கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 9,478 
 

ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென மிதுனையும் மைத்ரியையும் அம்மாவிடம் தள்ளிவிட்டு கிளம்பியது தவறோ? இரண்டு வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் முற்றிலுமாய் மாறி இருந்தன.

“உன் பிள்ளைகள் நூடுல்ஸையும் பாஸ்தாவையும் தவிர வேறு ஒண்ணையும் தொட மட்டேங்கரதுகள். அரிசி சாதம் விஷமா இருக்கு…மணிக்கு வயதுக்குள்ள போயிட்டா பாத்துக்கறதுல என்ன கஷ்டமிருக்கு லக்ஷ்மிம்மா?” என்று அங்கலாயித்தபடி இருப்பாள் பாவம்.

யாரையாவது பேச்சுத் துணைக்காவது அழைத்து வந்திருக்கலாம்.

“இது அமெரிக்காவோ, சென்னையோ இல்லை லக்ஷ்மிம்மா. ரோடு ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டா. துணைக்கு நம்ம ஏஜென்ட் பைய்யன் கண்ணனையாவது அழைச்சிக்கோ,” என்ற அப்பாவின் அறிவுரையையும் உதாசீனப்படுத்தியது தவறோ?

“அப்பா நானே அவசரத்துலயும் குழப்பத்துலயும் இருக்கேன். அதோட எனக்கு நாளைக்கு சென்னைக்கு கிளம்பனும். என்னால கண்ணனோட ஸ்லோ மோஷன் டிரைவிங்க்கில் உட்காரக்கூட முடியாது. ஆல்சோ ஐ வோன்ட் பி குட் கம்பெனி. அதனால நானே மானேஜ் பண்ணிக்கறேன்,” என்று விட்டாள்.

ஆனால் அப்பாவுக்கு மனசு கேட்கவில்லை. இவள் கேட்டாளே என்று மேல வீதி பெட்ரோல் பங்க்கில் டேங்க் பில் பண்ணி, என்ஜின், ஏர் செக் செய்து க்வாலிசை ஊர்வலத்திற்கு போகிற குதிரை மாதிரி கிண்ணென இரவே வாசலில் கொண்டு நிறுத்தி விட்டார். இந்த இரண்டு வருடங்களில் லக்ஷ்மிக்காக எவ்வளவு செய்திருப்பார்கள் அப்பாவும் அம்மாவும். ஒரே பெண், அத்துடன் கண்கொள்ளா அழகும், புத்திசாலித்தனமும் சேர, அவளுக்கு உதய் பொருத்தமில்லை என்ற பிரமையை இவள் கிளப்பிவிட இரண்டு வருடங்கள் ஆடி ஓய்ந்து விட்டார்கள் அவர்களும்.

“ஆம்பிஷனே இல்லைப்பா அவருக்கு. குடுத்த வேலையை செய்ஞ்சு பெஞ்சை தேச்சிட்டு டான்னு சாயங்காலம் வீடு திரும்பினா போதும்கற எண்ணம்தான் இருக்கு. ஒவ்வொருத்தர் கோல்ட் ஸ்கீம்ல இன்வெஸ்ட் பண்ணலாமா ஒறகடத்துல டவுன்ஹவுஸ் புக் பண்ணலாமான்னு வேகமா போயிண்டிருக்கா.”

“உதய்க்கு சொத்திருக்கு லக்ஷ்மிம்மா. நிலம், நீச்சு…நீங்க இருக்கற வீடே பலகோடி பெரும். தவிர உனக்கென்ன வேணுமோ நாங்க இருக்கோம்.”

அப்பாவின் பேச்சு லக்ஷ்மிக்கு எப்போதுமே சப்பைக்கட்டுதான்.

“ஆமாம்ப்பா..பெரிய்ய வீடு.. மச்சு வீடு மாதிரி..அறுபது வருஷத்தது..ஒரு மாடர்ன் ரேநோவேஷன் பண்ணகூட முடியாம..உங்ககிட்ட வாங்கி செலவழிக்கறதுல என்ன பெருமையிருக்குப்பா…தானே முட்டிக்கால் போட்டு முன்னேறணும்..அதுலதான் த்ரில் இருக்கு.”

ஒவ்வரு தடவை லீவிற்கு வரும்போதும் “வெளிநாட்டு வேலைக்கு அப்ளை பண்ணலை,” “அக்சென்ட் தவிர வேற கார் மாத்த மாட்டேங்கறார்,” “நல்ல ப்ராபர்டி, பிரெண்ட் சொன்னா.. ..கையில காஷ் இல்லைன்னு கிளம்பிட்டார்,” “நான் சொல்றதை கேக்கறதேயில்லை,” என்று அடுக்கடுக்காய் அவள் சொல்லிய குற்றங்களில் லக்ஷ்மியின் பெற்றோருக்கே கிலி பிடித்து விட்டது. “ஒரு வேளை அவள் சொன்னதுபோல் உதய் லக்ஷ்மிக்கு பொருத்தமில்லாதவனோ” தூரத்து உறவென்று கல்யாணம் பண்ணி கொடுத்தது தவறோ என்று ஏகப்பட்ட சந்தேகங்கள்…

***

அடுத்த முறை லீவிற்கு வந்த பொழுது அம்மாதான் சொன்னாள்.

“லக்ஷ்மிம்மா.இங்க குளித்தலை பக்கத்துல ஒரு குரு இருக்காராம். கணபதி மந்திரம் உபதேசம் ஆனவர். பதினைஞ்சு வருஷம் லௌகீக வாழ்க்கைக்கு பிறகு தன அப்பாகிட்டேயே தீக்ஷை வாங்கிண்டு குரு ஆகிட்டார். ரொம்ப நன்னா ஜாதகம் பார்ப்பாராம். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்.”

லக்ஷ்மிக்கு சந்யாசிகளிடமோ, ஜாதகம், பரிகாரங்களிலோ பெரிதாய் நம்பிக்கை கிடையாது. நம்மைப் போல் கல்யாணம், குழந்தை, குட்டி என்று இருந்து விட்டு… ப்ச்.. ஆனாலும் “சும்மா தரிசனமேனும் பண்ணிட்டு வரலாம் லக்ஷ்மி..நிறைய மந்திர ஜெபம் பண்ணினவர்.. இத்தனை ஜனங்கள் போறதே,” என்று அம்மா இவளை சரிக்கட்டி விட்டாள்.

நிறைய பழங்கள், பூ, அத்துடன் ஒரு பவுன் காசு என தடபுடல் பரிவர்தனைகளுடன் ஆசிரமத்திற்கு போய் சேர்ந்தபொழுது உச்சி வேளையாகி இருந்தது. சந்நிதானம் நடை சார்த்தப்பட்டு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது.

கச்ச்சலாய், தூக்கி வாரிய தலையும், தட்டு சுத்து வேட்டியுமாய் ஒரு பதினைந்து வயதுப் பைய்யன் வந்து இவர்களிடம் சொன்னான்.

“ஸ்ரீகுரு ஆசுவாசப் படுத்திண்டிருக்கார். நீங்களும் சித்த இளைபாருங்கோ.”

“நீங்க?” என்றபொழுது “நான் ஸ்ரீகுருவோட பூர்வசிரமாதுல அவரோட வாரிசு” என்றான் பணிவாய். அப்பாவே குருவாகிவிட்டாரா?

எங்களின் களைப்பான முகங்கள் பார்த்து சட்டென கேட்டான்.

“சாப்பிட்டாச்சா?”

இல்லை என்றவுடன் ஆசிரமத்தின் பின்புறம் ஓலை கூரை வேயப்பட்ட தாழ்வான கூடத்திற்கு அழைத்து சென்று பின்னாலிருந்த வாழை மரத்திலிருந்து நான்கு நுனி இலைகள் பறித்து வந்து எளிமையான விருந்து படைத்த பாங்கில் லக்ஷ்மிக்கு மனதெல்லாம் குளிர்ந்து போனது. உண்ட களைப்பில் அப்படியே துளசி மாடத்தருகே அக்கடாவென உட்கார்ந்து விட்டார்கள் அம்மாவும் லக்ஷ்மியும்.

தாழ்வாரம் ஓரமாய் ஒரு சின்ன மர ஸ்டூலில் நிறைய புத்தகங்கள். அருகில் போய் பார்த்ததில் எல்லாமே கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் தொடர்பான புத்தகங்கள். பெரும்பாலும் அட்டை கிழிந்து, பக்கங்கள் மடங்கி..பழைய பேப்பர் கடைகளில் விற்பவை போலிருந்தன..ஆனால் அந்த சப்ஜெக்டில் பெரிய வல்லுனர்கள் எழுதிய தரமான புத்தகங்கள்..புரட்டிக் கொண்டிருந்தபோது திரும்ப அந்தப் பையன் வந்தான்.

இதெல்லாம் உன்னுடையதா?” அவன் அமைதியான முகம் சட்டென மகிழ்ச்சியை பூசிக் கொண்டது.

“ஆமாம். ப்ரோக்ராம்மிங்கில் எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்ட்..”

“நிறைய ப்ரோக்ராம் எழுதுவியா?”

“ஆமாம்.”

“நீ எழுதற ப்ரோக்ராம்களை அப்பளை பண்ணி பார்க்க உன்கிட்ட சிஸ்டம் இல்லையே..”

“இங்க பக்கத்துல நிறைய இன்டர்நெட் பிரவ்சிங் சென்டர் இருக்கு. அங்கே போய் பார்ப்பேன்.”

முழங்காலிட்டு அமர்ந்து புத்தகங்களை அடுக்கியவாறே லக்ஷ்மியிடம் கூறினான்.

“குரு தரிசனத்திற்கு வந்திட்டார்..”

அவன் கூறியதில் அவள் மனம் லயிக்கவில்லை. அவனுடைய புத்தகங்கள் மீதே மனது இருந்தது.

***

இவர்களை அழைத்து குரு பீடத்திற்கு அருகே அமர்த்தினான் அந்த பைய்யன். லக்க்ஷ்மி மற்றும் உதய்யின் ஜாதகங்களை வாங்கி பார்த்தார் குரு. காவி உடை, கழுத்து நிறைய ஜெப மாலைகள். கண்களில் அசாத்திய அயர்ச்சி தெரிந்தது. இத்தனை வேத சம்ரக்ஷனைக்கான அறிவு ஜ்வாலையே இல்லை. அவர்களை அடுத்து திருச்சியிலிருந்து ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவ்வப்பொழுது அந்தப் பைய்யனுக்கு கட்டளைகள் கொடுப்பதும் அடுத்து வந்தவர்களின் குறையை கேட்பதுமாய் குருவிற்கு மனது ஒரே இடத்திலேயே இல்லை.

“தம்பதி ஜாதகங்களில் கொஞ்சம் கூட பொருத்தமேயில்லையே” என்ற பொழுது இவர்கள் மூன்று பேருக்கும் தூக்கி வாரி போட்டது.

அந்த மண்டபத்தின் மறு மூலையில் இருந்த கணபதி விக்ரஹத்திற்கு முன்னே அமர்ந்து அந்த பைய்யன் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். நாங்கள் உட்கார்ந்திருப்பதோ அல்லது விவாதிப்பது குறித்தோ எவ்வித சலனமும் அவனிடம் இல்லை.
குரு தொடர்ந்தார்..

“ரெண்டு பேருக்கும் ஒரே தசை..ஒரே புக்தி நடக்கறதுனால நினைக்கறது, செயல் எல்லத்துலையுமே முரண்பட்டு இருக்கும்.. சரி. நான் சொல்கிற பரிகாரங்களை செய்யுங்கோ..”

பரிகாரங்களை எழுதி வாங்கிக் கொண்டு, தக்ஷிணை கொடுத்துவிட்டு மண்டபத்திலிருந்து வெளியில் வந்தோம்..

திரும்ப அந்தப் பையன் தாழ்வாரத்து ஓரத்தில் புத்தகங்களோடு உட்கார்ந்திருந்தான்.. இப்போது அவனின் கொஞ்சமும் சிதையாத கவனம் புத்தகத்தின் மீது.. ஒரு கர்மயோகி போல..

லக்ஷ்மிக்கு ஆர்வத்தை அடக்க முடியாமல் அருகே போய் கேட்டாள்.

“உன் பேரென்ன?”

“துருவன்.” குருவிடத்து கூட காண முடியாத அமைதி அவன் கண்களில்.

“என்ன படிக்கறே?”

“பத்தாவது..பப்ளிக் எக்ஸாம் எழுத போறேன்..”

“நன்னா படி..” அவளால் அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை..”ப்ரோக்ராம்மிங்கில் எதாவது புத்தகம் வேணுமான என்னை கேளு.”

ஆசிரமத்தை விட்டுக் கிளம்பி காரில் ஏறினார்கள். அம்மாவும் அப்பாவும் குரு சொன்னதை நினைத்து வழி நெடுக புலம்பித் தீர்க்க லக்ஷ்மிக்கு மட்டும் துருவன் மீதே நினைவு..

எந்த இடத்தில் என்ன விதை முளைத்திருக்கிறது! என்ன ஆச்சர்யமான முரண்!

***

அதற்கு பிறகு நிறைய தடவை ஆசிரமத்திற்கு வரும்படியாக இருந்தது லக்ஷ்மிக்கு. சுவாசினி பூஜை, ஹோமம், என ஏதேதோ…வரும் பொழுதெல்லாம் துருவனைப் பார்த்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசாமல், அவன் ப்ரோக்ராம்களை பார்க்காமல் போனதில்லை. அவனுடைய அபார அறிவும், ஆர்வமும் அவளை பிரமிக்கச் செய்தது. புத்தகங்கள் மற்றும் ஓரிரண்டு சிடிக்கள் கொடுத்தால். முதல் இரண்டு முறைக்கு மேல் துருவன் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

“இலவசமா கிடைக்கற எதுவும் நிலையில்லாததுன்னு குரு சொல்லுவார்..” என மறுத்துவிட்டான்.

ஆறே மாதத்தில் உதய்க்கு சிங்கப்பூருக்கு மாற்றல் வந்தது. அவன் போய் வேலையில் ஜாயின் செய்த பிறகு லக்ஷ்மியும் குழந்தைகளும் அடுத்த ஆறு மாதத்தில் ஊர் பெயர்ந்து போனதில் ஆசிரமத்து தொடர்பு விட்டே போனது.

நடுவில் அம்மாவிடம் போன் பேசியபோது சொன்னாள்..

“இப்போ ஜெப, தபங்களை விட்டு லிங்கம் எடுக்கறார், விபூதி வரவழைக்கரார்னு பேச்சு..ஒரே கூட்டம் அலைமோதறது..”

மந்திரத்தை விட்டு சித்து வேளைகளில் இறங்கி விட்டார் என்றவுடன் லக்ஷ்மிக்கு குருவின் மீது சிரத்தை குறைந்து போனது. ஊருக்குப் போவதற்கு நாலைந்து மாதங்களுக்கு முன் ஒரு நாள் அவரை சன் டிவியில் பார்த்த பொழுதும் அவளுக்கு பெரிதான ஆச்சர்யமில்லை.

“அம்பாள் கொண்டு கொடுத்ததாக சொல்லி எல்லோருக்கும் போலியான கரன்சி நோட்ஸ் கொடுத்திருக்கார்..பதிலுக்கு நல்லது வாங்கிண்டுதான்…இப்போ சி.பி.இ என்கொயரி வந்திருக்கு..” டிவி பார்த்து உதய் சொன்னான்.

ஆசிரமம் மூடியாச்சா? அங்கே இருந்தவால்லாம்?”

“இல்லை. என்கொயரியில் ப்ரூவ் ஆகணும்..பார்க்கலாம்..அதுவரையில் ஆசிரமம் மற்றும் அவருடைய ப்ராபர்டி அப்படியேதான் இருக்கும்.”

லக்ஷ்மியின் மனக்கண்களில் துருவனின் முகம் ஒரு நிமிடம் வந்து போனது.

ஊருக்கு வந்து சேர்ந்த மறு நாளே இதோ இந்தப் பயணம்..

***

செல்போன் அடித்ததில் வண்டியை ஓரங்கட்டினாள் லக்ஷ்மி. உதய்!

“எங்கே இருக்கே லக்கி? போய் சேர்ந்துட்டியா?”

அவன் குரலில் தோய்ந்திருந்த கவலை லக்ஷ்மிக்குப் புரியாமலில்லை.

“ஆல்மோஸ்ட்..இன்னும் இருபது நிமிஷம்தான்..”

“ஏதானும் போலிஸ் வாட்ச் இருந்தா அப்படியே திரும்பிடு..என்கொயர் பண்ணப் போறா…”

“உதய். இதெல்லாம் ஆறின கஞ்சி..”

அவளின் ஹாஸ்யம் அவனுக்குப் பிடிக்கவில்லை.

“துருவனைப் பார்த்து இப்போ என்ன பண்ணப் போறே? இது ரொம்ப டூ மச்சா படறது எனக்கு.”

அவளுக்குள் மட்டும் இந்தக் கேள்வி எழவில்லையா என்ன! கொஞ்சம் அவசரம்தான்…ஆனாலும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற அவளின் உள் மனதுத் தூண்டலை அவளால் உதாசீனப் படுத்த முடியவில்லை.

“தெரியல உதய். ஏதோ இன்ச்டின்க்ட்..நாளைக்கு சாயங்காலம் உன்கூட சென்னைல இருப்பேன்.”

இந்த வார்த்தைகளில் கட்டுண்டு உதய் போனை வைத்து விட்டான்.

***

நுழைந்தபோது ஆசிரமம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. எதிர்பட்ட ஆசாமியிடம் துருவன் என்றாள்.

துளசி மாடத்தருகே சாய்ந்து நின்றபொழுது துருவன் வந்தான். கிராப்புத் தலை இபோது கட்டுக் குடுமியாகி இருந்தது.

எப்போதும் போல சலனமில்லாத முகம்.

“எப்படி இருக்கே?”

“நன்னா இருக்கேன்,” என்றான் அமைதியாய்.

“ட்வெல்த் பாஸ் பண்ணிட்டு இப்போ என்ன பண்றே?”

“குரு மேல படிக்க வேண்டாம் ஆசிரமத்தை நிர்வாகம் பண்ணுன்னு கட்டளை போட்டுட்டார்.”

அவளுக்குள் ஒரு அயர்ச்சி வந்தது.

“சரி. ஆசிரமம் எப்படி இருக்கு? குரு எப்படி இருக்கார்?”

“இன்னும் பிரம்மத்தை நம்பரவா இருக்காளே..” குருவின் இக்கட்டு குறித்த அவனின் பேச்சு அவளை உள்ளுக்குள் சிரிக்க வைத்தது.

“நீயும் உனக்கு இதுதான்னு முடிவு பண்ணிட்டியா? மேல படிக்கப் போறதில்லையா? உன் ப்ரோக்ராம்மிங்க்லாம் என்ன ஆச்சு?”
துருவன் தீர்கமாய் இவளை பார்த்தான்.

“இது வரைக்கும் நானும் உங்களைப் போல ஒரு பக்தனாதான் தான் இந்த ஆசிரமத்தில் இருந்தேன். ஆனா காலம் என்னை சில பொறுப்புகளை ஏத்துக்க வெச்சிருக்கு. நீங்க பார்க்கற லௌகீக பலன்களைத தாண்டி ஆத்ம சுத்திங்கற விஷயம் இந்த மந்திர ஜெபத்தில் அடங்கி இருக்கு. அதை நோக்கித்தான் என் பயணம். சிலுவையை தோளில் ஏத்திட்டேன். இனி அதைக் கடைசிவரை சுமந்துதான் ஆகணும். அப்யாசதினால் வராதது எதுவுமேயில்லை”.

துருவனின் கண்கள் வெறிச்சோடிப் போயிருந்த தாழ்வார ஓரத்தைத் தொட்டு நின்றது. மனதிலுள்ளதைக் கொட்டிவிட்டு தூரத்தில் அசைந்து கொண்டிருந்த வாழை இலைகளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

இனி மேலே பேச எதுவுமில்லை என்பது லக்ஷ்மிக்குப் புரிந்து திரும்ப எத்தனித்தாள். கடைசியாய் ஒரு குறுகுறுப்பு.

” ட்வெல்த்தில் என்ன மார்க் வாங்கினே?”

“ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூத்தி எழுபது..மூணு சப்ஜெக்டில் சென்டம்.” பளீரென்று ஒலித்தது அவன் குரல்.

ஆசிரமத்தில் சாயங்கால பூஜைக்கான மணி ஒலிக்கவே கொண்டு வந்திருந்த செக்க்புக், காலேஜ் லிஸ்டிங் எல்லாவற்றுடனும் துருவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் லக்ஷ்மி.

“அவனுக்கு வேத அப்யாசம், படிப்பறிவு ரெண்டுமே இருக்கு லக்கி. ஹீ ஹாஸ் காட் தே பெஸ்ட் ஆப போத வேர்ல்ட்ஸ்,” என்றார் உதய் போனில்.

அவனுடைய அருளுரையில் அல்காரிதமும், கீ கமாண்டும் வைத்து மேற்கோள் காட்டுவானோ என்று நினைத்துக் கொண்டால் லக்ஷ்மி. மனது சற்றே லேசானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *