைகளைக் குவித்து வணங்கும்படி கூறினாள். குழந்தைகள் பயபக்தியுடன் இருந்தனர்.
தேவனே றீற்றாவின் வாழ்வு எங்களுக்கு வேண்டாம்!
அவள் சொல்லிக் கொடுத்ததை, இருவரும் எதையும் புரிந்துகொள்ள முடியாமல், தெய்வ உணர்ச்சியோடு வாய்க்குள் செபிக்கின்றார்கள். நீற்றா என்றால், அவர்கள் தங்கள் தாயை நினைக்கவில்லை. அவள் யாரோ ஒருத்தி என்று அவர்களுக்குச் சொல்லியும் இருக்கின்றாள். அவர்கள் முணுமுணுப்பது, நீற்றாவின் இதயத்தை அழுகையோடு மீட்க, மன விசாரணையில் மூழ்கிக் கொண்டாள். செய்த பாவங்களை ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து, பாவசங்கீர்த்தனத்துக்கு ஆயத்தம் செய்கின்றாள். இந்த ஏழு வருடங்களில் அவள் பூரண அறிவு அவதானத்துடனும், முழுச் சம்மதத்துடனும், கனங்கொண்ட காரியத்தில் தேவகட்டளைகளை, மீறியிருக்கிறாள். ஏழு வருடகாலத்தில் நடந்த பாவ நிகழ்ச்சிகளை எல்லாம் ஒழுங்கு படுத்தி நினைப்பதற்கு ஒரு பக்திமானுக்கு நீண்ட நேரம் எடுக்கும்.
அவள் ஒரு சில விநாடிகளுக்குள் முழுவதையும் மனதுக்கு முன்னால் கொண்டு வந்துவிட்டாள். எல்லாப் பாவங்களும் ஒரே உருவம் எடுத்து மண் புழுவைப்போல உடலைப்புரட்டி, அரிகண்டமாய் நெளிந்து புரள்கின்றன. எல்லாம் பச்சை நினைவுகள், திரும்பவும் திரும்பவும் ஒரே பாவச் சேற்றில் விழுந்து அழுக்குப்படும் அவளுடைய அந்தரங்கக் கோலங்கள். ஒரே தன்மையான சம்பவங்களில் பலதரப்பட்ட மனிதர்களின் அம்மணமான உருவங்களுடன் அவளும். அவள் ஒருத்தி நீண்ட காலத்தில் பல மனிதர்கள், பசாசுவாழும் இருளில் மூலை முடுக்கு எல்லாம் இரண்டறக் கலக்கும் நிர்வாணமான காட்சிகள்; கண்களை இறுக மூடிக் கொள்கிறாள்.
“யேசுவே! யேசுவே! என் பிள்ளைகளை இரட்சியும்.”
“என் வாழ்வு அவர்களுக்கு வரவேண்டாம் தேவனே!”
மூடியிருக்கும் கண் இமைகளின் வெடிப்புக்களால் கண்ணீர் பொங்கி வழிகின்றது. முழந்தாளிலிருந்து முகக்குப்புற விழுந்து கிடக்கின்றாள்; கைகள் குவிந்தபடி நடுங்குகின்றாள்.
“மகளே! பிள்ளாய்! பாவ சங்கீர்த்தனத்துக்காகவா வந்தாய்?”
குருவானவர் செப்பீடத்தில் இருந்து எழுந்து, சற்று முன்னுக்கு வந்து நின்றார்.
“ஆம் சுவாமி”
றீற்றா கண் விழித்தாள்; வயது சென்று, முதுகு கூனி. முகமொடுங்கி நிற்கும் கறுத்த குருவானவரைக் கண்டாள். அவர், பேச்சு எதுவுமின்றிச் சென்று, பாவ சங்கீர்த்தனத் தட்டியில் அமர்ந்து கொண்டார். 2
அவளுடைய இருதயம் அவளின் காதுக்குள்ளேயே அடிக்கின்றது. கைகளில் வேர்வைக் கசிவு, குவிந்த கைகள் நடுங்குகின்றன. குருவானவர் வரும்படி கை காட்டினார். அவள் எழுந்து நடந்தாள்.
“றீற்றாவின் வாழ்வு எங்களுக்கு வேண்டாம்!”
டேசியும் மரியாவும் கண் தூக்க மயக்கத்தின் இடையிலும், தாய் சொல்லிக் கொடுத்ததைக் கூற மறக்கவில்லை. டேசி தூங்கி விழ, மரியா எழுப்பி விட்டு, மரியா தூங்கி விழ, டேசி தட்டி விட்டு, இருவரும் விழிப்பாகவே இருந்தனர்.
றீற்றா பாவ சங்கீர்த்தனத் தட்டி அருகில் முழந்தாளிட்டு இருந்தாள். இவ்வளவு காலமும் செய்த பாவங்களில் மனம் ஒன்றித்து, அப்பாவங்கள் உண்டாக்கும் பயங்கரத்தில் உள் நடுங்கி, பயபக்தியாகி விட்டாள்; நெற்றியிலும் வியர்வை துளிர்த்தது.
“ஏன் மகளே, நேரஞ் செல்ல வந்தாய்?”
“நான் தனிமையை விரும்பினேன், சுவாமி எனக்கு நிம்மதி அதில்தான்!!”. அமைதி கொள்ளும் தாழ்ந்த தொனியில் கூறினாள்.
“சரி, முன் எப்போது பாவ சங்கீர்த்தனம் செய்தது பிள்ளாய்?”
“ஏழு வருஷங்களுக்கு முன்னிருக்கும், சுவாமி!”
“ஐயோ! இவ்வளவு காலமும் நீ பசாசின் பிள்ளையாகவா வாழ்ந்தாய்? எவ்வளவு மோசம் மகளே!”
“……..”
“ஏன் மகளே அப்படி இருந்து கொண்டாய்”
“நான் விரும்பவில்லை சுவாமி”
“சரி ஆண்டவனின் பிள்ளையாக இருக்க வேண்டிய நீ, பசாசின் பிள்ளையாக இருக்கலாமா? இந்த ஏழு வருட காலத்தில் என்ன பாவங்களைச் செய்து கொண்டாய்?”
குருவானவர் தலையை பாவ சங்கீர்த்தனத் தட்டியோடு சரித்து, காதுகளை மிகக் கூர்மையோடு வைத்திருந்தார்.
“அநேக பொய்களைச் சொன்னேன்!”
“ஆம்”
“மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன்!”
“ம், எப்படி? என்ன விதத்தில்?”
“மற்றவர்கள் நல்லாக வாழ்வதைக் கண்டு, நல்ல உடுப்பு உடுப்பதைக் கண்டு, நல்ல சாப்பாடு சாப்பிடுவதைக் கண்டு, நல்ல வீட்டில் வாழ்வதைக் கண்டு, மற்றவர்கள் சிரித்து மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதைக் கண்டெல்லாம், பொறாமைப் பட்டேன், சுவாமி!”
“ம் வேறு …. பிள்ளாய்! வேறு பாவங்கள் செய்ய வில்லையா?”
“கெட்ட எண்ணங்களை எண்ணினேன், சுவாமி!”
“ஆம்… ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறதா?”
“ஆம், சுவாமி!
“போகாமல் இருந்ததுண்டா ?”
“ஆம்!”
குருவானவர் கண்களை மூடிக்கொண்டார்.
“வேறு பிள்ளை? பாவங்களை ஆண்டவனுக்கு ஒளிக்கக் கூடாதல்லவா? அவர் உன்னை அறிவார். பயப்படாதே! செய்த பாவங்களைக்கூறு!”
“ஆம், சுவாமி! தூஷண வார்த்தைகளைப் பேசினேன்!”
குருவானவர் அவளிடம், பாவங்கள் கூறுவதை எதிர்பார்த்திருந்தார். றீற்றா கைகளைக் குவித்தபடி இருந்தாள். அவளுடைய மார்பு கனமாக உயர்ந்து தாழ்ந்தது; உதடுகள் துடித்தன.
“கெட்ட செய்கைகள் ஏதாவது செய்தது உண்டா? பாவங்களை ஆண்டவனுக்கு ஒளிக்கக் கூடாதல்லவா?”
“ஆம் சுவாமி!”
“ம்…. சொல்லு மகளே!”
“…….”
“என்ன மகளே மௌனமாக இருக்கிறாய்?”
“விபசாரம் கட்டிக் கொண்டேன் சுவாமி!”
அவள் பற்களால் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு குலுங்கி அழுதாள். பாவத்தின் கொடுமையை நினைத்து உத்தம மனஸ்தாபப் பட்டாளா? குவிந்த கை விரல்கள் கண்ணில் உருண்டு கொண்டிருந்தன.
குருவானவர் இருதயமும் நலுங்கிற்று.
“மகளே, அழாதே! இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் பாவம் செய்யாமல் இருக்கமுடியாது. இங்கு சாத்தான் தன் கைகளை விரித்துக்கொண்டு இருக்கின்றான்; மனிதர் பெலயீனர், அழாதே!”.
“…….”
“கனங் கொண்ட ஒரு காரியத்தில் நீ தேவகட்டளையை மீறிவிட்டாய், இல்லையா?”
அவள் மௌனம்.
“ஆண்டவனுக்கு துரோகமாக பசாசுக்கு அடிமை ஆகி விட்டாய், இது நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும் சாவான பாவம் அல்லவா?”
“ஆம் சுவாமி; நான் இந்தப் பாவத்தை முழு மனதோடு செய்வதில்லை. இந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் நான் வெந்து சாகிறேன், சுவாமி!”
குருவானவர் சிறிது மௌனமாக இருந்தார்.
“இந்தப் பாவத்தை எத்தனை முறை கட்டிக்கொண்டாய் மகளே!..”
“……”
“மகளே, சொல்லு; ஆண்டவனுக்கு நீ ஏன் பயப்படுகிறாய்? ஆண்டவனிடமல்லவா உன் பாவங்களை ஒப்படைக்கிறாய்?”
“இந்தப் பாவத்தைச் செய்ய எனக்கு சம்மதமே இல்லை சுவாமி. சுவாமி…. இந்தப் பாவத்தை அடியோடு வெறுக்கிறேன், சுவாமி!”
அவள் பெருமூச்சுவிட்டு அழுவது குருவின் காதில் விழுந்தது.
“எப்படி இருந்தாலும், மகளே, நீ இந்தப் பாவதைக் கட்டிக்கொண்டாய் அல்லவா?”
“ஆம்!”
“அப்போ பாவம் பாவம் தானே; சொல்லு மகளே?”
அவள் உதடுகள் நடுங்க, ஒன்றும் பேச முடியாமல் இருந்தாள்.
“மகளே !”
“எத்தனை முறைகள் என்று என்னால் கூறமுடியாது, சுவாமி; அநேகம் முறை!”
றீற்றா பொறுமையிழந்து, பிரலாபித்து அழுதாள். கர்த்தரின் சந்நிதி மட்டும் அது கேட்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு.
“அழாதே மகளே! பயம் வேண்டாம்! தேவன் இரக்கமுள்ளவர்; உன்னைப்போல் பாவியான மரிய மதலேனம்மாளை மன்னித்து, தன்னோடு மோட்சத்துக்கு எடுத்துக் கொண்டவர்; உன்னையும் நிச்சயம் மன்னிப்பாரல்லவா?”
“விசுவாசிக்கின்றேன், சுவாமி!”
சுவாமியார் சிறிது நேரம் தமக்குள் யோசித்துக் கொண்டார். நீற்றா, சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“உனக்கு எத்தனை வயது பிள்ளாய்?”
“முப்பது”
“ம்… நீ இந்தச் சின்ன வயதில், இந்தக் கொடிய பாவத்தைச் செய்துள்ளாய் இது ஆண்டவனுக்கு மிகக் கோபத்தை உண்டாக்குமல்லவா?”
“உண்மை , சுவாமி”
“நீ இந்தப் பாவத்தை எத்தனை மனிதர்களுடன் கட்டிக்கொண்டாய்?
“என்னால் சொல்ல முடியாது சுவாமி; எனக்கு ஞாபகம் இல்லை!”
றீற்றாவுக்கு மீண்டும் அழுகை நெஞ்சில் கசிந்தது. குருவானவர் மௌனமாக விடும் பெருமூச்சு கேட்டது.
“நீ திருமணம் கொண்டதா மகளே!”
“ஆம் சுவாமி!”
“ஐயோ, மகளே! திருமணம் செய்து கொண்டுமா இந்தப் பாவத்தைக் கட்டிக்கொண்டாய்?”
“என் கணவர் இறந்துபோனார். மில்லில் வேலை செய்து கொண்டிருந்த போது மிசினில் அகப்பட்டு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு சுவாமி!”
அவள் அழுகையை அடக்கி உதடுகளைப் பற்களால் இறுகக் கடித்துக் கொண்டாள்.
“உனக்கு, உன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதா? ஐம்புலன்களை அடக்கத் தெரியாதா?”
றீற்றா கண்ணீரை வழித்து விட்டு, நிதானமாகச் சொன்னாள்.
“சுவாமி, நான் உடலிச்சையால் இந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ளவில்லை. எனக்கு வாழ்வதற்கு வேறே வழியே இல்லை.” குரல் உள்ளடங்கிக் கரகரத்தது.
“அதற்காக இந்தக் கொடிய பாவத்தைக் கட்டிக் கொள்வதா? உனக்கு உறவினர் இல்லையா?”
“இருக்கிறார்கள்; எங்களைக் கவனிப்பதில்லை, கவனிக்க முடியாத கஷ்ட நிலையில் தான் அவர்களும் இருக்கிறார்கள்”.
குருவானவரால் மௌனமாக இருப்பதைவிட வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை . சில விநாடிகள் கழிந்தபின் நிமிர்ந்தார்.
“சரி மகளே நீ கனம் கொண்ட காரியத்தில் பூரண அறிவு அனுதானத்துடனும், முழுச் சம்மதத்துடனும் தேவ கட்டளையை மீறியுள்ளாய். உன் இதயத்தில் சாத்தான் குடிகொண்டு விட்டான். இருதயம் ஆண்டவன் வசிக்கும் புனித வீடு; அதில் கெட்ட சாத்தானைப் புகவிடலாமா? இது நரக நெருப்புக்கு இழுத்துச் செல்லுவதான் பாவம் அல்லவா?”
“விசுவாசிக்கிறேன் சுவாமி”
றீற்றாவின் இதயம் கொதிக்கும் உலைக்குள் அந்தரமாக விழுந்து கிடக்கின்றது.
சுவாமியார் தொடர்ந்தார்.
*ஆனால், மகளே! ஆண்டவன் இரக்கம் உள்ளவர். சருவேசுவரன் சகல மனிதனின் பாவங்களுக்காகவும் பாடுபட இவ்வுலகத்தில் மனிதனாகப் பிறந்தார். அவர் உன்னை மன்னிப்பார். நீ உன் கண்ணீரால் அவர் காலைக் கழுவு! கண்ணீர்க் கணவாயில் நின்று, பிரலாபித்து அழு! உன் அழுகைச் சத்தம் அவர் சந்நிதி மட்டும் செல்லட்டும்!”
“என்ன மகளே?”
“ஆம் சுவாமி!”
“ஆம் அபராதமாக ஒவ்வொரு நாளும் மூன்று செபமாலை சொல்லி, ஆண்டவனுக்கு ஒப்படை!”
“நல்லது சுவாமி”
குருவானவர் கண்களை மூடி, விரல்களால் அவற்றைத் தடவிக் கொண்டார்;
“இப்போது மிகவும் துக்க மனதோடு உத்தம மனஸ்தாப மத்திரத்தை சொல்லு”
றீற்றா கண்களில் நீர் மல்க, தலையைப் பக்தியோடு குனிந்து, குவித்த கைகள் நாடியிலும், மார்பிலும் அணைய, உத்தம மனஸ்தாப மந்திரத்தைச் செபிக்கத் தொடங்கினான். இருதயம் செபத்தில் ஒருமனப்பட, கண்கள் மூடிக்கொண்டன.
“என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்துக்குப் பாத்திரமான தேவரீரைச் சட்டை பண்ணாமல், தேவரீருக்குப் பொருந்தாத மகா பாவங்களைச் செய்தேனே…….”
பக்தி மயமாக அசைந்து கொண்டிருந்த நீற்றாவின் வாயானது அசையாமல் நிற்க பற்கள் கீழ் உதட்டை இறுகப் பிடித்துக் கொண்டன.
குருவானவர் மூடியிருந்த கண்களை விழித்தார்.
“என்ன மகளே! செபத்தை இடையில் நிறுத்தி விட்டாய்?” அவள் ஒன்றும் பேசவில்லை .
“மனத்தினாலும், வாக்கினாலும் கிரியையினாலும் இனி மேல் பாவம் செய்ய மாட்டேன் என்று பிரதிக்கினை பண்ணுகின்றேன் என்று தொடர்ந்து செபத்தைச் சொல்லி முடி… சொல்லு மகளே!”
“…….”
“ஏன் செபம் தெரியாதா மகளே!”
“தெரியும் சுவாமி……”
“அப்ப ஏன் தயங்குகின்றாய்? சொல்லு; சொல்லி முடித்து, ஆண்டவனின் பாவப் பொறுத்தலை வேண்டிக் கொள்.”
“நான் சொல்லமாட்டேன்”
குருவானவர் திகைத்துப் போனார்.
“ஏன் மகளே! ஏன் மகளே!”
“என் தொழிலே இதுதான் சுவாமி, நான் திரும்பவும் இப் பாவத்தைக் கட்டிக் கொள்வேன்.”
றீற்றாவின் கோத்திருந்த இருகை விரல்களும் ஒன்றை ஒன்று இறுகப் பிடித்துக் கொண்டன.
“உனக்கு வேறு தொழில் கிடையாதா?”
“கிடைக்கும், சுவாமி, ஆனால் அதைக் கொண்டு நானும், என்னுடைய இரு பிள்ளைகளும், என் வயதுபோன தாயும் வாழவே முடியாது. நான் என் இரு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் அவைகள் என்னைப்போல் வாழக் கூடாது…. வாழவே கூடாது, சுவாமி …….”
குருவானவர் கண்கள் சிவந்தன.
“வேறு நல்ல தொழில் செய்து உன்னால் ஏன் வாழ முடியாது?”
“நமது வாழ்க்கையை போக்கக் கூடிய கூலி கிடைக்கும் ஒரு நல்ல தொழிலும் கிடையாது, சுவாமி, ஒழுங்காகக் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல வேலையும் இல்லை.”
குருவானவர் இருகைகளையும் கோத்து, நெற்றியில் வைத்து, யோசனையில் இருந்தார். நீற்றா குருவானவர் பக்தியோடு கூறுவதை எதிர்பார்த்து இருந்தாள். குருவானவர் மனம் உறுதி கொண்டது.
“மகளே! நமது வேதம் உனக்கு என்ன போதிக்கின்றது? உள்ளதைக் கொண்டு திருப்தியாக இருக்க முடியாதா?”
“கிடைப்பது உயிர் வாழவே முடியாது, சுவாமி, நான் இந்தத் தொழிலை முழுமனதோடு வெறுக்கிறேன், சுவாமி. மற்றவர்கள் என்னை அருவருப்போடு பார்க்கும்பொழுது எரிந்து செத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி, நான் செய்து பாராத தொழிலே இல்லை, சுவாமி, நான் அனுபவத்தைக் கொண்டுதான் சொல்லுகின்றேன்.!”
அவள் கூறியதைக் கேட்ட குருவானவருக்குக் கோபம் எழுந்தது. அவரது சுருங்கிய கன்னங்கள் ஆடின. கைகளை மடியில் இருந்து செய்ப் புத்தகத்தில் வைத்துக் கொண்டார்.
“அப்படிக் கூறாதே, மகளே! இந்த உலகத்தில் அழுகின்றவர்கள் பாக்கிய வான்கள், ஏன் எனில் அவர்கள் அந்த உலகத்தில் ஆறுதல் அடைவார்கள். ஆண்டவன் உன்னைச் சோதிக்கும்போது நீ தைரியமாக இருக்க வேண்டும். ஆனால், நீ பசாசுக்கு அடிமையாகி விட்டாய், மனம் திரும்பி மோட்ச வழியில் நடக்க உனக்கு மனம் இல்லை. நீ ஆண்டவனின் பிள்ளையல்ல. சாத்தான் உன்னைப் பலமாகப் பற்றிக் கொண்டான். எழுந்து போய்விடு போ!”
குருவானவரின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“சுவாமி, நான் உண்மையைத் தான் சொன்னேன், என்னுடைய நிலைமை இது. நீங்கள் ஒரு முறை என்னுடன் வந்து உலகத்தைப் பாருங்கள், அப்போது என் ஆத்மா உங்களுக்குப் புரியும்.” றீற்றாவின் வார்த்தைகள் அமைதியான மெலிந்த குரலில் வந்தன.
“நீ சாத்தானின் பிள்ளை! என்னுடன் பேசாதே! எழுந்து போய்விடு!”
நீற்றா கண்களைத் துடைத்து விட்டு எழுந்து நடத்தாள். குருவானவர் பாவ சங்கீர்த்தனக் கதிரையில் இருந்து எழுந்து அவள் மனம் திரும்புவதற்காக மனதுள் பக்தியோடு செபித்துவிட்டு, அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அவள் தன் இரு பிள்ளைகளுக்குக் கிட்டச் சென்றாள். “றீற்றாவின் வாழ்வு எங்களுக்கு வேண்டாம்” என்று அப்பிள்ளைகள் செபித்துக் கொண்டிருந்தன. அவள் இரு பிள்ளைகளையும் எழுப்பி, இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு தெருவைப் பார்த்து திரும்பி நடந்துவிட்டாள்.
“மகளே …..”
அவள் திரும்பிப் பார்த்தாள்
குருவானவர் பூசைப் பீடத்துக்கு முன்னால் வந்து, செபப் புத்தகங்களைக் கையிலேந்தி நின்றார்.
“மகளே நாளை யேசு பிறக்கப் போகின்றார். இந்தப் புனித நாளில் நீ மனம் திருந்தி, நீ நல்ல வழியில் நடக்க வேண்டும் என்று என் ஆத்மா விரும்புகின்றது. இந்தப் புனித நாளில் உனக்கு யேசுவின் ஊழியனாக நின்று சொல்கின்றேன். இது யேசுவின் கட்டளை: மகளே! விபசாரம் செய்யாது இருப்பாயாக!”
குருவானவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை றீற்றா தெருவில் இருளைக் கிழித்து நடந்து கொண்டிருந்தாள்.
– விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995